குறிஞ்சிச் செல்வர் கொ.மா.கோதண்டம் அவர்கள் ஒரு எளிய பாட்டாளியாக தன் வாழ்வைத் தொடங்கி தமிழ் உலகம் அறிந்த படைப்பாளியாக விளங்கியவர். இளமைப் பருவத்தில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்ற குறிஞ்சிச் செல்வர் குடும்ப வறுமையின் காரணமாக ஒரு பெட்டிக் கடையில் குழந்தைத் தொழிலாளியாக வேலை செய்தார். தன் வயது குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை மிக ஏக்கத்துடன் கவனித்தவர், தன்னுடைய பணி நேரம், தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கையில் புத்தகத்துடன் ஏதாவது ஒரு வாசக சாலையில் படித்துக் கொண்டிருந்தார். 'கண்டது கற்க பண்டிதனாவான்', 'பல நாள் வாசகன் ஒருநாள் எழுத்தாளன்' என்ற பழமொழிகளை மனதில் நிறுத்தி தொடர்ந்து நூல்களை வாசித்தார்.kurinji selvarதனது 17-வது வயதில் பஞ்சாலைத் தொழிலாளியாக தன்னுடைய பணியைத் தொடர்ந்தார். சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் திரு.பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்கள் தன்னுடைய ராஜபாளையம் இல்லத்தை காந்தி கலை மன்ற நூலகமாக மாற்றினார். அங்கு செல்வதை தன்னுடைய வழக்கமாக மாற்றிய குறிஞ்சிச் செல்வர், அந்த நேரத்தில் தி.மு.க சார்பாக வெளிவந்த வார, மாத இதழ்களை தொடர்ந்து வாசித்ததின் காரணமாக திராவிட இயக்கத்தின்பால் பற்று கொண்டார். ராஜபாளையத்திற்கு அறிஞர் அண்ணா வந்தபோது அவரை நேரில் சந்தித்து உரையாடினார்.

எல்லா தொழிற்சங்கங்களுடனும் தொடர்பு கொண்டு தொழிலாளர்களுக்கான கோரிக்கைகள் குறித்து உரையாடி வந்தார். இறுதியில் ஏஐடியுசி-ல் இணைந்து செயல்பட்டார். தான் பணியாற்றிய பஞ்சாலையில் தொழிலாளர்களுக்கான நூலகம் ஒன்றை ஆலை நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தி ஏற்பாடு செய்து தந்தார். தன்னுடன் பணிபுரியும் சக தொழிலாளி திரு பூ.அ.துரைராஜா அவர்களையும் தன்னுடைய இலக்கியப் பயணத்தில் தோழராக இணைத்து படைப்பாளியாக மாற்றினார். காந்தி கலை மன்ற நூலகத்தில் இவருடைய இலக்கிய ஆசான் பன்மொழிப் புலவர் மு.கு.ஜெகநாத ராஜா அவர்களை சந்தித்தார். தியாகி பி.எஸ்.வசந்தன் மற்றும் ஜெகநாதராஜா இருவரும் இணைந்து துவங்கிய 'தமிழ் வளர்ச்சி சங்கம்' அமைப்பின் சார்பாக நடந்த கவிதை, சிறுகதை நாடகப் போட்டிகளில் பங்கு கொண்டு பரிசுகளை வென்றார். இந்த காலகட்டத்தில் ராஜபாளையம் நிகழ்ச்சியில் உரையாற்ற வந்த இலக்கியப் பேராசான் ஜீவானந்தம் அவர்களுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

குறிஞ்சிச் செல்வர் முதலில் கலைமகள் இதழில் தொடர்ந்து துணுக்குகள் எழுதி வந்தார். பின்னர் தாமரை, செம்மலர், தீபம், அமுதசுரபி, கல்கி, ஜனசக்தி, தமிழ் முரசு, தினமணி, தினமணிச் சுடர், தினமணிக் கதிர் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட இதழ்களில் அவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவந்தன. இந்தக் காலகட்டத்தில் மு.கு.ஜகநாதராஜா ஆரம்பித்த மணிமேகலை மன்றத்தில் இணைந்து பொதுச்செயலாளர் மற்றும் தலைவராக சென்ற ஆண்டு வரை மிகச் சிறப்பாக செயல்பட்டு நிகழ்வுகளை நடத்தினார். தன்னுடைய இல்லத்தை 'சாத்தனார் இல்லம்' என பெயர் மாற்றினார். அந்த இல்லத்தில் திருக்குறள் சிறார் பயிற்சி கழகம் ஆரம்பித்து வாரம் ஒரு முறை திருக்குறள் வகுப்பு எடுத்தார். சிறுவர்களுக்காக கோகுலம் சிறுவர் சங்கத்தைத் தொடங்கி தொடர்ந்து நடத்தினார்.

தன்னுடைய இணையர் திருமதி ராஜேஸ்வரி அவர்களுடன் இணைந்து பெண்களுக்கான வாசுகி மாதர் சங்கம் தோற்றுவித்தார். இந்த சங்கங்களின் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளை அருகில் உள்ள திருநெல்வேலி, மதுரை, திருச்சி மாநாடு நிலையங்களுக்கு அழைத்துச் சென்று நிகழ்ச்சிகளை நடத்தினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கிளையைத் தோற்றுவித்து நீண்ட காலம் அதன் பொறுப்பாளராக செயலாற்றினார். அதன் மாநிலக் குழு உறுப்பினராகவும், தலைமைக்குழு உறுப்பினராகவும் பணிபுரிந்தார். மலைவாழ் மக்கள் நல சங்கம் தோற்றுவித்து அய்யனார் கோவில் படிவர்களுக்கு பல நல உதவிகளை பெற்றுத் தந்தார்.

