பெண்ணியம் குறித்துப் பாடத்திட்டங்கள், தன்னார்வக் குழுக்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் ஆகியவை சிலும்பல் இல்லாத தனித்தனி கட்டங்களாக முதலாம், இரண்டாம், மூன்றாம் அலைகளாகக் காண்கின்றன. சம வாய்ப்பு, சம உரிமை, தனித்துவ அடையாளம் என இந்த மிதவாத, சமூகவியல், தீவிரவாதப் பெண்ணியம் என்று கட்டங்கள் கட்டிப் படிப்பிக்கின்றன. இவற்றில் பொதுவாக விடுபட்டுப் போவது மார்க்சீய / சோசலிசப் பெண்ணியக் கொள்கைகளும் வரலாறும். அதற்கு நிலவும் இடதுசாரிச் சிந்தனை மீதான ஒவ்வாமைதான் முக்கியக் காரணம். இடதுசாரிச் சிந்தனையை முன்வைக்கும் குழுக்களிலும் பெண்ணிய ஒவ்வாமை ஆழமாக இருக்கத்தான் செய்கிறது. அதனைப் பிரிவினைவாதம், முதலாளித்துவ, பூர்ஷ்வா ஃபேஷன் என்று கருதும் தன்மை பல தோழமைச் சக்திகளிடம் நிலவுகிறது. இந்தச் சிக்கல்கள் நிஜம்; ஆனால், இவ்விரு முகாம்களிடையே உரையாடல் நிகழ்த்தாமல் இருப்பது அதைவிடச் சிக்கல்.

alexandra kollontaiமார்க்சீயப் பெண்ணியம் பிற ஒடுக்குமுறைகள் போலவே வர்க்கப் போராட்டம் நிகழ்ந்தால், பெண்விடுதலை தானாகவே முகிழ்க்கும் என்று ஆரூடம் சொல்கிறது; முதலாளித்துவத்தை முக்கிய எதிரியாகக் காண்கிறது. சோசலிசப் பெண்ணியம், வர்க்க முரண்கள் போலவே பாலின முரண்களும் முக்கியம்; முதலாளித்துவம், தந்தைவழி ஆதிக்கம் இரண்டையும் எதிர்கொள்வது ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என வாதிடுகிறது. மார்க்சீயக் கல்வி தரும் இயங்கியல் பாலினம், சாதி, மதம், இனம், நிறம், பாலீர்ப்பு, மாற்றுத்திறன்கள் போன்ற சமூக / உளவியல் / பண்பாட்டு ஏற்றத்தாழ்வுகளையும் கணக்கில் எடுக்கக் கற்றுத் தருகிறது. இதில் ஏதேனும் ஒன்றை மட்டும் தனியாகக் காணும்போது அடிப்படை ஜனநாயகத் தன்மை விடுபட்டுப் போகிறது. அதன் வெளிப்பாடுதான், இடதுசாரிகள் மத்தியில் பெண் தோழர்கள் குறித்த பதிவுகள், பேச்சுக்கள் மிகக் குறைவாக இருப்பது. பிறப்பால் வரும் எல்லா மதிப்புகள் போலவே, ஆண் தோழர்கள் தமது 'ஆண்' என்ற மிதப்பை இறக்கி வைப்பதும், பெண் தோழர்கள் 'என்ன இருந்தாலும் நான் பெண்தானே' என்ற தன்னம்பிக்கைக் குறைவைப் புறம் தள்ளுவதும் மிக முக்கியமான பயிற்சியாக இருக்க வேண்டியிருக்கிறது.

மார்க்சீய / சோசலிசப் பெண்ணிய வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப் பகுதி முக்கியம் பெறுகிறது. எலினார் மார்க்ஸ் (1855 - 1898), கிளாரா ஜெட்கின் (1857 - 1933), ரோசா லக்சம்பர்க் (1871 - 1919), அலெக்ஸாண்ட்ரா கொலந்தாய் (1872 - 1952) ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நால்வரும் அமைப்புகளில் இணைந்து பணியாற்றியவர்கள். கொலந்தாய் பிரபுத்துவக் குடும்பப் பின்னணி கொண்டவர்; ரோஸா புலம்பெயர்ந்து வாழ்ந்த யூதரும் மாற்றுத்திறனாளியும் ஆவார்.

