‘நாம் தமிழர்’ ஆவணம் - தேசிய அறிக்கையன்று; பாசிச அறிக்கை! – பகுதி 2

ரோஜர் க்ரிஃபின் பாசிசம் குறித்து முன் வைக்கும் வரையறை பின்வருமாறு:

பாசிசம் என்பது ஒரு அரசியல் கோட்பாட்டு வகையினம். அவ்வரசியல் கோட்பாட்டின் மையக்கருவாக அமைந்திருக்கும் தொன்மம் - அதன் பல்வேறு வடிவ சாத்தியங்களிலும் - தேசப்புத்துயிர்ப்பு என்ற வடிவிலான அதிதீவிர வெகுமக்கள் தேசியவாதமாக உருக்கொள்ளும். (Fascism is a genus of political ideology whose mythic core in its various permutations is a palingenetic form of populist ultra-nationalism.) 

roger_griffin_400இந்த வரையறுப்பின் மூன்று அம்சங்களாவன:

1. அதிதீவிர தேசியவாதம் (ultra – nationalism)

2. தேசப்புத்துயிர்ப்பு (palingenesis)

3. வெகுமக்கள் தன்மை கொண்டிருத்தல் (populism) 

அவற்றுக்கு ரோஜர் க்ரிஃபின் தரும் விளக்கங்களாவன:

பாராளுமன்ற அரசியலுக்கு எதிரான தீவிரவாதப் போக்குகள், முதலாளிய தாராளவாதத்திற்கு எதிரான தீவிரப்போக்குகள் ஆகியவற்றைக் குறிப்பவையாக மட்டுமே அதிதீவிர தேசியவாதம் என்ற பதத்தை க்ரிஃபின் வரையறுக்கவில்லை. பல்வேறு வகைப்பட இனமைய வாதங்களையும் (ethno – centrism), பிற இனத்தவர்கள் மீதான இனவெறுப்பையும் (xenophobia), பிறப்பின் அடிப்படையில் அமைந்த தூய்மையான இனக்குழுவாக தேசத்தைக் கட்டமைக்கும் இனவாதத்தையும் (biologically determined racism) உள்ளடக்கியதே அதிதீவிர தேசியவாதம் என்பதாக வரையறை செய்கிறார். நாஜிக்கள் ஜெர்மன் தேசத்தை ஜெர்மன் இனமாக வரையறுத்தது இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

தேசத்தை எந்தக் கலப்படமும் அற்ற தூய்மையான ஒரு இனக்குழுவாக முழுச் சுய உணர்வோடு வரையறுக்கும்போது மட்டுமே அது அதிதீவிர தேசியவாதமாக, பாசிசத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாக அமைந்திருக்கும் என்று வலியுறுத்துகிறார்.

இரண்டாவதாக, தேசப்புத்துயிர்ப்பு என்பது பழைய பொற்காலம் ஒன்றை மீட்டெடுக்கும் நோக்கில் அமைந்த கருத்தமைவு அன்று. தேசத்தின் மாறாத பழைய கூறு என்பதாகக் கருதப்படும் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு, தேசத்தைப் புதிதாகப் பிறக்க வைத்தல் என்ற பொருளிலேயே இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

பழம் பெருமை மிக்க தமது தேசம், வரலாற்று ரீதியாகச் சிதைந்து, தற்காலத்தில் அரசியல், சமூகம், பண்பாடு, பொருளாதாரம் என்று அனைத்து அம்சங்களிலும் சீரழிந்து வீழ்ந்துபட்டுக் கிடக்கிறது என்பதை வலியுறுத்தி, இந்தச் சீரழிவிலிருந்து மீண்டு, தேசம் புதிய வலிமையோடு புத்தெழுச்சி பெறவேண்டும் என்று வலியுறுத்துவதே இக்கருத்தமைவின் பண்பு என வரையறுக்கிறார்.

