சென்னை புத்தகக் கண்காட்சியில் அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்றதாக அந்த புத்தகக் கண்காட்சியை நடத்தும் பபாசி அமைப்பு அளித்த புகாரின் பேரில் ‘மக்கள் செய்தி மையம் நியூஸ் பிரைவேட் லிமிட்டெட்’ என்ற பெயரில் புத்தகக் கடை போட்டிருந்த மூத்த பத்திரிகையாளர் அன்பழகனை கைது செய்திருக்கின்றது அடிமை எடப்பாடியாரின் கைப்பிள்ளைகளாக செயல்படும் தமிழக காவல் துறை. அவர் மீது 294 (பொது இடத்தில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துதல்), 341 (சட்டவிரோதமாக செயல்படுதல்), 506 (மிரட்டல் விடுத்தல்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.

edappadi at book fairபுத்தகக் கண்காட்சியை நடத்தும் ஓர் அமைப்பே ஆள்காட்டி வேலை பார்க்கும் செயல் உலகில் வேறு எங்கேயாவது இதற்கு முன் நடந்து இருக்கின்றதா என்று தெரியவில்லை. சமூகத்தைப் பற்றியும் சமூக மாற்றத்தில் புத்தகங்களின் பங்களிப்பைப் பற்றியும் எதுவுமே தெரியாத அல்லது அதைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாத வலதுசாரி சிந்தனை கொண்ட நபர்களால் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டால் நிச்சயமாக அது இப்படி ஒரு நிலையைத்தான் எட்டும்.

கருத்துச் சுதந்திரத்தின் மீது மோடியின் அடிமை அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள பாசிசம் தற்போது கொஞ்சநஞ்சம் இருந்த ஆடைகளை எல்லாம் களைந்துவிட்டு, அம்மணமாக ஆடத் தொடங்கி இருக்கின்றது. யார் எதைப் படிக்க வேண்டும், எப்படி சிந்திக்க வேண்டும் என அனைத்தின் மீதும் கட்டுப்பாடு செலுத்தும் ஓர் அரசாங்கம் உச்சபட்ச பயத்தில் இருப்பதாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஊழலிலும், அதிகார முறைகேடுகளிலும் ஈடுபட்டு, எந்த ஒரு அரசு மக்கள் விரோத அரசாக செயல்படுகின்றதோ, அந்த அரசுதான் தன் இருத்தலை தக்க வைத்துக் கொள்ள மிக மூர்க்கத்தனமாக கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வேலையைச் செய்யும். அந்த வகையில் எடப்பாடி தலைமையிலான அரசு மக்களின் அரசியல் அறிவு, மேல் நிலைக்கு வருவதைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டு இருக்கின்றது. தங்களின் ஊழல் முறைகேடுகள் ஆதாரத்துடன் அம்பலப் படுத்தப்படுவதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் என்ன நடக்கும் என்று அதற்குத் தெரியும். அதனால்தான் அரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

புத்தகத்தின் வாசனையே நுகராத நபர்கள் எல்லாம் ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்தும் அவல நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதைவிட பெரிய கொடுமை, இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியை சேக்கிழார் எழுதிய கம்ப ராமாயணத்தை படித்தவரும், அம்பேத்கரை தூக்கில் போட்டதை அருகில் இருந்து பார்த்த, இந்தியாவில்... ஏன் உலகிலேயே ஒரே ‘மானமிகு’ மனிதரான எடப்பாடி அவர்கள் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, 75 லட்சம் நிதி ஒதுக்கியதுதான். அப்போதே பதிப்பாளர்கள் கொஞ்சம் உசாராகி இருந்திருக்க வேண்டும். இது பபாசி ஆள்காட்டி வேலை பார்க்க எடப்பாடி கொடுக்கப் போகும் லஞ்சம் என்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.

