'சரஸ்வதியின் சபதம்' என்று ஒரு திரைப்படம், சிவாஜி கணேசன் நடித்தது. எது சிறந்தது - கல்வியா? செல்வமா? வீரமா? என்ற கேள்வியை நடுவாக வைத்து அந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இன்று என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டால், நான் சிறந்தது அதிகாரம் என்றுதான் சொல்வேன். ஏனென்றால், அதிகாரம் என்னிடம் இருந்தால் கல்வி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை நான் தீர்மானிக்க முடியும்; யாரிடம் பணம் சேர வேண்டும் என்பதையும், எது வீரம் என்பதையும் நான் முடிவு செய்ய முடியும்.

bharatiya bhasha samitiஅதனால் நான் அதிகாரம்தான் சிறந்தது என்று சொல்வேன். அண்மையில் 'பாரதிய பாஷா சமிதி' என்ற அமைப்பைப் பற்றியும் அதன் வெளியீடுகள் பற்றியும் கேள்விப்பட்டபோது மேலே கூறிய சிந்தனைதான் எனக்கு வந்தது. அந்தச் சிந்தனையின் சிறு விளைவுதான் இந்தக் கட்டுரை.

பாரதிய பாஷா சமிதி அமைப்பு 2021-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்கான உயர் அதிகாரம் கொண்ட குழு ஆகும். இது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. இது தேசியக் கல்விக் கொள்கை 2020-இல் திட்டமிடப்பட்டுள்ளபடி, இந்திய மொழிகளின் முழுமையான மற்றும் பல்துறை வளர்ச்சியின் பாதைகளை ஆராய்ந்து பரிந்துரைக்கும் குழு ஆகும். தற்போதுள்ள மொழி கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்குப் புத்துயிர்ப்பு அளிப்பது மற்றும் நாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் அதன் விரிவாக்கம் தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளிலும் அமைச்சகத்திற்கு ஆலோசனைகளை வழங்கும் குழு ஆகும்.

தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்ய, பாரதிய பாஷா சமிதி உயர் அதிகாரக் குழு, துணைக் குழுக்கள் / ஆய்வுக் குழுக்களை அமைத்துக் கொள்ளலாம். இந்திய மொழிகளின் மேம்பாட்டின் தேவையை எடுத்துரைக்கக் குழு கருத்தரங்குகள், பயிலரங்குகள், மாநாடுகள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யலாம். மொழிகளின் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் / மேம்படுத்துதல் ஆகியவற்றைக் கையாளும் நடுவண் மற்றும் மாநில அரசின் எந்தவொரு நிறுவனத்துடனும் இது தொடர்பு கொள்ளலாம் மற்றும் ஒருங்கிணைக்கலாம்.

இந்த அமைப்பு 2025-ஆம் ஆண்டில் இரு முதன்மையான நூல்களை வெளியிட்டுள்ளது. அவை:

  1. பாரதிய பாஷா பரிவார்: மொழியியலில் ஒரு புதிய கட்டமைப்பு
  2. பாரதிய பாஷா பரிவார்: தொகுக்கப்பட்ட ஆய்வுகள்: எல்லைகளும் முன்னோக்குகளும்

இந்நூல்களில், இந்திய மொழிகள் குறித்த மேற்கத்திய வகைப்பாட்டை மறுஆய்வு செய்து, 'பாரதிய பாஷா பரிவார்' என்ற புதிய கட்டமைப்பை முன்வைப்பதாக அறிவித்துள்ளன.

2. நூல்களின் உள்ளடக்கம் - மேலோட்டம்

2.1 பாரதிய பாஷா பரிவார்: மொழியியலில் ஒரு புதிய கட்டமைப்பு

இந்நூல், 18 - 19 ஆம் நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்ட மொழி வகைப்பாடுகளை (இந்தோ-ஐரோப்பியன், திராவிடம் எனப் பிரித்ததை) எதிர்க்கிறது. காலனித்துவ மொழியியலாளர்களான வில்லியம் ஜோன்ஸ், ராபர்ட் கால்டுவெல் போன்றோரின் பிரிவினைவாதக் கட்டமைப்புகளுக்கு மாற்றாக, அனைத்து இந்திய மொழிகளும் ஒன்றோடொன்று இணைந்த ஒரு பெரும் குடும்பம் எனும் பார்வையை முன்வைக்கிறது.

