2023 "நீட்" தேர்வு முடிவுகளின்படி முதல் முயற்சியிலேயே மொத்த மதிப்பெண்களான 720க்கு 720 எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள மேல்ஓலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர். அவருக்கு நம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

முதலிடம் பிடித்த மாணவர் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்புவரை படித்துள்ளார்.

சென்னை முகப்பேரில் உள்ள மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 படித்துள்ளார். சென்னை முகப்பேரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் நீட் பயிற்சியும் பெற்றுள்ளார் என்று நாளிதழ்களின் செய்திகள் தெரிவிக்கின்றன.

கிராமப் பகுதியில் வாழும் குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், இந்த மாணவருக்கு நவீன வசதிகளுடன், அனைத்து ஏற்பாடுகளும் செய்து தந்து, பாடப்புத்தகங்களில் மட்டுமே அவர் கவனம் செலுத்தும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை, தான் பயிற்சி மேற்கொண்டதாக மாணவர் தெரிவிக்கின்றார். அத்தகைய கடுமையான பயிற்சி மேற்கொள்வதற்கு ஏற்ற சூழலை (support system) ஏற்படுத்தித் தரும் அளவிற்கு அவரின் பெற்றோருக்கு வசதிகளும், வாய்ப்புகளும் அமைந்துள்ளன.

இதே போன்ற வாய்ப்புகள் அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கின்றனவா? என்ற கேள்வி நம்முன் எழுகிறது.

இவ்வாறு குழந்தைகளை மிகப் பெரும் பதற்றத்தில் இயங்க வைப்பது நியாயமா? குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உறுதிதரும் நமது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு இவை ஏற்புடையதா? நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

குழந்தைகளை குழந்தைகளாகப் பார்க்காமல் நுகர்வோராக, மதிப்பெண் பெறும் கருவிகளாகக் கருதுவது ஏற்புடையதா? இப்போது உழைத்தால் பின்னால் புகழோடும், பொருளோடும் வாழலாம் என்ற வெறியை ஊட்டி வளர்ப்பது சமூக மேம்பாட்டிற்கு உதவுமா? இத்தகைய கேள்விகளை இன்று நாம் எழுப்ப வேண்டும்.

குடும்பத்தின் சேமிப்பை முழுக்கச் செலவு செய்து, மாணவர்களை இயந்திரங்களைப் போல் காலை முதல் இரவு வரை இயங்க வைத்துத் தேர்வை எதிர்கொள்ளச் செய்வது எந்த வகையில் மனிதத்தன்மை கொண்ட செயலாகக் கருத இயலும்? இது குழந்தைகளின் மீது நடத்தப்படும் வன்முறை இல்லையா?

தமிழ்நாடு மாநிலத்தில் சற்று ஏறக்குறைய 6000 அரசுக் கல்லூரி இடங்கள் மற்றும் 6000 தனியார் கல்லூரி இடங்கள் என சுமார் 12,000 மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பிற்கான இடங்கள் உள்ளன.

தமிழ்நாடு மாநிலத்திலிருந்து 2023ல் நீட் எழுதிய 1, 44, 516 பேரில் "நீட்" மூலம் மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பிற்குச் சேர தகுதி பெற்றவர்கள் 78, 693. பயிற்சிக்காகப் பல ஆயிரம் செலவு செய்தும் தகுதி பெறாமல் போன 65, 883 பேரின் நிலை என்ன? தகுதி பெற்றவர்களில் 12,000 பேர் கல்லூரிகளில் சேர்ந்த பிறகு, தகுதி பெற்றும் சேர முடியாமல் நிற்கும் சுமார் 60, 000 பேரின் நிலை என்ன? அவர்கள் உழைப்பு, அவர்கள் பயிற்சிக் கூடங்களுக்குச் செலுத்திய தொகை இவற்றுக்கு யார் பதில் சொல்வார்கள்?

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக விண்ணப்பம், கடந்த ஆண்டைவிட கூடுதலாகத் தகுதி பெற்றவர்கள் எண்ணிக்கை. அதற்குக் காரணம் என்ன?

