கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

nedumaran and tha pandian

8-10-2016 அன்று மாலை சென்னை உமாபதி அரங்கில் தா.பாண்டியன் அவர்கள் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பித்த ‘மேடைப்பேச்சு’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தலைமை வகித்தார். விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சண்முகம் சரவணன் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.

வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் அவர்கள் நூலை வெளியிட உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் நூலைப் பெற்றுக்கொண்டார். சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் உலகநாயகி பழனி அவர்கள் நூல் திறனாய்வு உரை நிகழ்த்தினார். நிறைவாக நூலாசிரியர் தா.பாண்டியன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் பொது மேலாளர் தி.ரத்தினசபாபதி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். இந் நிகழ்ச்சியை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மேலாளர் பாஸ்கர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

த.ஸ்டாலின் குணசேகரன் தலைமை உரை

இந்நிகழ்வு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு நிகழ்வு. என்சிபிஎச் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தை வாசிப்பவர்கள் நிச்சயமாக தமிழ்நாட்டு அரசியலை முழுமையாக அறிந்துகொள்ளமுடியும். தமிழ்நாட்டு மேடைகளில் மட்டுமல்ல, இந்தியாவிலும் உலக நாடு களிலெல்லாம் பேசி அவர் பெற்ற அனுபவங்களுடன் சேர்ந்து ஏராளமான பல நுட்பமான அம்சங்களையும் இந்நூலில் தா.பாண்டியன் அவர்கள் பதிவு செய்துள்ளார். இந்நூலைப் படிப்பவர்கள் தா.பா அவர்கள் மேடைப் பேச்சில் ஒரு சகாப்தம் என்பதை உணர்வார்கள். அரை நூற்றாண்டுக்கும் மேல் சுழன்று சுழன்று தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்று பேசியதோடு உலகநாடுகளில் பல இடங்களுக்கும் சென்று ஏராளமான உரைகளை நிகழ்த்தி ஆக்கமும் ஊக்கமும் அளித்திருக் கிறார் தா.பா அவர்கள்.

இத்தகுப் பெருமைமிகு நிகழ்வுக்கு வருகை தந்து எதிரில் அமர்ந்திருப்பவர்களைப் பார்க்கிறேன். இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் வந்திருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அவர்கள் வந்திருக்கிறார். பழம்பெரும் பாடலாசிரியர் முத்துலிங்கம் அவர்கள் வந்திருக்கிறார். பல்வேறு துறை அறிஞர்கள் பேராசிரியப் பெருந்தகைகள் எனப் பலரையும் பார்க்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கிய அணியைச் சேர்ந்த தஞ்சை கூத்தரசன் அவர்கள் வந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் அவர்கள் வந்திருக்கிறார். சிங்காரவேலர் என்ற ஞானப் பெட்டகத்தை உலகுக்குக் கொண்டுசேர்க்கும் பணியைச் செய்துகொண்டிருக்கும் தோழர் பா.வீரமணி அவர்கள் வந்திருக்கிறார். இன்னும் முக்கியமான பலரையும் பார்க்கிறேன். ஏராளமான பதிப்பாளர்கள் வந்திருக் கிறார்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த பெருமக்கள் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருப்பதிலிருந்தே இந்நிகழ்வு தா.பா அவர்களின் பெருமையை உணர்த்தும் படியாக அமைந்துள்ளது.

நான் தா.பா அவர்களின் உரையைக் கேட்கத் தொடங்கி 44 ஆண்டுகள் ஆகின்றன. நாற்பதாண்டு களுக்கு மேலாக நான் கேட்ட சொற்பொழிவுகளிலேயே மிக அதிகமாகக் கேட்டது தா.பா அவர்களின் சொற்பொழிவுதான்.

நான் கேட்ட அவரின் முதல் சொற்பொழிவு எனக்கு நினைவிருக்கிறது. 1974ல் சென்னையில் நடைபெற்ற சர்வதேச மாணவர் இளைஞர் மாநாட்டில் ஈரோட்டுப் பிரதிநிதியாக நான் கலந்துகொண்டேன். அம்மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் தா.பா அவர்கள். அப்போது அவர் பேண்ட் அணிந்திருந்தார். பேண்ட் போட்ட தா.பாவை யாரும் பார்த்திருக்க முடியாது. சாக்லேட் பிரவுண் கலர் பேண்ட் அணிந்து ஒல்லியான உருவத்தில் கையில் ஒரு பையுடன் இங்கும் அங்கும் ஓடியாடி களப்பணி ஆற்றிக்கொண்டிருந்தார். அந்த நான்கு நாள் மாநாட்டில் உலகம் பூராவிலிருந்தும் அறிஞர்கள், போராளிகள், அறிவாளிகள் என ஏராள மானோர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தாலும் எனக்கு தா.பா அவர்களின் உரைதான் பசு மரத்தாணி போல நினைவிலுள்ளது.

