பெரியாருக்கு முன்னோடி வள்ளலாரே!
சுயமரியாதை இயக்கத்திற்கு வள்ளலாரே முன்னோடி என்பது பெரியாரிய ஆய்வாளர், திருவிக போலும் சன்மார்க்கிகளின் கருத்துமாகும் எனும் ஆவணவாக்க ஆய்வாளர் ப.சரவணன் இவ்விரு தரப்பு கருத்து ஊடாட்டங்களின் துணைக்கொண்டு திராவிட இயக்க வேர்களைச் சன்மார்க்க இயக்கத்துக்குள் தேடியோரில் குறிப்பிடத்தக்கவர் யூஜின் இர்ஜிக். அந்த ஆய்வையவர் முடித்தாரா என அறிந்து கொள்ள முயன்றும் அது பயனளிக்கவில்லை என்கின்றார் . இத்தொடர்பில் பலர் தரப்புகளையும் தொகுத்து முன்வைத்தவாறே தம்தரப்பை முன்னெடுக்கின்றார்.
'சுயமரியாதை இயக்க'ப் பெற்றோர்
திருவிக பேச்சிலும், எழுத்திலும் இருந்து..
"சுயமரியாதை இயக்கத்திற்கு நாயக்கர் அவர்கள் தந்தையாவார். நான் தாயாவேன். நாங்கள் இருவரும் மாயவரம் சன்மார்க்கக் கூட்டத்தில் சேர்ந்து பெற்ற பிள்ளையே சுயமரியாதையாகும். அக்குழந்தை தாயுடன் வாழாது இதுகாறும் தந்தையுடன் சேர்ந்து வாழ்கிறது. அதன் வளர்ச்சியைக் கண்டு யான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்." (26 /11/ 1933 -.இல் ஈரோட்டில் கோவை மாவட்ட மாநாட்டுப் பேச்சு -'தமிழர் தலைவர்' - சாமி சிதம்பரனார் நூலில்)
"நாயக்கர் சுயமரியாதை என்பது எனது சன்மார்க்க இயக்கத்தினின்று பிறந்ததுதான். அதற்கும் இதற்கும் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு ஒற்றுமை; பத்து பங்கு வேற்றுமை. வேற்றுமை எங்களுக்குள் போர் மூட்டியது." - திருவிக 'வாழ்க்கைக் குறிப்புகள்'நூலின் முதல்பகுதியில்..
குணா நோக்கிலும்..
"பெரியாரின் நாத்திக வழித் திராவிடர் இயக்கம் வள்ளலாரின் பார்வையையே தம்மில் உள்ளடக்கி இருக்கிறது. திராவிட இயக்க வரலாற்றில் வள்ளலார் தவிர்க்க முடியாத சக்தி. அண்மைக்காலத் தமிழகத்திலான அறிவு வரலாற்றில் வள்ளலார் ஓர் எல்லைக்கல்லாகும். அவரை அடுத்து எழுந்த தந்தை பெரியாரின் சமய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு இயக்கங்கள் யாவும் வள்ளலார் துவக்கிவைத்த கருத்தோட்டத்தின் ஒரு புதிய நிலையேயாகும்" - குணா ('தமிழர் மெய்யியல்')
'சைவ மெய்யன்பர்களே!
நீங்களும் சிந்தித்துத் தெளிவடைய முடிகிறதா என்று பாருங்கள்!'
'சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே,
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே,
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்த லைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே’
என்றும் உங்கள் மனநிலைக்கு இரங்குபவர் யார் தெரியுமா? இவ்வாறு கூறுகின்றவர் சுயமரியாதைக் கவிஞரல்ல. ஆஸ்திகராகிய உங்களின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவரான 'வடலூர் இராமலிங்க சுவாமிகள்' ஆவார். இவர் இவ்வாறு எழுதிவைத்திருக்கும் நூலைத் 'திருவருட்பா' எனச் செப்பிமாலையைச் சுற்றி மண்டியிட்டு வணங்குகிறீர்கள். இக்கருத்தை எடுத்துக் கூறுகின்றவர்களை மருளர் என்றுஞ் செப்பி மண் கல்லை வாரி எறிந்து மல்லுக்கு நிற்க வருகின்றீர்கள். இப்பொழுது என்ன கூறுவீர்கள்?
- ஈ.வெ.ராமசாமி'ஏன் தம்பி இவ்வளவு வடநாட்டுப்பற்று?'
"சுயமரியாதைக்காரர்களைக் குறை கூறும் ஆஸ்திகர்களே! உங்களின் உண்மையான நிலை என்ன? என்பதை நீங்களே சிந்தித்து முடிவு கட்டுங்கள்.
சைவ மெய்யன்பர்களே! நீங்களும் சிந்தியுங்கள். சிந்தித்துத் தெளிவடைய முடிகிறதா எனப் பாருங்கள்!" - ஈ.வெ.ராமசாமி
சுயமரியாதை இயக்கத்தார் கூறும் கருத்துக்களைக் கண்டு கோபமடையும் வைதிகர்களே!
ஆஸ்திகரான இராமலிங்க அடிகளே இதே கருத்தைக் கூறியிருக்கிறாரே இதற்கு உங்களது பதில் என்ன என்பதே பெரியாரின் கேள்வியாக இருந்தது.
மேலும் வடநாட்டு அருளாளர்களைப் போற்றுகின்ற தமிழனுக்கு நம் நாட்டு அருளாளர்களைப் பற்றிய அக்கறை இல்லாததைக் கண்டும் பெரியார் வருந்துகிறார். தமிழனின் தன்மானத்தைத் தூண்டும் வகையில் பெரியாரின் பேச்சு அமைகிறது. அங்கும் வள்ளலாரே அவருக்கு உதாரணத்திற்கு வருகிறார். 'ஏன் தம்பி இவ்வளவு வடநாட்டுப்பற்று?' என்னுந் தலைப்பில் 'குடி அரசு' (8 / 05 / 1948) இதழில் அவர் இவ்வாறு எழுதுகிறார்.
