தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை - கோவை மாவட்டம் நடத்திய "இலக்கிய மற்றும் "மேடை விருதுகள் 2021" க்கான விருதாளர்கள் பட்டியல் வெளியீட்டு நிகழ்வு நேற்று - ஞாயிறு - 28.11.2021 இனிதே நிறைவடைந்தது.

medai kovaiவழக்கம் போல இன்னொரு வகையான புது அனுபவத்தை அதிரடியாக உணர முடிந்தது. எது நடந்ததோ அதில் உள்ள நல்லவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற புரிதல் நேரடியாக நெல்லிக்கனி சுவையாக உள் வாங்க முடிந்தது. நினைத்த மாதிரி எதுவும் நடக்க போது நினைக்காத வேறொன்று அட்டகாசமாய் நிகழ்ந்து விடுதல் நல்ல மனங்களின் கூட்டு நேர்த்தி. எனதினிய தூண்கள்...சமயோசித புரிதல்களோடு நடந்து கொண்ட போது... இந்த படை ஒரு போதும் தோற்காது... என்று நம்பினோம். நினைத்த மாதிரி கூட்டம் வரவில்லை. ஆனால் நெகிழ்த்தி வாழ்த்தும் கூட்டம் வந்திருந்தது.

எதை ஒன்றை வார்த்தெடுக்கவும் அதன் சூழலை இலகு படுத்த வேண்டும்... அதே நேரம் அதை இலக்குக்கு பழக்கவும் வேண்டும். எங்கள் இலக்கு என்பது மலை உச்சி அல்ல. அதற்கான பயணம். புத்தன் சொன்னது தான்... காலத்துக்கும் புத்திமதி நமக்கு.

கோவை மாவட்ட குழு எப்போதும் உத்வேகத்துடனும் உண்மையுடனும் பணி ஆற்றுவது போற்றுதலுக்குரியது. தொடர்ந்து செயல்பாட்டில் தன்னை முன்னிறுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் ஆவல். மொழியின் வளமும் தமிழின் பலமும் மேடை ஏறி நிற்பது தான் மேடை அமைப்பின் சமரசமற்ற கொள்கைக்கு அடித்தளம். இலக்கியத்தின் வாயிலாக எப்போதும் நாம் விரும்பும் மாற்றத்தை நோக்கி தான் இந்த வீறு நடை. அதன் வாயிலாக சமூக மாற்றம் என்பது தான் இணைந்த நம் கைகளின் வலிமையான நோக்கம்.

செயல்படுதலின் மூலமாகத்தான் நிரூபணங்கள் சாத்தியம். அந்த வகையில்...இங்கே எத்தனை போராட்டங்கள் இருப்பினும்... எது நோக்கமோ அதன் தூரங்களை சத்தியத்தின் வழியே சாத்தியப்படுத்திக் கொண்டே இருக்கத்தான் இவையெல்லாம்.

முதலில் "காதலாரா" நிகழ்வை தொகுக்க ஆரம்பித்தான். விரும்பி வகுப்பெடுப்பது போல அத்தனை நேர்த்தி. சொல்லாடலில் சங்க இலக்கியம் ரெக்கை பூட்டிக் கொண்டு அவனை சுற்றுவதை காண்கையில் கொண்டாடி களி தீர்த்தோம். ஒவ்வொரு அறிமுகத்துக்கு முன் பின் என்று அவன் நிகழ்த்திய சித்திரங்கள் மேடையின் மாடர்ன் ஆர்ட்கள்.

அடுத்து எனது முன்னிலை உரை வழக்கமான உற்சாகத்தில் இல்லை. திருமணத்தை நடத்தி பார்க்கும் வீட்டுக்காரன் போல... உள்ளே இல்லாத அலையும் பொங்கியது. இருக்கும் கடலோ பேரமைதி. ஆனாலும் யாம் குதிரை மனம் வாய்த்தோன். விழும் வேகத்தில் எழும் தாகம் ஒருபோதும் அடங்காது. எதையும் கடந்து செல்லும் இதயம் எப்போதோ பூத்திருந்தது... இப்போதும் தொட்டு பார்த்துக் கொண்டேன்.

