‘பாதாளத்தில் வேர் பாய்ச்சி

மேக மண்டலங்களைக் கிளைகளால் கோதி

திசைகளைத் துழாவியபடி

கம்பீரமாக நிற்கிறது

சிற்பியின் கவிதை மரம்’

கவிதை எழுதத் தொடங்கியபோதே பாவேந்தரால் பாராட்டுப் பெற்ற கவிஞராய் மலர்ந்தவர் சிற்பி. பாரதியின் ஆளுமை அவருடைய கவிதையை ஆட்கொண்டது போலவே பாவேந்தரின் ஆளுமையும் ஆட்கொண்டது.tree on bookசிற்பியே கூறுவதுபோல் பாரதி அவருடைய நாடி நரம்புகளில் ஜீவரத்தமாய்ச் சிலிர்த்துப் பாய்வதைக் காண முடிகின்றது. ஆழியாறும் ஆனைக்கல் சரிவும் சந்தனக்கல் உச்சியும் அவரைக் கவிதை பாட வைக்கின்றன. சொந்தக் கவிகளை எழுதாமல் அன்னிய வாசனைகளுக்கு மயங்கும் நவீனத்துவமும் எனக்குச் சம்மதமில்லை என்பார் சிற்பி. எனவேதான் ‘நான் மரபின் பிள்ளை; புதுமையின் தோழன்; என்களம் - என்மண் - என்பாத்திரங்கள் - என்மனிதர்கள் -என்பின்புலம், தமிழ் இலக்கியம்; மற்றவையும் மற்றவர்களும் எனக்கு விருந்தினர்கள் மட்டுமே' என்கிறார் கவிஞர் சிற்பி. அவரின் கவிதைக்குரிய பாடுபொருள் எது என்பதை அவரே கூறி விடுகின்றார்.

சிற்பியினுடைய கிராமத்துநதி நாடு முழுவதும் பரவிப் பேராறாக - கவிதைப் பேராறாகச் சிலிர்த்து ஓடுகின்றது. ‘எங்கள் கிராமத்தின் செல்லச் சிணுங்கலாய் ஓடும் ஆழியாறு என்னைத் தத்தெடுத்துக் கொள்கிறது. சலசலக்கும் அந்த ஆற்றின் ஓசையோடு என் மனத்தறி அசைகிறது. கவிதைகள் பிறக்கின்றன’ என்பது அவருரை.

அவருடைய ‘முதல் கவிதை’ எப்படி இருந்தது என்பதைக் கவிஞரே சுவைபடக் கூறுகின்றார். ‘என்னுடைய நாவசைத்த மழலைதான் என்னுடைய முதல் கவிதை என்பார். என்னை மதம் கொள்ளவைத்த சூழ்ச்சித் திருமகள் என்றும், செருக்கைக் கிளறிவிட்ட தேவதை என்றும், தேவதைபோல் தோன்றும் கவிதை என்ற பாதகி என்றும், பதப்படுத்தும் ஒரு சிகிச்சைப் பக்குவமே என் கவிதை என்றும் கூறித் தன் கவிதைப் பயணத்தைத் தொடங்குகிறார் சிற்பி.

‘இறகு’ என்னும் கவிதை நூலில் அமைந்த அச்சுவையான ‘முதல் கவிதை’ இதுதான்:

சிற்றஞ் சிறுகாலே

சிறுபிஞ்சு விரல் பிடித்து-என்

கற்றைக் குழல் நீவிக்

கன்னத்தில் முத்தமிட்டு

நான் நாவசைத்த மழலையையும்

நறுங்கவிதைத் தேனென்று

பூவைத்த போதும் அதைப்

பொன்னென்று பாராட்டி

ஊமத்தம்பூ என்னை

உயர் நாத சுரமென்றும்

பொம்மைத் துப்பாக்கி எனைப்

புரட்சியணு குண்டென்றும்

துள்ளுமதம் கொள்ளவைத்த

சூழ்ச்சித் திருமகளே

கிள்ளிச் செருக்கை மெல்லக்

கிளறிவிட்ட தேவதையே

தேவதைபோல் தோன்றும்

கவிதையென்ற பாதகியே      

என்று கவிதையைத் தேவதை என்றும், பாதகி என்றும் சூழ்ச்சித் திருமகள் என்றும் கூறும்போது கவிதை அவருடைய உள்ளத்தில் எந்த அளவில் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