கார்ல் மார்க்ஸ் & ஜென்னியின் காதல் பற்றிப் பேசும் அளவு நாம் ஜென்னியின் அரசியல் ஈடுபாடு பற்றிச் சொல்வதில்லை. மார்க்ஸின் செயலராக இருந்தார் என்பதுடன் நிறுத்தி விடுகிறோம். ஏங்கெல்ஸ் & மேரி பர்ன்ஸ் இருவரும் திருமணம் என்ற நிறுவனத்தின் மீது கொண்ட விமர்சனம் காரணமாக நீண்டகாலம் இணைந்து வாழ்ந்தனர்; அவரது மறைவுக்குப் பின் ஏங்கெல்ஸ், மேரியின் இளைய சகோதரியுடன் வாழ்ந்தார். இது போல நாம் ஒவ்வொருவர் தனிவாழ்வு பற்றியும் பலவற்றைப் பேசலாம். ஆனால், பொதுவாக ஆண் தோழர்கள் பற்றிய இத்தகு தகவல்கள் கூடுதல் விவரங்களாக மட்டுமே கருதப்படுகின்றன. அவர்கள் வாழ்வின் நெளிவுசுளிவுகள் அவர்களது பணி, கருத்துக்களில் தாக்கம் செலுத்துவதாக நாம் நினைப்பதில்லை. ஆனால், எலினார் மார்க்ஸ் தனது இணையர் ஏவ்லிங் வேறு பெண்ணுடன் இரகசிய உறவு வைத்திருந்ததை அறிந்ததும் விஷமருந்தி மாண்டார். கொலந்தாய், குடும்பத்தார் கட்டாயப்படுத்திச் செல்வம் மட்டுமே கருதி மணம் முடிக்கக் கூடும் என அஞ்சி, தனது உறவினரான இளைஞரை மணம் முடித்தார். ஐந்தே ஆண்டுகளில் மணமுறிவு பெற்றார். அவருக்கு இருந்த அழகு, கவர்ச்சி, ஆண் நட்புகள், காதல், பாலுறவு பற்றிய கருத்துக்கள் காரணமாக எப்போதும் விமர்சனங்களுக்கு ஆளானார். ரோசா, புரட்சியாளர் லியோ ஜோகிசெஸ் உடன் நீண்டகாலக் காதல் உறவும், கோஸ்ஜா ஜெட்கின், பால் லெவி ஆகியோருடன் பாலியல்சார் நட்பும் கொண்டிருந்தார். கிளாரா ஜெட்கின் லெனினுடன் நடத்திய உரையாடல்கள் நமக்கு இப்போது கிடைக்கின்றன. அவர் மணவாழ்வில் தொடர்ந்து இருந்தார்; ஆயினும் விடுதலைக் காதல் குறித்துத் தொடர்ந்து விவாதித்தார். கிளாரா தவிர பிறர் குறித்த பகிர்வில் அவர்களது தனிவாழ்வு கட்டாயம் இடம்பெறுவதைக் காண்கிறோம். பெண்ணியம் முன்வைக்கும் 'தனிவாழ்வும் அரசியலே' என்ற முழக்கத்தை இந்த மார்க்சீய / சோசலிசப் பெண்ணியவாத முன்னோடிகள் முன்வைக்கவில்லை என்றாலும், அவர்கள் வாழ்வு அதற்கான சாட்சிகளாகத் திகழ்கின்றன.