பழைய பொற்காலத்திற்குத் திரும்புவது அல்லது மீட்டெடுப்பது என்ற கருத்தமைவை வைப்பவர்கள் பிற்போக்குவாதிகளாக அறியப்படுபவர். பிற்போக்குவாதிகளைப் போன்று பாசிஸ்டுகள் பழைய பொற்காலம் ஒன்றுக்குத் திரும்புவதை வலியுறுத்துவதில்லை. மாறாக, புதிய வலிமையோடு தேசம் மீண்டும் பிறக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துவர் என்று வித்தியாசப்படுத்துகிறார். அந்த வகையில், பாசிஸ்டுகள் தேசத்தின் சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியல் ஆகிய அனைத்து அம்சங்களையும் அடியோடு மாற்றியமைப்பதைத் தமது இலக்காகக் கருதுபவர்கள் என்ற பொருளில், ஒரு ‘புரட்சியை’ – தலைகீழ் மாற்றத்தை - நிகழ்த்த விரும்புபவர்கள் என்று விளக்குகிறார். பாசிஸ்ட்டுகளும் தம்மைப் புரட்சியாளர்கள் என்ற சுய புரிதலுடனே இயங்குவர் என்பதையும் காட்டுகிறார்.

இத்தாலியின் பாசிஸ்டுகளுக்கு ரோமானியப் பேரரசு பழமையின் கூறாக இருந்தது. ஜெர்மனியின் நாஜிக்களுக்கு ஆரிய இனம் பழமையின் கூறு. ஆனால், அந்த பழைய நிலைக்குத் திரும்புவது அவர்களது நோக்காக இருக்கவில்லை. அந்தப் பழம் பெருமையை மீட்டெடுப்பது, புது வலிமையோடு தமது தேசத்தை புதிதாகப் பிறக்கச் செய்வதே அவர்களது சுயபுரிதலாகவும் இலக்காகவும் இருந்தது. அதே போன்று, கிறித்தவம், முதலாளியம், சோஷலிசம் ஆகியவற்றால் சீரழிந்து வீழ்ந்துபட்டிருந்த தமது தேசத்தை அவற்றின் செல்வாக்கிலிருந்து மீட்டு, தமது தேசத்தின் பழம் பெருமைமிக்க அம்சத்தின் (ரோமானிப் பேரரசு, ஆரிய இனம்) அடிப்படையில் அனைத்து அம்சங்களிலும் வலிமைமிக்க நவீன தேசத்தைக் கட்டமைப்பதே அவர்களது இலக்காக இருந்தது.

தேசப் புத்துயிர்ப்பு என்ற இக்கருத்தமைவை விளக்க முற்பட்ட இன்னொரு சந்தர்ப்பத்தில் ரோஜர் க்ரிஃபின், அக்கருத்தமைவின் மற்றுமொரு முக்கிய பண்பாக, 'அப்புத்துயிர்ப்பு மிக அருகாமையில், வெகு விரைவில் நிகழப்போகிறது' என்பதாகவே பாசிசத்தால் முன்வைக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

மூன்றாவதாக, தற்காலத்தைய நிலையில், தேசத்தின் ‘தூய்மையான’ மக்கள், இனக்கலப்பாலும், சுய உணர்வின்றி தமக்குள்ளேயே போரிட்டு ஒருவரையொருவர் வீழ்த்திக் கொண்டிருப்பதாலும் ‘உறக்க நிலை’யில் ஆழ்ந்திருக்கும் சூழல் நிலவுவதாக பாசிஸ்டுகள் கொள்வர். அத்தகைய ‘உறக்க நிலை’யில் இருந்து அவர்களை விழித்தெழச் செய்து, தேசத்தைப் புதிதாகப் பிறக்கச் செய்யும் தமது நிகழ்ச்சி நிரலில் முழு வேகத்தோடும் உற்சாகத்தோடும் பங்கேற்கச் செய்வதே அத்தகைய அதிதீவிர தேசியவாதம் வெகுஜனத் தன்மை கொண்டிருப்பதன் பொருள்.

இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு, புதிதாகப் பிறக்கும் தேசத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போகும் ‘புதிய உயர் குடியினருக்கே’ உரியது. இவர்கள், தேசத்தில் ஏற்கனவே அறியப்பட்ட பழைய ‘உயர் குடியினர்’ அன்று. தேசத்தின் புத்துயிர்ப்பு என்ற கொள்கையில் கொண்டிருக்கும் பிடிப்பு, அக்கொள்கையை அடைவதில் அவர்களுக்கு உள்ள உறுதி மற்றும் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ‘முன்னணிப் படை’யாகிய கட்சியின் உறுப்பினர்களில் இருந்தே இப்'புதிய உயர் குடியினர்’ அடையாளம் காணப்படுவார்கள்.

