கடந்த காலங்களில் தங்களைச் சைவர்கள் எனக் கதைத்துக் கொண்டிருந்த யாழ்ப்பாணச் சிவனியர்கள் இன்றைக்கு இந்துக்கள் என்று கூறிக் கொண்டு ஆர் எஸ் எஸ் இன் அணிகளைக் கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்..

திம்பு பேச்சுவார்த்தைத் தொடங்கி.. முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை இந்தியாவை நம்பி பேரழிவுக்கு ஆளாக்கப்பட்டபோதும்... அறுப்பவனை நம்பியே ஏமாந்து போகும் ஆடுகளைப் போல்.. இந்தியாவை நம்பியே ஈழத் தமிழர்கள் ஏமாந்து வருகின்றனர்..

ஆர் எஸ் எஸ் சும் அதன் பரிவார அமைப்புகளும் தங்களை மீட்கும் என்று மதி மயங்குகின்றனர்..

அமெரிக்காவிலும் இலண்டனிலும் மட்டுமல்ல இலங்கையிலும் அண்ணாமலையையும் மோடியையும் ஈழத் தமிழர்கள் பலர் வரவேற்கின்றனர்..

இதுவரை எந்த இந்தியத் தலைமை அமைச்சரும் போகாத யாழ்ப்பாணத்திற்கு மோடி சென்று வந்து விட்டதாகவும்.. முள்ளிவாய்க்கால் அழிவில் வீடுகளை இழந்த 27 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டித் தந்ததாகவும்.. சிங்கள இந்திய நல்லுறவு காரணமாக இலங்கை, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நெருக்கடிகள் இல்லை என்றும்.. இலங்கையில் உள்ள தமிழர்கள் அமைதி சமத்துவம் கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்ய மோடி தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்றும்.. அண்மையில் சென்னைக்கு வந்த இராஜ்நாத் சிங் பேசுகிறார்..

இவை ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசால் குறிப்பாகப் பாஜக அரசால் விடிவு ஏற்படும் என்று நம்பிக் கொண்டிருக்கிற ஈழத் தமிழர்களை மட்டுமின்றி, முள்ளிவாய்க்கால் நெருக்கடியில் ஈழத் தமிழர்களைக் காங்கிரசு கட்சிதான் அழித்தது என்ற கருத்தில் காங்கிரசு மீது கடும் வெறுப்போடு இருக்கிற தமிழ்நாட்டுத் தமிழர்களையும் ஏமாற்றுகிற பேச்சு என்பதைக் கடந்த 50 ஆண்டுக்காலத் தமிழீழ விடுதலை அரசியலின்.. அதற்கு ஆதரவான தமிழ்நாட்டு அரசியலின் நிலைகளை அறிந்தவர்கள் அறிய முடியும்..

இந்திய அரசு என்பது கட்சி சார்ந்தது அல்லது குறிப்பிட்ட தலைவர்கள் சார்ந்தது மட்டுமாக அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.. அதாவது காங்கிரஸ் கட்சியோ, அல்லது பாஜகவோதான் காரணம் என்பதாகக் கருதுகின்றனர்..

இது அவர்களின் பிழை மட்டுமல்ல.. கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் தலைவர்கள் பலரும்கூட அவ்வாறே கருத்துகள் பேசி வந்தனர்.. இன்னும் பேசி வருகின்றனர்..

இந்திரா காந்தி இருந்திருந்தால் தமிழீழம் விடுதலை பெற்றிருக்கும்.. என்றும், வாஜ்பாய் வென்றிருந்தால் ஈழத் தமிழர்களுக்குப் பெருமளவில் துணை செய்த ஜார்ஜ் பெனாண்டஸ் மூலமாகவும் ஜஸ்வந்த் சிங் மூலமாகவும் தமிழீழத்தையே விடுதலைப்பெற வைத்திருக்க முடியும் என்றெல்லாமும் கருத்து கொண்டிருந்தவர்களும் இப்போதும் பேசிக் கொண்டிருப்பவர்களும் தமிழ்நாட்டில் உண்டு..

இந்திய அரசியல் அதிகாரம் என்பது ஏதோ ஒரு கட்சியால் அல்லது ஒரு சில தலைவர்களால் தீர்மானிக்கப்படுவதோ முடிவு எடுக்கப்படுவதோ.. இல்லை..

எனவே குறிப்பிட்ட ஒரு தலைவராலோ அல்லது ஒரு சில தலைவர்களாலோ இன்றைய இந்திய அரச அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியாது..

