புரட்சி என்ற சொல்லின் பொருளான இன்குலாப் என்ற பெயரையே தன் புனைப்பெயராகக் கொண்ட கவிஞர் இன்குலாப் அவர்கள் கடந்த 2016 டிசம்பர் 6ம் தேதி காலமானார். மக்கள் கவிஞர், மக்கள் பாவலர், பேராசிரியர், நாடக ஆசிரியர், சிறுகதை ஆசிரியர், இதழ் பொறுப்பாசிரியர், பத்தி எழுத்தாளர் எனப் பல தளங்களில் இயங்கிய கவிஞர் இன்குலாப் அவர்களின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்த இன்குலாபின் இயற்பெயர் சாகுல் அமீது. சித்த மருத்துவத்தைத் தொழிலாகக் கொண்ட சீனி முகமது ஆயிஷா உம்மா ஆகியோர்களின் மகனாவார். எளிய இசுலாமியக் குடும்பத்தில் பிறந்தவராயினும் மத அடையாளங்களைத் துறந்த மனிதநேய சிந்தனையாளர்.

1965ல் தமிழ்நாட்டில் உச்சத்திலிருந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமே இன்குலாபை மக்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளது. மதுரை தியாகராசர் கல்லூரியில் மாணவனாக இருந்த இன்குலாப் இப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் தடியடிபட்டு சிறையும் சென்றுள்ளார். பின்னர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் உதவியோடு சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் 1966ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை 36 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

ஆரம்ப காலத்தில் அவசர நிலையின் போது Ôவிடியல்Õ என்ற தொடர் நாடகத்தை எழுதியுள்ளார். பின்னர் துடி, மீட்சி, குரல்கள், ஒளவை, மணிமேகலை, குறிஞ்சிப்பாட்டு ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். தமிழக அரசு, கலைப் பண்பாட்டுத் துறை மூலமாக 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இன்குலாப் நாடக விழாவினை நடத்தியது. இந்த விழாவில் ஒளவை, மணிமேகலை, குறிஞ்சிப் பாட்டு ஆகிய நாடகங்கள் சென்னையில் உள்ள பி.டி.தியாகராயர் கலையரங்கில் அரங்கேற்றப்பட்டன.  மௌனக்குறம், மரப்பாச்சி ஆகிய நாடகங்களை

நாடக இயக்கங்கள் வாயிலாக பேராசிரியர் மங்கை அவர்கள் இயக்கினார். இம்மூன்று நாடகங்களும் இவ்விருவரின் கூட்டு முயற்சி எனலாம். மேலும் ஒவ்வொரு புல்லையும், பொன்னிக் குருதி, புலிநகச் சுவடுகள், காந்தள் நாட்கள் ஆகிய கவிதைத் தொகுப்பு களையும் எழுதியுள்ளார்.

மார்க்சிய, அம்பேத்கரிய மற்றும் பெரியாரிய சிந்தனைகளில் தன்னைக் கரைத்துக் கொண்டவர் கவிஞர் இன்குலாப். அவரது ஆரம்பகால ஈடுபாடுகள் திராவிட லட்சியத்தின் மீதிருந்தாலும் பின்னாட்களில் இடதுசாரி இலக்கியங்களில் ஈடுபாடு உடையவராகவும் தலித் விடுதலையை நேசித்தவராகவும் அறியப்பட்டார். மாணவப் பருவத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தானும் ஒருவராக இணைந்து எந்த அளவுக்குப் போராடினாரோ அந்தப் போர்க்குணம் சிறிதும் குறையாமல் அவர் பேராசிரியரான காலங்களிலும் போராடியுள்ளார். அவரது போராட்டக்கால அனுபவங் களை Ôகாக்கைச் சிறகினிலேÕ என்னும் மாத இதழில் கல்லூரிக் காலம், புல்வெளியில் செம்பூக்கள் என்னும் தலைப்பில் தொடராக எழுதி வந்தார். ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி 2013ல் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சி யாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புதுக் கல்லூரி முன்பாகக் கூடியிருந்த மாணவர்களிடம் சென்று போராட்டத்தின் அவசியத்தை உணர்த்தி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

கவிஞர் இன்குலாபின் கவிதைகளில் வரும் சொற்களும் சொல்லாட்சியும் இலக்கிய உத்திகளும் சிறப்புடையனவாக இருக்கின்றன. பெண்களின் நிலை, அரசியல், சமூகம், பொருளாதாரம், அடிமைத்தன எதிர்ப்பு, இன ஒடுக்குமுறைகளுக்கு எதிர்ப்பு என பல விசயங்களைப் பற்றி தன் படைப்புக்களில் பதிவு செய்துள்ளார். படிப்பதற்கு எளிமை, புரிந்து கொள்வதில் தடையின்மை மற்றும் நிகழ்காலத்தின் சம்பவங்கள் ஆகியவற்றால் இவரது கவிதைகள் எல்லோருக்கும் உரியதாகிவிடுகின்றன. “நாங்கள்  தாங்க வேண்டிய ஆயுதங்களை எங்கள் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்” என்ற கார்ல் மார்க்சின் வரிகளுக்கு ஏற்ப அதிகாரத்திற்கு எதிராகவே இவரது கவிதைகள் பிறந்துள்ளன.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குளம்பாடி கிராமத்துக் கிணற்றில் தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் குளித்தபோது, கிணறு தீட்டுப்பட்டது என ஆதிக்கச் சாதியினர் கிணற்றில் மின்சாரம் பாய்ச்சியுள்ளனர். அதனால் நான்கு சிறுவர்கள் இறந்துள்ளனர். இச் சம்பவத்தின் கோபமும் வேதனையும் தாங்காமல் எழுதிய “மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என்னும் கவிதையும் இராஜராஜ சோழனுக்கு எதிராக எழுதிய “கண்மணி ராஜா” என்ற கவிதையும் இராஜராஜ சோழனின் ஆயிரமாவது பிறந்த நாளை தமிழக அரசு விமரிசையாகக் கொண்டாட நினைத்தபோது அதை விமர்சித்து எழுதிய “ராஜராஜேச்சுவரம்” என்ற கவிதையும் என இப்படி யாகப் பல கவிதைகளும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவே எழுதப்பட்டுள்ளன.          

“சதையும் எலும்பும்

நீங்க வச்ச தீயில் வேகுதே

ஒங்க சர்க்காரும் கோர்ட்டும்

அதுல எண்ணெய் ஊத்துது

எதை எதையோ சலுகையின்னு

அறிவிக்கிறீங்க

நாங்க எரியுறப்போ

எவன் மசுரைப் புடுங்கப்போனீங்க”

என்ற கவிதை தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிய கவிதையாகும். இந்தக் கவிதை முனைவர் கே.ஏ.குணசேகரன் அவர்களால் பல மேடைகளில் பாடலாகப் பாடப்பட்டது. அப்பாடலைக் கேட்டு நெஞ்சம் பதறாதவர்கள் யாருமே இல்லை எனலாம். இப்பாடல் இடதுசாரி இயக்கங்களாலும் தலித் இயக்கங்களாலும் பெரிதும் போற்றிப் பாடப்பட்டது. எங்கெல்லாம் அதிகாரத்திற்கு எதிராக அடக்குமுறைக்கு எதிராக அடிமைத்தனத்திற்கு எதிராக போராட்டம் நடக்கிறதோ அங்கெல்லாம் இவரது கவிதைகள் போர்ப் பாடலாக ஒலித்தது. ஆயுதம் தாங்கி போர் செய்யும் புரட்சியாளர்களைப் போல சமூகத்தில் நடக்கும் அவலங்களைக் கண்டு தன் கவிதை என்னும் எழுத்தாயுதத்தால் போர் செய்தவர் கவிஞர் இன்குலாப்.

தமிழ் இலக்கியத்தில் புலம்பெயர்வின் வலியைச் சொல்லும் முதல் பதிவான குறிஞ்சிப்பாட்டை கவிஞர் நாடகமாக்கினார். ஈழத்தில் நடந்த போருக்கு அஞ்சி மக்கள் புலம் பெயர்ந்து சென்ற போது அவர்கள் எதிர் கொண்ட வலியை, பாரி மக்கள் பறம்பு மலையை விட்டுச் சென்ற காலத்தில் அவர்கள் பட்ட தவிப்பு களோடு இணைத்துச் சொல்லப்படுவதாக இருந்தது. ஒளவை நாடகத்தில் ஒளவையை இளம் பெண்ணாகவும் அதியமானின் காதலியாகவும் காட்டினார். தமிழ்ச் சூழலில் பயிலப்படும் ஒளவைகளில் இவளே முதல் ஒளவை எனவும் பிற ஒளவைகளெல்லாம் பிற்கால ஒளவைகள் எனவும் ஒளவைகளைப் பற்றிய  புரிதல் களாக காட்சிகள் வழி காண நேர்ந்தது. மேலும் ஆண் பெண் சமத்துவத்தையும் ஆண் பெண்ணுக்களித்த மரியாதையும் பெண்ணின் சுதந்திரத்தையும் அந் நாடகத்தின் வாயிலாகப் பார்க்க முடிந்தது. இவ்விரு நாடகங்களைப் போல மணிமேகலை நாடகமும் மணிமேகலையை அற தேவதையாக அன்பின் உருவமாக கருணையின் கடலாகக் காட்சிப்படுத்தியது. ஒரு படைப்பாளியாக அவர் நிகழ்த்திய சாதனைகள் என்றென்றைக்கும் இந்நாடகங்களைக் கண்ட பார்வை யாளர்களின் மனங்களை விட்டு அகலாதவை ஆகும்.