'இராமகிருஷ்ணரைப் போற்றும் அன்பனே! சிந்தித்துப் பார்.உன் இராமலிங்கம் எந்த விதத்தில் அவரை விடத் தாழ்ந்தவர்? அவரை எந்த வடநாட்டானாவது போற்றக் கண்டோமா?'
பெரியாரின் இப்படிப்பட்ட கேள்விகளே பல கவிஞர்களுக்குப் பாடுபொருளாக அமைந்தது என்பர் எனத் தொடரும் ப.சரவணன் 1935 இல் 'குடி அரசு'ப் பதிப்பக மூன்றாவது வெளியீடாகச் சாமி.சிதம்பரனார் அருட்பா ஆறாந்திருமுறையில் இருந்து நூறு பாடல்களடங்கிய தொகுப்பைச் சந்தாதாரர்களுக்குச் சலுகை விலையில் வழங்கியதையும் அந்நூல் குறித்துக் குடி அரசு இதழில் அவ்வப்போது விளம்பரமும் செய்து பரவலாக்கினார் என்பதையும் எடுத்துரைத்து அவ்விடயம் சன்மார்க்க, திராவிட இயக்க வரலாறு இரண்டிலுமே பதிவு செய்யப்பட வேண்டியதென வலியுறுத்துவார்.
பெரியார், பாரதிதாசன் இருவரின் குடும்பத்தாருமே சன்மார்க்கத் தொடர்பினராக இருந்த வரலாற்றையும்; பின்னாளில் குடி அரசு மேலாளராகப் பணியாற்றிய காங்கிரஸ்காரராக இருந்த கோவை அய்யாமுத்து தாம் சுயமரியாதை இயக்கத்திற்கு வந்தமைக்கு இராமலிங்கரே காரணகர்த்தா என்றமையையும்; பெரியார் தொண்டர் பலர் வள்ளலாரின் சன்மார்க்க நெறியைப் போற்றியதையும் தொகுத்துப் பதிகின்றார்.
இராமலிங்கர், பெரியார், பாரதிதாசன் மூவரையும் பொறுத்தவரையில் தம் அருட்பாவின் முதலைந்து திருமுறை வரை சைவசமயத்தையே சார்ந்தொழுகிய இராமலிங்கம் ஆறாந்திருமுறையில் 'சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய 'அருட்பெருஞ் சோதி' என அவற்றை மறுதலித்து சோதி வழிபாட்டு நெறியெனும் மாற்று வழிபாட்டு நெறியை முன்னெடுத்தார்.
ஆத்திகராக இருந்தே பின்னர் வேத, இறை மறுப்பு, வடபுல, பார்ப்பன எதிர்ப்பு ஆகியவற்றைச் சுயமரியாதை, திராவிட இயக்கமாக முன்னெடுக்கலானார் பெரியார். 'ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது' பாடிநின்ற சுப்புரத்தினமே - பின்னர் பகுத்தறிவியக்கக் கவிஞராகப் பாரதிதாசன் ஆனார். பெருந்தேசியராக நின்றவரே திராவிடத் தேசியர் ஆகவும், தமிழ்த்தேசியர் ஆகவும் மாறி உருவெடுத்தார். தம் குருநாதராகப் பாரதியையும்; இராமானுசரையும், குமரகுருபரரையும் விதந்தோதிப் பாராட்டினார்; பக்தி இலக்கியத்தையும் இலக்கியக் கொடையாக ஏற்றார் என அவரவர்க்கான காலகதி மடைமாற்றங்களைக் கணக்கிலிருத்தி மனங்கொண்டே அவரவர் பங்களிப்பை உரிய அரசியற் புரிதலுடன் மதிப்பிடத் தலைப்படவேண்டும்.
ஆவணவாக்க ஆய்வாளர் ப.சரவணன் ஆய்வுப்பணிப் பங்களிப்பு, வரிப்புணர்வைப் போற்றும் அதே மூச்சில் அவருடைய மெய்காண்முறை, அரசியல் நிலைப்பாடுகள் ஆகியவற்றையும் மனங்கொண்டே அவற்றையும் அவரையும் மதிப்பிடல் வேண்டும். சரவணன் தரப்புகள் குறித்த மேலதிகப் புரிதல்களுக்கு இப்பதிவின் தலைப்பிலான கட்டுரையையும் ('புதிய பார்வை' - சன. 1-15, 2006); அவரது 'வாழையடி வாழையென' நூலையும் வாசிக்கவும்.
வடக்கர் இடக்குகளும் இருட்டடிப்புகளும்
"ஆண் பெண்கள் இருவரிடமும், இரு தன்மையான குணங்களும் உண்டென்று கூறுகின்றார். இதனால் இருபாலாரும் சமத்துவமுடன் வாழத் தகுதியுடையவர்கள் என்பதே வள்ளலார் உள்ளம் ஆகையால்,
'பாடகக்கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்கப்
பயன்பெற நல்லருள் அளித்த பரம் பரனே'
- என்று புகல்கின்றார்.
'கைம்மையைத் தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே' இது வடலூரார் வாக்கு. 'கைம்மையாவதை அதாவது விதவையாவதை ஒழித்து, மங்கலத்தைக் கொடுத்த இரக்கமே' என்று கூறுகிறார். 'கணவன் இறந்தபின் பெண்களுக்குத் தாலி வாங்கக் கூடாது' என்று குறிப்பிடுகிறார். 'விதவைக்கோலம் செய்வதையே தடுக்கிறார் வள்ளலார்' எனச் சாமி. சிதம்பரனார் கூறுகிறார்
காலஞ்சென்ற பெரியார்களான இராசாராம் மோகன்ராய், ஜி. சுப்பிரமணிய அய்யர், வீரேசலிங்கம் பந்துலு, ஈஸ்வர சந்திர வித்தியாசாகரர், லாலா கங்காராம், மகாதேவ கோவிந்த ரானடே ஆகியவர்கள் தமது சீர்திருத்தக் கருத்துக்களால் வரலாற்றுப் புகழ்பெற்றுவிட்டனர். இந்திய வரலாற்றில் இவர்கள் பெயர் அழுத்தமாகப் பதிக்கப் பெற்றுவிட்டது.
