கீற்றில் தேட...

பாரதியார் வழியாகப் பெரியாரை வந்தடைந்தவர் பாரதிதாசன். முப்பது வயது வரை முக்திக்கு வழிதேடும் கடவுள் பாடல்களையே பாடிக் கொண்டிருந்தார்.

முப்பது ஆண்டுகள் முடியும்வரைக்கும்
நான் எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்?
கடவுள் இதோ என்று மக்கட்கு காட்டிச்
சுடச்சுட அவன் அருள் துய்ப்பீர் என்னும்

உரை எழுதி விளக்க வேண்டிய செறிவான தமிழில் இறைநெறிப் பாடல்களை எழுதிக் கொண்டிருந்த தம்மை, எளிய தமிழில் மக்கள் வாழ்க்கையைப் பாட செய்தவர் பாரதியார் என்பதைப் பாரதிதாசனே கூறுகிறார்.

பாடலில் பழமுறை பழநடை என்பதோர்
காடு முழுவதும் கண்டபின் கடைசியாய்ச்
சுப்ரமணிய பாரதி தோன்றி என்
பாட்டிற்குப் புதுமுறை புதுநடை காட்டினான்.

பகுத்தறிவு, சமதருமம், தமிழ்தேசியம் எனத் தம் படைப்புகள் புதிய முகடுகளைத் தொடுவதற்குத் காரணமானோர் பெரியாரும் பாரதியாருமே என்பதில், இறுதிக் காலம்வரை அவர் உறுதியாக இருந்தார்.

நாம் இளமைப் போதினில் முருகனைப் புகழ்ந்தோம்,
பாடினோம் ஆனால் நாளடைவில் முருகன்
புகழதக்க ஒரு பொருளன்று எனக் கண்டோம்
முருகனைப் பாடுவதை விட்டோம்.

பாரதி தமிழ்பாட்டுக்கு ஒரு புதுநடைக் கண்ட புலவன். பாரதியைப் புகழ்ந்தோம், பாடினோம் நாம் புகழ்வதற்கும் பாடுவதற்கும் பாரதியைவிட ஒருவர் இருக்கின்றாரா? அவர் யார் என்று ஆராய்ந்துக் கொண்டிருந்தோம்.

குன்று உடைக்கும் தோளும் நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருகிய துறவி உள்ளமும் ஒரே இடத்தில் கண்டோம். இந்த அணுகுண்டு பட்டறைதாம் பெரியார் என்பதைக் கண்டோம்.

குயில் 10.05.1960

இரா.இளவரசு ப.தி.ஆ., குயிலோசை, திருச்சி 2022, பக். 233,234.

மொழிப்போர் தந்த எழுத்து

இந்தி திணிப்பை எதிர்த்துத் தமிழ்நாட்டில் நடந்த 1938 ஆம் ஆண்டு முதலாவது மொழிப்போரை வழிநடத்தியவர் தந்தை பெரியார். கல்வியின் வழியாக இந்தி திணிக்கப்படுவதால், பள்ளியின் முன்பு மறியல் போரைச் சென்னையில் தொடங்கினார். மொழிப்போர் வீரர்கள் தங்கும் பாசறை இருந்ததோ ஈரோட்டில் !

சைவம் அழிந்தால் உயிரூட்டிக் கொள்ளலாம்

தமிழ் அழிந்தால் மீட்க வழியில்லை

- என அறிவித்துப் பெரியார் பின்னால் அணிதிரளச் செய்தார் மறைமலையடிகள்.

மறைமலையடிகளாரையும் அவர் மாணவரான ச.சோம சுந்தரபாரதியையும் மொழிப்போர் முகங்களாக முன்னிருத்தி ஒன்றரை ஆண்டுக்காலம் பெரியார் நடத்திய போராட்டம் 21.02.1940இல் வெற்றி பெற்றது; கட்டாய இந்தி திணிப்புஆணை திரும்பப் பெறப்பட்டது. அந்த பிப்ரவரி 21ஆம் நாள் இப்போது உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படும் நாள்.

மாதம் ஐநூறு உரூபா ஊதியத்தில் அலுவல் தருவதாகவும், இந்தியை எதிர்க்க வேண்டாம் என்றும் ஆசை காட்டி மறைமலை அடிகளாரிடம் தொ.பா.மீனாட்சி சுந்தரனாரைத் தூது விட்டார் சி.இராஜகோபாலாசோரியார். காறித்துப்பி விரட்டியடித்துள்ளார் அடிகளார். இதைக் குயில் 09.09.1958 இதழில் நினைவுக்கூர்ந்து,

மீனாக்கி அழகு (தெ.பொ.மீ) மறைமலை அடிகளிடம் வந்து என்ன சொல்லி அழுதது தெரியுமா? திங்கள் ஒன்றுக்கு ஐநூறு வெண்பொற்காசுகள் வருமானத்தில் அலுவல் தருவார் ஆசோரியார், நீங்கள் இந்தியை எதிர்க்காதீர்கள் என்றார். கான்று உமிழ்ந்து துரத்தினார் அடிகள்.

கட்சி, மதம், சாதி, வேறுபாடு கடந்து தமிழர் அனைவரும் பெரியார் தலைமையில் போராடி வெற்றி பெற்ற 1938 மொழிப்போர் தமிழ்நாடு கண்ட முதலாவது தமிழ்த் தேசியப் போர்.

அந்தப் போருக்குக் கலை இலக்கிய வலிமையூட்டுவோராய் இருவர் எழுந்தனர். அவர்களால் தொய்வின்றித் தொடர்ந்தது மொழிப்போர். கவிதைக்குப் பாவேந்தர் பாரதிதாசன், மேடைக்கும் உரைநடைக்கும் அறிஞர் அண்ணா என மொழிப்போரால் வெளிப்பட்ட இருவரையும் தாங்கிப் பிடித்துத் தழுவிக் கொண்டது தமிழ்நாடு.

