“சாதி களைந்திட்ட ஏரி - நல்ல

தண்டமிழ் நீரினை ஏற்கும்

சாதிப் பிணிப்பற்ற தோளே - நல்ல

தண்டமிழ் வாளினைத் தூக்கும்”

என்ற புரட்சிக் கவிஞரின் பாடலுக்கு இலக்கணமாக அரியலூர் ஆ. செ. தங்கவேலு, தன் மூத்த மகள் தைரியத்திற்கும் தான் பிறந்த சாதி அல்லாத உடையார் (நத்தமர்) சாதியில் பிறந்தவரான ந. கோவிந்தசாமிக்கும் 9. 7. 1961-யில் வாழ்க்கை இணை ஏற்பு நிகழ்ச்சியை நடத்தினார். மணமக்களை மலர் மாலையை மாற்றிக் கொண்டு, மேதிரம் மட்டும் அணிவித்துக் கொண்டனர்; தாலி அணிதல் இல்லை; மணமக்கள் வடக்குமுகமாக அமர்ந்தவாறு நிகழ்ச்சி நடைபெற்றது. தன் மகன் அறிவுடை நம்பிக்கும் தான் பிறந்த சாதி அல்லாத, திருச்சியைச் சார்ந்த நாடார் சாதியில் பிறந்த கோவிந்தசாமி-மங்கையர்க்கரசி இணையரின் மகள் குணசந்தரிக்கும் 10. 12. 1972இல் அரியலூர் சக்தி திரையரங்கத்தில் தோழர் வே. ஆனைமுத்து தலைமையில் வாழ்க்கை இணை ஏற்பு விழாவை நடத்தினார். இந்நிகழ்விலும் தாலி அணிவித்தல் விலக்கி மோதிரம் அணிவித்ததுடன் நிறைவுபெற்றது. நிகழ்வில் மணமக்கள் தெற்கு நோக்கி அமர்ந்து அமர்ந்திருந்தனர்.

aa se thangaveluமற்றொரு மகள் அவ்வையாருக்கும் முத்தரையர் சாதியில் பிறந்த தம்புரான் என்பவருக்கும் தம் இல்லத்திலேயே சாதிமறுப்புத் திருமணம் செய்து வைத்தார். நடுமகள் நாகமணிக்கு, மகள் விருப்பப்படி பெரியார் தலைமையில் திருமணம் நடந்தது.

தம் மக்கள் நால்வரில் மூவருக்கு மூன்று வேறுவேறு சாதியில் பிறந்தவர்களை வாழ்விணை யராக்கினார், கொள்கை வீரர் ஆ. செ. தங்கவேலு. ஆ. செ. தங்கவேலு பிறந்து வளர்ந்த சிற்றூரான இலந்தங்குழி அரியலூருக்கு மேற்கில் மூன்றுகல் தொலைவில் அமைந்துள்ளது. அவ்வூரில், 1956இல் பெரியாரை அழைத்துப் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற ஏற்பாடு செய்தார். அந்த ஊருக்கு மகிழுந்து வர சாலை வசதி சரிவரஇல்லை. பக்கத்து ஊரான தொண்டப்பாடியில் இருந்து இலந்தங்குழி வரை 3 கி. மீ. நீளப் பாதையின் இருபுறமும் மண்ணை வெட்டிப்போட்டு, பாதையைச் சீர்படுத்தி, பெரியார் வந்து உரையாற்றச் செய்தார். ஆ. செ. தங்கவேலுவின் இச்செயல் அவ்வூர் மக்களுக்கு மறுமலர்ச்சிச் சிந்தனையை ஏற்படுத்தியது.