ஏறக்குறைய இவர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்தான் வடலூர் வள்ளலார். இவரும் கைம்பெண் மறுமணத்தை ஆதரித்துள்ளார். ஆனால், சீர்திருத்தவாதிகள் இவர் பெயரைக் குறிப்பிடுவதில்லை. காரணம் வள்ளலாரின் கருத்துக்களைச் சீர்திருத்தவாதிகள் அறியாதிருப்பதுதான்." - பழ.நெடுமாறன் ('வள்ளலார் மூட்டிய புரட்சி')
பழ. நெடுமாறனார் குறிப்பிடுவது போல நாமவர்களை அறிந்திருப்பது போல நம்மவர்களை அவர்கள் அறியமாட்டாமலிருப்பது அவர்களின் அறியொணாமை மட்டுந்தானா என்ன? அதற்கும் அப்பாலாக இருட்டடிப்பின் அரசியலும் இருக்கத்தானே செய்கின்றது?
"காலனியக்காலம் குறிப்பாக 19- ஆம் நூற்றாண்டு குறித்து இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகளில் கல்கத்தாச் சூழலே மையப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்ற அளவிற்குப் பிற இடங்களில் சமூகசீர்திருத்த இயக்கங்கள் நடைபெறவில்லை என்பதாகவே இதுவரை எழுதப்பட்டவரலாறு அமைகிறது. இத்தன்மை தமிழகத்தில் செயல்பட்ட வள்ளலார் எனும் இராமலிங்கம் அவர்களின் செயல்பாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் செயல்பட்ட ஒன்றாகும்." - வீ. அரசு
"வடநாட்டைச் சேர்ந்த தியாகிகளை அவர்கள் என்றும் நிராதரவாகக் கைவிட்டதில்லை. நாம் வேற்றுமை மனப்பான்மை ஒரு சிறிதுமின்றித் தமிழகத்தில் நந்தவனங்களுக்கும், தெருக்களுக்கும், வீதிகளுக்கும் வடநாட்டுத் தலைவர்களின் பெயர்களைச் சூட்டி வந்திருக்கிறோம் ஆனால் இதே மாதிரி தமிழகத் தியாகிகள் விசயத்தில் வடநாட்டார் நியாய உணர்ச்சியோடு நடந்து கொள்ளவில்லை. தேசபக்தர் ஸ்ரீசுப்பிரமணிய சிவா, கப்பலோட்டிய தமிழன் வஉசி, மகாகவி பாரதியார் ஆகியோர்களின் பெயர்களைக்கூட அங்கெல்லாம் காணமுடிவதில்லை." - சோமாஸ் ('வளையாத தமிழன் வஉசி')
உண்மையான தமிழ்த்தேசியத்தின் ஊற்றுக்கண்கள்:
"தமிழ்த் தேசியத்தைத் திருமூலர், வள்ளலார், பாரதி என்று பக்தி மார்க்கத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கத் துடிக்கிறார்கள்(குணா, பெ.மணியரசன்) இந்த பக்தி மார்க்கத் தமிழ்ப்பற்றும், அதன் மூலமாக வளர்த்தெடுக்க நினைக்கும் தமிழ்த்தேசிய உணர்வும் மீண்டும் தமிழினத்தைப் பின்னுக்குத் தள்ளவே பயன்படும். இது ஒருவிதமான மபொசியியத்தின் மறுபதிப்பு, மலிவுப் பதிப்பாகவே இருப்பதால் தான் இதனை மறுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது எனக்கு." - திருமாவேலன் ('இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?':1)
திருமாவேலன் சொல்லுமாப்போலே அவ்விருவரும் மபொசியியத்தின் மறுபதிப்புகளே. இக்கூற்றில் திருமூலர் சைவத்தேசியர், பாரதி இந்தியப் பெருமத, பெருந்தேசியர். ஆனால் வள்ளலாரே மெய்யாலுமே தமிழ்த்தேசிய முன்னோடி என எடுத்துரைப்பதே 'உண்மையான தமிழ்த்தேசியத்தின் ஊற்றுக்கண்கள்' என்னும் இப்பதிவாகும்.
கால்டுவெல்லையும் சுந்தரனாரையும் முன்வைத்து....
'19-ஆம் நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக மதிக்கப்பெற்ற பேராயர் கால்டுவெல், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை ஆகியோர் மீது வன்மையான தாக்குதலைத் தொடுத்தார் பேரா. க. கைலாசபதி. கால்டுவெல் தன்னுடைய கண்டுபிடிப்புகளினூடே, தீமை விளைவிக்கத்தக்க கருத்துகளையும் உடன் கலந்து ஊட்டிவிட்டார்' எனக் குற்றஞ்சாட்டும் கைலாசபதி, அவற்றில் ஒன்று பார்ப்பனர்பால் காழ்ப்புணர்வு என்றும் கூறுகிறார். ஆரியர் திராவிடர் பூசலுக்குத் 'தத்துவார்த்த விளக்கம் கூற உதவியவரே கால்டுவெல்' என்று அழுத்தந்திருத்தமாகக் குற்றஞ்சாட்டும் அவர் சுந்தரனாரையும் விட்டு வைக்கவில்லை.
