ஈரோடு மாவட்டத்தில், காலிங்கராயன் கால்வாய் அம்மாவட்டத்தின் அணிகலனாகத் திகழ்கிறது என்பது மிகையல்ல. பவானி ஆற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, காவிரியாற்றின் ஓரமாகவே, அதன் தென்கரையில் சுமார் 86.8 கிலோ மீட்டர் (55.5 மைல்கள்) கிழக்காக ஓடி ஆவுடையார் பாறை என்ற இடத்தில் நொய்யல் ஆற்றில் சங்கமமாகிறது. கால்வாயின் இரு கரைகளும், காரையால் கட்டப்பட்டு இருப்பதால், “காரைவாய்க்கால்’’ என்றும் பாம்புபோல் நெளிந்து நெளிந்து செல்வதால் “கோண வாய்க்கால்’’ என்றும் ஈரோடு மக்கள் அழைக்கின்றனர். இக்கால்வாயை காலிங்கராயன் என்பவர் வேளாண் தொழில் நுட்பத்துடன் உருவாக்கியதால், காலிங்கராயன் கால்வாய் என்று பெயர் பெறுகிறது. காலிங்கராயன் குறித்த கல்வெட்டுகளும், அணைகட்டிய செய்திகள் தாங்கிய பட்டயங்களும். செப்பேடுகளும், கைபீதுகளும் (வம்சாவளித்திரட்டு) பிரபல கல்வெட்டு அறிஞர் திரு. புலவர். செ. இராசு அவர்களால் தொகுக்கப் பட்டுள்ளது. இது மிக அரிய முயற்சியாகும். காலிங்கராயன் கால்வாய் குறித்த புதிய பார்வை என்பது அவசியமாகிறது. இதுவே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொதுவாக முற்காலங்களில் எழுதப்பட்டுள்ள பட்டயங்களிலும், செப்பேடுகளிலும், கைபீதுகளிலும் புனைவுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் சிலசமயங்களில் உண்மையை புனைவுகள் மூடி இருப்பதைக் காணமுடியும். எனவே, கல்வெட்டுகளில் உள்ள புனைவுகளை நீக்கி உண்மையை கண்டறிய முடியும்.

1. திங்களூர் அழகப் பெருமாள் கோவில் கல்வெட்டு வைணவர்களுக்கும், நம்பிமார்களுக்கும், உணவளிக்க தரிசு நீக்கி, குளங்கள் வெட்டி சில வரிகளை உருவாக்க, காலிங்கராயன் உத்தரவு.

2. விசயமங்கலம் நாகேஸ்வரசாமி கோயில் கல்வெட்டு, வாகைப்புதூரில் பாழ்பட்டு கிடந்த நிலத்தைச் சீர்படுத்தி, வாரத்திற்கு விட்டு வருமானத்தை கோயிலுக்கு வழங்கிய காலிங்கராயன் உத்தரவு.

3. நெரூர் அக்கீசுவரர் கோயில் கல்வெட்டு, பாழ்பட்டு கிடந்த புறம்போக்கு நிலம் மற்றும் நன்செய், தோட்டம் முதலிய உருவாக்கி, குளம்வெட்டி, கச்சிராய நல்லூர் என்ற ஊரை ஏற்படுத்தியது குறித்து உத்தரவு.

4. எலத்தூர் சோழீச்சுவரர் கோவில் கல்வெட்டு, குளத்தை திருத்தி, பயிர்செய்து நிலத்திற்கான வரியை கோயிலுக்கு செலுத்த காலிங்கராயன் உத்தரவு.

5. சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில் கல்வெட்டும் குளத்தை செப்பனிட்டு நிலம் திருத்தி, வரிகளை மேற்படி கோயிலுக்கு வழங்க உத்தரவு.

6. குன்னத்தூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் கல்வெட்டு காட்டை அழித்து, சாகுபடி நிலங்களை உருவாக்கி, குடியேற்றம் செய்த உத்தரவு.

7. கொடுமுடி அம்மன் சந்நிதி கல்வெட்டு, திருச்சிற்றம்பல நல்லூர் நாயனாருக்கு நில வருமானம் சேர உத்தரவு.

8. வெஞ்சமாங் கூடலூர் கல்வெட்டு, கண்ணப்ப நல்லூருக்கு நஞ்சை நிலம் வழங்கிய செய்தி குறிப்பிடப்படுகிறது.