கலை, இலக்கிய பண்பாட்டுப்படை இல்லாத இயக்கம் செயலாற்றல் இடிந்த மந்தமான இயக்கம் என அறிவுறுத்துவார் தோழர் மா.வோ. திராவிட இயக்கத்தின் கலை, இலக்கிய பண்பாட்டுப் படைக்குத் தலைமை தாங்கின பாரதிதாசன் படைப்புகள்.

வெகுமக்களின் சிக்கலைத் தீர்க்கும் ஏணியாகப் பயன்பட்டு இனத்தை உயர்த்துவதற்கே இலக்கியம் என்பது பாரதிதாசன் கொள்கை.

மக்கள் தொகுதி எக் குறை யாலே
மிக்க துன்பம் மேவு கின்றதோ
அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந் தோனைச்
சிக்கென பிடித்து சீர் பெறல் இயற்கை

வறுமை, வளமை என ஏற்றத்தாழ்வாக உள்ள சமூகத்தைச் சமப்பபடுத்தும் பணியைச் செய்பவனே எழுத்தாளன் என தகுதி வரையறையும் செய்தார்.

மேடு பள்ளங் களைக் கண்டே நலம்
விதைக்க எழுதுவோன் எழுத்தாளன்

தனக்குழைக்கும் எழுத்தாளர், வருமானமே முதன்மை என வாழ்வோர்! பிறர்க்கு உழைக்கும் எழுத்தாளர், சுரண்டல் சமூகத்தில் புரட்சி மனப்பான்மையை உருவாக்குவதே கடமை. எனக் கருதுவோர்! எழுத்தாளரை இப்படி இருவகையாகப் பகுத்துக் காட்டுவார் பாவேந்தர்.

இருக்குநிலை மாற்றுமொரு
புரட்சி மனப்பான்மை
ஏற்படுத்தல் பிறர்குழைக்கும்
எழுத்தாளர் கடனாம்

கருத்து எவ்வளவு முக்கியமோ, மொழி நடையும் அவ்வளவு முக்கியம் என்பார்.

இலக்கணமும் இலக்கியமும்
அறியாதான் ஏடெழுதுதல்
கேடு நல்கும்

என்று தமிழியக்கம் நூலில் இலக்கணப் பிழையின்றி எழுதுவதே தமிழுக்கும் தமிழர்க்கும் நலம் சேர்க்கும் என்று வலியுறுத்துவார்.

எழுத்துலக வாசல் திறப்பு

பாரதிதாசனுக்கு எழுத்துலக வாசலைத் திறந்துக் காட்டியவர் பாரதியார். தமிழ் பாஷைக்கு ஒரு புதிய நிகண்டு வேண்டும் எனும் கட்டுரைதான் முதன்முதலில் அச்சேறிய பாரதிதாசன் எழுத்து. சுதேசிமித்ரன் 26.05.1914 இதழில் கனக சுப்புரத்தினம் எனும் பெயரில் கட்டுரை வெளியானபொழுது இவருக்கு 23 வயது. பாரதியாருக்கு 32 வயது இருவருக்கும் ஒன்பது ஆண்டு வயது வேறுபாடு.

பாரதியைச் சந்தித்தபின் தம்பாடல்களில் கடவுள் பெற்றிருந்த இடத்தை கதரும் காந்தியடிகளும் நாட்டு விடுதலையுணர்வும் பெறுமாறு மாற்றம் செய்தார். தெய்வப்பற்று அமர்ந்த இடத்தில் தேசப்பற்றை உட்கார வைத்தார்.

ஆசிரியராக நிரவியில் 27.06.1909ஆம் நாள் பணியாற்றத் தொடங்கியபொழுது கனக சுப்புரத்தினமாக மட்டுமே இருந்தார். ஆசிரியராகப் பணியேற்ற சில மாதங்களில் பாரதியாரோடு நேர்ந்த சந்திப்பால் பாரதிதாசனாக உருமாற்றம் பெற்றார்.

பாரதியார் 1921 இல் மறைந்த பின்பும் காந்தியப் பற்றையும் விடுதலை இயக்கத் தொடர்பையும் கைவிடவில்லை. பாரதி மறைந்து ஏழாண்டுகளுக்குப் பின்பே 1928 இல் பெரியார் இயக்கத் தொடர்பைப் பெற்றார்.

பாரதிதாசன் என்ற பெயர் ஏன்?

பாரதிதாசனோடு உரிமையாகப் பேசும் பட்டுக்கோட்டை அழகிரி ஒருமுறை கேட்டார் போரதின்னா பாப்பான். தாசன்னா அடிமை. நீ என்ன பாப்பானுக்கு அடிமையா?"

விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்த பாரதிதாசன், பாரதியார்ப் பெயரை தாழ்வாகப் பேசியதும் வெடித்துவிட்டார், ' ஆமாண்டா! நான் அடிமை தாண்டா!'

பாரதி மீது ஏற்பட்ட பற்றே பின்பு பெரியாரியக்கப் பற்று உருவாவதற்குக் காரணம் என்கின்ற பாரதிதாசன் பெயர் வைத்த தற்கான காரணத்தையும் கூறுகிறார்.

நான் பாரதிதாசன் என்ற புனைப்பெயர் வைத்துக் கொண்டுள்ளேன். அதற்குக் காரணம், அப்போது அவர் என் உள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான்.

சாதிக் கொள்கையை உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தாம்!

அவருக்கு முன் அவ்வாறு எதிர்த்தவரைக் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரிய தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது.

