கடந்த சில நாட்களாக தமிழ்த்தேசிய முகாமில் இருந்து தமிழனின் ஆன்மீக வரலாற்றை மீட்டெடுப்பது தொடர்பாக கடுமையான முயற்சிகள் நடந்து வருகின்றது. குறிப்பாக பெ.மணியரசன், சீமான், ம.செந்தமிழன் போன்றவர்கள் இதில் முன்னிலையில் இருக்கின்றார்கள். இதில் மணியரசன் அப்பட்டமாக தன்னை பார்ப்பனியத்தின் தமிழ் முகமாக அறிவித்துவிட்டார். ஆனால் சீமான் சைவத்தையும், வைணவத்தையும் தமிழரின் ஆதி வழிபாட்டு மரபாக முன்வைத்து வருகின்றார்.
தமிழ்நாட்டில் சைவ சிந்தாந்தமும், வைணவமும் இருந்த அதே காலத்தில் ஏறக்குறைய இருபத்தி நான்கு சமயங்கள் இருந்துள்ளன. அவற்றில் புத்தம், சமணம், சாங்கியம், உலகாயதம் போன்றவையும் அடங்கும்.
ஆனால் ஏன் சீமான் அவர்கள் சைவத்தையும் வைணவத்தையும் மட்டும் தமிழரின் வழிபாட்டு மரபாக முன்வைக்கின்றார் என்று ஆராய்ந்து பார்த்தால்தான் சீமான் அவர்களின் நோக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
உண்மையிலேயே சைவமும் வைணவமும் தான் தமிழரின் ஆதி வழிபாட்டு மரபா? அது எப்போதாவது பெரும்பாண்மை தமிழர்களின் வழிபாட்டு மரபாக இருந்திருக்கின்றதா?
சைவமும் வைணவமும் ஏதோ தமிழ்நாட்டிற்கு மட்டுமே சொந்தமானது கிடையாது. எப்படி தமிழ்நாட்டிற்குள் பல தத்துவ மரபுகள் வந்ததோ அப்படித்தான் சைவமும், வைணவமும் வந்தது. இன்று தமிழ்நாட்டில் உள்ள சைவம் சித்தாந்த சைவம் எனப்படுகின்றது. சித்தாந்தம், சிவசாசனம் என்று பழைய நூல்களில் குறிப்பிடப்படும் சைவப் பிரிவின் தொடர்ச்சியே இது. இது தவிர இந்தியாவில் வீர சைவம், காசுமீர சைவம், சித்த சைவம், சிரெளத்த சைவம், பாசுபதம் போன்றவையும் கடைபிடிக்கப்படுகின்றது.
சைவத்தின் தத்துவம் என்பது பதி-பசு-பாசம் ஆகும். இதில் பதி என்பது சிவனையும், பசு என்பது ஆன்மாவையும், பாசம் என்பது பதிக்கும் பசுவுக்கும் இடையில் அதை மூடி மறைக்கும் திரையாகவும் காட்டப்படுகின்றது. பாசம் என்ற நல்வினை தீவினை போன்றவற்றை கடந்து பிறப்பை அறுத்தால் பதியை அடைய முடியும் என்கின்றது சைவம்.
மனிதனின் துன்பங்களுக்கான காரணத்தை புற உலகில், சமூகத்தில் தேடாமல் மனிதனின் மூளைக்குள் தேடியது சைவம். இதன் மூலம் சமூகத்தில் இருந்த நிலவுடைமை, பார்ப்பன ஆதிக்கத்தை மூடி மறைத்து மக்களை பக்தியின் பேரால் அடிமைகள் ஆக்கியது. அந்தக் காலத்தில் கோயில் சார்ந்து கட்டமைக்கப்பட்டிருந்த நிலவுடமை வர்க்கத்திற்குத் தேவையான ஊதியமற்ற உழைப்பை பக்தியின் பெயரால் சைவம் சுரண்டியது.
அதே போலத்தான் வைணவமும். அதற்கென்று தனியாக எந்த தத்துவமும் இல்லை என்றாலும் அது முழுக்க முழுக்க வேத மரபையே தூக்கிப் பிடித்தது. நம்மாழ்வார் பாடிய திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி போன்றவை முறையே ரிக் வேதம் யசுர் வேதம், அதர்வண வேதம், சாம வேதம் போன்றவற்றின் சாரம் என்று புலவர் கா.ர.கோவிந்தராசர் கூறுகின்றார்.
