உலக உழைக்கும் மகளிர் தினம், இந்தாண்டு இப்படி விடியுமென்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. கூட்டணிக் குழப்பங்கள்-தொகுதி ஒதுக்கீடுகளெனத் தேர்தலை முன்னிட்டுக் கட்சிகள் கடை விரித்திருந்த ஏல வியாபாரங்கள், அல்லது உள்ளே - வெளியே’ யார் யார் என்பதை விறுவிறுப்பாக்குகிற பிக்பாஸ்’ நிகழ்ச்சியாக, ஆவலைத் தூண்டிவிட்டு, அதற்குள் ஊடகங்கள் குளிர்காய்ந்து கொண்டிருந்த, தேர்தல் திருவிழாவின் ஒரு பொழுதாக மட்டுமே இருந்திருக்கவேண்டிய அந்தநாள், ரோசா லக்சம்பெர்க், கிளாரா செத்கின் போன்ற சோசலிசப் பெண் போராளிகளை நினைக்கவொட்டாமல், ஆரெம்மெஸ்’ என்கிற அறிவொளி ஒன்று அணைந்துபோனதாய், விடிகாலை 5 மணிக்கு என்னை எழுப்பியிருந்தது.
காலக் கணக்கனின் கணக்கு முடிப்புகளும், எதுவொன்றின் புதிய திறப்பிற்காய்க் காத்திருக்காமல், அதன்போக்கில் கணக்கெழுதிக் கொண்டேதான் இருக்கின்றன.
‘நெருநல் உளனொருவன் இன்றில்லை’ என்பதே இவ்வுலகின் பெருமை என்கிறார் அய்யன்! 26-02-2021 இல், தோழர் தா. பா. என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பெறும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தா. பாண்டியன் சென்னையில் தன் சிந்தனையை நிறுத்தியிருந்தார்.
கனத்த அறிவாளி; வாதங்களை எடுத்து வைப்பதில் மிகச் சிறந்த கருத்தாளி! அவர், பத்தாண்டுகளுக்கு முன், மன்னார்குடிக் கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டத்தில், நான் பேசிவிட்டு மேடையிலிருந்து கீழிறங்குகையில், நெஞ்சார என்னை அணைத்துத் தழுவியதை, என் மனசின் திசுக்கள் எனக்குள் இன்னமும் அழுந்தப் பேசிக்கொண்டேயிருக்கின்றன.
அவர் மறைந்து சரியாகப் பத்தாவது நாளில், சிவகங்கை மாவட்டம் அலவாக்கோட்டையில் 1938 ஏப்ரல் 1 ‘முட்டாள்தின’த்தில் பிறந்த’ அறிவியல் தமிழறிஞர்’ தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் முனைவர் இராம. சுந்தரம், 08-03-2021இல், உலக உழைக்கும் மகளிர் தினம் விடிகிற பொழுதில், தஞ்சையில் காலமாகியிருக்கிறார்.
இவரின், பணி நிறைவிற்குப்பின், தஞ்சையில் சந்திக்கிறபோதும், மதுரையில் நடைபெறும் எந்தக் கூட்டத்தில் என்னைச் சந்தித்தாலும், என் தோளில் கைத்தடியாய்க் கைவைத்து என்னை ஊன்றி, என்னோடு பலதையும் பகிர்ந்தபடி நடந்துவந்த, அவரின் கையழுத்தத்தின் மனத்தடம் இன்னும் என் நினைவைவிட்டு அகலாதிருக்கிறது.
அவர் அன்பு காட்டுகிற எல்லோருக்குமே, இந்த அனுபவம் இருந்திருக்கக்கூடும்! தஞ்சையில் செல்லையா நகர், மதுரையில் தவிட்டுச்சந்தையென்று அவருக்கு இரண்டு பக்கமும் வீடுகள்! அலவாக்கோட்டை வீட்டிற்கும் சென்றிருக்கிறேன்; அது அவரின் மனசைப்போல விசாலமானது!
