தொன்மையையும், விழுமியங்களையும் உரத்து முழங்கிய குரல் ஓய்ந்துவிட்டது. ஆசீவகம் குறித்து அறிவுறுத்திய அண்ணல் மறைந்தார்.

கருத்தியல் தளத்தில் மட்டுமல்லாமல், செயற்களத்திலும் காத்திரமான பங்களிப்பு வழங்கியவர் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள்.

அதன் காரணமாகவே குறிவைத்து அவர் மீது பொய் வழக்குப் புனைந்து சிறையில் அடைத்தது அதிகார வர்க்கம். அதிலிருந்து மீள்வதற்கு அவர் பட்டபாடு தாளம்படுமோ, தறிபடுமோ என்றாகி விட்டது.prof nedunchezhiyanகர்நாடக வெஞ்சிறையில் அவர் வாடிக் கொண்டிருந்த பொழுது, அவர் மீது புனையப்பட்ட பொய் வழக்கில் அவருக்கு ஆதரவாக வாதிடுவதற்காக மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பியூசிஎல்) அனைத்திந்தியத் தலைவராக அப்பொழுதிருந்த மூத்த வழக்கறிஞர் கண்ணபிரான் அவர்களை நான் தொடர்பு கொண்டேன். எவ்விதக் கட்டணமும் வாங்காமல் உயர்நீதி மன்றத்தில் வாதிட அவரும் முன்வந்தார். ஆனால், அவர் கேட்ட வழக்கு விவரங்களை உரிய காலத்தில் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும், தன் மீது புனையப்பட்ட பொய் வழக்கினைத் தகர்த்தெறிந்து, குகையிலிருந்து வெளியேறும் சிறுத்தையைப் போல வெளிவந்தார் பேராசிரியர் அவர்கள்.

அதன்பின் அவ்வப்பொழுது அவரைச் சந்திக்கும் நல்வாய்ப்பினைப் பெற்று வந்தேன். நினைவில் வாழும் பேரறிஞர் ஆனைமுத்து அவர்களோடு இணைந்து செயலாற்றி வந்த தோழர் சங்கமித்ரா அவர்கள் மறைந்த சமயத்தில் பின் இரவில் பேராசிரியரும் நானும் சங்கமித்ராவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினோம். அதே போல் மேட்டூர் தாய்த்தமிழ்ப் பள்ளித் தாளாளர் தோழர் தமிழ்க்குரிசில் அவர்களது இறுதி நிகழ்விலும் பேராசிரியரோடு பங்கேற்றேன்.

இடையில் ஓரிரு முறை திருச்சியில் சந்திப்பு. கடைசியாகத் தமிழக வாழ் ஈழ ஏதிலியர் அமைப்பு சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் கருத்துரை ஆற்றத் திருச்சி சென்ற பொழுது, பேராசிரியர் அவர்களையும், சக்குபாய் அம்மையார் அவர்களையும் அவர்களது இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது.

தமிழையும், தமிழ் மக்களையும் நேசித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களது பெருமை எத்தகையது என்பதைச் சலியாமல் நினைவூட்டிக் கொண்டிருந்த மாபெரும் ஆளுமை நெடுஞ்செழியன் அவர்கள். தமிழக வரலாற்றில் அவரது சுவடுகள் என்றும் அழியாதவை. அவருக்குச் செம்மாந்த வீரவணக்கம்.

- கண.குறிஞ்சி

Pin It