தாழ்த்தப்பட்ட பாணர் குலத்தைச் சேர்ந்த திருப்பாணாழ்வாரை பார்ப்பனனான சாரங்க முனிவன் என்பவர் அரங்கனின் ஆணைக்கிணங்க தோளில் தூக்கிக் கொண்டு போய் திருவரங்கக் கோயிலில் பாட வைக்கின்றார். அதன் பிறகு அவர் கோயிலில் இருந்து வெளியே திரும்பவே இல்லை. எப்படி சைவத்தில் நந்தன் பார்ப்பன சதியால் முடித்துக் கட்டப்பட்டாரோ அதே போல வைணவத்தில் திருப்பாணாழ்வார் பக்தியின் பெயரால் முடித்துக் கட்டப்படுகின்றார்.
எப்படி சைவம் புத்தத்திற்கும் சமணத்திற்கும் எதிராக நஞ்சைக் கக்கியதோ அதே போலத்தான் வைணவமும் நஞ்சை கக்கியது. அவர்களின் தலையை அறுக்க வேண்டும் என்றது. இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கான அத்தனை கருத்தியலும் அந்தக் காலத்திலேயே ஆழ்வார், நாயன்மார்களால் உருவாக்கப்பட்டு விட்டது.
இதே போல சைவத்திற்கும், வைணவத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளது. இதை எல்லாம் பெரியார் தன் காலத்திலேயே அம்பலப்படுத்தி இருக்கின்றார். ஆனால் பார்ப்பனியத்தின் ஆணிவேர்கள் ஆழமாக ஊடுறுவிய சைவத்தையும் வைணவத்தையும் மட்டுமே சிலர் தூக்கிப் பிடிக்கின்றார்கள் என்றால் அதன் பின் உள்ள வர்க்க நலன் என்னவென்று புரிந்து கொள்ள முடியாதது அல்ல.
தமிழ்நாட்டில் 36 பழங்குடி சாதிகள், பட்டியல் சாதிகள் 76, பிற்பட்ட சாதிகள் 136, மிகவும் பிற்பட்ட சாதிகள் 41, சீர்மரபினர் 68 மற்றும் முற்பட்ட சாதிகள் 79 உள்ளன.
இதில் சைவத்தை தன்னுடைய சாதியின் பின்னொட்டாகக் கொண்ட சில சாதிகள் உள்ளன. அவை சைவ வேளாளர், சைவ முதலியார், சைவச் செட்டியார், சைவ சிவாச்சாரியார், வீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்).
சீமான் சைவத்தை தமிழரின் மதம் என்கின்றார். ஆனால் மேற்குறிப்பிட்ட சாதிகள் அதை தங்களின் உணவுப் பழக்கமாகக் குறிப்பிட்டு அசைவம் சாப்பிடுபவர்களை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு பயன்படுத்துகின்றார்கள். மேலே குறிப்பிட்ட சாதிகள் தவிர மற்ற எல்லா சாதி மக்களும் பெரும்பாலும் அசைவம் சாப்பிடுபவர்கள்தான்.
சைவம் என்பது சாதி அடையாளமே தவிர, அது ஒரு மத அடையாளம் அல்ல. அப்படி எப்போதும் இருந்ததும் அல்ல.
திருவாடுதுறை ஆதீனம், காஞ்சி ஞானப்பிரகாசர் மடம், திருவையாறு செப்பறை மடம், வேளாக்குறிச்சி மடம், தருமபுரம் மடம், திருப்பனந்தாள் மடம், துழாவூர் மடம், திருவண்ணாமலை ஆதீனம், குன்றக்குடி ஆதினம் மயிலம் பொம்மபுர ஆதீனம், மதுரை ஆதீனம் போன்றவற்றில் இன்றும் சில குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆதினங்களாக வர முடியும்.
அதே போல தமிழ்நாட்டில் உள்ள வைணவ மடங்களான மன்னார்குடி ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், காஞ்சி ஜீயர் மடம், பரகால ஜீயர் மடம், அஹோபில ஜீயர் மடம், ஆழ்வார் திருநகரி ஜீயர் மடம், நாங்குநேரி ஜீயர் மடம் போன்றவற்றில் வடகலை, தென்கலை போன்றவற்றைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஜீயர்களாக வர முடியும்.
எப்படி சங்கர மடத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே சங்கராச்சாரிகளாக வர முடியுமோ அப்படித்தான் சைவ மடங்களிலும், வைணவ மடங்களிலும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆதினங்களாக, ஜீயர்களாக வர முடியும்.