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், அவர் பி.ஏ. ஹானர்ஸ் (எம்.ஏ.க்கு நிகரானது) படிக்கையில், என் செண்பகத்தின் வகுப்புத் தோழர்; தமிழ்த் தேசிய முன்னணித் தலைவர் அய்யா நெடுமாறன் அவர்களின் வகுப்புத் தோழரும்கூட! மூவருமே, அப்பொழுது,
தமிழாய்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் புடைப்புக்களாயிருந்தனர். பிற்பாடு, காலம் அவர்கள் மூவரையுமே வெவ்வேறு திசைகளில் பயணப்பட வைத்திருந்தது.
நெடுமாறன் அய்யா, இந்தியத் தேசியத்தில் நம்பிக்கை கொண்டிருந்த பெருந்தலைவர் காமராசரின் நம்பிக்கைக்குரிய அரசியல் தொண்டரானார்; பின், தமிழர் தலைவர், தம்பி - பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தமிழ்த் தேசியத் தலைவராய்த் தன்னைத் தகவமைத்துக் கொண்டிருந்தவர்; என் செண்பகம் பெரியாரை வழிமொழிந்து கொண்டிருந்த, ஒரு பெண்ணுரிமை பேசுகின்ற ஆசிரியரானார்; ஆரெம்மெஸ் ஜீவாவின் திசை நோக்கிப் பயணப்பட்டு, முழுமையான ஆசிரியர் சங்கப் பாதுகாவலராய் விளங்கிய ஒரு இடதுசாரி மொழியியல் அறிஞர் அறிவியல் தமிழ்த் துறைப் பேராசிரியர்! என் செண்பகத்தின் முகவரி சொல்லித்தான் அவர்கள் இருவருமே எனக்கு அறிமுகம்! குலுக்கிப் போட்ட சீட்டுக்கட்டின் இந்த மூன்று சீட்டுகளும், வெவ்வேறு கைகளுக்குள் மாறிமாறி உலா வந்தபோதும், மூவரும் ஒருவர் மற்றவரை மதித்ததென்பது, நெருங்கியவர்கள் மட்டுமே உணர்ந்திருக்கக்கூடிய செய்தி! என் மதிப்பிலுமே, இவர்கள் மூவருமே சமூக அர்ப்பணிப்பிலும் என் மீதுள்ள நேசத்திலும் உயர்ந்துதானிருந்தனர்.
1980 இல் துணைவேந்தர் முனைவர்
வ. சுப. மாணிக்கம் அவர்களின் நிருவாக நடைமுறையை எதிர்த்து, மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர் பேரவை (MUFA) நடத்திய ஒரு போராட்டத்தில், நிருவாகக் கட்டிட வாயில் கூட்டத்தில், எங்கள் போராட்டத்தை ஊக்கப்படுத்த, எங்களிடம் பேசுவ தற்கு, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திலிருந்து - அங்கும் அப்பொழுது தங்களுக்காய்ப் போராடிக் கொண்டிருந்த ஆரெம்மெஸ்’ வந்திருந்தது நினைவிருக்கிறது. இந்தப் பெயர், அவர் ஓர் ஆசிரியர் சங்கப் போராளி என்பதாக மட்டுமே அப்பொழுது எனக்குள் பதிந்திருந்தது.
மதுரை தியாகராசர் கல்லூரியில் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றியவர் அவர் என்பது, போராட்டக் களத்தில் சில பேராசிரியர்கள் பேசிக்கொண்டிருந்ததிலிருந்து அப்பொழுது எனக்குத் தெரிய வந்தது.
பழகுவதற்கு எளியவராய்த் தெரிந்தார். உருவேறாத ஒல்லியான உடற்தேகம்; அதற்கேற்ற உயரம்; வசீகர முகவாகு-இதுதான் அவராக எனக்குள் பதிந்திருந்தார். ஆயினும், அவருடன் எனக்குப் பெரிய பழக்கமில்லை.
ஆயின் அந்தப் பெயர், எனக்குள் உருவாக்கியிருந்த ‘உரி மைக்குரல்’ படிமம், அவரின் இறுதிவரையிலும் எனக்குள் குறைந்ததாய்த் தெரியவில்லை.
982 ஜூனில், மதுரை காமராசர் பல்கலையிலிருந்து நான் தஞ்சைக்குப் பணியிடம் மாறுகிற பொழு தில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வைத்துத்தான், ஆரெம்மெஸ்’ஸைச் சக ஊழியராய்ச் சந்திக்கிறேன்.
