தந்தை பெரியார் 11-9-1938இல் “தமிழ்நாடு தமிழருக்கே!” என்ற குறிக்கோளை முன்வைத்தார்.
1939 முதல் 30-9-1945 வரையில் “திராவிட நாடு திராவிடருக்கே!” என்ற கோரிக்கையை முன் வைத்தார். நாட்டுப் பிரிவினை என்கிற கருத்தை 1-10-1945 முதல் 1-11-1956 வரை தூக்கிப் பிடித்தார். ஆனால், அதற்கான ஏற்பாடு எதையும் முனைப்போடு செய்யவில்லை.
1-11-1956இல், “சென்னை மாகாணம்” என்கிற திராவிட நாடு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என நான்கு தனித்தனி ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அப்போது முதல், தன் 19-12-1973 இறுதிச் சொற்பொழிவு வரை “தனிச் சுதந்தரத் தமிழ்நாடு” என்கிற கோரிக்கையைப் பரப்புரை செய்தார்; தன் இறுதி மூச்சை 24-12-1973 அன்று நிறுத்தினார். அப்போது அவரது தலைமாட்டில் நானும் திருச்சித் தோழர்களும் நின்றோம்.
‘திராவிடர் கழகப் போக்குச் சரியில்லை’ என்று 1971 மார்ச்சில் தந்தை பெரி யாருக்கு உணர்த்தினேன். அது பற்றிய ஒரு கருத்தரங்கை, அவருடைய ஒப்பு தலுடன் 1971 ஏப்பிரலில், தஞ்சை மாவட்டம் இராசமன்னார்குடியில் நடத்தினோம். அந்தக் கருத்தரங்கைத் தந்தை பெரியார் முடித்து வைத்தார். எங்கள் கருத்தை ஆதரித்தார்.
நான் பெரியாருடைய மறைவுக்குப் பின்னரும், என் 1971 கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. துலாம்பரமாக ஓர் அறிக்கையை 13-11-1975இல் வெளியிட்டேன். அதையே ஒரு காரணமாக வைத்து, நான் 16-11-1975இல் திராவிடர் கழகத் திலிருந்து நீக்கப்பட்டேன்.
என்னை ஒத்த தோழர்கள் ஒன்றுசேர்ந்து, 8-8-1976இல், சீர்காழியில், “பெரியார் சம உரிமைக் கழகம்” என்ற தனி அமைப்பை உருவாக்கினோம்.
சாதி ஒழிப்பு, சமதர்மம், வகுப்புவாரி உரிமை இவற்றை இயக்கத்தின் கொள்கைகளாக அறிவித்தோம்.
1978 ஏப்பிரல் முதல், இந்தியப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்திலுள்ளபடி - மத்திய அரசுக் கல்வியிலும், மத்திய அரசு வேலையிலும் தனி இடஒதுக்கீட்டைப் பெறுகிற ஒரு வேலைத் திட்டத்தை முதன்மையாக எடுத்துக் கொண்டோம்.
அப்போது முதல் உத்தரப்பிரதேசம், பீகார், இராசஸ்தான், அரியானா முதலான மாநிலங்களில் பயணம் மேற்கொண்டோம்.
1988க்குள் வங்காளம், அசாம், பஞ்சாப் முதலான மாநிலங்களிலும் பயணித்தோம்.
அதனால் பெற்ற பட்டறிவைக் கொண்டு, “பெரியார் சமஉரிமைக் கழகம்” என்கிற நம் அமைப்பின் பெயரை, “மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி” என 1988இல் மாற்றம் செய்து கொண்டோம்.
“இந்தியாவில் பொதுவுடைமை மலர மார்க்சிய - பெரியாரிய நெறியில் தேசிய இனவழிப்பட்ட சமஉரிமை உடைய சமதர்மக் குடிஅரசுகள் ஒருங்கிணைந்த உண் மையான கூட்டாட்சி அமைய ஆவன செய்தல்” என் பதை, நம் கட்சியின் குறிக்கோளாக வரித்துக் கொண் டோம். நிற்க.
வங்காளத்தில் இயங்கிக் கொண்டுள்ள மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர்கள் பேராசிரியர் சந்தோஷ் ராணா, வாஸ்கர் நந்தி இருவரும், பிற்படுத் தப்பட்டோர் இடஒதுக்கீடு பற்றி நம் வழிகாட்டலை வேண்டி, என்னை அழைத்தனர். நான் மட்டும் 1986 அக்டோபர், நவம்பரில் 40 நாள் வங்காளத்தில் தங்கி இடஒதுக்கீடு பற்றி, அங்குள்ளவர்களுக்கு விளக்கினேன். அவர்கள் 1986 நவம்பரில் கல்கத்தாவில்-“இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு வகுப்பு (அ) சாதிகளின் அச்சுறுத்தல்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தினர்.
