வில்லியாகக் காட்டப்படுபவர் - பார்வதி உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு

பார்வதி- நன்றிம்மா, நான்கேட்டா என்ன வேனுன்னாலும் செய்வியா,

பார்வதி- செய்வேன் மா நீங்க இந்த விட்டு முதலாளி அம்மா நீங்க கேட்ட உயிர கூட குடுப்பேன்.

வில்லியாக காட்டப்படும்  பெண்- அப்ப உன் கண்ண கொடு....

நேராக சென்று சுவரில் மாட்டி இருந்த வாலை எடுத்து கண்களை குத்தப் போகிறாள்.....

பிறகு என்ன நடந்து இருக்கும் என தொடர்களுக்காக நம் கண்களைத் தாரை வார்த்திருக்கும் தொடர்களில் மூழ்கி முத்தெடுத்திருக்கும் நமக்கு சொல்ல வேண்டியது இல்லை....

heroines 600ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் செம்பருத்தி எனும் தொடரில் வரும் ஒரு காட்சியில் கதாநாயகியாக வரும் பெண்ணின் செயல் தான் இது. இது மட்டும் அல்ல 7 மணியின் இருந்து  10 மணி வரை தொடர்ச்சியாக எல்லா சேனல்களிலும் இதே குப்பைகள் தான். ஏற்கனவே நுகர்விலும், அடிமைத்தனத்திலும் அமிழ்ந்து இருக்கும் பெண்களை அவர்களின் எண்ணங்களை நம்பிக்கைகளைச் சொரிந்து விடுகிற வேலையை நன்றாக இந்தத் தொடர்கள் செய்கின்றன.

வீட்டு வேலை செய்து  உழைத்து பொருள் ஈட்டும் நம் உழைக்கும் பெண்களை மிக கேவலப் படுத்துகிறார்கள். இது போன்ற தொடர்களில் வேலை செய்தால் அதற்கான ஊதியம் கொடுக்கப் போகிறார்கள். இதில் உப்பு சக்கரை, விசுவாசம் என மோசமான அடிமை மனோபாவத்தை வளர்க்கும் அதிகார வர்க்கத்தை உசுப்பி விடும் வசனங்கள் அதிகம் உள்ளன. சகிக்கவில்லை. வீட்டை விட்டுக் கொஞ்ச காலமாகத்தான் பெண்கள்  வெளியே வர ஆரம்பித்து இருக்கிறார்கள். வரவேற்பு அறையிலேயே முடக்கத் தந்திரமான ஒரு தொடர் நடவடிக்கைதான் இந்தத் தொடர்கள்.

பெண்கள் சமூகத்தில், குடும்பத்தில் தான் ஏற்படுத்த முடியாத, இல்லாத அதிகாரத்தை இந்தத் தொடர்களின் வழியே வந்துவிட்டதாகத் தன்னையே நம்பவைத்துக் கொண்டு திருப்தியடைகிறார்கள். இன்னும் சில பெண்கள் ஒரு படி மேலே போய் தன் சுய வாழ்வில் அப்ளை செய்கிறார்கள். இந்தத் தொடர்களில் வரும் கதாநாயகிகள் நல்ல பெண்களாக வந்து நமை அழவைத்து போவார்கள். 

அதாவது நல்ல பெண் என்று எதை சொல்ல வருகிறார்கள் என்றால், நிச்சயமாக தாவணியோ, புடவையோ அணிய வேண்டும். நீளமான முடி இருக்க வேண்டும். கண்டிப்பாகச் சில கன்ன அறைகளை, உதைகளை யாரிடமாவது வாங்க வெண்டும். வேலைக்காரியாக, சாதுவாக, அப்பாவியாக மொத்தத்தில் பெண்களுக்கான நான்காக ஆண்கள் பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கிறார்களே, அந்த நான்கைக் கொண்ட பெண்ணாய் இருக்க வேண்டும்.