நான் பியூசி படித்துக்கொண்டிருந்தபோது ஈரோடு சிங்கை கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் வாயிலாக தா.பா அவர்களை கல்லூரியில் எப்படியாவது பேசவைத்துவிடவேண்டும் என்று முயற்சி செய்தோம். முதல்வர் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. இது என்ன அரசியல் மேடையா என்று கேட்டதோடு தலைமை தாங்கவும் சம்மதிக்கவில்லை. பிறகு ஒருவழியாக சம்மதம் பெற்று நடத்தினோம். அந்த விழாவில் தா.பா அவர்கள் இரண்டுமணி நேரத்திற்கும் மேலாகப் பேசினார். அதற்கு, அடுத்தடுத்த ஆண்டுகளில் முதல்வரே தலைமை

தாங்கி 10 ஆண்டுகள் தொடர்ந்து கல்லுரியில் தா.பா அவர்கள் பேசினார். கல்லூரி முதல்வர் பணி ஓய்வு பெற்றபோது ‘நான் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டாலும் தா.பா அவர்கள் இந்த கல்லூரியின் நிரந்தர விருந்தினராக இருக்கவேண்டும். அவர் கலந்துகொண்டு பேசும் நிகழ்ச்சிகளில் நானும் உங்களோடு ஒருவனாக அமர்ந்து கேட்பேன். தா.பா அவர்கள் வருவது ஓயக்கூடாது‘ என்று நெகிழ்ந்து கூறினார்.

1974ல் பெரியார் நூற்றாண்டு விழாவைத் திராவிடர் கழகம் நடத்தியது. அதில் கலந்துகொள்வதாக தா.பா அவர்கள் இசைவு கொடுத்திருந்தார்கள். அன்று வேறொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு உணவருந்தக்கூட நேரமில்லாமல் பெரியார் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு அவசரஅவசரமாக ஒரு ஆட்டோவில் சென்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு அற்புதமான உரையை நிகழ்த்தினார். பெரியாரைப் பற்றிய வித்தியாசமான பார்வையில் அமைந்த அந்த உரையை சுயமரியாதைப் பிரசுரத்தின் சார்பாக நூலாக வெளியிடவுள்ளதாக மேடையிலேயே கி.வீரமணி அவர்கள் அறிவித்தார். ‘சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியார்‘ என்ற பெயரிலான அப்புத்தகம் பல பதிப்புகள் கண்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனையாகின. இப்போதும் அந்தப் புத்தகம் விற்பனையில் இருக்கிறது.

அதைப்போலவே ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் புத்தகக் கண்காட்சியில் ‘கல்லும் கதை சொல்லும்‘ என்ற தலைப்பில் அவரை உரையாற்றக் கேட்டிருந்தோம். எந்த சின்னக் குறிப்புகளும் இல்லாமல் அன்றைக்கு அவர் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க உரை ‘கல்லும் கதை சொல்லும்‘ என்ற தலைப்பில் பின்னாளில் என்சிபிஎச் வெளியீடாக புத்தகமாகி ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனையாகின.

தமிழ்நாட்டு அரசியலை, அரசியல் வரலாற்றை தன் அனுபவங்களிலிருந்து தா.பா அவர்கள் தொகுத்து எழுதியிருக்கும் இந்நூல் அனைவரும் படித்துப் பயன்பெறவேண்டிய பெட்டகமாகும். சிறப்பாக இந்த நூலை வெளியிட்டிருக்கும் என்சிபிஎச் பதிப்பகத்திற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பழ.நெடுமாறன் உரை

தா.பாண்டியன் எழுதியுள்ள மேடைப்பேச்சு எனும் இந்தநூல் அரைநூற்றாண்டு கால அரசியல் வரலாற்றின் சுருக்கம். அவர் மூலமாக சிறுவனாக அவர் இருந்த

போது உசிலம்பட்டியில் அவர் முதல்முதலில் முத்து ராமலிங்கத் தேவரின் உரையைக் கேட்டதிலிருந்து இந்தியா முழுவதிலுமிருந்த மிகப்பெரிய தலைவர்களைப் பற்றியெல்லாம் இதில் எடுத்துரைத்துள்ளார். ஒரு வகையில் பார்த்தால் இந்நூலை அவரது சுயசரிதையின் ஒரு பகுதி என்று கூறலாம். தோழர் தா.பா அவர்கள் மிகவும் பின்தங்கிய சமூகத்தில் தோன்றி இன்றைக்கு தமிழகம் கண்ட முக்கியமான தலைவர்களில் ஒருவராகத் திகழ்கிறார். நாடாளுமன்றத்தில் அங்கம் பெறுவது என்பது வேறு. ஆனால் ஸ்டாலின் சொன்னதுபோல அவரது உரைவீச்சு எந்த சூழ்நிலையில் கேட்டாலும் சிறப்பானதாக அமைவது அவரது உரைவீச்சு. எனக்கு ஒருவகையில் அவர் மூத்தவர். நான் 1935 அவர் 1933. இலக்கியச்செல்வருக்கும் எனக்கும் ஒரு வயசுதான். 1983ம் ஆண்டு என்று நினைக்கிறேன். திமுக அதிமுகவுக்கு மாற்றாக ஜனநாயகப் பாதுகாப்பு என்ற ஓர் அமைப்புக்காக இலக்கியச் செல்வரின் கட்சி இன்னும் ஜனதா கட்சி எல்லாம் அதில் இருந்தன. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்து நான், இலக்கியச் செல்வர், தோழர் தா.பா மூவரும் ஒரே காரில் பயணம் செய்து திருப்பத்தூரில் சுற்றிச்சுற்றிப் பிரச்சாரம் செய்தோம். அதற்குப்பிறகு 33 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் மூன்றுபேரும் ஒன்றாகச் சந்தித்துக் கொண்டுள்ளோம்.