அதிதீவிர தேசியவாதத்தின் ‘வெகுஜனத் தன்மை’ இவ்வாறு இருமுகம் கொண்டது. இதன் உள்ளடங்கிய அம்சம், தேசத்தின் ‘தூய்மையான’ சக்திகளை விழித்தெழச் செய்வதன் மூலம் (வெகுமக்கள் மற்றும் ‘புதிய உயர் குடியினர்’) இனத்தூய்மையை மீட்டெடுத்தல் – பிற இனத்தவரை விலக்குதல். இனத்திற்குள்ளேயே இருக்கும் இக்கருத்தோடு முரண்படும் சக்திகளை ஒழித்தல்.

இந்த மூன்று கூறுகளும் அறிவியல் பூர்வமான ஒரு கருத்தமைவை அடித்தளமாகக் கொண்டிராமல், ஒரு தொன்மத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். பாசிசம் தலையெடுக்கும் வெவ்வேறு பிரதேசங்களின், தேசங்களின் தனித்தன்மைகள் சார்ந்து, இத்தொன்மக் கருவின் தனித்தன்மையும், அதன் பரிமாணங்களும் இருக்கும். ஜெர்மானிய நாஜிக்களுக்கு அத்தொன்மம் மனித குலத்தின் ஆகச்சிறந்த இனமாக இருந்ததாகக் கற்பனை செய்துகொள்ளப்பட்ட தூய ஆரிய இனப் பெருமையாகவும், இத்தாலியின் பாசிஸ்டுகளுக்கு அது அசைக்கமுடியாத, பரந்து விரிந்த ரோமப் பேரரசாகவும் இருந்தது வரலாறு.

இந்த வரையறுப்பையும் விளக்கங்களையும் ரோஜர் க்ரிஃபின் 1991 ஆம் ஆண்டு வெளியிட்ட 'The Nature of Fascism' என்ற தமது நூலில் முன்வைத்தார். 1960களுக்குப் பின் பாசிசம் குறித்த ஆய்வுகள் தேங்கிக் கிடந்த சூழலில், ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் எழுந்த பலவிதமான பாசிசப் போக்குகளையும் ஆய்ந்து, அவற்றின் பொதுமையான பண்புகள் என்று ஒற்றை வரியில் சுருக்கமாக இவர் முன்வைத்த வரையறை கல்விப் புலங்களில் கடும் விவாதங்களைக் கிளப்பியது.

இந்த விவாதங்களின் போக்கில், அவரது வரையறுப்பிற்கு பல தளங்களில் கிடைத்த வரவேற்பால் உந்தப்பட்டு, 1998 ஆம் ஆண்டு, பாசிசம் குறித்த ஆய்வுகளில் தாம் முன்வைத்திருக்கும் கருத்தமைவையொட்டி ‘புதிய ஒத்திசைவு’ ஒன்று உருவாகி வருவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அவரது வரையறுப்புடன் உடன்படாத கல்வியாளர்களுடன் மீண்டும் ஒரு சுற்று கடும் விவாதங்கள் நிகழத் தொடங்கின.

இச்சுற்று விவாதங்களில், பாசிசம் குறித்த தமது வரையறுப்பின் குறைகள் சிலவற்றை உணர்ந்து கொண்டு, 2004 ஆம் ஆண்டளவில் சில திருத்தங்களைச் செய்யவும் முன்வந்தார் ரோஜர் க்ரிஃபின்.

அவரது வரையறை, இரண்டு உலக யுத்தங்களுக்கிடையே ஐரோப்பாவில் எழுந்த பாசிசப் போக்குகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நிலைமைகளில் புதிதாக உருவாகத் தொடங்கியிருந்த நவ – பாசிசக் குழுக்களின் பண்புகள் சில இந்த வரையறையை மீறியவையாக இருந்தன. மேலும், பாசிசம் ஐரோப்பியாவில் மட்டுமின்றி ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் தோன்றக்கூடியதன் சாத்தியத்தை உள்ளடக்கியதாக இவ்வரையறை இருக்கவில்லை.

இரு உலக யுத்தங்களுக்கு இடையில் ஐரோப்பாவில் தோன்றிய பாசிசம் வெகுமக்கள் தன்மையைக் கொண்டிருந்தது. தேசத்தின் புத்துயிர்ப்பு வெகுவிரைவில் நிகழப்போகிறது என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தது. இந்த இரு அம்சங்களையும் தீர்மானிப்பதில் அக்காலத்தைய ஐரோப்பிய சமூக எதிர்கொண்டிருந்த கடும் நெருக்கடிகள் அமைந்திருந்தன.

