2009ல் கொடூரமான முறையில் ஈழப் போராட்டம் ராணுவ ரீதியில் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் தொடர்பான அக்கறை தமிழர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கின்ற தமிழ்த் தேசியம் குறித்தான அக்கறையும், ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்த் தேசியம் தொடர்பான முன்னெடுப்புகளும், அது தொடர்பான அறிவுசார் வட்டங்களில் இருந்து (எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் கூட) ஆரோக்கியமான முன்னெடுப்புகளையும் காணக்கூடியதாக இருப்பது என்னைப் போன்ற புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது.

ஈழப்போராட்டம் தொடர்பான கடந்தகால அனுபவங்களில் இருந்து சுயவிமர்சனங்களுடன் அடுத்த கட்டம் தொடர்பாக ஆரோக்கியமாக அணுகுகின்ற போக்கும், புலிகள் மீதான விமர்சனங்கள், அதிருப்திகள் கொண்டிருந்தோரும் ஈழப்போராட்டம், தமிழ்த்தேசியம் தொடர்பாக மீண்டும் பங்கேற்க ஆரம்பித்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரையும் அங்கே ஈழப்போராட்டம் ஏற்படுத்திய தாக்கமும், தொடர்ச்சியாக இந்திய மைய அரசால் பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றோம் என்கின்ற உணர்வும், கூடங்குளம், முல்லைப் பெரியாறு போன்ற பொதுப்பிரச்சனைகளிலும் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய உணர்வைக் கூர்மைப்படுத்தியுள்ளது என்றே சொல்லவேண்டும். இந்த உணர்வலைகளைத் தனக்குச் சாதகமாக அரசியல் ரீதியில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்கிற சுயநலத்துடன் அரசியல் கட்சிகள் காய் நகர்த்துவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அண்மைக் காலத்தில் இதற்கான ஆகச்சிறந்த உதாரணமாகக் கருணாநிதி டெசோ, தமிழீழம் என்று மீண்டும் பேச ஆரம்பித்திருப்பதைக் குறிப்பிடலாம்.

Seeman_thanks_jayalalitha_590

இதற்கு இணையாக ஈழத்தமிழர்களின் நீண்ட கால விடுதலைப் போராட்டத்திற்கும், அந்தப் போராட்டம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் உணர்வலைகளிற்கும் தாம் மாத்திரமே உரித்தானவர்கள் என்று உரிமை கோரி, இந்தப் போராட்டம் ஏற்படுத்தியிருக்கும் ஒட்டுமொத்த அரசியல் அனுகூலங்களையும், ‘ஈழத்தமிழர் போராட்டத்தினை அடுத்த கட்டம் நோக்கி முன்னெடுப்பவர்கள் தாம் மாத்திரமே’ என்று அடையாளப்படுத்தி அதனூடாக புலம்பெயர் தமிழர்கள், ஆதரவாளர்களிடம் இருந்த கிட்டக்கூடிய எல்லாவிதமான ஆதரவையும் கொண்டு தம்மை ஒரு பலமான அரசியல் கட்சியாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற குறுகிய நோக்கும், முழுச் சுயநலமும் கொண்டதாகவே நாம் தமிழர் கட்சியை அதன் ஆவணம் அடையாளம் காட்டி இருக்கின்றது.

எந்த விதமான நுணுக்கமான அரசியல் பார்வைகளுக்கும் தேவையில்லாமல் நாம் தமிழர் கட்சியின் நோக்கம் இந்த ஆவணத்தில் அப்பட்டமாகத் தெரிகின்றது. பழம் பெருமைகள் (இவற்றிற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இன்றுவரை நாம் தமிழர் கட்சியினரால் காட்டப்படவில்லை), புரட்டுகள், திரித்தல்கள், பெரியார் பற்றிய அபாண்டமான குற்றச்சாற்றுகள் (இவற்றுள் அனேக குற்றச்சாற்றுகள் ஏற்கனவே ஆதாரங்களுடன் மறுக்கப்பட்டுவிட்டவை, அத்துடன் பெரியாரின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடாமலேயே இந்தக் குற்றச்சாற்றுகள் ஆவணத்தில் குறிப்பிடப்படுகின்றன) என்று தொடங்குகின்ற ஆவணம் பிரிவு 6ல் தமிழரின் வீழ்ச்சிக்குரிய துல்லியமான காரணம் என்கிற பிரிவை கீழ்வருமாறு நிறைவு செய்கின்றது,

“தமிழீழப் போராட்டத்திற்கு எதிராக தமிழரின் இன எதிரியான இந்தியா, தனது எதிரிகளான சீனா, பாக்கித்தான் ஆகிய நாடுகளின் துணையோடு கூட, அமெரிக்கா பிரிட்டன் போன்ற முதலாளிய நாடுகளையும், கியுபா, வெனிசுலா போன்ற நிகராண்மை நாடுகளையும் உள்ளடக்கிய அனைத்து உலக நாடுகளையும் ஒத்துழைப்பிற்கு அழைத்துக்கொண்டு, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியபோது, தமிழர்களின் ஒத்துழைப்பில்லாத இரண்டகத்தால் பேரழிவைச் சந்திக்க நேர்ந்தது; தமிழீழ விடுதலைப் போராட்டம் தன் இலக்கு நோக்கிய தொடர்ச்சியை இழந்து தவிக்கின்றது. தகுதியான எந்த உதவியும், எங்கிருந்தும் இல்லாத வெறுமை நிலவுகின்றது.”

இதன் தொடர்ச்சியாக ஆவணத்தில் பிரிவு 7 ‘அ’ வில் நாம் தமிழர் பற்றிய அறிமுகம் பின்வருமாறு கூறப்படுகின்றது,

இந்த வெறுமையை உடைத்தெறிந்து, தமிழர், உலக அரங்கில் மானத்தோடு வாழும் நிலையை உருவாக்கிட, விடுதலை வேட்கையும், வீரமும், மானமும், ஈகமும், ஒப்புடைப்புணர்வும், உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், ஒற்றுமைப் பண்பும், தன் விளம்பரத் தவிர்ப்பும், தன்னுறுதியும், இனவிடுதலைப் பற்றும், இனவிடுதலைப் குறிக்கோளில் உறுதியும், உடல் வன்மையும், உளத் திண்மையும், பொறுமையும், போர்மையும், அறிவார்ந்த சிந்தனையும், தகவார்ந்த செயல்திறனும் கொண்ட தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற தன்னிகரில்லாப் பேரியக்கமே “நாம் தமிழர் கட்சி”. அது தமிழர்க்காகத் தமிழர்களால் நடத்தப்படும் தமிழர்களின் கட்சி.”

அதாவது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற வெறுமையை உடைத்தெறியப் போவது நாம் தமிழர் கட்சி என்கின்றது ஆவணம். இதனுடன் தொடர்புபடுத்தி சில மாதங்களிற்கு முன்னர் நாம் தமிழர் கட்சி, ‘தாம் புலிகளின் அரசியல் பிரிவாகச் செயற்படுவோம்’ என்ற பொருள்பட அறிவித்திருந்ததையும் கவனிக்க வேண்டும். புலிகள் அமைப்பின் நீட்சியாகத் தம்மை அடையாளப்படுத்துவன் மூலம் தமிழகத்தில் புலிகளிற்கு ஏற்பட்டிருக்கின்ற ஆதரவினை தமது ஓட்டரசியல் என்கின்ற சுயநலத்திற்குப் பாவிப்பது என்பது நாம் தமிழரின் நோக்கம் என்பது தெளிவாகவே தெரிகின்றது. முதலில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தமிழகத்தவர்கள் ஆதரவாளர்களாகவும், ஆக்கப்பூர்வமாக செயற்படுபவர்களாகவும் இருப்பது ஈழத்தமிழர்களின் பலத்தை அதிகரிக்கும் என்கின்ற அதேவேளை, ஈழப் போராட்டத்தினைக் கொண்டு நடத்துபவர்களாக ஒருபோதும் தமிழகத்து அரசியற் கட்சிகளோ அல்லது அரசியற் தலைவர்களோ இருக்க முடியாது. அவ்விதம் அமைவது ஈழப்போராட்டத்தினை வலிமையிழக்கச் செய்வதுடன் இன்னமும் பின்னடைவையே ஏற்படுத்தும்.

நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் சீமான் பேசிய உணர்வூட்டும் பேச்சுக்கள் ஈழத்தமிழர்களிடையேயும், ஈழத் தமிழர் ஆதரவாளர்களிடையேயும் அவருக்குப் பெரும் ஆதரவை வழங்கியது உண்மை. அத்துடன் புலிகளை ஆதரித்துப் பேசினார் என்பதற்கான இந்திய அரசால் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்ததும், கனடா, அமெரிக்காவில் இருந்து திருப்பியனுப்பப்பட்டதும் அவருக்கான ஆதரவை அதிகரித்ததும் உண்மை. தவிர தான் வன்னி சென்று திரும்பிய சந்தர்ப்பங்களில் அங்கு நடந்தவை பற்றி தொடர்ச்சியாக மேடைகளில் பேசி, தனக்கும் புலிகளுக்கும் நெருக்கமாக தொடர்பு இருந்தது என்பதை மக்களுக்கு நினைவூட்டிக்கொண்டே சீமானும் இருந்தார். ஆனால் ஈழத் தமிழர்களிற்காக தான் சிறை சென்று திரும்பியவன் என்பதையும், தனது உணர்வூட்டும் பேச்சுக்களையும் வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கும் வெறுமையை உடைத்தெறிய வந்தவர்கள் நாம் தமிழர் கட்சியினர் என்றும், புலிகளின் அரசியற் பிரிவினராகத் தாம் செயற்படுவோம் என்றும் நாம் தமிழர் கட்சி கூறுவதும், அதை ஈழத்தமிழர்கள் (யாராவது) நம்புவதும் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும். ஈழத்தமிழர் போராட்டம் தொடர்பான சீமானின் பாத்திரம் ஒரு உணர்வூட்டும் பேச்சாளார் என்பதில் இருந்து ஓர் அரசியல் தலைவராக விரிவடைவதில் இருக்கக் கூடிய ஆபத்துக்களைத் தொடர்ந்து பார்ப்போம்.

முதலில் இந்த ஆவணத்தில் பிரிவு 16. உறுப்பினர் தகுதியில் பின்வருமாறு கூறப்படுகின்றது,

அவர்கள் (உறுப்பினர்கள் – கட்டுரை ஆசிரியர்) தமிழ் நாட்டிலோ அல்லது பிற மாநிலங்களிலோ வாழ்பவர்களாக இருக்கலாம்.வெளிநாட்டில் வாழ்பவர்களாக இருப்பின் இந்திய ஒன்றியத்தின் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

அதாவது நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் இந்தியக் குடியுரிமை பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். இதன்படி ஈழத்தமிழர்கள் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக முடியாது. அப்படி இருக்கின்றபோது, இந்தியத் தமிழர்களால், அவர்களையே உறுப்பினர்களாகக் கொண்டு இயங்குகின்ற ஒரு கட்சி தம்மை ஈழப்போராட்டத்தினை கொண்டு நடத்துபவர்கள் போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்குவது மிக மோசமான ஏமாற்றுத்தனம். மேலும், புலம்பெயர் நாடுகளிலும் நாம் தமிழர், தமது கிளைகளை அமைத்து இருக்கின்றனர். அவற்றின் உறுப்பினர்களாகவும், நிர்வாகப் பொறுப்புகளிலும் ஈழத்தமிழர்களே மிகப் பெரும்பான்மையாக இருக்கின்றனர். நாம் தமிழர் கட்சிக்கான தமது பங்களிப்பை ஆற்றியும் வருகின்றனர்.

இப்போது கட்சி ஆவணத்தின் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் எவருமே அதில் உறுப்பினராக முடியாது என்பதை சீமான் தமது வெளிநாட்டுக் கிளைகளுக்கு அறிவிக்கவேண்டும். அத்துடன் சட்ட ரீதியாகப் பதிவுசெய்து இயங்குகின்ற ஓர் அரசியல் கட்சி என்ற வகையில், நாம் தமிழர் கட்சியினர் தமது வெளிநாட்டுக்கிளைகளின் நிர்வாகிகளின் பெயர்களையும், தொடர்புகொள்வதற்கான வழிகளையும் தமது இணையத் தளத்திலேயே தெரியப்படுத்தவேண்டும். தனது ஆவணத்தின்படி தனது கட்சியில் உறுப்பினராக முடியாதவர்களை தனது கட்சி உறுப்பினர்கள் என்ற பெயரில் சேர்த்து வைத்துக்கொண்டு இருப்பது, அந்த உறுப்பினர்களை அரசியல் ரீதியாகச் செயலிழந்தவர்களாக மாற்றும் செயலே அன்றி வேறொன்றில்லை.

இந்த ஆவணத்தில் முக்கியமாகக் கவனம் செலுத்தவேண்டிய விடயம் பிற இனத்தவர்கள் மீதும், “நாம் தமிழர்” என்ற பிரிவுக்குள் உள்ளடக்கப்படமாட்டாதவர்கள் மீதும் ஆவணம் காட்டும் மோசமான வெறுப்புணர்வு. இது இனங்களிடையிலான ஒற்றுமையை முற்றாக ஒழித்துக்கட்டி நாம் தமிழர் செயற்படும் இடங்களையெல்லாம் கலவர பூமியாக மாற்றக்கூடியது. உதாரணத்துக்கு ஆவணத்தில் 3வது முரண்பாடாக “தமிழியத்திற்கும் முகமதியத்திற்கும், தமிழியத்திற்கும் கிறித்தவத்திற்கும் இடையிலான முரண்பாடு” என்று குறிப்பிடப்படுகின்றது. ஈழத்தமிழரின் போராட்டத்திற்கான வெற்றிடத்தினை உடைக்க வந்திருப்பதாக சொல்லுகின்ற இந்த நாம் தமிழர் கட்சி, இப்படியான நிலைப்பாடுகள் மூலம் செய்யப் போவதெல்லாம் ஈழத்தமிழர் போராட்டத்திற்கான எல்லா தார்மீக நியாயங்களையும் குழி தோன்றிப் புதைப்பதைத்தான் என்றே தோன்றுகின்றது.

விடுதலைப் புலிகள் செய்த மிகப் பெரிய தவறுகளில் ஒன்று முஸ்லீம்களை வெளியேற்றியது. இன்றுவரை புலிகள் மீது வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாற்றுகளில் ஒன்றாக இது இருக்கின்றது. பின்னாட்களில் புலிகள் அதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டும் இருக்கின்றார்கள். சமாதான கால கட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனுக்கும், முஸ்லீம் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் ஓர் ஒப்பந்தமும் கைச்சாத்தாகி இருக்கின்றது. ஒப்பந்தத்தின் பிரகாரம் முஸ்லீம்கள் ஒரு தனித்தேசிய இனமென்கின்ற நிலைப்பாட்டுக்குப் புலிகளும் வந்திருந்தார்கள் அல்லது முஸ்லீம்களும் ஒரு தனித் தேசிய இனமென்பதைப் புலிகளும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். இன்றைய நிலையில் இலங்கைப் பிரச்சனைக்கான தீர்வு என்று சிந்திப்பவர்களும் முஸ்லீம்களை இலங்கையைப் பொறுத்தவரை ஒரு தனித் தேசிய இனமாகவே கருதி தீர்வுகள் நோக்கி சிந்திக்கவேண்டும். இலங்கையைப் பொறுத்தவரை முஸ்லீம்கள் மொழிவழித் தமிழர்களாக இருந்தாலும் தம்மை ஒரு தனித்த இனத்தவர்களாகவே அடையாளப்படுத்தி வருகின்றார்கள். (தமிழகத்து தமிழர்களின் நிலைப்பாடு இதில் இருந்து வேறுபட்டது. அவர்கள் தம்மை தமிழர்களாகவே தொடர்ந்து அடையாளப்படுத்தி வருகின்றார்கள்).

Prabharan_Hakeem_500

அண்மைக்காலமாக இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள பௌத்த தேசியவாதம் அங்கு வாழுகின்ற சிறுபான்மை இனங்கள் மீது தன் ஒடுக்குமுறைகளை மேலும் தீவிரமாக்கி வருவதோடு சம நேரத்தில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை குலைக்கும் நோக்குடனும் செயற்பட்டு வருகின்றதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இந்த நேரத்தில் அங்கு வாழுகின்ற சிறுபான்மை இனங்கள் தத்தம் உரிமைகளுக்காகப் போராடுவதுடன், தமக்கிடையே இருக்கின்ற கசப்புணர்வுகள், முரண்பாடுகளைக் களைந்து ஒருவருக்கொருவர் ஆதரவுடனும், நம்பகத்தன்மையுடனும் நடந்துகொண்டால் மாத்திரமே சிங்கள பௌத்தப் பேரினவாத அரசுக்கு அழுத்தம் தரவும், தமது உரிமைகளை தக்கவைக்கவும் முடியும். அண்மைக்காலத்தில் அறிவுசார் வட்டங்களில் இருந்து இதற்கான முன்னெடுப்புகளும் ஓரளவு நடைபெற்றே வருகின்றன. ஆனால் நாம் தமிழரின் ஆவணமோ இந்த ஒட்டுமொத்த முயற்சிகளையும் தவிடு பொடி ஆக்குவதுடன் இனங்களிற்கிடையே இருக்கின்ற பிளவை இன்னமும் ஆழவும், அகலவும் படுத்தவே முயல்கின்றனர். நாம் தமிழர் கட்சி கருதுகின்ற மேற்படி முரண்பாடு பற்றி அவர்கள் ஆவணம் தொடர்ந்து பின்வருமாறு விளக்கமளிக்கின்றது,

“3ம் முரண்பாடுகளாக முகமதியமும், கிறித்தவமும் தமிழ்த் தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை. சட்டப் பாதுகாப்பும், சொத்துடமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை; முகமதியத் தமிழரும், கிறித்தவத் தமிழரும், தங்களுடைய முதன்மை அடையாளம், தமிழ்த் தேசிய அடையாளமே என்றுணர்ந்து வருவராயின், நட்பு முரண் வகையிலும், அல்வழிப் பகைமுரண் வகையிலும் இடம்பெறுவர்; இவர்கள் எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளவேண்டிய தரப்பினர்.”