தன்னுடைய படைப்புகளாக 'ஏலச்சிகரம்', 'ஜன்ம பூமிகள்', 'குறிஞ்சாம்பூ போன்ற நாவல்களையும், 'ஆரண்ய காண்டம்', 'மலையின் மைந்தர்கள்', வெடிக்கத் துடிக்கும் வேர் பலாக்கள்'. 'காட்டுக் குயில்கள்' போன்ற சிறுகதை தொகுப்புகளையும், 'நீலனும் மலைப்பாம்பும், 'நீலன் நமது தோழன், எங்கிருந்தோ வந்தான்', 'திக்குத் தெரியாத காட்டில்', 'பிறந்த பூமி' போன்ற சிறார் படைப்புகளையும், புனித பூமி' என்ற நாடகத்தையும், 'தியாகி அரங்கசாமி ராஜா வரலாறு' என்ற வரலாற்று நூலையும், 'நமது வீடு நல்ல மருந்தகம்', 'நமக்கு நாமே நல்லதொரு மருத்துவர்', 'இயற்கை உணவும் தீரும் நோய்களும் போன்ற மருத்துவ நூல்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நூல்களை படைத்துள்ளார்.

ஒன்றிய அரசின் குடியரசுத் தலைவர் பரிசு இவருடைய 'ஆரண்ய காண்டம்' நூலுக்கு கிடைத்தது. 2012-ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய அகாடமி விருது 'காட்டுக்குள்ளே இசை விழா' என்ற நூலுக்கு வழங்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருது தமிழ் நாடு அரசால் வழங்கப்பட்டது. 2025 ஏப்ரல் 5 அன்று இவரது படைப்புகள் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது. இது தவிர ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் கலாநிதி சிவத்தம்பி. டொமினிக் ஜீவா, சே.யோகநாதன் போன்றவருடன் மிக நெருங்கிய நட்பில் இருந்தார். இதன் காரணமாக 1981-ஆம் ஆண்டு இலங்கை பயணம் மேற்கொண்டு அங்குள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் தமிழ் சங்கங்களில் உரை நிகழ்த்தினார்.

இவர் தன்னுடைய படைப்புகளுக்காக அய்யனார் கோவில் பளியர் இன மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு சென்று, அவர்களுடன் தங்கி அவர்களின் வாழ்வை நுட்பமாக கவனித்து படைப்புகளை வழங்கினார். அதைப் போலவே ஏலக்காய் தோட்டத் தொழிலாளர்களோடு தங்கி, அவர்கள் வாழ்வின் துயரங்களையும், அவர்களின் வாழ்வு, சுயநலவாதிகளால் எவ்வாறு சூறையாடப்படுகிறது என்பதையும் நுணுக்கமாக தன்னுடைய படைப்புகளில் சித்தரித்தார்.

இவருடைய ஆரண்ய காண்டத்தில் உள்ள சிறுகதைகளை அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுப்பு அவர்கள் வாசித்து, அன்றைய அமைச்சர் மாண்புமிகு சத்தியவாணி முத்து அவர்களிடம் மலை வாழ் மக்களின் துயரங்களை எடுத்துக் கூறி செண்பகத் தோப்பு மலைவாசிகளுக்கு வீடுகளைப் பெற்று தந்தார். பல அரிய வகை தாவரங்கள் குறித்தும், விலங்குகளின் பழக்கவழக்கங்கள் குறித்து மலைவாழ் மக்களின் வினோதமான மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் பாடல்களை பதிவேற்றினார். இதனால் தான் கி.ராஜநாராயணன் இவரை 'இருபதாம் நூற்றாண்டின் குறிஞ்சிக் கபிலர்', என்றும் ந.பிச்சைமூர்த்தி 'குறிஞ்சிக்கு ஒரு கோதண்டம்' என்றும் புகழுரை வழங்கினர்.

எழுத்தாளர்கள் தி.க.சி. வல்லிக்கண்ணன், பேராசிரியர் நா.வானமாமலை, திருக்குறள் முனுசாமி, அழ.வள்ளியப்பா, பொன்னீலன், மேலாண்மை பொன்னுச்சாமி, தனுஷ்கோடி ராமசாமி, தமிழ்ச்செல்வன் முதல் இன்றைய இளம் எழுத்தாளர்கள் வரை நட்பை பேணி வந்தார். தன்னை சந்திக்கும் ஒவ்வொரு நபர்களையும், எழுதுவதற்கு உத்வேகம் தந்தார். பல இளம் படைப்பாளிகளின் படைப்புகள் வெளிவர உதவிகரமாக இருந்தார்.

எளிமை, அன்பு, பணிவு அவரது அடையாளமாக இருந்தது. தன்னுடைய மூத்த மகனுக்கு குறள்அமுதன் என பெயரிட்டார். இரண்டாவது மகனுக்கு இளங்கோ என பெயரிட்டார். இணையர் திருமதி ராஜேஸ்வரி உட்பட இரண்டு மகன்களும் படைப்பாளிகளாக விளங்குகின்றனர். தன்னுடைய குடும்பத்தையே இலக்கியக் குடும்பமாக மாற்றினார். 1938 செப்டம்பர் 15-ல் பிறந்த குறிஞ்சிச் செல்வர் தனது 87-வது வயதில் 2025 அக்டோபர் 4-ல் இயற்கை எய்தினார். மலைவாழ் மக்களின் துயரங்களையும், ஏலத்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வின் சிக்கல்களையும் முதன் முதலில் இலக்கியத்தில் பதிவு செய்த குறிஞ்சிச் செல்வர் புகழ் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்திருக்கும்.

- டாக்டர் த.அறம், மருத்துவர், எழுத்தாளர், கஇபெம மாநிலச் பொதுச் செயலாளர்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.