முதலாம் உலகப் போரின் பாதிப்புகள், ரசியப் புரட்சியின் விளைவாக, ஐரோப்பாவெங்கும் கம்யூனிஸ்ட் எழுச்சி குறித்துப் பரவியிருந்த அச்சம், முதலாளியப் பொருளாதாரத்தின் கடும் வீழ்ச்சி, பகுத்தறிவு (rationalism) முன்னேற்றம் (progress) என்ற கருத்தமைவுகளில் சமூகத்தின் அறிவார்ந்த பிரிவினரிடையே கடும் அவநம்பிக்கை, வெகுமக்களிடையே பரவியிருந்த கடும் அதிருப்திகள், போராட்டங்கள் ஆகிய காரணிகள் அக்காலத்திய பாசிசத்தின் வடிவத்தைத் தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்தின.

இந்த நெருக்கடிகள், ஜெர்மனியிலும் இத்தாலியிலும் மிக அதீதமாக முனைப்பு பெற்றிருந்த காரணத்தாலேயே அவ்விரு நாடுகளிலும் பாசிசம் பெரும் வெகுமக்கள் இயக்கங்களாக எழுச்சி பெற்றன; அதிகாரத்தைக் கைப்பற்றின; சர்வாதிகாரங்களை நிறுவின. ஆரவாரமான பெரும் நிகழ்வுகள், இராணுவம் அல்லாத குழுக்களின் ஆயுதம் ஏந்திய அணிவகுப்புகள், ஸ்வஸ்திகா போன்ற சின்னங்கள் சர்வ வியாபகமாக பாவிக்கப்பட்டது போன்ற வடிவங்களை எடுத்தன. ஒற்றைக் கட்சி, ஒரே தலைவன், (‘ஒரே மக்கள், ஒரே பேரரசு, ஒரே தலைவன்’ என்பதே நாஜிக்களின் முழக்கமாக இருந்தது) பொருளாதார – பண்பாட்டு உற்பத்திகளின் பெரும் நிறுவனமயமாக்கல், இளைஞர் இயக்கங்கள் போன்ற அமைப்பு வடிவங்களை எடுத்தன.

அதே சமயம், ஜெர்மனி – இத்தாலி இரு நாடுகளின் தனித்துவமான நிலைமைகளையொட்டி இவற்றில் பாசிசக் கட்சிகளின் அணுகுமுறைகளும் தமக்குரிய தனித்துவத்தைக் கொண்டிருந்தன. ஜெர்மனியில் ஹிட்லர், தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற அதிகாரத்தைக் கைக்குள் கொண்டு வந்து, பிறகே பின் வாசல் வழியாக சர்வாதிகாரியாக முடிந்தது. இத்தாலியில், முசோலினி, ரோமை நோக்கி அணிவகுப்போம் என்று அறிவித்ததுமே அதிகாரம் அவரது கைகளில் விழுந்தது.

(மற்றுமொரு முக்கிய வித்தியாசத்தை சில பத்திகளில் காண்போம்.)

ஐரோப்பாவின் பிற நாடுகளில் பாசிச சக்திகள் இதுபோன்று எளிதில் பெரும் எழுச்சி காணவோ அதிகாரத்தைக் கைப்பற்றவோ சாத்தியப்படவில்லை. (ஸ்பெயினில் ஃபாங்கோவின் ஆட்சியை பாசிசம் என்று பொதுவுடைமையர்கள் சொல்வது வழமை. க்ரிஃபின் மட்டுமின்றி மற்ற பல ஆய்வாளர்களும் அதை மறுக்கின்றனர்). இதன் விளைவாக, பாசிசம் குறித்த ஆய்வுகள் பெரும்பான்மையும் இந்த இரு நாடுகளை மையமாகக் கொண்டே செய்யப்பட்டிருந்தன. மேலே விவரித்த வகையான அமைப்பு வடிவங்கள், சின்னங்கள், நடவடிக்கைகளே பாசிசத்தின் வரையறைகள் என்று ஆய்வாளர்கள் மத்தியிலும், அவை ஏற்படுத்தியிருந்த பாதிப்புகளால் வெகுமக்கள் மத்தியிலும் திண்மையாகப் பதிந்துவிட்டிருக்கின்றன. க்ரிஃபினின் வரையறுப்பிலும் தேசத்தின் புத்தியிர்ப்பு வெகு அருகில் நிகழ இருக்கிறது என்ற கருத்தமைவும், வெகுமக்கள் தன்மை (இந்த இரு நாடுகளின் குறிப்பான அனுபவங்கள்) ஆகிய இரு அம்சங்கள் பாசிசத்தின் பொதுவான வரையறுப்பாக இடம் பெற்றன.