"தமிழகத்தில் பாரதி தேசியத்தின் முரசொலி என்றால் சுந்தரம்பிள்ளை பிரதேசவாதத்தின் பிதாமகன்' என்று சொல்லி முடிக்கிறார்"- தொ. பரமசிவன் ('தமிழாராய்ச்சியின் வளர்ச்சி')
"மனோன்மணியம் என்ற நூல் எவ்வாறு நிஷமல்லாத திராவிடத்தின் நாட்டுப்பண் ஆனது என்பது சுவாரஸ்யமான ஆராய்ச்சிக்குரியது. மனோன்மணியம் சுந்தரனாரின் சைவசித்தாந்தக் கருத்துருவத்தின் நீட்சியே 'நீராருங் கடலுடுத்த' என்று தொடங்கும் பாடலும்." "மொத்தத்தில் இன்றைய தமிழ்மக்களின் அரசியலும் வாழ்க்கைமுறையும் கால்டுவெல் மற்றும் அவர் கோட்பாட்டை அங்கீகரித்த சுந்தரம்பிள்ளை போன்றோரின் காலனிய மனோபாவத்தில் உதித்தவையா என்ற கேள்வியும் முக்கியமானது தான்"தமிழவன் ('தீராநதி' அக். 2019).
தமிழவன் தலைமேற்கொண்டாடி நிற்கும் மா. அரங்கநாதன் தரப்பே இதற்குப் போதுமான மறுப்பாகும்.
"தில்லை நடராசனின் ஊழிக்கூத்து, இட்லி என்ற பலகாரம் -இவை பற்றிக் கூட ஆங்கிலத்தில்தான் முதலில் கட்டுரைகள் எழுதப்பட்டன. இட்லியும் தில்லை நடராசனும் ஆங்கிலேயர் சமாச்சாரங்களா?" உள்ளது. சிறத்தலை அறவே உணரொணாமால் புறவெளித்தாக்கமாகவே நோக்கத் தலைப்படலும் தமிழவனின் காலனிய மனப்போக்கு வெளிப்பாடே.
கைலாசபதி தொடக்கமாய்ப் பொதுவுடைமையர்; 'பிராமண எதிர்ப்பில்லாமல் பார்த்துக்கொள்ளும்' தமிழவன், மா.அரங்கநாதன் ஆகியோரின் 'குமரி மாவட்ட மனோபாவ'த் தரப்பிலிருந்தும் (பின்னர் சுட்டப்படும்) எழுப்பப்படும் இத்தகு திராவிட இயக்க ஒவ்வாமை நோக்கிலான குற்றச்சாட்டுக்கள் வரலாற்றுச் சுருக்கவாதமான மிகை எளிமைப்படுத்தப் பட்டனவே. திராவிடம் காலனியக்கொடை எனில் ஆரியமாயையும் இந்துமாயையும் காலனியக் கொடையல்லாமல் மற்றென்னவாம்?
சுந்தரனாரின் 'நீராருங் கடலுடுத்த பாடலை'யே, "இந்தியாவிலேயே தேசியக்குரல் எழுவதற்கு முன் அவர் எழுப்பிய தமிழ்த்தேசியக்குரல் இது. அதில் தமிழ்த்தேசியத்தின் பழங்கால வரலாறும், அவர் வருங்கால முன்னறிவும், நம் வருங்கால ஆக்கமும் செறிந்து பொதிந்துள்ளன" -என்பார் பழ.நெடுமாறன் ('வள்ளலார் மூட்டிய புரட்சி')
- இவ்வாறு கால்டுவெல்லின் முடிவைச் சுந்தரனார் கவிதைவடிவில் தெரிவித்தார் என்பாரவர்
1856 இல் கால்டுவெல் ஒப்பிலக்கணம் வெளியானது. 1816 இலேயே பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் திராவிட மொழிகள்குறித்து முன்வைக்கவில்லையா?
"தமிழரின் தன்மான உணர்வைத் தூண்டிவிட்ட சிறப்பு பரஞ்சோதியாருக்கு உரியதாகும்’
"கி.பி. 7-ஆம் நூற்றாண்டளவில் அரும்பிய திராவிட இனஉணர்வு 19 ஆம் நூற்றாண்டில் போதாகும் நிலைக்கு வந்துவிட்டது. கால்டுவெல், இராமலிங்க அடிகளார், பேரா. சுந்தரம் பிள்ளை ஆகியோரின் தொண்டினால் தமிழின் தனிச்சிறப்பு உலகின் கருத்தினைச் சென்ற நூற்றாண்டில் கவர்ந்தது."
- சே. இராசேந்திரன் ('தமிழ்க்கவிதையில் திராவிட இயக்கத்தின் தாக்கம்')
வள்ளலார் குறித்த பல்வேறு தரப்புகளை ஒத்துறழ்ந்தே காண்போம்
"பொற்புறவே இவ்வுலகில் பொருந்து சித்தன் ஆனேன்"
"சித்தனும் ஆனேன் என்று உந்தீபற"
- சி. இராமலிங்கம்
இந்த அருட்பா X மருட்பா விவாதத்தரப்புகள் என்பன, பட்டிமன்ற விவகாரங்களல்ல. தமிழ் அடையாளத் தேடலின் இருவேறு செல்நெறிகளை இனங்காண்பதற்கான தரவாதார ஆவணப் பதிவுகளே.
இவ்வழக்கு இரண்டு கட்டங்களாக நடந்தது. அருட்பா அணியில் மறைமலையடிகள், செய்குத்தம்பிப் பாவலர் ஆகியோரும் மருட்பா அணியில் உவேசா, நா. கதிரைவேற்பிள்ளை, திருவிக ஆகியோரும் இடம் பெற்றனர்.
நாவலர் பார்வையில் அருட்பா ஆகமச்சைவநெறிக்குப் புறம்பானது.உவேசாபார்வையில் வேதநெறிக்குப் புறம்பானது. நஞ்சும் பாலும் கலந்தாற் போன்றது. அ.மார்க்ஸ் பார்வையிலோ 'இந்து-சைவ எல்லைக்குள் நிற்பதே!'