அத்தனை பெரிய அரங்கத்தில் மனம் பத்தாமல் நிறைந்திருந்ததை விழா முடிகையில் உணர்ந்தோம். எதை கொண்டும் எதையும் தடுக்க முடியாது. விடாமல் பற்றி இருப்பவனை அந்த எண்ணமே காப்பாற்றும். வரவேண்டிய சமையல்காரர் வராத போது வேறு வழியில்லாமல் நாமே எப்படியாவது அவசர சமையல் செய்வோம் தானே... அதுவும் அந்த நேரத்தில் ருசி கூடி பசி ஆற்றி விடும். அப்படி... இலக்கு நானூறு... எல்லாம் அவுட். தோனி ஓடி ஓடி ஒவ்வொரு ரன்னாக எடுத்து.... மெல்ல மெல்ல இலக்கை நோக்கி அணியை நகர்த்திக் கொண்டு போவது போல... விசாகன் சார் எடுத்த முடிவில்... அப்போதைக்கு எல்லாவற்றையும் மாற்றினோம். நான் பேட்டிங் மட்டும் தான் பண்ணுவேன்... பவுலிங் வராது... நான் பீல்டிங் மட்டும் தான்... பேட்டிங் வராது என்ற பேச்சுக்கு நம் அமைப்பில் இடமே இல்லை. இங்கு எல்லாருமே ஆல் ரவுண்ட்ர்ஸ். யாரை எங்கு நிறுத்தினாலும் நிகழ கூடியது நிகழும். நிகழ்த்த கூடியதை நிகழ்த்துவார்கள். அப்படிதான் நிகழ்ந்தது..நிகழ வேண்டியது.

முதல் அமர்வில் 2021 ம் ஆண்டுக்கான மேடை விருதாளர்கள் பற்றிய அறிவிப்பை தோழர் தி குமார் அவர்களும் மேடை - ன் மாநில துணை செயலாளர் R.S லட்சுமி அவர்களும் வெளியிட... இனிப்பு மருத்துவர் "மகேஸ்வரன் நாச்சிமுத்து" அவர்கள் பெற்றுக் கொண்டார். உடன் கவிஞர் விஜி கல்யாணி.. மாநில செயலாளர் அம்பிகா குமரன் மற்றும் நான்... இருந்தோம். செவ்வெனே செய்தலின் வழி சிறந்தவையை சிந்தனை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

கால சித்திரத்தை கிளிக்கினார் விசாகன் சார். ஒவ்வொருவரையும் அத்தனை அழகாய் புகைப்படத்துக்குள்ளிருந்து வெளி எடுக்கும் வித்தைக்கு வியக்கிறோம்.

மேடையின் விருதுகள் என்பது வருடா வருடம்... மகத்தான இலக்கிய மனிதர்களுக்கான அங்கீகாரம். விருதுகள் என்பது பெருமை படக்கூடிய விஷயம் மட்டும் அல்ல.. பொறுப்பு கூட படக்கூடிய விஷயமும் தான். அது ஓர் உந்து சக்தி. இதுவரை செய்தது ஒன்றுமில்லை... இனி செய்ய போவது தான் என்பதற்கான எச்சரிக்கை மணி. ஓடிக்கொண்டே இருப்பவனுக்கு சற்று நேர இளைப்பாறல். பிறப்பது வேண்டுமானால் தற்செயலாக இருக்கலாம். வாழ்வதும் அது கொண்ட அர்த்தத்தை மீட்டெடுப்பதும் அந்தந்த மனிதனின் தனித்துவம் சார்ந்தது. தேடி தேடி கண்டெடுக்கும் அறிவும் அனுபவமும் இந்த சமூகத்துக்கு உதவ வேண்டும் என்பது தான் அடிப்படை புரிதல்.

அடிப்படை புரிதல் எத்தனை முக்கியமோ...அதை விட முக்கியம்...அடிப்படை வாதங்களில் இருந்து விலகி இருத்தல். அப்படி இருக்க வேண்டுமானால் கற்றலின் வழியே தான் அது சாத்தியம். கற்றலும் கற்றுக் கொடுத்தலுமான சூழல் தான் மேடை அமைப்பின் தாரக மந்திரம். அதன் வடிவத்துக்கு அழகு கூட்டுவது தான் மேடை விருதுகள். தகுதி உள்ளவையே தப்பி பிழைக்கும். ஆனால்...தகுதி இருந்தும் தவிக்க விடும் பெரும்பாலைய இலக்கிய சூழலில் நல்லவைகளை கண்டெடுத்து நாங்கள் இருக்கின்றோம் என்று நம்பி கை கொடுக்கிறது மேடை. படைப்பாளியை புறக்கணிக்கும் சமூகம் உருப்படாது. ஏனெனில் காலத்தின் பிரதிநிதி படைப்பாளி. அவன் வாழும் போதே அவனுக்கான அங்கீகாரம் கிடைக்கப்பட வேண்டும். அப்படியான மகத்தான வேலையை தான் மேடை ஒவ்வொரு வருடமும் பல கட்ட போராட்டங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. மேடை விருதென்பது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கான மைல்கல்.

இனிக்க இனிக்க காமெடியோடு கனிவையும் பேசினார்.... மருத்துவர் "மகேஸ்வரன் நாச்சிமுத்து". இந்த இடத்தில "மருத்துவர் செல்லம் ரகு" சார்- ஐ மிஸ் செய்கிறோம் என்பதை உள்ளே என்னவோ அழுந்த நினைத்துக் கொள்கிறேன்.