பாரதியார் இறந்தபின், சாதியை எதிர்த்த சீர்திருத்தங்களை ஆதரித்த பெரியாரை ஆதரிக்கத் தொடங்கினேன். இன்று வரை ஆதரித்து வருகிறேன். இனியும் அந்தக் கொள்கையைத்தான் ஆதரிப்பேன். (குயில் இதழ் 20.09.1960)

புதுவையில் வாசிக்கக் கிடைத்த குடியரசு இதழும் 1928இல் மயிலாடுதுறையில் கேட்க நேர்ந்த பெரியாரின் பேச்சுமே பகுத்தறிவுப் பாதையில் பாரதிதாசனை நடைபோட வைத்துள்ளன.

பகுத்தறிவுக் கொள்கையையும் பெரியாரின் தலைமையையும் இறுதிக்காலம் வரை பாரதித்தாசன் கைவிடாமல் காப்பாற்றி வந்தார். பெரியாரின் ஆளுமைப் பண்புகளையும் இயக்கப் பணிகளையும் கொள்கை நுட்பத்தையும் பார்த்துப் பார்த்து வியந்த பாரதிதாசன் அவற்றை எழுத்து வாகனத்தில் ஏற்றி இலக்கியங்களாக உலவ வைத்தார்.

பெரியாரும் பெரியாரின் கருத்து நிலைகளும் பெரியார் வழிநடந்தோரும் பாரதிதாசனால் இலக்கியமாக ஏந்தப் பெற்றனர். அதனால் நாடு கடந்தும் போற்றப் பெறும் அரிய நிலை திராவிட இயக்கத்திற்கு எளிதாக வாய்த்தது.

இலக்கியத் தகுதி எய்தியதால், தமிழுள்ள காலம் வரை சாகாநிலையைப் பகுத்தறிவு இயக்கம் பாரதிதாசனால் பெற்றது.

படைப்புப்பாதை

தம் எழுத்தின் திசை இதுதான் என அழுத்திச் சொன்னவர் அவர். தம் படைப்புகளின் அணிவகுப்பு நடக்கும் பகுத்தறிவுப் பாதை இதுவே என உரத்துச் சொன்ன ஆண்மையாளரைத் தமிழ் இலக்கியம் அதற்குமுன் பார்த்தது இல்லை.

பெரியார் பாதையில் நடைபோடுவதே தம் எழுத்தின் இலக்கு என வரையறுத்துச் சொல்கிறார்:

எனக்குக் கடவுள் நம்பிக்கைக் கிடையாது. அது தீர்ந்த தால் தான் மக்கள் உருப்பட முடியும். என்பது என் எண்ணம். கடவுள் நம்பிக்கை அதிகரித்திருப்பதைத் தமக்குச் சாதகமாக்கிப் பிழைக்கும் கூட்டத்திற்கு நான் விரோதி.

சாதி, மதம் மனிதனுக்கு அவசியமில்லை. இருக்கக்கூடாது. மேலும் பார்ப்பனர் இத்தமிழ்நாட்டின் முற்போக்குக்கு முட்டுக்கட்டை. பார்ப்பனீயம் ஒழிய வேண்டும் என்பது என் எண்ணம் இவை என் கொள்கை என்பதைத் தமிழ்நாடு முழுதும் அறியும் நான் என் எண்ணமாக எதையாவது எழுத நேர்ந்தால் இவற்றிற்கு அரண் செய்வதாகத்தான் எழுத முடியும்.. (பாரதிதாசன், நகரதூதன் 15.09.1940, பக். 18)

பரந்த அறிவுப் பார்வை

பாரதிதாசன் 29.04.1891இல் பிறந்தார், 21.04.1964இல் மறைந்தார். நாட்டு விடுதலைக்கான இந்திய விடுதலை இயக்கமும் சமூக விடுதலைக்கான திராவிட இயக்கமும் பொருளியல் விடுதலைக்கான பொதுவுடமை இயக்கமும் தோன்றி வளர்ந்த காலத்தில் வாழ்ந்தவர் பாரதிதாசன்.

இலக்கியமும் வரலாறும் சமுதாயத்தால் உருவாக்கப்படுவதும் சமூகத்தை அவ்விரண்டும் இன்னொரு படிக்கு முன்னேற்றுவதும் இயல்பான ஒன்று. சமூகம் மாறுகின்ற போது இலக்கியமும் வரலாறும் விரிவு பெறுகின்றன. அப்போது மாற்றத்தின் இன்னொரு படியைச் சமூகம் எட்டி முன்னேறுகிறது. சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் எழுத்தாளருக்கும் இது பொருந்தும்.

இந்திய அளவிலும் உலக அளவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் பாரதிதாசனைப் பாதித்துள்ளன.

அயர்லாந்து வெர்ஹேரன்,சேக்சுபியர் விக்டர் யூகோ, டால்ஸ்டாய், இரவீந்திரநாத் தாகூர், காளிதாசன், முதலியோரை நன்கு அறிந்திருந்தார் என்பதற்கு அவர் பாடல்களே சான்றாக உள்ளன.

அயர்லாந்தில் வெர்ஹேரன்
எனும் கவிஞன் ஐரீஷ்மொழி
வளரச் செய்தான்
அயர்லாந்தும் அதன்பிறகே
உணர்வுபெற லாயிற்றென்(று)
அறிஞர் சொல்வார்

ஸ்ரீசுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம் 01.12.1935

ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்
ஏருற லெனினை ஈன்றே தீரும்
செல்வர் சில்லோர் நல்வாழ் வுக்கே
எல்லா மக்களும் என்ற பிரான்சில்
குடிகள் குடிகட்கு எனக்கவி குவிக்க
விக்டர் யூகோ மேவினான் அன்றோ

(திருச்சி வானொலி பாட்டரங்கப் பாடல் 01.09.1946)

இந்திய தேசியப் பற்றிலிருந்து விடுபட்டு திராவிட இயக்கப் பற்றுக்கு மாறி, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குப் பாடுபடும். தமிழ்த் தேசிய பாவலராக பாரதிதாசன் மலர்ச்சி பெற்றதற்கு அவரின் பரந்த அறிவும் உலகப் பார்வையும் ஒரு காரணம், பெரியாரின் தலைமையை ஏற்றுக் கொண்ட அவர், பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு எதிரான போர்முரசாகத் தம் படைப்புகளை ஒலிக்க வைத்தார்.