"எவ்வுயிர்க்கும் அன்புசெய்தல் பசிப்பிணி அகற்றல் ஆகியவற்றை வலியுறுத்திய வள்ளல்இராமலிங்கரும் இந்து - சைவ எல்லைக்குள் நின்றவர்தான். திருமூலர், பட்டினத்தார், தாயுமானவர் என்கிற வரிசையிலேயே அவர் வருகிறார்." - அ. மார்க்ஸ் அண்மையில் அவருடைய 5/10/2022 'மதங்கடந்த ஆன்மிகம்' பதிவிலவர் நிலைப்பாடுகள் மாறியுள்ளன.
"உவேசா தன்னுடைய பதிப்புநூல்களில் ஒரே ஒரு மேற்கோள் தவிர வேறெங்கிலும் திருவருட்பாவை மேற்கோளாகக் காட்டவில்லை" - ஜெ. அரங்கராஷன். (புதிய ஆராய்ச்சி நவ-2009)
'வள்ளலாரைச் சித்தர்மரபில் இணைப்பது ஆபத்தானது. நவீன காலனிய மரபில் உருவான கருத்து நிலைகளுக்கும், பாரம்பரியக் கருத்துநிலைகளுக்கும் இடைப்பட்ட முரண்பாட்டில் அலைந்து உழன்று வாழ்ந்தவர் அவர்." - வீ. அரசு ('பக்தி-அனுபவம்- அரசியல்')
"இந்துமதத்திற்குள் நின்று சீர்திருத்தம் பேசுவது சாத்தியம் இல்லை என்கிற அம்சத்தில் தெளிவான அரசியல் புரிதல்களை முன்வைத்தது பெரியார் ஈ.வெ.ரா.வும் அண்ணல் அம்பேத்கரும் மட்டுமே" அ. மார்க்ஸ் ('புதிய காற்று' மார்ச் 2004)
இது அரசியல் தளத்தில் சரியானதே. ஆனால் இவ்விருவர்க்கும் முன்பாகவே ஆதியிலே சித்தாந்த சைவராகத்தம் ஐந்துதிருமுறைகளிலே பேசிநின்ற போதிலும் ; ஆறாந்திருமுறையில் அவற்றை மறுதலித்து மதஎல்லை கடந்துநின்ற மாற்றுமரபின் முன்னோடியாகவும், சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியாகவுந் திகழ்ந்தவர் இராமலிங்கமே என்பதெலாம் அரசுவும் அ.மார்க்ஸ்ஸும் காணத் தவறிய பக்கங்களே.
"வள்ளலார் அருளியது மாற்றுநிலை. எதிர்ப்பு எதிர்ப்பினை வளர்க்கும்; மாற்று ஒருநாள் இல்லை என்றாலும் ஒருநாள் ஒருசிந்தனையை ஊக்கும்; உயர்வை அளிக்கும்."-- இராம. இருசுப்பிள்ளை ('வள்ளலார் வாழ்வும் வாக்கும்)
இருபதாம் நூற்றாண்டுச் சரக்கன்று; சில நூற்றாண்டுகள்
முன்பாகவும் காணக்கிடக்கும் குறுவித்துக்கள்!
ஒரு நீணெடும் தமிழறப் பாரம்பரியத்தின் பிரதிவயமாக்கம் ஆகவும், குறளறத்தின் கூர்தலறமாகவும் பெரியாரியலையும்; பெரியாரியத்தின் குறுவித்துக்களையும் இனங்காணும் பதிவுகளைக் காண்போம்:
"பெரியாரின் வெற்றிக்கு ஒரு நீண்ட. பிராமணஎதிர்ப்புப் பாரம்பரியம் தமிழ்மொழிக்குள் இருந்தது காரணமாகும். 'பிறப்பொக்கும்எல்லா உயிர்க்கும்' என்றவரி ஒருநீண்ட பாரம்பரியத்தின் பிரதிவயமாக்கமாகும்" -தமிழவன் ('தமிழுணர்வின் வரைபடம்').
"வள்ளுவர் விதைத்த இவ்விதை கபிலரகவலாக, பதினெண் சித்தர் பாட்டு மரபாக, வள்ளலராக வளர்ந்து பின் பெரியாரியலாகச் செழித்துள்ளது" - க. நெடுஞ்செழியன் ('தமிழர் இயங்கியல் தொல்காப்பியமும் சாரக சாம்கிதையும்')
"சமயங்கள்,அவற்றுக்கு இடையிலான இணக்கங்கள் குறித்த பெரியாரியப் பார்வை 20 ஆம் நூற்றாண்டுச் சரக்கன்று .அதன் குறுவித்துக்களை வரலாற்றில் சில நூற்றாண்டுகள் பின்சென்று கூட நம்மால் காணமுடியும். 13 ஆம் நூற்றாண்டில் பிறந்த தமிழ்ச்சித்த மரபானது வேதம் வேதமொழி, சாதி அமைப்பு, பார்ப்பனர், கோயில் ஆகிய கருத்தியல் நிறுவனங்களையும், உலகியல் நிறுவனங்களையும் மறுத்தது. ஆனால் கடவுளை மறுக்கவில்லை": தொ. பரமசிவன் ('தெய்வம் என்பதோர்)
இராமலிங்கரின் தத்துவத்தில் மட்டுமே....