கவிதை அவருக்குத் தினமும் விரித்து வைத்த பாய்; சாதாரணப் பாயில்லையாம். தீயைத்தான் கவிதை அவருக்குப் பாய் என்று விரித்து வைத்தது என்பார்.

குடிக்கத் தண்ணீரைக் கேட்டால் கவிதை, கண்ணீரைத் தந்ததாம். கேடுகெட்ட தமிழனின் நிலை குறித்துப்பாடி அழுததுதான் என் கவிதை என்பார். நான் பாடியது சிரித்த முத்துக்கள் அன்று; கண்ணீரின் தெறித்த முத்துக்கள் என்பார்.

நீயென் மன அரங்கில்

தீயைத் தான் பாயென்று

தினமும் விரித்து வைத்தாய்

தாகமென்று கேட்டால்

தண்ணீரைத் தாராது

ஆகுமட்டும் பருகென்று

கண்ணீரையே கொடுத்தாய்

ஏடெடுத்து முதல் கவிதை

எழுதத் தொடங்கிய நாள்

கேடுகெட்ட தமிழன் என்முன்

கேள்விக் குறியாக...

கூடுகட்டி என்னுளத்தில்

தாபம் குடியேறப்

பாடி அழுதேன்

அதுஎன் முதல்கவிதை

சிரித்த முத்துக்கள்

எனக் கவிதை செய்தாலும்

தெறித்த கண்ணீரே

திரண்டங்கு முத்தாகும்

முதல் அழுகைக் கோணல்

முற்றும் அதுவாகாமல்

பதப்படுத்தும் ஒரு சிகிச்சைப்

பக்குவமே என் கவிதை

என்று முதல் கவிதையைப் பாடிய சிற்பி கவிதை தன்னுள் விதைத்த மனப் போராட்டங்களை மிக அழுத்தமாகத் தெளிவுறுத்துவார். கவிதையைக் காதலியாகக் கண்டனர் சிலர்; கவிதையைக் கைவாளாகக் கண்டனர்; கவிதையை ஓடும் பேராறாகக் கண்டனர். ஒவ்வொருவருக்கும் கவிதை ஒவ்வொரு விதமாகத் தோன்றும். ஆனால் நம் கவிஞரின் முதல் கவிதை ‘நம்மைப் பதப்படும் மருந்தாக, சிகிச்சைப் பக்குவமாக’ விளங்குவதைக் காணலாம்.

சிற்பியின் கவிதைக்குப் பவளவிழா. கடந்த ஆண்டுகளில் அவர் படைத்த கவிதைகளின் பாடுபொருள்கள் பல. ஒவ்வொரு கவிதையிலும் அவர் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே உள்ளார். எளிய பாடுபொருளிலும் தன் கவிதை முத்திரையைப் பதிக்கும் அற்புதக் கவிஞர் சிற்பி.

சிற்பியின் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு வேப்பமரம். அந்த வேப்பமரத்தின் கீழ் அவர் எவற்றையெல்லாம் பதிவு செய்து மகிழ்ந்திருக்கிறார் என்பதை அந்தக் கவிதை காட்டும்.