இங்கே முக்கியமான இன்னொரு விடயம் கிறித்தவர்கள் தொடர்பான நாம் தமிழர் கட்சியின் பார்வை. ஈழத்தைப் பொறுத்தவரை கிறித்தவர்கள் தம்மை மொழி சார்ந்தே அடையாளப்படுத்திக் கொள்ளுகின்றார்களே தவிர தம்மை ஒரு தனித்து அடையாளப்படுத்திக் கொண்டதே கிடையாது. தவிர ஈழத்தில் புலிகள் அமைப்பினருக்கும் கிறித்தவ மதகுருமார்களுக்கும் தொடர்ச்சியாகப் பேணப்பட்ட நல்லுறவு அனைவரும் அறிந்ததே. சமாதான கால கட்டத்தில் பிரபாகரன் குறித்து தொடர்ச்சியான பல்வேறு வதந்திகளைப் பரப்பிவந்த இலங்கை அரசு, பிரபாகரன் கிறித்தவராக மதம் மாறினார் என்றும் சிலகாலம் சுவரொட்டிகள் ஒட்டிப் பார்த்தது. இது பற்றியெல்லாம் எந்தப் புரிதலும் இன்றி எழுந்தமானத்துக்கு இது போன்ற பிரிவினைக்கு வழிகோலும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டே தம்மை ‘புலிகளின் அரசியல் தொடர்ச்சி’ என்றும், ‘தமிழீழ விடுதலைப் போரட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை உடைத்தெறிய வந்தவர்கள்’ என்றும், அலங்கார வார்த்தைகளை அள்ளி இறைக்கும் நாம் தமிழர் கட்சி ஆவணம் உடைக்கப்போவது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தையல்ல, மாறாக தமிழீழ விடுதலை பற்றி எமக்கிருக்கின்ற நம்பிக்கையையே.

இந்த ஆவணம் அள்ளி இறைக்கும் வெறுப்பை விதைக்கும் வார்த்தைகள் இத்தோடு முடியவில்லை. பிற்சேர்க்கை அ – ஆவணம் சார்ந்த முன்மாதிரி முழக்கங்களில் ‘மறக்க மாட்டோம், மறக்க மாட்டோம் மலையாளிகளை மறக்க மாட்டோம்’ என்று ஒரு முழக்கம் வருகின்றது. இந்த முழக்கம் ஈழப்பிரச்சனை தொடர்பானதாகவே அமைகின்றதையும் அறிய முடிகின்றது. ஈழப்போராட்டத்தில் இந்திய அரசிலும், ஐநா உள்ளிட்ட அமைப்புகளிலும் பங்கேற்று போரின் இறுதிக்கணம் வரை இலங்கை அரசுக்கு எந்த அழுத்தமும் வரவிடாது காபந்து பண்ணி ஒரு இனப்படுகொலையை நடத்தி முடிக்க உதவிய அமைச்சர்களிலும், அதிகாரிகளிலும் சிலர் மலையாளிகளாக இருந்தார்கள். ஆனால் அதைக் காரணம் காட்டி ஒரு இனத்தின் மீதே வெறுப்பைக் கக்கும் ஒரு முழக்கத்தை ஒரு கட்சி தன் அதிகாரப்பூர்வ முழக்கமாகவே தன் ஆவணத்திலேயே வெளியிடுவது எத்தனை மோசமானது. தமிழர்கள் மீது வெறுப்பைத் தூண்டும் பிரசாரங்களையும், அறிக்கைகளையும் வெளியிடும் சிங்களப் பேரினவாதிகளையும், சிறுபான்மையினர், வெளிமாநிலத்தவர் மீது வெறுப்பை உமிழும் சிவசேனா போன்ற அமைப்புகளையுந்தான் இந்த அறிக்கை நினைவூட்டுகின்றது.

ஈழத்தில் நாங்கள் இருந்த நாட்களில் புலிகளால் ராணுவ முகாங்கள் அழிக்கப்பட்டபோதும், இழந்த பிரதேசங்கள் மீட்கப்பட்டபோதும் ஒரு கொண்டாட்ட உணர்வு இருந்ததேயன்றி எந்தத் தனிப்பட்ட அரசியல் தலைவர்களின் மரணத்தையும் நாம் அங்கு கொண்டாடி வந்ததில்லை. பூநகரித் தாக்குதலின் பின்னர் புலிகளால் வெளியிடப்பட்ட “சிறீமா ஆச்சி பெத்த மகள் சந்திரிக்காவே..” என்ற பாடலை ஒலிபரப்புவதற்குக்கூட சில நாட்களின் பின்னர் புலிகள் தடைவிதித்திருந்தனர். இந்தப் பாரம்பரியத்தில் வந்த எமக்கு ஒரு இனத்தையே ஒட்டுமொத்தமாக விரோத மனப்பாங்குடன் சித்திகரிப்பது மிகவும் கேவலமான ஒரு செயலாகவே படுகின்றது.

இன்னொரு முழக்கம் சொல்கின்றது “கணக்குத் தீர்ப்போம், கணக்குத் தீர்ப்போம். அமைதிப்படை கணக்குத் தீர்ப்போம்” என்று. இந்தக் கோசத்தைப் பார்க்கின்றபோது எனக்கு, இந்திய இறையாண்மைக்குட்பட்டு இயங்கப்போகின்ற நாம் தமிழர் கட்சி எவ்விதம் அமைதிப்படைக்குக் கணக்குத் தீர்க்கப்போகின்றது? என்ற கேள்வி எழுகின்றது. ஈழப் போர் உக்கிரம் பெற்றிருந்தபோது பலமுறை மேடைகளில் “நானே ஈழம் சென்று போராடுவேன்” என்று வீர முழக்கம் செய்த சீமானின் இன்னுமொரு முழக்கம்போலவே இந்த நாம் தமிழர் கட்சியின் முழக்கமும் அமைகின்றது. இது போன்ற வெறும் முழக்கங்களிற்கும் நடிகர் விஜய் செய்த “நாம் புலிப்பால் குடித்த பரம்பரை. நாம் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட” என்கிற “முழக்கத்திற்கும்” அதிகம் வேறுபாடில்லை.

தவிர, “உலகின் முதன்மொழி தமிழ்; உலகின் முதலினம் தமிழர். முதன் மொழியாம் நம் தமிழின் அகவை 50,000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது” என்று பாவாணரைத் துணைக்கிழுத்துக் கொண்டு தொடங்குகின்ற ஆவணம் அதன் 54ம் பக்கத்தில்

“முன்னம் பிரிந்து திரிந்தவன் மனுநெறியன்

பின்னம் பிரிந்து திரிந்தவன் திராவிடன்

அய்ரோப்பியன், அமெரிக்கன் மேலை மனுநெறியன்

அய்யனென்னும் பொய்யன் கீழை மனுநெறியன்

தெலுங்கன் மலையாளி தென்புலத் திராவிடன்

மராட்டியன் பஞ்சாபி வடபுலத் திராவிடன்

சிங்களவன், சியாமியன் கீழைத் திராவிடன்”

என்று விரிகின்றது. இங்கே சிங்களவரை “கீழைத் திராவிடன்” என்று அறிவித்துக்கொள்ளும் நாம் தமிழர் அறிக்கை பெரியாரைக் குறிவைத்து, “ஈழத்தந்தை செல்வா உதவிகேட்டபோது சிங்களத் திராவிடத்திடம் பணிந்து போகுமாறு திராவிடம் அறிவுரை கூறியது” என்கிற அவதூறை முன்வைக்கின்றது. உண்மையில் 72ல் நடந்த அந்த சந்திப்பில் பெரியார் “ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவமுடியாது. நீங்கள் அங்கு சென்று போராடுங்கள்” என்றே கூறி இருந்தார். அதனை பெரியார் சிங்களவர்களுக்குப் பணிந்து போகுமாறு தமிழர்களைப் பார்த்துக் கூறியதாகக் கூறுவது மிகுந்த உள்நோக்கம் கொண்டது. தவிர ஆவணம் தொடர்ந்து கூறுகின்றது,

“வாக்கு அரசியல் திராவிடமோ தில்லிக் கும்பல் போட்ட தாளத்திற்கு ஏற்றவாறு, முன்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துப் பின்பகுதில் இந்தியம், சிங்களத்தோடு சேர்ந்து குழி தோண்டியது. இந்தியத் தேசியக் கட்சிகள் அனைத்தும், மனுவிய வெறியோடு (வெவ்வேறு அளவுகளில்) தமிழீழ விடுதலையை முற்றாக எதிர்த்து நின்றன, நிற்கின்றன.