சைவ அடையாளத்தில் தடையீடாகவும், தமிழடையாளத்தில் மடைமாற்ற மாகவும் இராமலிங்கர் நிகழ்த்திய மாற்றங்கள் பற்றிய பதிவுகளைக் காண்போம்:
"உடனடி வாழ்வின் அப்பட்ட உண்மையாகிய பசி அவரது தத்துவப் பார்வையை நிர்ணயித்தது. சைவசமய நிறுவனம் அவர் கவனத்திற்குள் வரவேயில்லை. அப்படி வந்த போதிலும் அது அவரால் விமர்சிக்கவேப் பட்டது"
"இராமலிங்கர் எந்தவகையிலும் சைவ அடையாளத்தை உருவாக்குபவராக. இங்கு காட்சியளிக்கவில்லை. அந்த அடையாளத்தை உடைப்பவராகக் காட்சி அளிக்கிறார். இராமலிங்கரது தத்துவம் தமிழடையாளத்திற்கு ஓர் அடித்தளச் சார்பினை வழங்குகிறது"
"நாவலர் மேலிருந்து தொடங்கி அடித்தளமக்களை அந்நியப்படுத்திச் சைவத்தை ஆகமச் சைவமாகக் குறுக்கிக் கொள்ள, வள்ளலார் அதனை விரித்துச் செல்கிறார் தமிழடையாள உருவாக்கத்தில் ஒரு மடைமாற்றத்தை உருவாக்குகிறார்". - ந. முத்துமோகன் ('தமிழினி' சனவரி 2010)
"கடவுளின் ஆலயங்கள் மானுட தேகங்கள்(உடல்கள்) என்ற கருத்து நமது தத்துவங்களில் ஏற்கெனவே உள்ளது. ஆயின் பசியினால் அந்த ஆலயங்கள் பாழாகும் என்பதை நம்மவர்கள் பார்க்காமல் போய் விட்டார்கள்! இராமலிங்கர் அதனைக் கண்டிருக்கிறார்."
"இராமலிங்கர் உடல்பற்றிப் பேச முன்வந்தமைக்குப் பழைய யோகிகளும் சித்தர்களும் தூண்டுதலாக இருந்திருக்கலாம். ஆனால் இராமலிங்கர் உடலின் அடிப்படை நிலையாகப் பசியைப் பற்றிப் பேசினார். பசியால் உடல் வாடும் போது உயிரும் தான் வாடும் என்ற ஞானம் இராமலிங்கருக்கு மட்டுமே கிடைத்தது. பசி என்பது பர(ஆன்மீக) ஒழுக்கத்தின் பிரச்சினையாகக் கொள்ளப் பட்டது இராமலிங்கரின் தத்துவத்தில் மட்டுமே. அது ஒரு தத்துவ விவாதத்தின் உட்பொருளாகக் கொள்ளப்பட்டது இராமலிங்கரில் மட்டுமே. இராமலிங்கரின் பசி பற்றிய பேச்சு தத்துவத்தின் வரையறையையே, தத்துவத் தேடல்களின் நோக்கையே மாற்றி அமைக்கிறது. இது ஓர் அதிசயம்.
'(1) உடுப்பதற்கு வஸ்திரமில்லாமலும் (2) இருப்பதற்கு இடமில்லாமலும்
(3) உழுவதற்கு நிலமில்லாமலும் (4) பொருந்துவதற்கு மனைவியில்லாமலும்
(5) விரும்பிய படி செய்வதற்குப் பொருள் முதலிய வேறு வேறு கருவிகள் இல்லாமலும் துன்பப்படுகின்ற ஜீவர்களிடத்தில் ஜீவகாருண்யம் காட்டவேண்டும்"
- என இராமலிங்கம் எழுதினார். தமிழில் 'உழுபவனுக்கு நிலம்' என்ற சொற்களை முதலில் உச்சரித்தவர் வள்ளலாரே என்று தோழர் நல்லக்கண்ணு ஒருமுறை (1987 - இல்) என்னிடம் சொன்னார்" - ந. முத்துமோகன் ('இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்')
இவ்வாறாகத் தமிழடையயாள உருவாக்கத்தில் ஏற்படுத்திய மடைமாற்றங்கள் குறித்த முத்துமோகன் தரப்புகள் இத்தொடர்பில் புதுவெளிச்சம் பாய்ச்சும் புதுப்புதுத் திறப்புகளே எனிலது மிகையாகாது.
ராஜ் கௌதமனாரின் ஊமைக்குசும்பும், நீலம்பாரித்த
'விலகல்வாதத் தலித்திய' வன்மக் காழ்ப்பரசியலும்:
"மொத்தத்தில் சீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று அடித்துக் கூறுகிறார் (இராமலிங்கம்). 19 - ஆம் நூற்றாண்டின் நிலவுடைமை மற்றும் சமயப் பண்பாட்டிற்குள்ளிருந்த ஒருவர் இதைவிடவும் புரட்சிகரமான வழிபாட்டை முன்வைக்க முடியுமா என்பது தெரியவில்லை.
ஆத்திகப் புரட்சி மனிதப் புறத்திலுள்ள முரண்பாட்டை மறைத்து விடுகிறது. அதைவிட நாத்திகப் புரட்சி மனித அகத்தின் இயக்கத்தைச் சடத்தன்மை கொண்டதாக ஆக்கி விடுகிறது! இரண்டிலுமே கோளாறு உண்டு. இரண்டையும் கணக்கில் கொண்டு தாண்டிச் செல்ல வேண்டிய அவசியம் வந்துவிட்டது
தமிழகத்தைப் பொறுத்தவரைப் பெரியாரையும் இராமலிங்கரையும் சேர்த்தே பார்க்க வேண்டியது அவசியம்; அதே சமயம் இருவரையும் கடந்து செல்வதும் அவசியம். அப்படிக் கடந்து செல்கிற போது கார்ல்மார்க்ஸ்ம் அம்பேத்கரும் நமக்காகக் காத்திருப்பதைக் காணவியலும்"- ராஜ் கௌதமன் ('கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக' - பக்:135)
இங்கான சூழலில் இவ்வாறு பெரியாரையும் இராமலிங்கரையும் ஒருசேரப் பார்த்தும் கடக்கவும் வேண்டும் என வலியுறுத்தும் ராஜ் கௌதமன் "எதிர்ப்பக்கம் இருப்பவற்றில் புனிதம், உயர்ந்தவை என்று சொல்லப்படுபவற்றைக் கட்டுடைப்பது என்பது எவ்வளவு முக்கியமோ - அதேபோல் அந்தப் பக்கத்தில் தலித்துகளுக்குச் சாதகமாக எவை இருக்கின்றனவோ அவற்றைச் சரியாக இனம்கண்டு அவற்றை முன்வைப்பதும் முக்கியமானதுதான். நான் அதைத்தான் செய்திருக்கிறேன். புதுமைப்பித்தனோ வள்ளலாரோ உங்களுடையவர்கள் அல்ல. அவர்கள் தலித்துகளுக்குச் சார்பாகச் செயல்பட்டவர்கள்தான். அவர்கள் எங்களுடையவர்கள்தான் என்று நிறுவி எங்கள் பக்கம் கொண்டு வருவதுதான் நோக்கம்.