இளமைப் பருவம்

இலந்தங்குழி எனும் சிற்றூரில், ஒரு வேளாண் குடும்பத்தில் செல்லமுத்து, சிவபாக்கியம் வாழ்விணையரின் மூத்த மகனாக 20. 4. 1921 பிறந்தார். அவ்வூர் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படிக்க, எழுதக் கற்றார். பின் சிறிது காலம் ஆடுகள், மாடுகள் மேய்த்தார். சிற்றூரிலிருந்து பிழைப்புத் தேடிச் சென்னை செல்லும் சிலரைப் பார்த்து சிறுவயதிலேயே இவரும் சென்னை சென்றார். சென்னை, கொத்தவால் சாவடியில் காய்கறிக் கடைகளில் மூட்டைகளை இறக்குதல் ஏற்றுதல் போன்ற கூலி வேலைச் செய்து, ஊரிலுள்ள வீட்டாருக்குப் பணம் அனுப்பி வந்தார். சிறிது காலத்திலேயே சென்னையிலிருந்து இலந்தங்குழிக்கு திரும்பி வந்து, தன் தந்தை செய்து வந்த, ஊர் அம்மன் கோயில் பூசாரி வேலையை மேற்கொண்டார். சிவப்பானத் தோற்றமும், நீண்ட தலைமுடியும், நல்ல குரல்வளமும் இருந்ததால், அவ்வூரில் நடைபெற்ற நாடகங்களில் நடித்தார்.

சிறுதொண்டர் நாடகத்தில் சிறுதொண்டரின் மனைவி யாகவும் அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதி வேடத்திலும் நடித்து, ஊர் மக்களிடம் நற்பெயர் ஈட்டினார். பின்னர் பூசாரி வேலையை விட்டு, ஒரு பெட்டிக் கடையும் தேநீர்க் கடையும் வைத்தார்.

தன்மான இயக்கப் பணி

1948 முதல் தோழர் வே. ஆனைமுத்து தொடர்பு ஏற்பட்டதால், திராவிடர் கழகத்திலும் அதன் கொள்கைகளிலும் ஈடுபாடு காட்டினார். 1950இல் குன்னம் ஊரில் ஆசிரியர் ந. கணபதி அவர்கள் முயற்சியில் நடந்த திராவிடர் கழக மாநட்டில் வே. ஆனைமுத்துவுடன் ஆ. செ. தங்கவேலுவும் கலந்து கொண்டு பெரியார் உi ரயைக் கேட்டார். அப்போது முதல் சுயமரியாதைக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் உறுதியுடன் வாழ்ந்தார்.

பட்டியல் வகுப்புத் தோழர்கள் ஊருக்குள் மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டு வந்தால், வண்டியில் அமராமல் இறங்கி நடந்து செல்வது வாக்கமாக இருந்தது. தங்கவேலு அவர்களை வண்டியில் அமர்ந்து ஓட்டிச்செல்லச் செய்தார். பெரியாரின் 77ஆம் பிறந்த நாளை ஒட்டி, 24. 9. 1955 அன்று இலந்தங்குழித் தெரு ஓரங்களில் இரண்டு கல் தூண்களை நடச்செய்து, அதன் உச்சியில் கண்ணாடி கூண்டமைத்து, அதனுள் மண்ணென் ணெய் விளக்குகள் ஏற்றிவைத்து ஊர் ஒளி பெறச்செய்தார்.

இலந்தங்குழியில் 1948இல் தொடக்கப் பள்ளித் தொடங்குவதற்கு ஆவண செய்தார். இச்செயல்களால் தோழர் தங்கவேலுவுக்கு ஊரில் நல்லபெயர் ஏற்பட்டது.

ஊரில் இவருக்கு இருந்த நற்பெயர் காரணமாக இலந்தங்குழி ஊர்மக்கள் தண்ணீர் எடுக்கச் சென்று வரும் பாதைக்கு இடையூறாக இருந்த சிறிய கோவிலான இளையபெருமாள் கோவிலை ஊர்மக்களைக் கொண்டு இடித்தகற்றச் செய்து, பாதையை சீர்செய்தார்.