அதற்கு, நம் கட்சித் தோழர்கள் தில்லி ச. தமிழரசு, அலிகர் முனைவர் து.மூர்த்தி, க.முகிலன், மா.முத்துச்சாமி, கலச.இராமலிங்கம் மற்றும் சிலரை அழைத்திருந்தேன்.
அக்கருத்தரங்கில், நான் “இந்திய அரசமைப்புச் சட்டம் மோசடியானது” என்பது பற்றி விரிவாகப் பேசினேன். அதைச் செவிமடுத்த தோழர் வாஸ்கர் நந்தி, 1987 ஏப்பிரலில் பஞ்சாபில் லூதியானாவில் ஒரு கருத்தரங்கை நடத்தினார். அதில் நான் பங்கேற்று, “இந்திய அரசியல் சட்டம் மோசடியானது” என்பதை விளக்கினேன்.
அதைத் தொடர்ந்து, பஞ்சாபில் ஜலந்தரில் 1987 செப்டம்பரில் நடைபெற்ற மார்க்சியர்கள் மாநாட்டில், நானும். மறைந்த நம் தோழர் முனைவர் து. மூர்த்தி அவர்களும் உரையாற்றினோம். அம்மாநாட்டினர் எங்கள் பேச்சை ஆரவாரித்து வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து, வாஸ்கர் நந்தி முயற்சியில், அசாமில், நியூ ஜல்பைகுரியில் 1988 நடைபெற்ற மாநாட்டுக்கு என்னை அழைத்தார். அந்த மாநாட்டில், “இந்தியக் கூட்டாட்சிக்கு அச்சுறுத்தல்” (Federalism in(Federalism inPeril) என்ற சிறு நூலை நானே எழுதி, அச்சிட்டு, அதை வெளியிட்டுப் பேச வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அதன்படி, ஒரு சிறு நூலை அச்சிட்டு எடுத்துச் சென்று நியூ ஜல் பைகுரியில் வெளியிட்டேன்.
நாம், நம் கட்சியின் சார்பில் தில்லியில், மவ்லங்கர் மன்றத்தில்,
18-10-1991 வெள்ளி அன்று “மண்டல் பரிந்துரை மற்றும் இந்தியக் கூட்டாட்சிக் கொள்கைக் கருத்தரங்கு”
19-10-1991 சனி அன்று, “தந்தை பெரியார் 113 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் பன்மொழி மலர் வெளியீடு”
20-10-1991 ஞாயிறு அன்று “இந்தியக் கூட்டாட்சிக் கொள்கை விளக்க மாநாடு” ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி களை, மா.பெ.பொ.க. மற்றும் அனைத்திந்திய ஒடுக்கப் பட்டோர் பேரவை சார்பில் நடத்தினோம். அம்மூன்று நாள்கள் நடந்த தில்லி நிகழ்ச்சிகளில் நம் மா.பெ.பொ.க. தோழர்களும், ஒருநாள் மாநாட்டில் பா.ம.க. தோழர் களும் பங்கேற்றனர்.
20-10-1991 ஞாயிறு அன்று முற்பகல் மாநாட்டில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பஞ்சாபைச் சேர்ந்த அஜித் சிங் பெய்ன்ஸ் தொடக்கவுரை ஆற்றினார்.
21-10-1991 திங்கள் அன்று முற்பகலில் நார்த் அவின்யூ 93, இல்லத்தில், நீதிபதி அஜித் சிங் பெயின்ஸ் தலைமையில் சிலர் கூடி, “உண்மையான கூட்டாட்சிக் கான அரசமைப்புச் சட்ட விவாதக் குழு” (Real FederalConstitution Discussion Group) என, ஒன்றை அமைத்தோம்.
அதன் ஒருங்கிணைப்பாளராக, ஈரோடு பேராசிரியர் மு.க. சுப்பிரமணியம் பொறுப்பேற்றார்.
அன்னார் மறைவுக்குப் பின்னர், அந்த விவாதக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நான் உள்ளேன்.
தில்லியில் 1991 மூன்று நாள்கள் நிகழ்ச்சிகள் நடந்த பிறகு, 23-10-1991 முதல் 30-10-1991 முடிய அலிகர், கான்பூர், லக்னோ, பாட்னா, கல்கத்தா ஆகிய ஊர் களுக்கு நம் தோழர்கள் ஆண்கள் 50 பேர், பெண்கள் 10 பேர் ஆக 60 பேர்கள் ஒரே குழுவாகப் பயணம் சென்று கொள்கைப் பரப்புரை செய்தோம்.
அதாவது இந்திய அளவில் நாம் செயல்பட்டோம்.
அதைத் தொடர்ந்து, 1992இல், நீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ் அவர்களை சென்னைக்கு அழைத்து இந்தியக் கூட்டாட்சி பற்றி ஒரு பொதுக் கூட்டம் நடத்தினோம்.
“இந்தியக் கூட்டாட்சி ஏன்?” என்ற பெயரில், பேராசிரியர் மு.க.சுப்பிரமணியம் தமிழில் ஒரு நூல் எழுதியுள்ளார்.
நான் “இந்தியக் கூட்டாட்சிக்கு அச்சுறுத்தல்” (Federalismin India in Peril) என ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதி, 2014இல் வெளியிட்டுள்ளேன்.
அதன் பின்னர், நான் 2015, 2016 இரண்டு ஆண்டு களிலும் தொடர்ந்து, சண்டிகருக்குச் சென்று நீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ், நான் இருவரும் இணைந்து இந்தியப் பிரதமர், இந்தியச் சட்ட அமைச்சர் ஆகியோருக்கு, கூட்டாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தி, வேண்டுகோள் விண்ணப்பம் விடுத்துள்ளோம்.
கூட்டாட்சி, இந்தியாவில் வரவேண்டும். அப்படி யானால் நாம் இந்தியா முழுவதிலும் சென்று அதுபற்றிப் பரப்புரை செய்ய வேண்டும். எப்படிப் பட்ட கூட்டாட்சி என்பதை இந்திய மக்களுக்கும், மக்கள் தலைவர்களுக்கும் முதலில் நாம் புரிய வைக்க வேண்டும்.
நாம் விரும்பும் இந்தியக் கூட்டாட்சி என்பதன் வடிவம் என்ன?
- இந்தியாவின் பாதுகாப்பு, பணம் அச்சடிப்பு, செய்திப் போக்குவரவு மூன்று துறைகள் மட்டும் மத்திய அரசிடம் இருக்க வேண்டும்.
- கல்வி, மக்கள் நலன், தொழில் துறை, எரிபொருள், வேளாண்மை, காடுகள் பாதுகாப்பு, அஞ்சல் துறை, தொடர் வண்டித்துறை, வருமான வரித்துறை, வணிக வரித்துறை மற்றும் எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் தன்னாட்சி பெற்ற மாநிலங்களிடம் இருக்க வேண்டும்.
- கூட்டாட்சி இந்தியாவில் பட்டியலிடப்பட்ட அனைத்து மொழிகளும், அந்தந்தத் தன்னாட்சி பெற்ற மாநிலங் களின் அன்றாட நிருவாக மொழிகளாக இருக்க வேண்டும்.
- இந்திய ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் என்கிற- 'The Union Public Service Commission” என்கிற அமைப்பு உடனே கலைக்கப்பட வேண்டும்.
- ஒவ்வொரு தன்னாட்சி மாநிலத்துக்கும் தனித்தனி அரசமைப்புச் சட்டம் வேண்டும்.
- ஒவ்வொரு தன்னாட்சி மாநிலத்துக்கும் தனித்தனி தேசியக் கொடி இருக்க வேண்டும்.
- முதலில் தன்னாட்சிக் குடிமகன். அதன்பின் இந்தியக் குடிமகன் என் இரட்டைக் குடி உரிமை (Dual Citizenship) வேண்டும்.
- ஒவ்வொரு தன்னாட்சி மாநிலமும் இந்திய ஒன்றிய அரசிடம்-இங்கே எண்.1-இல் கண்ட மூன்று துறை அதிகாரங்களையும் விருப்பத்துடன் ஒப்படைக்க வேண்டும்.
இப்படியெல்லாம் எழுதுவதும், பேசுவதும் எளிது. இவற்றைச் செயல்படுத்துவது பற்றி நாம் ஒவ்வொரு வரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
நாம் 7-1-2018இல், சென்னையில், கூட்டாட்சி மாநாடு நடத்தினோம்.
வரும் 6-1-2019 ஞாயிறு அன்று, தமிழ்வழிக் கல்வி மாநாடு நடத்திட உள்ளோம்.
கூடுவோம்! பேசுவோம்! திட்டமிடுவோம்! செயல்படுத்து வோம்! வாருங்கள்!