இலக்கியத்தில் நகைச்சுவை என்ற தலைப்புக்கு ஆரம்ப புள்ளி போட்டார் மருத்துவர் "மகேஸ்வரன் நாச்சிமுத்து. இலக்கியவாதிகள் எப்போதும் சீரியஸாக தான் இருக்க வேண்டும் என்று இல்லை.. என்று மருத்துவர் சொல்கையில் இனிப்பு மருந்து குடித்தது போல. மேட்டுப்பாளையத்தில் இருக்கும் தன் இடத்தை கூட்டம் நடத்த உபயோக படுத்திக் கொள்ளுங்கள் என்றார். குளுகோஸ் ஏறியது போல உணர்ந்தோம். அவருக்கு மனம் கனிந்த நன்றிகள். நல்ல உள்ளங்கள் இப்படி எப்படியும் நமக்கு கை கொடுப்பது இலக்கியத்தின் மீது நாம் கொண்ட இருத்தலின் பிடிப்பை காட்டுகிறது. உண்மையாய் இருக்கையில் எதுவும் திண்மை.

வாழ்த்துரை வழங்கிய மேடை - ன் மாநில துணை செயலாளர் "தோழர் R S லட்சுமி" அவர்கள் நிதானமாக ஆரம்பித்தார். தியானத்தின் குரல் வழியே அவர் சொன்னது எல்லாம் தியாகத்தின் மன நிலை தான்.

கருத்துரை வழங்க வந்தவரை கவனிக்கும் உரையையே நீங்கள் தான் வழங்க வேண்டும் என்று ஸ்பாட்டில் நிறுத்திய போதும்... ஒரு சிறு இடைவெளியில் வெளியே நின்று யோசித்தார். பிறகு சரி நான் ரெடி என்பது போல மேடை ஏறி விட்டார். அத்தனை நேரம் மௌனத்தின் வழியே மெல்ல மொழி திறந்த குமார் சார் அதன் பிறகு மெல்லிசையில் சரவெடி கொளுத்தினார். இலக்கியத்தில் நகைச்சுவையை ஒரு சீரியசான மனிதர் பேசியது ரசனைக்குரியது. எத்தனை உதாரணங்கள்.. சிறு சிறு கதைகள்... உவமைகள்... அறத்தை போதிக்கும் அரூப சொல்லாடல்கள் என்று குமார் சார்... நிகழ்ச்சி நடக்குமா என்றிருந்த ஆரம்ப நேர யோசனையை தகர்தெறிந்தார். ஒருத்தன் முன்னால் அமர்ந்திருந்தால் கூட பேச வேண்டியதை மொத்தமாக துளி குறைக்காமல் பேசு என்றார். இதே அரங்கம் நிறைந்து வழியும் காலமுண்டு.. கலங்காதே கவிஜி என்றார். கண்கள் நிறைய நம்பினேன். நிகழ்வு முடிந்து பேசுகையில் எங்கள் குழுவுக்கு அத்தனை நம்பிக்கையை விதைத்தார். ஒவ்வொருவரையும் பாராட்டினார். முகம் மலர்ந்த அரவணைப்பை அவரும்... அவரின் துணைவியார் R.S லட்சுமி அவர்களும் தந்தது மிகப்பெரிய பலம். வழி நடத்தி செல்ல பெரியோர்கள் இருக்கையில்... வழி நெடுக மரத்தோடு சேர்த்து நிழலையும் நாம் நடுவோம்.

அடுத்து... விருதாளர் தேர்பவனும் குறித்து உரையாடிய மேடை- ன் மாநில செயலாளர் "அம்பிகா குமரன்" வழக்கம் போல மொத்த சாராம்சத்தை தித்திக்கும் குரல் வழியே முத்துக்களாக்கினார். எப்போதும் ஆழம் படர அழுத்தம் சுடரும் மொழி அம்பிகாவினுடையது. மொத்த சாரத்தையும் தன் கொத்து மொழியில் நிகழ்த்தி விடுபவர். இன்றும் அப்படியே நிகழ்த்தினார்.

இரண்டாவது அமர்வுக்கு முன்னிலை வகித்த "மழை"க்குள் பெருமழை தான் போல. ஆனந்தம் முகத்தில். ஆச்சரியம் அவள் மொழியில். விழிகள் படபடக்க... நடை பழகும் குழந்தை என இலக்கியத்தில் ரெக்கை முளைக்க ஆரம்பித்திருக்கும் காலம். கொஞ்சம் பேசினாலும் நிதானமும் நம்பிக்கையும் தன்னளவு உயர்ந்திருந்து. தொடரட்டும் மழை பேச்சு. தொடர்ந்து வெளிச்சம் பாய்ச்ச வேண்டும். ஒவ்வொரு துளியிலும் வெளிச்சம் தானே மழையாகிறது.