அலெக்ஸாண்ட்ரா கொலந்தாய் தோழர் லெனின் அமைத்த முதல் சோசலிசக் குடியரசில் அமைச்சராகப் பணியாற்றியவர். பிறகும் தோழர் ஸ்டாலின் ஆட்சியில் வெளியுறவுத் தூதராக நார்வேயில் பணியாற்றியவர். இயக்கம், அரசாங்கம் ஆகிய இரண்டிலும் பங்கேற்ற கொலந்தாய் குறித்த முதல் அறிமுகம் தோழர் மைதிலி சிவராமன் மூலம் கிடைத்தது. (நான் அமைப்பிற்குள் செயல்பட்ட குறுகிய காலத்தில் வேறெந்த வகுப்புகளிலும் கொலந்தாய் பெயர் உச்சரிக்கப்படாதது வியப்பல்ல!) பின்பு, ஆசிரியராகக் கல்லூரியில் பெண்ணியம் குறித்த வகுப்புகள் நடத்த வாய்ப்பு கிடைத்த போது, பாடத்திட்டத்தில் சோசலிசப் பெண்ணியத்தைச் சேர்ப்பதில் இருந்த சிரமங்களை அனுபவித்தேன். இந்த நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில் வ.கீதாவுடன் இணைந்து நாடகங்கள் செய்த சமயம் 'பெண்கள் சந்திப்பு' என்ற விரிந்த, திறந்த குழு ஒன்று உருவானது. அதில் கொலந்தாய் பற்றிப் பகிர வாய்ப்புக் கிடைத்தது. குடும்பம் பற்றிய அவரது கட்டுரை ஏற்கனவே வெளிவந்து இருந்தது. வ. கீதாவின் மொழிபெயர்ப்பில் ஷீலா ரௌபாத்தம் எழுதிய 'அன்புள்ள மார்க்ஸ்' நூலும் இருந்தது. பிறகு ஜெர்மெயின் கிரியரின் 'பாலற்ற பெண்பால்' (The Female Eunuch) உள்ளிட்ட பெண்ணிய நூல்களை ராஜ் கௌதமன் மொழிபெயர்த்தார். ரோசா உள்ளிட்ட பலரது எழுத்துக்கள் தமிழாக்கம் செய்யப்பட்டன. கொலந்தாயின் வாழ்க்கை வரலாற்றை 'பாலியல் முதிர்ச்சிமிக்க கம்யூனிசப் பெண்ணின் தன்வரலாறு' என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்து என்.சி.பி.எச். (NCBH) மூலம் வெளியிட வாய்ப்புக் கிடைத்தது (2019). தற்போது கிட்டத்தட்ட கொலந்தாயின் எல்லாக் கட்டுரைகளையும் தோழர்கள் வெண்ணிலா, சாரதா மொழிபெயர்ப்பில் சிந்தன் பதிப்பகம் 'உழைக்கும் பெண்களுக்கு' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது (2025). இருந்தும் கொலந்தாய் கிளப்பிய விவாதங்கள் இன்றளவும் அழுத்தம் பெறாமல்தான் இருக்கின்றன.

பெண்களின் இரட்டைச் சுமை, மதிப்பற்ற வீட்டு உழைப்பு ஆகியவற்றை வர்க்க மற்றும் பாலினக் கட்டமைப்பின் பகுதியாக முன்வைத்த சோசலிசப் பெண்ணியம் மார்க்சீயப் பார்வையில் ஆழ்ந்த பரிசீலனையைக் கோருகிறது. வீட்டு உழைப்பு பற்றிய லெனின் கருத்துக்கள் கவித்துவமானவை. 'நசுக்குண்ட' வீட்டு வேலை இயந்திரத்தனமான சுமையைப் பெண்கள் மீது திணிக்கிறது. கொலந்தாய் அமைச்சர் என்ற முறையில் அதனை எதிர்கொள்ளப் பொது உணவகம், சமையலறை, குழந்தைகள் காப்பகம், சலவையகம் ஆகியவற்றை 1919-லேயே கட்சித்திட்டத்தில் கொண்டு வந்தார். போரில் பங்கேற்ற பெண்கள் திரும்பி வந்ததும் அடுக்களைப் பணியில் மூழ்கி விடாமல் இருக்க வேண்டும் என்பது பற்றி அக்கறையுடன் திட்டமிட்டார்.

