poet pattukottai kalyana sundaramமக்கள் கவிஞர் என்று உலகமறியும் அளவிற்கு 5 ஆண்டுகளிலேயே விண்ணைத் தொடும் புகழையும் நன்மதிப்பையும் சம்பாதித்த திரு கல்யாணசுந்தரம் அவர்கள், மிகப்பெரிய உண்மைகளையும் போதனைகளையும் எளிமையாக அனைவரின் மனதில் ஆழமாகப் பதியும் வண்ணம் 208 திரை இசைப் பாடல்களை அமைத்திருந்தார். இசையோடு கேட்டு மகிழ்வதற்கும் ஆழ்ந்து படித்து உணரும் வகையிலும் அவருடைய பாடல்கள் அமைந்துள்ளன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பால் பனியாரத்தின் எல்லாப் பகுதியுமே இனிப்பாக இருப்பதைப் போல மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம் அவர்களின் அனைத்துப் பாடல்களுமே ஆழ்ந்த கருத்துகளையும் மிகுந்த எழுச்சியையும் கொண்டவையாக உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கப்படுத்தான் காடு என்ற கிராமத்தில் பூத்த இந்தக் கவிமலர் என் உறவினர் என்பதிலும் நான் பெருமை கொள்கின்றேன்.

தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளும், பொதுவுடைமைக் கருத்துகளிலும் கவனம் செலுத்தியவர், தன் குருவாகப் பாரதிதாசனை ஏற்றுக் கொண்டவர் ஆவார். இப்படிப்பட்ட மக்கள் கவிஞரின் பாடல்களையும் அதன் ஆழமான கருத்துகளையும் ரசிக்க நமது நாடான சிங்கப்பூரிலும் பல முயற்சிகள் எடுத்து வரப்படுக்கின்றன.

1960 முதல் 1980 வரை நமது உள்ளூர் ஒலிவழியான ஒலி 96.8 FM மக்கள் கவிஞரின் பாடல்களை ஒலிப்பரப்பி வந்தனர். அந்த அரிய முயற்சி பல பேரின் இருண்ட இதயங்களில் ஒளி புகுந்தாற்போல அமைந்துவிட்டது. என் தந்தையைப் போல பலரும் இவரின் பாடல்களைக் கேட்டுத்தான் வளர்ந்து தன்முனைப்பு இளையர்களாக வலம் வந்திருக்கின்றனர். இந்த அழகான முயற்சி இனிமேலும் தொடர வேண்டும் என்பது எனது ஆவா ஆகும்.

இன்று மக்கள் கவிஞர் மன்றத்தின் தொடர் முயற்சிகளால் கவிஞர்களின் பாடல்களில் போதிந்து கிடக்கும் நல்ல கருத்துகளும் போதனைகளையும் சொல்வளத்தையும் அலாவுதீனின் அற்புத விளக்கைப் போல் நாம் தொடர்ந்து உரசிப் பார்த்தால்தான், இன்றைய காலக்கட்டத்திற்கும் அவரது பாடல்கள் பொருந்தி வருகின்றன என்பதை அழகாகப் புரிந்துகொள்ள முடியும்.

கல்வியின் முக்கியத்துவம்-

உலக வரைப்படத்தில் சிறு முற்றுப்புள்ளியாக இருந்தாலும் இன்றைய ஆசியக் கண்டத்தின் பெரும்புள்ளியாக இருக்கும் நம் நாட்டில் இயற்கை வளங்கள் இல்லை. அப்படி இருக்கையில் நாட்டிலுள்ள மக்கள் வளத்தை மட்டும் நம்பி, ஒரு நாடு இன்று வெற்றிக் கொடியைப் பறக்கவிடக் காரணம் நமது கல்விக் கொள்கைகள்தான்! இதையேதான் உலக இன்ப துன்பங்கள் ஆராய்ந்து செயல்பட அடிப்படையமைப்பது படிப்பாகும் என்பதனை 1960 ஆண்டு வெளியான சங்கிலித் தேவன் திரைப்படப்பாடல் சுட்டிக் காட்டுகிறது.

“படிப்புத் தேவை அதோடு உழைப்பும் தேவை - முன்னேற
படிப்புத்தேவை அதோடு உழைப்பும் தேவை
உண்மைதெரியும் உலகம் தெரியும் படிப்பாலே - நம்
உடலும் வளரும் தொழிலும் வளரும் உழைப்பாலே"

கல்வி ஒருவனை அனைத்து நிலையிலும் உயர்த்தும் என்பதனை கவிஞர் அற்புதமாக வலியுறுத்துகிறார். இதுதான் நம் கல்வி அமைச்சின் ஆவா ஆகும். 1970 களிலிருந்து பல கல்விக் கொள்கைகளில் மாற்றம் கண்ட நம் கல்வி முறை, உலகத் தேவைகளுக்கேற்ப இணைப்பாடம், சிறப்புத் தேவை மாணவர்களுக்கான பள்ளிகூடங்கள், பாலர்க்கல்வியில் அதிக கவனம் செலுத்தல், மாணவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல், பையப்பயலும் மாணவர்களுக்கூட பல்கலைக் கழகம் போகலாம் என்னும் அளவிற்கு நெகிழ்வுத் தன்மையைப் புகுத்தி வளர்ந்து வருகிறது நம் நாடு.