எனக்கு ஆறேழு மாதங்களுக்கு முன்தான், அவரும் அங்குவந்து சேர்ந்திருந்தார்-தமிழ் வளர்ச்சித் திட்ட இயக்குநர்கள் இருவரில் ஒருவராக! இன்னொருவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் திருக்குறள் இருக்கைப் பேராசிரியர் முனைவர் முருகரத்தினம்! ’ஆரெம்மெஸ்’ உடனான பழக்கத்தின் போக்கில், அவரிடமிருந்தும், பணிபுரிவோரிடமிருந்தும், இருவரின் பகிர்வுகளிலிருந்தும் பல தகவல்கள் எங்களுக்குள் பரிமாறிக் கொள்ளப்பட்டிருந்தன.
பூனாவிலுள்ள டெக்கான் கல்லூரியின் மொழியியல் துறையில் ஆய்வாளராகக் கொஞ்சகாலம் பணிபுரிந்திருந்ததும், அங்கிருந்து தியாகராசர் கல்லூரிக்கு வந்ததும், அதன்பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இடம் மாறியதென்பதும், அங்கிருந்து வார்ஸா பல்கலைக்கழகத்திற்குத் தமிழும் மலையாளமும் பயிற்றுவிக்க, ஏழு ஆண்டுகள் (1972-1979) போலந்து சென்று, போலிஷ் மொழியிலும் தோய்ந்த அறிஞராகத் திரும்பியிருந்தார் என்பதும், போலிஷ் மொழியில் திருக்குறள், திருவெம்பாவை, திருப்பாவை, திருமுருகாற்றுப்படை ஆகியவற்றை மொழிபெயர்க்க, அம்மொழியறிஞர்களுடன் இவர் இணைந்து பணியாற்றியுள்ளதும் எனக்குத் தெரியவந்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியிலிருந்தபோது, 1980 இல்-முதலில் நான் குறிப்பிட்டிருக்கிறதைப்போல-அண்ணாமலைப் பல்கலைக்கழக நிருவாகத்திற்கு எதிரான ஆசிரியர் போராட்டத்தில் - மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர் போராட்டத்தில் கலந்துகொண்டு எங்களை ஊக்குவித்துச் சென்றதன்பின் - இவர் அன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழக நிருவாகத்தால் முரண்பாடுகள் முற்றிப் பழிவாங்கப்பட்டிருந்தார் என்பது தஞ்சையில் அவருடன் பேசிக்கொண்டிருக்கையில்தான் உணர்வுபூர்வமாகத் தெரியவந்தது.
பின், முனைவர் வ.அய். சுப்பிரமணியன் அவர்கள் 1981 செப்டம்பரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பணியேற்றபோது - அவரின்கீழ் 1964-1966 களில், கேரளப் பல்கலைக்கழகத்தில் ‘பத்துப்பாட்டு வண்ணனை இலக்கணம்’(A Descriptive Grammer of Pattuppaattu) எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த இவரை - தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலம் அறிவியல், மருத்துவம், பொறியியல் துறைகளில் தமிழைப் பாடமொழியாகப் பயிற்றுவிப்பதற்குத் தேவையான மூலநூல்களைத் தமிழிலேயே கொண்டுவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக - நியமித்து, அவரைத் தனதாட்கொண்டிருந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக அன்றைய நிருவாகம், துணைவேந்தர் முனைவர் வ.அய். சுப்பிரமணியத்தைச் சந்தித்து, ஆரெம்மெஸ்’ பற்றி, ‘அவர் தொழிற்சங்கவாதிஞ் ஆபத்தானவர்’ என்று அறிவுரை கூறியபொழுது, ‘அவன் என் மாணவன்ஞ் அவனைப் பற்றி எனக்குத் தெரியும்’ என்றுகூறி, எம்.ஏ.எம். ராமசாமியின் குரலைப் புறந்தள்ளித் தமிழ்ப் பல்கலையில் அவரைப் பணியிலமர்த்தி, பெரும் பொறுப்பைக் கொடுத்து அழகுபார்த்தவர் முனைவர் வ.அய்.சு.!