மேற்கண்ட செய்திகள், காலிங்கராயன் கால்வாய் மட்டும் வெட்டவில்லை, மாறாக குளம் செப்பனிடல், தரிசு புறம்போக்கு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவந்து, அவற்றை கோயில்களுக்கும், புரோகிதர்களும், வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். நல்லூர் என்பது பிராமணர்கள் குடியிருக்கும் பிரமதேய ஊர்களாகும். காலிங்கராயன் அரசு அதிகாரி மட்டுமல்ல, கொங்கு மண்டலத்தில், வேளாளர் பாசனத்தை வசதியை மேம்படுத்தியவரும் ஆவார்.

காலிங்கராயன் கால்வாய் வெட்டி, அணைகட்டிய ஆண்டு கி.பி. 1282 என திரு. புலவர் இராசு அவர்கள் வரையறை செய்துள்ளது சரியே. இதை வரலாற்றுக் குறிப்பு எழுதிய புக்கானன் (1800ல்) உறுதி செய்துள்ளார். கல்வெட்டு குறிப்புகளில் இருந்து, அந்நாளில் கோவில்களுக்கு தேவதானம் என்ற முறையில் நிலமும் பாசன வசதியும் செய்து தருவதும், பார்ப்பனர்களுக்கு, ஊரும் நிலமும் அளிப்பதை பிரமதேயம், சதுர்வேதிமங்கலம், நல்லூர் என்ற பெயர்கள் சுட்டும் இது தவிர அரசுபடை அதிகாரிகளுக்கு மூவேந்தர் வேளாண் என்ற பெயரில் நிலங்களையும், கிராமங்களையும் கொடுப்பது சோழ, பாண்டிய அரசுகளின் வழக்கத்தில் இருந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது சங்க காலத்திலேயே பார்ப்பனர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நிலத்துடன் கூடிய ஊர்களை வழங்கும் பழக்கம் துவங்கிவிட்டது. 10, 11ஆம் நூற்றாண்டுகளில் இவை உச்சத்திற்கு சென்றது. கொங்கு மண்டலத்தில் இது 12, 13ஆம் நூற்றாண்டில்தான் செயல்பட்டது. இவ்வகை நிலமானிய முறையானது சோழப்பேரரசு நிலை கொள்ளவும், தமிழகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆளவும் பயனளித்தது. 12ஆம் நூற்றாண்டு வரை கொங்குநாடு சேர, சோழ பாண்டிய நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்ததே ஒழிய இனக்குழுக்களை அழித்து புதிய உற்பத்திமுறை தோற்றுவிக்கப்படவில்லை. முல்லை நிலமாதலால், காடும், காடும் சார்ந்த நிலங்களாக கொங்கு காட்சியளித்தது. இங்கு வாழ்ந்த இனக் குழுக்கள், வேடர், ஆயர் மற்றும் எயினர் ஆகும். வேடர்கள் வேட்டைத் தொழிலையும் ஆயர்கள் கால் நடைவளர்த்தல், தினை, வரகு, அவரை, துவரை முதலிய பயிர்களை பயிரிடல் (விண்ணோக்கிய வேளாண்முறை) என்ற முறையில் பொருளாதார வாழ்க்கை இருந்தது. இவர்களுக்குள் கூட்டப்பிரிவுகள் இருந்தன. தாம் வாழும் முறை மற்றும் இடங்களுக்கேற்ப கூட்டப்பெயர்கள் நிலைத்து இருந்தன. திருமணத்திற்கான ஒழுக்க முறை கூட்டங்களிடையே வரையறை செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் மருத நிலப்பகுதிகளில் இனக்குழு சிதைவடைந்த நிலையில், கொங்கில் மட்டும் சிதையாமல் 12ஆம் நூற்றாண்டு வரையில் நீடித்தது. அது மட்டுமல்ல புறம்போக்கு நிலங்கள் ஏராளமாகவும் இருந்தன.

13ஆம் நூற்றாண்டில் சோழ, பாண்டிய அரசுகளின் பொருளாதார தேவை கூடியது. நெல் அதிக உபரியை வழங்கும் தானியம் என்பதால், நெல்விளையும் நிலங்களிலும் முல்லை மற்றும் குறிஞ்சி நிலங்களிலும் பயிரிட முயற்சி எடுத்தனர். எனவே, பிரமதேயம் மற்றும் கோயில்கட்டி அதற்கான நிலங்களை உருவாக்க முனைந்தது. கொங்கு நாடு அதற்கு வசதியாக இருந்தது. இந்நிலத்தில் அமராவதி, நொய்யல், பவானி போன்ற ஆறுகளும், சண்முகநதி, பாலாறு, பெருந்தலாறு போன்ற சிறிய நதிகளும் ஓடிக்கொண்டிருந்தது. பல்வேறு கூட்டப்பெயர்களுடன் வேட்டுவர்களும், ஆயர்களும் இனக்குழுவாக வாழ்ந்து வந்தனர். வேட்டுவர்கள் வேட்டைத் தொழிலும், ஆயர்கள் கால்நடை வளர்ப்பும், தானியம் பயிரிடல் என்ற அளவில் பொருளாதார வாழ்வு இருந்தது. “ஆ கெழு கொங்கர்’’ “கொங்கர் ஆ பரந்தன்ன’’ என சங்க இலக்கியம் இவர்களைப் பதிவு செய்துள்ளது.