தா.பா.வின் இந்த நூலில் ஆதங்கம் வெளிப் படுகிறது. எப்படி இருந்த தமிழகம் இப்படி ஆகி விட்டதே என்ற ஆதங்கம். எப்பேர்ப்பட்ட தலைவர்கள் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். அவர்களெல்லாம் தமிழகத்திற்கு மதிப்பு சேர்த்தார்கள். கருத்து மாறுபாடுகள் கொள்கை வேறுபாடுகள் எல்லாம் இருந்தன. ஆனால் தலைவர்கள் ஒருவரை ஒருவர் மதித்து நடந்தார்கள். பொதுவான பிரச்சினைகள் வரும்போது கட்சி மாறுபாடின்றி கைகோத்து நின்றார்கள் என்ற ஆதங்கம்.

முத்துராமலிங்கத் தேவர், ராஜாஜி, பெரியார், அண்ணா, காமராஜர், ஜீவா போன்ற தமிழகத்தின் முக்கிய தலைவர்களின் உரைகளைக் கேட்டிருக்கிறார். அவர்களில் பலருடன் மேடையில் பேசியுமிருக்கிறார். அவற்றையெல்லாம் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.

காந்தி ‘சத்தியசோதனை’ எழுதியபோது எல்லா வற்றையும் மறைக்காமல் எழுதினார். கஸ்தூரிபா காந்திக்கு ஆங்கிலம் தெரியாது. காந்தி ஒரு தாழ்த்தப் பட்டவருக்கு உணவு பரிமாறுமாறு கஸ்தூரிபாவிடம் சொல்கிறார். அவர் முடியாது என்று சொல்லிவிடுகிறார். காந்தியே உணவு பரிமாறுகிறார். பிறகு அந்தப் பாத்திரங்களை கழுவச்சொன்னபோது அவற்றைக் கழுவமுடியாது என்று கஸ்தூரிபா மறுத்துவிடுகிறார். அப்போது அவரை கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளிக் கதவைச் சாத்திவிடுகிறார் காந்தி. ஆங்கிலம் தெரியாத அவரை ஒருமணிநேரத்திற்கும் மேலாக வெளியிலேயே நிற்கவைத்தபின் கதவைத் திறந்துவிடுகிறார். காந்தி எந்த சம்பவத்தையும் மறைக்காமல் எழுதியிருக்கிறார். அதேபோல தா.பா அவர்களும் பல நிகழ்ச்சிகளையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

அண்ணாவுடன் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியை இதில் குறிப்பிட்டுள்ளார். அப்போது இவர் இளைஞர். அதற்கான முறுக்கு. மறைமுகமாகத் திராவிட இயக்கத்தைச் சாடிப் பேசுகிறார். பேசிக்கொண்டிருக்கும்போது அண்ணா வந்துவிடுகிறார். கூட்டமே எழுந்து அண்ணாவை வரவேற்கிறது. இவர் கால் மேல் கால் போட்டுக் கொண்டு எழுந்திருக்காமல் உட்கார்ந்திருக்கிறார். அப்போது அண்ணா அவர்கள் இவரருகில் வந்து உங்கள் பேச்சைக் கேட்டேன் என்று சொல்லிப் பாராட்டுகிறபோது அது அவரை சங்கடப்படுத்துகிறது. இப்படிப் பல சம்பவங்கள். 1950லிருந்து 2015 வரையிலான அரசியல் வரலாற்றை எழுதியுள்ளார். இன்னொருவகையில் அவரது சுயசரிதையின் ஒரு பகுதி என்பதாக பல தகவல்களை இதில் பதிவு செய்துள்ளார்.

சத்தியமூர்த்தி, சிவா, ம.பொ.சி, ராஜாஜி, அண்ணா, கலைஞர் எனப் பலரது உரைகளைப் பற்றியெல்லாம் இதில் குறிப்பிட்டுள்ளார். இவர்களை எல்லாம் அவர் பதிவு செய்திருந்தாலும் மிக அதிகமாக இவரை ஈர்த்தது ஜீவாதான். மற்றவர்களும் சிறப்பாகப் பேசியவர்கள் என்பது வேறு. இதயத்தின் நாடி நரம்பை மீட்டிய பேச்சு ஜீவாவுடையது என்று பதிவு செய்கிறார். தோழர் தா.பா அவர்கள் வழியில் ஜீவாவைக் காண்கிறேன். இவரது உரையைக் கேட்கிறபோது ஜீவாவின் நினைவு வரும். ஜீவா உரையை நான் பலமுறைக் கேட்டிருக்கிறேன். இவருக்கும் அவருக்கும் உடல் வேறுபாடுதான். ஜீவா உடல் வலிமை வாய்ந்தவர். பயில்வான் போலிருப்பார். மேடையில் சிலம்பம் ஆடுவார். அவரது பேச்சென்பது சிம்ம கர்ஜனை. இலக்கியம், அரசியல், கம்பன், பாரதி பற்றிப் பேசும் போது ஆயிரக்கணக்கானோரையும் ஈர்க்கக்கூடிய பேச்சு. நான் அதே வடிவில்தான் தோழர் தா.பா அவர்களைக் காண்கிறேன். அவர் ஜீவாவின் வழித்தோன்றலாக விளங்குவது நமக்கெல்லாம் பெருமை.

இந்நூலில் குன்றக்குடி அடிகளாரைப் பற்றி ஒரு தகவல் வருகிறது. அவர் துறவியாகத் தொடங்கிய காலத்தில் காதில் தங்க வளையம், கழுத்தில் தங்கம் பதித்த ருத்ராட்சம் எல்லாம் அணிந்திருப்பதைப் பார்த்து தா.பா அவர்கள் ‘துறவிகளுக்கு மண்ணாசை பெண்ணாசை எல்லாம் போனாலும் பொன்னாசை போவதில்லையோ’ என்று அவரிடமே நேரிடையாகவே கேட்டுவிடுகிறார். மறுமுறை இவர் அடிகளாரைப் பார்க்கும்போது அவர் தங்கநகை எதுவுமில்லாமல் எளிமையாக இருந்தார் என்பதைப் பதிவு செய்துள்ளார்.

அவர் சொல்லவேண்டிய கருத்தை யாராக இருந்தாலும் சொல்வதற்கு அஞ்சியதில்லை. பின்வாங்குவதில்லை.

அந்தக் காலத்தில் பேராசிரியர் சீனிவாச சாஸ்திரி. அவரை ‘சில்வர் டங்’ சீனிவாச சாஸ்திரி என்று சொல்வார்கள். அவ்வளவு அருமையாக ஆங்கிலம் பேசுவார். அவரிடம் பயின்ற போது தோழர் பாலதண்டாயுதம் போராட்டம், மேடைப்பேச்சு என இருந்தபோது ஒரு சந்தர்ப்பத்தில் அவரைக் கல்லூரியிலிருந்து வெளியேற்றிவிடுகிறார். பொது வாழ்வுப் போராட்டங்களால் அவர் கல்வியைத் தியாகம் செய்யவேண்டியதாயிற்று. அதற்குப்பிறகு அவர் வெளியில் வந்து படித்து அறிஞராகிறார். நான், வீரமணி, குமரிஅனந்தன் எல்லாம் படிக்கிறபோது போராடிய காலத்தில் சீனிவாச சாஸ்திரி போன்றவர்கள் ஆசிரியராக இருந்திருந்தால் எங்களுக்கும் அந்த நிலைமைதான் வந்திருக்கும்.

பல சொற்பொழிவாளர்களைப் பற்றிய வரலாற்றை இந்நூலில் காணமுடிகிறது. கண்ணதாசன், ஜெய காந்தன், ராஜாஜி, ஈ.வெ.கி.சம்பத், எஸ்.ராமகிருஷ்ணன், டாங்கே, பூபேஷ் குப்தா, நேரு போன்ற தலைவர்களைப் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் ஒருவரின் உரையைக் கேட்டு அது சிறப்பாக இருந்தால் அவரைத் தன்னுடன் காலை உணவருந்த நேரு தன் வீட்டுக்கு அழைப்பார். அப்போது அந்த உரையைப் பற்றி விவாதிப்பதோடு பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பது குறித்தும் கலந்துரையாடுவார். நேரு உண்மையான ஜனநாயக வாதியாகவே திகழ்ந்தார். இந்தோனேஷிய அதிபர் சுகர்னோ அரசில் நிரந்தரமான அதிபராகத் தன்னை அறிவித்துக்கொண்டார். ஆனால் நேரு அப்படிச் செய்ய வில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற்றே பிரதமரானார். ஜனநாயகம் இந்த நாட்டில் வேரூன்றவேண்டும் என்பதற்காக நேரு படாத பாடுபட்டார். கட்சிக்கு உள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுத்தார். இன்று என்ன நடக்கிறது? வாரிசு அரசியல். அதில் எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல. இடதுசாரிகளைத் தவிர மற்ற எல்லாக் கட்சியிலும் வாரிசு அரசியல் இருக்கிறது. சர்வாதிகாரம் தலைதூக்கி யிருக்கிறது. அரசியலில் ஜனநாயகம் இல்லையென்றால் நாட்டிலும் ஜனநாயகம் இருக்காது. படிப்படியாக சர்வாதிகாரத்தை நோக்கித்தான் நாடு சென்றுகொண் டிருக்கிறது என்ற ஆதங்கம் தா.பாவின் இந்த நூலில் வெளிப்பட்டு உள்ளது.

கருத்து மாறுபாட்டுக்கு மதிப்பே இல்லை. மாற்றுக் கட்சியினரை ஒரு எதிரியைப்போல பார்க்கிற நிலை இருக்கிறது. இங்கே பலராமன், இலக்கியச்செல்வர் இவர்களெல்லாம் பண்பாட்டின் எச்சங்கள். ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அன்பு, நட்பு இவையெல்லாம் எப்படி இருந்தது. பெரியாரும் ராஜாஜியும் வைத்திருந்த நட்பு எப்பேர்ப்பட்ட நட்பு. ஒரு பொதுக்கருத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்று பெரியாரிடம் கேட்டால் ‘ராஜாஜி என்ன முடிவு எடுத்திருக்கிறாரோ அதற்கு நேர் எதிரான முடிவை எடுங்கள்’ என்று சொல்வார் பெரியார். ஏனென்றால் ராஜாஜி எடுக்கிற முடிவு பிராமண சமுதாயத்துக்கானதாகவே இருக்கும். அதனால் அதற்கு எதிரான முடிவை எடுக்கச் சொல்லு வார். அப்படி, கொள்கைகளில் மாறுபாடு கொண்டிருந்த இருவரது நட்பைப் பார்க்கவேண்டும். ராஜாஜி இறந்து விட்டார். பெரியாரை சக்கர நாற்காலியில் வைத்து அழைத்துக்கொண்டு வருகிறார்கள். நாங்கள் அங்கே நின்று பார்த்தோம். “போய்விட்டாயா...” போய் விட்டாயா...” என்று கதறி அழுதுகொண்டே பெரியார் அங்கு வந்தார். அவர்களுக்குள் இருந்த நட்புறவு, அது வரலாறு.

ராஜாஜி காமராஜர் இரண்டு குழுக்களாக இருந்தார்கள் என்பது தெரியும். ராஜாஜியைப் பற்றி குறை கூறிப்பேசினால் ‘உனக்கென்ன தெரியும் அவரைப் பற்றி’ என்று சொல்லி காமராஜர் பேசவே அனுமதிக்க மாட்டார். நானே ஒருமுறை கேட்டேன். 1960ல் காங்கிரசை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் சுதந்திரா கட்சியைத் தொடங்கினார் ராஜாஜி. அப்போது ராஜாஜியின் மகன் சி.ஆர்.நரசிம்மனுக்கு காங்கிரஸ் கட்சியில் சீட் கொடுத்து காமராஜர் வெற்றிபெறச் செய்தார். அப்போது ‘நான் ஏன் அவருக்கு சீட் கொடுத்தீர்கள்’ என்று கேட்டபோது “சி.ஆர்.நரசிம்மன் வழக்கறிஞர். அவருக்கு வருமானம் கிடையாது. ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்ததிலிருந்து கிடைக்கும் தொகைதான் அவர் குடும்பத்துக்கு வருமானம். அவர் யாரிடமும் உதவிகளைப் பெறமாட்டார். கல்கி சதாசிவம் கொடுத்தால்கூட ‘வெளியே போ’ என்று சொல்லி விடுவார். அதனால்தான் நரசிம்மனை நாடாளுமன்ற உறுப்பினராக்கினேன்” என்று காமராஜர் சொன்னார்.

அந்தக்காலத் தலைவர்களைப் பற்றி நிறைய பதிவுகள். நாட்டுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு ஒரு பிரச்சினை என்று வந்தால் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்பது மறைந்துபோய் முல்லைப் பெரியாறு, காவிரி, ஈழத்தமிழர் பிரச்சினை என்று எதிலும் ஒன்றுபடமுடிய வில்லை.

தோழர் தா.பா அவர்கள் ராஜீவ் காந்தியின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்த்தவர். தேர்தல் கூட்டத்திலே குண்டு வெடித்து அவர் உடல் சிதறியது. தா.பா அவர்கள் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம். ஆனால் அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் ஈழத் தமிழர் பிரச்சினையில் உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார். தன்னைப்பற்றி எண்ணிக்கொள்ளாமல் லட்சக்கணக்கானத் தமிழர்கள் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டதை நினைத்துப் பார்த்தார். ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியாவில், தமிழகத்தில் ஒரு அகில இந்திய கட்சி தீர்மானம் நிறைவேற்றியதென்றால் அதை அவர்தான் செய்தார். நான் ஜெர்மனிக்கு சென்றிருந்த போது அங்கு கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த தீர்மானத்தைப் பற்றிச் சொன்னேன். அதன் நகல் இருக்கிறதா என்று கேட்டார். உடனடியாக தா.பா அவர்களைத் தொடர்புகொண்டு அந்த நகலைப் பெற்று அவரிடம் கொடுத்தேன். அதற்குப் பிறகு ஈழப் பிரச்சினையில் உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்ட்டுகள் ஒருங்கிணைப்புக்கு ஒரு வழிமுறை காணப்பட்டது.

