ஊடகங்கள் எப்போதுமே சமூகத்தைப் பிரதிபலிப்பவை. சமூகம் எவ்வாறிருக்கிறதோ அப்படித்தான் அவையும். அந்த வகையில் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள், ஆணாதிக்கம், சாதிவெறி, மதவெறி என அனைத்தும் ஊடகங்களிலும் இருப்பதைக் காணலாம். ஊடகம் மட்டுமல்ல, எந்தத் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஊடகங்கள் பெண்களைச் சித்தரிக்கும் விதம் பற்றி நிறையப் பேசப்பட்டாயிற்று. எப்பொழுதுமே பெண்கள் நுகர்வுப் பொருளாகவும் நகைச்சுவைக்கு உரியவர்களாகவும் சித்தரிக்கப்படுவதைத் தொடர்ந்து காண்கிறோம். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் என எதுவும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
ஏன் பெண்கள் பற்றிய சித்தரிப்பு தொடர்ந்து இவ்வாறிருக்கிறது? எங்கே தலித்துகளின் பங்களிப்பு மிகக் குறைவாக இருக்கிறதோ அங்கு தலித்துகள் பற்றிய சித்தரிப்பு சரியானதாக இருக்காது. ஆதிக்க சாதிகளின் பிடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து வெளிவரும் ஓர் இதழில் முற்றிலும் அந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், தலித்துகள் பற்றி அவர்களில் பெரும்பாலானோரின் பார்வை என்னவோ அதுவே வெளிப்படும் அல்லவா? அதுபோலவே முற்றிலும் ஆண்கள் நிறைந்த அல்லது பெரும்பான்மை ஆண்கள் மட்டுமே பணியாற்றும் ஒரு நிறுவனத்தில் இருந்து வெளிவரும் ஒரு செய்தித்தாளோ இதழோ அல்லது காட்சி ஊடகமோ ஆணாதிக்கத் தன்மையில்தான் வெளிப்படும்.
இன்றைக்கும் திரைக்கலைஞர்களாகிய பெண்கள் பற்றி எழுதுகையில் ஆணாதிக்கப் பார்வையில் எழுதுவதும் அவர்களுடைய அழகை வர்ணிக்கிறேன் எனும் போர்வையில் கேவலமாக, ஆபாசமாகச் சித்தரிப்பதும் தொடர்கிறது. பெருகிவரும் கூர்மையுணர்வு காரணமாக ஒப்பீட்டளவில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இது குறைந்துள்ளது.
நான் ஊடகத்தில் பணியாற்ற வந்த காலத்திலும் ஓரிரண்டு பெண்கள் மட்டுமே ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தோம். ஆகவே பல்வேறு சமயங்களில் எங்களுடைய கருத்துக்கள் எடுபடாமல் போயிருக்கின்றன. குழுவில் பெரும்பான்மையாக ஆண்கள் இருந்ததே காரணம். ஒரு திரைப்பட விமர்சனம் எழுதுகிறோம் என்றால் குழுவில் அனைவரும் திரைப்படம் குறித்து எழுதி மதிப்பெண்களையும் தருவோம். இயக்கம், திரைக்கதை, கதை, பாடல்கள், இசை என எல்லாவற்றிலும் மிகச்சிறப்பாகத் திரைப்படம் இருந்தாலும் ஆணாதிக்கத்தோடு பெண்களைக் கேலிக்குள்ளாக்கும், கேவலப்படுத்தும் வசனங்கள் மிகுந்த திரைப்படம் என்றால் நான் அதற்காகச் சில மதிப்பெண்களைக் குறைத்து அளிப்பதுண்டு. ஆனால் பிறர் அதுகுறித்து எந்த அக்கறையுமற்று அதைப் பற்றி ஒரு சொல்லும் எழுதாமல் இருக்கும்போது, "இந்தத் திரைப்படத்தில் இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதே இது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?" என்று கேட்கும்பொழுது பெண்களின் பக்கம் நின்று பேச ஒருவர்கூட இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய துயரம்! சில நேரங்களில் உடன் பணியாற்றும் பெண்கள் பணியில் இருந்து விலகிச் சென்றபோது நான் மட்டுமே ஒரே ஒரு பெண்ணாக ஆசிரியர் குழுவில் இருந்த காலமும் உண்டு. அப்பொழுதெல்லாம் உடன் வாதாடுவதற்குப் பெண்கள் இல்லையே என்று நான் வருந்தியிருக்கிறேன். ஆசிரியர் குழுவில் பெண்களின் சதவீதம் கூடியிருந்தால் என் கருத்தும் கணக்கில் எடுக்கப்பட்டிருக்கும்; கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப்பட்டிருக்கும். பெண்கள் அதிக அளவில் ஊடகத் துறைக்குள் வருவது என்பது மிகவும் முக்கியமானது. அப்படி நுழைந்து அந்த வெளியைக் கைப்பற்றினால் மட்டுமே பெண்களைக் கீழ்த்தரமாக, ஆபாசமாக, ஒரு நுகர்வுப் பொருளாகச் சித்தரிப்பது குறையும். எங்கே பங்களிப்பு இல்லையோ அங்கே பெண்கள் மீதான தாக்குதல்கள் மிகவும் எளிது. இதுவே என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை.
மூத்த ஊடகவியலாளர் ஜெயராணி அவர்கள் ஒரு மேடையில் பேசியபோது இவ்வாறு குறிப்பிட்டார்: "நான் ஓர் அச்சு ஊடகத்தில் பணியாற்றியபோது காஞ்சிபுரம் அருகே ஒரு தலித் ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஆதிக்க சாதியினர் விடுத்த கொலை மிரட்டல் குறித்து எழுதி, ஆதிக்க சாதிகள் அவரை எவ்வாறு பணிய வைக்க முயல்கின்றன என்று அம்பலப்படுத்த எண்ணினேன். அந்தச் செய்திக் கட்டுரையை எழுதி நிறுவனத்திடம் அளித்தேன். ஆனால் என்னுடைய கட்டுரை ஏற்கப்படவில்லை. 'நீ எதற்காக இதை எழுத நினைக்கிறாய்? உனக்குப்பணிக்கப்பட்டது போல சமையல் குறிப்புகளையும் இதர கட்டுரைகளையும் எழுதாமல் ஏன் இதை எழுத வேண்டும் என்று நினைக்கிறாய்' என்று சொல்லிக் கட்டுரை கிடப்பில் போடப்பட்டது. சில நாட்களுக்குப் பின்னர், அவர் கொலை செய்யப்பட்டார் எனச் செய்தி வந்தது. ஒரு மாலை நாளிதழின் வால் போஸ்டரில் இச்செய்தியைப் பார்த்தபோது அதிர்ந்து போனேன். ஒருவேளை இதை நான் எழுதியிருந்தால் விஷயம் பத்திரிகைகளில் வந்துவிட்டது என்பதால் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கக் கூடும்; இந்தக் கொலை நடக்காமல் இருந்திருக்குமோ என எண்ணி வருத்தப்பட்டேன். என்னை அதிகம் பாதித்த சம்பவம் இது" என்றார் ஜெயராணி. அந்த உரையைக் கேட்டுக் கொண்டிருந்த என்னால் கட்டுப்படுத்த இயலாமல் அவருடைய கைகளைப் பற்றிக்கொண்டு கண்ணீர் விட்டேன்.
ஜெயராணிக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு ஒரு வேளை வழங்கப்பட்டிருந்தால் வரலாறு மாறியிருக்கக்கூடும். இன்றைக்கு ஊராட்சி மன்றத் தலைவராகச் சிறப்பாக அந்தத் தலித் பெண் செயல்பட்டிருக்கக்கூடும். பெண்களுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகள்தான் எத்தனை! அதனால் பறிபோன உயிர்களும்தான் எத்தனை!
"பெண்களும் ஊடகங்களும்" என்கிற தலைப்பில் பல கல்லூரிகளில் மாணவர்களிடையே உரையாற்றியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் தவறாமல் குறிப்பிடும் சம்பவம் இது. திராவகம் வீசி முகம் சிதைக்கப்பட்டுத் கொல்லப்பட்ட வினோதினியை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. மிகப்பெரும் தாக்கத்தை அவருடைய மரணம் உருவாக்கி இருந்தது. எல்லா நாளிதழ்களிலும் எல்லாச் செய்தி ஊடகங்களிலும் அது குறித்த செய்திகள் வெளிவந்தன. அப்போது நான் ஒரு பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்; அதில் மூன்று பக்கச் செய்தி வெளிவந்தது. ஒரு பக்கத்தில் வினோதினியின் புகைப்படம் மட்டும் பெரிதாக ஒரு முழு பக்க அளவில் வெளியிடப்பட்டது; இரண்டு பக்கங்களுக்கு அச்செய்தி குறித்த கட்டுரை வெளியானது. உண்மையில் மிகவும் முக்கியத்துவம் கொடுத்துக் கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது. அது போலவே வினோதினியின் இறப்பை ஒட்டி அவருக்கு நடந்த இறுதி நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஏறத்தாழ அனைத்து அமைப்புகளில் இருந்தும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலிச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அதன் பின், சரியாய் ஒரு மாதம் கழித்து வித்யா என்றொரு பெண். சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர். வினோதினி என்ன காரணத்திற்காகக் கொல்லப்பட்டாரோ அதே காரணத்திற்காகக் கொல்லப்பட்ட பெண். தன்னைக் காதலிக்கவில்லை என்பதற்காகத் திராவகத்தை அவள் முகத்தில் வீசினான் ஒருவன். முகம் சிதைந்து வினோதினியைப் போலவே மருத்துவமனையில் உயிருக்குப் போராடினாள் வித்யா. சில நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அவளும் மரணத்தைத் தழுவினாள். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவளுடைய உடல் ஒப்படைக்கப்பட்டபோது அப்போதைய சேவ் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த சிலர், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த சிலர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர், ஓரிரு சமூகச் செயல்பாட்டாளர்கள் என்று ஒரு சிலர் மட்டுமே அங்கு கூடியிருந்தோம். அதன்பின் ஆதம்பாக்கத்தில் உள்ள வித்யாவின் வீட்டில் அவருடைய இறுதி நிகழ்வு நடைபெற்றபோது அப்பொழுதும் இதே அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் அங்கு அவருக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். வினோதினிக்காக எழுந்த குரல்களோ அல்லது ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலிச் சுவரொட்டிகளைப் போல மிகப் பெரும் அளவில் சென்னை மாநகரத்தில் வித்யாவிற்காக ஒட்டப்பட்டுப் பார்க்கவில்லை. இறுதி நிகழ்விற்கு முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சிலர், சமூகப் பண்பாட்டு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு சிறிய கூட்டமே அன்றைக்குக் கூடியது. எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஏன் வினோதினிக்காகக் கூடிய அந்தக் கூட்டம் வித்யாவிற்காகக் கூடவில்லை? காரணம் இருந்தது. வித்யா குறித்த திராவக வீச்சுச் செய்தி வெளிவந்த அன்று அவர் தலித் என்றும் செய்தித்தாள்களில் செய்தி வெளியாகிவிட்டது. இன்று வரை வினோதினி என்ன சாதி என்று தெரியாது. வித்யா தலித் என்கிற செய்தி வெளிவந்துவிட்டதால் இயல்பாகவே நம் பொதுச்சமூகம் இந்த விஷயத்தை விடுதலைச் சிறுத்தைகள் பார்த்துக் கொள்வார்கள் அல்லது சமூகச் செயல்பாட்டாளர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று ஒதுங்கிவிட்டது. சமூகத்தின் மனநிலை இப்படி என்றால் ஊடகங்களின் மனநிலையும் அப்படித்தானே இருக்கும்?
நான் பணியாற்றிய அதே இதழில் வித்யா குறித்த செய்தி வெளிவந்தது. சின்னதாகச் செய்தி வெளியிட்டிருந்தார்கள். வித்யாவின் ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. “வினோதினிக்காக மூன்று பக்க அளவில் கட்டுரையாகப் போட்டிருந்த நீங்கள் ஏன் வித்யாவிற்கு மட்டும் இவ்வளவு சிறியதாகச் செய்தி போடுகிறீர்கள்" என்று கேட்டபோது வடிவமைப்பாளரிடமிருந்து வந்த காரணம், "வினோதினி போட்டோவைப் பாருங்க, அழகாக இருக்கு. முழு பக்கத்திற்குப் போட்டோ வைத்தால் தாங்கும். வித்யா அவ்வளவு அழகு கிடையாது, முழு பக்கத்திற்குத் தாங்காது" எனப் பதில் கிடைத்தது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரே போலக் கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்கள் குறித்த செய்திகளில்தான் எத்தனை பாகுபாடு! இப்படித்தான் நம் ஊடகங்கள் இயங்குகின்றன. இப்படிப்பட்டவர்களோடுதான் நானும் பணியாற்றி வந்திருக்கிறேன் என்கிற உண்மை முகத்தில் அறைந்தது. ஆக, ஒரு பெண் கொலை செய்யப்பட்டாள் என்றால் ஊடகங்களில் அவள் தனக்குரிய இடத்தைப் பெறுவதற்கு அவள் அழகாகவும் இருந்து தொலைக்க வேண்டியுள்ளது. இப்படித்தான் இந்த ஊடகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்னும்பொழுது எங்கிருந்து பாலின சமத்துவம் வரும்?
இது ஒரு புறம் என்றால், அரசியல் கட்டுரைகளை எழுதும், சமூக அவலங்களை அம்பலப்படுத்தும் பெண் பத்திரிகையாளர்களுக்கு நிகழ்த்தப்படும் கொடூரங்கள் அதிகம். டெல்லியைச் சேர்ந்த நேஹா தீட்சித் என்கிற பெண் பத்திரிகையாளர் ஆர்.எஸ்.எஸ். எப்படிச் சிறார்களைக் கடத்திக் கொண்டு போய் தங்களுடைய கருத்துகளுக்கு அடிமையாக மூளைச்சலவை செய்து மாற்றுகிறது என்பதை ஆதாரங்களோடு விளக்கும் மிக நீண்ட கட்டுரை ஒன்றை 'அவுட்லுக்' இதழில் எழுதினார். அவரைக் குறிவைத்து இணையத் தாக்குதல்கள் தொடங்கின. அவர் வீடும் தாக்கப்பட்டது. அவர் தன் கணவரோடு எடுத்துக்கொண்டு அவரே வெளியிட்ட புகைப்படத்தை எடுத்துச் சங்கிகள் அவரை மிகக் கேவலமான வார்த்தைகளால் இகழ்ந்தனர். யாரோ ஒருவரோடு அவர் நெருக்கமாக இருப்பதாகக் குணக்கொலை செய்தனர். அந்த யாரோ ஒருவர் "முசாஃபர்நகர் பாகி ஹை" என்கிற ஆவணப் படத்தை எடுத்த நேஹாவின் கணவர் நகுல் சிங்தான். (இஸ்லாமியர்களுக்கு முசாஃபர்நகரில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களைப் பற்றிய ஆவணப்படம்). உலகிலேயே கணவன் மனைவியை இணைத்துப் பாலியல் அவதூறு பரப்பியவர்கள் சங்கிகளாகத்தான் இருப்பர். ஆக, தங்களுக்கு எதிராக ஒரு பெண் எழுதும்பொழுது அவளுடைய நடத்தையைப் பற்றி மிக மோசமாகச் சித்தரிப்பது, அவதூறு பரப்புவது எல்லாம் பெண்களுக்கெதிராகப் பயன்படுத்தப்படும் என்றென்றைக்குமான ஆயுதங்கள். இந்தச் சமூக ஊடகக் காலகட்டத்தில் அது அவர்களுக்கு இன்னும் எளிதாகப் போய்விட்டது. இத்தகைய தாக்குதலுக்கு அரசியல் கட்டுரைகளை எழுதும் பெண்களே இலக்காகிறார்கள். வெறும் சமையல் குறிப்புகளையோ லைஃப் ஸ்டைல் போன்ற விஷயங்களையும் பேஷன், ஆடை ஆபரணங்கள் போன்றவைகளைப் பற்றி எழுதும்பொழுது பெண்களுக்கு இவ்வாறு நேர்வதில்லை.
மும்பையில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் பத்திரிகையாளர் புகைப்படக்காரருடன் செய்தி சேகரிக்கச் சென்றபோது கூட்டுப் பாலின வன்புணர்வுக்கு ஆளானார். அப்பொழுது நிர்பயா வழக்கில் கேட்டது போலவே சமூகம் அவரையும் கேள்வி கேட்டது. "மாலை 6 மணிக்கு மேல் நீ ஏன் வெளியே போனாய்? அது மாதிரியான ஒரு பகுதிக்கு ஏன் சென்றாய்? ஓர் ஆண் புகைப்படக்காரருடன் ஏன் சென்றாய்?" - இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன. அது அவருடைய தொழில். பத்திரிகையாளரின் தொழில் என்பது 24 மணி நேர வேலை. "மாலை 6 மணிக்கு மேல் நான் பணியாற்ற மாட்டேன்" என்று சொல்ல முடியாத ஒரு வேலை. அந்தக் கொடூரத்தைச் செய்தவர்களை நோக்கி எழும்பாத கேள்வி, பெண் பத்திரிகையாளரை நோக்கி எழுப்பப்பட்டது.
ஜர்னலிசம், மாஸ் கம்யூனிகேஷன், விஷுவல் கம்யூனிகேஷன் இப்படிப் பல படிப்புகளில் இருந்தும் மாணவர்கள் ஆண்டுதோறும் வெளிவருகிறார்கள். எல்லாக் கல்லூரிகளிலும் ஓரளவுக்குச் சம அளவில் ஆண்களும் பெண்களும் பயில்கிறார்கள். ஆனால் படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்த பெண்கள் துறைகளில் இருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தால் அவர்களைக் காணவில்லை. ஆனால் அத்தனை ஆண்களும் அந்தத் துறைக்கு வந்து விடுகின்றனர். பெண்கள் எல்லோரும் எங்குதான் செல்கிறார்கள்? திருமணம் செய்துவிட்டுப் பிள்ளை குட்டிகள் பெற்றுக்கொண்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போய் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். அல்லது அந்தத் துறைகளிலேயே ஆசிரியர்களாக, பேராசிரியர்களாகச் சென்று விடுகிறார்கள். பெண்களில் பலர் இதழியல் துறைக்கு வருவதில்லை.
பெரும்பாலான பெண்கள் வந்தால் மட்டுமே துறையை மாற்ற முடியும். காட்சி ஊடகங்களில் பெண்களுக்குக் கூடுதலான பங்களிப்பு உண்டு. அது சற்றே புதிய துறை என்பதால் பெண்கள் ஒப்பீட்டளவில் அதிகமானோர் பணியாற்றுகிறார்கள். அங்கும் பெண்கள் திரையில் தோன்ற வேண்டுமென்றால் வெள்ளை நிறத்தோடும் அழகாகவும் மெலிந்த தோற்றத்தோடும் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. நீங்கள் சற்று கருமை நிறத்தோடோ அல்லது உடல் பருமனானவராகவோ இருந்துவிட்டால் உங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்காது. இங்கே ஒரு கருப்பான, உடல் பருமனான ஒரு பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவோ, செய்தி வாசிப்பாளராகவோ இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? ஆனால் ஓர் ஆணால் அப்படி இருக்க முடியும்; அந்தப் பணியைச் செய்ய முடியும். இதுதான் காட்சி ஊடகத்தின் நிலை.
எந்தச் செய்தி வெளிவர வேண்டும், எந்தச் செய்தி வெளிவரக் கூடாது என்பதை எல்லாம் தீர்மானிக்கும் இடத்தில் ஆண்கள் இருக்கும்வரை ஊடகமும் ஆணாதிக்கத்தோடுதான் இருக்கும். ஆகவே பெண்கள் அதிகளவில் துறைக்கு வரவேண்டியது அவசியமாகிறது.
இந்த நேரத்தில் ஹோமாய் வியாரவல்லாவை நினைத்துக் கொள்கிறேன். இந்தியாவின் முதல் பெண் போட்டோ ஜர்னலிஸ்ட் அவர். ஜவஹர்லால் நேருவையும் மவுண்ட்பேட்டனையும் அவர் எடுத்த புகைப்படங்கள் உலகப் புகழ்பெற்றவை; வரலாற்றில் நிலைத்து நிற்பவை. அத்தனை ஆண் புகைப்படக்காரர்கள் மத்தியில் ஒற்றைப் பெண்ணாக அவர் தன் கேமராவோடு எல்லாச் செய்தியாளர் சந்திப்புக்கும் வந்து நிற்பது அத்தனை பேரின் கண்களை உறுத்தியது. ஆனால் அவர் எதையும் பொருட்படுத்தவில்லை என்பதால்தான் இன்றைக்கு அவருடைய பெயர் நமக்குத் தெரிந்திருக்கிறது; அழியாப் புகைப்படங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. வித்தியாசமான கோணங்களில் படம் வேண்டும் என்பதற்காக உயரமான இடங்களின் மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்த அவரை அசூயையோடு பார்த்தவர்கள் ஏராளம். ஒரு முறை ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்குச் சேலை அணிந்து வந்தார். ரவிக்கை சற்றே இறுக்கமாக இருந்ததால் கைகளை உயர்த்தி அவரால் படம் எடுக்க முடியாமல் போனது. அப்போது சற்றும் யோசிக்காமல் தன் கைப்பையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்துத் தன் ரவிக்கையைக் கிழித்து வெட்டிவிட்டுத் தன் பணியைத் தொடர்ந்ததை அங்கிருந்த கூட்டம் வியப்புடன் பார்த்தது. நினைத்தால் இன்றைக்கும் வியப்பாக இருக்கிறது. தனது தொழில் மீது எவ்வளவு ஆர்வமும் உறுதிப்பாடும் இருந்தால் ஒருவரால் அப்படிச் செய்திருக்க முடியும். அப்படியான அர்ப்பணிப்பு உணர்வுள்ள பல பெண்கள் இன்று ஊடகத் துறையில் தேவைப்படுகிறார்கள். அவர்கள் ஊடக உலகிற்குள் நுழையும்பொழுதுதான் பெண்களின் சித்தரிப்பை மாற்ற முடியும்.
- கவின்மலர்