மோடியின் ஆட்சி நாட்டை மீண்டும் வேத காலத்துக்கு அழைத்துச்செல்ல உறுதி ஏற்றிருப்ப தாகவே தெரிகிறது. 14,135 பார்ப்பனர்கள் மட்டுமே தாய்மொழியாகப் ‘பதிவு செய்துள்ள’ (பேசுகிற அல்ல) சமஸ்கிருதத்தை இந்தியாவின் அனைத்து மாநில சி.பி.எஸ்.ஈ பள்ளிகளிலும் வார விழாக்களாகக் கொண்டாடி போட்டிகள் நடத்தி அனைத்து மொழிகளுக்குமே ‘சமஸ்கிருதமே தாய்’ என்பதை உறுதி செய்யவேண்டும் என்று மனிதவளத்துறை சுற்றறிக்கை அனுப்பியது. இதைத் தொடர்ந்து ஓம் பிரகாஷ் என்ற பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த சூன் 6, 2014 ல் நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

pranab irani‘சமஸ்கிருத மேம்பாட்டுச்சட்டம்’ என்று வெளியிடப்பட்டுள்ள அந்த மசோதா, மத்திய, மாநில அரசுப்பள்ளிகள் அனைத்திலும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்குவதோடு, செயல்படுத்தாத பள்ளிகளின் அங்கிகாரத்தை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோருகிறது. இதை நடைமுறைப் படுத்துவதற்கு நான்கு உறுப்பினர்களுக்கு மேல் இல்லாத ஒரு குழுவையும் அதற்குத் தலைவரையும் நியமித்து (அதாவது பார்ப்பனர்களைக் கொண்ட குழு) அவர்களுக்கான ஊதியத்தையும் வரையறை செய்து, முழு அதிகாரம் வழங்கி உடனடியாக அரசிதழில் அறிவிக்க வேண்டும் என்று மசோதா கூறுவதோடு மாநில அரசுகளை இதற்குத் தேவையான அளவு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்துகிறது.

பி.ஜே.பியின் மொழிக்கொள்கை என்னவென்றால், அது ஆர்.எஸ்.எஸ் இன் மொழிக் கொள்கைதான். ஆர்.எஸ்.எஸ் என்ற இந்த அமைப்புக்கு மற்றொரு நோக்கம் ‘இந்து அரசாங்கத்தினை அமைப்போம்’ என்ற முழக்கத்தின் மீது ஆரிய வர்ணாசிரம தர்மத்திற்குப் புது மெருகு கொடுத்து வலிவும், பொலிவும் கொள்ளச் செய்வது; அதற்காக சமஸ்கிருதத்தினையும் இந்தியையும் பரப்புவது என்பதாகும். தொடர்பு மொழியாக இந்தி தான் இருக்க வேண்டும் என்று 1957ல் குருஜி கோல்வால்கர் கூறியுள்ளார்.

“மேல் படிப்பு, ஆராய்ச்சி எல்லாவற்றிலும் பொருத்தமான ஒரு பொது மொழி உண்டு என்றால் அது சமஸ்கிருதமேயாகும்! அதன் புனிதத் தொடர்பும், சிறப்பான வளமும் அதுவே நமது தேசிய மொழி என்பதற்குத் தகுதியானதாகும். நாட்டின் ஒற்றுமைக்குச் சமஸ்கிருதம் என்பது ஒரு கட்டாயம் ஆகும்.” என்கிறார்.

மக்கள் பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருதம்

1921 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் சமஸ்கிருதம் பேசியோர் 356 பேர். அதில் 315பேர் தமிழ் நாட்டில் மட்டுமே இருந்தார்கள். தமிழ்நாடு பார்ப்பனர்களின் ஆதிக்கக் கோட்டையாக இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணம். 2001ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் பேசத் தெரிந்தவர் ஒருவர் கூட இல்லை. இது பெரியார் இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்கள், மத்திய பிரதேசத்திற்கு அப்பால் உள்ள கிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத் மாநிலங்களிலும் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சமஸ்கிருதம் பேசுவோர் ஒருவர் கூட இல்லை.

1981-ல் 6106 நபர்களாக இருந்தவர்கள் 1991-ல் 49,376 நபர்களாக அதிகரித்து, 2001-ல் 14,135 நபர்களாகக் குறைந்தனர். இதிலிருந்தே பதிவுகள் உண்மையானவை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இது கணக்கெடுப்பில் நிகழ்ந்த கோளாறுகள் அல்ல. அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு அவ்வப்போது தங்கள் ‘மொழி அடையாளத்தை’ மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையே காட்டுகிறது, என்கிறார் இந்திய மக்கள் மொழியியல் கணக்கெடுப்புத் துறைப் பேராசிரியர் கணேஷ்தேவி.