ஒருசமயம் ஈழப்பிரச்சினையைப் பற்றி பிரதமரைச் சந்திக்க தமிழகத்திலிருந்து ஒரு குழு புறப்பட்டுப் போனதை மாஸ்கோவில் இருந்த நிலையில் அவர் கேள்விப்பட்டு உடனடியாக டில்லிக்கு விரைந்து அந்தக்குழுவினருடன் அழையா விருந்தாளியாக தோழர் தா.பா சேர்ந்துகொண்டார். அன்றைக்கு ஈழத்தமிழருக்காக பிரதமரிடம் முழுமையான விவரங்களை எடுத்துச் சொன்னவர் தோழர் தா.பா அவர்கள்தான். இப்படி எதில் ஈடுபட்டாலும் அவர் தன்னை முழுமையாக பங்களிப்பார்.

ஜீவா எப்படிப் பேசுவார் என்றால் ‘வாண்டை யாருக்கும் மூப்பனாருக்கும் கூட்டாளி காமராஜ்’ என்றுதான் தொடங்குவார். ஆனால் அவர் எப்படி நட்பில், பண்பாட்டின் சிகரமாகத் திகழ்ந்தாரோ அதைப்போலவே தா.பாவும் விளங்குகிறார்.

அவரவருக்குப் பிடித்த கட்சி கொள்கைகளைப் பின்பற்றுவதில் தவறு கிடையாது. மனித மாண்பு என்பதே இல்லை என்று ஆகிவிட்ட இக்காலத்தில் அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நூலாக இந்நூல் விளங்குகிறது. இதில் ஒருபகுதி அவரது சுயசரிதையாகவே உள்ளது. அதைப்போலவே அவரது முழு வரலாற்றையும் அவர் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உலகநாயகி பழனி உரை

மிகப் பெருமையான இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. பெண்ணின் ஆளுமையை வாழ்க்கைத் துணைக்குப் பெருமை சேர்த்த தா.பாவின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள தோழர் தா.பா அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்தார். சில நூல்களைச் சுவைக்கவேண்டும். சில நூல்களை அசை போடவேண்டும். சில நூல்களை விழுங்கவேண்டும். சில நூல்களைச் செறிக்கவேண்டும். தா.பா அவர்களின் நூல் எப்படிப்பட்டதென்றால் அதனைச் செறிக்கவேண்டும். இந்தப் புத்தகத்தைப் படித்தால் நாமெல்லாம் இறைவன் அளித்த காலத்தை வீணாக்கிவிட்டோமோ என்ற எண்ணம் மனத்தில் தோன்றும். சிந்தனையின் சிகரமாகத் திகழ்கிறது இந்நூல். இவரது சிந்தனைவயப்பட்ட வாழ்வில் மனைவிக்குக் கண்ணீரும் துன்பமும்

தந்ததைப் பற்றி உருக்கமாக எழுதியிருக்கிறார். அவரது மனைவியைப் பிரிந்தபோது அந்தக் கண்ணீரையும் தனிமையையும் உணர்ந்ததாக எழுதியுள்ளார். வாழ்க்கைச் சரித்திரத்தை தா.பா அவர்கள் எழுதியதைப் படித்த போது அப்படியே நெகிழ்ந்துபோனேன். அரசியல் வாதிகளின் வாழ்க்கை பொதுநலத்தில் ஈடுபடுகிறபோது ஏற்படுகிற இன்னல்களை இந்நூலில் உணரமுடிகிறது. இதில் ஒரு பகுதி தேவர், ஒரு பகுதி ஜீவா, ஒரு பகுதி பெரியார், ஒரு பகுதி பாரதியார் என நால்வரின் கலவைதான் தா.பா அவர்கள். இந்நூல் சமூகவியல் சிந்தனையாளரின் திறனாய்வு போலவும் அமைந்துள்ளது.

அவரது பேச்சை உண்மை, பொதுநல விருப்பம், வரலாறு என்று முன்று பிரிவாக வகுத்துக்கொள்ளலாம்.

இந்நூலில் மேடைப்பேச்சு என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளவற்றில் பேசுவதைப் பற்றிய முப்பத்தைந்து உத்திகள் கூறப்பட்டுள்ளன. காசுக்குப் பேசும் பேச்சு, காசில்லாமல் பேசும் பேச்சு, நினைவோடு பேசும் பேச்சு, நினைவில்லாமல் பேசும் பேச்சு, குற்றால அருவியைப் போன்ற பேச்சு, காட்டாற்று வெள்ளம் போன்ற பேச்சு என்று பல வகைகள் இதில் இடம் பெற்றுள்ளது.

எங்கள் கல்லூரியில் தமிழ்த்துறையில் நான்காம் பருவத்தில் மேடைக்கலையைப் பற்றிய ஒரு பகுதி பாடமாக இடம் பெறுவ்து வழக்கம். சிறப்பான வரலாற்றுப் பின்புலத்தோடு அமைந்துள்ள இந்த அத்தியாயத்தைப் படித்துவிட்டு 48 மணி நேரத்திற்குள் கல்லூரி முதல்வர் மற்றும் பாடத்திட்ட தேர்வுக் குழுவினரின் அனுமதி பெற்று இந்த அத்தியாயத்தை கல்லூரிப் பாடத்திட்டத்தில் சேர்க்க ஒப்புதலும் பெற்று விட்டேன் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலைப் பதிப்பித்தமைக்காக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாண்மை இயக்குனர் சண்முகம் சரவணன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தா.பா அவர்கள் இந்நூலை பாடப்புத்தகமாக நினைத்து எழுதவில்லை. அவர் அனுபவித்த பாடங் களைப் பதிவு செய்தார். அது அவருக்கே தெரியாமல் பாடப்புத்தகமாகிவிட்டது.

இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் மிகச்சிறந்த சிந்தனையாளராக, மதநல்லிணக்க விரும்பியாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையை வெளிப்படுத்தும் அரிய நூல் இந்நூல்.

ஜி.விசுவநாதன் உரை

பல ஆண்டுகளுக்கு முன்னால் சட்டக்கல்லூரி மாணவராக அவரை முதலில் சந்தித்தேன். காலையி லிருந்து மாலை வரை நான் கல்லூரியில் அமர்ந் திருப்பேன். அவர் அட்டென்டன்ஸ் போட்டுவிட்டு வெளியே சென்றுவிடுவார். இந்நூலின் ஒருபகுதிதான் மேடைப்பேச்சு. நிறைய தகவல்கள். மேடைப் பேச்சாளர்களாக இருப்பவர்கள், பொதுவுடைமைத் தோழர்கள், அரசியல் நாகரிகத்தைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் எல்லாம் இந்நூலைப் படிக்கவேண்டும். அகில இந்திய கட்சியினர் எப்படி இருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களும் இதைப் படிக்கவேண்டும். திராவிட இயக்கத்தைப் பற்றியும் எழுதியுள்ளதால் அவர்களும் இந்நூலைப் படிக்க வேண்டும். ஒட்டுமொத்தத் தமிழர்களும் படிக்க வேண்டும்.

தமிழ்நாட்டு அரசியலை எழுதியதோடு இந்திய மற்றும் உலக அரசியலைப் பற்றியும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அதற்கோர் குணமுண்டு என்றால் அது என்ன தனிக் குணம் என்றால் தனித்தனியாக இருப்பது. பொது வுடைமை இயக்கங்களும் ஒன்றாக இருக்கவேண்டும்.

இந்நூலில் தா.பா அவர்களின் வரலாறு ஒருபுறம், அரசியல் நாகரிக வரலாறு, பேச்சாளர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையெல்லாம் ஆழமாக விவரித்துள்ளார். ராஜாஜியைப் பற்றி நிறைய கருத்துகள் இடம் பெற்றுள்ளன. அவரது அண்ணன் செல்லப்பா, அவர்தான் பள்ளிக்கூடத்தில் இவரது முதல் மேடைப் பேச்சுக்கு எழுதிக்கொடுத்தவர். முதல் பேச்சு, அரசியல் வரலாறு, அந்த காலத்தில் மேடைப்பேச்சை எப்படிப் பயன்படுத்தி அரசியலை வளர்த்தெடுத்தார்கள் என்ற விவரங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மாபெரும் தலைவர்கள் பேச்சை, தமிழைக் கருவியாக ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள் என்பதையும் பதிவு செய்துள்ளார்.

பெரியார்போல யாராவது ஒருவர் வந்து இங்கே மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும். தா.பா அவர்கள் அந்த காரியத்தைச் செய்யவேண்டும். அவர் தைரியசாலி. இப்புத்தகத்தைப் படிக்கையில் இடதுசாரிகளால் மாற்றத்தைச் செய்யமுடியும் என்பதை உணரலாம்.

மேடைப்பேச்சு மட்டுமல்ல பல விஷயங்கள் இதிலுள்ளன. வரலாறு, சமூக அக்கறை இவற்றை யெல்லாம் வாழ்க்கை என்பது ஒருமுறை என்பதாலேயே பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

நாட்டுக்கு மாற்றம் வரவேண்டும், கட்சிகளிலும் மாற்றம் வேண்டும். இப்புத்தகத்தைப் படித்தால் எல்லாம் மாறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்படும்.

