சேலத்திற்கும் தமிழ் பயிற்சி மொழிக்கும் ஒரு முக்கிய தொடர்பு உண்டு. 1932இல் சேலத்து நேதாஜி இராஜாஜி முதல் அமைச்சர். அப்போது இரட்டை ஆட்சிமுறை. 1932 ஆரம்பகட்டத்தில் ‘தமிழால் முடியும்’ என்று சொன்னவர் மூதறிஞர் இராஜாஜி. அப்போதைய ஸ்டாதம் என்ற கல்வி இயக்குநருக்கு கடிதம் எழுதுகிறார். தமிழில் பள்ளிகளில் கல்வியைக் கொண்டுவர வேண்டும் என்று - அதற்கு ஸ்டாதம் மறுமொழி கூறுகிறார்- “பாடபுத்தகம் இல்லை, அகராதி இல்லை. தாய்மொழியில் கல்வி இயலாது” என்கிறார்.

அதற்கு இராஜாஜி- “தமிழில் போதிப்பது தொடங்கினாலன்றி, தமிழில் எழுத பாடநூல்கள் தேவை புலப்படாது.” “கற்பிக்கும்போது மணிப்பிரவாளம் நடை ஏற்படும்-பரவாயில்லை”. இதனால் லாபமே தவிர நஷ்டம் இல்லை. ஆக, தொடங்குங்கள் தமிழில்! என்பதே அவர் கொள்கை.

இத்துடன் நில்லாது இராஜாஜி, ‘தமிழால் முடியும்’ என்ற நூலையும் 3வது வகுப்புக்கு “தம்பி வா இதையும் படி” என்ற பாடநூல்களை எழுதியதுடன் சேலத்தில் The Tamil Scientific Term Society கலைச்சொல்லுக்கான முதல் இதழை வெங்கட சுப்பையருடன் சேர்ந்து தமிழ் - சாஸ்திர பரிபாஷை எனும் மாதப் பத்திரிகையை வெளியிட்டார்.

இது இப்படி இருக்க, தாய்மொழிக் கல்விக்கு ஏன் இத்தனை தடைகள்? வரலாறு பதில் சொல்லுகிறது. செந்நீர் கண்ணீர் வருகிறது. சங்க காலத்தை விடுத்து களப்பிரர்களை விடுத்து, பல்லவர் காலத்தில் மணிப்பிரவாள நடை, சோழர் காலத்தில் இளஞ்சேட் சென்னி, நெடுங்கிள்ளி போன்ற தமிழ்ப் பெயர்கள். பராந்தகன், விஜயபாலன், பாஸ்கரவர்மன் என்று மாற்றப்பட்டது. விஜயநகரப் பேரரசில் - வடமொழி படிப்போருக்கு இலவச உணவு, ஊர் பெயர் மாற்றம் நடைபெற்றது. தமிழிசை மங்கியது.

புதுக்கோட்டை தொண்டைமான் ஆட்சியில் அம்மன் காசில், அவர்கள் கொடியில், தெலுங்கில் விஜய என்ற எழுத்து. சோழ பாண்டியர் காலத்தில் பிரபந்தங்கள், ஸ்தலபுராணங்கள் எழுதப்பட்டன. ஆனால் சமூக இலக்கியங்கள் எழுதப்படவில்லை. நாட்டுப் பற்றானது வடமொழி,வேதங்களோடும் வேள்விகளோடும் வளர்ந்தது.

ஒட்டுமொத்தமாகக் கூற வேண்டுமெனில் தமிழ்மொழி பயன்பாடு பராமரிக்கப்படவில்லை. பிறகு காலனி ஆதிக்கம் ஆங்கிலேயர் அறிவுத்துறையையும் பண்பாட்டையும் அழித்து, நம் நாட்டை பொருள்களை விற்கும் சந்தையாக்கினார்கள். நமக்கு அறிவே கிடையாது. அறிவியலுக்கு வழிகாட்டியவர் ஆங்கிலேயர் என்று தவறாக எண்ணத்தை வளர்த்தனர். அதையும் நாம் ஏற்றுக்கொண்டோம். நமக்கு 5 அடி அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட சுனாமிக்கும் அசையாத தஞ்சை பெருவுடையார் கோயில் கண்ணில் படவில்லை. வற்றாத காவேரியில் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணையும் நினைவுக்கு வரவில்லை.