எனவே அறியாமையில் இருக்கும் புத்தகப் பதிப்பாளர்களும், விற்பனையாளர்களும் சிலவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டைப் பிடித்த பீடையும், இந்தியாவை பிடித்த பெரும் பீடையும் நம்மை எல்லாம் ஆட்டிப் படைக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். இது முட்டாள்களின் காலம், சொம்பு தூக்கிகளின் காலம், மண்புழுக்களின் காலம், ஊரை அடித்து உலையில் போடும் உழைப்புறிஞ்சிகளின் காலம், உண்மைகளை புரட்டிப் போடும் புரட்டர்களின் காலம் - சுருக்கமாகச் சொல்வதென்றால் இது எடப்பாடி மற்றும் மோடிகளின் காலம். இந்தக் காலத்தில் நாம் கலகக் குரல் எழுப்புவது கழுதையின் காலுக்குக் கீழே உட்கார்ந்து கொண்டு, சேக்கிழார் எழுதிய கம்ப ராமாயணத்தைப் படிப்பது போன்றது. எப்போது வேண்டுமானாலும் உதை விழலாம். நீங்கள் வாழும் காலத்தை முன் உணர முடியாதவர்களாய் இருக்கின்றீர்கள். மாட்டு மூத்திரத்தைக் குடித்து முக்காலமும் உணர்ந்த அறிஞர் பெருமக்கள் நம்மை ஆண்டு கொண்டிருக்கும்போது, மூன்று வேளையும் சோற்றுக்கு உப்பு போட்டு தின்னும் உங்களுக்கு புத்தகம் ஒரு கேடா என்று 'வானத்தில் இருந்து தூக்கு தண்டனையால் மரித்த' அம்பேத்கரின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா? கேட்டிருந்தால் இப்படி மக்களை அறிவாளிகளாக்கும், அவர்களை தீவிரவாதிகளாய் மாற்றும், ஆயுதப் புரட்சி செய்யத் தூண்டும் புத்தகங்களைப் பதிப்பித்து விற்பனை செய்ய முற்பட்டிருப்பீர்களா?

காலத்தை நன்றாக உணர்ந்து அதற்கேற்ற புத்தகங்களை வெளியிட நாம் கற்றுக் கொள்ள வேண்டும். டீக்கடையே இல்லாமல் டீ போட்டு பிரதமராவது எப்படி? மண்புழு போல ஊர்ந்து சென்று முதல்வராவது எப்படி? ஊறுகாய் போட்டு இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது எப்படி? பணமதிப்பு நீக்கத்தால் வல்லரசான இந்தியா, ஜி.எஸ்.டியால் ராக்கெட் வேகத்தில் செல்லும் இந்தியப் பொருளாதாரம், அம்மாவின் ஆன்மாவும் ஓபிஎஸ்சும் - ஒரு திறனாய்வு, உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு அம்மா அந்தஸ்த்தை கொடுத்த கொடை வள்ளல், உலக அரசியல் வரலாற்றில் இடம் பெற்ற கூவத்தூர், அரசுப் பள்ளி மாணவர்களை டாக்டர்கள் ஆக்கிய நீட் தேர்வு, உலகம் போற்றும் தெர்மாகோல் விஞ்ஞானி, தமிழ்நாட்டின் டாடி மோடி - இப்படி தினுசு தினுசா புத்தகம் போட்டிருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது. ஆனால் பிழைக்கத் தெரியாத அன்பழகன் போன்றவர்கள் கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் ‘தமிழக அரசின் ரூபாய் 15000 கோடி ஊழல், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஊழல் ராஜாங்கம்’, ‘அம்மா உணவகம் ரூபாய் 300 கோடி இழப்பு’, ‘தமிழக அரசில் முட்டை ஊழல்! கிறிஸ்டி புட்ஸின் முட்டை அரசாங்கம்’ என்று வாழும் தெய்வங்களைப் பற்றி குற்றம் சுமத்தும் புத்தகங்களை வெளியிட்டால் யார் தான் பொறுத்துக் கொள்வார்கள்?

சூதுவாது தெரியாமல் சில பதிப்பகங்களைச் சேர்ந்த தோழர்கள் இருக்கின்றார்கள். பத்து, நூறு என பிச்சை எடுத்து மக்கள் பதிப்பில் புத்தகங்களை வெளியிடுவது, எவனுமே படிக்க மாட்டான் என்று தெரிந்தும் சொத்துக்களை விற்று புத்தகங்களைக் கொண்டு வருவது, காசு கொடுத்து மொழிபெயர்த்து உலக அறிவுப் பொக்கிசங்களை எல்லாம் தமிழில் கொண்டு வந்தாலும், அதை வாங்குவதற்கு ஆளில்லாமல் போட்ட காசைக் கூட எடுக்க முடியாமல் நடுத்தெருவுக்கு வந்தாலும், மக்களின் மீது குறை சொல்லாமல் மீண்டும், மீண்டும் மக்கள் பணிக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொள்வது - இப்படித்தான் பல முற்போக்கு நூல்களை வெளியிடும் பதிப்பகத் தோழர்கள் இருக்கின்றார்கள்.