வேப்பமரத்தின் அசைவால் எழும் ஒலி கூட அவரை மெய்சிலிர்க்க வைக்கிறது என்கிறார். காலங்கடந்தும் நினைவுக் குமிழ்களில் நிற்கும் வேப்ப மரத்தின் குரலைப் பற்றிய அவருடைய கவிதை வரிகள் இதோ;

பார்த்ததே இல்லை

எனினும்

கேட்டதுண்டு அதன்குரல்

காலமில்லை நேரமில்லை

அந்திகளின் கருக்கிருட்டில்

நண்பகலில் மாலைகளில்

வேளை இன்னதென்றில்லை

மெய்சிலிர்க்க வைத்த குரல்

கோடைகளில் கொப்பளித்து

மழைக்குப் பொத்தல் குடையாகும்

என் வீட்டின் மேற்குப் புறத்தில்

இன்னொருவர் நிலத்தில்

ஒரு பச்சைப் பிரளயம் போல்

நிற்கும் வேப்பமரம்

என்று தான் மகிழ்ந்த அந்த வேப்பமரத்தை நமக்குக் கவிதை மூலம் அறிமுகப்படுத்துகின்றார் கவிஞர் சிற்பி.

வேப்பமரம் மழைக்குப் பொத்தல் குடையாக விளங்குவதைக் கற்பனை நயத்தோடு சுட்டும் அவருக்கு அந்த மரம் புல்லாங்குழலாயும் காட்சியளிக்கிறது. அம்மரத்தினுள் இருக்கும் குயிலின் குரல் தூண்டிலாய்க் கூவியிழுக்கும் என்கின்றார் கவிஞர்.

என் கூரையின் மேல் நிழல்தூவும்

குளிர்காற்றைத் தூதுவிடும்

சிலபோது

மனதைக் கவ்வுமொரு மாயமாய்

ஏகாந்தப் புல்லாங் குழலாய்

இலையடர்த்திக் குள்ளிருந்து

கூவியழைக்கும் ஒருகுயிலின் குரல் தூண்டில்

என்று மரம் நிழல் தூவுவதையும் குளிர்காற்றைத் தூது விடுவதையும் எடுத் துரைப்பார். அந்த வேப்பமரம் அவருடைய மனதைக் கவ்வுமொரு மாயமாயும், ஏகாந்தப் புல்லாங்குழலாயும் விளங்குவதைக் கவிதை காட்டும்.

வேப்பமரம் ஒரு வகையில் அவர்தம் குடும்பத்தோடும் இணைந்து வாழ்கிறது. மகளுக்குத் தலைசீவுதலும், பேன் பார்த்தலும் அந்த மரத்தின் கீழ்தான் நடைபெறுகிறது. மகனுக்குப் பாடம் சொல்லவும், கதை சொல்லிச் சோறூட்டவும், சிநேகிதனோடு ஊர்ச் சேதி கிசுகிசுக்கவும் அம்மரம்தான் துணை. கவிஞரின் பார்வையில் அந்த வேப்பமரம் அவருடைய பிறந்த வீடு.

கவிஞரின் சுக-துக்கங்களுக்கு ஏற்ப வெவ்வேறு அலை நீளங்களில் கவிதை பிறக்கிறது. அச்சுக-துக்கங்களுக்கு ஆறுதல் முலாம் பூசுவது கவிதை. அக்கவிதை பிறக்கும் இடம் வாழும் இடம் எல்லாம் அந்த வேப்பமரம்தான். அந்தப் பாட்டுக்குக் குடியிருப்பு அந்த மரம்தாம். ஆம்! கவிஞருக்கு அது குடியிருப்பு; துணைவிக்கோ அது பிறந்த வீடு. அந்த வேப்பமரம் உண்மையிலேயே கொடுத்து வைத்த மரம்தான்.

கவிஞர் வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்புகிறார். மனைவியும் மகளும் துயரச் சாயலோடு விளங்கினர். என்னவென்று கேட்டபோது மகன் சொன்ன செய்தி அவரை அதிர்ச்சியடைய வைத்தது. சிற்பியின் கவிதை வரிகளில் இதோ;

மூன்றுநாள் வெளியூர்ப் பயணம்

முடிந்து திரும்பினேன்

வரவேற்ற மனைவியின் குரல் சில்லுச்சில்லாய் உடைந்திருந்தது

மகள் முகம் திருப்பிக் கொண்டாள்

விக்கிவிக்கி அழுதபடி

சின்னவன் சொன்னான்

அப்பாப்பா...