2021 ஆம் ஆண்டு "நீட்" எழுதி மருத்துவக் கல்லூரியில் சேர முடியாதவர்கள், இரண்டாம் முறையாக 2022ல் "நீட்" எழுதி, கடந்த ஆண்டும் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாதவர்கள், மூன்றாவது முறையாக இந்த ஆண்டு, அதாவது 2023ல் "நீட்" எழுதி உள்ளனர்.

இரண்டு மாநிலங்களின் ஆளுநர்கள் "நீட்" வெற்றி பெற்றுள்ளதாகத் தங்களின் அறிக்கைகள் மூலம் கொண்டாடி உள்ளனர்.

" நீட்" எனும் வணிக நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளது. இன்றைய நாளிதழ்களில், காட்சி ஊடகங்களில் வெளிவந்துள்ள விளம்பரங்களே அதற்குச் சாட்சி.

கல்வியும், மருத்துவமும் வணிகச் சந்தையிடம் தோற்றுப்போய் உள்ளன. மாணவர் எதிர்காலம் பகடைக் காயாக வைக்கப்பட்டு, பெற்றோர் சேமிப்பு முதலீடாகச் செலுத்தப்பட்டதால் "நீட்" பயிற்சி வணிக நிறுவனங்கள் கொள்ளை இலாபம் ஈட்டி உள்ளன.

"நீட்" மூலம் தனியார் நிர்வாக ஒதுக்கீட்டிலும், தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்திலும் சேர்ந்த மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியிட முடியுமா?

"நீட்" நடைமுறையில் மொத்த மதிப்பெண் 720. பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மேல் இருந்து கீழாக, தரவரிசையில்தான் அனைத்துத் தனியார் நிர்வாக இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று நிரூபிக்க இயலுமா?

720க்கு 500 பெற்றவர் இருந்தால் அவருக்கும் கீழாக மதிப்பெண் பெற்றவர் எந்தத் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரியிலும் மற்றும் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்திலும் கடந்த ஆண்டுகளில் சேரவில்லை என்று ஆதாரத்துடன் நிரூபிக்க இயலுமா?

ஆளுநர்கள்தானே. அதிலும் ஒருவர் மருத்துவர், மற்றொருவர் இந்திய காவல் பணி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களால் இந்தத் தகவல் திரட்ட முடியாதா?

இந்த ஆண்டு 50ஆவது பர்சென்டெயில் (50th Percentile)ல் இடம்பெற்றவர்கள் யார் யார்?

"நீட்" மதிப்பெண்களில் 720 முதல் 137 வரை மதிப்பெண் பெற்ற பொதுப் பிரிவினர் 50ஆவது பர்சென்டெயில் இடம் பெற்றுள்ளனர். அதாவது, இந்த பர்சென்டெயிலில் இருப்பவர்கள் மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பில் சேரத் தகுதி பெற்றவர்கள்.

720க்கு 720 மதிப்பெண் பெற்றவரும், 720க்கு 137 மதிப்பெண் மட்டுமே பெற்றவரும் ஒரே தரவரிசையில் அதாவது 50ஆவது பர்சென்டெயில் இடம் பெற்றுள்ளனர்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் 720 மதிப்பெண் தொடங்கி மேலிருந்து கீழாக முறைப்படி கல்லூரிகள் ஒதுக்கப்படும். அரசுக் கல்லூரிகளில் சேர்க்கை முடியும் வரை இதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

அரசுக் கல்லூரிகளில் இடங்கள் நிரப்பப்பட்டு, தனியார் கல்லூரிகளுக்கான அரசு இடங்கள் நிரப்பப்படும். இந்த இடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படும்.

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் 13,000/-ஐந்தாண்டு படிப்பை முடிக்க அதிகபட்சமாக சுமார் 65,000/-மட்டுமே.

தனியார் நிர்வாக இடங்கள் மற்றும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக் கட்டணம் சுமார் 15,00,000/-முதல் 25,00,000/-வரை. அதாவது ஐந்தாண்டு படிப்பை முடிக்க சுமார் எழுபத்தைந்து இலட்சம் முதல் ஒன்றேகால் கோடி ரூபாய் வரை தேவைப்படும்.

தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 தனியார் இடங்களில் 50% இடங்களுக்குக் கட்டணத்தைத் தனியார் நிர்வாகங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். கட்டணம் விதிப்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. தனியாருக்குத் தேவையான அளவு, அவர்கள் விருப்பப்படி கட்டணம் தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை ஒன்றிய அரசு இயற்றிய சட்டம் தந்துள்ளது.

தமிழ்நாடு மாநிலத்தில் 65% இடங்கள் அரசு இடங்கள் என்று தனியார் நிர்வாகத்திடம் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

50% இடங்களுக்கு நிர்வாகமே கட்டணம் தீர்மானிக்கும் உரிமையை ஒன்றிய அரசின் சட்டம் இந்த நிர்வாகங்களுக்கு வழங்கி உள்ளதால், தமிழ்நாடு அரசு இடங்களில் இந்தக் கல்லூரிகளில் சேரும் சுமார் 15% மாணவர்களும் நிர்வாகம் கோரும் பணத்தைச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தத் தவறினால் அவர்களின் இடம் காலி இடமாக நிர்வாகம் அறிவிக்கும்.

சுயநிதி தனியார் கல்லூரி நிர்வாக இட ஒதுக்கீடு மற்றும் சுயநிதி நிகர் நிலைப் பல்கலைக்கழக இட ஒதுக்கீடு ஆகியவற்றில் "நீட்" தகுதி அடிப்படையில் இடம் கிடைத்து, அந்தந்த நிறுவனங்களில் சேருவதற்குச் செல்லும் மாணவர்கள் நிறுவனங்கள் கோரும் "சட்டப்படியான", அதாவது அவர்கள் விருப்பப்படி கேட்கும் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அவ்வாறு மாணவர்களால் செலுத்த இயலவில்லை என்றால் அந்த இடம் காலி இடமாக அறிவிக்கப்படும்.

ஐந்தாண்டிற்கு சுமார் ஒரு கோடி ரூபாய் கட்டணமாகச் செலுத்தும் அளவிற்கு எத்தனை பெற்றோர்கள் தயாராக இருக்கின்றனர்?

பெற்றோர் சேமிப்பை வைத்து, மாணவர்கள் எதிர்காலம் பகடைக்காயாக வைக்கப்பட்டு நடத்தப்படும் இந்த "நீட்" நடைமுறையை வணிகச் சூதாட்டம் என்று சொல்லாமல் வேறு எந்தப் பெயர் கொண்டு அழைப்பது?

மருத்துவ மாணவர் சேர்க்கையில் தனியார் கல்லூரிகளில் / தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் முறைகேடு நடக்கிறது, மிக அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது அதைக் கட்டுப்படுத்துங்கள் என்று வல்லுநர் குழு, நாடாளுமன்ற நிலைக்குழு மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை ஒன்றிய அரசிற்கு பரிந்துரைத்தது.

அதற்கு நேரெதிராக, " நீட்"டை மாநில அரசுக் கல்லூரிகள் மீது திணித்து, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 இயற்றி மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவத்தை மொத்தமாகத் தனியார் கட்டுப்பாட்டில் செல்ல ஒன்றிய அரசு வழி வகுத்துள்ளது.

எதிர்காலத்தில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் சிறப்புப் பட்டப்படிப்புகளுக்குப் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் அரசுக் கல்லூரிகளில் உயர் சிறப்பு பட்டப்படிப்புகளின் (Super Speciality Courses) இடங்களை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்குப் போதிய மருத்துவர்கள் கிடைக்காமல் போகும் பேராபத்து உள்ளது.

எனவே, "தமிழ்நாடு மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர்கள் சேர்க்கை சட்டம் 2021" குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற தமிழ்நாடு ஓரணியில் திரள வேண்டும்.

அது ஒன்றே மருத்துவக் கல்வியையும், மருத்துவ சேவையும் முற்றிலும் தனியாரிடம் செல்வதைத் தடுக்கும்.

+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை என்ற நடைமுறை மட்டுமே மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் பள்ளிப் படிப்பை முடிக்க உதவும்.

கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட உரிமைகளைக் காக்கவும், நமது ஜனநாயகம், சுதந்திரம் காக்கப்படவும் விழித்தெழுவோம்.

- பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

Pin It