அடுத்து கருத்துரை வழங்கிய "கவிஞர் - அக்கா - விஜி கல்யாணி" அவர்களும்... அக்கா கவிஞர் கிறிஸ்டினா அருள் மொழி" அவர்களும் அவரவர் பாணியில் அவரவர் பார்வையை முன் வைத்தார்கள். இருவருமே சமூகத்தின் மீது தங்கள் பார்வையை எப்போதும் ஆழமாய் பதிப்பவர்கள். கருத்துரையையும் கவனத்தோடு பதித்தார்கள். பார்வையாளராய் வந்த கிறிஸ்டிக்காவை பேசுங்கள் என்று சொல்லி விட்டோம். கஷ்டம் தான். ஆனாலும் இஷ்டத்தோடு பேசினார். அன்பு வட்டமாக இருப்பினும் அடிநாதமாக மற்றவர்களை பாராட்டுங்கள் என்றார். இலக்கியத்தில் நகைச்சுவை தலைப்புக்கு நியாயம் செய்யும் விதமாக காளமேக புலவரில் இருந்து வடிவேலு சார் வரை ஒரு ரவுண்ட் அடித்தார் அக்கா - விஜி கல்யாணி. பொதுவெளியில் பெண்களின் பாதுகாப்பு... உள்பெட்டியில் வந்து குசலம் விசாரிக்கும் கல்பிரிட்ஸ் என்று இலக்கிய சாபங்கள் குறித்தும் போகிற போக்கில் போட்டு தாக்கினார். மொத்தத்தில் சுத்தமான சிந்தனையை மொத்தமாக தந்து விட்டு சென்ற இருவருக்கும் இசை விசிறலாம்.

அடுத்து இரண்டு பார்வையாளர்கள்... அறிஞர் கோமள லட்சுமி அவர்களும் கவிஞர் சத்யா அவர்களும் - புன்னகை தவழும் முகத்தில் அவரவர் மொழியில் அவரவர் ஆட்சி செய்தார்கள். கோமள லட்சுமி அவர்களின் நினைவாற்றல் அபாரம். மொத்த நிகழ்வையும் குறிப்பெடுத்தது போல எந்த வித துருப்பு சீட்டும் இல்லாமல் அடுத்தடுத்து ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு சிலாகித்து விவரித்த விதம்.. stunned moments....

எப்பவும் சிரிச்சிகிட்டே இருங்க என்று சிரிச்சிகிட்டே சொன்ன சத்யா அவர்கள் மேடையில் நின்றது.. stay tuned moments....

அடுத்து எங்கள் கடைக்குட்டி சுகன் சேகுவேரா -ன் நன்றியுரை. எப்போது எந்த தலைப்பில் பேச வாய்ப்பு கிடைத்தாலும் அதில் தன் அரசியல் முன்னெடுப்பை லாவகமாக வைத்து விடும் பாங்கு வாய்த்தவன். நிறுத்தி நிதானமாக ஆறு பந்துகளையும் ஆறாக்கி காட்டறாக்கி ஓட விடும் சிவப்பு சிந்தனையாளன். மிக சாதுரியமாக மொத்த நிகழ்வையும் தன் போக்கில் நினைவூட்டி நன்றி கூறினான்.

பெருமூச்சு விட்டு நிற்கையில்.. மதியம் தாண்டி இருந்தது. நடக்குமா என்று சந்தேகித்த விழா நல்லபடியாக நடந்து முடிந்தது.... திருப்தி.

விருது பெற போகும் அனைத்து தோழர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

எல்லாவற்றுக்கும் ஆணி வேர் விசாகன் சாருக்கு எப்போதும் தலை தாழ்ந்த வணக்கங்கள்.

நிகழ்வு முடியும் வரை இருந்து நிகழ்வை நடத்தி கொடுத்த நண்பர்கள் அன்பர்கள் தோழர்கள் என அனைவருக்கும் பேரன்பின் தழுவல்கள்.

இது கோவை மாவட்டத்தின் 11 வது அமர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இனியும் இது தொடரும். தொட்டு விட்டால் விட்டு விடும் மனமோ குணமோ... கண்டிப்பாக எம்மிடம் இல்லை. சிற்பத்தை ரசிக்கும் அதே நேரம் பாறையையும் ரசிக்கும் வாழ்வை கண்டடைந்திருக்கிறோம். வேறு என்ன சொல்ல..... வழியில் இருக்கும் முட்களை அப்புறப் படுத்திக் கொண்டே செல்வோம். ஆனால் பயணம் ஒருபோதும் தடைபடாது.

கலை வளர்ப்போம்... கரம் கோர்ப்போம்... களம் வெல்வோம்.

- கவிஜி, செயலாளர் - கோவை, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை

Pin It