இப்படியான ஆசிரியர்கள் இப்பொழுது அருகிப் போய்விட்டனர் என்பதையும் இங்குச் சொல்ல வேண்டும். அதிகாரத்தின் தொண்டரடிப்பொடிகளாய்க் கூனிக்குறுகிப் போயிருக்கிற இற்றைத் துணைவேந்தர்கள் மத்தியில், வ.அய்.சு.வைச் சுட்டுவது என்பது, சுயமரியாதையின் பிம்பமாய், அறிவின் துலக்கமாய் அவரிருந்தார் என்பதைக் கோடிட்டுக்காட்டுவதற்குத்தான்!
அவரின் மாணவர் ஆரெம்மெஸ்’என்பதும், அந்த வ.அய்.சு.வின் கீழ் நானும் பணியாற்றியிருக்கிறேன் என்பதும்தான், எப்பொழுதைக்குமான என் வாழ்க்கை எனக்குரைத்த நேர்மையின் உரைகல்லாக இப்பொழுதும் கருதுகிறேன்.
சொல்லுவதற்கு இது இப்பொழுது எளிதானதாயிருக்கலாம்-சாதாரணச் செய்தியாய்க்கூட கடந்து போய்விடக்கூடும். ஆனால் எண்பதின் தொடக்கத்தில், அன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தராயிருந்த எம்.ஏ.எம் மிற்குக் கேளாச் செவியராய் இருப்பதென்பது அத்தனைச் சாதாரணச் செய்தி இல்லை என்பது அந்தக் காலத்து ஆட்களைக் கேட்டால் மட்டுமே புரிந்துகொள்ள முடியக்கூடியது.
ஆசிரியர் சங்கங்களும், அதன் பிரதிநிதிகளும்கூட, அத்தனை வீச்சாகத் துடிப்புடன், சங்க அறத்துடன் அப்பொழுது செயல்பட்டிருந்த நேரமும்கூட அது! பிற்பாடு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தன்னை அழைத்து, பெரும் தமிழ்ப் பொறுப்பு வழங்கி, தனக்கு முகவரி வழங்கியிருந்த, தன் பேராசிரியத் துணைவேந்தரையே எதிர்த்து, அகராதித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் து. மூர்த்தியைப் பணியிலிருந்து வெளியேற்றியதற்கான போராட்டத்தில், உறுதியாக, முனைவர் து. மூர்த்தியின் பின் நின்றவர் ‘ஆரெம்மெஸ்’! முனைவர் வ.அய்.சு.வும் கேரளத்திலிருந்து வந்தவர் என்பதால் மற்றவர் உரிமைகளை மதிக்கிற தன்மையும் அவரிடமுண்டு என்பதை நெருங்கிப் பழகியவர்கள் மட்டுமே நன்கு அறியமுடியும்.
என்னைப் பற்றியும் வ.அய்.சு.விடம், ‘நான் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று போட்டுக் கொடுத்த பேராசிரியரிடம், அவர் சொன்னது, நீங்க ஒங்க வேலையெப் பாருங்கஞ் அவனுக்குக் கொஞ்சம் திமிர் உண்டுஞ் ஆனா கம்யூனிஸ்ட்காரன்தான் ஏமாத்தாம ஒழுங்கா வேலையெச் செய்வான்’ என்பது!
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் - அலுவலர்கள் நடத்திய இரண்டு மிகப் பெரிய போராட்டங்களில் - ஒன்று (20 ஜூலை1990 முதல் 5 ஆகஸ்ட் 1990 வரை) நாற்பத்தி ஏழு நாட்கள் [முனைவர் சி.பாலசுப்பிரமணியன் (1989-1992) அப்போது துணைவேந்தர்], இன்னொன்று, எழுபத்தி ஏழு நாட்கள் [முனைவர் கதிர். மகாதேவன் (1999-2001) அப்பொழுது துணைவேந்தர்] நடந்தன!-
இரண்டாவது போராட்டத்தில், அவர் பல்கலைக்கழகத்திலிருந்து பணிநிறைவு பெற்றிருந்த நிலையிலும் கூட, இரண்டு போராட்டங்களிலும் போராட்டக்காரர்களுக்கு வழிகாட்டியாயிருந்து, மற்றைய ஆசிரியர் சங்கப் போராளிகளை எங்களுக்கு அறிமுகப்படுத்தி, எங்களையெல்லாம் (த.ப.க. ஆசிரியர் சங்கம்- TUTA) வழிநடத்தியவர்.