- ராஜ் கௌதமன் (' ராஜ்கௌதமன் கட்டுரைகள்' - 2021 )
என வாங்கு தம் முந்தைய தரப்புக்களை மடைமாற்றிப் புதுமைப்பித்தனையும் இராமலிங்கத்தோடு இணைத்தே தலித்தாக அரவணைக்கத் தயங்காப் புத்தவதாரமான ராஜ் கௌதமனார்தாம் எப்போதுமே ஒரே ஒரு விடயத்தில் -அவர்களோடு தாம் உரையாட விரும்புவதால் பார்ப்பனர் என்னாமல் பிராமணர் எனவே பாவிப்பதில் -மட்டும் படு எச்சரிக்கை உணர்வுடன் தமிழவனைப் போலவே பார்ப்பன எதிர்ப்பு நேராமல் பார்த்துக் கொள்கின்றார்.
இன்னும் ஒருபடி மேலே எகிறித் தமக்கு மாறாகப் பார்ப்பன இன மொழி ஆதிக்க எதிர்ப்புத் தெறிப்பாகும் இடங்களிலும் குறுக்குச்சாலோட்டி அப்படி ஏதும் இல்லை அதெல்லாம் திராவிடலீலை அல்லால் மற்றேதுமில்லை என அவாளைக் குளுப்பாட்டியே - தமக்கான 'யதாஸ்தானம் ததாஸ்து' என்றதனைத் தக்க வைத்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார். அத்தகு தருணங்களில் அவர்மொழியே அவருக்கு இரண்டகம் இழைத்து நமக்கவரைக் காட்டியே கொடுத்துத் தொலைத்து விடுகின்றதே!:
"..இறுதிக்கட்டத்தில் இராமலிங்கர் தமது சுத்த சன்மார்க்கம் தவிர அனைத்தையும் அடியோடு நிராகரிக்கும் தீவிர நிலைபாடெடுத்தார்."
"இராமலிங்கர் இவ்வாறு சாதி, குலம், வருணம், ஆசிரமம், வேதம், சாத்திரம் ஆகியவற்றை முற்றிலும் பொய் என்று மறுத்ததை வைத்துக் கொண்டு அவர் பிராமணரைச் சாடியதாக ஒரு பிரிவினர் குதூகலித்து வரவேற்றார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் சமஸ்கிருதத்தைவிடத் தமிழ்மொழி இறை அனுபவத்தை வெளியிட உகந்தது என்றும், மற்றொரு சந்தர்ப்பத்தில் சம்ஸ்கிருதம்தான் எல்லா மொழிகட்கும் தாய்மொழி எனில் தமிழ்மொழி தந்தை மொழி என்றும் இராமலிங்கர் வெளியிட்ட கருத்துக்களைக் கொண்டு -அவரை வடமொழி எதிர்ப்பாளராகவும், பிராமண மறுப்பாளராகவும் அரசியல் பண்ணினார்கள். ஆனால் இராமலிங்கர் இந்த அரசியலுக்குள் சிக்கிக் கொள்ளாதவர். சமஸ்கிருத சுலோகங்கள் பல இயற்றியுள்ளார். அதனை மதித்துப் போற்றினார். அவரது பாடல்களிலும், வசனத்திலும் சமஸ்கிருதக் கலப்பு கொஞ்சம் அதிகம்தான். அவர் வாழ்ந்த காலம், சமஸ்கிருதத்தையும் எதிர்த்து அரசியல் தோன்றாத காலம்." எனத் தொடர்கின்றார். "வடமொழியின் மீது எந்த எதிர்ப்பும் வெறுப்பும் அப்போது இருக்க வேண்டிய அவசியமும் இல்லை வைதிக எதிர்ப்பு இருந்தது" என்னும் மா.அரங்கநாதன் சப்பைக்கட்டும் இத்தகையதே.
மெய்யாலுமே இங்கரசியல் பண்ணுவது ராஜ் கௌதமன் அரங்கநாதன் வகையறாதானே? இவை யாவுமே முற்றிலும் உண்மைக்குப் புறம்பான திரிபுரைகளே. மாறாக இவை யாவும் அவாளுக்கு அவர்கள் நம்பகமான நல்லூழியரே எனக் காட்டிக் கொள்ள வேண்டியே ஊடே புக்கு ஓட்டிய குறுக்குச் சால்களே? இக்கூற்றில் இராமலிங்கர் பாடல்களில் கொஞ்சமாகவும் வசன நடையில் மேலதிகமாகவும் சங்கதக் கலப்பான 'மணிப்ரவாள' நடை என்பது மட்டுமே உண்மை. பாரதியைப் பொறுத்தவரையிலுங்கூட இப்படித்தான். மாற்றுத் தரப்புகளைக் காண்போம்:
வள்ளலாரின் மொழிக்கோட்பாடு - தமிழ்த்தேசியம் - மொழியியலாய்வு விதந்தோதல்:
வள்ளலாருக்கும் சங்கராச்சாரியார், கோடகநல்லூர் சுந்தரசாமி மூவர்க்கும் இடையிலான உரையாடல்களுக்கு ஊடாகவும், திருவருட்பா உரைநடைப்பகுதி முதலியவற்றாலும் ஆரியம், தென்மொழி குறித்த அவர் கணிப்பீடுகளையும்; வடமொழி பயில்வதில் இருந்த சிக்கல்கள், அதன் உரைகோள் முறைமைகள் பற்றி எல்லாம் உணரக்கிடக்கின்றன.