நம்ம மரத்தை வெட்டீட்டாங்கப்பா

மின்னல் கீறிய முகத்தோடு மனைவியை ஏறிட்டேன்

நிலத்துக் காரங்க வெட்டித் தள்ளிட்டாங்க

என்ற அவளின் குரல் எங்கிருந்தோ கேட்டது.

ஒரு வேப்பமரம் வீழ்ந்தபோது குடும்பமே அதிர்ந்த நிலையைக் கவிதைச் சொற்கள் காட்டுகின்றன. சில்லுச்சில்லாய் உடைந்த மனைவியின் குரல், முகத்தைத் திருப்பிக் கொண்ட மகள், விக்கிவிக்கி அழுத மகன், மின்னல் கீறிய கவிஞரின் முகம் என துன்பச் சாயலை வெளிப்படுத்தும் இயல்பான சொற்களைக் கவிதையில் காண முடிகின்றது.

செய்தியைக் கேட்ட கவிஞரோ பதைபதைக்க ஓடிப் பார்க்கிறார்.

பதை பதைக்க ஓடினேன்

பச்சைச் சமுத்திரம்

அலைபாய்ந்த இடத்தில்

வெட்டவெளி வெறும்பரப்பு

என்நிழல் என்உயிர்க்காற்று என் ஆன்ம சங்கீதம்

சுள்ளிகள் உலர்ந்த இலைகள்

மரத்துணுக்குகள்

வெட்டப்பட்ட அடிமரம்

பூமியின் காயமாய்

விரிசல் விட்டுக் கிடந்தது

பாழ்வெளியில் அதன்

பக்கத்தில் உட்கார்ந்தேன்

எங்கிருந்தோ ஓடிவந்த மகள்

‘இதைப் பாருங்கப்பா’

என்று கையில் கொடுத்தாள்

கருமை பளபளக்கப்

பழுப்பு அலைபாயும்

ஓர் இறகு.

வேப்பமரம் வீழ்ந்ததைத் துன்ப ஒலியாய்ப் படைத்துக் காட்டும் கவிஞரின் கவிதைச் சொற்கள் உணர்ச்சிப் பிழம்பாய் பதிவாகின்றன.

கவிஞரின் நிழலாகவும், உயிர்க்காற்றாகவும், ஆன்ம சங்கீதமாகவும் வேப்ப மரம் விளங்கியதை அவருடைய கவிதை நமக்குக் காட்டுகிறது.

மரமும் செடியும் அவருடைய கவிதைகளின் பாடுபொருளாய் விளங்குகின்றன. நேசம் என்னும் ஒரு கவிதை பூச்செடியைப் பற்றியது. இயற்கையின் கவிஞராக விளங்கும் சிற்பி செடியோடு உறவாடுகிறார். செடி அவரைச் சன்னல் வழியே முகம் நீட்டி நலம் விசாரிக்கிறது; முறுவலித்து வழியனுப்புகிறது; அவர் மௌனமாய் இருக்கும்போது அச்செடியும் மௌனமாயிருக்கும். பார்க்கும்போது நாணிச் சிணுங்கும்; நடனம் ஆடிப் பார்க்கும்; ரகசியமாய்ச் செடி அவரை வேவு பார்க்கும். அவர் கவிதையும், அவரும் செடியோடு உறவாடி மகிழ்வதை அவருடைய கவிதை வரிகளிலேயே காணலாம்.