ஆனால், இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு, பாசிசச் சக்திகளால் விளைந்த பேரழிவுகளை வெகுமக்கள் அனுபவித்து உணர்ந்தபிறகு, பாசிசத்தின் இக்குறிப்பான வடிவங்களின் சிறு வெளிப்பாடுகளும் வெகுமக்களின் அங்கீகாரத்தைப் பெற முடியாதவையாகிப் போயின. பாசிசச் சக்திகளும் தாம் இனி அந்த வடிவங்களை எடுக்கவியலாது என்பதை நன்கு உணர்ந்து கொண்டுள்ளன. புறச்சூழல் அளவிலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐரோப்பிய பொருளாதாரம் வளம் பெற்றதும், ‘மக்கள் நல அரசுகள்’ (welfare states) வெகுமக்களின் வாழ்க்கை நிலைமைகளில் கொண்டு வந்த பெரும் முன்னேற்றங்களும் தேசம் சீரழிந்திருக்கிறது என்றோ அதை உடனடியாக ‘புத்துயிர்ப்பு’ கொள்ளச் செய்யவேண்டும் என்றோ கருத இடமின்றிச் செய்துவிட்டன.

இத்தகைய மாறிய நிலைமைகளில், பாசிசம் புதிய தளங்களில் தமது செயல்பாடுகளை நகர்த்துவதையும், புதிய வடிவங்களை எடுக்கத் தொடங்கியுள்ளதையும் காணலாம்.

முதலாவதாக, பாசிச இயக்கங்கள், ‘தேசப்புத்துயிர்ப்பு’ என்ற கருத்தமைவை ஒரு சர்வதேச அல்லது பல்தேசியக் கூட்டமைவு என்ற தளத்திற்கு நகர்த்தியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஐரோப்பா வெள்ளை இனத்தவர்களுக்கு மட்டுமே உரியது என்று முழங்கும் ஆப்பிரிக்கர்கள் – ஆசியர்கள் மீதான இனவெறுப்பு, முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த பல தேசிய இனங்களின் மீதான ரசிய ஆதிக்கத்தை வலியுறுத்தும் போக்கு, தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவைப் பிளவுபடாமல் காப்பாற்ற வலியுறுத்தும் இந்துத்துவப் போக்கு, இந்தியத் தேசித்திற்குள்ளாக இருப்பதை அங்கீகரித்துக் கொண்டே தீவிர இனவாத – பிரதேசவாதத்தை வலியுறுத்தும் போக்கு – சிவசேனா என்பவற்றைக் குறிப்பிடலாம்.

hitler_mussolini

‘தேசப்புத்துயிர்ப்பு’ ஒரு நீண்ட இடைக்காலத்தில் சிக்குண்டு இருப்பதாக பாசிஸ்டுகளின் சுயபுரிதல் பரிணாமம் பெற்றிருப்பது இதற்கான காரணங்களில் ஒன்று. மற்றது, இரண்டாம் உலகுக்குப் பிறகான முதலாளிய வளர்ச்சி, பெரும் அளவிலான ஆசிய மற்றும் ஆப்பிரிக்க மக்களின் குடிபெயர்வுகளை பல்வேறு காரணிகளால் சாத்தியப்படுத்தியிருக்கிறது. அதனால் விளைந்த பெரும் அளவிலான இனக்கலப்புகளை நீக்கி ஐரோப்பிய (இன்னபிற மேற்கூறிய எடுத்துக்காட்டுகளும்) அளவில் இனத்தூய்மையை உருவாக்குவதே தற்சமயம் முக்கிய பிரச்சினையாக முன்னிற்கிறது என்றும் பாசிஸ்டுகளின் சுயபுரிதலில் மாற்றம் நிகழ்ந்திருப்பது.

‘தேசப்புத்துயிர்ப்பு’ என்ற கருத்தமைவை நவ - பாசிஸ்டுகள் முற்றிலுமாகத் துறந்துவிடவில்லை. அது நீண்ட கால இலக்காகவும், அதற்கு முன்னதாக பிரதேச அளவிலான இனக்கலப்புகளைக் களைவது தற்காலத்தைய அவசியமாகவும் அவர்களது புரிதலில் நுணுக்கம் கூடியிருக்கிறது எனலாம்.

இரண்டாவதாக, ஒரு மையப்படுத்த தேச அளவிலான, அமைப்பு என்ற நிலையில் இருந்து, அதிகாரப் படிநிலை வரிசையற்ற, மையம் சிதறுண்ட அல்லது பல மையங்களைக் கொண்டதாக, தலைமையற்ற, தெளிவான வரையறைகள் அற்ற சிறுசிறு குழுக்களாக பாசிச அமைப்புகள் பரிணாமம் பெற்றிருக்கின்றன. இரு உலகப் போர்களுக்கு இடையிலான, பாசிசத்தின் நன்கு அறியப்பட்ட அடையாளங்களான ‘ஒரே மக்கள், ஒரே பேரரசு, ஒரே தலைவன்’ என்ற முழக்கம் எங்கு முளைவிட்டாலும் அடையாளம் காணப்பட்டு, துடைத்து அழிக்கப்படும் என்பதை நன்கு உணர்ந்துகொண்டுள்ள நிலையில், மைய நீரோட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியாக செயல்பட முடியாது என்ற நிலையில், சமூகத்தில் அவற்றுக்கு அங்கீகாரம் இனியும் கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில், தமக்குப் பாதகமான சூழலே மேலோங்கியிருக்கிறது என்பதை உணர்ந்த நிலையில், இத்தகைய சிறு குழுக்களின் வடிவத்திற்கு பாசிசம் நகர்ந்திருக்கிறது.

இந்த நவ – பாசிசக் குழுக்கள் செயல்படும் களம், மைய நீரோட்ட சிவில் - சமூக வெளிகள் என்பதில் இருந்து, கருத்தமைவுகளை மாற்றியமைக்கும் நுணுக்கமான தளங்களுக்கு நகர்ந்திருக்கிறது. இரு உலகப் போர்களுக்கிடையில் உருவெடுத்த பாசிசத்தின் கொடூரங்களை மறக்கடிச் செய்யும் வகையிலான, கருத்தமைவுகள் தளத்திலான தாக்குதலைத் தொடுப்பது இவற்றின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இசைக் குழுக்கள், இணைய தளப் பிரச்சாரக் குழுக்கள், ரகசிய வன்முறைக் குழுக்கள், தனிநபர் பயங்கரவாதச் செயல்பாடுகள் என்ற வடிவங்களை இந்த நவ - பாசிசம் எடுத்திருக்கிறது (இசைக் குழுக்கள் தவிர்த்த ஏனைய வடிவங்களையும், இந்தியச் சூழலுக்கே உரிய வேறு பல அமைப்பு வடிவங்களையும் ஆர்.எஸ்.எஸ்–ன் நடவடிக்கைகளை அறிந்தவர்களுக்கு விளக்கத் தேவையில்லை).

இறுதியாகக் குறிப்பிட்ட தனிநபர் பயங்கரவாதச் செயல்பாடுகள், பாசிசத்தின் இன்னொரு அம்சத்தை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும். நன்கு அறியப்பட்ட இரு எடுத்துக்காட்டுகள்: அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரில் Timothy McVeigh மற்றும் இலண்டனில் David Copeland நிகழ்த்திய தனிநபர் பயங்கரவாத தாக்குதல்கள். இருவருமே இத்தகைய சிறு பாசிசக் குழுக்களின் செல்வாக்கிற்கு ஆட்பட்டு – இரண்டாமவர் எந்த இயக்கத்திலும் உறுப்பினராக இல்லாதவர், இணைய தளத்தில் அக்குழுக்களின் பிரச்சாரங்களின் செல்வாக்கினால் உந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது – இனவெறி மிகுந்த தனி பயங்கரவாதத் தாக்குதலில் இறங்கியவர்கள்.

ஒரு ‘புனிதப் போரில்’ தமது பங்களிப்பை ஆற்றியாக வேண்டும் என்ற உந்துதலுக்கு ஆட்பட்டு இத்தகையவர்கள் செயல்பட்டிருப்பதுவே பாசிசத்தின் மற்றுமொரு முக்கிய அம்சத்திற்கு நகர்த்துவது. பாசிசம் ஒரு மதநீக்கம் செய்யப்பட்ட அரசியல் மதம் (political religion) என்ற தன்மையை கொண்டிருப்பது என்பதுவே அது.

