(கோவையைச் சார்ந்த மூத்த எழுத்தாளர் (வயது 95) க. ரத்னம் அவர்கள் நாவல் / சிறுகதை / கவிதை எனப் பல இலக்கியப் படைப்புகளை எழுதிக்குவித்தவர். தமிழ்ப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், பறவையியல் அறிஞர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். அவரது "கல்லும் மண்ணும்" புதினம் பெரும் வரவேற்பினைப் பெற்றது. புதுமலர் பதிப்பகம் சார்பாக 1999 ஆம் ஆண்டில் அது மீண்டும் வெளியிடப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டன் (1855 - 1935) எழுதிய "தென்னிந்தியச் சாதிகள் மற்றும் பழங்குடிகள்" (Castes and Tribes of Southern India) குறித்த நூலை மொழியாக்கம் செய்து தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். எழுத்தாளர் க. ரத்னம் அவர்கள் எழுதிய "தமிழ்நாட்டுப் பறவைகள்" தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்ற மிக முக்கியமான நூலாகும். கோவையில் தனது துணைவியார் மரகதம் அம்மையாருடன் வாழ்ந்து வரும் அவரைச் சந்தித்து உரையாடிய அனுபவம் தனித்துவமானது. அதன் சாரம் இங்கு பதிவிடப்படுகிறது.)
(க. ரத்னம் மற்றும் அவரது துணைவியார் மரகதம் அம்மையார்)
"கல்லும் மண்ணும்" நாவல், புதுவகைப் புனைவு. ஒரு கிழவனும் சிறுவனுமே அதன் பாத்திரங்கள். (ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் எனும் ஆங்கில நாவலின் தாக்கத்தால் அது உருவானது. அது திரைப்படமாக வெளிவந்த பொழுது அதை நான் பார்த்துள்ளேன். 1960 - இல் "கல்லும் மண்ணும்" நாவல் முதலில் வள்ளுவர் பண்ணையால் வெளியிடப்பட்டது. அது பாரதி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டது. பின்னர் அந்த நாவல் புதுமலர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
எனது படைப்புகள் ஆனந்த விகடன், குமுதம், சுதேசமித்திரன் போன்ற இதழ்களிலும், தீபம், அமுதசுரபி ஆகிய இலக்கியப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. பிறகு அவை "காலையும் மாலையும்" என்ற தலைப்பில் நூலாகவும் வெளியாயின. 1965 - இல் "விளையாட்டு மைதானம்" எனும் எனது சிறுகதை ஆனந்த விகடன் பத்திரிகையில் முத்திரைக் கதையாக வெளிவந்துள்ளது.
தாகூரின் கவிதைகள் மீது இருந்த ஈடுபாட்டால், வசன கவிதைகள் எழுதினேன். மீராவின் வசன கவிதைத் தொகுதி வெளியாவதற்கு ஓராண்டுக்கு முன்பே எனது "பேதை நெஞ்சம்" தொகுப்பு 1960 - இல் வெளியானது.
எனது புதினங்களைப் பொறுத்தவரை "நினைவின் நிழல்" மற்றும் "கனவு மாலை" ஆகிய இரண்டின் பாத்திரங்களும் தொடர்பு உடையவை.
"இவர்கள் பார்வையில் அகலிகை" நூல், புதுமைப்பித்தனின் அகலிகை தொடர்பான தாக்கத்தால் மற்ற படைப்புகளையும் தேடத் தூண்டியது. இராமாயணத்தில் அகலிகை வரலாறு விரிவானது. மகாபாரதத்திலும் அகலிகை வரலாறு உள்ளது. அதனைத் தேடிப் பிடிக்க மிகுந்த முயற்சி மேற்கொள்ள வேண்டியதாயிற்று. எனினும் இந்நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
நான் பறவைகள் மீது ஈடுபாடு கொள்ள நேர்ந்தது ஒரு எதிர்பாராத நிகழ்வாகும். மாநிலக் கல்லூரியில் விலங்கியல் பேராசிரியரான நண்பர் சேதுவைப் பார்க்கச் சென்றேன். வகுப்புக்கு அவர் செல்ல வேண்டி இருந்ததால், அவர் அறையில் அமர்ந்தவன், அங்கு இருந்த புத்தகங்களைப் புரட்டினேன். அமெரிக்க எழுத்தாளர் ஒருவரின் "How to watch Birds?" என்ற நூல் கண்ணில் பட்டது. அதன் தாக்கமே பறவைகளைப் பார்க்கக் காரணமாயிற்று. பிறகு பட்டப் படிப்பில் விலங்கியல் படிக்கும் மாணவர்களுக்குப் பறவைகளைப் பற்றிய அறிமுக நூலாக "தென் இந்தியப் பறவைகள்" எனும் நூலை எழுதினேன். அது தமிழக அரசின் வெளியீடாக வந்தது. தொடர்ந்து "தமிழ்நாட்டுப் பறவைகள்" நூலும் வெளிவந்தது.