அதாவது, இந்தியாவைச் சுரண்டி சூறையாடிக் கொண்டிருக்கிற அம்பானி, அதானி உள்ளிட்ட பன்னாட்டுக் கார்ப்பரேட் பெரு முதலாளிகளை வீழ்த்தி விட முடியாது.. இந்தியப் பார்ப்பனிய அதிகாரப் போக்குகளே இல்லாமல் செய்துவிட முடியாது..

இந்தியா என்பது ஒரு கட்சியாலோ ஒரு சில தலைவர்களாலோ உருவாக்கப்பட்டதோ அல்லது அவர்களின் ஆணைக்குக்கீழ் நடந்து கொண்டிருப்பதோ அல்ல.. அது ஒரு அதிகாரக் கட்டமைப்பு..

இந்திய அதிகாரக் கட்டமைப்பு என்பது பன்னாட்டுக் கார்ப்பரேட் முதலாளிய நலன்கள் சார்ந்ததாகவும், பார்ப்பனிய சாதிய நலன்கள் சார்ந்ததாகவும் இருக்கிற நிலையில்.. அந்த அதிகாரக் கட்டமைப்பை முழுமையாக வீழ்த்தி மக்களுக்கான மக்களரசு அமைப்பாகப் புதிய ஒன்றியக் குடியரசை நிறுவாமல் இன்றைய சூழலில் இந்தியாவுக்குள் இருக்கிற மொழித் தேசங்களிலோ அல்லது தமிழ் ஈழத்திலோ முழு உரிமைகள் கொண்ட ஓர் அரசியல் மாற்றத்தைச் செய்துவிட முடியாது..

ஏதோ காங்கிரசு மட்டுமே தமிழ் ஈழத்திற்கோ அல்லது இந்தியாவில் இருக்கிற தேசிய இனங்களின் உரிமைகளுக்கோ பகை கட்சி போல கருதுவதும் பேசுவதும் வேடிக்கையானதும் தவறானதும் ஆகும். காங்கிரசு மட்டுமன்று, காங்கிரசை விட பாஜக இன்னும் கூடுதலாகத் தேசிய இன அடையாளங்களையும் உரிமைகளையும் அழிக்கிற வெறித்தனம் கொண்ட நடைமுறையுடையது என்பதை இந்தியாவில் இருக்கிற தேசிய இன மக்கள் அடைந்து வரும் கொடுமைகளிலிருந்து உணரலாம்..

இந்நிலையில் இந்தியாவில் உள்ள மொழித் தேச மக்களை மட்டுமல்லாது ஈழத் தமிழர்களையும் ஏமாற்றுவதற்காகவும் ஈர்ப்பதற்காகவும் அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்காகவும் சில சலுகைகளைப் பாஜக அரசு செய்வது போல் காட்டிப் பசப்பிவருவதை உண்மை எனக் கருதித்தான் இன்றைக்கு ஈழத் தமிழர்கள் பலர் பாஜகவை நம்புகின்றனர்.. அண்ணாமலைக்குச் செங்கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.. அது எவ்வளவு பெரிய ஏமாளித்தனம் என்றும் தமிழீழத்தை மட்டுமல்லாது தமிழ்நாட்டையும் பாழடிக்கிற செயல் என்பதையும் அவர்கள் உணர வேண்டும்..

முதலில் தமிழீழத் தமிழர்களின் மீதான அடக்குமுறைகள்.. தமிழீழ விடுதலை அரசியல்.., தமிழீழத் தேசம் என்பதற்கும்.. தமிழ்நாட்டுத் தமிழர்களின் மீதான அடக்குமுறைகள்.. தமிழ்நாட்டு விடுதலை அரசியல்.. தமிழ்(நாட்டு)த் தேசம் என்பதற்கும்.. பெருத்த இடைவெளி உண்டு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்..

இரண்டு தேசிய மக்களுக்கும் தமிழ் மொழி தாய்மொழியாக இருக்கலாம்.. தங்களின் இனம் தமிழ் இனம் என்றுகூடச் சொல்லிக் கொள்ளலாம்.. ஆனால் இரண்டுக்குமான அரசியல், பொருளியல், வரலாற்றியல் நிலைகள் வெவ்வேறானவை..

இரண்டு தேசங்களும் அடிமைப்பட்டிருக்கும் சூழலில் இரண்டுமே விடுதலைக்கான போராட்டக் களத்தில் இருக்கின்றன.. இரண்டு தேசங்களின் அரசாட்சியினரும் நட்பு பாராட்டிக் கொள்ளும் அதிகாரத் தன்மையுடையவர்கள்.. அதேபோல் இரண்டு தேசிய இன மக்களும் உறவு பேணிக் கொள்ளும் அடிமைத் தன்மைக்குரியவர்கள்..