கொங்கு தவிர்த்த இதரப்பகுதிகளில் வேளாண் தொழில் செய்வோரை, பாண்டிய வேளாளர், சோழிய வேளாளர் என அழைக்கப்பட்டு வந்தனர். இங்கு வேளாளர் என யாரும் இல்லை. எனவே, தஞ்சை தொண்டைமண்டலம் (புதுக்கோட்டை) ஆகிய பகுதிகளில் இருந்து வேளாளர்கள் கொங்கில் குடியேறினர் (நிக்கல்சன் 1887:86) இதையே, ”சோழன் பூர்வபட்டயம்’’, “அண்ணமார்கதை’’, “கொங்கு வேளாளர் புராணம்’’, ஆகியன உறுதிப்படுத்துகிறது. குடியேறிய வேளாளர்கள் கொங்கிலுள்ள ஆயர்களுடன் ரத்தக்கலப்பு ஏற்பட்டு வேளாளர் என்ற புதியப் பெயரைத் தாங்கி நின்றனர். இவர்கள் குடியேறிய பின்பே, நீர்பாசனமுறை கொங்கு நாட்டில் உருவானது. குடியேறிய வேளாளர்கள் ஏற்கெனவே ஆயர்களிடம் உள்ள கூட்டம் (குலம்) முறையை ஏற்றுக்கொண்டனர். ஆயர்கள் அவர்களிடம் வேளாண் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டனர். இதன் பிறகே கல்வெட்டுகளில் வேளாளர் என்று பொறிக்கப்பட்டுள்ளது என அறிகிறோம். வேளாளர் என்ற சொல்லுக்கு வெள்ளத்தை ஆள்பவர் என்ற பொருள் உண்டு. “கள்ளர், மறவர், கனத்த அகம்படியார் மெல்ல மெல்ல வந்து வெள்ளாளர் ஆயினர்’’, என்ற பழமொழிபோல் கொங்கு ஆயர்களே, குடியேறிய வேளாளர்களுடன் கலப்பு கொண்டு “கொங்கு வேளாளர்’’ ஆயினர் என வரலாற்று ஆசிரியர்கள் (ஸ்டைன், பேக்கர், தர்ஷன், மார்டன், நிக்கச்லன்) தங்களது ஆய்வில் தெரிவிக்கின்றனர்.

சோழப்பேரரசு, தனது தேவைக்காக, சிறந்த உபரியான நெல் சாகுபடிக்கு ஏற்றவாறு கொங்குநாட்டு நிலங்களை கிணறு, குளம், ஆறு இவைகளின் மூலம் பாசன வசதி செய்து, அவற்றை கோயில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும், அரசு அதிகாரிகளும் அளித்தனர் என்பதே கொங்கு நாட்டின் 13வது நூற்றாண்டு வரலாறு இவை குறித்த கல்வெட்டுகள் 12, 13ஆம் நூற்றாண்டில் ஏராளமாக பொறிக்கப்பட்டுள்ளது என கல்வெட்டில் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாகவே காலிங்கராயன் வாய்க்கால் உருப்பெற்றுள்ளது. அமராவதி நதியின் ஓரத்தில் உள்ள ஊர்களான கொழுமம், கொமரலிங்கம், ருத்ரபாளையம், தாராபுரம், கரூர் வரையில் இந்தப்பாசனம் உண்டு. இந்த ஊர்களில் பார்ப்பனர்களின் குடியிருப்பும் அதிகம். அதேபோல் காலிங்கராயன் கால்வாய் கரூரை நெருங்கி இருக்கும் ஊர்களான, கொடுமுடி, வெங்கம்பூர், ஊஞ்சலூர், கொளாநல்லிள ஆகிய இடங்களையே அதிகமாக வளப்படுத்துகிறது. போகிற வழியில்கூட பிராமண பெரிய அக்ரஹாரம் என்ற குடியிருப்பு தோற்று விக்கப்பட்டுள்ளது.