ஆனால் இதைப் பற்றியெல்லாம் மறந்தும் வாய் திறக்காத சீமான் அவர்கள் சைவத்தையும், வைணவத்தையும் கூசாமல் ஒட்டுமொத்த தமிழர்களுக்குமான வழிபாட்டு முறையாக முன்னிறுத்துகின்றார்.
பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நிலப்பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடமுமாகும். காடும் காடு சார்ந்த இடமும் முல்லையாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனப்படும். நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த இடமுமாகும்.
குறிஞ்சி நிலத்தின் முக்கிய தொழிலே வேட்டையாடுவதுதான். அவன் எப்படி சைவ உணவுப் பழக்கம் கொண்டவனாக இருந்திருக்க முடியும்? அதே போலத்தான் முல்லை நில மக்களும், மருத நில மக்களும் ஆடு மாடுகள் வளர்ப்பதை தொழிலாகக் கொண்டிருக்கும் போது அவர்கள் எப்படி சைவத்தை உணவுப் பழக்கமாக கொண்டிருக்க முடியும்? நெய்தல் நில மக்கள் நிச்சயம் மீன்பிடிக்கும் வேலையே செய்து வந்திருப்பார்கள், அதே போல பாலை நிலத்தில் வாழ்ந்த மக்களும் தங்களுடைய உணவுத் தேவைக்கு பெருமளவு வேட்டையாடுவதையே சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.
எப்படிப் பார்த்தாலும் சைவத்தை எந்த நிலத்தில் வாழ்ந்த மக்களும் கடைபிடித்திருக்க முடியாது. அதற்கான எந்த வாய்ப்புமே இல்லை. அதனால்தான் சங்க இலக்கியம் முழுவதும் தமிழன் தின்ற அசைவ உணவுகள் பற்றி பல குறிப்புகள் உள்ளன. குறிப்பாக புறநானூற்றில் தமிழன் யானைக்கறி தின்றதெல்லாம் பதிவாக இருக்கின்றது.
ஒவ்வொரு நில மக்களும் ஒரு தெய்வத்தை வணங்கி வந்தனர் என்று தொல்காப்பியம் கூறுகின்றது. குறிஞ்சி நிலத் தெய்வமாக முருகன் வழிபடப்பட்டான். பாலை நிலத்திற்கு கொற்றவை, முல்லை நில மக்கள் திருமாலையும், மருதநில மக்கள் இந்திரனையும். நெய்தல் நில மக்கள் வருணனையும் வழிபட்டார்கள். ஆனால் சிவனை தமிழர்கள் வழிபட்டதாக தொல்காப்பியத்தில் சான்றில்லை. மேலும் தொல்காப்பியம் குறிப்பிடும் திருமாலும் வைணவம் குறிப்பிடும் விஷ்ணுவும் ஒன்றல்ல. எப்படி முருகனை பார்ப்பனியம் உள்வாங்கிக் கொண்டதோ அதே போல திருமாலையும் திருடிக் கொண்டது.
சைவத் திருமுறைகளில் திருமந்திரம் காலத்தால் முற்பட்டது. இதனை எழுதிய திருமூலர் கேதாரம், நேபாளம், காசி, விந்தம், ஸ்ரீசைலம் இவற்றைத் தரிசித்துக் கொண்டு தென்னாடு வந்தவர், வடமொழி ஆகமங்களை தமிழில் பாட வேண்டும் என்ற நோக்கத்தினால் மூவாயிரம் செய்யுட்களைக் கொண்ட திருமந்திரம் என்னும் நூலை எழுதினார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.
ஆனால் இந்தத் திருமூலரை தமிழர் என்று கம்புசுற்றும் கோஷ்டிகள் இன்னமும் தமிழ்நாட்டில் இருக்கின்றன.
அதே போல வைணவத்தின் முக்கிய நூல்களான வேதம், உபனிஷத்து, பகவத் கீதை, பஞ்சரந்தர ஆகமம், மகாபாரதம், இராமாயணம், பாகவத புராணம், விஷ்ணு புராணம், கருட புராணம், நாரத புராணம், பத்ம புராணம், வராஹ புராணங்கள் போன்ற அனைத்துமே பார்ப்பனியத்தையும் சாதிய மேலாதிக்கத்தையுமே தூக்கிப் பிடிக்கின்றன.
சைவம், வைணவம் போன்ற நிறுவனப்படுத்தப்பட்ட சமயங்களின் தோற்றமும், பெருங்கோயில்களின் தோற்றமும் நிலவுடமையின் ஆதிக்கத்தை ஒட்டியே உருவாகின்றன.
