ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டிருக்கும் பாலியல் வன்முறைகள், கொலைகள் நம் நெஞ்சத்தை உருக்குலையச் செய்கின்றன. சட்டம் ஒழுங்கு சீரழிவு, மின்வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை போன்ற நிர்வாகப் பிரச்சினைகள் உழைக்கும் மக்களைக் கடுமையாகப் பாதிக்கின்றன. இது குறித்து முற்போக்கு இயக்கத் தோழர்கள் கூடுதலாகக் கவனம் செலுத்தித் தமது கண்டனத்தைப் பதிவு செய்கின்றனர், கண்டிக்கின்றனர்.
எல்லாத் தொலைக்காட்சிகளும் மேற்கண்ட பிரச்சினைகளைத் தான் பெரிதுபடுத்திப் பேசுகின்றன. கடந்த திமுக ஆட்சியிலும் மேற்கண்ட நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருந்தன. ஆனால், விழுக்காடு அடிப்படையில் தற்போது கூடுதலாக நடக்கிறது, அவ்வளவுதான். சன் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்டவை இது குறித்து அடிக்கடி செய்தி போடுகின்றனர். விஜய்க்கு எதிராக ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க அவர்கள் விரும்புகின்றனர். திமுகவுக்கு வேண்டுமானால் ஆட்சியை இழந்த சோகம் இருக்கலாம், மீண்டும் ஆட்சியைக் பிடிக்க வேண்டும் என்று வெறி இருக்கலாம், நமக்கு அப்படி இருக்கத் தேவையில்லை.
அவர்களது ஆதரவு ஊடகங்கள் பெரிதுபடுத்துவதை மட்டும் நாமும் பின்பற்றி அது குறித்து மட்டும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. நாம் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது, சத்தமில்லாமல் விஜய் ஆட்சியில் இந்துத்துவத்திற்கு ஆதரவான செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அவை பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாமல் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில், குறிப்பிட்ட சில நிகழ்வுகளை மட்டும் கீழே பார்க்கலாம்.
தேசிய கீதம் / வந்தே மாதரம் முன்னிலைப்படுத்தப்பட்டுத் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது
தமிழகத்தில் நடைபெறும் அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவதுதான் நீண்டகால மரபாகவும், அரசாணையாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால், ஆளுநர் மாளிகையில் நடந்த தவெக அரசின் பதவியேற்பு விழாவின் போது 'வந்தே மாதரம்' மற்றும் 'தேசிய கீதம்' முதலில் பாடப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. மேற்கு வங்கத்தில் வந்தே மாதரம் பாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து தமிழ்நாட்டின் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் போதும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அதனடிப்படையில்தான் முதலமைச்சர் விஜயும் பிரதமர் மோடியைச் சந்தித்த போது தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைப்பதற்கான அனுமதியைக் கேட்டு வந்துள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் (2021-இல்) தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, அதற்கென தனியாக அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசு, கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்பது விதி. எனவே இதனை அப்படியே பின்பற்றலாம். இதற்கு ஒன்றிய அரசின் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.
கடந்த திமுக ஆட்சியின் போது, தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என ஆளுநர் தெரிவித்த போது அதற்கு எதிராக அப்போது விஜய் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது, தனது ஆட்சிக் காலத்திலும் இந்த நெருக்கடி தற்போதைய ஆளுநரால் கொடுக்கப்படுகிறது. எனவே, தனது முந்தைய கருத்தில் உறுதியாக இருந்து ஆளுநரின் அழுத்தத்திற்கும், பாஜகவின் 'இந்தி-சமஸ்கிருத' திணிப்பு அரசியலுக்கும் தவெக அரசு பணிந்துவிடக் கூடாது.
பக்ரீத்திற்குப் பொதுவெளியில் மாடு வெட்டத் தடை
தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை நாளிலோ அல்லது வேறு எந்த நாட்களிலோ மாடுகள் வெட்டுவதற்கு நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தடை விதித்து உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்த உடனே, அரசுத் தரப்பு உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று இதற்கு எதிராக மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால், தவெக அரசு அதற்கு மாறாக, நீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. மேலும், பொது இடங்களில் தற்காலிகமாக மாடுகள் வெட்டப்படுவதைக் கண்காணிக்கவும், தடுக்கவும் சிறப்புப் படைகள் அமைத்துச் சிறுபான்மையினரின் மதச் சடங்குகளுக்கும் உணவு உரிமைக்கும் எதிராக நின்றது.
"நாங்கள் சிறுபான்மையினருக்கான அரசுதான்" என்று மேடையில் பேசுவதோடு இல்லாமல், நடைமுறையில் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்திருக்க வேண்டும். எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதுதான் வேதனை.