ஆசிரியர் சங்கப் போராட்டக் காலத்தின் அனுபவங்களைக் கொண்டு, தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க இதழான ‘செய்திக் கதி’ரில் நான் தொடராக எழுதிவந்த ‘கூத்தாடிக் கொம்பன்’ கட்டுரைகளைச் ‘சங்க’த் தமிழ் இலக்கியம் என்று நூலாக வெளியிடுகையில், 2005-06 காலத்தில், அதற்கு, அணிந்துரை எழுதித் தந்தவர் ஆரெம்மெஸ்’.
அதில், தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க முதற்போராட்ட வரலாற்றின் பதிவுகள் பலதும் பேசப்பட்டிருப்பதால், இங்கு அது கூடுதல் இடத்தை நிரப்பிக் கொள்கிற வேலையாக மட்டுமே நின்றுவிடக்கூடும்!
யாரிடமும் நேரிடையாக அவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிற இயல்பு அவருக்கிருந்ததில்லை; அமைதியாகக் கடந்து சென்றுவிடுகிற இயல்பும், உரிமைக்குக் குரல் கொடுக்கின்ற குணமும், அவருக்கு நியதியாயிருந்தவை. குரலற்றவர்களின் குரலுக்கு, ஒரு இனிமையான, போராட்ட இசையைத் தந்துகொண்டேயிருந்தன அவரின் போராட்டக் காலங்களின் களப் பங்களிப்புகள்.
அத்தகையக் குணம் அவருக்கு இயல்பாயிருந்தது என்பதை அவருடன் ஒரு சாலை ஆசிரியராய், அவர் பணி நிறைவு பெறும் 1998 வரையும், நான் அவருடன் பணிபுரிந்த காலத்தில், அவரின் அருகிலிருந்து உணர்ந்து கொண்டவன். போராட்டக் காலத்தில் நாங்கள் திட்டமிடும் படைவீடுகளில் ஒன்றாய் அவரின் செல்லையா நகர் வீடும் அமைந்திருந்தது.
சொல்லப்போனால், போராட்டக்காரர்களின் தொழுகைக் கூடமாயிருந்தது அது! அந்தப் பகுதியைச் சுற்றிலும் பல்கலைக்கழகப் பணியாளர்களே இருந்ததால், நிருவாகத்திற்குப் போட்டுக் கொடுப்பவர்களுக்கு, அவர் வீட்டைக் கண்காணிப்பதற்கு, அவர்களுக்கு அது அத்தனை எளிதாயுமிருந்தது.
அவரும் அதைப்பற்றியெல்லாம் அதிகம் கவலைப்பட்டவராயும் தெரியவில்லை. அவர், நிருவாகத்தின் நேரிடைக் கண்காணிப்பிற்கும், சந்தேகத்திற்கும் பணிக்கால இறுதிவரையும் உள்ளாகியே இருந்தார். அவரின் சுபாவம் அப்படியாயிருந்தது. மூத்த பேராசிரியராயிருந்ததால், தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வந்த துணை வேந்தர்கள் எல்லோருமே, மூத்தோராகவோ-இளையோராகவோ அவருக்குத் தெரிந்தவர்களாகவே இருந்தபோதும், எப்பொழுதும் நியாயத்தின் பக்கமே நிற்பவராயிருந்தார்.
அதனாலேயே, மூத்த பேராசிரியராய் இருந்தபோதும், நிருவாகம் எப்பொழுதுமே அச்சத்துடன் இவரைப் பார்க்கிற பார்வையை இவர் இயல்பாகவே கொண்டிருந்தார். பேராசிரியர் முனைவர் அகத்தியலிங்கம் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராயிருந்த காலத்தில் (டிசம்பர்1986-நவம்பர்1989), தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தமிழ்த் துறைத் தலைவரானார்.
பின் வளர்தமிழ்ப் புலத் தலைவரானார்; ஆட்சிக் குழு உறுப்பினரானார். ஒருமுறை 1996 என்று நினைக்கிறேன், தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் பட்டியலில் இவருடைய பெயரும் இடம்பெற்றிருந்து, சில தனிப்பட்ட காரணத்தால், அரசுக்குப் போட்டுக் கொடுக்கப்பட்டு, இவர் நிராகரிக்கப்பட்டுமிருந்தார்.