விடியற் காலையில்

ஜன்னல் வழியே முகம்நீட்டி

நலம் விசாரிக்கும்

வெளியே புறப்படும்போது

பூங்கொத்தும் கையுமாய்

முறுவலித்து வழியனுப்பும்

முறுக்கிப் பிழிந்த

சக்கையாய்த் துவண்டு

சாய்வு நாற்காலியில்

அலுத்துக் கிடக்கையில்

தானும் என்னோடு

மௌனம் அனுஷ்டிக்கும்

தண்ணீர் வாளியோடு

நான் வருவதைக் கண்டால்

மூக்குத்தி போட்ட

நகரத்துப் பெண்ணாய்

மெல்லமுகம் மறைத்து

நாணிச் சிணுங்கும்

கவிஞருடைய காலடியோசையைக் கேட்டதும் காற்றுக்கு முத்தம் கொடுத்து ஆனந்த நடனமாடுமாம். மழைபெய்யும் போது ஈரமுக்காடு போட்டுக் கொள்ளுமாம். கவிஞர் மனைவியோடு கோபம் கொள்கையில் அங்குமிங்கும் அலைந்து வேவு பார்க்கும்; இரவில் அழகுத் தேவதையாய் விளங்கும். ஆனால் செடியின் உணர்வுகளை இப்படியெல்லாம் சித்திரித்துக் காட்ட முடியுமா? காட்டுவதில் கவிஞர் வெற்றி பெறுகிறார். வாடிய பயிரைக் கண்டபோது வாடிய அருளாளர் வரிசையில் வாழையடி வாழையாகக் கவிஞரும் தோன்றுகின்றார்.

மாலைப் பொழுதில்

வாசலில் எனது

காலடி யோசை கேட்டதும்

காற்றுக்கு முத்தம் கொடுத்து

ஆனந்த நடனம் ஆடிப் பார்க்கும்

மௌனம் கலைந்த வானம்

மழைக்குடை பிடிக்கையில்

சின்னப் பிள்ளை போல்

ஈரமுக்காடு போட்டுக் கொள்ளும்

மனைவியோடு நான்

‘எள்ளும் கொள்ளுமாய்ப்’

பொரியும் வேளையில்

அங்கும் இங்கும் அலைந்து

ரகசியமாய்

வேவு பார்க்கும்

தூக்கம் பிடிக்காமல்

நள்ளிரவில்

வாசல் விளக்கைப் போட்டால்

சர்வாலங்கார பூஷிதையாய்

காத்திருக்கும்

குற்றாலத்தில் கைப்பிடித்து

என் முற்றத்தில் குடிவைத்த

பெயர் தெரியாத

ஒரு பூச்செடி

கவிஞரும், அவர் கைப்பிடித்த செடியும் இணைந்து வாழ்ந்து கவிதையுலகில் நிலைத்து வாழ்வார்கள். முற்றத்தில் குடிவைத்த பூச்செடி அன்று அது! நெஞ்சத்தில் வைத்த கவிதை அது. ஆம்! நம் கண்களுக்குக் கவிஞரும் செடியும் அவர் யாத்த கவிதையும் ஒன்றே.

அண்ணல் காந்தியடிகள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளைக் கவிதை வடிவில் பதிவு செய்தவர் சிற்பி. ‘மகாத்மா’ தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாயது. அந்நூலில் ஒரு நிகழ்ச்சி. அதுவும் வேப்பமரம் பற்றியதுதான். சிற்பியின் கவிதை வரிகளில் அது இவ்வாறு பதிவாகின்றது.