மெக்காலே காலத்தில் சிப்பந்தி வர்க்கம் உருவாக்கப்பட்டது. இப்பொழுது உள்ள ஆங்கில கல்வியால் பயன் அடைவது இந்தியாவோ தமிழ்நாடோ அல்ல. இந்தியா தொழில்நுட்பங்களை Technocrates உருவாக்குவதற்குப் பதிலாக Tehnocoolies-களை உருவாக்கி இருக்கிறது என்று கூறுகிறது ஓர் இதழ். ஆங்கில வழிக் கல்வி, சிந்தனையை வளர்க்கவில்லை. ஆங்கில மொழி வழி கற்கும் நேரம் பெரும்பகுதி அழிந்துவிடுகிறது. உலக (250) நாடுகளில் 5 நாடுகளில்தான் ஆங்கிலம் தாய்மொழி. உலகத் தொடர்புக்கு ஆங்கிலம் மட்டும் போதாது.

ஆங்கிலத்தில் ஆய்வுக் கட்டுரைகள் வெளிவருவது 35% மற்றவை 20% ரஷ்ய மொழி, பிற மொழிகள் எல்லாம் அவர்கள் மொழியில் ஆங்கிலத்தில்தான் சுருக்கத்தைத் தருகின்றனர். அதுபோலவே ஜப்பான், ஸ்பானிஷ் மொழிகளிலும் அப்படியே. தாய்மொழியில்தான் அறிவியல் கல்வி நடைபெறுகிறது.medical booksதாய்மொழி குறித்து தேசப்பிதா “1915இல் காந்தி மயிலாடுதுறைக்கு வருகை. வரவேற்பு ஆங்கிலத்தில். அது கண்டு காந்தி “வரவேற்பிதழ் ஆங்கில மொழியில் பொறிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறேன். காங்கிரஸ் சுதேசி உங்கள் நாட்டு மொழியைத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. நீங்கள் உங்கள் நாட்டு மொழியைக் கொன்று அவைகளின் சமாதி மீது ஆங்கிலத்தில் நிலவச் செய்வீர்களானால், நீங்கள் உண்மையில் சுதேசி இயக்கத்தை வளர்ப்பவர்களாக மாட்டீர்” என்று கூறுகிறார். 16 மணி நேரம் கற்பதை 10 மணி நேரத்தில் தாய்மொழியில் கற்றுக்கொள்ளலாம் என்கிறார் காந்தி. ஆங்கிலத்தில் 1 மணி நேரம் படித்தால் தாய்மொழி படிப்பில் 3/8 குறைகிறது. ஆங்கிலச் சுமையால் நேரம் வீணாகிறது. 4 ஆண்டுகளில் படிப்பதை 2 ஆண்டுகளில் படிக்க முடியும் என்கிறார் அண்ணல் காந்தி.

காந்தி, பாரதி, தாகூர் நமது இராமேசுவரம் தமிழன் ஏபிஜெ அப்துல் கலாம், சந்திரயான் மயில்சாமி அண்ணாதுரை தாய்மொழிக் கல்வியை வற்புறுத்தியவர்கள். நமது அன்புக்குரிய அப்துல் கலாமும், மயில்சாமி அண்ணாதுரையும் தமிழ்வழி படித்து உச்சத்திற்குப் போனவர்கள். அறிவு வளர்ச்சிக்கு “தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது” என்பதே இவர்கள் அனைவரும் எடுத்துரைக்கும் கருத்து. சொல்லால் மட்டுமின்றி செயலாலும் காட்டியவர்கள்.

வளர்ந்த நாடுகளில் தாய்மொழியே பயிற்றுமொழி. இதனால் நம்மைவிட பல மடங்கு பொருளாதாரத்தில் உயர்ந்து காணப்படுகிறார்கள். இந்நாடுகள்தான் மனித சமுதாயத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் வலிமை பெற்றுள்ளனர். இவ்உலக நாடுகளுடன் நாமும் சேர்ந்து வளர்ச்சியும் வல்லமையும் பெற வேண்டும்.

தாய்மொழிக் கல்வி சமூகத்துடன் ஒரு தொடர்பை உண்டாகும். வாழ்க்கையைச் செம்மையாக்கும். ஆக, வாழ்க்கை ஏற்றத்திற்கு வளர் தமிழில் அறிவியலைக் கற்க வேண்டும்.

பிரான்சை எடுத்துக் கொள்வோம். 1971இல் பிரெஞ்சு தலைமை அமைச்சர் சேச்சே செபெல்டெல்மா "பிறமொழிச் சொல்லை அகற்றி புதுச் சொற்களை பிரான்சில் உருவாக்குங்கள்" என்று கூறினார். அங்கு கலப்பட சொல்லைப் பயன்படுத்தினால் 100 பிராங்கு தண்டம். அங்கு பள்ளிப்படிப்பு, மருத்துவம், பொறியியல் அனைத்தும் பிரஞ்சு மொழியில்தான்.