“சமஸ்கிருதம் இப்போது எவருக்கும் தாய்மொழியாக பயன்பாட்டில் இல்லை என்றாலும், அரசியல் சட்ட உரிமையையும் அந்த மொழியின் சமூக மேலாதிக்கம் கருதியும் அதைத் தாய்மொழியாகப் பதிவு செய்கிறார்கள்” என்கிறார், செம்மொழி மய்யத்தைச் சார்ந்த ஆய்வாளர் பி.மல்லிக்கார்ஜூன்.

“சமஸ்கிருத கிராமம் என்று அழைக்கப்படும் கர்நாடகத்திலுள்ள மாத்தூரிலேயே அந்த மொழி தெரிந்தவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உள்ளனர். பயன்பாடு இல்லாமலேயே சமஸ்கிருதம் தனது செல்வாக்கைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. நாட்டில் எங்கோ ஒரு மூலையில் சமஸ்கிருதம் பேசப்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது எங்குமே பேச்சு வழக்கில் இல்லை. அது ஒரு கருத்து என்ற அளவிலேயே நம்மிடம் இருக்கிறது” என்கிறார், இந்திய மொழியியல் கணக்கெடுப்புத் துறைப் பேராசிரியர் கணேஷ்தேவி.

சமஸ்கிருதமும் தமிழறிஞர்களும்

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக வேலை பார்த்த கா. நமச்சிவாயம் (முதலியார்) அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.81 ஆகவும், அதே நேரத்தில் அக்கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக வேலை பார்த்த குப்புசாமி சாஸ்த்திரிக்கு மாதச் சம்பளம் ரூ. 300 ஆகவும் இருந்த கொடுமையை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் தனது குடி அரசில் எழுத, அதன் அடிப்படையில் நீதிக்கட்சி ஆட்சியில் முதலமைச்சராக இருந்த பனகல் அரசர் அந்த வேறுபாட்டை நீக்கி உத்தரவு பிறப்பித்தார் என்பது கடந்த கால வரலாறு.

“இராமலிங்க அடிகள் வரலாறு” என்ற நூலை எழுதியவர் சன்மார்க்க தேசிகன் என்னும் ஊரன் அடிகளார் ஆவார். இந்த வாழ்க்கை வரலாற்றிலே சுவையான செய்தி ஒன்று சுட்டிக்காட்டப் படுகிறது.

“சென்னையில் சங்கராச்சாரிய சுவாமிகளுடன் அளவளாவ நேரிட்ட போது, சங்கராச்சாரிய சுவாமிகள் சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி எனக் கூறினாராம். அடிகளார் அஃதுண்மை அன்றென மறுத்து சம்ஸ்கிருதம் எல்லா மொழிகளுக்கும் தாய்மொழியாயின் தமிழ் தந்தை மொழி எனக்கூறி தமிழின் சிறப்பை விரிவாக விளக்கி, ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழறிவுறுத்துவான் வேண்டிக் கபிலர் ‘குறிஞ்சிப் பாட்’டினைப் பாடியதனை நிகர்ப்ப, ஆரியம் மட்டுமே நன்குணர்ந்த ஆச்சாரியராகிய சங்கராச்சாரியாருக்குத் தென்மொழிக் கடலும் வடமொழிக் கடலும் நிலைகண்டுணர்ந்த மொழிப்புலமையோடன்றித் திருவருட்புலமையால், உலகத்து மொழி அனைத்தும் முட்டற உணர்ந்த முற்றறிவினராகிய பெருமானார் தமிழ் என்னும் சொல்லுக்கு ஓர் உரையும் அப்போதே செய்து சங்கராச்சாரியாருக்குத் தமிழின் செவ்வியை செவியறிவுறுத்தியருளினார்” என்று இருக்கிறது.

எனவே சங்கராச்சாரியார் நினைத்தால் எது வேண்டுமானாலும் சொல்லுவார். சமஸ்கிருதம் அப்போது தாய்மொழி. இப்போது சமஸ்கிருதம் தந்தைமொழி என்கிறார். இதிலே கூட முரண்பாடற்ற சிந்தனை இல்லை. நேரத்திற்கும், காலத்திற்கும் தகுந்தாற்போல மாற்றிச் சொல்லுகின்றார்.

மேலும் சமஸ்கிருதத்தைப் பற்றி விளக்கம் சொல்லும் போது சமஸ்கிருதம் படித்தால் நரம்புக்கு மிகவும் நல்லது என்று சங்கராச்சாரியார் சொல்லுகிறார்.