இவருடனான பழக்கத்தின் காரணமாகவே, திராவிட முன்னேற்றக் கழக விவசாயப் பிரிவின் அன்றைய துணைத் தலைவராயிருந்த, பிற்காலத்தில் மத்திய இணை நிதியமைச்சராயிருந்த திரு. பழனி மாணிக்கம், அன்றைய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவரும், இந்நாள் தமிழ்த் தேசப் பேரியக்கத் தலைவரான திரு. மணியரசன், பேராயக் கட்சியைச் சேர்ந்த தஞ்சை இராமமூர்த்தி, கரந்தைக் கல்லூரி முதல்வர் விருத்தாசலம், தமிழறிஞர் பொ. வேலுச்சாமி ஆகியோர் தமிழ்ப் பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவருக்கும் நெருக்கமாயிருந்தனர் என்று கூறினும் குற்றம் ஏதுமில்லை.
இன்னார் இவர், அன்னார் அவர் என்று எந்த விலக்குதலுமின்றி, எல்லோரிடமும் சம உரிமையுடன் பழகுகிற மனங்கொண்டவர். எந்த பந்தாக்களையும் எதிர்பார்க்காத மிகவும் எளிமையானவர்.
வாசிப்பை இறுதிவரையும் தனக்கு அனுசரணையாகக் கொண்டவர். அவரின், தாமஸ் ஆர். டிராட்மனின் (Thomas R. Trautman) மொழிபெயர்ப்பு நூலான, ‘மொழிகளும் தேசியங்களும் - காலனியாதிக்கச் சென்னையின் திராவிடச் சான்று’ என்பது ‘திராவிடச் சான்று’ எனும் பெயரில் வெளிவந்திருப்பது தமிழ் மொழிபெயர்ப்பில் மிக முக்கியமான நூலாகும்.
இன்றும் இவரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கக்கூடியது. இதுபோக, சாகித்ய அகாதமி சார்பில், தமிழ் ஆளுமை வரிசையில், இவரெழுதியிருக்கிற பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பற்றிய நூலும் கலாநிதி க. கைலாசபதி பற்றிய நூலும் குறிப்பிடத்தகுந்தவை.
பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தனார் மாணவர் என்பதும், முனைவர் வ.அய்.சு. மாணவர் என்பதும் இவரின் ஆராய்ச்சி அறிவைக் கட்டமைத்திருந்தன என்று கூறினாலும் அது மிகையில்லை.
இவருக்கும், மொழியியல் துறைப் பேராசிரியராயிருந்த முனைவர் அரங்கனுக்கும் இருந்த- இவருக்கு அவருமாய், அவருக்கு இவருமான- நட்புறவு எண்ணிஎண்ணி எவரையும் வியக்க வைப்பது.
தமிழ்ப் பல்கலைக்கழகப் பணிக்காலத்தின்போது, இருவரையும் தனித்துக் காண்பதென்பது, அவரவர்களின் வீடுகளில் மட்டுமாகத்தான் இருக்கும். மொழியியல் பேராசிரியராய், பழகுவதற்குக் கூச்சப்படும் பேராசிரியர் அரங்கனின் கூச்ச சுபாவத்தின் கூர்முனையைக் கிள்ளியெறிந்து, சமூக உறுப்பினர்களிடம், அவரைப்போலவே சகஜமாகப் பழகும் வைத்திய மூலிகையாயிருந்தவர் ஆரெம்மெஸ்’!
ஆரெம்மெஸ், அவரைத் தனக்கான பாதுகாப்பாய் நினைத்திருக்க வேண்டும் அல்லது பேராசிரியர் அரங்கன், அவரைத் தனக்கான பாதுகாப்பாய்க் கருதியிருக்க வேண்டும்.