பகுதிவாதத் தமிழ்க்கட்சிகள் திராவிடக் கட்சிகளின் காலடிகளில் விழுந்து, அவற்றோடு இணைந்து ஈழத்திற்கு இரண்டகம் செய்தன…”

இங்கே வாக்கு அரசியல் கட்சிகள் பற்றி இத்தனை தெளிவாகப் பேசுகின்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தான், வாக்கு அரசியல் கட்சியொன்றின் தலைவியான ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று போற்றினார், ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்றார். காங்கிரசைத் தோற்கடிக்கவேண்டும் என்பதுதான் அன்று அவரது நோக்கமாக இருந்தது என்றால் ‘ஈழத்தாய்’ என்றும், ‘இலை மலைர்ந்தால் ஈழம் மலரும்’ என்றும் புகழ்ந்திருக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. தவிர ஜெயலலிதா பற்றிய சீமானின் மென்போக்கு பலரும் பல சந்தர்ப்பங்களில் அவர் மீது வைத்த குற்றச்சாற்றே.

சென்ற மார்ச் மாதத்தில் கனடாவில் ரொரன்றோ நகரில் கூடங்குளம் தொடர்பாக ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடத்தியிருந்தோம். அதில் கலந்துகொள்வதற்கான அழைப்பு நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் விடுக்கப்பட்டிருந்தபோதும் அவர்களின் நிலைப்பாடு ‘இவ்வாறான ஒரு போராட்டத்தினை நடத்துவது ஜெயலலிதாவை எதிர்ப்பது போன்றதாகும், ஜெயலலிதா இப்போது ஈழத்தமிழர்கள் தொடர்பாக அக்கறைகொண்டவராகவே இருக்கின்றார்’ என்கிற ரீதியிலேயே அமைந்திருந்தது.

ஆவணத்தில் 57ம் பக்கத்தில் தமிழர் அழிப்புக்கூறுகளான கூடங்குளம், கல்பாக்கம் ஆகிய அணுமின் நிலையங்களை இழுத்து மூடத் தொடர்ந்து போராடுவதை கட்சியின் செயற்பாட்டுக் கொள்கையாக அறிவித்திருக்கின்ற இவர்கள் கூடங்குளம் போராட்டத்தின்போது தமது தொண்டர்களை முழுமையாகக் களமிறக்கிப் போராடினார்களா என்ற கேள்வியே எஞ்சி நிற்கின்றது. எப்படி ஈழத்தமிழர்களின் போராட்டத்தினை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் லாபங்களிற்காக பாவித்தார்களோ அதைவிடப் பன்மடங்கு லாபநோக்கம் கருதியதாகவே சீமானின் நோக்கம் இருக்கின்றது

அடிப்படை முரண்பாடுகள் என்பதில் 8வது முரண்பாடாக ஆணாளுமை – பெண்ணடிமை முரண்பாடென்று பட்டியலிட்டும், செயற்பாட்டுக் கொள்கைகளில் 12வது கொள்கையாக “மகளிருக்குச் சமபங்கு கொடுப்பது கொடையன்று, அதை அடைவது அவர்கள் பிறப்புரிமை, அதற்காகப் பாடுபடுவோம்” என்றும் அறிவித்துக் கொள்ளுகின்ற இந்த ஆவணத்தில் ஏறத்தாழ எல்லா இடங்களிலும் ஆண்பால் விகுதிகளே பாவிக்கப்பட்டிருக்கின்றதை அவதானிக்கவேண்டும். தவிர முரண்பாடுகள் என்ற பட்டியலில் தமிழ்த் தேசிய முதலாளிகளுக்கும் பிற தேசிய முதலாளிகளுக்குமான பிரச்சனையை எல்லாம் கடந்து சாதீயம் பட்டியலில் 7வதாக வருவதோடு அதை ஒரு மேற்கட்டுமானப் பிரச்சனை என்றே ஆவணம் தெரிவிக்கின்றது. இப்படியான முரண்கள், திரித்தல்கள், புரட்டுக்களே இந்த ஆவணத்தை நிறைத்து நிற்கின்றன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை நிரப்ப வந்திருப்பவர்களாகவும், புலிகளின் அரசியல் தொடர்ச்சியாகவும் தம்மைக் காட்டிக்கொள்ளுகின்ற நாம் தமிழரின் உண்மையான, மொழிப் பாசிச, இனவாதத்தைத் தூண்டுகின்ற முகத்தை இந்த ஆவணம் அம்பலப்படுத்தி நிற்கின்றது. இப்படிப்பட்ட மோசமாக, இனவாதத்தைத் தூண்டுகின்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளங்களான புலிச் சின்னத்தையும், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தையும், புலிகளின் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி..’ பாடலைத் தமது உறுதிமொழியாகவும், புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தையும், பேரையும் தொடர்ந்து தமது மேடைகளிலும், ஆவணங்களிலும் உபயோகிப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் எல்லாத் தார்மீக நியாயங்களையும் குழிதோண்டிப் புதைப்பதாகவே அமையும். இந்த ஆவணத்தின்படி நாம் தமிழர் கட்சி தொடர்ந்து இயங்கினாலோ அல்லது வெறுமே பெயருக்கு ஆவணத்தைத் திருத்திவிட்டு இதே மனப்பாங்குடன் தொடர்ந்து செயற்பட்டாலோ ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் அக்கறை கொண்டிருப்பவர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆகப்பெரிய சவாலாக நாம் தமிழர் கட்சியும் அதன் செயற்பாடுகளுமே இருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

- அருண்மொழிவர்மன்

Comments

25 comments

25
Kumaravel
ராஜபக்சேவின் இனவாத அரசியலுக்கும், சீமானின் இனவாத அரசியலுக்கும் நூலளவு வித்தியாசம்தான் உள்ளது. அது சிங்கள இனவாதம், இது தமிழ் இனவாதம்..
டான் அசோக்
அருமையான, தெளிவான கட்டுரை.
kagankovai
மிகவும் சிந்திக்கவேண்டிய க்ட்டுரை, இதை நாம்தமிழ்ர் கட்சி உண்ர்ந்து கொள்ளா வேண்டும்"
சிவக்குமார்
நாம் தமிழரின் கட்சி ஆவணத்திற்கே இத்தனை எதிர்ப்பு காட்டும், இனவாத எதிர்ப்புப் பெரியாரிய தமிழ்தேசியவாதிகள், புலி ஆதவாளர்கள், புலிகள் வலுவாக இருந்த காலத்தில் அவர்கள் அரசியல் மீதும், ஈழத் தமிழ்தேசியவாதிகளின் இனவாத அரசியல் மீதும் கடைப்பிடித்த கள்ள மௌனம் நினைவுக்கு வருகிறது. தற்போது சீமானை நோக்கி வைக்கப்படும் விமர்சனஙகள் கேள்விகள் அனைத்தும் விடுதலைப் புலிகள் மீதும் வைக்கப்பட்டன. அவர்களையெல்லாம் துரோகிகள் என்ற ரேஞ்சில் எதிர்த்தனர். கருணாநிதியையே பாசிஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு ஜனநாயக உணர்வுள்ளவர்கள் புலிகள் மீது மட்டும் சிறு கீறல் விழாமல் பார்த்துக் கொண்டனர். அவர்களே தற்போது சீமானின் கட்சி ஆவணத்தை பாசிசம் என்பது முரண்நகை. தற்போது சீமானைத் திருத்த முயல்பவர்கள், புலிகள் அரசியல் மீது விமர்சனம் வைத்து அவர்களின் அரசியல் தவறுகளை சுட்டிக் காட்டி அவர்களை நேர்வழிப்படுத்த முயற்சிக்காமல் அவர்களைப் புகழ்வதே கடமையாகிக் கிடந்தனர் என்பது ஏனோ நினைவுக்கு வருகிறது
முகிலன்
இங்க பாருப்பா! புலி எதிர்ப்பு பெருச்சாளி ஒன்னு கீச்சு கீச்சுன்னு வந்துட்சு!