மகேந்திரன் காலத்திற்கு முன் தமிழகத்தில் கற்கோவில்கள் இல்லை. இருந்த கோவில்கள் செங்கல், சுண்ணாம்பு, மரம் உலோகம் இவற்றால் ஆனவையே. கி.பி.2-ஆம் நூற்றாண்டில் இயற்றப் பெற்ற சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் வீரர், அருந்தவர், அரசர், பத்தினிமார் இவர்களுக்குக் கோவில்கள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.
கிபி 7-ஆம் நூற்றாண்டில் தான் பல்லவர்களால் தமிழகத்தில் கற்கோவில்கள் அமைக்கப்படுகின்றன. இவர்கள் மலைச் சரிவில் நடுப்பகுதியைக் குடைந்து மண்டபம் போன்ற கோவிலை அமைத்தனர். இக்கோவில்கள் குடைவரைக் கோவில்கள் எனப்படும். சிறிய பாறைகளைக் கோவில்களாகவே குடைந்து அமைத்தனர். இவை ஒற்றைக் கற்கோவில்கள் எனப்படும். இவையே இன்று மாமல்லபுரத்தில் பஞ்ச பாண்டவர் ரதங்கள் என்று தவறாகக் கூறப்படுகின்றன. பின் வந்த பல்லவர்கள் பாறைகளைக் கற்களாக உடைத்து, இக்காலத்திலுள்ள கற்கோவில்களைப் போல அமைக்கத் தொடங்கினர். தென்னிந்தியாவில் முதன்முதல் கட்டப்பட்ட கற்கோவில் காஞ்சி கயிலாசநாதர் கோவிலாகும்.
இந்தக் கோயில்கள் அனைத்துமே பார்ப்பன சிவனையோ, விஷ்ணுவையோ கடவுள்களாகக் கொண்டவைதான். இவற்றுக்கும் பெரும்பான்மை தமிழர்களுக்கும் எந்த சம்மந்தமும் எப்போதுமே இருந்தது இல்லை. தமிழனின் மீது திணிக்கப்பட்டவைதான் சைவமும், வைணவமும்.
சிலர் ஆழ்வர்களிலும், நாயன்மார்களிலும் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்களே என கேள்வி எழுப்புகின்றார்கள். ஆம் அது உண்மைதான். ஆனால் பிரச்சினை ஒரு சைவ மடத்திற்கோ வைணவ மடத்திற்கோ தலித்துகள் தலைமைப் பதவிக்கு வரமுடியுமா என்பதுதான்.
வரமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும். அது சீமானுக்கும் தெரியும். ஆனால் ஒருபோதும் சீமான் அதை நோக்கி கேள்வி எழுப்ப மாட்டார். மிக சாதூர்யமாக அதைக் கடந்துவிடுவார்.
தமிழர்களை சைவத்துக்குள்ளும், வைணவத்துக்குள்ளும் தள்ளும் சீமான் அவர்களின் முயற்சி பார்ப்பனிய சதியே அல்லாமல் வேறு அல்ல.
தமிழன் எந்த காலத்திலும் சைவனாகவோ, வைணவனாகவோ இருந்தது இல்லை. அது பெரும்பாண்மை தமிழர்களின் வழிபாட்டு முறையாகவும் இருந்ததும் இல்லை. நடுகல் வழிபாடும், முன்னோர் வழிபாடுமே தமிழர்களின் வழிபாட்டு முறையாகும்.
தன்னை பார்ப்பன மயப்படுத்திக் கொண்ட சாதிகள் சைவத்தை உடன் அழைத்துக் கொள்கின்றன. அதே போல இன்று வைணவம் என்றால் அது வடகலை, தென்கலை சாதிகளை மட்டுமே குறிக்கின்றன.
தமிழனுக்கு என்று ஒரு மதம் எப்போதுமே இருந்தது இல்லை. அவன் மதமற்றவன். ஆனால் சீமான் அவர்களுக்கு மதம் தேவைப்படுகின்றது. அதுவும் பார்ப்பன சிவனையும், விஷ்ணுவையும் வணங்கும் மதம் தேவைப்படுகின்றது. ஆனால் கேட்டால் தன்னை இந்து மதத்தின் எதிரி என்பார்.
இதற்குப் பெயர்தான் நயவஞ்சகம். இதற்குப் பெயர்தான் கைக்கூலித்தனம். இதற்குப் பெயர்தான் பார்ப்பனியம்.
நாம் சீமானுக்கு சவால் விடுகின்றோம். அவரால் முடிந்தால் சைவத்தையும் வைணவத்தையும் தமிழனின் ஆதி சமயம் என நிறுவட்டும்.
- செ.கார்கி