கிருஷ்ணகிரியில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியும் மைசூர் பல்கலைக்கழகமும் இணைந்து 2013ம் ஆண்டு பிப்ரவரியில் பயிலரங்கம் ஒன்றை நடத்தியது. அப்பயிலரங்கில் தற்காலத் தமிழிலக்கியப் போக்குகள் குறித்துப் பேசிய முனைவர் கி.பார்த்திபராஜா அவர்கள் “நானும் கோவை ஞானியும் தற்காலத் தமிழ்க் கவிதைகளைப் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டோம். பேச்சின் முடிவில் நான் ஞானியிடம் பாரதிக்குப் பிறகு தமிழ்க் கவிஞர்களில் யாரை மகாகவி என்று குறிப்பிடலாம்; யார் அதற்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று கேட்டேன். அதற்கு அவர், சட்டென்று இன்குலாப்தான் பொருத்த மானவர், அவரை மகாகவி என்று அழைப்பதே மிகச் சரியாக இருக்கும் என்று கூறினார்” என  கோவை ஞானி கூறியதாகப் பேசினார்.

கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு இந்த உரை யாடல்கள் எல்லாம் தெரியுமா என்பதை  அரிய இயலவில்லை. ஒரு வேளை அவருக்குத் தெரிந்திருக்குமானால் இந்தப் பட்டங்களை எல்லாம் கேட்டு நகைத்திருப்பார். ஏனெனில், 2006ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருதினை வழங்கியது. தமிழீழ மக்களைக் காக்க தமிழக அரசு தவறிவிட்டது என்று அரசின் மீது குற்றஞ்சாட்டி தனக்களித்த விருதினை தமிழக அரசுக்கே திருப்பி அளித்தார். விருதுகளையோ, பட்டங்களையோ மற்றும் பாராட்டுக்களையோ எதிர்பார்த்து அவர் எழுதியதில்லை. அதனால் தான் தமிழ்க் கவிஞர்களில் அவர் அசலான கவிஞராக, மக்கள் பாவலராக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்.

இன்குலாபின் படைப்புக்கள் அனைத்தும் அன்றாடம் நடைபெறும் சமூக அவலங்களிலிருந்தே உருப்பெற்றுள்ளன. அக்கவிதைகள் அதிகாரத்திற்கு எதிராகவே இருந்துள்ளன. அதை அவர் தெரிந்தே தான் எழுதியுள்ளார். அதன் பொருட்டு எழுந்த விமர்சனங் களுக்கு ஓரிரு வார்த்தைகளையே பதிலாகவும் தந்துள்ளார்.

“தொடங்கும் நாளின்

ஒவ்வொரு நொடியிலும்

வாழ்க்கையை நிரப்பு.

சிரித்து...

போராடி...

சேர்ந்து...

விடுதலை வெளியில்

மானுடம் விரியும்

காலம் விரியும்

தூரம் வரையும்”

என்று மானுட விடுதலையை ஓயாமல் எழுதிய கவிஞர் இன்குலாப் எழுதுவதிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டார். “உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று பாடிய பாரதிதாசனைப் போல இவரும் “உயிர் தமிழுக்கு உடல் மக்களுக்கு” என்று வாழ்ந்து காட்டியுள்ளார். அதனால் தான் இறந்த பிறகும் அவரது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆராய்ச்சிக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மானுட விடுதலையை நேசிப் பவர்கள் செல்லும் திசையெல்லாம் கவிஞர் இன்குலாபின் கவிதைகள் அவர்களை கரம் பிடித்து அழைத்துச் செல்லும். ஒரு மாணவனாக முதுகலைத் தமிழிலக்கிய வகுப்பில் அவரிடம் பாடம் கேட்டு உள்ளேன். அந்த நாட்களை இப்பொழுது நினைக்கும் போது அவர் மேலும் மதிப்புக்குரியவராகத் திகழ்கிறார். அவர் இல்லை என்பது மனதிற்கு கனமாகவே உள்ளது. ஆயினும் இத்தகைய மகத்தான மக்கள் கவிஞருக்கு செவ்வணக்கம் செலுத்துவதே அவரைப் பின்பற்று பவர்கள் அவருக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்.