'The Nature of Fascism' நூலில் ரோஜர் க்ரிஃபின் பாசிசத்தை வரையறுக்கும் அம்சங்களில் ஒன்றாக, ‘அரசியல் மதம்’ என்பதை ஏற்றுக்கொள்ளவியலாது என்று நிராகரித்திருந்தார். ஆனால், 1998ற்குப் பிறகான விவாதங்களில், ‘அரசியல் மதம்’ என்ற கருத்தமைவு குறித்து பிற கல்வியாளர்களின் ஆய்வுகள் சுட்டும் நிதர்சனங்களை உணர்ந்து பாசிசம் அத்தகைய தன்மை கொண்டது என்பதையும் அதன் வரையறுக்கும் கூறுகளில் ஒன்று என்பதையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

ஜெர்மனியிலும் இத்தாலியிலும் தோன்றிய இரு பாசிச இயக்கங்களுமே வழமையான மதங்களின் இறை என்ற அம்சத்தை மட்டும் நீக்கிய, ஆனால், அதன் அத்தனை அம்சங்களையும் சுவீகரித்துக் கொண்ட, மதநீக்கம் செய்யப்பட்ட அரசியல் மதங்களாகவே (secular political religion) திகழ்ந்தன என்பதை அக்காலத்தைய ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியிருந்தபோதும் அக்கருத்தமைவு பெரிதும் புறக்கணிக்கப்பட்டே வந்துது.

சமீப ஆய்வுகள் மீண்டும் அந்த அம்சத்தின்மீது கவனத்தைக் குவித்துள்ளன. மதங்களின்பால் ஹிட்லர், முசோலினி இருவருக்கும் ஒரே விதமான பார்வையே இருந்தது. மதங்களின் இடத்தை தமது கொள்கை நிறைவு செய்ய வேண்டும் என்பதுவே அது. ஹிட்லர் மிக வெளிப்படையாகவே ஜெர்மானிய மக்களை நோக்கி வேண்டியது ‘எனக்குத் தேவை உமது ஆன்மாக்களே!’ என்றான்.

ஆனால், இருவரது அணுகுமுறைகளும் அவரவரது நாட்டுச் சூழலுக்கு ஏற்ப, தந்திரோபாய உத்திகளைக் கொண்டிருந்தன. ஹிட்லர் ஆரம்பம் முதலே கிறித்தவத்தின் மீது தாக்குதல் தொடுக்காமல் சமரச அணுகுமுறையையே மேற்கொண்டிருந்தான். ஜெர்மனியில், தேர்தல் வழிப்பட்ட பாதையின் வழியாகவே அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதை உணர்ந்திருந்ததால், ஹிட்லருக்கு இந்தச் சமரசம் தவிர்க்க முடியாமல் இருந்தது. முசோலினியோ இடதுசாரி முழக்கங்களை முன்வைத்து கத்தோலிக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்தே அதிகாரத்தைக் கைப்பற்றினான். அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், கத்தோலிக்கத்துடன் இணக்கமாகச் செல்வது தனக்குப் பலவழிகளில் நல்லது என்பதைக் கண்டு கொண்டான். ஆனால், இரண்டு பாசிச சர்வாதிகாரிகளுமே, மதங்களின் இடத்தில் தமது கொள்கையை நிலைநாட்டுவதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர்.

நவ – பாசிசக் குழுக்கள் சிறு குழுக்களாக இயங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தபோதும், அவர்களது இனத்தூய்மை சார்ந்த நம்பிக்கைகள் ஒரு மதவெறித் தன்மைக்கு நிகரான – ஆனால், மத நம்பிக்கையற்ற – வெறி கொண்டிருப்பது மீண்டும் அத்தகைய அரசியல் மதம் என்ற தன்மை பாசிசத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாக இருப்பதையே உணர்த்துகிறது.

இத்தெளிவுகளுக்குப் பிறகு, பாசிசத்தை வரையறுக்கும் மிகப் பொதுமையான கூறுகளை 2004ற்குப் பின்னான எழுத்துக்களில் க்ரிஃபின் செறிவுபடுத்தியிருக்கிறார்.