பெரம்பலூர் வட்டத்தில் திராவிடர் கழகச் செயலாளராக 1949 முதல் செயல்பட்டு, பல ஊர்களில் பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட காரணமாக இருந்தார். 21. 11. 1957இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சாதியமைப்பைப் பாதுகாக்கும் பிரிவுகளின் நகலை எரித்துவிட்டு, திராவிடர் கழகத்தின் முதன்மைத் தோழர்கள் பலரும் சிறையில் இருந்து காலத்தில் 20 பொதுக்கூட்டங்கள் நடத்தி, எழுச்சி குறையாமல் இருக்கச் செய்தார். ஆ. செ. தங்கவேலு நடத்திய பொதுக்கூட்ட வரவு - செலவினை அடுத்த கூட்டத் துண்டறிக்கையில் அச்சிட்ட அளிப்பது அவர் வழக்கம்.

கூட்டச் செலவு

பேச்சாளர் எஸ். டி. விவேகி அவர்களுக்கு         உரு. 10/-

துண்டறிக்கை அச்சிட      உரு. 2/-

ஒலிபெருக்கி அமைக்க    உரு. 5/-

பெட்ரோமாக்சு விளக்கு வாடகை          உரு. 1 /-

ஆக ஒரு கூட்டச் செலவு   உரு. 18/-

சட்ட எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, திருச்சி சிறையில் இருந்தத் தோழர்களைப் பார்த்து விட்டு வருவதற்காக அரியலூர் இரயில் நிலையத்திற்கு வரும் அரியலூர் வட்டாரத் தி. க. தோழர்களின் குடும்பத் தினருக்கு ஆ. செ. தங்கவேலு இல்லமே தங்குமிடமாக அமைந்தது. அரியலூர் ஆ. செ. தங்கவேலு ஆனார்.

இலந்தங்குழியில் 5ஆம் வகுப்புக்கு மேல் படிக்கப் பள்ளி இல்லாததால் தன் மகனை செந்துறையில் பள்ளியில் மாணவர் விடுதியில் சேர்த்துப் படித்திடச் செய்திடுவதற்கு, செந்துறைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வந்தத் தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார் உதவியை நாடிச்சென்றார். பொன்னம்பலனாரை சந்தித்ததும், அவர் கேட்ட முதல் வினா? ‘மகன் பெயர் என்ன?’ விடை : ஜெயராஜ் ‘இது வடமொழிப் பெயராயிற்றே’ என அப்போதே சிறுவன் ஜெயராஜ் என்ற பெயரை ‘அறிவுடைநம்பி’ என மாற்றினார். செந்துறையில் படிக்கவைக்க மாணவர் விடுதியில் இடம் கிடைக்காததால், அறிவுடைநம்பியை அரியலூர் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார். அன்றாடம் இலந்தங்குழியிலிருந்து அரியலூருக்கு நடந்து சென்று வருதல் துன்பம் எனக் கருதி, 1956இல் தங்கவேலு அரியலூருக்குக் குடிபெயர்ந்தார். அரியலூர் தொடர் வண்டி நிலையத்தை ஒட்டிய இடத்தில் “பெரியார் உணவு விடுதி” தொடங்கி, நடத்தினார். அவ்விடம் பெரியார் தொண்டர்கள் கூடுமிடமாகவும் அமைந்தது. கடைவீதியில் “பெரியார் ஜவுளி ஸ்டோர்” தொடங்கி நடத்தினார். பின்னர் தன் மகனை நடத்தச் செய்தார்.

தம் துணிக்கடையில் விற்பனை செய்த கைப்பைகளில் “சாதி ஒழிய சமத்துவம் வளர, கடவுளை மற; மனிதனை நினை! சுயமரியாதை வாழ்வே, சுகவாழ்வு!” - தந்தை பெரியார் என்றும் “சாதி ஒழிய, சமத்துவம் வளர தமிழ்நாடு தமிழருக்கே! சுயமரியாதை வாழ்வே, சுகவாழ்வு!” பெரியார் ஜவுளி ஸ்டோர், அரியலூர் என்றும் அச்சிட்டு வழங்கினார்.