பாரதிதாசன் புதிய போக்குகள்

பல்வேறு புதிய பாடுபொருட்களைத் தமிழ் இலக்கியம் சந்தித்தது பாரதிதாசன் வழியாகத்தான். தமிழ்ப் பாவலர்களில் பாரதிதாசனுக்கு முன் எவரும் நாடகம் எழுதியதில்லை. திராவிடர் இயக்கத்திலும் பகுத்தறிவு முழங்கிய முதல் நாடகம் பாரதிதாசன் எழுதிய இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம்தான்!

கதர், மதுவிலக்கு, கைம்பெண் மறுமணம், பற்றி பாரதி பாடியதில்லை; பாரதிதாசன் பாடியுள்ளார்.

பெரியார் குடும்பக் கட்டுபாட்டை ஆதரித்து 1929 இல் குரல் கொடுத்தார்.

காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்த
கதவொன்று கண்டறிவோம் இதில் என்ன குற்றம்?

என அதனையே பாடலாக்கி விட்டார் பாரதிதாசன் குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி இந்தியத் துணைகண்டத்தில் எழுந்த முதல் இலக்கிய குரலாக அவர் பாடல் பாராட்டப் பெறுகிறது.

நாட்டு நடப்புகளை உடனுக்குடன் பாட்டு வாகனத்தில் ஏற்றி விடுவது பாரதிதாசன் வழக்கம்.

குவெட்டாவில் கூட்டுக்கொலை

பீகார் புகம்பம்

ஜாதி ஆபத்து எம்டன் கப்பல் வரவு

முதலிய படைப்புகள் அவர் எண்ணங்களையும் கூர்மையான பார்வையும் வெளிப்படுத்துபவை.

தமிழ், தமிழர், தமிழ்நாடு என அழுத்திப் பேசியதற்கு அவர் உலக் மொழிகளையும் தேசிய இனங்களின் விடுதலை வரலாற்றையும் அறிந்த தனால் பெற்ற விழிப்புணர்ச்சிதான் காரணம்.

இந்தியத் துணைக்கண்டத்தில் கடவுள் மறுப்பை உரத்துப் பேசும் முதல் நாத்திக இயக்கம் இந்து சுயாக்கியானிகள் சங்கம் என்ற பெயரில் எழுந்தது. அந்த அமைப்பு நடத்திய தத்துவவிவேசினி (1882-1888) இந்தியாவின் முதல் நாத்திக இதழ்.

வள்ளலார் பற்று மிகுந்த குடும்பத்தில் பிறந்த பாரதிதாசனை மதசோர்பற்ற அவ்விதழ் ஈர்த்துள்ளது. பாரதிதாசன் படித்த தத்துவ்வேசினி இதழ்த்தொகுப்பு அவர் கையொழுத்துடன் சென்னை அண்ணா அறிவாலயம் நூலகத்தில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சிதறிக் கிடந்த முற்போக்கு இயக்கங்கள் பெரியாரியக்க தொடர்பிற்குப் பின் முழு உருவம் பெற்று பாரதிதாசன் வழியாக ஆற்றலுடன் பேசத் தொடங்கின.

கடவுள் கடவுள் என்றெ தற்கும்
       கதறு கின்ற மனிதர்காள்
கடவுள் என்ற நாம தேயம்
       கழறி டாத நாளிலும்
உடைமை முற்றும் பொதுமை யாக
       உலகு நன்று வாழ்ந்ததாம்
கடையர் செல்வர் என்ற கொள்கை
       கடவுள் பேர்இ ழைத்ததே

சமூகச் சிக்கல்களைத் தீர்க்க விரும்புமிடத்தில் கடவுள் மறுப்பு இருந்தே தீரும் எனப் பாரதிதாசன் சிந்தனை முதிர்ச்சியோடு தெளிவுபடுத்தினார்.

சுயமரியாதை என்று பெரியார் சொன்னது கூட, அவ்வையார் சொன்னதன் தொடர்ச்சியே என்று தமிழ் மரபிலிருந்து வேர்காட்டும் தனித்தன்மையை பாரதிதாசனிடம் பார்க்கிறோம்.

“சுயமரியாதை என்பதற்குத் தன்மானம்
என்பது பொருளாதலின் தேசமக்கள்
எல்லாம் தம் மரியாதையைக் காத்தல்
வேண்டும் என்பதே சுயமரியாதைக் கொள்கையாம்."

"தேட்டம் மரியாதை
காணும் மகிதலத்தீர் என
ஔவை மொழிந்த தாய் வழங்கும்
முதுமொழியும் காண்க"

(புதுவை முரசு 10.11.1930, பக், 10)

(பாவேந்தர் 22 ஆம் தொகுதி, தமிழ்மண் 2009, பக். 3)

திருமந்திரம் திருவாசகம்

பழந்தமிழ் இலக்கியங்களைப் பகுத்தறிவுத் தராசில் எடைப்போட்டுக் காட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். திருமூலர் பாடியவை மூவாயிரம் பாடல்கள் எனச் சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார்.