திருவள்ளுவருக்குக் காவி சாயம்
முன்பு ஆர். என். ரவி ஆளுநராக இருந்த போது செய்த அதே இந்துத்துவ நாசகர வேலையைத்தான், தற்போதைய ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் செய்யத் தொடங்கியுள்ளார்.
கடந்த மே 30 அன்று ஆளுநர் மாளிகையில் நடந்த 'வைகாசி அனுஷம்' என்ற பெயரில் (வள்ளுவர் நாள்) விழா நடத்தி, அவ்விழாவில், தற்போதைய ஆளுநர் அர்லேகர் காவி உடை, திருநீறு மற்றும் ருத்ராட்சம் அணிந்த திருவள்ளுவர் படத்தைக் காட்சிப்படுத்தியதோடு, திருவள்ளுவரை "சனாதன மரபின் அடையாளம்" என்றும் குறிப்பிட்டார்.
தவெக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், "வள்ளுவரை ஒரு குறிப்பிட்ட மத நிறத்திற்குள் அடைக்க நினைப்பது கடலை ஒரு குடத்திற்குள் அடைக்க முயல்வது போன்றது; அரசியல் லாபத்திற்காக அவருக்குக் காவி சாயம் பூசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறினாலும், தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் விஜய் மௌனம் காப்பது சரியல்ல. அவர் மௌனம் கலைத்துத் தமிழ்ப் பண்பாட்டை, தமிழ்நாட்டின் அறவோர்களை இழிவுபடுத்துவதைத் தடுக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் ஆவணப்படம் திரையிடத் தடை
அறக்களஞ்சியம் ஊடகத்தின் சார்பாக, ஊடகவியலாளர் தவம் மற்றும் தமிழ்தாசன் ஆகியோரால் 'திருப்பரங்குன்றம்' என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டு, அதைப்ப் புதுக்கோட்டையில் 'வீதி கலை இலக்கியக் களம்' என்ற அமைப்பின் சார்பில் ஜூன் மாதத் தொடக்கத்தில் திரையிடல் நிகழ்வை நடத்த இருந்தது.
"இந்த ஆவணப்படத்தைத் திரையிட்டால் அப்பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது" என்றும், இது "மேலிட உத்தரவு" என்றும் கூறித் திரையிடத் தடை விதித்தது காவல்துறை.
நீதிமன்றத் தீர்ப்புகளின் முரண்பாடுகள் மற்றும் அங்குள்ள இரு மத மக்களின் நீண்டகால நல்லிணக்கத்தை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தை "அயோத்தி" போல மாற்ற நினைக்கும் சில வலதுசாரி மற்றும் மதவாத சக்திகளின் சதித்திட்டங்களை இந்த ஆவணப்படம் அம்பலப்படுத்துகிறது. எனவேதான் சங் பரிவார் கும்பல் இந்தப் படத்தைத் தடை செய்ய வைத்துள்ளது.
பெரியார், அம்பேத்கர் கொள்கைகளைப் பேசுவதாகக் கூறும் தற்போதைய தவெக அரசு, வலதுசாரி அமைப்புகளுக்கு அஞ்சி இதுபோன்ற சமூக விழிப்புணர்வு ஆவணப்படங்களைத் தடை செய்வது சங் பரிவார் கும்பலுக்கு ஊக்கத்தைக் கொடுத்துவிடும்.
இவையல்லாமல், பெரியாரிய, முற்போக்கு சமூக ஊடகங்கள் மீதான தடை என இந்துத்துவச் செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. நிர்வாகக் குளறுபடிகளைப் பேசுவதை விட இந்துத்துவச் செயல்பாடு குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த இந்துத்துவச் செயல்பாடுகள் குறித்து சன் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட எந்த ஊடகங்களும் பேசப் போவதில்லை, நாம்தான் பேச வேண்டும். திமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தால் அவர்களுக்குப் போதுமானது, நமக்கு அப்படி இல்லையே? சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசுவதற்குப் பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள், ஆனால் இந்துத்துவச் செயல்பாடு குறித்துப் பேசுவதற்கு நாம் மட்டும்தான் இருக்கின்றோம்.
நாமும் சட்டம் ஒழுங்கு குறித்து மட்டும் பேசிவிட்டுச் சென்றால் இந்துத்துவச் செயல்பாடுகள் குறித்து யார் பேசுவது? எனவே நாம் கூடுதல் கவனம் செலுத்தி, விஜய் அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கும் இந்துத்துவச் செயல்பாடுகளை உற்றுநோக்கி நமது கண்டனங்களைச் சரியாகப் பதிவு செய்து, களத்தில் போராட வேண்டும். ஏனெனில் நமக்கு இந்துத்துவத்தை வீழ்த்த வேண்டிய பெரும் கடமை உள்ளது.
- க.இரா.தமிழரசன், தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம்