“மண்ணையும் கடலையும் விட்டுத் தர மாட்டோம்”   

மின்சார வலை விரிக்கும் அணு உலை குறித்து சமூக செயற்பாட்டாளர்கள், சூழலியலாளர்கள், அணு சக்திக்கு எதிரான மக்கள் அமைப்புகள் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து பரப்புரைகள் செய்யப்பட்டு வரும் சூழலில் எவ்வளவுதான் பேசினாலும், எவ்வளவுதான் படித்தாலும் காட்சிரூபமாக சிலவற்றை விளக்கும்பொழுது சாதாரண மக்களுக்கும் புரிந்துவிடும். அப்படி காட்சிகள் மூலம் அணு உலைகளின் ஆபத்தை நமக்கு வெட்ட வெளிச்சமாக்குகிறது ‘முடிவின் ஆரம்பம்’ ஆவணப்படம்.

பொதுவாகவே ஆவணப்படங்களில் வல்லுநர்களோ சாதாரண மக்களோ வந்து பேசிக்கொண்டே இருப்பதும், அது சமயங்களில் அலுப் பூட்டக் கூடியதாகவும் இருப்பது வழக்கம். ஆனால் இந்த ஆவணப்படத்தில் அப்படி அலுப்பூட்டக்கூடிய பேச்சுக்கள் இல்லை.. கூடுமானவரை வல்லுநர்கள் பேசு வதை காட்சியாக வரைகலை மூலம் காண்பிக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் சிவா. அணு உலை இயங்கும் தன்மையை எத்தனைதான் வார்த் தைகளில் விளக்கினாலும் தொழில்நுட்பம் அறியாதவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடும் அபாயம் உண்டு. ஆனால் இந்த ஆவணப் படத்தில், அணு உலையை குளிர்விக்க குழாய் மூலம் கடல் நீரைக்கொண்டு வரும் காட்சியை சித்தரிக்கும்போதும், சுனாமி ஏற்பட்டுவிட்டால் என்னவாகும் என்று காட்சிகளில் விளக்கும்போதும் மனம் பதைபதைத்துப் போகிறது.

எழுத்தாளர் பாமரன் போபால் விஷவாயு சம்பவத்தை நினைவுகூர்கையில் விரியும் காட்சிகளின் கொடூரம் மனதை உறையச் செய்கிறது. அணுக் கழிவுகளே அணுகுண்டு தயாரிப்பதற்கான மூலதனம் என்பதை பாமரன் தனக்கேயுரிய பாணியில் கூறுகிறார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர் ஒருவரின் மகளாகிய சமந்தாவின் நேர்காணல் இந்த ஆவணப் படத்தின் முக்கியமான பதிவு.

தன் தந்தை புற்றுநோயால் இறந்ததைச் சொல்லி, இந்த இழப்பு வேறொருவருக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்று கூறி, சுனாமியன்று கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் வேலை செய்துகொண்டிருந்த 100 பேர் என்ன ஆனார்கள் என்று இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை நிர்வாகம் என்று கூறி அதிர வைக்கிறார். இப்படி ஊழியர்களின் நிலை குறித்து மக்களுக்குத் தெரிவிக்காத அரசும், அணுசக்தித் துறையும் மக்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதாக நம்புவது அறிவீனம்தான்.

இடிந்தகரை மக்களின் போராட்டம் உலகுக்கு எடுத்துக்காட்டு. பெண்கள் முன்னணியில் நின்று போராடி இவ்வுலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர். ‘எங்கள் மண்ணுக்காக, எங்களுக்குப் பின் வரும் தலைமுறைக்காக நாங்கள் போராடுகிறோம்’ என்று பெருமிதத்துடன் முழங்கும் இடிந்தகரை பெண்களை காட்சிப்படுத்தி இருக்கிறது கேமிரா.   

‘நான் என் தாயுடன் கன்னியாகுமரியில் நடந்த போராட்டத்துக்குச் சென்றேன். இன்றைக்கு என் மகள் என்னுடன் போராட்டத்துக்கு வருகிறாள்’ என்று இடிந்தகரை மில்ரெட் கூறுகிறார். ‘இத்தனை நாட்கள் எங்கு போனீர்கள்? அப்போதே போராட வேண்டியதுதானே?’ என்று கேள்வி கேட்போருக்கான பதிலை இந்தப் படம் சொல்கிறது. அரசின் அடக்குமுறைக்கு ஆளாகி, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்களைச் சுமந்து, 4 உயிர்களை இழந்தபின்னும் அறவழியிலான தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் இடிந்த கரைப் பகுதி மக்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவிக்கத் தோன்றுகிறது.   

