கருத்துரிமையை எதிர்ப்பவர்களின் பதுங்கு குழியாகிவிட்டது 'தேசபக்தி' 'தேசம்' சூறையாடப்படுவதை எதிர்த்தாலோ, தேசத்தின் மக்கள் தங்களுக்கான உரிமை அடையாளங்களை வலியுறுத்தினாலோ -தேசத்துக்கு போர் வேண்டாம் என்று பேசினாலே) 'தேசவிரோதிகள்' என்ற முத்திரை குத்தப்பட்டு விடுகிறது.
டெல்லி பல்கலைக்கழக வளாகங்களில் -மதவெறியை எதிர்த்தாலே 'தேசவிரோதிகள்' என்று அகில பாரதிய வித்யார்ந்தி பரிஷத் மாணவர் அமைப்பு வன்முறைகளில் இறங்கி வருகிறது. டெல்லி ராம்ஜஸ் கல்லூரியில் கலாச்சார மாற்றம் என்ற கருத்தரங்கில் பேச அழைக்கப்பட்டிருந்தார் ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் அமைப்பை சார்ந்த உமர்காபீத், அநீதியாக தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு அவரது நினைவு நாளில் இரங்கல் தெரிவித்ததற்காக -அதே பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்யாகுமாருடன் சேர்த்து - தேசவிரோத சட்டத்தில் கைது செய்யப்பட்டவர், இப்போது பிணையில் வெளிவந்திருக்கிறார். இந்தியாவில் எத்தனையோ பேர் மீது தேசவிரோத சட்டம் பாய்ந்திருக்கிறது, அதற்காக அவர்கள் பேச்சுரிமையையே தடைப் படுத்த வேண்டும் என்பது தான் தேசப்பக்தியின் அடையாளமா? ஆர். எஸ். எஸ் மாணவர் அமைப்பான 'ஏபிவிபி' - கருத்தரங்கை நடத்த அனுமதிக்க மறுத்து - வன்முறையில் இறங்கியது.
புது டில்லி ஸ்ரீராம் கல்லூரியின் மாணவி குர்மெகர் கவுர்-கருத்துரிமைகளை மறுக்கும் பார்ப்பனிய பாசிசத்துக்கு எதிராக -தனது முகநூலில் கருத்துக்களை வெளியிட்டார். 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் உயிரிழந்த ராணுவத் தளதியின் மகள். இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் 'ஏபிவிபி'யை கண்டித்து எழுதினார். அந்த பெண்ணின் பூர்வீகத்தை ஆராயத் தொடங்கி 'ஏபிவிபி' -கடந்த ஆண்டு 'யு -டியூபில்' -அவர் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவைக் கண்டுபிடித்தனர். அதில் போருக்குஎதிராக-தன்கையில்எழுதியவாசகங்கள்கொண்டஅட்டைகளை ஒவ்வொன்றாக தானே கைகளில் பிடித்து காட்சிப்படுத்தியிருந்தார்.
அதில் ஒரு வாசகம் "எனது தந்தையை கொன்றது யுத்தம், பாகிஸ்தான் அல்ல" என்பது, அவ்வளவுதான். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா, இந்தப் பெண்ணை தாவூத் இப்ராகிமோடு ஒப்பிட்டு பேசி மிரட்டினார். மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண்ரிஜு ஆவேசமாக எச்சரித்தார். கிரிக்கெட் விளையாட்டுக்காரர் வீரேந்திர ஷேவாக்கோ குத்துச்சண்டைக்காரர் அந்த பெண்ணை கேலி செய்தனர். பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவோம், கொலை செய்வோம்- என்று 'தேசபக்தர்கள்' சமூக தளங்களில் மிரட்டுகிறார்கள்.
தேசபக்திக்காக ஒரு பெண்ணை ' பாலியல் வன்புணர்வு' செய்யவும் தயங்கமாட்டோம் என்று கூறுவதன் அர்த்தமென்ன ? இதற்கு பெயர்தான் தேசபக்தியா ? இப்படியே போனால் இந்தியாவில் 'தேச விரோதிகள் ' எண்ணிக்கைத்தான் அதிகமாகும். சுயசிந்தனையுடன் -குர்கமர்கவுர்கள் -துணிந்து வெளியே வந்திருப்பதை பாராட்ட வேண்டும்.