2.2 பாரதிய பாஷா பரிவார்: தொகுக்கப்பட்ட ஆய்வுகள்: எல்லைகளும் முன்னோக்குகளும்

590 பக்கங்கள் கொண்ட இத்தொகுப்பில், இந்தியா முழுவதும் உள்ள மொழியியல் அறிஞர்கள், ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பெயர்ச்சொற்கள், இலக்கணக் கட்டமைப்புகள், ஒலியியல் ஒற்றுமைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்திய மொழிகளின் ஒருங்கிணைவை நிறுவ முயல்கிறது.

3. நூல்களின் பின்னணியில் உள்ள மூன்று அரசியல் குறிக்கோள்கள்

பாரதிய பாஷா சமிதியும் அதன் நூல்களும், மொழியியல் ஆய்வு என்ற போர்வையில், மூன்று அரசியல்-கல்வி நோக்கங்களை முன்நிறுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

1. சமஸ்கிருதம் அனைத்து இந்திய மொழிகளுக்கும் தாய் என நிறுவுதல்: "அனைத்து இந்திய மொழிகளும் ஒரே குடும்பம்" என்று கூறும்போது, அந்தக் குடும்பத்தின் மூத்த உறுப்பினராகச் சமஸ்கிருதத்தை முன்வைக்கும் முயற்சி இதில் உள்ளது. திராவிட மொழிகள், முண்டா மொழிகள் போன்றுள்ளவற்றிற்கும் சமஸ்கிருதமே மூலம் என்ற கருத்து மறைமுகமாக முன்நிறுத்தப்படுகிறது.

2. ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் அல்லர்; இந்தியப் பழங்குடியினர் என நிறுவுதல்: Out of India Theory (OIT) என்று அழைக்கப்படும் இக்கோட்பாடு, ஆரியர்கள் இந்தியாவிலேயே தோன்றி வளர்ந்தவர்கள் என்றும், இங்கிருந்தே ஐரோப்பாவிற்குப் பரவியிருக்க வேண்டும் என்றும் வாதிடுகிறது. இது Aryan Invasion Theory (ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டிற்கு) மாற்றாக முன்வைக்கப்படும் தேசியவாதக் கருத்தாக்கமாகும். இந்த நூல்கள் இக்கோட்பாட்டை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

3. சமஸ்கிருதமே ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் தாய் என நிறுவுதல்: 18-ஆம் நூற்றாண்டில் வில்லியம் ஜோன்ஸ் கண்டுபிடித்தது, சமஸ்கிருதமும் கிரேக்கமும் இலத்தீனும் ஒரே மூலத்திலிருந்து (Proto-Indo-European) வந்தவையே என்பதாகும். ஆனால் இந்த நூல்கள், அந்த ஒரே மூலமே சமஸ்கிருதம்தான் என்ற நிலைக்கு மேலும் நகர முயல்கின்றன. இது உலக மொழியியல் அறிஞர்களால் நீண்ட காலமாக மறுக்கப்பட்ட ஒரு கருத்தாகும்.

4. மொழியியலாளர்கள், அறிஞர்களின் பார்வைகள்

4.1 அறிவியல் முறைமை மீறல்கள்:

  • துறை சார்ந்த அறிஞர்களின் மதிப்பீடு (Peer review) இல்லை: கல்வி ஆய்வுக்கு அடிப்படையாகத் தேவையான மதிப்பீட்டுச் செயல்முறை இந்த நூல்களில் பின்பற்றப்படவில்லை. ஒரு பங்களிப்பாளர் குறிப்பிட்டிருப்பதுபோல், "இதனை ஓர் ஆய்வு எனச் சொல்ல முடியாது; இது ஓர் அறிக்கை (report) என்று மட்டுமே சொல்ல முடியும்".
  • ஆசிரியர் உரிமை மீறல்: முதல் நூலில், ஐந்து பகுதிகளில் எந்தவொரு பகுதியிலும் அதை எழுதிய ஆசிரியரின் பெயர் இடம்பெறவில்லை. பங்களிப்பாளர்களின் பெயர்கள் பொதுப் பட்டியலில் மட்டுமே தரப்பட்டுள்ளன. இது கல்வி நெறிமுறைகளுக்கு எதிரானதாக அறிஞர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

4.2 'குடும்பம்' என்ற கருத்தாக்கமே காலாவதியான மறுப்புதான்: மொழியியலாளர் சமீர் கர்மாக்கர் (ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்) கூறுவதுபோல், 'குடும்பம்' (family) என்ற உருவகம் 18 - 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய மொழியியலில் உருவானது. இந்திய மரபில் இல்லாத இந்தக் கருவியையே மீண்டும் பயன்படுத்துவதும், அதேசமயத்தில் 'காலனித்துவ மொழியியலை மறுப்பதாகக்' கூறிக்கொள்வதும் முரண்பாடாக உள்ளது.