அந்தப் பக்கம் பாசிசம் பத்தி ஒரு கட்டுர வந்துருக்கு. அத படிச்சுப்போட்டு புலி பாசிஸ்ட்டான்னு வெளக்கஞ்சொல்லேன்.
சம்பூகன்
ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் அக்கறை கொண்டிருப்பவர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆகப்பெரிய சவாலாக நாம் தமிழர் கட்சியும் அதன் செயற்பாடுகளுமே இருக்கும்
Guest
யார் சொன்னாலும், எங்கு படித்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும் பொது அருவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே .
இலக்கியவாசகன்
**** மொழி வர்மா! உனக்கு என்னப்பா பிரச்சன? நீ எழுதியுள்ள கட்டுரை மேலோட்டமாக வாசிப்பவர்களுக்கு ஏதோ விடயங்களை அலசி ஆராய்ந்த ஒரு மருட்கையை உண்டுபண்ணுகிரபோதும் அதில் முழுவதும் பொய்யும் புரட்டுமே பீய்ச்சி விடப்பட்டுள்ளது தமிழகத்தமிழர்களுக்கு தெரிய வாய்ப்பில்லைத்தான்! பாவம் உனக்கு வகுப்பெடுத்த ஈழத்தமிழர் சிறிமா ஆச்சி பாடல் எப்போ ஏன் வெளிவந்தது என்றும் சரியாக சொல்லித்தரவில்லை! பாவம் அந்தப்பாடல் தடை செய்யப்பட்டது என்று மிகவும் தவறான தகவலையும் தந்து உன்னை காட்டிக்கொடுத்துள்ளார்! நீ மணியண்ணன் ஆளோ அல்லது வீரமணி, சுபவீ அணி வகையறா என்பது மிகவும் வெளிப்படையாகவே தெரிகிற போதும் அரும்பாடு பட்டு அதை மறைத்துவிட்டாய்! போகட்டும் உனக்கு சொல்லக் ௯டியது '' நீ இதுக்கு சரிப்பட்டு வரமாட்ட வீட்ட்டில யாரும் பெரிய ஆக்கள் இருந்தால் ௯ட்டிவா'' [குறிப்பு நான் சீமான் அடிவருடி அல்ல ஆனால் பொய்களுக்கு எதிரான ஒரு தமிழ்க்குடி மகன்! -நன்றி]
raja
சிவசேனா போன்ற அமைப்புகளையுந்தான் இந்த அறிக்கை நினைவூட்டுகின்றது. If you read Muthukumarn's last letter he furnished this point.He stated that "i afraid in tamilnadu the parties like Sivasena will be emerge in future.........

Seeman make it true......without understnd the working clause and nationalism(Based on Language)......
viyasan
ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலிருக்கும் ஆதரவு தான் இலங்கை அரசுக்கு இன்றுள்ள மிகப்பெரிய தலைவலி. அதை இல்லாமல் செய்வதற்கு அல்லது நலிவடையச் செய்வதற்காக, ஈழத்தமிழர்களையும், தமிழ்நாட்டுத் தமிழர்களையும் பிரிப்பதற்காக இலங்கை அரசால், புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் விலை போயுள்ளார்கள்.

செந்தமிழன் சீமான ஒருவர் தான் இன்று திராவிட மாயையிலிருந்து தமிழ்நாட்டுத் தமிழர்களை விடுவிக்கப் போராடுகிறார் என்பது மட்டுமல்ல, ஈழத்தமிழர்களின் நலன்களிலும் சுயநலமற்ற உறுதி கொண்டுள்ளார்.

நாம் தமிழர்களின் ஆவணம், பல தமிழர்களும் பேசத்துணியாத உண்மைகளைத் துணிந்து பேசுவதால், அதைக் கொண்டே சீமானின் செல்வாக்கை ஒழிக்கலாம் என்ற கனவோடு சிலர் புறப்பட்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது.

தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கட்சிகளையும் விட நாம் தமிழர் கட்சி ஈழத்தமிழர்களின் நலன்களில் அக்கறை கொண்ட்து மட்டுமல்ல, புதிய அரசியல் கட்சியாகவும் இருப்பதால், ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்தமைக்கு வரலாறு எதுவும் கிடையாது, அதை விட, திராவிட மாயையை தவிர்த்து விட்டு , தமிழர்களின் கட்சியாக, தமிழர்களின் நலன்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும் கட்சியாக இருப்பதால், பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள், செந்தமிழன் சீமானில் நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையையும் ஆதரவையும் கொண்டு நாம்தமிழர் கட்சியை திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கு, ஒரு அரசியல் கட்சியின் தலைவரான சீமானுக்கு இருப்பதில் என்ன தவறு. அதில் எங்கே குறுகிய நோக்கும், முழுச்சுயநலமும் உள்ளது?

பெரியாரின் தவறுகளை, அவரது சில செயற்பாடுகள், எவ்வாறு எதிர்மறையான தாக்கத்தை தமிழர்களுக்கு ஏற்படுத்தியது என்பதை விமர்சிக்கும் உரிமை, தமிழன் என்ற வகையில், சீமானுக்கும், அவரது கட்சியினருக்கும் கிடையாதா? அதை விட, பெரியாருக்கும், சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவை என நம்பும் ஈழத்தமிழர்களுக்கும் அப்படியென்ன பெரிய தொடர்பிருக்க முடியும். பெரியார் எந்தவகையில் ஈழத்தமிழர்களின் சமூக அரசியல் போராட்டங்களுக்குப் பங்காற்றினார்? இன்றும் பெரும்பான்மையான ஈழத்தமிழர்களுக்குப் பெரியார் என்றால் யாரென்றே தெரியாதென்பது தான் மறுக்க முடியாத உண்மையாகும். பெரியாரை, சீமானும் அவரது கட்சியும் விமர்சிப்பது எப்படி "ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் ஆகப்பெரிய சவாலாக முடியும்" என்பது அருண்மொழிவர்மனுக்கு மட்டும் தான் வெளிச்சம்.

தமிழ்நாட்டின் ஏனைய திராவிடக் கட்சிகளைப் போலல்லாது, தமிழர்களுக்காக, தமிழர்களின் நலன்களை மட்டும் முன்னிறுத்தி, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை ஒருங்கிணைத்து, ஈழப்போராட்டத்துக்குப் பக்கபலமாக இருப்பது தான் நாம் தமிழர் கட்சியினதும் தலைவர் சீமானது நோக்கமே தவிர ஈழப்போராட்டத்தினை வழி நடத்துவதல்ல. தமிழ்நாட்டின் பலம் வாய்ந்த, மக்களாதரவுள்ள இயக்கமாக நாம் தமிழர் கட்சியை வளர்த்துக் கொண்டு, அந்த சனநாயகபலத்தினூடாக இந்திய மத்திய அரசை ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கச் செய்வதும், ஈழத்தமிழர்களின் நலன்களுக்கெதிராக செயல்படாமல் தடுப்பதுமே சீமானதும், நாம் தமிழர் கட்சியினதும் நோக்கமாகும். தமிழ்நாட்டு மக்களால் வழங்கப்பட்ட சனநாயக பலமிருந்தும் ஈழத்தமிழர்களை மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழர்களின் நலன்களையும் பாதுகாக்க திராவிடக் கட்சிகள் தவறியதால் தான் நாம் தமிழர் என்ற இயக்கம் ஒரு அரசியல்கட்சியாக உருமாறியது.

அப்படியிருக்க ஏதோ சீமான் ஈழப்போராட்ட்த்தை கொண்டு நடத்த விளைவது போலவும், அப்படிச் செய்தால் ஈழப்போராட்டம் வலுவிழந்து போய் விடுமென்றும் , இல்லாத ஒன்றைக் கற்பனை செய்வது மட்டுமல்ல, அதற்காக ஆதங்கத்தையும் தெரிவிக்கும் மாய்மாலத்தில் மறைந்திருக்கும் மாயமென்ன?

அரசியலிலும் உலகநடப்புமறிந்த் எந்தவொரு ஈழத்தமிழனும் நாம் தமிழர் கட்சியோ அல்லது எந்த திராவிடக் கட்சியோ ஈழப்போராட்ட்த்தைக் வழி நடத்த முடியுமென்றோ அல்லது தலைமை தாங்க முடியுமென்றோ நினைக்கவும் மாட்டான். அப்படியொரு தோற்றத்தை நாம் தமிழர் இயக்கம் உருவாக்க முனைவதாகக் கற்பனை கூடச் செய்ய மாட்டான்.. சீமானின் நாம் தமிழர் கட்சியின் நோக்கம், எண்ணிக்கையில் பலம் வாய்ந்த, ஆனால் திராவிட மாயையில் பிளவுண்டு கிடக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களை ஒன்றிணைத்து ஈழவிடுதலைக்கு ஆதரவளிப்பது மட்டும் தான். அந்த உயரிய நோக்கத்தை வசைபாட முனைவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

நாம் தமிழர் இயக்கம், இந்தியாவின் அரசியல் கட்சியாக உருமாறிய பின்னால் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் இந்தியக்குடியுரிமை பெற்றவர்களாக இருத்தல் வேண்டுமென்பது எப்படித் தவறாக முடியும். வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினரும், வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர்களும் கூட இந்தியாவில் முதலீடு மட்டும் தான் செய்ய முடியுமே தவிர அரசியலில் ஈடுபடமுடியாது, அப்படியிருக்க ஒரு அரசியல் கட்சியாகிய நாம் தமிழர் கட்சியின் ஆவணம், இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டும் தான் உறுப்பினராகலாம் என்று கூறுவது ஏதோ ஈழத்தமிழர்களுக்கு எதிரானது போலவும், அல்லது ஈழத்தமிழர்களுக்கு இது தெரியாது போலவும் படம் காட்ட முனைவதன் உள்நோக்கம் என்னவாக இருக்க முடியும்.