இப்பொழுது கிடைக்கும் திருமந்திரத்தில் 47 பாடல்கள் கூடுதலாக கிடைக்கின்றன. அவை இடைச்செருகல் எனப் பாட்டிலேயே பகுத்தறிவுக் கணைதொடுத்தார்.

மூவா யிரம்சொன்னார் மூலனென்றார் சேக்கிழார்
பாவேது மேல் நாற்பான் ஏழ்?

பாரதிதாசன் பன்மணித்திரள், பக். 288 பாவேந்தம் 17 ஆம் தொகுதி,பக்.176

திருமூலர் பாடியனவாக 47 பாடல்களை இடையில் சொருகிய வைதீகர்கள் திருமூலர் காலத்தில் தமிழ்நாட்டிலேயே இல்லாத விநாயகர் வணக்கத்தையும் நுழைத்துள்ளார்கள் என்று அம்பலப்படுத்தினார். திருமந்திரத்தின் முதற்பாடல் "ஒன்றவன் தானே" எனத் தொடங்குமென்று சேக்கிழார் கூறியதையும் பாட்டாகவே நினைவுபடுத்தினார்.

ஒன்றவன்தானே எனல்என்று சேக்கிழார்
நன்று நவின்றார்அன் றோ?
ஐந்து கரத்தினை ஆனதொரு செய்யுள்செய்து
முந்தவைத்தார் மூலன் நூலில்

பிள்ளையார் வழிபாடு உருவாவதற்கு முன்பே உருவெடுத்த நூல் திருவாசகம் என்று பகுத்தறிவை பக்தி வழியிலும் விளங்கவைத்த தனித்தன்மை பாவேந்தருக்கே உரியது.

கூனாம் கொடும் பல்லன் தோன்றுமுன் தோன்றியதே

தேனாம் திரு வாசகம்

பெரியார் வழி முதல் மூன்று நூல்

பெரியார் இயக்கத் தொடர்பினைப் பெற்றபின், சமுதாய விடுதலையை நோக்கமாகக் கொண்டு 1930 இல் மூன்று நூல்களை வெளியிட்டார்.

தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு சுயமரியாதை சுடர்

சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

அனைவரையும் படைத்தது கடவுள் எனபது உண்மையானால், கோவிலுக்குள் நுழையும் உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டுமே! நாய், காகம் நுழைய அனுமதிக்கிறார்கள் நாயைவிடக் கீழானவர்களா தாழ்த்தப்பட்டோர் ? பாரதிதாசன் கேட்டார்.

குக்கலும் காகமும் கோவிலில் போவதில்
கொஞ்சமும் தீட்டில்லையோ? நாட்டு
மக்களி லேசிலர் மாத்திரம் அந்த
வகையிலும் கூட்டிலையோ!

தமிழில் தோன்றிய தலித் இலக்கியத்தில் முதல் வரிசைக்குரிய நூல் பாரதிதாசனின் தாய்த்தப்பட்டோர் சமத்துவ பாட்டு

சேரி பறையரென்றும்
தீண்டாதார் என்றும் சொல்லும்
வீரர் நம் உற்றாரடி-சகியே
வீரர் நம் உற்றாரடி

தாழ்த்தப்பட்டோரை நம் உறவினராகப் பார்க்க வேண்டும். எனச் சொல்லும் பாரதிதாசன் ஆரியரையும் வேதத்தையும் ஏற்க மறுத்த வீரர்களை சேரியில் வைத்தார்கள் என வரலாற்றுப் பார்வைடேன் விளக்குகிறார்.

பழி வேதம் ஒப்போமென்ற
பண்டைத் தமிழர் தம்மை
கழுவேற்றிக் கொன்றாரடி-சகியே
கழுவேற்றிக் கொன்றாரடி
ஆரியர் தமை ஒப்பா
ஆதித் திராவிடரைத்
சேரியில் வைத்தாரடி-சகியே
சேரியில் வைத்தாரடி

தாழ்த்தப்பட்டோர் நெஞ்சத்தில் பாரதிதாசன் நிலைத்திருப்பதைக் காரணத்தோடு விளக்குகிறார் ஆர்.கே.கண்ணன்.

“சமயம் கிடைக்கிறபோதெல்லாம் தமது கவிதையில் பாரதிதாசன் பொதுவுடமையைப் பற்றி வீறுடன் பாடுகிறார் என்ற விஷயத்தை இத்துடன் கூட்டிக் கொண்டு ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்போமானால் சேரி மக்களின் அன்புக்கு அவர் பாத்திரமாயிருப்பதில் உள்ள வரலாற்று வகைப்பட்ட முக்கியத்துவமும் அர்த்தமும் புலனாகும். மனிதனுக்கு கார்க்கி கற்பிக்கின்ற சிறப்பை, மாண்பை, மேன்மையை நம் நாட்டு நிலைமைக்கு பொருத்தி அர்த்தம் காண வேண்டுமென்றால் குறைந்தபட்சம் பாரதிதாசனை புரிந்துக் கொள்ளவாவது நாம் முயற்சிக்க வேண்டும்." (ஆர்.கே.கண்ணன், பாரதிதாசன் பணியும் அணியும், என்.சி.பி.எச். 2005,பக். 2122)

சுயமிரியாதைச் சுடர்

இந்நூலுக்கு புதுவைமுரசு 09.11.1931 இதழில் வெளிவந்துள்ள விளம்பரம் இது:-

இதில் பத்து எளிய தமிழ் விருத்தங்கள் வெகு இனிமையாகவும் எல்லோரும் பொருள் தெரிந்துக் கொள்ளக்கூடிய வகையிலும் அமைந்துள்ளன. கிண்டற்காரன் எழுதியது. கவிச்சுவை உடையது. விலை காலணா (0.0.3) நூறு புத்தகம் ரூ 1.

பாரதிதாசன் இந்நூலை "கிண்டற்காரன்" எனும் புனைபெயரில் வெளியிட்டுள்ளார்.

குத்தூசி குருசாமி அவர்களுக்கு இந்நூலைக் காணிக்கையாக்கி உள்ளார். "புதுவைமுரசு ஆசிரியர் எஸ்.குருசாமி பி.ஏ. அவர்கட்கு ஸமர்பணம்" என எழுதியதோடு பாடலும் எழுதியுள்ளார்.

திருவாரூர்த் தேரைத் தெரிசித்துப் போக
வருவார் கழுத்து வளைக்க வளை யாதது போல்
நட்ட தலை நிமிர்த்தும் நம்பிக்கை யில்லாமல்
தொட்ட எழுதுகோல் தொட்ட படியுழைக்கும்
ஆசிரிய ராக அமர்ந்த குருசாமி
பேசரிய வாய்மையன் என் நண்பன் அன்னோன்
உயர்முன் சமர்ப்பித்தேன் உரைத்த இதன்பேர்
சுயமரி யாதைச் சுடர்

புதுவைமுரசு இதழுக்கு 29.12.1930 முதல் 04.05.1931 வரை ஆசிரியர் பொறுப்பு வகித்தவர் குத்தூசி குருசாமி. பாரதிதாசன் எழுதிய கவிதைகளைத் திரட்டிப் பாரதிதாசன் கவிதைகள் என நூலாக முதன்முதல் 1938 இல் வெளியிட்டோர் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி இருவரும்.

நகையோ பகட்டான ஆடைகளோ
அணிந்து வரக்கூடாது எனப் பாதரியார்
தேவாலய அனுமதிக்கு விதிவகுத்துள்ளார்
அந்த அறிவிப்புக்குப் பின் தேவாலயத்திற்கு வரும்
பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது
பக்தர்கள் தேவாலயம் வருவது பக்திக்காக
அல்ல, வசதியைப் பறைசாற்ற

என்ற உண்மை பாதரியாருக்கு அதன்பின் புரிந்தது. அதற்குப்பின் வந்த அறிவிப்பைக் கிண்டலாகச் சொல்கிறது பாவேந்தர் பாடல்.

நிலைகண்ட பாதிரியின் எட்டுறுப் பேஅன்றி
நீள் இமைகள் உதடு நாக்கும்
நிறைய நகைபோடலாம் கோயிலில் முகம் பார்க்க
நிலைக்கண்ணாடியும் உண்டென
இலை போட்(டு) அழைத்ததும் நகைபோட்ட பக்தர்கள்
எல்லலோரும் வந்து சேர்ந்தார்
ஏசுநா தர்மட்டும் அங்கு வரவில்லையே
இனிய பாரத தேசமே
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

புதுவைமுரசு 10.11.1930 இதழில் வெளிவந்த இந்த நூலுக்கான விளம்பரம்

சஞ்சீவி பர்வதத்தின் சாரல் பாரதிதாஸன்

விலை அணா 1. அஞ்சலில் பெற விலை 1.5 அணா ஸ்டாம்ப் அனுப்ப வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு, சுயமரியாதைச் சுடர், சஞ்சீவி பர்வதத்தின் சாரல் எனும் மூன்னு நூல்களும் முறையே தீண்டாமைக் கொடுமை, சுயமரியாதை, மூடநம்பிக்கை ஒழிப்பு பற்றிப் பேசுவன.

இம்மூன்றிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் கற்பனைக் கதையாக அமைந்தது. இராமாயண எதிர்ப்பையும் இந்திய விடுதலையைவிட சமூக விடுதலையே முதன்மையானது என்பதையும் மூடநம்பிக்கை ஒழிப்பையும் பெண்மையின் உயர்வையும் நயம்பட விளக்கும் அழகிய பாவியம்.

சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்குப் படகில் செல்லும் பொழுது அரங்கேற்றப்பட்ட பாவியம் இது. மயிலை சீனி வேங்கடசாமி, சாமி சிதம்பரனார், நாரண துரைகண்ணன், குத்தூசி குருசாமி, மாயவரம் நடராசன் முதலியோர்.

சஞ்சீவி பர்வத சாரல்-எனச்
சாற்றும் சுவடி திறந்து
அஞ்சாறு பக்கம் முடித்தார் மிக்க
ஆசையி னால் ஒரு தோழர்

படகில் பாவியம் அரங்கேற்றிய நிகழ்ச்சியை மகாபலிபுரச் செலவு எனத் தனிக் கவிதையாகப் படைத்துள்ளார் பாரதிதாசன்.

சுயமரியாதை வீரர்களின் பாதங்களில் இந்நூலைச் ஸமர்பணம் செய்கிறேன்

இந்நூலுக்கான காணிக்கை வாசகமாக இதனை எழுதித் தம் சுயமரியாதை நெஞ்சை உயர்த்திக் காட்டியுள்ளார் பாரதிதாசன்

மூடப்பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம்

ஓடுவது என்றோ ஒழிவது என்றோ

பாவேந்தர் ஏக்கத்தின் கவிடிவமே சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

பெரியார் புகழ்

அறிவுக் கண்களைத் திறந்து தன்மான மூச்சு வழங்கித் தமிழரை நிமிர்ந்து நடக்க வைத்தவர் பெரியார். தம் இலக்கியக் கைகளால் அவரை ஏந்தி ஏந்திப் பாராட்டி மகிழ்ந்த பாவலர்களில் பாரதிதாசனுக்கு இணையான ஒருவரைக் காட்டுவது இயலாது.

ஈரோட்டார் என்பெரியார்
மக்களிலே தாழ்வுயர்வு
போராட்டம் வேரற்றுப்
போனால் உலகில்
நலிவில்லை எய்தும்
நலமென் றருளினார்

என் பெரியார் என உரிமை பாராட்டும் பாரதிதாசன் அவர்தாம் பெரியார் என எல்லோருக்கும் அடையாளம் காட்டுவார்.

சிறையிலிருந்து விடுதலையான பெரியாரைப் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிதம்பரத்தில் 29.06.1958 ஆம் நாள் அழகிய தேரில் அமரவைத்து ஊர்வலமாக அழைத்து வரும் காட்சியைப் பார்த்ததும் பாரதிதாசன் மனம் துள்ளுகிறது. அங்கேயே தாள் வாங்கி அக்காட்சியை அப்படியே கவிதை ஓவியமாக்குகிறார்.

அவர்தாம் பெரியார் பார்
அவர்தாம் பெரியார்
அன்பு மக்கள் கடலின் மீதில்
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில் (அவர்தாம்)

தொண்டு செய்து பழுத்தபழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகுதொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும் (அவர்தாம்)

குயில் 26.08.1958 இதழில் வெளிவந்த முழுப்பாடல், சீர்காழி கோவிந்தராசன் குரலில் இசைத்தட்டாகவும் வெளிவந்தது. பெரியார் பற்றிப் பாவேந்தர் பாடிய அனைத்தும் புதிய நோக்கின.

"நிலவு போன்ற முகம்" என்பதற்கு மாறாக பெரியார் முகம் போன்ற நிலவு எனப் பாடுவார்.

மக்கள் வாழும் உலகினில்
மதங்கள் சாதி வேற்றுமை
சுக்கு நூறாய் ஆக்கிய
தூய பெரியார் முகம் என
அக்க ரைக்கண் தோன்றிடும்
அழகு நிலவில் மூழ்குவாய்

திராவிட இயக்கத்தின் முதல் பகுத்தறிவு நாடகமான இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகத்தை 09.09.1934 இல் நூலாக்கிய போது தந்தை பெரியாருக்கு காணிக்கையாக்கினார்.

சுயமரியாதை இயக்கங் கண்டாரும்
பார்ப்பனரல்லாத மக்கட்கு உழைப்பதை
தன் கடன் எனக் கொண்டாரும்
தற்பொழுது தமிழுக்காகச் சிறையிலிருப்போருமாகிய
தமிழர் திலகம் புரட்சியின் சிகரம்
பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு
இந்நூல் ஏற்புடைத்து

பகுத்தறிவுக் கருத்தைப் பரப்புவதில் இந்நாடகத்திற்கு உள்ள ஆற்றலைக் கண்டு அஞ்சிய அன்றைய ஆட்சியாளர்கள், நூலைத் தடை செய்ததோடு நாடகமாக நடித்தவர்களையும் ஒப்பனையைக் கூட கலைக்கவிடாமல் விலங்கிட்டு வீதியில் நடக்க வைத்து இழுத்துச் சென்ற நிகழ்ச்சிகளெல்லாம் என்றும் நினைவூட்டப்பட வேண்டியவை.

நாத்திக நெஞ்சம்

சென்னை எழும்பூரில் ஒயிட்சு மண்டபத்தில் 31.12.1933 ஆம் ஆண்டு நிகழ்த்திய நாத்திகர் மாநாட்டில் நான் நிரந்தரமான நாத்திகன் என எழுதிக் கையொழுத்திட்டார் பாரதிதாசன்.

காசைப் பிடுங்கிடு தற்கே - பலர்
கடவுளெ ன்பார்இரு காதையும் மூடு
கூசி நடுங்கிடு தம்பி-கெட்ட
கோயிலென் றால்ஒரு காதத்தில் ஓடு

இந்த அறிவுரையை இறுதிவரை தாமும் தம் வாழ்க்கையில் பின்பற்றினார்

இறக்கும் தருவாயில் சென்னை மருத்துவமனையில் படுத்திருந்த பாரதிதாசன் நெற்றியில் அப்பா என்றழைத்தபடி அன்பு மிகுதியால்

ஒரு பெண் திருநீறு பூச முயன்றார். "என்ன மந்திரமா" எனச் சினத்துடன் சீறியபடி மதச்சின்னத்தை தட்டிவிட்ட நாத்திக நெஞ்சுரம் இறுதிவரை அவரிடம் மாறாமல் இருந்தது

தமிழ்ப்பாடல் மதம்சாதி மூட எண்ணம்

தரும்பாட்டாய் இருப்பதிலும் இலாமை நன்று

இப்படி அடித்துப் பேசும் ஆண்மையே அவரின் அடையாளம். பக்திப் பாடல் எழுதுவோரைப் பார்த்துச் சொற்களை எறிகணையாக்கி வீசுவார்.

மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும்

மடையர்களும் எழுதிடுவார் கடவுள் பாடல்

மடத்தலைவர்களைச் சார்ந்து வயிறு வளர்க்கும் புலமையாளர்களை எண்ணி மனம் வருந்துவார்.

குடிக்கவும் நீரற்று இருக்கும்-ஏழைக்
கூட்டத்தை எண்ணாமல்
கொடுந்தடி யர்க்கு
மடங்கட்டி வைத்ததி னாலே தம்பி
வசங்கெட்டுப் போனது நம்நன் னாடு

தீர்வையும் தெளிவையும் ஒருங்கு நிறுத்தி சிந்திப்பன பாரதிதாசன் பாடல்கள்.