இரண்டு தேசிய இனத்தினரும் தங்களின் மற்ற தேசிய இனத்திற்கு ஆதரவளிக்க முடியும்.. முழுமையாகத் துணை நிற்க முடியும்.. ஆனால் இரண்டின் விடுதலைக்காகவும் இரண்டு தேசிய மக்களுமே இணைந்து போராட முடியாது..

ஒரு தேசிய இனம் முதலில் விடுதலை பெறட்டும். மற்றது அடுத்து விடுதலை பெறலாம் என்கிற வகையில் இரண்டும் ஒன்றுக்காக இன்னொன்று காத்திருக்கவும்.. நிறுத்தி வைக்கப்படவும் இயலாது...

ஒன்றின் அரசியலில் மற்றதன் அரசியலுக்குச் சில வகையில் தொடர்பு இருக்கலாமே ஒழிய.. இரண்டும் ஒரே அரசியல் நிலைப்பாடு கொண்டிருக்க இயலாது.. ஆனால் இரண்டு அதிகார வகுப்புகளுமே இரண்டு தேசிய இனங்களுக்கும் எதிர்மைக்குரியதாகவே இருக்க முடியும்..

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்திற்கு அல்லது உரிமைகளுக்கு எப்படி தமிழ்நாட்டு மக்கள் சிங்கள அரசின் ஆதரவையோ நட்பையோ பெற இயலாதோ.. அதேபோல் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அல்லது உரிமைகளுக்குத் தமிழ் ஈழ மக்கள் அல்லது இயக்கங்கள் இந்திய அரசின் ஆதரவையோ நட்பையோ பெற இயலாது.. கூடாது..

தமிழ் ஈழ அரசியலில்.. கடந்த காலங்களில்.. நடந்துவிட்ட பல்வேறு தவறுகளில்.. இதையும் ஒன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்..

தமிழ்ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் பல தமிழ்நாட்டு மக்களை நேசித்ததைவிட இந்திய அதிகார வகுப்பை, இந்திய ஆட்சியர்களை நம்பவும் நேசிக்கவும் செய்தனர்.. அதனால் ஏற்பட்ட எண்ணற்ற இழப்புகளை இன்னமும் அவர்கள் சரிவர விளங்கிக் கொள்ளவில்லை.. அந்த நிலையிலான கருத்துகளே இப்போதும் அவர்களுள் பலருள் தொடர்வதுதான் பெரிய அவலத்திற்குரியது..

தமிழ் ஈழ மக்கள் அல்லது இயக்கக் கருத்துடையவர்கள் பலர் தங்களின் நிலைப்பாடுகளில் இந்திய பாஜக அரசு தங்களுக்குச் சார்பாக இருப்பதாகக் கருதிக் கொண்டு தமிழ்நாட்டு அரசியலைத் தங்களுக்காக வளைத்து மாற்றுவதுடன் காங்கிரசு எதிர்ப்பு நிலையை மட்டுமே பேசுவதும் பாஜக வை நேரடியாகவோ திரைமறைவிலோ ஆதரிப்பதாகவுமே செயல்படுகின்றனர்..

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் இருந்த பல்வேறு தேர்தல் கட்சிகள்.. அவற்றுக்கு இடைப்பட்ட முரண்பாடுகள்.. அவை இந்திய ஆட்சியதிகாரத்துடன் போட்டிப் போட்டுக் கொண்டு அடிமைப்பட்டிருந்த நிலையில்.. ஈழத்தமிழர் போராட்ட இயக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அரசியல் கட்சியோடு சேர்ந்து கொண்டு இங்கிருந்த முரண்பாடுகள் போலவே தங்களுக்குள் முரண்களை ஏற்படுத்திக் கொண்டதும், அந்த முரண்களை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்குள் இந்திய அரசு ஊடுருவி இயக்கங்களை மோத விட்டு அழித்ததும் மிகப்பெரும் படிப்பினையாக இருக்க வேண்டும். அதே நடைமுறையையே இன்னும் கூடுதலாகத் தமிழீழத் தமிழர்களிடையேயும் தமிழ்நாட்டுத் தமிழர்களிடையேயும் பாஜக அரசு இப்போது செய்து வருவதை அவர்கள் மட்டுமன்றித் தமிழ்நாட்டுத் தமிழர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

- பொழிலன்

Pin It