தனது மைத்துனர், தம்பி திருமணங்களை புரோகிதமில்லாமல் நடத்தினார். தன் ஊரில் இரண்டு கைம்பெண் மறுமணங்களை முன்னின்று நடத்தினார். 1957 முதல் இலந்தங்குழியில் 90 விழுக்காடு மக்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளை புரோகித மறுப்பு நிகழ்ச்சி களாக நடத்திடக் காரணராக விளங்கினார் ஆ. செ. த. பாடகர், நடிகர், கவிஞர், பேச்சாளர், செயலாளர், உடலுழைப்பதில் - பணம் செலவுச் செய்வதில் சுணக்கம் காட்டாத மனிதர்; அரியலூரில் சிறிய வீடு, சிறிய கடை, எளிய தோற்றம், எளிய வாழ்வு, ஓய்வறியாத் தொண்டு, சிவந்த மேனி, கருப்புச்சட்டை, சிவப்புத் துண்டு! இவர் தான் ஆ. செ. தங்கவேலு! பெரியாரின் கொள்கை களைப் புரிந்துணர்ந்து, அதன்படி வளர்ந்து, வாழ்ந்து காட்டியவர்; வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் ஆ. செ. தங்கவேலு!

தி. க. வில் ஆ. செ. த. பங்கேற்ற முதன்மை நிகழ்வுகள் சில

1.            1952 ஆகஸ்டு அரியலூரில் அஞ்சலகம், தொடர் வண்டி நிலையங்களில் இருந்த இந்தி எழுத்து களை தார்பூசி அழிப்பு.

2.            1953 இல் அல்லி நகரத்தில் பிள்ளையார் பொம்மை உடைப்புப் போராட்டம்.

3.            1954 ஏப்ரலில் பெரம்பலூரில் குலக்கல்வி எதிர்ப்பு மாநாடு நடத்தியது.

4.            1956 இல் இராமன் பட எரிப்புப் போராட்டம்.

5.            8. 7. 1972 இல் இலந்தங்குழியில் ‘பெரியார் அறிவு வளர்ச்சி மன்றம்’ சார்பில் பெரியார் உரை யாற்றியப் பொதுக்கூட்டம், கடவுள் மறுப்பு கல்வெட்டுத் திறப்பு, (இதுதான் முதலாவது என பெரியார் குறிப்பிட்டுள்ளார். )

மா. பெ. பொ. கட்சிப் பணிகள்

பெரியார் மறைவுக்குப் பின் தோழர் வே. ஆனைமுத்து தலைமையில் உருவாக்கப்பட்ட பெரியார் சமஉரிமைக் கழகத்தில் இணைந்து, 3. 10. 1976 இல் திருச்சியில் நடந்தத் தொடக்க விழா முதல் தன் இறுதிக்க­hலம் வரை பிரிவுபடாதத் திருச்சி மாவட்டச் செயலா­ளராகப் பணியாற்றினார். தோழர் ஆ. செ. த. பங்ககேற்ற முதன்மை நிகழ்வுகள் சில.

(1).         23. 03. 1979 இல் புதுதில்லியில் நடந்த பெரியார் நூற்றாண்டு விழாப் பேரணியின் முன் பதாகைப் பிடித்துச் சென்றார்.

(2).         ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கக் கோரி 15. 11. 1979 இல் புதில்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று மற்றத் தோழர்களுடன் கைது செய்யப்பட்டு, தில்லி-திகார் சிறையில் 15 நாள்கள் இருந்தார்.

(3).         அதுவரையில்லாமல் தொழில் படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு எழுதிட வேண்டும் என்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு அரசாணையை 12. 6. 1989 அன்று எரிக்கும் போராட்டத்தில் பங்கேற்றார்.

