சென்ற ஞாயிற்றுக்கிழமை 8-ம் தேதியன்று ஈரோட்டில் எமது இல்லத்தில் நடைபெற்ற ‘ரிவோல்ட்’ உதவி ஆசிரியர் திரு.குருசாமியின் திருமணத்தைப் பற்றிய முழு விவரங்களை மற்றொரு பக்கத்தில் வெளியிட்டிருக்கிறோம்.
இந்தத் திருமணமானது பல வழிகளிலும், ஏனைய திருமணங்களைவிட சிறந்தது என்பதற்கு சற்றும் சந்தேகமில்லை. முதலாவதாக இது ஒரு காதல் மணம். மணமகனும் மணமகளும் ஒத்த கல்வியும், ஒத்த அன்பும், ஒத்த குணமும், ஒத்த உடல் நலனும் உடையவர்களாகையால் அவ்விருவரும் ஒருவரையொருவர் காதலித்து செய்து கொண்ட திருமணமாகையால் இதைக் காதல் திருமணம் என்றோம்.
இரண்டாவதாக ஒரு வகுப்பிலுள்ள மணமகன் மற்றொரு வகுப்பைச் சார்ந்த மணமகளை மணந்து கொண்டதால் இது ஒரு கலப்பு மணமாகும். இந்தச் சீர்திருத்த மணத்திற்கு முக்கியமாய் மணமகன் திரு.குருசாமி அவர்களுக்கு பல இடையூறுகள் நேர்ந்தன.
இந்தத் திருமணத் தின் சிறப்பைக் கூறுமுன் மண மகனது சாதியாராகிய “முதலியார்” எனப்படு வோர்கள் இவ்விதக் காதல் மணங்களுக்கு எவ்வளவு இடையூறாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி சிறிது கூறாமல் இருக்க முடியவில்லை.
திருமணத்தின் முதல் நாளன்று அவரது தங்கையார் கிணற்றில் விழுந்து விட்டதாகவும், இன்னும் இது போன்ற பலவாறான பொய்த் தந்திகளையனுப்பியதோடும் சாதியை விட்டு விலக்கி விடுவதாகவும் பல பயமுறுத்தல் கடிதங்களையும் எழுதினார்களென்றால், இந்த சீர்திருத்த உலகத்தில் இந்த வகுப்பாரது மனப்பான்மை எவ்வளவு தூரம் தாழ்ந்த நிலையிலிருக்கிறது என்பதை வாசகர்களே யோசித்துக் கொள்ளும்படி விட்டு விடுகின்றோம்.
ஆனால், இந்த சமூகத்திலுங் கூட முற்போக்கான அபிபிராயங் களைக் கொண்ட சில பிரமுகர் களைக் குறிப்பிட வேண்டியதாயிருக்கிறது. உதாரணமாக, இந்தத் திருமணத்தை ஆதரித்து வாழ்த்துச் செய்திகளனுப்பிய திருவாளர்கள் சீர்காழி சிதம்பரநாத முதலியார், பி.டி, ராஜன், கனம் மந்திரி முத்தையா முதலியார், திருநெல்வேலி சிதம்பரநாத முதலியார் போன்றவர்களின் ஆதரவானது நமக்கு பெரிய ஊக்கத்தைக் கொடுப்பதோடு அந்த சமூகத்திற்கே முற்போக்கடையும் படியான சந்தர்ப்பமும் கிட்டியிருக்கிறது என்று உறுதியாய்க் கூறுவோம்.
இரண்டாவதாக, மணமகள் செல்வி குஞ்சிதம் அவர்களின் கல்விய றிவையும், அவர்களது சீர்திருத்த கொள்கைகளையும், அவர்கள் “ரிவோல்டில்” ஆங்காங்கு எழுதி வந்திருக்கின்ற கட்டுரைகளிலிருந்து இனிதறியலாம்.
மேலும் குஞ்சிதம் அவர்கள் திருமணத்தன்றைய தினமே மாலையில் கூடிய ஒரு பொதுகூட்டத்தில் மேடையின் மீதே முதன்முதலாக செய்த ஆங்கிலப் பிரசங்கமே எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை நேரில் பார்த்த அன்பர்களுக்கு அவர்களது பிற்கால ஆற்றலைப் பற்றி நாம் சற்று அதிக மாகவே எதிர்பார்க்கக் கூடியவர்களாயிருக்கிறோம்.
மேலும் மணமகள் தெலுங்கிலும் சொற்பொழிவாற்றக்கூடிய தேர்ச்சி பெற்றிருப்பதால் நமது சுயமரியாதை இயக்கம் தெலுங்கு நாடுகளிலும் பரவவேண்டிய ஒரு நல்ல சந்தர்ப்பம் நமக்குக் கிடைத்து விட்டதற்காக நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
இந்த சந்தர்ப்பத்தில் பெண் கல்வியின் உயர்வை நன்குணர்ந்து மணமகளை உயர்ந்த கல்வி பயிற்றுவித்த அவரது பெற்றோர்களை வாழ்த்தாமலிருக்க முடியவில்லை. இதர தாய் தந்தைமார்களும் இவர்களைப் பின்பற்றி தங்கள் பெண்களையும் பல துறைகளிலும் தேர்ச்சிபெறக் கூடிய கல்விகளைப் போதிப்பார்களானால், இத்தகைய காதல் மணங்கள் நம் நாட்டில் பெருகும் என்பதற்கு ஐயமில்லை.
மணமகனும் மணமகளும், சுயமரியாதை இயக்கத்துக்குத் தக்க ஊன்று கோலாக இருந்து தங்களது சந்தோஷமான வாழ்க்கையாலும் நடத்தையாலும் பிற்போக்குள்ள மக்களுக்கு ஒருவழி காட்டிகளாக இருந்து இத்தகைய திருமணங் கள் நமது நாட்டில் பெருகி மக்களது அறிவும் வளர்ச்சி பெற்று, தங்களைப் போலவே பிறரும் கலக்கமற்ற வாழ்க்கை வாழ்வதற்கு உதவி புரிவார்களென்று நம்புகிறோம்.
இளைஞர் உலகத்துக்கு ஒரு பேரூக்கம் அளிக்கத்தக்க செயலை தம் மணவினையால் நிகழ்த்திக் காண்பித்த திரு.குருசாமி அவர்களையும் திருமதி. குஞ்சிதம் அவர்களையும் நாம் மனமாரப் பாராட்டுகிறோம்.
(குடி அரசு - வாழ்த்துரை - 15.12.1929)