ஏனெனில் அந்த உறவின் அசைபோடும் கால நீட்சி 1959 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்தே தொடங்குகிறது. 63 ஆண்டுக்கால அறாத் தொடர் நட்பு! எந்தப் பிரச்சனையின் முடிச்சையும் வலிக் காமல் அவிழ்க்கும் பேராசிரியர் இராம. சுந்தரத்தின் தீர்க்கம், இவருக்கும், இவரின் ‘சாம்ஸ்கி’யின் மாற்றிலக்கணமுறை மேதமையின் மேலிருந்த ஈர்ப்பு, இராம. சுந்தரம் அவர்களுக்கும், எழுதப்பட்டிருக்காத ஒரு மரியாதையை ஒவ்வொருவருவருக்குள்ளும் ஏற்றியிருந்திருக்க வேண்டும்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் பக்கத்துப் பக்கத்துத் துறை அறைகள்; செல்லையா நகரிலும் பக்கத்துப் பக்கத்து வீடுகள்! இரட்டையர்’ என்பது, தமிழ்ப் பல்கலைக்கழகத்தவர் அவர்களுக்கு வைத்திருந்த ஒரு செல்லப் பெயர்!
ஆசிரியர் போராட்டங்களில் தன்னைக் கரைத்துக் கொண்டு, தமிழகச் சூழலில், தமிழ்ப் பல்கலைக்கழகப் போராட்ட முகவரிகளில் விலக்கிவிட முடியாத ஒருவராய் அவர் விளங்கியபோதும், இத்தனைப் போராட்டங்களுக்கும் மத்தியில், அவரின் அயரா உழைப்பின் காரணமாக, அறிவியல், மருத்துவம், பொறியியல் துறைகளில் துறையோய வல்லவர்கள் பலரைக் கண்டறிந்து, அவர்களைத் தொடர்பு கொண்டு - தொடர்ந்து அணுகி - பொறியியலில் 13 நூற்களும் மருத்துவத்தில் 14 நூற்களும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வெளிக்கொணரப் பட்டிருக்கின்றன.
ஆயின் ஆட்சியாளர்களின் அசிரத்தை காரணமாகவும், பின்வந்த துணைவேந்தர்களுக்கு இப் பணியின் முக்கியத்துவம் புரியாத காரணத்தாலும், பல்கலைக்கழகத்தை ஓட்டினால்போதும் என்று கருதியதினாலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மருத்துவம், பொறியியல் வகுப்புக்கள் தமிழில் உருவாக முயற்சிக் காததாலும், துணைவேந்தர் வ.அய்.சு., ஆரெம்மெஸ் ஆகிய இருவரின் திட்டமிடல் உழைப்பால், பல்கலைக்கழகம் முன்னுரிமை கொடுத்து உருவாக்கிய பணி அப்படியே வெறும் நூல்களாக மட்டுமே நின்றுவிட்டது என்பது குறித்துவைக்கப்பட வேண்டிய ஒரு சோகம்!
அந்தப் படிப்புகள் உருப் பெற்றிருந்தால் முனைவர் இராம. சுந்தரம் அவர்கள் இன்னுமொரு கூடுதல் உயரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார். தமிழுக்கான அவரின் மிக முக்கியமான பணியாக அது நிலைபெற்றிருக்கும்!
இதுபோக ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான, அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கலைச் சொற்கள் அவர் முயற்சியால் உருவாக்கப்பட்டு, தரப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின் றன. தமிழ் பேசுகிற காலம் வரையிலும், இந்த முயற்சிகளும் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கும்!
1987 இல் இரண்டாம் துணைவேந்தர் பேராசிரியர் அகத்தியலிங்கம், அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை என்பதாய்த் துறையை உருவாக்கி, அதன் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் முனைவர் இராம. சுந்தரம் அவர்களை நியமித்து, அத்துடன் அனைத்திந்திய தமிழ் அறிவியல் கழகம் ஒன்றைத் தொடங்கி, அதன் செயலாக்கத்தையும் முனைவர் இராம. சுந்தரத்திடம் ஒப்படைத்திருந்தார்.
இது பேராசிரியர் அகத்தியலிங்கம் அவர்களின் இயல்பு - அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் ஆரம்பித்ததுதான் அனைத்திந்தியத் தமிழ் மொழியியற் கழகம்; தஞ்சையில் முனைவர் து. சக்திவேலிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு, அவரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் அனைத்திந்தியத் தமிழ் நாட்டுப்புறவியற் கழகம்’! என்னிடமேகூட, ‘அனைத்திந்தியத் தமிழ் நாடகவியற் கழகம்’ ஒன்றை உருவாக்கக் கேட்டுக் கொண்டிருந்தார்.