தா.பாண்டியன் ஏற்புரை

மேடையிலேயே சில குறிப்புகளை எடுத்துக்காட்டி எனக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் எனக்கான பொறுப்பை உணர்த்துகின்றன. இந்தப்புத்தகத்தை எழுதி முடித்த வுடன் எதையும் எழுதாமல் விடவில்லை என்று நினைத் திருந்தேன். எழுதாமல் விட்டது அதிகம் என்று இப்போது உணர்கிறேன். நானும் விஐடி வேந்தரும் சட்டக்கல்லூரியில் படிக்கும்போது அறைகளில் பக்கம் பக்கமாக இருந்தோம். அப்போது அறையில் கட்சி நண்பர்களுக்குள் கடுமையாக விவாதங்கள் நடக்கும். உலக அளவிலான அரசியல் விவாதங்கள். அப்போது, மூன்று நாட்களாக விவாதம் நடக்கிறது. எதற்கு இந்த சண்டை என்றே தெரியவில்லை. மற்றமற்ற கட்சிகளில் பொறுப்புக்கு பதவிக்கு சண்டை போட்டுக்கொள் வார்கள். ஒன்றுமேயில்லை. நடந்து முடிந்ததைப்பற்றிப் பேசுகிறீர்கள் என்று அவர் சொன்னார். இப்போது ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்’ என்று சொன்ன நீங்கள் எப்போது ஒன்றுசேரப் போகிறீர்கள் என்பதை நாசூக்காகச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

அவரது பல்கலைக்கழகத்திலே பட்ஜெட் குறித்த விவாத உரையை நடத்துவதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். எல்லாக்கட்சிகளையும் அழைத்து அவரவர் கருத்துகளை முன்வைக்கிற வாய்ப்பை உருவாக்கித் தருகிறார். அங்கு நான் பேசச் சென்றபோது அங்கு அமர்ந்திருந்தவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களைப் போலத் தெரியவில்லை. இந்திய மாணவர்களைப் போலவும் தெரியவில்லை. சாதாரணமாகச் சொன்னால் நம்பமுடியாது. ‘வையத் தலைமை கொள்’ என்றானே பாரதி. அந்த மாணவர்கள் ஜெர்மனியிலிருந்து இங்குப் படிக்க வந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குப் போய் படித்து வந்தார்கள். இப்போது ஜெர்மனி, சீனா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு வந்து படிக்கிறார்கள். அவர்கள் அறிவு நாடி வருகிறார்கள். இப்படி உலகநாடுகள் தமிழ்நாட்டை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். அதற்கு அவர் முயன்று கொண்டிருக்கிறார்.

இவர் நான்கு முதலமைச்சர்களுடன் பணியாற்றி யிருக்கிறார். சட்டமன்ற உறுப்பினராக. நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்திருக்கிறார். பின் அரசியலிலிருந்து வெளியேறி செம்மையான கல்வி யாளராகச் செயல்பட்டு வருகிறார். இவரது பல்கலைக் கழகத்தைச் சீனாவில் அமையுங்கள் என்று கேட்டிருக் கிறார்கள். இங்கே கல்வித்தரம் குறைந்து வருகிறது. இவரைப்போன்ற கல்வியாளர்களிடம் ஆலோசனை கேட்கலாம். உலகப் பல்கலை மனிதர்கள் என்ற நூலைப் படிக்கவேண்டும். அது நழுவிக்கொண்டே இருக்கும். துரத்தித் துரத்திப் படிக்கவேண்டும்.

பெண்கள் விடுதலை பெற்றால்தான் மண் விடுதலை பெறும் என்று சிங்காரவேலர் 50 ஆண்டு களுக்கு முன்பே கட்டுரை எழுதினார். இப்போது ஆட்சியில் பெண்கள் நிர்வாகம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

ஜீவா கலை இலக்கியப் பெருமன்றத்தில் பேசியதைக் கேட்டே குமரி அனந்தன் பேசினார். அவ்வாறே நடக்கவும் செய்கிறார். அவரை விடாமல் பேசச் சொன்னவர் எஸ்.ஆர்.கே. மதுரையில் ஒருநாள் கேள்விப்பட்டேன். குமரிஅனந்தனை காமராஜர் பிடித்துக் கொண்டுபோய் விட்டார் என்று. அவர் நாவிலே செந்தமிழ் நடன மாடும். இந்நிகழ்ச்சிக்கு அவருக்குத் தகவல்கூட நாங்கள் சொல்லவில்லை. கேள்விப்பட்டு அவர் வந்திருக்கிறார். அவசரகோலத்தில் நடத்தப்பட்ட விழாவுக்கு அவர் வந்து கலந்துகொண்டதற்கு நன்றி.

மதுரைக்கு அருகில் சிவகங்கை போகிற வழியில் அகழ்வாராய்ச்சி, 2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகநாடு களோடு தொடர்புகொண்டிருந்த வணிகமையம் செயல்பட்டிருக்கிறது. கட்டடக்கலை என்றால் ஒவ்வொரு கல்லும் ஒரு விந்தை. ஒரு கோயிலில் இடது புறம் நின்று பார்த்தால் சிவன்; வலதுபுறம் நின்று பார்த்தால் பார்வதி; நேரில் நின்று பார்த்தால் சிரித்த நிலையில் அழகிய சிற்பம். கல்லையும் பேச வைத்திருக் கிறான் தமிழன். கல்லிலிருந்தும் பேசியிருக்கிறான் தமிழன். அதுதான் கல்லும் கதை சொல்லும் என்பது.

ஓய்வு இருக்கும்போது இந்தப் புத்தகத்தையும் நீங்கள் படிக்கவேண்டும். நன்றி!

உரைகளின் எழுத்து வடிவம்: ஜி.சரவணன்