ஆரம்பத்தில், இஸ்ரேலில் நாடற்ற யூதர்கள் ஒன்றுகூடினர். யூதர்களின் சமயமொழி ஈப்ரு. அங்கு ஆரம்பத்தில் பலமொழிகள் பேசப்பட்டன. ஈப்ரு, மக்கள் மொழி ஆக்கப்பட்டது. இதனால் அகர வரிசை பாடத்திலிருந்து முதுமுனைவர் பட்ட மேற்படிப்பு வரை அதனைப் பயின்றும் பயிற்றுவித்தும் மீட்சி செய்து மேனிலை அடைந்தனர்; இன்று அது ஒரு வளர்ந்த நாடு.

ஜப்பானில் உயர்படிப்பு வரை அவர்கள் ஜப்பானிய மொழியில்தான். அவர்களின் கண்டுபிடிப்புகளைக் கட்டுரைகளில் மற்றவர்களும் தெரிந்துகொள்ள சுருக்கத்தைக் கொடுக்கின்றனர்.

ஒரு நிகழ்ச்சி: உணவுக்குழாயில் மிகச்சிறந்த அறுவை முறைகளைக் கண்டுபிடித்த அறுவை மருத்துவர் டாக்டர் நக்கயாமா, 15 ஆண்டுகளுக்கு முன்பு இரைப்பை குடல் மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கு வந்தார். அவர் பேசும்போது, நான்கு வார்த்தைகளே ஆங்கிலத்தில் பேசினார். Yes, Thanks, welcome, OK என்பதுதான்.

இந்தோனேஷியா, இரண்டாம் உலக மகாயுத்தத்திற்குப் பிறகு 100-க்கும் மேற்பட்ட மொழிகள் வட்டார மொழியாக, வழக்கு மொழியாகப் பேசப்பட்டது எழுதப்பட்டது. எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்தி “பாஷா இந்தோனேஷியா” என்று பெயரிட்டனர். இம்மொழியே பாடமொழியாக இருக்க வேண்டும் என்பது அரசு ஆணை. இம்முடிவில் கட்சி வேறுபாடு காரணமாக எந்தக் குழப்பமும் வர இடம் தரக்கூடாது என்று மரபு தழுவிய ஒப்பந்தம்.

ஆனால், தமிழ்நாட்டில் 1999இல் முதல்வர் கலைஞர் தமிழ் பயிற்றுமொழியாக வேண்டும் என்ற ஆணை பிறப்பித்தார். மெட்ரிக் பள்ளி கூட்டமைப்பால் அது தோற்கடிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்தவர் கலைஞர். இவ்வழக்கு 2002 உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆட்சியில் மாற்றம். அடுத்து வந்த ஆட்சியின் வழக்குறைஞர், ‘இப்பிரச்சினையை நீதிமன்ற முடிவுக்கே விட்டுவிடுகிறோம்' என்று தெரிவித்தார். “அவ்வாறு சொல்ல இயலாது. மேல் முறையீட்டு மனுவை அரசு திரும்பப் பெற்றுக் கொள்கிறீர்களா” என்று நீதிபதி கேட்கிறார். திரும்பப் பெறவில்லை என்று வழக்கறிஞர் கூறுகிறார். இதுதான் தமிழ்நாட்டில் நடைமுறை.

அடுத்து இரஷ்யா. எல்லாம் இரஷ்ய மொழியில்தான். நம் மாணவர் சென்று அங்கு இரஷ்யாவில் மருத்துவம் படித்து வருகிறார்கள். அவர்கள் மொழியைக் கற்ற பின்னரே மருத்துவப் படிப்பு. வளர்ந்த உலக நாடுகளில் அனைத்தும் தமது தாய்மொழிக் கல்வியினாலே போதிக்கப்படுகிறது. எ.கா: ஜெர்மன், ஜப்பான், இஸ்ரேல், ரஷ்யா என்று பார்த்தோம். இத்துடன் சீனாவையும், துருக்கியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதற்குக் காரணம், தாய்மொழி உணர்வுடன்

60-70 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியலை சொந்த மொழியில் அந்நாடுகள் புகுத்திவிட்டன. அதனால் எல்லோருக்கும் வாய்ப்பு. ஏழை, பணக்காரன் என்று இல்லாது, முன்னேற்றமடைந்த நகரத்தான், பின்தங்கிய கிராமத்தான் என்ற வேறுபாடின்றி அறிவியலைக் கற்றனர். ஆகவே, ஆர்வமும் ஆற்றலும் எங்கிருந்தாலும் அறிவியல் கற்பிக்கப்பட்டது. இதனால் நாடு முன்னேறியது. மொழி வளமானது. இதனால் மேல்நிலைக் கல்வியைக் கற்க மொழி தடை இல்லை என்றாகியது. அறிவு பெருகியது, தொழில் துறையும் வேகமாக முன்னேறியது.