(4).         தாராளமயம், தனியார்மயம், உலக மயத்திற்கு அடிகோலிய காட் (GATT) அமைப்பின் டங்கல் அறிக்கை எரிப்புப் போராட்டத்தில் 16. 8. 1993 அன்று பங்கேற்றார்.

(5).         26. 01. 1996 அன்று மண்டல் குழு பரிந்துi­ரப்படி இந்திய ஒன்றிய அரசுப் பணிகளில் சேர இட ஒதுக்கீடு பெறும் தகுதியிலிருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வளர்ந்த பிரிவினரை (கிரீமிலேயர்) விலக்கும் ஆணையை எரிக்கும் போராட்டத்தில் பங்கேற்றார்.

(6).         எசனை என்ற இடத்தில் 04. 02. 1990 முதல் 09. 02. 1990 வரை 6 நாள்கள் கொள்கைப் பயிற்சி வகுப்பு நடத்திட ஆவன செய்தார். 13. 05. 1995 முதல் 25. 05. 1995 முடிய அரியலூர் அருகில் இலிங்கத்தடிமேட்டில் கொள்கைப் பயிற்சி வகுப்பு நடத்திட ஏற்பாடு செய்தார்.

இறுதிக் காலம்

பெரியார் கொள்கையின் பெருந்தொண்டராகவும் தோழர் வே. ஆனைமுத்துவின் தோழராகவும் தொண்டராகவும் திகழ்ந்த ஆ. செ. தங்கவேலு அவர்களின் பெரியார் இயக்கப் பணிகள் பொன்விழாப் பாராட்டுக் கூட்டம் 19. 06. 1998 அன்று அரியலூர், ஆர். டி. சி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நீரிழிவு நோயினால் மிகவும் வருந்தும் நிலை இருந்தும் இயக்கப் பணிகளைத் தொய்வில்லாமல் செய்து வந்தார். 27. 09. 1998 அன்று தனது 77ஆம் அகவையில் இவரது தொடர் செயற்பாட்டிலிருந்து இறுதி ஓய்வுப் பெற்றார். இவரது இறுதி ஊர்வலத்தில் “பெரியார் கொள்கை மறவர் ஆ. செ. தங்கவேலு இறுதி ஊர்வலம்” என்ற பதாகையும்,

“கடவுள் இல்லாதது; மதம் பொல்லாதது;

சாதித் தேவை இல்லாதது; பெரியாரியமே சரியானது”

என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் எடுத்துச் செல்லப்பட்டது.

ஆ. செ. தங்கவேலு அவர்களின் எளிமை, கொள்கைப்பிடிப்பு, அர்ப்பணிப்பு, சோர்விலா உழைப்பு இயக்கப் பணிகளில் ஈடுபடும் தோழர்களுக்கு வழி காட்டுவன ஆகும்.

“நல்லதோர் அடையாளத்தை

நாட்டிலே காட்டீர் என்றால்

எல்லோரும் தங்கவேல் போல்

இருந்தாலே போதும் என்போம்”

என்று கவிஞர் தமிழேந்தி குறிப்பிட்டுள்ளது சாலப் பொருத்தமுடையது.

ஆ. செ. தங்கவேலு எழுதி, இசையோடு மேடையில் பாடல் ஒன்றின் சில பகுதிகள் இங்கே.

சுதந்தரமாம் சுதந்தரம்

சூதுநிறைந்த சுதந்தரம்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு

உரிமையில்லா சுதந்தரம்!

சாதியை ஒழித்திடவே

சட்டம் போடாச் சுதந்திரம்

சாதித் தீயை விசிரிவிடும்

சதிநிறைந்த சுதந்தரம்!

பாடுபட்டு உழைத்து உருகும்

பாட்டாளிக்கா சுதந்தரம்?

டாடா, பிரலா, கொயாங்கா

கூட்டத்திற்கே சுதந்தரம்!

பெரியாரின் கொள்கை நெறியாளர் ஆ. செ. த. அவர்களின் வழிநடப்போம்!

- சா.குப்பன்

Pin It