நமது ஒற்றுமை -

ஒற்றுமையோடு அத்தனை நூலும் ஒழுங்க வந்தால் வளரும்,
இதில் ஒரு நூல் அறுந்தால் குழரும்
இதை ஓட்டும் ஏழை கூட்டுறவாலே உலகில்

என்னும் கவிஞரின் பாடல் வரிகள் ஒற்றுமையின் அவசியத்தையும் ஆழத்தையும் எளிமையாக நமக்குப் பரிமாறிருக்கின்றன. ஒரு நாட்டில் ஒற்றுமை இல்லையென்றால், ஏற்படும் கலவரங்களும் போரும் பூசலுக்கும் இன்றைய காலக்கட்டத்தில் அளவே இல்லாமல் போயிவிட்டன.

இருந்தாலும் நம் சிங்கப்பூரில் 4 இனமக்களும் இணக்கமாகவும் நெருக்கமாகவும் இருந்து நம் நாட்டை மென்மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். நமது தேசப்பிதா திரு லீ குவான் யீ அவர்கள் 1965 முதல் பல்லின இனங்கள் கொள்கை ( Multi racialism policy ) இருமொழிக் கொள்கை (Bilingualism) போன்ற பல திட்டங்களை வகுத்தார். அவை நம் நாட்டை ஒற்றுமை பாதையில் அழைத்துச் சென்றுள்ளன. மேலும், கவிஞர் கூறியதைப் போல ஏழை மக்களும் நம் நாட்டில் எந்தக் காலத்திலும் கைவிடப்படவில்லை.

வீரத்தலைவன் நெப்போலியனும் 
வீடு கட்டும் தொழிலாளி! 
ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின் 
செருப்புத் தைக்கும் தொழிலாளி! 
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு 
காரு ஓட்டும் தொழிலாளி! 
விண்ணொளிக் கதிரி விவரம் கண்ட 
சர்.சி.வி.ராமனும் தொழிலாளி

இந்தப்பாடல் எப்படிச் சமுத்துவத்தைச் சமுதாயத்திற்குப் பன்னீரைப் போல் அள்ளித் தெளிக்கின்றதோ அதைப்போலதான் நம் அரசாங்கம் அனைவருக்கும் இனம், மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி சம உரிமைகள் வழங்கி வருகின்றது. நமது தேசிய கல்விக் கொள்கைகளில் (NE message) ஒன்று, நமது கல்வித் தகுதிக்கேற்ப வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதாகும். இங்குச் சொந்த விருப்பு வெறுப்பு இல்லை என்பதை அழகாகப் பறைச் சாற்றப்படுக்கின்றது.

இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு நம் முன்னாள் அதிபர் திரு எஸ். ஆர் நாதன் அவர்களாகும். இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் சாதாராண மொழிப் பெயர்ப்பாளராக இருந்த அவர் தன் சொந்த உழைப்பாலும் பன்முகத் திறன்களாலும் நம் நாட்டின் அதிபராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட்டது.

குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு-

“குறுக்குவழியில் வாழ்வுதேடிடும்
குருட்டுஉலகமடா -இது
கொள்ளையடிப்பதில் வல்லமைகாட்டும்
திருட்டு உலகமடா -தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா
இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா - வாழ்வின்
ஏந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமாடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா“

கள்ளம், கபடு, திருட்டு, புரட்டுகள் நிறைந்த இவ்வுலகம் திருந்திட வேண்டும் மென்றே கனவைக் கவிஞர் காணுகிறார். இந்தக் கனவை நனவாக்கும் வகையில் நம் சிங்கப்பூர் அரசாங்கம் நிறைய மறுவாழ்வுத்திட்டங்களைக் கொண்டு வந்துவிட்டது. மஞ்சள் நாடா ஓட்டம் (Yellow ribbon Project) மற்றும் தொடர்பான நடவடிக்கைகள் முதல் சிறைக் கைதிகளுக்குப் பள்ளிக்கூடம் அமைக்கும் வரை நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

SOAR என்னும் திட்டம் சிறைக் கைதிகள் சிறைக் காலத்திற்குப் பின் மீண்டும் வேலையில் சேர உதவி வருகின்றது. மேலும், அவர்களும் நம் சமுதாயத்தின் ஓர் அங்கம் என்பதையும் வலியுறுத்த சமூக மற்றும் குடும்ப வளர்ச்சி அமைச்சு (Ministry of Social and Family Development) தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. மக்கள் கவிஞர் குற்றச்செயல்கள் இல்லா உலகைப் பற்றிய கண்ட கனவை நனவாக்க நம் நாடு முயன்று வருவதை நம்மால் மறுக்க முடியாது.

இவ்வாறு மக்கள் கவிஞர் அவர்களின் பாடல்கள் இன்றையக் காலச்சூழலுக்கேற்ப நமக்குப் பல போதனைகளை உணர்த்தி வருகின்றன. அதோடு, திரையுலகில் புகழ் பெற்றிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் போன்ற நடிகர்களின் திரைப்படங்களில் இவருடைய பாடல்கள் இடம்பெற்று இன்றுவரை மக்களின் நெஞ்சங்களில் நிலையான இடத்தைப் பெற்று விட்டன.

கவிஞரின் சிந்தனைகள் நம் சிங்கை மண்ணுக்கு மனத்திற்கும் உரத்தைப் போட்டு நம்மை உன்னதமாக்குகின்றன. அடுத்த தலைமுறைக்கு இவரின் பாடல்களின் சிறப்புகளைக் கொண்டு சேர தொழில்நுட்பத்தின் கைவண்ணத்தின் விறுவிறுப்பான இசைமெட்டை அமைத்துப் புதிய தொகுப்பில் இளையத் தலைமுறையினருக்கு மாங்கனிகளாகப் போல் பரிமாறினால் அவற்றை உண்ண இளையர்கள் நிச்சயமாக விரும்புவார்கள் என்பதை மறுக்க முடியுமா?

- கலைவாணி இளங்கோ

Pin It