ஈழத்தமிழர்களின் முந்தைய தலைமுறையினரில் பலர் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி போன்ற தலைவர்களில் நட்பும் நம்பிக்கையும் வைத்திருந்தது மட்டுமல்ல, அவர்களின் கட்சிகளின் ஆதரவாளர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்களெல்லாம் திராவிடக் கட்சிகளின் உறுப்பினர்களல்ல, தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட்டதுமில்லை. அதனால் உறுப்பினர்களாகமலே ஈழத்தில் வாழும் தமிழர்களும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் சீமானதும், நாம் தமிழர் கட்சியினதும் ஆதரவாளர்களாக தொடர்வதில் எந்தவித தவறுமில்லை. .இந்தியாவின் அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் இந்தியக் குடியுரிமை இல்லாமல் இந்தியாவில் அரசியல் நடத்த விரும்பும் முட்டாள்களல்ல, அதனால் நாம் தமிழர் ஆவணத்தில் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் மட்டும் தான் உறுப்பினர்களாகலாம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது, வெளிநாட்டுக் கிளைகளில் நிர்வாகிகளாக இருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களை "அரசியல் ரீதியாகச் செயலிழந்தவர்களாக மாற்றும் செயல்" என்பது வெறும் விதண்டாவாதமேயாகும்.

இலங்கையில் தமிழியத்திற்கும் கிறித்தவத்திற்கும் இடையிலான முரண்பாடெதுமில்லாத போதிலும், தமிழியத்துக்கும் முகமதியத்துக்குமிடையில் பாரிய முரண்பாடுண்டு என்பதை யாவருமறிவர். 13 ஏப்ரல் 2002 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் கைச்சாத்திடப்பட புரிந்துணர்வு (மேலேயுள்ள படம்) அறிக்கையில் முஸ்லீம்கள் தனித்தேசிய இனம் என்ற வார்த்தைகளே இடம்பெறவில்லை. ஆனால் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றியதற்கு பிரபாகரன் பெருந்தன்மையுடன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது மட்டுமல்ல, என்ன காரணங்களுக்காக முஸ்லீம்களை வெளியேற்றும் முடிவெடுக்கப்பட்ட்து என்பதற்கு விளக்கமும் அளித்தார் ஆனால் இன்றுவரை எந்த முஸ்லீமாவது. சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து கொண்டு முஸ்லீம் ஊர்காவல் படையினர் தமிழர்களைக் கொன்றதற்கும், தமிழ்ப்பெண்களைக் கற்பழித்ததற்கும், கிழக்கிலுள்ள பல தமிழ்க்கிராமங்களை வேரோடு அழித்தமைக்கும், முஸ்லீம் நாடுகளின் உதவிகளை சிங்கள அரசுக்குப் பெற்றுக் கொடுத்து தமது தமிழ் பேசும் சகோதர்களை அழிக்க உதவியமைக்கும் குறைந்தபட்சம் வெறும் மன்னிப்பாவது கேட்டதுண்டா?

இலங்கை முஸ்லீம்கள் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்தாத போது, தமிழியத்துக்கும், முகம்மதியத்துக்குமுள்ள முரண்பாட்டை நாம் தமிழர் ஆவணம் பேசுவதில் என்ன தவறு. இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் எத்தனை பள்ளிவாசல்கள் சிங்களவர்களால் இடிக்கப்பட்டாலும், தமது பொருளாதார நலன்களுக்காக சிங்களவர்களுக்கே ஆதரவளிப்பார்கள், அவர்கள் தமிழர்களின் முதுகில் குத்துவதற்கு ஒரு போதும் தயங்க மாட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அத்தகைய முரண்பாட்டை நாம் தமிழர் ஆவ்ணம் துணிச்சலுடன் குறிப்பிடுவதில் என்ன தவறு?

தொடரும்.
சம்பூகன்
மிக அருமையான,செறிவான,தெளிவான கட்டுரை.எடுத்துக் கொண்ட தகவல்கள் அனைத்தும் உண்மையே.இன்றைய மற்றும் நாளைய சூழலில் ஈழவிடுதலைப் போரை எந்த வகையில் முன்னெடுக்கவேண்டும் என்பது பற்றிய தெளிவான பார்வை இக்கட்டுரையாலரிடம் புலப்படுகிறது.பொறுப்புணர்ந்து ஈழச்சிக்கலை அணுகியிறுக்கிறார்.அரசியல் என்பதே அந்தந்தக் காலகட்டத்தைப் பொறுத்து முடிவெடுப்பதுதான்.அதனை சரி வரப் புரியாமல் பிடிவாதப் போக்குடன் முடிவெடுத்ததால்தான் பிரபாகரனின் போர் தோல்வியில் முடிந்தது.இது கலாம் உணர்த்திய உண்மை.இச்சூழலில் வடக்கு கிழக்கு தமிழர்கள்,மலையகத்தமிழர்கள்,தமிழ் முஸ்லீம்கள் மற்றும் அனைத்து ஜனநாயக தமிழ் இயக்கங்களின் ஒருங்கிணைப்பும்,தமிழகத்தில் அனைத்து அரசியல் இயக்கங்களின் ஆதரவுமே தமிழீழத்தை நோக்கி நம்மை நகர்த்தும்.இதனை அறியாது முன்னுக்குப் பின் முரண்,குழப்பம்,இனவெறிப் பாசிச முழக்கம்,தமிழர் எழுச்சியின் அடையாளமான தலைவர் தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்தல்,எந்நாளும் சிங்கள ஆதரவுப் பார்ப்பனர்களுக்கு ஆதரவு என தமிழர்களுக்கு முற்றிலும் எதிரான பச்சை சுயநல அரசியலையே நாம் தமிழர் ஆவணமும்,சீமானும் முன்வைப்பதாகும்.
Inimai
[குறிப்பு நான் சீமான் அடிவருடி அல்ல ஆனால் பொய்களுக்கு எதிரான ஒரு தமிழ்க்குடி மகன்! -நன்றி]
எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லைங்கறது இதானோ
இலக்கியவாசகன்
சம்பூகன் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் அக்கறை கொண்டிருப்பவர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆகப்பெரிய சவாலாக நாம் தமிழர் கட்சியும் அதன் செயற்பாடுகளுமே இருக்கும்//// இதோ அடுத்த கண்டுபிடிப்பு! எதுக்கு இப்பிடி கேவலமான கருத்துக்களை காவித்திரிகிறீர்கள் என்பதை முதலில் வெளிப்படுத்துங்கள்! நீங்கள் சொல்லும் அக்கறை நிச்சயமாக கலைஞர் ''புதுப்பித்துள்ள'' டெசோ போன்ற அக்கறை என்பது வெளிப்படையாக தெரிகிறது! அதை எதுக்கு வார்த்தைகளுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு?
இலக்கியவாசகன்
யார் சொன்னாலும், எங்கு படித்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும் பொது அருவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே .//// தமிழ் நாட்டின் கல்வியறிவு வீதம் என்ன? அதிலும் வெட்டிப்போட்டாலும் இந்தக்கட்சிக்கே வாக்களிப்போம் என்கிற உயர்ந்த உள்ளம் கொண்டோர் எத்தனை சதவீதம்? எஞ்சிய மக்களில் இதில் ரெண்டும் கெட்டான் போக எஞ்சுபவர்களிடம் உங்கள் ஞானோபதேசம் போய்ச்சேர்வது நல்லதொரு விடயம் அண்ணே கீப் கண்டினியு
இலக்கியவாசகன்
முன்னுக்குப் பின் முரண்,குழப்பம்,இனவெறிப் பாசிச முழக்கம்,தமிழர் எழுச்சியின் அடையாளமான தலைவர் தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்தல்,எந்நாளும் சிங்கள ஆதரவுப் பார்ப்பனர்களுக்கு ஆதரவு என தமிழர்களுக்கு முற்றிலும் எதிரான பச்சை சுயநல அரசியலையே நாம் தமிழர் ஆவணமும்,சீமானும் முன்வைப்பதாகும்.///// தந்தை பெரியார் ''தமிழர்'' எழுச்சியின் அடையாளமா? எப்போதிருந்து? அநியாயமாக பகுத்தறிவின்றிய கருத்துக்களோடு வந்து பெரியார் சொன்ன பகுத்தறிவு என்கிற அரிய விடயத்தையும் குழி தோண்டிப்புதைக்க வேண்டாம்! சமுக விடுதலை பெண் விடுதலை போன்ற தளங்களில் பெரியார் எவ்வளவு தூரம் உழைத்தாரோ அதே அழவுக்கு பார்ப்பன எதிர்ப்பு என்கிற ஒற்றை காரணத்திற்க்காக பார்ப்பனை விட கேவல புத்திகொண்ட மலையாளி தெலுங்கன் கன்னடன் எல்லோரையும் இணைத்து ''திராவிடம்'' என்கிற தரித்திரத்தை தமிழன் தலையில் கட்டியவர் அவரே தான்! நீங்கள் சொல்லும் எழுச்சியின் அடையாளமாக அவர் இருந்திருந்தால் பார்ப்பனை எதிர்க்கும் அதே வேலை தனித்தமிழ் தேசியத்துக்காக அவர் ''திராவிடத் தமிழர்'' அல்லது ''தமிழ்த் திராவிடர்'' என்றாவது முன்மொழிந்திருக்க வேண்டும்! செய்தாரா? பெரியார் பார்ப்பனரில் இருந்து தமிழனைப் பிரித்து வேறு ஒரு திருட்டு ௯ட்டத்துடன் இணைத்துவிட்டு பகுத்தறிவுப் பாதையையும் காட்டிவிட்டார்! அவ்வளவுதான்! பெரியாரைப் போற்றுகிறோம் பேர்வழின்னு ஆரம்பிச்சு பெரியாரை தமிழரின் எழுச்சி வடிவம் என்றால் அதைவிட மட்டமான அரசியலறிவு வேறு இருக்க முடியாது! கால்நடை என்பதற்காக குதிரையையும் கழுதையையும் ஒரே பட்டியில் அடைத்ததன் விளைவு தான் கோவேறு கழுதைகளும், கழுதைகளும் [குதிரைகளாகிய] தமிழ் நாட்டை /தமிழனை ஆள்கின்றன என்பதை யாராவது மறுக்க முடியுமா?
நாம் தமிழர் ஆவணத்தில் தவறு இருக்கிறது அல்லது வழுக்கள் இருப்பது ஏற்றுக்கொள்ளக் ௯டியதே! அதற்காக பெரியாரை எதிர்க்கிறார் பெரியார் தமிழர் எழுச்சியின் அடையாளம் என்பதெல்லாம் சீமான் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியே தவிர உண்மையான இனம் சார்ந்த நலன் கருதியல்ல! இப்படியான அடிப்படை அற்ற கருத்துக்களுக்கு ''கீற்று'' இடம் கொடுக்கக் ௯டாது என கேட்டுக்கொள்கிறேன்! [நான் தமிழ் சோறு 2 facebookகுழுவில் ஒரு நிர்வாகியாக இருக்கிறேன் விரும்பினால் அங்கு வந்து பார்க்கவும் யாரோட அப்பன் குதிருக்குள் என்று!-நன்றி]
viyasan
//பெரியார் பார்ப்பனரில் இருந்து தமிழனைப் பிரித்து வேறு ஒரு திருட்டு ௯ட்டத்துடன் இணைத்துவிட்டு பகுத்தறிவுப் பாதையையும் காட்டிவிட்டார்! அவ்வளவுதான்! பெரியாரைப் போற்றுகிறோம் பேர்வழின்னு ஆரம்பிச்சு பெரியாரை தமிழரின் எழுச்சி வடிவம் என்றால் அதைவிட மட்டமான அரசியலறிவு வேறு இருக்க முடியாது! ///