தாய்மை குறித்த கொலந்தாயின் விரிவான கட்டுரைகள் தாய்மையின் சமூகப் பங்களிப்பு, வேலைச் சுமை, தாய்சேய் நலத்திட்டங்கள் ஆகியவற்றைப் பேசின. அத்துடன் கூடவே தேவையற்ற கருவைக் கலைப்பதற்கான சட்டரீதியான அனுமதி, மருத்துவ வசதி பற்றி உலகில் முதன்முதல் பேசியது சோவியத் அரசுதான். அதற்கு முன்னணியில் இருந்து வழி நடத்தியது கொலந்தாய்தான். இன்றுவரை பல முதலாளித்துவ நாடுகளில் மருத்துவ ரீதியான கருக்கலைப்பு மத நம்பிக்கை சார்ந்த சிக்கலாகக் கருதப்படுகிறது.

பாலியல் தொழில் குறித்த பார்வையிலும் கொலந்தாய் ஒழுக்க வரையறைகளைக் குறித்துப் பேசுவதில்லை. சமூக உழைப்பை மறுக்கும் வணிகமாக அதனைக் கண்டார். அதேபோலத்தான் வீட்டுமனைவியாக வாழும் 'குடும்பப் பெண்களும்' தமது சமூக உழைப்பை மறுதலிப்பதாக வாதிட்டார். இன்றுவரை வர்க்க மேலாதிக்கம் பெண்களின் சமூக உழைப்பை இரண்டாம் பட்சமாகப் பார்க்கிறது. பெண்களும் தம்மைக் 'கண்கலங்காமல், வீட்டுவாசலைத் தாண்டாமல் பராமரிக்கும்' வாழ்க்கைதான் சீரிய வாழ்க்கை என நம்புகிறார்கள். பெண்களின் வீட்டு உழைப்பை மதிப்பு வாய்ந்ததாக அணுகும் போக்கு நம்மில் பலருக்கு இருப்பதில்லை. ஒரு புறம், ஆண்கள் சமையல், வீட்டுச் சுத்திகரிப்பு, சலவை, குழந்தைகள், வயோதிகர் பேணுதல் உள்ளிட்ட பணிகளை ஏற்றுச் செய்தல் பெண்ணிய அணுகுமுறையில் இன்றியமையாத அடிப்படை ஆகிறது. அத்துடன், இந்தப் பணிகளை மதிப்புடன் அணுகுவதும் முக்கியமாகிறது.

காதல், பாலுறவு ஆகியவற்றில் கம்யூனிச அறம் என்பதைக் கற்றல் அவசியம் என்பதை ஜெட்கின் முதல் கொலந்தாய் வரை தொடர்ந்து வலியுறுத்தி வருவதைக் காணமுடிகிறது. காதல் அடிப்படை மானுட இயல்பு. அதற்கான சமூகத் தளத்தை மறு உற்பத்தியுடன் மட்டும் இணைப்பது இயந்திரகதியிலான பயனாளர் பண்பாடு. அதனைப் பூதாகாரமாக விரித்துப் புனைவாக்கம் செய்வது நடைமுறைக்கு ஒவ்வாத புனைவியல் வாதம். எல்லாச் சமூக அமைப்புகள் போலவே இயற்கையும் நிறைவும் விடுதலையும் காதல் உறவுகளில் அமைய வேண்டும். முதலாளித்துவ உலகம் அதனைத் தனிமனித விருப்பு வெறுப்பாகக் கட்டமைத்து 'எனக்குச் சரிப்படவில்லை' என்பதுடன் உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறது. மாறாக, கம்யூனிசம் அதனையும் இயங்கியல் பூர்வமாக அணுகும் பார்வையைத் தருகிறது.

1923-இல் கொலந்தாய் இளைஞர்களுக்கான இதழில் எழுதிய "உழைக்கும் இளைஞர்களே! சிறகுகள் விரிக்கும் ஈராஸ் (விழைவின்பம்) எழுச்சி பெறட்டும்!" (Make Way for Winged Eros: A Letter to Working Youth) என்ற நீண்ட கட்டுரையில் காதல்தோழமை குறித்து விரிவாகப் பேசுகிறார். (பார்க்க: https:// www.marxists.org/archive/kollonta/1923/winged-eros.htm) அதன் சில பகுதிகளை இங்கு பகிர்வது பொருத்தமாக அமையும் எனக் கருதுகிறேன். தமிழ் மொழியாக்கத்தை அடியொற்றிச் சிறு சிறு மாற்றங்களோடு இங்கு வழங்குகிறேன்:

"புதிய கம்யூனிச சமூகம், தோழமை, உடனிருப்பு ஆகிய கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்படுவது. உடனிருத்தல் பொதுநலன்கள் குறித்த ஓர்மை மட்டுமல்ல; குழுமத்தின் உறுப்பினர்களைப் பிணைக்கும் அறிவு மற்றும் உணர்வு சார் இசைவினைப் பொறுத்தது. கூட்டுறவு, உடனிருப்பு மூலம் ஒரு சமூக அமைப்பைக் கட்டமைக்க, மக்களுக்குள் காதல் உள்ளிட்ட மென்மன உணர்வுகளுடன் இயங்க வேண்டிய தேவை உள்ளது. பாட்டாளி வர்க்கக் கொள்கை என்பது பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினரையும் உடன்வாழ் மனிதர்களின் தேவைகளையும் துயரங்களையும் உணர்ந்து அவற்றை ஆற்றும் திறன் மிக்கவர்களாக ஆக்கும் பயிற்சியைத் தருகிறது; சக மனிதர் குறித்து நுட்பமாகப் புரிந்து கொள்ளத் தூண்டுகிறது; கூட்டுச் சமூகத்தில் தனிமனிதர் வகிபாகம் குறித்து நுட்பத்துடன் புரிந்து கொள்ளக் கற்பிக்கிறது. இத்தகு 'மென் உணர்வுகள்' - உணர்வறிதல், கருணை, பரிவு, உரியன செய்தல் - அனைத்தின் மூலமும் ஒன்றுதான். அதுதான் காதல். இவையனைத்தும் காதலின் பன்முகக் கூறுகள். பாலுறவு சார்ந்த குறுகிய பொருளில் அல்ல; காதல் என்ற சொல்லின் விரிந்து பரந்த பொருளில் சொல்கிறேன். காதல் ஒன்றிணைப்பது; எனவே காதல் அமைப்பாக்கும் பண்பைத் தன்னுள் கொண்டுள்ளது.

... பாட்டாளி வர்க்கத்தின் காதல் இலக்கணம் என்ன? காலத்துக்குக் காலம் லட்சியக் காதல் மாறிவந்துள்ளதை நாம் ஏற்கனவே கண்டோம். ஒவ்வொரு வர்க்கமும் தமது நலனுக்கேற்ப காதல் சார்ந்த ஒழுக்க வரையறைகளை வகுத்துக் கொள்ள முனைகிறது. ... காதலின் தற்போதைய வடிவம் உடலும் உள்ளமும் கடும் சிக்கலான நிலையில் ஆழ்வதாக அமைகிறது... காதல் உணர்வு நட்பு, பேரெழுச்சி, தாய்மையின் மென்மை, மோகம், பொருத்தம், பரிவு, பாராட்டுதல், அறிமுகம் போன்ற பலவித உணர்வுச் சாயல்களைக் கொண்டிருக்கலாம். ...

நாம் காதலில் உள்ள எதிர்வுகளைப் பற்றிப் பேசுகிறோம்; 'சிறகுகள் விரிக்கும் விழைவின்பத்தின்' பல இழைகள் பின்னிப் பிணையும் சிக்கல்கள் பற்றிச் சொல்கிறோம். இதனைச் 'சிறகுகளற்ற விழைவுணர்வோடு' குழப்பிக் கொள்ளக் கூடாது. அத்தகைய நிலைப்பாட்டில் ஓர் ஆண் பல பெண்களுடன் அல்லது ஒரு பெண் பல ஆண்களுடன் பாலுறவு கொள்கிறார்கள். உள்ளார்ந்த உறவுகள் இல்லாமல் கொள்ளும் உறவுகள் கெடுவாய்ப்பாகவும் தீமை பயப்பனவாகவும் உருவெடுக்கக் கூடும்.