பறவைகள் பற்றிய என்னுடைய குறிப்புகள் அனைத்தையும் ஜெகநாதன் என்ற மாயவரம் கல்லூரி இயற்கையியல் மாணவரிடம் ஒப்படைத்து விட்டேன். அவர் இப்பொழுது திருப்பூரில் வாழ்கிறார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் திரு. வ. ஐ. சுப்பிரமணியம் அவர்களிடம் பறவைகள் பற்றிய ஆய்வுக்காக நல்கை கேட்டு நேரில் சென்ற பொழுது, அவர் எட்கர் தர்ஸ்டன் அவர்களது "Castes and Tribes of Southern India" எனும் தொகுப்பு நூல் ஜப்பான் மொழியிலும் கூட மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஆங்கிலப் புலமை இல்லாதவர்கள் அன்றைய தமிழ்ச் சமூகம் பற்றி அறிந்து கொள்ள அந்தத் தொகுதிகளை மொழிபெயர்க்குமாறு கூறினார். எட்கர் தர்ஸ்டன் சென்னை அருங்காட்சியக அதிகாரியாகப் பணிபுரிந்தார். ஆனைமலை, ஊட்டி போன்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று அங்கிருந்த பழங்குடி மக்களை நேரடியாகப் பார்த்து அவர்களது பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை ஆகியவை குறித்துத் தனது நூலில் விரிவாகப் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் சாதி அமைப்பு குறித்தும் அதில் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளார்.
துணைவேந்தர் வ. ஐ. சுப்பிரமணியம் அவர்கள் துணைவேந்தராக இருந்த பொழுது அந்நூலின் மூன்று தொகுதிகள் கொண்டு வந்தோம். வார்த்தைக்கு ஐந்து காசு என்று தொடக்கத்திலேயே தெரிவித்தார். அதற்காக நான் பெற்ற தொகை 21,000 ரூபாய் மட்டுமே! பிறகு 4/5/6/7 ஆகிய தொகுதிகளை நான் மொழியாக்கம் செய்தேன். அதில் நான்கு முதல் ஆறு தொகுதிகள் சுந்தரமூர்த்தி அவர்கள் துணைவேந்தராக இருந்த பொழுது அச்சில் வெளியாயின. சி. சுப்பிரமணியம் அவர்கள் துணைவேந்தராக இருந்த பொழுது இறுதியாக ஏழாவது தொகுதியும் வெளியானது. ஏழாண்டுக் காலம் கடினமாக உழைத்து அதன் ஏழு தொகுதிகளையும் வெளியிட்டேன். மொத்தம் 25,000 பக்கங்கள் கொண்ட பெரும் நூல் அது. அந்த நூல் பின்னாளில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.
வள்ளுவர் பண்ணை என்னுடைய நாவல்களை 1960-களில் வெளியிட்ட பதிப்பகம். கால்டுவெல் நூலின் முன்னுரையைப் புலவர் கோவிந்தன் மொழிபெயர்த்துக் கழகம் வாயிலாக வெளியிட்டார். அதன் உரிமையைக் கழகத்திற்குத் தந்திருந்தார். பின்னர் நூலை முழுமையாக மொழிபெயர்த்த பொழுது, ஏற்கெனவே மொழிபெயர்த்த முன்னுரைப் பகுதியை அப்படியே இணைத்து விட்டார். இது உரிமை மீறலாகக் கழகம் கருதி அவர் மீது வழக்குத் தொடர்ந்தது. அதிலிருந்து அவரை மீட்க நான் முன்னுரையைத் தனியே மொழிபெயர்த்தேன்.
புதுமைப்பித்தன் நூல்களைத் தொகுப்பாக வெளியிட்ட ஐந்திணைப் பதிப்பகத்தாருடன் புதுமைப்பித்தன் இல்லம் சென்று அவருடைய துணைவியாரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பான ‘பலிபீடம்’ நாவலின் ஆங்கிலப் பதிப்பைத் தந்து உதவினார். அதுவும் கைவிட்டுப்போய்விட்டது. ‘ஸ்டாலினுக்குத் தெரியும்’ நூலின் புதுமைப்பித்தன் கையெழுத்துப் பிரதி என்னிடம் இருந்தது. நாஞ்சில் நாடனும் காலச்சுவடு கண்ணனும் நேரில் வந்து ‘ரூபாய் 3,000 தருகிறோம்’ எனக் கேட்டனர். நான் அதைக் கொடுக்கவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் அரிய நூல்களைச் சேகரிக்கும் கண்ணன் என்பவர் ரூபாய் 8,000 தந்து அதனைப் பெற்றுக் கொண்டார்.
"ஸ்டாலினுக்குத் தெரியும்" நூல் முதலில் ஸ்டார் பிரசுரம் மூலம் வெளியிடப்பட்டது. அதன் கையெழுத்துப் பிரதியில் மூன்று பக்கங்களைக் காணவில்லை. ஜெமினி ஔவையார் படத்திற்காகப் புதுமைப்பித்தன் எழுதியதை ஜெமினி ஒதுக்கி விட்டது. அதில் ஔவையாரைப் புதுமைப்பித்தன் இளமங்கையாகப் படைத்துள்ளார். அதன் சில பகுதிகள் என்னிடம் உள்ளன. அதனைத் தினமணிக் கதிரில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிப்படுத்தியுள்ளேன்.
நான் தமிழைப் போலவே ஆங்கிலத்தில் வெளியான இலக்கியங்களிலும் ஆர்வம் காட்டி வந்தேன். "கடலும் கிழவனும்" ("Old Man and the Sea") நாவலே "கல்லும் மண்ணும்" நாவல் உருவாக உந்துதலைத் தந்தது. புரட்சியாளரான ஹெமிங்வேயைப் பற்றி நிறையத் தகவல்களைச் சேகரித்துள்ளேன். அப்படிப்பட்டவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது புதிராக உள்ளது.
(1) "இவர்கள் பார்வையில் அகலிகை" (2) "தமிழ்நாட்டுப் பறவைகள்" ஆகிய எனது இரண்டு நூல்களும் தமிழக அரசு வழங்கும் ரூ. 10,000 பரிசு பெற்றன.
தொகுப்பு: கண. குறிஞ்சி