ஆதிக்க இந்து மதச் சக்தியான ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. ஆகியவை மக்களுக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களையோ, மக்களைக் காக்கும் வளமான திட்டங்களையோ தர என்றுமே விரும்பியதில்லை.

அவை அழிவுச் சக்திகள் என்பதற்கு, இப்பொழுது கையில் எடுத்திருக்கும் புதிய கல்விக் கொள்கை மற்றும் ஒரு சான்று.

கல்வியை பொதுப் பட்டியலில் வைத்துக்கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க அரசு, அதை ஓர் ஆயுதமாகக் கொண்டு இந்துத்துவத்தை நுழைப்பதில் வேகம் காட்டி வருகிறது.

தற்போது மத்திய அரசு எடுத்திருக்கும் புதிய கல்விக் கொள்கை இந்த ஆபத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.

மாணவர்களின் கல்வி, தேர்வின் அடைப்டையில் அவர்கள் எந்தப் பாடங்களில் பின்தங்கி இருக்கிறார்களோ, அந்த பாடங்களில் அவர்களைத் தகுதி பெறச் செய்ய முயல்வது கல்வித் தரத்தின் வளர்ச்சியைக் குறிக்கும்.

ஆனால் 12 வயது முதல் 15 வயது வரை படிக்கும் மாணவர்களின் படிப்பில் தொய்வு இருந்தால், அவர்களைக் குடும்பத் தொழில் செய்ய அனுப்பிவிடலாம் என்பது மத்திய அரசின் கல்விக் கொள்கையாம்.

கலைஞர் சொல்வதுபோல, இது குலக்கல்வியை மீண்டும் கொண்டுவரும் நயவஞ்சக முயற்சியாக இருக்கிறது. புதிய பெயர், பழைய நஞ்சு.

எந்த அடிப்படையில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது? யார் இதை நிர்ணயிக்கிறார்கள்?

1948ஆம் ஆண்டு தொடக்கம் 1993ஆம் ஆண்டு வரை கல்விக் கொள்கையை ஆய்வு செய்யப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டாக்டர் இராதாகிருஷ்ணன், லட்சுமணசாமி (முதலியார்), யஸ்பால், கோத்தாரி போன்ற கல்வியாளர்கள் தலைமையில் அமைந்த அக்குழுக்களில் கல்வியாளர்களே இருந்தார்கள். இப்பொழுது டி.ஆர்.சுப்பிரமணியம் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 5 பேர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழுவில் 4 பேர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். ஒருவர் மட்டுமே கல்வியாளர்.

கல்விக் கொள்கையைக் கல்வியாளர்கள்தான் வகுக்க வேண்டுமே ஒழிய, அரசு இயந்திரத்தை நடத்திச் செல்லும் அதிகாரிகள் வகுக்கக்கூடாது.

இங்கே அதிகாரிகளை வைத்துக்கொண்டு, ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. மத்திய அரசு தனது இந்துத்துவக் கொள்கையைக் கல்வியில் நுழைத்து, மீண்டும் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வர முயற்சி செய்வது வர்ணாசிரமத்தின் பிரதிபலிப்பு.

மேலும் இந்தியாவின் கல்விக்கூடங்கள் அனைத்திலும், சமற்கிருத மொழியைத் திணிக்கும் போக்கையும் அக்குழு முன்மொழிந்திருக்கிறது.

இவை கண்டிக்கத்தக்கவை.

தடுத்து நிறுத்த வேண்டிய கடமை, மதச் சார்பற்ற கட்சிகளுக்கும், மக்களுக்கும் உரியது.

இனிப்பு தடவிய நஞ்சை கொடுத்து, சூத்திரர்களுக்கு எதிரான கல்விக் கொள்கையைக் கையில் எடுத்துள்ள மதவாத ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. மத்திய அரசு, நெருப்போடு விளையாடுகிறது.

Pin It