இளங்காலைப் பொழுது

எரவாடா சிறைச்சாலை

அண்ணல் இருக்குமிடம் தானே

எல்லோருக்கும் ஆசிரமம்

இராட்டைகள் சுழன்றன

பஞ்சு அரைக்கப்பட்டது

பட்டை போடப்பட்டது

நூற்புவேள்வி தொடர்ந்து கொண்டிருந்தது

பஞ்சடிக்கும் வில்லின் நரம்பைப்

பக்குவம் செய்யப் பச்சிலைச் சாறு நல்லது

காகா கலேல்கர் வேப்பமரக் கிளையை வளைத்தார்

ஒடித்தார் ஒரு கொத்தைப் பறித்தார்

வெற்றிவீரராய் வேப்பங்கிளையோடு அண்ணல்முன் நின்றார்

பார்த்துப் பதைபதைத்து அண்ணல் பகர்ந்தார்

காகா கலேல்கர் படித்தவர் நீங்கள் பண்டிதர் நீங்கள்

மரமும் ஓர்உயிர் மறந்து விட்டீரோ

உயிரின் வேதனை தெரியவில்லையா உங்களுக்கு

தேவையானதை

அளவாக நோகாமல் பறித்து வரலாகாதா?

நம்மைப்போல் உண்டு

நம்மைப்போல் நீரருந்தி

நம்மைப்போல் மூச்சுவிடும் மரத்துக்கு

நம்மைப்போல் துயரத்தைச் சொல்லத்தெரியாது

மரங்களை நேசியுங்கள் கலேல்கர்.

அருளாளர் அண்ணல் நேசித்த வேப்பமரம் சிற்பியின் நெஞ்சத்திலும் பதிந்து ‘இறகு’ ஆகவும், ‘நேசம்’ (பூச்செடியாகவும்) ஆகவும் கவிதைகளால் மலர்ந்தன போலும்.

கவிதை புதிய தடங்களில் பயணம் செய்ய வேண்டும் என்பதைத் தன் நோக்கமாகக் கொண்டவர் கவிஞர் சிற்பி. சிற்பியின் மனச்சிறையில் கரந்த பாரதியைப் ‘பாரதி கைதி எண் 253’ என்னும் நூலில் அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுவார்.

சதுரம் கவிதை இல்லை

வெறும் சட்டப் புத்தகம்

வட்டம் கவிதை இல்லை

திரும்பத்திரும்ப மீண்டும் திரும்பத்திரும்ப

ஒரே புள்ளியில் சந்தித்து

ஒன்றையே தின்று உவர்க்கும் வாழ்க்கை

வளைந்து வளைந்து வளைந்து போவதுதான் அழகு

ஆயினும் சமவளைவுகள் சலிப்பு

ஏறிஏறி இறங்கி

இறங்கி இறங்கி ஏறி

ஏறி இறங்கி ஏறி இறங்கி

ஏறி இறங்கி இறங்கி ஏறி

இறங்கி ஏறி ஏறி ஏறி

இறங்கி இறங்கி இறங்கி ஏறி

புதிய வனப்புகள் எதிர்பாராத் திருப்பங்கள்

கண்டு நடக்கும்

மலைக்குளிர் ஓடையின் பயணம்

அது தானேடா கவிதை

என்று குயிற்பாட்டின் தோற்றமும் பொருளும் குறித்துப் பாரதி கூறுவதாகச் சிற்பி கூறுகிற கவிதையின் இலக்கணம் சிற்பியின் கவிதை நோக்கேயாம்.

‘கவிதை என்பது உணர்வுத் தேடல். சொல் கவிதைத் தேடலின் அடையாளம்’ என்று பாரதியின் வாக்காகக் கவிஞர் சிற்பி கூறுவார்.

கவிதை வெறும் கலையல்ல எனக்கு

உணர்வுத்தேடல்! ஒருசொல் வேண்டி

நாட்கணக்கில் தவம்

மந்திரங்களைச் சோதனை செய்தேன்

வரம்பிலா ஆற்றலைச் சொல்லில் கொணர ஆசைப்பட்டேன்

சொல்கவிதைத் தேடலின் அடையாளம்

மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்

இது என் கவிதைக் கோட்பாடு

என்று பாரதியாக நின்று சிற்பி வரைகின்றார். ஆம்! சிற்பியும் வரம்பிலா மொழியின் ஆற்றலைத் தன் கவிதைச் சொற்கள் வழியே புலப்படுத்துகின்றார்.