தோழர்கள் சுப.உதயகுமாரும், மை.பா. ஜேசுராஜனும், புஷ்பராயனும், முகிலனும், மருத்துவர்கள் ரமேஷயும், புகழேந்தியும் மாறி மாறி அணு உலையின் தீமைகளை நம்முன் வைக்கின்றனர். கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள கிராம மக்களிடையே அதிகரித்துள்ள புற்றுநோய், மனவளர்ச்சி குன்றிய தன்மையில் குழந்தை பிறத்தல், தைராய்டு நோய் போன்றவற்றை அவர்களின் புகைப்படங்களைக் கொண்டு விளக்குகையில் அதிர்ச்சி உண்டாகிறது.

எப்படிப்பட்ட உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்கிற பயம் உண்டாகிறது. அணுசக்தித் துறையைச் சேர்ந்த எஸ்.கே.அகர்வாலின் மரணம் குறித்து சுப. உதயகுமாரன் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. ஒர் உயர் அதிகாரியின் மரணத்துக்கான காரணத்தைக் கூட திரித்து வெளியிடும் இந்த அரசு சாதாரண மக்களை எப்படிக் காக்கும் என்கிற அடிப்படை கேள்வி பார்ப்பவர்கள் மனதில் எழுகிறது. பேரிடர் மேலாண்மையின் அடிப்படை விஷயங் களில் ஒன்றாக அணு உலையில் விபத்து ஏற்பட்டால் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்பதைக் கூட அரசு மக்களுக்குச் சொல்லித் தரவில்லை என்று குற்றம் சாட்டுகிறது படம்.

தமிழகத்தில் நிலவும் 18 மணிநேர மின் வெட்டுக்கான காரணங்களை விரிவாகப் பேசுகிறார் சா.காந்தி. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவும், இன்னாள் பிரதமரும் அன்றைய நிதியமைச்சருமான மன்மோகன் சிங்கும் இணைந்து கொண்டு வந்த புதிய பொருளாதரக் கொள்கையும், உலகமயமாக்கலும்தான் நம்முடைய இன்றைய மோசமான மின்பற்றாக்குறைக்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன்சுமைக்கும் காரணம் என்பதை ஆவணப்படம் மிகத் தெளிவாக விளக்குகிறது. கூடங்குளம் அணு உலை உற்பத்தியைத் தொடங்கினாலும், அது தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்யப் போவதில்லை என்கிற உண்மையை புள்ளிவிவரங் களுடன் பேசுகிறது படம்.   

ஓர் ஆவணப்படத்தில் செய்நேர்த்தி அந்தப் படத்தை சுவாரஸ்யமாக தொகுப்பதில் இருக்கிறது. ஷமீரின் படத்தொகுப்பு இப்படத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நேர்த்தி யுடனான காட்சிகள், துல்லியமான ஒலிப்பதிவு, உறுத்தாத ஒளிப்பதிவு, பின்னணியில் ஒலிக்கும் செய்திகள் என்று ஓர் சிறந்த ஆவணப்படமாக ‘முடிவின் ஆரம்பம்’ படத்தை மாற்றுகின்றன. ஆனால் பின்னணியில் ஒலிக்கும் குரல்களில் தெரி யும் உணர்வுகள் மட்டும் சொல்லப்படும் செய்தியுடன் பொருந்தவில்லை. அத்துடன் இரண்டொரு உச்சரிப்புப் பிழைகளும் காதில் விழுகின்றன.

மீனவர்களின் வாழ்வையும், அவர்களுடைய உரிமைகளையும் அணு உலை என்கிற பெயரால் அரசாங்கம் தட்டிப் பறித்துள்ளது. அணுக் கழிவுகளைக் கொட்டுவதால் மீன்வளம் பாதிக்கப் படுவதை ஆதாரங்களுடன் விளக்குகிறது படம். இந்தப் படத்தில் தரப்பட்டுள்ள தரவுகளை சேகரித்து அவற்றை சரியான முறையில் காட்சிப் படுத்தியிருப்பதில் இயக்குநரின் நேர்த்தி வெளிப்படுகிறது.   

‘எங்க கடலை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்த மண்ணை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இந்த அணு உலையை மூடுறதையே ஒற்றைக் கோரிக்கையா இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். நாங்க இறந்துபோனாலும் எங்க பேரன் பேத்திகள் இந்த அணு உலையை மூடிக்காட்டுவாங்க’ என்கிற இடிந்தகரை மெல்பிரட்டின் குரல் படம் முடிந்தபின்னும் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.   

முடிவின் ஆரம்பம், விலை ரூ.50/-

வெளியீடு : உலக மனிதாபிமான கழகம், 9994232711

இயக்கம் : சிவா

Pin It