புதிய, கூட்டுச் சமூகத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, தோழமை மிக்க சூழலில் உருவாகும் உறவுகள் விழைவின்பத்திற்கு மதிப்பார்ந்த இடம் கிடைக்கும். அது உணர்வுபூர்வ அனுபவமாக மனித இருப்பின் மகிழ்ச்சியைப் பன்மடங்காகப் பெருக்கும். மாற்றங்கள் கொண்ட இத்தகு விழைவின்பம் எப்படி இருக்கும்? எத்தனை துணிச்சலாகக் கற்பனை செய்தாலும் இதற்கான பதில் புலப்படாது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி: புதிய மானுடத்தின் அறிவு, உணர்வுப் பிணைப்புகள் வலுப்பெற வலுப்பெற இன்றைக்கு நாம் புரிந்து கொண்டுள்ள காதல் என்ற சொல்லின் பொருளுக்கு அங்கு இடம் இருக்காது.

கண்மூடித்தனமான, அனைத்தையும் ஆக்கிரமிக்கும், அரித்துக் கொல்லும் ஆர்வங்கள் வலுவிழக்கும்; தம் இணையரைச் சொத்தாகக் கருதி 'என்றென்றைக்குமான' தளைகளில் மாட்டும் சுயநலம், ஆணின் மெத்தனம் மிக்க சுயதிருப்தி, பெண்ணின் தன்னலம் பேணல் இழப்பு ஆகியன மறையும். காதலின் மதிப்புமிக்க கூறுகளும் பண்புகளும் கூடும். இணையரின் ஆளுமையை மதித்தல், ஒருவருக்கொருவர் உணர்வறிவுடன் பழகுதல் ஆகியவை பயிலப்படும். ஆண் & பெண் தம் காதலை முத்தங்கள் அணைப்புகளில் மட்டுமின்றி, இருவரின் படைப்பாற்றல், செயலூக்கம் ஆகியவை மூலம் வெளிப்படுத்திக் கொள்ள முயல்வர். பாட்டாளி வர்க்கக் கொள்கை முன்வைக்கும் கடமை சமூக வாழ்வில் இருந்து விழைவின்பத்தை விரட்டுவது அல்ல; புதிய சமூக உருவாக்கத்திற்கேற்ப காதலைச் செதுக்குவதில் உள்ளது. பாலியல் உறவுகளைச் சிறப்பான தோழமை உடனிருப்பின் புதிய உளவியல் ஆற்றலின் புரிதலுடன் பயிற்றுவிப்பதில் தங்கியுள்ளது."

இந்த விரிவான மேற்கோள் விடுதலைக் காதல் குறித்த உரையாடலில் நம் மத்தியில் பீறிட்டு எழும் மனத்தடைகள், ஐயம், பொதுவாழ்வின் அக்கறைகளைக் குறைத்துவிடும் என்ற அச்சம், பெண்ணியம் பேசும் தனிவாழ்வு அரசியல் பற்றிய உரையாடல்களைத் தவிர்த்தல் ஆகிய பலவற்றுக்கு முகம் கொடுக்கும் முயற்சி.

வர்க்க அரசியலில் பெண்ணியச் சிந்தனைகளும், பெண்ணிய அரசியலில் வர்க்க நோக்கும் இல்லாமல் மானுடம் பேணும் கம்யூனிச அறம் தழைக்க வாய்ப்பில்லை. அதற்கு அமைப்புகளில் தம் பங்களிப்பை வழங்கி, தமக்கான களங்களுக்காகத் துவந்த போராட்டங்களை அயராமல் மேற்கொண்ட மார்க்சீய / சோசலிசப் பெண்ணியவாதிகள் நமது ஓர்மையில் ஆழமாகப் பதிய வேண்டும். பெண்கள் / பெண்ணியம் முன்வைக்கும் வாதங்களைச் செவிமடுக்கும் அரிய தோழமை வாய்க்க வேண்டும். பொது முரண்பாடுகள் பல இருக்க, நம்முடன் நிற்பவர்களிடம் காழ்ப்பும் கசப்பும் வளர்த்தல் நியாயமன்று. நாம் காணும் கனவு சோசலிச / கம்யூனிச உலகம் எனில், அதில் காதலுடன் இணைந்து செயல்படுவோம்!

-  அ.மங்கை

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.