எப்பொழு தும்னை லெனினால் ஸ்டாலினால்
புதுமை கொணர்ந்த பொதுமை நாட்டை
மதுத்தமி ழாலே மடுக்கும்என் பாட்டு

தம் அரசியல் பார்வையை தெளிவுப்படுத்தும் பாரதிதாசன் ஜனசக்தி முதல் இதழுக்காகப் பாடல் எழுதிக் கொடுத்தார்.

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
பொதுவுடமைக் கொள்கை
திசையெட்டும் சேர்ப்போம்

முதலாளி, மதவாதி இருவரையும் எதிரிகள் பட்டியலில் நிறுத்திப் புதிய பார்வையை வழங்கினார்.

கடவுளை மதத்தை காப்பவர் என்போர்
கருணை இலாநிலம் பொருள்நனி கொண்டோர்
உடைமை பறித்தஇக் கொடியரில் கொடியர்
ஒழிந்தபின் பேநலம் உறுவரிவ் வுலகோர்

முதுகில் அமர்ந்த முதலாளி, மூளைக்குள் அமர்ந்த மதவாதி இருதரப்பையும் ஒருசேரத் துடைத்தெறிவதன் மூலமே உலகம் நலமடையும் என்பது பாரதிதாசன் தரும் தெளிவு.

உலகின் பொதுச்சிக்கல் மதம் இந்த மண்ணின் தனிச்சிக்கல் சாதி இவற்றைப் புதுப்பாதையில் புலப்படுத்துவது பெரியார் நெறி. மக்களை அடக்கி ஆள நினைக்கும் ஆதிக்கவாதிகள் மக்களின் அறிவு இருட்டாகவே இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

ஆலயம் சாமி அமைத்தவர் யாரடி தோழி?

மக்கள் அறிவை இருட்டாக்கி ஆள நினைப்பவர் தோழா!

கலை இலக்கியம் மூலம் சிந்தனைக்குக் குழிபறிக்கும் சீரழிவுக் காரர்களை மன்னிக்ககூடாது என்பார் பாரதிதாசன்.

ராமாயணம் சொல்லி நாளைக் கழிக்கின்ற

ஏமாந்தார் காசுக்கு எஜமானன்

என்று காலக்கொலையும் கருத்துக் கொலையும் செய்கின்ற மதவாதப் பேச்சு வணிகர்கள் குறித்து எசேரிக்கை செய்வார்.

மாணுறும் தன்னம்பிக்கை வளர்ப்பது நலமா?

வயப்படும் பக்தியினால் பயப்படல் நலமா?

என வினா எழுப்பி, தன்னம்பிக்கைத் தரும் பகுத்தறிவுப் படைப்புக்கு வலிமை சேர்த்தன பாரதிதாசனின் படைப்புகள்.

எதிர்ப்பு நெருப்பில் கருகாதவர்

வருண ஒழிப்பு, சமதர்ம சமூக அமைப்பு, தமிழ்த் தேசிய விழிப்புணர்ச்சி எனும் இலக்குகளை நோக்கியே பாரதிதாசன் படைப்புகள் நகர்ந்தன.

நம்பிய கருத்தை நடைமுறைபடுத்துபவனே மனிதன். இடத்திற்கு ஏற்ப தன்னை விலைபேசி விற்பவன் மனித விலங்கு. இந்த வரையறையோடு வாழ்ந்தவர் பாரதிதாசன்.

பெற்றதன் கொள்கையை பிறர்கை மாற்றுவோன்
உற்றது உரைக்கும் ஒழுக்கம் தீர்ந்தவன்
கொள்கையை விலைக்கு கொடுக்கும் மனிதன்
மனிதருள் வாய்ந்த மனித விலங்கு

அச்சத்திலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் மனிதரை விடுதலை செய்வது பெரியார் நெறி அதனையே தன் இலக்கிய நெறியாக ஏற்றுக் கொண்டவர் பாரதிதாசன்

நடைமுறைகளையும் உலக நிகழ்வுகளையும் கணக்கில் எடுத்து முன்னேறிய அவர் படைப்புகள், சமூக அடுக்குகளை மோதிச் சிதைப்பதையே நோக்கமாகக் கொண்டவை.

பாரதிதாசனின் குறிக்கோள் வாசகமும் கையொப்பமும் கேட்டு 04.10.1942 இல் மடலிட்ட செட்டி நாட்டரசரின் பெயரனுக்கு அவர் இப்படி எழுதி அனுப்பினார்.

"சாதிகள் இல்லை மதம் மக்கட்கு அபின்
கடவுள் நம்பிக்கை தன்னம்பிக்கை எதிர்ப்பு
சாதிப்பற்று சமயப்பற்று
கடவுள் நம்பிக்கை இவை ஒழிய வேண்டும்
ஒழியாதவரை மக்கள் முன்னேற்றமில்லை
நீ புரட்சியைத் தூண்டு, புரட்சி செய்."

புரட்சியைத் தூண்டிவிட்டு ஒதுங்கிக் கொள்பவராக இல்லாமல், நீயும் பங்கெடு என ஆணையிடுகிறார் பாரதிதாசன். அந்த உணர்வின் விளைச்சலாய் மலர்ந்தவையே அவரின் படைப்புகள்.

நன்றிங்கு வாழ்ந்திட வேண்டும்-உரம்

வேண்டும்-திறம்

வேண்டும்-நம் ஞாலம் பெரியார் சொல்லும் பாதையினை

விடாதே விடுதலைப் பெரும்பயன் ஈண்டும்

உலகப் பெரியாராகப் பார்த்து அவர் கருத்து மழையில் விடுதலைப் பயிர் முளைக்க உழைக்குமாறு அழைத்த அந்தக் குரல் இன்னும் நெடுங்காலத்திற்குக் கேட்டுக் கொண்டிருக்கும்.

- செந்தலை ந.கவுதமன், தமிழ்நாட்டரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருதாளர்.