கரூர், சேது பேரரசின் முக்கியமான கேந்திரமான நகரம். கரூருக்கும், வஞ்சித்துறை முகத்திற்கும் பெருவழிப்பாதை இருந்துள்ளது. எனவே, கரூரை மையப்படுத்தியே, காலிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்டு, நீர்ப்பாசன வசதி செய்யப் பட்டுள்ளது. 800 ஆண்டுகளுக்கு முன் தேவை இதுவாகத்தான் இருந்துள்ளது. இன்றுள்ள பாசூர், சாவடிப்பாளையம், மலையம்பாளையம் போன்ற ஊர்கள் அன்று என்னவாக இருந்தது என்பது ஆய்வுக்குரியது. கோவில்களுக்கும், பிராமணர்களுக்கும், அதிகாரிகளின் நலனுக்கும், உருவாக்கப்பட்டதே காலிங்கராயன் வாய்க்கால். 800 ஆண்டுகளுக்கு முன்பு, கொங்கு நாடு அடர்ந்த மரங்களுடன் கூடிய காடாக இருந்ததால், கால்வாய், காவிரி நதிக்கரையை ஒட்டியே மேட்டுப்பாங்கான நிலத்தில் வளைந்து செல்வதை அறிய முடிகிறது. அரசை வலுப்படுத்தும் பொருளாதார விஸ்தரிப்பே, காலிங்கராயன் கால்வாய் உருவாக்கம் என்பது தெளிவானது.

காலிங்கராயன் என்ற பெயர் அவர் வெட்டிய கால்வாய் மூலம் அறியப்படுகிறது. கல்வெட்டுகளில் அவர் உருவாக்கிய சாசனங்கள் மூலம் அவர் அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அதிகாரி எனத்தெரிகிறது. காலிங்கராயன் என்பது அவருக்குக் கிடைத்த பட்டம் என திரு. புலவர் செ. இராசு அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். “பாண்டியர் ஆட்சி கொங்கு நாட்டில் பரவியிருந்தது என்பதாலும், காலிங்கராயன் என்ற பட்டம் அளிக்கும் வழக்கம் கி.பி. 12ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடர்ந்து உள்ளது என்பதாலும் காலிங்கராயன் என்ற பெயரே அரசன் அளித்த பட்டப் பெயராக நம் தலைவனுக்கு உள்ளமை விளக்கும்’’ (புலவர் செ. இராசு 2007:24) இது உண்மையாகும். அன்றைய வேளாண் தொழிலே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை. சோழப் பேரரசில் வேளாண் தொழிலில் பல விதமான வேலைப்பிரிவினைகள் இருந்துள்ளது. அதில் ஒன்று பாசன வசதியை உருவாக்குதல் ஆகும். ஆற்றலும், திறமையும் கொண்ட, அதில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளுக்கு காலிங்கராயன் என்ற பட்டத்தை வழங்குவது சோழப்பேரரசின் வழக்கத்தில் இருந்துள்ளது. மேலும் “அணைக்கட்டுவதற்கு முன்னரே காலிங்கராயன் என்ற பெயர் நம் தலைவனுக்கு வழங்கியது என்பதையும்’’ புலவர் செ. இராசு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே, காலிங்கராயன் என்பது இயற்பெயரல்ல, அரசால் அளித்த பட்டம் என்பதும், அப்பட்டம் காலிங்கராயன் அணைகட்டுவதற்கு முன்னரே பெற்றிருந்தார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. கால்வாய் வெட்டுவதற்கு முன்பே, காலிங்கராயன் என்ற பட்டத்தைப் பெற்ற ஒரு அதிகாரி, தனது ஆற்றலையும், திறமையையும் அங்கு உபயோகப்படுத்தி, அரசிடம் இப்பட்டத்தைப் பெற்றார் என்ற கேள்வி எழுகிறது.

