க. சிக்குண்ட தமிழ்ப்பாட்டைச் சீர்திருத்தம் செய்தான்!

                                செந்தமிழின் செவ்வியலைச் சேர்த்திட்டான் உலகில்!

                குக்கலைப் போல் குரைத்தவரின் குரல்வளையை நெறித்தான்!

                                கொடியவரை வஞ்சகரைக் குலைநடுங்க வைத்தான்!

                திக்கெல்லாம் தமிழ், தமிழர், தமிழ்நாடு செழிக்கத்

                                தெளிவான கருத்துமழை தினந்தோறும் பொழிந்தான்!

                தக்கவரைப் புகழ்ந்திட்டான்! தமிழ்வாழ வாழ்ந்தான்!

                                தமிழ்த்தான் தளபதியாம் பாவேந்தன் தானே!

உ. பகுத்தறிவை வித்திட்டான்! பழையபஞ் சாங்கம்

                                பறந்திடவே புரட்சியினைப் பாத்தியிட்டான் செழிக்க!

                புகுத்திட்டான் புதுமைகளை! போக்கிட்டான் பழசை!

                                போர்ப்பரணி பாடிதமிழ்ப் புரவலரை அழைத்தான்!

                தொகுத்திட்ட அவன்நூலைப் படித்தாலே எவர்க்கும்

                                தோள்துடிக்கும் கண்சிவக்கும் தன்மானம் பிறக்கும்!

                வகுத்திட்ட அவன்வழியை வண்டமிழர் ஏற்றால்

                                வளம்பெறுவர்! தமிழர்கொடி வான்தாண்டிப் பறக்கும்!

- புலவர் பெ. செயராமன், கல்லக்குறிச்சி - 606 202.

Pin It