ஏற்கெனவே முற்போக்கு நூல்களைப் போட்டு அதை விற்க முடியாமல் போண்டியாகி இருக்கும் பல பதிப்பகங்களை இனி எழுந்து நடக்கவே முடியாத படுகுழியில் தள்ளி, அவர்களை எல்லாம் புத்தக வியாபரத்தில் இருந்து அடித்து விரட்டுவதுதான் மோடியின் கைப்பாவையாக செயல்படும் எடப்பாடி அரசின் திட்டமாகும். இனி யாருமே இந்தச் சமூகத்தை மாற்ற புரட்சிகர அரசியலை சொல்லிக் கொடுக்கும் புத்தகங்களைப் போடுவதற்கு அஞ்ச வேண்டும் என இந்த அரசு நினைக்கின்றது. உங்கள் கண்முன்னால் இந்த அரசு நடத்திக் கொண்டிருக்கும் காட்டுத் தர்பாரை இனி நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது, உங்களிடம் ஆதாரம் இருந்தால் அதை மலம் துடிக்கும் திசு பேப்பர்களாக வைத்துக் கொள்ளுங்கள் என்று மிரட்டுகின்றது இந்த அரசு.

இப்படி கருத்துச் சுதந்திரத்தை காலில் போட்டு இந்த அரசு மிதித்தாலும், அதைக் கண்டித்து ஒரு போராட்டத்தைக்கூட செய்யத் திராணியில்லாத கூட்டமாக புத்தக விற்பனையை கார்ப்ரேட் வணிகமாக செய்து வரும் பதிப்பகங்கள் இருக்கின்றன. சில முற்போக்குப் பதிப்பகங்களை சேர்த்தேதான் நாம் சொல்கின்றோம். ‘புரட்சிகரக் கருத்துக்களை நாங்கள் விற்பனை செய்வோம், ஆனால் நாங்கள் புரட்சிகரமானவர்கள் அல்ல’ என்று அவர்கள் தங்களின் செயல்பாடுகளால் வெளிப்படுத்துகின்றார்கள். பபாசியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் வாயில் கருப்புத்துணி கட்டியபடி பபாசி அலுவலகத்தில் கண்டன அறிக்கையை தரப் போகின்றார்களாம். இதைவிட வேறு என்ன கேலிக்கூத்து இருக்க முடியும்?

‘மக்கள் செய்தி மையம் நியூஸ் பிரைவேட் லிமிட்டெட்டின் அரங்கத்தை மட்டும் காலி செய்யச் சொல்லி இருந்தால் இந்த நடவடிக்கையே போதும் எனலாம். ஆனால் அதை நடத்திய அன்பழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இது போன்ற சமயங்களில் சப்பையான போராட்டங்களால் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை. கருத்து சுதந்திரத்தின் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், ஒரு நாள் புத்தக விற்பனையை நிறுத்த வேண்டும். அன்பழகனை விடுதலை செய்யச் சொல்லி அனைத்துப் பதிப்பகங்களும் இணைந்து புத்தகக் கண்காட்சிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். அரசுக்கு ஆட்காட்டியாக செயல்பட்ட பபாசி நிர்வாகிகளை பபாசியிலிருந்து வெளியேற்ற வேண்டும். அதுதான் சரியானதாக இருக்கும். அதன் பின்னும் தீர்வு கிடைக்கவில்லை எனில், புத்தகக் கண்காட்சியில் இருந்து வெளியேற வேண்டும். இன்று அன்பழகன் மீது ஏவப்பட்ட பாசிசம் நாளை யார் மீது வேண்டுமென்றாலும் ஏவப்படலாம் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

- செ.கார்கி

Pin It