periyar 391விருதுநகர் மகாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களில் மதங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்னும் தீர்மானத்தைப்பற்றி சென்ற வாரம் விளக்கி இருந்தோம்.

இவ்வாரம் மதநடுநிலைமை கொண்ட ஸ்தாபனங்களை மறுத்தும் மத நடுநிலைமை கொள்கையைக் கண்டனம் செய்தும் தீர்மானிக்கப்பட்ட தீர்மானத்தைப் பற்றி சற்று விளக்குவோம். தீர்மானமாவது:-

“சமுதாய முற்போக்குகள் ஏற்படுவதற்கு ஆன முயற்சிகள் செய்யப் படும்போதெல்லாம் “மதம் போச்சு மதம் போச்சு” என்று பிற்போக்காளர்கள் கூப்பாடு போட்டுக்கொண்டே முட்டுக் கட்டையாய் இருந்து வருவதால் அரசாங்கத்தார் அனுசரித்து வரும் மத நடுநிலைமையை கண்டிப்பதோடு அதை ஆதரிக்கும் எந்த அரசியல் ஸ்தாபனங்களையும் ஒப்புக் கொள்ள முடியாது என்பதாக இந்த மகாநாடு தீர்மானிக்கிறது” என்பதாகும். அது போலவே “வர்ணாச்சிரம தர்மத்தை ஒப்புக்கொள்ளும் எந்த அரசியல் ஸ்தாபனத்தையும் ஒப்புக் கொள்ள முடியாது” என்பதுமாகும்.

இவை காங்கிரசையும் திரு.காந்தியையும் கண்டித்து செய்யப்பட்ட தீர்மானம் என்றே சொல்லலாம். ஏனெனில் மத நடுநிலைமையை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளுகின்றது. வருணாச்சிரம தர்மத்தை திரு.காந்தியவர்கள் ஒப்புக் கொள்ளுகிறார். ஆகவே இவ்விரு கொள்கைகளும் அவைகளை ஒப்புக் கொள்ளும் ஸ்தாபனங்களும் கண்டிக்கப்படுமானால் மேல் கண்டபடி காங்கிரசும், திரு.காந்தியும் கண்டிக்கப்பட்டவர்களேயாவார்கள். இப்பொழுதாவது பொதுஜனங்கள் சுயமரியாதைக்காரர்கள் ஏன் காங்கிரசை, காந்தியை கண்டிக்கின்றார்கள்? என்பதை உணர வேண்டுகின்றோம்.

மத நடுநிலைமையை ஒப்புக் கொண்டால் மதக்கொள்கைகளில் யாரும் பிரவேசிக்கவே கூடாது என்பதுதான் அதன் தத்துவமாகும். ஆகவே இந்தத் தத்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டோமேயானால் மதக் கொள்கைகள் மத சம்பந்தமான கட்டளைகள், மத சம்மந்தமான விதிகள் என்பவைகளில் யாரும் பிரவேசிக்கக் கூடாது என்பதை நாம் ஒப்புக் கொண்டதாகவே ஆகும். அப்படியானால் இன்றைய நிலைமையில் மனித தர்மத்திற்கு ஏற்ற எவ்வித சீர்திருத்தத்தையும் செய்யக்கூடாது என்பதாகத் தான் முடியும்.

ஒரு சிறு சீர்திருத்தம் கொண்டு வருகின்ற காலத்திலும், சீர்திருத்த விரோதிகள் எழுந்து நின்று “வந்து விட்டது மதத்திற்கு ஆபத்து”, “மதம் போச்சுது மதம் போச்சுது” என்று கூப்பாடு போட்டால் இந்த நிலைமையில் சீர்திருத்தக்காரர்கள் என்ன செய்ய முடியும்? என்பதை யோசித்துப் பாருங்கள். ஏறக்குறைய பிரிட்டிஷ் அரசாங்கம் வந்து 150 வருஷ காலமாகியும் இனியும் சரியான சீர்திருத்தங்கள் ஏற்படாததற்கு இந்த மத நடுநிலைமை யென்பதே முக்கிய தடங்கலாயிருந்து வந்திருக்கின்றது என்பதுடன் சர்க்காராரும் சில சமயங்களில் அதன் நிழலில் ஒளிந்து கொண்டு தப்புவித்து கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பதையும் பிரத்தியக்ஷத்தில் பார்த்து வருகின்றோம்.