சங்கராச்சாரியாருடைய சமஸ்கிருத அறிவைவிட, மறைமலை அடிகளாருடைய சமஸ்கிருத அறிவு குறைவானதல்ல. மறைமலை அடிகள் எழுதியிருக்கிற ‘அறிவுரைக்கொத்து’ என்ற நூலில் “உடல் நலம் கருதி யாரும் சமஸ்கிருதம் படிக்கக்கூடாது. அதிலும் குறிப்பாகப் பிள்ளைகளுக்கு அது இருக்கக்கூடாது. வயிற்று வலியைத்தான் அது உண்டாக்கும்” என்று எழுதினார்.

அதை 1967ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் ஆட்சியில் எஸ்.எஸ்.எல்.சி வகுப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டது. அதை எதிர்த்து ‘இந்து’ பத்திரிக்கை, ‘எக்ஸ்பிரஸ்’ பத்திரிக்கையெல்லாம் கூப்பாடு போட்டன. வேண்டுமென்றே சமஸ்கிருதத்தை இழிவுபடுத்துவதற்காகவே இது தி.மு.க ஆட்சியிலே பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல - உடனே அண்ணா அவர்கள் இதை ஆய்வு செய்ய டாக்டர்.மு.வ. அவர்கள் தலைமையில் ஒரு குழுவை நியமித்தார். “மறைமலை அடிகளாருடைய கருத்து மொழியியல்படி கூறப்பட்டிருக்கின்ற கருத்தாகும். இதிலே மறுப்பதற்கு ஒன்றும் இல்லை” என்று தெளிவாக அக்குழு சொல்லியது. அண்ணா அவர்கள் “இந்து”விற்கோ ”எக்ஸ்பிரஸி”ற்கோ பயந்து எடுக்க மாட்டேன் அது பாடமாக இருக்கும் என்று சொன்னார்.

“யான் இதுகாறும் எடுத்துக்காட்டியவற்றால் சமஸ்கிருதம் எந்த வகையிலும் தமிழ்மொழியோடு உறவுடைய மொழியல்ல என்பது தெளிவாகப் புரியும். தமிழுக்கும் தமிழனுக்கும் வேறுபட்டது சமஸ்கிருதம். ஆகவே அது தமிழனுடைய மொழி ஆகாது, தொன்று தொட்டுவரும் தமிழ் மொழியைவிட ஆரிய மொழியாகிய சமஸ்கிருதம் உயர்ந்த மொழியா? வடமொழி பேச்சிழந்து போனதற்குக் காரணம், செயற்கையான அதன் ஒலிப்பு முறையாகும் என்றும் மேலும், “நான் ஆயுள் முழுவதும் சமஸ்கிருத மொழியைப் பயின்று கொண்டிருக்கிறேன், எனினும் எனக்கே ஒவ்வொரு தடவையும் புதியதாகத் தோன்றுகிறதெனில், சாதாரான மக்களுக்கு அவற்றைப் பயில்வது எவ்வளவு சிரமாயிருக்கும். எனவே இவ்வெண்ணங்கள் பொதுமக்களுடைய சொந்த மொழியில் மொழிபெயர்க்கப் பட வேண்டும்.”

என்று ‘இந்திய பிரசங்கங்கள்’ என்ற நூலில் விவேகானந்தர் கூறியிருக்கிறார்.

சமஸ்கிருதம் பற்றி பெரியார்

“சமஸ்கிருதம் பரவினால்தான் பார்ப்பான் வாழமுடியும், சுரண்டமுடியும், நம்மைக் கீழ்சாதி மக்களாக ஆக்க முடியும். அவன் ‘பிராமணானாக’ இருக்க முடியும். சமஸ்கிருத்த்தின் நலிவு பார்ப்பன ஆதிக்கத்தின் நலிவு. அதை உணர்ந்துதான் ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வசாக்கிரதையாகக் காரியம் ஆற்றுகின்றார்.” –- விடுதலை 15.02.1960

“சமஸ்கிருதத்தினால் தமிழர்களும், தமிழ்நாடும் இன்று என்ன நிலைமைக்குத் தாழ்ந்து தொல்லையும், மடமையும், இழிவும் அனுபவிக்கிறோம் என்பதைச் சிந்திக்கவேண்டும்.” - விடுதலை 05.08.1963

“பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? பொதுப் பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொதுமக்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும். தமிழ் மக்கள் யாரும் இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.” - விடுதலை 28.06.1964