உலகமொழிக்கு எல்லாம் சமஸ்கிருதமே 'மாத்ரு பாஷா' ( தாய்மொழி ) என்ற சங்கராச்சாரியார்க்கு மறுமொழியாக எனில் தமிழே 'பித்ரு பாஷா' ( தந்தை மொழி ) என்றறைந்தார். வாதாடித் தோற்ற கோடகநல்லூராரும் திருந்திப் பின்னர் இராமலிங்கர் நண்பர் ஆயினாரென எடுத்துரைப்பார் ப. சரவணன் ('சாளரம்' இலக்கியமலர்: 2008)
பெண்மை ஆகுலமின்றி, அடக்கி ஆளுகையால் ஆண்தன்மை பொருந்தியதுமான தென்மொழி..
"அசஜர ஆரவாரம், சொல்லடாம்பரம், பொழுது போக்கு, பெருமறைப்பு முதலிய பெண்மை ஆரவாரமின்றி, எப் பாஷையின் சந்தசு (மந்திரங்)களையும் தன் பாஷையுடன் அடக்கி ஆளுகையால் ஆண்தன்மை பொருந்தியதுமான..."" இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பிரயாசத்தையும், பெருமறைப்பையும் பொழுதுபோக்கையும் உண்டுபண்ணுகிற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய், பாடுதற்கும், துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக்கலையை இலேசிலளிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றனிடத்தே மனம்பற்றச் செய்து அத்தென் மொழிகளாற் பல்வகைத் தோத்திரப் பாடல்களைப் பாடுவித்தருளினீர்." - இராமலிங்கர்.
'இலக்கணக்கொத்தை'யும், வர்ணதர்மத்தையும், வடமொழியையும் வள்ளலார் மறுத்துரைக்கும் பாங்கை சே. இராசேந்திரன் எடுத்துக்காட்டுவார்:
"ழ், ற், ன் முடிநடு அடி சிறப்பிய லக்கரங்களில் முடிநிலை இன்பானுபவ மோனாதீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கையுண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பியல் ஒலியாம் எனத் தமிழ் எழுத்தொலிகளின் அமைப்பின் சிறப்பைத் தத்துவக் கண்ணோட்டத்தில் அடிகள் தெளிவுறுத்தியுள்ளார்" - சே. இராசேந்திரன்.
"வருணாச்சிரம மானத்தாற் பந்தப்பட்டேக தேசத்தான் வழங்குகின்ற வேதம், வருணாச்சிரம மானத்தாற் பந்தப்படாது யாண்டும் பூரணத்தான் விளங்கும் மெய்ம்மொழிக்குப் பிரமாணமாகாதென்க."- இராமலிங்கர் ( 'தமிழ்க் கவிதைகளில் திராவிட இயக்கத் தாக்கம்' )
எனவே வேதத்தின் தலைமை அதிகாரத்தையும் வர்ணதர்மத்தான் பந்தப்பட்ட வடமொழிப் பிரமாணத்தையும் கேள்விக்குள்ளாக்குவார். திராவிட இயக்கம் உருப்பெற அடித்தளக் காரணிகளாக வே.ஆனைமுத்து வலியுறுத்தும் ஆறினுள் ஒன்றே தமிழகத்தில் ஆறாந்திருமுறை பாடியதன் முலம் ஆரிய எதிர்ப்பைத் துவக்கிவைத்த வடலூர் வள்ளலார் இயக்கம்' என்பதுமாம்!
அதுவும் எத்தகைய ஆரிய எதிர்ப்பெனில் அதன் இந்தியத் தலைமை அதிகாரமாம் வேதம்,தர்மமாம் வர்ணாச்ரமம், அத்தர்மத்தாற் பந்தப்பட்ட சங்கதப்பிரமாணம்,அதன் கடைப்பிடி ஒழுகலாறாம் கலாச்சாரம் எனப் பார்ப்பனியத்தின் தங்குதளம் யாவற்றையுமே அடியோடு எதிர்த்த தகைமைத்தாம். இந்தப் புள்ளிதான் வடலூரும் ஈரோடுஞ் சங்கமித்த சங்குமுகம் எனலாம்.
இராமலிங்கரின் அழைப்பை ஏற்றுத் தமது 21-ஆவது வயதில்' ( 1869 ) வடலூர் வந்து இறுதிவரை அங்கேயே தங்கிவிட்ட சபாபதி சிவாச்சாரியார் என்ற 'பிராமணோத்தமரை', தமது சத்தியஞான சபையில் பூசகராக நியமித்தார். அவரது பரம்பரையினர் ஒருவரே இன்றும் அங்கு பணியாற்றி வருவதாக ஊரனடிகள் குறிப்பிடுகிறார்."- ராஜ் கௌதமன் ( பக்: 125 & 126 )
ராஜ் கௌதமன் குறிப்பிடும் மேற்படி பிராமணோத்தம வகையறா தாமே பின்னாளில் வள்ளலாரின் சோதி வழிபாட்டிற்கு மாறாகச் சைவாகமுறைப்படி பூசை நிகழ்த்த இந்துசமய அறநிலையத் துணை ஆணையாளரிடம் சீராய்வு மனு அளித்து தோல்வியைத் தழுவியவர்? (ஆதாரம்: பழ. நெடுமாறனின் 'வள்ளலார் மூட்டிய புரட்சி'-பக்:143)
இத்தகு புரிதல்களுடன் நோக்கத் தலைப்பட்டால்தான் 'ஆரியத்தை அதன் தங்குதளம் யாவினும் நின்றெதிர்க்கும் ' செல்நெறியில் வடலூரும் ஈரோடும் சங்கமிக்கும் சங்குமுகத்தின் பெறுமதிகளும்; அவற்றிற்கு எதிரான அழிமதிகளும் எத்தகையன எனவாங்கே நமக்குப் படிகத் தெளிவின் துல்லியமாக பிடிபடலாகும்.
- பொதிகைச்சித்தர்