ஆகவே இந்த மத நடுநிலைமைக் கொள்கையை இந்திய காங்கிரசும் இந்திய அரசியல் வட்டமேஜை மகாநாடும் ஒப்புக் கொள்ளுமானால் அக் கொள்கைளின் கீழ் எவ்வித சீர்திருத்தத்தை எதிர்பார்க்க முடியும் என்பதை யோசித்தால் அக்கொள்கையினால் ஏற்படும் ஆபத்து விளங்காமல் போகாது. காங்கிரசு இந்த மதநடுநிலைமையை ஒப்புக் கொள்ளுவதாலேயேதான் காங்கிரசை நாம் வைதீகத்தை - பார்ப்பனீயத்தை காப்பாற்றும் ஸ்தாபனம் என்று கூறுகின்றோம். இதை மறுப்பதற்கு யாரிடம் என்ன ஆதாரம் இருக்கின்றது? என்று கேட்கின்றோம்.

விவாக சம்பந்தமான - ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வை நீக்கும்படியான பல அரிய தீர்மானங்கள் சட்டசபைகளுக்கு வந்தும், அவை தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம்? என்றும், இன்னும் சாதாரண விஷயங்களுக்கெல்லாம் மத நடுநிலைமை என்று வைதீகர்கள் கூப்பாடு போடுவதற்கு என்ன காரணம்? என்றும் வாசகர்களை கேட்கின்றோம். தவிர இத் தீர்மானத்தை எதிர்க்கின்றவர்களில் சிலர்,

“இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு மாத்திரம் தான் இந்த நிபந்தனையே யொழிய மற்றபடி இந்துக்களுக்குள்ளாக நடக்க வேண்டிய சீர்திருத்தங்களுக்கு இது கட்டுப்படாது” என்று சொல்லிப் பாமர மக்கள் கண்களில் மண்ணை வாரிப் போடப் பார்க்கின்றார்கள்.

மதநடுநிலைமை என்கின்ற பேச்சை முஸ்லீம்களோ, கிறிஸ்துவர்களோ உபயோகிப்பது ஒரு தடவையானால் அந்தக் காலத்திற்குள் இந்துக்கள் 100 தடவை உபயோகித்து வருகின்றார்கள். தேவஸ்தான பரிபாலன சட்டத்தின் போது மதநடுநிலைமை வந்து புகுந்து அந்த சட்டமே குப்பைத் தொட்டியில் கிடப்பதற்கும் லாயக்கில்லாததாய்ப் போய் சிலர் கொள்ளை அடிப்பதற்கு மாத்திரம் தான் அதுபயன்படக்கூடியதாகிவிட்டது.               

மத பரிபாலனச் சட்டம் என்னும் தேவஸ்தானச் சட்டம் ஏற்படுவதற்கு முன்பு தேவாலயங்களுக்குள் சென்று வந்த வாணியர் முதலிய ஜாதியருக்குச் சட்டம் ஏற்பட்டபின்பு உள்ளே போக யோக்கியதை இல்லாமல் போய் விட்டதுடன் இவ்விஷயத்தில் வெகு தைரியமாய் மனுதர்மசாஸ்திரத்தை எடுத்து, கோட் செய்து தீர்ப்பு எழுதப்பட்டுமாய் விட்டது. இந்த மத நடுநிலைமை காரணமாகவே சாரதா சட்டமும் இன்று உயிருக்கே ஊஞ்சலாடிக் கொண்டிருக்க வேண்டியதாகி விட்டது. இவைகளை எல்லாம் அற்பமான காரியங்கள் என்று சொல்லி ஏமாற்றி விட முடியாது.

மற்றும், பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும்.

தீண்டாதவர்களுக்குத் தீண்டாமை போக வேண்டும்.

என்று நாம் தீர்மானங்கள் சட்டசபைகளுக்குக் கொண்டு போனோமேயானால் மத நடுநிலைமை கொள்கையுடைய அரசாங்கத்தாரால் முதலாவதாகத் தீர்மானம் அனுமதிக்கப்படுமா? என்பதை யோசித்துப் பாருங்கள். அரசியல் சம்பந்தமான மூடநம்பிக்கை இல்லாத பகுத்தறிவு உள்ளவர்களுக்கு இவை விளங்காமல் போகவே போகாது. வேண்டுமென்றே பேசுகின்றவர்களுக்கு மாத்திரம் விளங்குவது சிறிது கஷ்டமாகும்.

ஆகவே சமதர்மத்தை விரும்புகின்ற மக்களுக்கு மத நடுநிலைமை கொண்ட ஒரு அரசியல் ஸ்தாபனம் ஒரு பெரும் முட்டுக்கட்டையேயாகும்.

அதுபோலவே வருணாச்சிரம தர்மத்தை ஆதரிக்கும் விஷயமுமானதால் அதைப்பற்றி அநேக தடவைகள் எழுதப்பட்டிருப்பதால் இதில் அதிகம் எழுதவில்லை. இந்தக் காரணங்களாலேயே இவ்விரண்டையும் கண்டித்து விருதுநகர் மகாநாடு தீர்மானித்திருக்கிறது.