சில காரணங்களால் அது நிகழாமலேயே போனது. 1989 இல் தமிழ்ப் பல்கலையில் நிகழ்ந்த அனைத்திந்தியத் தமிழ் அறிவியற் கழக மாநாட்டில், நான் நிகழ்த்திய ‘ஸ்பார்டகஸ்’ நாடகம் எனக்கு அந்த அனுபவத்தைத் தந்திருந்தது. அந்தக் கதை ருசிகரமானது. ஆனால் இங்குத் தேவையில்லாதது.
ஆரம்பித்திருந்த ‘அனைத்திந்தியக் கழகங்களின் முகவரிகள் இப்பொழுது மாறியிருந்தபோதும், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம் மட்டுமே, அவர் பணிநிறைவு பெற்றபின்னும், அத்துறையால், ஆரெம்மெஸ்’ உதவியுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதன் தலைவர், இதுவரையும் அவர்தான்! இதுவரையும் 24 கருத்தரங்குகளைத் தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடத்தி, அதில் பெறப்பட்ட கட்டுரைகளைக் கொண்டு, ‘வளர்தமிழில் அறிவியல்’ எனும் பெயரில் முப்பதற்கும் மேற்பட்ட நூல்களைக் கொணர்ந்திருக்கிறார். இதுவும், அலவாக்கோட்டை ‘ஆரெம்மெஸ்’ஐ, அனைத்திந்திய அளவில் தமிழில் அடையாளப்படுத்துகின்ற ஒரு பெரும் பணியாகும்.
நிஜநாடக இயக்கத்தின் சார்பில், அவரின் அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழக மாநாடுகளில், ‘ஸ்பார்டகஸ்’ மற்றும் ‘இருள் யுகம்’ ஆகிய இரு நாடகங்களைத் தஞ்சையில் நிகழ்த்தியிருக்கிறேன்.
இது, நிஜநாடக இயக்கத்திற்கு ‘ஆரெம்மெஸ்’ என்கிற அறிவியல் தமிழறிஞர் காட்டியிருக்கிற நம்பிக்கைக்குரிய உதவியாகும்!
இந்த அறிவுத் தேடல்தான் பல்கலைக்கழகத்துப் பேராசிரிய அறிஞர்களைக் கூட்டி, ஓர் அறிவாயுதக் குழு’ ஒன்றைக் குடியிருப்பு வளாகத்தில் உருவாக்கியதுமாகும். இதற்கும் பல்கலைக்கழகத்திற் கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
திங்கள்தோறும் இரண்டு நாட்களில் அவரவர் துறை சார்ந்த புதிய நூல்களை மதிப்பீடு செய்வதும், புதிய முயற்சிகளை அடையாளங்கண்டு பேசுவதுமாகும். பல்துறை அறிவைப் பெறுகிற ஓர் சிற்றரங்கமாயிருந்தது அது! பெரும்பாலும் இது அவர் வீட்டின் வெளிப்புறத்தில் மாலையில் நடக்கக்கூடியதாயிருக்கும்.
இதில் பேராசிரியர்கள், முனைவர் கி. அரங்கன், முனைவர் சுப்பாராயலு, முனைவர் சு. இராசாராம், திரு இராமானுஜம், முனைவர் மாதையன், நான் ஆகியோர் இருந்தது நினைவிலிருக்கிறது.
இன்னும் சிலரும் இருந்திருக்கக்கூடும். இதுவும் அவரின் முன்னெடுப்பில் நிகழ்ந்த மிக முக்கியமான பணியாகும். இதற்கான வாய்ப்புகள் இப்பொழுதுள்ள பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் இருக்கின்றனவா என்பதே தெரியவில்லை.
இருக்கட்டும்! மதுரையில் அவர் இல்லத்திற்கு எப்போது சென்றாலும், அவரின் விருந்தோம்பலில் நம்மை மகிழ்ச்சிப்படுத்துபவை, செட்டிநாட்டு முறுக்கும் தட்டையும்! இப்பொழுதும் முறுக்கு, தட்டைகள் வாங்கிச் சாப்பிடும்பொழுது, அவருடன் கலந்துபேசிக் கொண்டிருக்கிற நினைவுகள் வந்துவந்து போகின்றன. வாழ்க அவரின் புகழ்!
- மு.இராமசுவாமி