மறுக்க முடியாத உண்மை அதனால் தான் தமிழ்நாட்டில் மலையாளிகளும், தெலுங்கர்களும் மாடி வீடுகளில் வாழ உண்மையான தமிழன் சேரியில் உழல்கிறான். தமிழ்நாட்டுக்குப் போகும்போதெல்லாம் சரி, ஒரு தமிழனுடைய உணவகத்தில் சாப்பிடுவோம், ஒரு தமிழனின் வர்த்தகத்தை ஆதரிப்போம். என்றால் மருந்துக்குக் கூட அப்படி எதையும் காணமுடியாது, மூலைக்கு மூலை மலையாளிகளின் கடைகள் தான். அதில் கூலிகளாக மட்டும் தான் தமிழர்களைக் காணலாம். சென்னையில் ஒருநாள் ஓரு மலையாளியின் கடையிலிருந்து பழச்சாறருந்திக் கொண்டிருக்கும் போது, திருமுருகனின் மே 17 இயக்கத்தினால் ஈழத்தமிழர்களுக்காக மரினாவில் நடக்கப்போகும் கூட்டத்துக்கு விளம்பரம் ஒட்டப்பட்டு, அது காயமுன்னரே, அந்தக் கடையிலிருந்த பையன் (முதலாளியின் கண்ணசைவுடன்), வீதியைக் கடந்து போய் உரித்து நிலத்தில் போட்டு விட்டு வந்ததை என் கண்ணால் பார்த்து, தமிழ்நாட்டுக்குள்ளேயே இவ்வளவு தமிழர்களுக்கு இவ்வளவு எதிரிகளா என நினத்து வேதனைப்பட்டது தான் மிச்சம்.
ஷாலி
ஐயா, அருண்மொழிவர்மன் அவர்களே! தங்கள் கட்டுரை உள்ளங்கை நெல்லிக்கனியாக உண்மைகளை உரைக்கிறது.வாழ்த்துக்கள்.

சீமான் அபிமானிகளுக்கு இது கசக்கவே செய்யும் ஏனென்றால் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதை மறந்து ‘இனத்துவேச ஏற்ப்பாடாக’ அவர்களது ஆவணம் உள்ளது.தமிழ் ஹிட்லர் சீமான் வந்துவிட்டார்.

‘தீதொன்றும் அறியே பிறர்தரவாரா”
என்பதற்கிணங்க இனி தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு தீங்கு வேறு எவராலும் வராது நாம் தமிழர்களிளிருந்தே வரும் என்பதை முன்னறிவிப்பாக ஆவணம் காட்டுகிறது.

பொதுவாக பெரியவர்கள் சொல்லுவார்கள் “சின்னப்புள்ளே வெள்ளாமை வீடு வந்து சேராது” சிறுபுள்ளே சீமானின் திரைக்கதை ஆவணத்தை நாம் கண்டுகொள்ளத்தேவயில்லை.விடுங்கள் விளையாடட்டும். விளையாட்டுப்புள்ளே
thamizh
அருன்மொழிவர்மன் அவர்கலே நீங்கள் ஈழ தமிழர் என்பது பச்சை பொய் எந்த ஈழ தமிழனும் தனக்காக எந்த வடிவில் போராடினாலும் அந்த போராலியை விமர்சனம் செய்வது அவனின் குனம் அல்ல நான் உண்மையான ஈழ தமிழனை சந்திக்காதவன் அல்ல
இறைகற்பனைஇலான்
என்று முடியுமோ இந்த திராவிட மாயை என்கிற மாயை.இது கால் தூசுக்குப்பொறாத மாயை.
அதிருக்கட்டும், பெரியார் ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியுமா? என்று கேட்டார் என்று கருணாநிதி சொன்னதை வைத்து ஆவணம் தயாரிப்பது பார்த்தால் இவர்களின் அறிவு நாணயம் கிழிந்து தெரிகிறதே.
பெரியார் அந்தவார்த்தியுடன் “நான் ஆட்சியில் இருந்தால் ஆயிரம் போலீசை அனுப்பி உங்களுக்கு உதவி இருப்பேன்” என்று சொன்னதை ஏன் மறைக்கிறார்கள். பாவம் அவர்கள் கருணாநிதித் தாக்கம் உடையவர்கள் . பெரியாரின் நோக்கம் புரிந்துகொள்ள அஞ்ம் கோழைகள்.போலீசை அனுப்புவேன் என்று சொனனதற்கு அமிதலிங்கத்தின் வாய்மொழி ஆதாரம் கையில் இருக்கிறது.பேதைகள் தன் அரிப்பை சொரிந்து கொள்வது என்று முடிவில் ஓய்வு பெற்று வந்த காசை வைத்துக்கொண்டு பெரிய மனிதனாக தம்மை கற்பனை செய்து கொண்ட சிலரின் ம்ண்டைக்கசடை வைத்து விளையாடிவருகின்றார்கள்.உலகில் உள்ள கோயில்களில் 85% கொஇல் கட்டிய ஈழத்தமிழரும் இவர்கள் பாடும் பாட்டுக்கு சுதி சேர தெம்போட்டுகிறார்கள் என்பது பரிதாபமானது. தாம் என்ன செய்கிறோம் என்று அறியாமல் தமிழ் இனத்திற்கு அழிவுப்பாதையை செப்பனிடுகிறார்கள்.
viyasan
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற எமது தமிழ் முன்னோர்கள் தான் "நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்" என்றும் பொங்கியெழுந்தார்கள். தமிழர்களின் கை தமிழ் மண்ணில் ஒங்கியிருக்கும் போது, தமிழன் தமிழ்மண்ணை ஆளும் போது, தமிழர்கள் அமைதியையும், தமது மண்ணின் வளத்தையும் அனுபவிக்கும் போது உலகமனைத்தையும் எமது உறவாக அரவணைப்போம், ஆனால் தமிழர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் போது, தமிழ் மண்ணிலேயே, தமிழர்களின் பகைவர்கள் பலமடையும் போது "நாமார்க்கும் குடியல்லோம் " எனப் பொங்கியழுவோம். இது தான் எமது தமிழ் முன்னோர்களின் அரசியல் தத்துவம். செந்தமிழன் சீமான் இன்று நாமார்க்கும் குடியல்லோம் என்பது காலத்தின் கட்டாயம் என்பதை உண்மையான தமிழர்கள் புரிந்து கொள்வார்கள், மற்றவர்களைப் பற்றி நாம் தமிழர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
ஷாலி
“தமிழன் தமிழ்மண்ணை ஆளும் போது,தமிழர்கள் அமைதியையும்,தமிழகமண்ணின் வளத்தையும் அனுபவிக்கும்போது உலகமனைத்தையும் எமது உறவாக அரவணைப்பார்களாம்.தமிழர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும்போது “நாமார்க்கும் குடியல்லோம்”என பொங்கி எழுவாரம் திரு.வியாசன்.