மத விடுமுறை

மற்றபடி சர்க்காரார் விடுமுறை நாட்களில் “மத சம்பந்தமான லீவு நாட்கள் நீக்கப்பட வேண்டும்” என்று மற்றொரு தீர்மானம் செய்யப் பட்டிருக்கின்றது.

நமது அரசாங்கத்தில் வருஷம் ஒன்றுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் 52 நாட்கள் கழிந்து விடுகின்றன. இது கிறிஸ்துவ சமயத்தை ஒட்டி ஏற்படுத்தப்பட்ட நாளாகும். மற்றபடி குறைந்தது எல்லா மத சம்பந்தமாகவும் வருஷத்தில் 35 நாட்கள் விடுமுறையாகப் பாவிக்கப்படுகின்றன. இவைகள் அரசாங்க இலாகாக்களிலும், பள்ளிக்கூடங்களிலுமே கையாளப்பட்டு பிறகு எல்லாக் காரியாலயங்களுக்கும் பரவி வரப்படுகின்றது.

இதனால் அந்த நாட்களின் தொழில்கள் கெடுவதுடன் கைப்பணமும் செலவழிக்கப்படுவதோடு மத உணர்ச்சியையும் வலுப்படுத்துவதாக ஏற்பட்டு வருகின்றன.

அன்றியும், ஒரு சமூகத்தாரின் விடுமுறைக்காக மற்ற சமூகத்தாரின் வேலை கெடுவதுடன் இதனால் ஏற்படும் நஷ்டத்திற்கு மற்ற மதக்காரர்களும் நஷ்டமடைய வேண்டியவர்களாகின்றார்கள். ரம்சானுக்காக இந்துக்களும், கிறிஸ்தவர்களும் ஏன் நஷ்டமடைய வேண்டும்? வைகுண்ட ஏகாதசிக்காக இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஏன் நஷ்டமடைய வேண்டும்? கிறிஸ்துப் பிறந்தநாள் பண்டிகைக்காக இந்துக்களும், முஸ்லீம்களும் ஏன் நஷ்டமடைய வேண்டுமென்பதையும் மற்றும் மத சம்பந்தமான விஷயங்கள் எதிலும் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த விடுமுறை நாட்களுக்காக ஏன் நஷ்டமடைய வேண்டுமென்பதையும் கவனித்தால் மதத்தின் பேரால் மக்கள் பலவந்தப்படுத்தப்பட்டு கஷ்ட நஷ்டமடைவது விளங்கும். ஆதலால் ஞாயிற்றுக் கிழமை என்பதையும் அது மத சம்பந்த மானது என்பதற்கு ஆகவே மாற்றி பொதுவாகவே ஒருவித விடுமுறைகளை ஏற்படுத்தி அவற்றிற்கும் எல்லோரும் அனுபவிக்க சௌகரியங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

சாதாரணமாக பள்ளிக்கூடங்களுக்கு விடப்படும் விடுமுறை நாட்கள் வாரத்தில் சனி, ஞாயிறு என்பதில் 52 வாரத்திற்கு 104 நாட்களும், வெயிற் காலம் 2-மாதம் என்பதில் சனி ஞாயிறு நீங்கி 45 நாட்களும் இவை தவிர ஜனவரியில் 10 நாட்களும் மற்றும் பண்டிகைகளில் 25 நாட்களும் ஆக ஒட்டு மாதம் வருஷத்தில் 6 மாதகாலத்திற்கு மேலாகவே 200 நாட்கள் வரை கூட விடுமுறை நாளாக பயன்படுத்தப்படுகின்றது.

இதனால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பொருள் நஷ்டம் கால நஷ்டம் எவ்வளவு என்று பார்த்தால் அதன் கஷ்டம் விளங்கும். இவைகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மத சம்பந்தமாக அரசாங்கத்தில் ஏன் லீவு விட வேண்டும் என்பதும், அவசியமாயிருக்கின்றவர்கள் தங்கள் தங்கள் சொந்த லீவாக வாங்கிக் கொள்ள சௌகரியம் அளிக்கப்பட வேண்டும் என்பதும் இதன் மூலம் மத உணர்ச்சியை எவ்வளவு குறைக்கப்படக் கூடுமோ அவ்வளவு குறைக்க வழி தேடவேண்டும் என்பதுமே இத்தீர்மானத்தின் கருத்தாகும். மற்றபடி ஓய்வோ விடுமுறையோ மக்களுக்கு கூடாதென்ற கருத்தின் மீது இத்தீர்மானம் செய்யப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.08.1931)

Pin It