“வடமொழியை நமது படுக்கை வீட்டுக்குள் விட்டுக் கொண்டு மதம், கலாச்சாரம், கடவுள், ஆத்மார்த்தம், நாகரிகம், இலக்கியங்கள் பேச்சு வழக்கு முதலியவைகளில் தன்னிகரில்லா ஆதிக்கம் செலுத்த விட்டுக் கொண்டு இருப்பவர்கள் இந்தி வெறுப்பு, இந்தி எதிர்ப்புகள் நடத்துவது வெக்கக் கேடான காரியம் ஆகும்.” –- விடுதலை 17.07.1964

“இந்நாட்டில் வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் மொழிக்குக் (சமஸ்கிருதத்துக்கு) கடவுள் பேரால் பல மகத்துவங்களைக் கூறி நம்மக்களக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சமஸ்கிருதச் சொற்களை அதிகமாக உபயோகிக்கச் செய்து அதன் மூலமே தங்கள் கலை, ஆசார அனுஸ்டானங் களைப் புகுத்தி விட்டனர். அந்த வேற்று மொழிக்குச் தனிச் சிறப்பு எதுவுமில்லை. -விடுதலை 09.07.1965

ஆர்.எஸ்.எஸ் ஸின் மொழிக்கொள்கை

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டாக்டர் முகர்ஜி தலைமையில் நடந்த ஜனசங்க மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானமானது, ‘நாடு முழுவதும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். அதே நேரத்தில் சமஸ்கிருத எழுத்துக்களை பிரபலப்படுத்த வேண்டும்; எல்லா இந்திய மொழிகளுக்கும் சமஸ்கிருத எழுத்துக்களையே பொது எழுத்தாக அறிவிக்க வேண்டும். உபநிடதங்கள், பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம் ஆகியவைகளே இந்தியாவின் இலக்கியங்கள்’ என்று கூறுகிறது

ஆர்.எஸ்.எஸ் சட்டதிட்டங்களில் ‘விதிகளும் ஒழுங்குமுறைகளும்’ என்ற தலைப்பில் மூன்றாவது பிரிவு கீழ்கண்டவாறு கூறுகிறது

“இந்து சமாஜத்தில் பல்வேறு வகையில் பிரிந்து கிடக்கும் குழுக்களை ஒன்றுசேர்த்து அவர்களுக்கு எழுச்சி ஊட்டி இளமை இரத்தம் பாயச்செய்ய வேண்டும். இந்து தர்மம், மற்றும் சமஸ்கிருத அடிப்படையில் இது செய்யப்பட வேண்டும். இதன் மூலம் பாரதத்தின் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி பெற முடியும்” இது தான் இந்த அமைப்பின் நோக்கமும் கொள்கையும் ஆகும்.

மொழிப்பிரச்சனையில் குருஜி கோல்வால்க்கரின் பார்வை என்னவென்றால்,

“இணைப்பு மொழி என்கிற பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அந்த இடத்தைச் சமஸ்கிருதம் பெறுகிற வரை வசதி காரணமாக இந்திக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்தியானது இதர பாரதீய மொழிகளைப்போல சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற நவீன அறிவின் அனைத்து துறைகளிலும் எதிர்கால வளர்ச்சியை அது சமஸ்கிருதத்திலிருந்து பெறுகிறது என்கிறார்.

சைவ, வைணவ சமயஞ்சார்ந்த திருநாவுக்கரசர், நம்மாழ்வார் போன்றவர்கள் அகம் பற்றிய சங்க இலக்கிய மரபுகளைப் பின்பற்றி நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளனர். பரஞ்ஜோதி முனிவர் - சிவப்பிரகாசர் - சேக்கிழார் போன்றோர் வடமொழியைத் தமிழினின்றும் வேறுபடுத்திக் குறைத்து மதிப்பிட்டுள்ளனர். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று கூறப்படும் ஆங்கிலம் - ஆரியம் - தீந்தமிழ் மூன்றிலும் பெரும்புலமை பெற்றிருந்த மறைமலை அடிகளார், கா.சுப்பிரமணியம் (பிள்ளை), எம்.எஸ். பூரணலிங்கம்(பிள்ளை), பேராசிரியர் சுந்தரம்(பிள்ளை), பொறியாளர் பா.வே.மாணிக்க (நாயக்கர்), சூர்ய நாராயண (சாஸ்திரியார்), பண்டித நா.மு. வேங்கடசாமி (நாட்டார்), பண்டித கதிர்வேல்(பிள்ளை), மொழிஞாயிறு நா. தேவநேயப்பாவாணர் இன்னும் எண்ணற்ற தமிழர்கள் வடமொழியை வெறுத்து ஒதுக்கியே வந்துள்ளனர்.

- தொடரும்

Pin It