.ஐயா,.என்று தமிழ்தேசம் அமைதியாக இருந்தது,சங்ககாலத்திலிருந்து உங்கள் காலம் வரை, அன்று சேர,சோழ,பாண்டியர்கள் மாறி மாறி சண்டைபோட்டு மக்கள் அமைதியை கெடுத்தார்கள்.உங்க காலத்திலேயே தென் மாவட்டத்திலிருந்து ,மதுரை பரமக்குடி,கலவர பூமியாக உள்ளது.
இதில் உத்தமபுரம்,பாப்பாரப்பட்டி,கீரிப்பட்டி எல்லாம் அடக்கம்.

இனி சீமான் கோமானாக பட்டம் கட்டும்போதும் இதுதான் தொடரும்.”நாமார்க்கும் குடியல்லோம்” என்று தேவரும் பள்ளரும் அடித்திக்கொண்டு சாகப்போகிரார்கள்.”நாம் தமிழர்” என்று நீங்கள் உரக்க ஒப்பாரி வையுங்கள்
viyasan
சாலிவின் தமிழர்களின் சாதிப்பிரச்சனைகள் பற்றிய புலம்பலுக்கு ஏலவே பதிலளித்த பின்பும் கிளிப்பிள்ளை போல் மீண்டும் மீண்டும் அதையே ஒப்பிக்கிறார். தமிழர்களிடையே சாதிப்பிளவுகள் உண்டு அவை ஒழிக்கப்பட வேண்டியவை. ஆனால் எங்களின் பிளவுகள் தான் தமிழரல்லாதாரின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் ஓங்கியிருப்பதன் காரணம். முதலில் எமது பிளவுகளை மறந்து, நாம் தமிழராக இணைந்து தமிழ்மண்ணின் அரசியலையும், பொருளாதாரத்தையும் தமிழரல்லாதாரிடமிருந்து மீட்போம். அது ஒன்று தான் தாய்த்தமிழகத்தின் மக்களின் நலன்களுக்கு மட்டுமல்ல, சேய்த்தமிழகத்தில் இன்னொரு முள்ளிவாய்க்காலைத் தடுக்கவும், உலகமெலாம் பரவியிருக்கும் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் வழிவகுக்கும் என ஒரு சிந்திக்கத் தெரிந்த செந்தமிழன் உணர்ந்து கொண்டான். அதைச் செயலாக்கத் துணிந்த அத் தமிழ்ச்சீமான் தமிழர்களனைவரையும் தன்னோடிணையுமாறு அழைப்பதையும், அதற்குத் தமிழர்கள் செவிமடுப்பதையும் பார்த்துப் பொறுக்க முடியாமல், தமிழர்களின் பொற்காலமாகிய சேர, சோழ, பாண்டியர்களின் காலத்தை வெறும் சண்டைக்காலமாக மட்டும் திரித்தது மட்டுமல்ல, தமிழன் சாதி வெறியால் அடிபட்டுக் கொண்ட ஊர்களின் பெயர்களை எல்லாம் துணைக்கழைத்துக் கொண்டு சாலியிடும் ஓலத்தைச் சகிக்க முடியவில்லை.
avudaiappan
பெரியார் ஒரு கன்னடெர் ..தமிலர் தலைவர் அல்ல ..ஷிமான் ஒரு டமிலர் ...
ஆறுமுகம்
திராவிடத்தின் பெயரில் 30 ஆண்டுகளாக இருந்த தமீழ அரசு வீழ்த்தப்பட்டது. 175000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதை திராவிடம் தடுத்தா? தமிழரை கொல்ல திராவிட மலையாளிகள் தான் அதிகம் அக்கறை கொண்டனர் என்பதை கட்டுரையாளர் அறிவாரா? திராவிடத்தின் பெயரில் தமிழன் செத்தது போதாதா? இன்னும் சாக வேண்டுமா? ஏமாற வேண்டுமா? கொலைகாரர்களுடன் இன்றும் கூட்டுவைத்துள்ள திராவிடத்திற்க்கு துணை போவதுதான் தமிழர்கள் போராட்டத்திற்க்கு தீர்வா? கட்டுரையாளர் நாம் தமிழரை கண்டு அஞ்சுவதேன் ? வியாபாரம் இனி போனியாகாது என்பதாலா ? எத்தனை காலம்தான் திராவிடத்தின் பெயரில் தமிழனை சுரண்டுவீர்கள் கொலை செய்வீர்கள்? விரோதிகளாக காணும் மலையாள கன்னட திராவிட குஞ்சுகளை திராவிடத்தின் பெயரில் ஆதரிக்க செய்ய முடியுமா? அஸ்திவாரம் ஆட்டம் காணுவதை கண்டு பயம் என்பது இங்கு நாம் தமிழரை எதிர்த்து தொடர்ந்து வெளியிடப்படும் சீமான் ஒரு மாபெரும் சக்தியாக மாறிவருகிறார் என்று கட்டுரைகளே ஆதரம்.
sathya
ஐயா அறிவு ஜீவிகளே நீங்கள் எல்லாம் தெரிந்தவர்கள் நாங்கள் ஏதும் தெரியாதவர்களாகவே இருக்கட்டும் திராவிடத்தை பற்றி எங்களுக்கு ஏதும் தெரியாது ஆனால் தமிழர்களாகிய எங்களுக்கு தமிழ் தேசியத்தை தெரிந்தால் போதும் நீங்கள் எல்லாம் திராவிடத்தை தூக்கி பிடித்து என்ன சாதித்தீர்கள் என்று பார்த்தோமே மலையாளி எம் ஜி ஆர் ,தெலுங்கர் கருனாநீதி ,கன்னடர் ஜெயலலிதா என்று தொடர்ச்சியாக தமிழரை ஆள விடாமல் தமிழ் தேசியம் பேசுபவர்கள் அரசியல் பேசுவது பாவம்,பெரும் குற்றம் என்று தமிழருக்கென்று ஒரு அரசியல் கட்சியே இல்லாமல் செய்து தமிழரை மாற்றாநிடத்தில் மன்டிஇட வைத்து தெலுங்கன் கருனாநீதிஇடம் ஈழ தமிழனை காப்பாற்று என்று அவனை அழிக்க நினைத்தவன் காலில் தமிழனை விழவைத்து அவன் அழிவுக்கு காரணமானவர்களே இந்த திராவிடம் பேசுபவர்கள்தான் , தமிழனை ஒரு தமிழன் ஆலகூடது என்பதில் நீங்கள் கவனமாக இறுப்பது அப்பட்டமாக தெரிகிறது , தமிழனை ஆள மற்றுமொரு தெலுங்கன் விஜயகாந்த் வந்தபோது இந்த திராவிடம் பேசுபவர்கள் சந்தோஷ படும்போது தமிழ் தேசியம் பேசிக்கொண்டு ஒரு தமிழன் சீமான் அரசியலுக்கு வரும்போது பதரும்போதே புரிகிறது நீங்கள் எங்கள் இனம் இல்லை திராவிட முகதிரெயில் இருக்கும் மாற்று இனத்தவரென்று , இனியும் ஏமாற மாட்டோம் தமிழ் தேசியத்தின் மீது சத்தியமாக கூறுகிறோம் இனியும் ஏமாற மாட்டோம் , இனியும் எங்களுக்கு துரோகமிழைத்த திராவிடத்தை பேசி எங்களை ஏமாற்றாதிர்கள் .......................

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.