4.3 'மரம்' மாதிரியிலிருந்து விடுபடவில்லை: பேராசிரியர் பி. ஸ்ரீகுமார் (கேரள மத்தியப் பல்கலைக்கழகம்) இந்த நூல்களைத் திறனாய்வு செய்யும் வகையில் 'பாரதிய பாஷா வன்' (Indian Language Forest) என்ற மாற்றுக் கருத்தை முன்வைக்கிறார். ஒரு காட்டில் பல்வேறு மரங்களும், கொடிகளும் பின்னிப் பிணைந்து வளர்வது போலத்தான் இந்திய மொழிகள். அவற்றை ஒற்றைக் கருவில் இருந்து வந்தவையாகக் கட்டாயப்படுத்தாமல், 'தொடர்பு' (contact) மற்றும் 'ஒருங்கிணைவை' (convergence) மையப்படுத்துவதே சரியான அணுகுமுறை என அவர் குறிப்பிடுகிறார்.

4.4 புறக்கணிக்கப்பட்ட மொழிக் குடும்பங்கள்: இந்தியாவில் இந்தோ-ஆரியம், திராவிடம் மட்டுமன்றி ஆஸ்ட்ரோ-ஆசியாடிக் (முண்டா) மற்றும் திபெத்திய-பர்மியம் போன்ற மொழிக் குடும்பங்களும் உள்ளன. 'ஒரே குடும்பம்' என்ற கட்டமைப்பு, இவற்றை எங்கு வைக்கிறது என்பதில் தெளிவில்லை. இவை பெரும்பாலும் குறிப்பிடப்படாமல் அல்லது விளிம்பில் வைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

5. இம்மூன்று குறிக்கோள்களின் அறிவியல் நிலை

  • கூற்று 1: 'சமஸ்கிருதம் = அனைத்து இந்திய மொழிகளின் தாய்' என்ற கூற்று முழுக்க மறுக்கப்பட்டது. திராவிட மொழிகள் தனி மூலத்தைக் கொண்டவை; முண்டா, திபெத்திய-பர்மிய மொழிகள் முற்றிலும் மாறுபட்ட குடும்பங்களைச் சேர்ந்தவை.
  • கூற்று 2: ஆரியர்கள் இந்தியப் பழங்குடியினர் என்பது பெரும்பாலான அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மொழியியல், தொல்பொருள், மரபியல் கூறுகள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தாயகம் பொன்டிக்-காஸ்பியன் புல்வெளி (தற்கால உக்ரைன், ரஷ்ய பகுதி) என்பதையே சுட்டுகின்றன.
  • கூற்று 3: சமஸ்கிருதமே ஐரோப்பிய மொழிகளின் தாய் என்ற கூற்று முற்றாக மறுக்கப்பட்டது. சமஸ்கிருதமும், கிரேக்கமும், இலத்தீனும் ஒரே மூலத்தின் (PIE) வெவ்வேறான கிளைகள். எந்தவொரு மொழியும் மற்றொன்றிற்குத் தாய் அல்ல.

6. 'இந்திய மொழிப் பகுதி' ஒரு மாற்று அணுகுமுறை

1956-ஆம் ஆண்டில் அமெரிக்க மொழியியலாளர் முர்ரே எமெனோ (Murray Emeneau) "India as a Linguistic Area" என்ற கருத்தை முன்வைத்தார். வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மொழிகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்பால் ஒரே மாதிரியான இலக்கணக் கட்டமைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்பது இதன் சாரம்.

'ஒரே குடும்பம்' (same family) என்பதற்கும், 'ஒரே மொழிப் பகுதியாகச் செயல்படுகின்றன' (function as a single linguistic area) என்பதற்கும் பெரும் வேறுபாடு உண்டு. பாரதிய பாஷா சமிதியின் நூல்கள் முந்தையதை நிறுவ முயல்கின்றன; ஆனால் பெரும்பாலான மொழியியலாளர்கள் பிந்தையதையே ஏற்றுக் கொள்கின்றனர்.

7. கல்வி நெறிமுறைகளும் முரண்பாடுகளும்

இந்த நூல்கள் வெளிவந்த வகையே கல்வி வட்டாரங்களில் கடுமையான குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளது. Out of India Theory-யை முன்வைத்து முன்னர் வெளியான நிக்கோலஸ் கசானாஸின் ஆய்வில், அதன் பதிப்பாளர் ஜே.பி. மல்லோரி, வழக்கமான Peer review செயல்முறையை வேண்டுமென்றே தவிர்த்ததாக ஒப்புக் கொண்டிருந்தார். பாரதிய பாஷா சமிதியின் இந்நூல்களும் இதே பாதையில், கல்வி நெறிமுறைகளைப் புறந்தள்ளி, கொள்கை அளவிலான நோக்கங்களை முன்னிறுத்துவதாக அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

8. முடிவு: அறிவியலா, அரசியலா?

பாரதிய பாஷா சமிதியும் அதன் இரு நூல்களும், மொழியியல் துறையில் 'புதிய கட்டமைப்பு' ஒன்றை அறிமுகப்படுத்துவதாக முன்வந்துள்ளன. ஆனால் அறிவியல் முறைமை (துறைசார் மதிப்பீடு, ஆசிரியர் உரிமை, தரவுகளின் வெளிப்படைத்தன்மை) போதுமான அளவு பின்பற்றப்படவில்லை.

முன்வைக்கப்படும் 'பாரதிய பாஷா பரிவார்' கருத்து, மொழியியல் வகைப்பாட்டின் சிக்கல்களைச் சுட்டிக்காட்டினாலும், அதை 'குடும்பம், மரம்' என்ற உருவகங்களையே மீண்டும் பயன்படுத்துகிறது. இதன் பின்னணியில் மூன்று அரசியல் நோக்கங்கள் இயங்குவதை ஆய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன:

  • சமஸ்கிருதத்தை அனைத்து இந்திய மொழிகளுக்கும் தாயாக நிறுவுதல்
  • ஆரியர்களை இந்தியப் பழங்குடியினர் என நிறுவுதல்
  • சமஸ்கிருதத்தை உலகின் தாய்மொழியாக உயர்த்துதல்

இந்த மூன்றும் Out of India Theory என்ற ஒருங்கிணைந்த கருத்தாக்கத்தின் பகுதியாகும். உலக அளவிலான மொழியியல், தொல்பொருள், மரபியல் ஆய்வுகளின் பெரும்பான்மைக் கருத்தால் இவை புறக்கணிக்கப்பட்டவை.

இந்நூல்கள் அறிவியல் முடிவுகளை விட, ஒரு குறிப்பிட்ட தேசியவாதக் கருத்தியலின் கல்வி மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே கருதப்பட வேண்டும்.

இந்திய மொழிகளின் ஒருங்கிணைவு, அவற்றிடையேயான தொடர்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பரிமாறும் முறை ஆகியவை அனைத்தும் ஆய்வுக்கு உரிய முக்கியமான புலமாகும். ஆனால், அத்தகைய ஆய்வு அறிவியல் நெறிமுறைகளுக்கு உட்பட்டும், அனைத்து மொழிக் குடும்பங்களையும் சமமாக உள்ளடக்கியும் அமைய வேண்டும்.

ஆனால், அவை அனைத்தும் அதிகாரம் இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால் எதை வேண்டுமானாலும் நிறுவலாம்; நாம் நினைப்பதுதான் வரலாறு, நாம் நினைப்பதுதான் அறிவியல் என்ற நோக்கத்தைத்தான் இந்தப் பாரதிய பாஷா சமிதி என்ற அமைப்பின் நோக்கமும் அதன் நூல்களும் தெளிவுபடுத்துகின்றன. இத்தகைய முயற்சிகளை இப்படியே நீடிக்க விட்டால் தமிழ் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளும், ஆனால் தமிழர்கள்தான் தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள்! ஏனென்றால், அவர்கள் ஆரிய பிராமணியக் கருத்தியல் நோயாளிகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

- பழ.நெடுமாறன்

(கடந்த மார்ச்சு 21 -ன்று சென்னையில் நடைபெற்று சமசுகிருதத்திற்குத் தமிழின் கொடை – இரண்டாம் ஆய்வரங்கில் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் ஆற்றிய உரையின் கருத்துகளைப் பெயர்த்து முகவுரையுடன் எழுதியது – இளஎயினன்)

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.