காலந்தோறும் கவிதைகள் தோன்றிக் கொண்டேயுள்ளன. இந்தக் கவிதைகளைத் திறனாய்ந்து மகிழ்ந்தவர் பலர். கவிதைகளின் ஒவ்வொரு கூறையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனர். சிலர் இக்கவிதைகளில் எது இல்லை எது உண்டு என ஆராய்ந்தனர். சிலர் நிறைகளைச் சுட்டினர்; சிலர் குறைகளைக் காட்டினர். ஆம், கவிதையை இன்னும் ஆராய்ந்து கொண்டேயுள்ளனர். ஆனால் கவிதையோ வானளாவி உயர்ந்து கொண்டே செல்லுகின்றது.

கவிஞர் சிற்பி மேகமண்டலங்களைத் தாண்டி கவிதை மரம் கம்பீரமாக நிற்பதைக் ‘கவிதை இலக்கணம்’ என்னும் கவிதையில் கூறுவார்.

பாதாளத்தில் வேர்பாய்ச்சி

மேகமண்டலங்களைக் கிளைகளால் கோதி

கம்பீரமாக நிற்கிறது கவிதைமரம்

நிழல்தேடி வந்தவர்கள் பலரகம்

காற்றுக்குக் கைலாகு கொடுக்கும்

இலைகளில் ஓசையழகில் லயித்தனர் சிலர்

பச்சை நரம்போடும் துளிர்களின் மென்மையில்

அங்காந்தனர் சிலர்

சின்னச்சின்ன மயில் பீலிகளாய்

ஒளிந்து பார்க்கும் மலர்களல்லவா

மகரந்த சிகரங்கள் என்று மகிழ்ந்தனர் சிலர்

மரத்தின் சாரம் அதன் கனிதானே என

மறுமொழிக்கு ஏங்கினர் சிலர்

இலையைக் கசக்கி மலரைப் பிழிந்து

இரசாயனக் கூடத்தில் எது இல்லை எது உண்டு

என ஆராய்ந்து இதுஇது இம்மரச் சிறப்பென

எடுத்துரைத்தனர் சிலர்

மரத்தின் முழுமையே அதன் பெருமை எனப்

புருவம் உயர்த்தினர் சிலர்

அடடா தங்கக் குவியல் இதுவென்று

உதிர்ந்த சருகுகளில் புதைய ஓடினர் சிலர்

நிழலுக்கு வந்தவர் பேச்சுக்கள்

சருகுகளோடு சருகாய்ப் போயின

எனினும்

பாதாளத்தில் வேர்பாய்ச்சி

மேகமண்டலங்களைக் கிளைகளால் கோதி

திசைகளைத் துழாவியபடி

கம்பீரமாக நிற்கிறது

கவிதை மரம்

கவிஞர் சிற்பியின் இக்‘கவிதை மரக்கவிதை’ அவருடைய கவிதைகளுக்கும் பொருந்தும். எந்தக் கவிஞருக்கும் பாராட்டுக்களும் உண்டு; விமர்சனங்களும் உண்டு. ‘பரிசுகளுக்கு ஆரவாரிக்காமலும், தாக்குதல்களுக்கு மடங்காமலும் பயணம் செய்து கொண்டிருக்கின்றேன்’ என்று ‘இறகு’ (1966) ‘என்னுரை’யில் குறிப்பிடுவார் கவிஞர். எழுபது ஆண்டுகளுக்குப் பின்னும் அதே கோட்பாட்டில் அவர் கவிதைப் பயணம் தொடர்கிறது. அவருடைய கவிதைகளும் பாதாளத்தில் வேர் பாய்ச்சி, மேகமண்டலங்களைக் கிளைகளால் கோதி, திசைகளைத் துழாவியபடி கம்பீரமாக நிற்கிறது, கவிதை மரம். ஆம் ‘சிற்பியின் கவிதை மரம்’.

- முனைவர் இ.சுந்தரமூர்த்தி, மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.