குறிப்பாக, நிறைய அழ வேண்டும், பேச வேண்டுமா, இல்லையா என அன்றன்றைக்கான டி ஆர் பி ஐ பார்த்து இயக்குனர் முடிவு செய்வார்.  பின்பு வில்லிகள் அவர்களும் பெண்களே. சத்தமாக பேச வேண்டும், நிறைய ஒப்பனை செய்ய வேண்டும், யாரையாவது கொடுமைப்படுத்த வேண்டும். கதாநாயகி காதல் செய்பவனைக் காதலிக்க வேண்டும். ஆனால் கதாநாயகன் யாரைக் காதலிப்பார் எனச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் ஒரே ஒரு விசயத்தில் மட்டும் வில்லிகளாகவும் கதாநாயகிகளாகவும் சித்தரிக்கும் கதாபாத்திரங்களில் மாற்றம் இருக்காது.

அதாவது அவர்கள் பார்வையில் பண்பாடு, கலாச்சாரம் தாண்டி நடந்து கொள்ள, பேச மாட்டார்கள். அதே போல தொடர்களில் வரும் பெண்களுக்கு பெரிய இலட்சியமோ, திட்டங்களோ ( நான் தொடர்களில் வரும் சதித்திட்டத்தைச் சொல்லவில்லை) கனவோ இருப்பதாய்க் காட்ட மாட்டார்கள். காட்டினால் ஆண்களுக்கு ஆபத்தாகுமே!  படிப்பு, வேலை, சாதனை என எந்த நல்ல  விசயங்களும் கதாநாயகிகளுக்காகவோ வில்லிகளுக்காகவோ இவர்கள் எழுதிய ஸ்கிரிப்ட்டில் இல்லை, இருக்கவும் கூடாது என நினைக்கிறார்கள் போலும். ஆனால் அவர்களுக்கும் கனவு இருக்கிறது அது திருமணம், குழந்தை, நான்கு சுவர் என்கிற அந்த குடும்ப வட்டம்.

மேலும் இந்தத் தொடரில் வரும் எல்லா ஆண்களும் பாவப்பட்ட அப்பாவிகள். எல்லாவற்றிற்கும் காரணம் பெண் தான் என்பது போலவே எல்லாத் தொடர்களும் இருப்பதைப் பார்க்க முடியும். மானமும், அறிவும் மனிதற்கு அழகு என பெரியார் சொன்னது போல அறிவுள்ள யாரும் இதைப் பார்க்க மாட்டார்கள். இந்தத் தொடர்களின் உச்ச காமெடியாக எனக்கு கிச்சு கிச்சு மூட்டியவை வில்லியோ, கதாநாயகியோ திருமணம் ஆனவுடன் நடுவகிடு எடுத்து குங்கும் வைத்து, புடவை அணிந்து ஆண்களின் ஆதிக்கத்திமிரை நன்றாய்ச் சொரிந்து விடுவார்கள்.

என்ன ஒரு மோசமான மன நிலை? இப்போது நான் சொன்னவைகள் எல்லாம் தொடர்களின் காட்சிகள் எனக் கடந்து போய் விட முடியாது. தினமும் ஸ்லோ பாய்சன் சாப்பிடுவது போன்றது இந்தத் தொடர்கள். அடிப்பது வன்முறை. ஆனால் தினமும் அப்பாவியாகக் காட்டப்படும் ஆண் ஒரு பெண்ணை அடித்துக் கொண்டே இருப்பார். நமக்கும் அது நியாயம் தான் என்கிற எண்ணத்தையே  அந்தப் பெண்ணின் கதாபாத்திரக் கட்டமைப்பை ஏற்படுத்தி இருப்பார்கள். “குடி போதை உடல் நலத்திற்கு கேடு” எனப் போடுவது போல அடிப்பது வன்முறை எனப் போட வேண்டும் என்கிற கோரிக்கையை நாம் காட்சி ஊடகங்களுக்கு வைக்க வேண்டும் காத்திரமாய்.

அதாவது அடிப்பதே வன்முறை. அதைத் தாண்டி ஒரு காட்சிக்கு அது அவசியம் எனில், அடிப்பது வன்முறை என போட வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்க வேண்டும். இந்த அடிகளை வன்முறை என நாம் நினைக்காமல் ரசித்துக் கடந்து போவதன் நீட்சிதான், நடுரோட்டில் பெண்ணை அடிப்பது, கொலை செய்வது, ஆசிட் அடிப்பது.

இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை. குடும்ப அமைப்பு முறையின் வழித்தோன்றலில்  தாய் வழிச் சமூகத்தை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு, தந்தை மையச் சமூகத்தை, குடும்பக் கட்டமைப்பை அவர்கள் வசதிக்கு ஏற்படுத்தி  அரியணையில் உட்கார்ந்து இருக்கும் ஆண்கள் தொடர்களில் திட்டமிட்டு உருவாக்க, நினைப்பது பெண்ணே குடும்பத்தை ஆள்கிறார் என.

நிதர்சனம் வேறு பெண்கள் கங்காணிகள், அடிமைகள் மட்டுமே. மேலும் கதாநாயகனை மட்டும் தான் கதாநாயகி காதலிக்க வேண்டுமா? அவள் ஒரு பெண்ணைக் காதலிப்பவர் போலவும், அல்லது திருநராக மாற நினைத்து அதற்கான தேடலில் செயலில் இருப்பவராகவோ ஏன் தொடர்கள் வரவில்லை? நம் நாட்டில் திருநர்கள் இல்லையா? ஓரினச்சேர்க்கையாளர்கள் இல்லையா? சாதனைப் பெண்கள் இல்லையா? அவர்கள் முற்போக்களர்களாக இல்லையா? குடும்பக் கட்டமைபை வளர்க்கவும் அதே நேரத்தில்  பெண்ணிற்கு மாற்றைக் கொடுக்கவும் கூடாது.

ஆண்கள் தான் இப்படித் தொடர்கள் இயக்கவும், தயாரிக்கவும் செய்கிறார்கள் என்றால் பெண்கள் எடுக்கும், தயாரிக்கும் தொடர்களின் காட்சிகளும் ஆண்களின் மறு பிம்பமாகவே இருக்கிறது. சன் சேனலில் வரும் ஒரு ‘வாணி ராணி’ என்கிற இரட்டை வேடத் தொடரில் அதில் அப்பாவியாய் ஒருவர் அறிவாய் ஒருவர். ஆனால் எல்லா மக்களுக்கும் அந்த அப்பாவிப் பெண் தான் பிடிக்கிறது. இது தான் நுண் அரசியல்.

அவரின் நிஜ வாழ்வில்  இதுபோல அப்பாவியான, அறிவில்லாத, சுயமறியாதை இல்லாத பெண்ணாய் அவர் இருக்க ஆசைப்படுவாரா? திரையில் காசுக்காகத் தான் காட்டும் பிம்பம் அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் தொடர்களில் வரும் அத்தனை ஆண்களும், பெண்களும் நிஜ வாழ்வில் இதேபோல வாழ்வார்களா? வாழத்தான் முடியுமா? அதே போல இவர்கள் இப்படியான குடும்ப, கலாச்சார, பண்பாட்டுக் கட்டமைப்புகளைக் கட்டிக்காக்கச் சொல்வது, ஃபாலோ செய்யச் சொல்வதும் உழைக்கும் மக்களைத்தான். அவர்களுக்கான வாழ்க்கை முறையாக நிஜத்தில் அது நிச்சயமாக இல்லை. பின்பு யார் ஏமாறுகிறோம் என்பதை யோசிக்க வேண்டும் நாம்.

மேலும் எல்லா சேனல்களும் சமீபகாலமாகக் காவியாகிவிட்ட தன்மையை நாம் கண் முன்னே பார்க்கிறோம் அந்தந்த சேனல்களின் லோகோக்கள் கோவில் உச்சியில் இருந்து வருவது போல காட்டப்பட்டு காவி நிறத்தில் மாறி இருக்கிறது. மிக நுணுக்கமாகக் கவனிக்க வேண்டிய அரசியல் மாற்றம் இது. இப்போது வரை எந்தப் படங்களும், தொடர்களும் பெண்களின் கண்கள் வழியாக அவர்களின் அக உலகை  சரியாகச் சொல்லவோ, காட்டப்படவோ இல்லை.

பெண் வாழ்வு, அவள் குறித்த பிம்பம், அவளின் பேச்சு எல்லாம் ஆண்கள் உருவாக்கி அவர்களின் உருவகமாகக் காட்டப்படுவதுதான்; அல்லது பெண் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படி இருந்தால் தான் நீங்கள் பிழைப்பீர்கள் என்கிற எச்சரிக்கையாகக்கூட இருக்கலாம். ஆனால் அதற்கும் வழி இல்லை இல்லை இந்த புணரிக் கொள்ளும் காவி தேசத்தில்...

Pin It