தமிழக அரசியல் பண்பாட்டுச் சூழலில் அறுபதுகளின் பின் பாதியில் இருந்து எண்பதுகள் வரை (1965-1980) நிலவிய காத்திரமான இயக்கங்களின் போக்குகள்-சிந்தனைகள் இவற்றின் பின்னணியில் தோன்றி வளர்ந்தவர் செ. நடேசன் அவர்கள்.

ஆரம்ப காலத்தில் நம் எல்லோரையும் போலத்திராவிட இயக்கத்தின் தாக்கத்தில் இருந்த நடேசனையும், கவிஞர் முத்துப் பொருநனையும் அவரது இல்லத்தில் சந்தித்தபோது ‘`திடீரென்று வந்து இவ்வளவு நாளாக நாங்கள் ஆசானாக ஏற்றுக் கொண்டிருக்கிற அறிஞர் அண்ணாவைப் புறக்கணித்துவிட்டு அந்தத் தாடிக்காரக் கிழவனைப் பின்பற்றச் சொல்லுகிறீர்களே’’ என்று நகைச்சுவையோடு குறிப்பிட்டார்.

சமூகஅரசியல் இன்னபிற சூழல்கள் அவரை மார்க்சியத்தின் பக்கம் அழைத்துவந்தது. இந்நாட்களில் எங்களுடன் கம்யூனிஸ்டுப் புரட்சியாளார்களின் ஒருங்கிணைப்புக் குழுவில் அல்லது மக்கள் யுத்தக் குழுவில் இயங்கிய தோழர் கருணாமனோகரன் எங்களோடு இணைகிறார்.

se nadesanகருணாமனோகரன் இயங்கிய மார்க்சிய லெனினிய அமைப்பின் பெயர் சரியாக எனக்கு இப்போது நினைவில் இல்லை.

எழுபதுகளில் வானம்பாடி இயக்கம் எல்லாவகையிலும் தமிழ்க் கவிதைளில் மாற்றங்களைக் கொண்டுவந்தபோது நாங்கள் (இலக்கியதீபன், முத்துப் பொருநன், பொன்-கண்ணன், நடேசன்) விவேகசித்தன் எனும் இதழைப் பெருந்துறையில் இருந்து நடத்தினோம்.

தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளான வெங்கட்சாமிநாதன், தருமுசிவராம் (பிரமிள்) போன்றவர்கள் பங்கெடுத்த அந்த இதழில் இலக்கியத்தில் உள்வட்டம், வெளிவட்டம், பரபக்க லோகாயதம் பற்றியெல்லாம் விரிவான அளவில் விவாதிக்கப்பட்டன. இந்தப் பணிகளிலெல்லாம் நடேசன் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டார்;.

மேகங்கள் எனும் அமைப்பினைத் தொடங்கி ‘பரணி” எனும் கவிதைத் தொகுதியினை வெளியிட்டார்; சேலம் தமிழ்நாடனின் (தமிழ்நாடன் இக்காலங்களில் எங்களோடு குடும்ப அளவில் நெருக்கமானவராக இருந்தார்;). முன்னுரையோடு வெளியான பரணி தொகுப்பு எல்லோருடைய கவனத்தையும் பெற்றது. கலையரசு எனும் பெயரில் நடேசன்

‘துப்பாக்கிகளை

ஆட்சிக் கட்டிலில்

அமர்த்தியபோதே

துளைக்கும்

உரிமைகளும்

தோட்டாக்களுக்கு

வழக்கப்பட்டு

விட்டன”

- என அந்தக் காலங்களின் உணர்வினைப் பதிவு செய்திருப்பார்.

எழுபதுகளின் இறுதிவரை கவிஞராய், படைப்பாளியாய்ச் செயல்பட்ட நடேசன் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியில் இணைந்து அந்த அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர், அகில இந்திய அரசு ஊழியர், ஆசிரியர், அமைப்பின் பொறுப்பாளர் எனப் பரிணமிக்கிறார் பொருளாதாரப் பயன்களுக்காகவே செயல்பட்டு வந்த ஆசிரியர் இயக்கத்தை அரசியல்படுத்தி அதுவும் இடதுசாரி அரசியல் சிந்தனையோடு செயல்பட வைத்தவர் நடேசன். இக்காலங்களில் ஆசிரியர் இயக்கப் பணிகளோடு கருணாமனோகரனின் அம்பேத்கர் நூல்களின் தமிழ்ப் பதிப்புக்களுக்கும் உதவி செய்து வந்தார்.

தமது பணிநிறைவுக்குப் பின்னர் நடேசன் அவர்களின் செயல்பாடு இந்துத்துவா எதிர்ப்பில் தடம் பதித்தது. சிவாஜியைத் தங்கள் தலைவன் என ஆர்.எஸ்.எஸ் நிறுவ முயன்றபோது, மகாராஷ்ட்டிர மாநில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் செயலாளராக இருந்த தோழர் கோவிந்த் பன்சாரே எழுதிய ‘சிவாஜி யார்’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நூலை ஆங்கிலம் வழித் தமிழில் ‘மாவீரன் சிவாஜி - காவித் தலைவனல்ல - காவியத் தலைவன்” எனும் பெயரில் அவரே வெளியிட்டார்.

பின்னர் 2014-ல் கருணாமனோகரன் காலமான நிலையில் அவரது நூல்களை ‘சாதி - வர்க்கம் - தேசியம் ஒரு பார்வை’ எனும் பெயரில் நாங்கள் தொகுத்து வெளியிட்டதில் நடேசனின் பங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

இதுதவிர ‘இடது” இதழின் ஆசிரியர் குழுவில், முதல் இதழில் இருந்து தமது இறுதிநாள்கள் வரை செயல்பட்டார். இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ் சங்கிகளை அம்பலப்படுத்தும் ((FRONTLINE, FRONTIER, CARAVAN) இதழ்களில் வெளியான கட்டுரைகளை இயல்பான மொழிநடையில் மொழியாக்கம் செய்து ‘இடது” இதழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்;.

எல்லோரையும் ஒருங்கிணைக்கும் (Inclusive Politics) அரசியல் பார்வைக்கு முன்னோடியான நடேசன் இரண்டு குறிப்பிடப்பட வேண்டிய நூல்களையும் மொழியாக்கம் செய்திருக்கிறார். அவை ­

நந்திதா ஹக்சாரின்

(1) காக்ஷ்மீர் தேசியத்தின் பன்முகங்கள்)

(2) GROVER FURR - KURUSECHEV LIED (ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்)

இந்த இரண்டு நூல்களும், எதிர் வெளியீடு மற்றும் பொன்னுலகம் பதிப்பகம் ஆகிய பதிப்பகங்களில் கிடைக்கும்.

காலங்கள் கடந்து சென்றாலும், நடேசனின் பணிகள் நிலைத்து நிற்கும்.

- ஓடை பொ.துரைஅரசன்

Pin It