அவற்றை இவ்வாறு தொகுத்துக் கொள்வது நலம்:

அதிதீவிர தேசியவாதம் (ultra – nationalism) என்பதில் மாற்றமில்லை. அது இனத்தூய்மைவாதத்தையே மையக்கருவாகக் கொண்டது.

தேசப்புத்துயிர்ப்பு (palingenesis) உடனடியாக அடையத்தக்க இலக்கு என்ற அர்த்தத்தில் அல்லாமல், பொதுவான இலக்காக வைப்பது. நிலவும் சூழல்களுக்கு ஏற்ப அது உடனடியாக அடையத்தக்கதாகவோ அல்லது நீண்டகால நோக்காகக் கொண்டு இடைப்பட்ட காலத்தில் பிரதேச அளவிலான இனத்தூய்மையை வலியுறுத்தும் இலக்கை வலியுறுத்துவதாக உருக்கொள்ளலாம்.

மதநீக்கம் செய்யப்பட்ட, ஆனால், மதத்தின் இடத்தை இட்டு நிரப்புகிற அரசியல் மதமாகத் (political religion) திகழ்வது.

இவை அனைத்திற்கும் மூலக் கருவாக ஒரு தொன்மத்தைக் கொண்டிருப்பது (mythic core).

Fascist minimum - பாசிசத்தின் குறைந்தபட்ச, தீர்மானகரமான பொது வரையறை என்று இதைக் கூறலாம்.

இப்பொது வரையறுப்பு இடம் – காலம் – சூழல் இவற்றின் தனித்தன்மைகள் சார்ந்து பல்வேறு தனித்துவமான, அல்லது கலவையான வடிவங்களைக் கொண்டே நடைமுறையில் பாசிச இயக்கங்களாக உருக்கொள்கின்றன. மேலும், தெளிவாகச் சொல்வதென்றால், அத்தகைய பல்வேறு தனித்துவமான நடைமுறை வெளிப்பாடுகளில் இருந்து பெறப்பட்ட பொதுமை இது. கோட்பாட்டளவில் ‘ideal type’ என்று சொல்லத்தக்கது.

வெகுஜனத் தன்மையும், உடனடிப் புத்துயிர்ப்பும் சூழல்களையொட்டி மாறக்கூடியவை என்பதால் அவை பொதுவரையறுப்பில் இருந்து நீக்கப் பெற்றுள்ளன.

பாசிசம் குறித்த இந்த பொதுவரையறுப்பைக் கொண்டு நோக்கினால் ‘நாம் தமிழர்’ அறிக்கை ஒரு தேசிய அறிக்கையா, பாசிச அறிக்கையா என்பது விளங்கிவிடும்.

(தொடரும்)

பின்குறிப்பாக:

1.            இத்தகைய பொது வரையறுப்புகளை உருவாக்கத்தக்க கோட்பாட்டுச் சட்டகம் குறித்து க்ரிஃபின் முன் வைக்கும் கருத்துக்களும் செறிவானவை. அவை குறித்து இங்கு எழுதுவது, கொண்ட பொருளில் இருந்து வெகு விலகிச் செல்வதாகிவிடும் என்பதால் மட்டுமே தவிர்த்திருக்கிறேன்.

2.            பொதுவில் ‘பாசிசம்’ என்பது தமது அரசியல் ‘எதிரிகளை’ அல்லது தமக்கு ஒவ்வாதவர்களை வசைபாடும் ஒரு சொல்லாகப் பயன்படுத்தும் போக்கே நீக்கமற நிறைந்திருக்கிறது. அதே போன்று, சர்வாதிகாரப் போக்கு ஒருவரிடம் வெளிப்பட்டால், அல்லது ஜனநாயமற்ற போக்கு வெளிப்பட்டாலும்கூட உடனே அவர்களை ‘பாசிஸ்ட்டு’ என்று வசைபாடுவதும் வழக்கமாகிவிட்டது. 

அத்தகைய மழுங்கிப்போன பிரயோகத்தில் இருந்து அப்பதத்தை விடுவித்து, அதன் அரசியல் கோட்பாட்டு அர்த்தத்தில் கையாளப்பட வேண்டும் என்பதுவே இந்த நீண்ட விளக்கத்தின் நோக்கம்.

(‘நாம் தமிழர்’ ஆவணம் - தேசிய அறிக்கையன்று; பாசிச அறிக்கை! – பகுதி 1)

- வளர்மதி

Pin It