வேளாண்துறைக்கென பல்கலைக்கழகம் இல்லாத காலத்தில், படித்துப் பட்டம் பெற்றிருக்க முடியாது. சூத்திரர்கள் கல்விக் கற்கக்கூடாது என வர்ணதர்மம் நீடித்துள்ள சமூகத்தில், கல்வியால் பெற்றிருக்க இயலாது. தனது திறமையை மருதநிலப் பகுதிகளான தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை போன்ற இடங்களில் நீர்ப்பாசன கட்டமைப்பில் தனது ஆற்றலை செயல்படுத்தி, இப்பட்டத்தை பெற்றிருக்க வேண்டும். முல்லை நிலத்தில் பிறந்து வளர்ந்த யாரும் அக்காலத்தில் இத்திறமையை பெற்றிருக்க வழியில்லை. எனவே, இவரது பிறப்பு என்பது மருத நிலப்பகுதி எனக் கொள்ள இடமுண்டு. வேளாளர்களை புலப்பெயர்வு செய்ய வைத்து, தானும் இங்கு புலம் பெயர்ந்து வந்திருக்க வேண்டும். அரசின் ஆணைக்கு ஏற்பவே இது நடந்திருக்க வேண்டும். இவருக்கான பணி என்பது காடுகள் அடர்ந்த கொங்குப்பகுதியில், ஏற்கெனவே சிறிய அளவில் வேளாண் (நீர்ப்பாசன வசதியற்ற நிலையில்) பயிர் தொழில் செய்த ஆயர்களின் உதவியுடன் கிணறு, குளம் மற்றும் ஆறு இவைகளின் பாசன வசதியை ஏற்படுத்துவதே ஆகும்.

கொங்கு நாட்டில் முதன்முறையாக நீரை அடக்கி பாசனம் என்ற புதிய வேளாண் உத்தியை உருவாக்கியதால் மக்கள் மனதிலும், கல்வெட்டுகளிலும் இடம் பெற்றிருக்கிறார். ஒரு புதிய வேளாண் புரட்சியை தோற்றுவித்தவர். அதன் பயன் முழுவதும் முதன்முதலாக வேளாளர் என்ற ஆயர்களுக்கு பயனளித்ததாலும், அவர்கள் காலிங்கராயனை சுவீகரித்துக் கொண்டனர். பின் நாளில் வேட்டுவர்களும், வேளாண் தொழிலை சுவீகரித்துக் கொண்டதால் “வேட்டு வேளாளர்’’ என்று தங்களை அழைத்துக் கொண்டனர். மருத நிலப்பகுதியில் இருந்த வேளாளர்கள் தமது சாதிப்பெயரை பிள்ளை என மாற்றிக்கொண்டது போல் கொங்கு வேளாளர்கள் தங்கள் பெயரை கவுண்டர் என மாற்றிக்கொண்டனர். வேட்டுவர்களும் பின்பு தங்களை கவுண்டர் என மாற்றிக்கொண்டனர். இது தங்களை மேல்நிலையாக்கம் செய்வதற்கான நடவடிக்கையாகும். பொதுவாக ஒவ்வொரு சாதியும் தங்களை மேல் நிலையாக்கம் செய்யும் பொருட்டு, புராண இதிகாசங்களுடன் தொடர்புப்படுத்திக் கூறும் மரபு நமது நாட்டில் உண்டு. கைக்கோளர்கள், தங்களை முருகக்கடவுளின் தளபதியான “வீரபாகுவின் வழித்தோன்றல்’’ எனக் கூறிவருகின்றனர். காளகஸ்திப் பகுதியில் வாழ்ந்த வேட்டுவக் குடியினரான கண்ணப்பநாயனரோடு, கொங்கு நாட்டு வேட்டுவ மக்களும் தங்களை தொடர்புபடுத்திக் கொண்டதாக (செ. இராசு 1991.153) அறிகிறோம். அதுபோலவே கொங்கு நாட்டில் நீர்ப்பாசனப் புரட்சி செய்த ஆற்றல்மிகு, காலிங்கராயன் என்ற பட்டத்திற்கு உரியவரை (இயற்பெயர் அறிய முடியவில்லை) தமது சாதிக்குரியவர் எனப்பதிவு செய்வதின் மூலம் தமது சாதியை மேல்நிலையாக்கம் செய்ய முயல்கின்றனர். வேளாளக் கவுண்டருக்குள்ளும் அவரை ஒரு கூட்டத்திற்கு மட்டுமே உரியவராக பதிவு செய்து அக்கூட்டம் தம்மை மேல்நிலைப்படுத்திக் கொள்ள தொடர்முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தமிழகத்து மக்களின் நடைமுறை சார்ந்த மரபேயாகும்.

உதவிய நூல்கள்:

1. காலிங்கராயன் கால்வாய்

- செ. இராசு

2. கொங்கு நாட்டு வரலாறு (பாகம் 1, 2)

- முனைவர். வீ. மாணிக்கம்

3. கொங்கு நாட்டு வரலாறு

- ராமச்சந்திரன் செட்டியார்

4. சோழர் வரலாறு

- பேரா. சி. கோவிந்தராசனார்

- முனைவர். சி.கோ. தெய்வநாயகம்

5. தமிழக வரலாறும், பண்பாடும்

- வே.தி. செல்லம்

Pin It