ஆகவே, நூல் தமிழில் பயிற்சிமொழி தேவை எனப்படுகிறது. தமிழ்நாட்டின் நிலை என்ன? வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் 1932 இராஜாஜிக்குப் பிறகு 1956 கர்மவீரர் காமராஜர் அமைச்சரவையில் கல்வி அமைச்சர் திரு சி.சுப்பிரமணியம் அவர்களினால் 1956 தமிழ் வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டது. சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கள் முயற்சிசெய்து திட்டம் வகுக்க முன்வரவில்லை. முதலமைச்சர் காமராஜர் கூறுகிறார். “படித்தவர்கள் மனப்பான்மை மாறவேண்டும். தமிழ் பயிற்சி மொழியாக உள்ள பள்ளிகளுக்கு தம்பிள்ளைகளை அனுப்ப வேண்டும். இதைச் செய்தால் தமிழ் பாட புத்தகங்கள் தானே வெளிவரும்” என்கிறார். பிறகு, திரு.சி.சுப்பிரமணியம் மத்திய அமைச்சராகிறார். அதைத் தொடர்ந்து மொழிப் போராட்டம். திரு.பக்தவச்சலம் அவர்கள் முதல்வரான பின் மொழிப் போராட்டம், ஆட்சி மாறியது. கட்சியும் மாறியது; காட்சியும் மாறியது; 1967இல் அறிஞர் அண்ணா முதல்வரான பின், “ஆட்சி மொழியாக அன்னைத் தமிழிருக்க, ஆங்கிலம் பயிற்று மொழியாக இருப்பது தலையில் தண்ணீர் ஊற்றிவிட்டு, வேரில் வெந்நீரை ஊற்றுவதற்குச் சமம்!” என்றார்.

கல்லூரிகளில் பயிற்று மொழியாகத் தமிழ் 5 ஆண்டுகளுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என அண்ணா அரசு 1968இல் தீர்மானம் நிறைவேற்றியது. அண்ணா மறைவுக்குப் பிறகு, 1970இல் கலைஞர் அவர்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். அண்ணாவினால் நிறைவேற்றப்பட திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. இது தமிழ் திணிப்பு எனப்பட்டது. தமிழகத்தில் ஆங்கிலம் சார்பாக ஓர் இயக்கம் உருவானது. இதை சிண்டிகேட் காங்கிரஸ், ஏ.எல்.முதலியார் போன்றோர் எதிர்த்தனர். கலைஞருக்கு கொடும்பாவி கொளுத்தினர். ஈரோட்டில் மாணவர்கள் தமிழ் தேர்வைப் புறக்கணித்தனர். ஆங்கிலத்துக்கு ஆதரவாக மாநாடுகள் நடத்தப்பட்டன. இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலைஞர் கூறுகிறார். “தமிழ் வழி கற்று நாம் புத்துலகோடு, போட்டி போடும் புதிய வரலாறு எழுத இயலும் என்று பத்தாண்டுகளுக்கு முன்பே உறுதி தோன்றியது. ஆனால் கிளர்ச்சி. தமிழ் பயிற்றுமொழித் திட்டம் தயங்கியது. பிறகு 1980 தமிழ்ப் பல்கலைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.

துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம், அறிவியல் தமிழ்த்துறைத் தலைவர் இராம.சுந்தரம் இவர்களால் 23 மருத்துவ நூல்கள் தமிழில் எழுதி வாங்கப்பட்டன. எழுதியவர்கள் டாக்டர் ப.ஆறுமுகம், மருத்துவக்கல்வி இயக்குநர்; சரசாபாரதி, நோய்க்குறியியல் வல்லுநர், சென்னை; பேராசிரியர் டாக்டர் முத்து, உடற்கூறு இயல் இயக்குநர், மதுரை; பேரா. ராமகிருஷ்ணன், ஜிப்மர் உயிர் வேதியியல் துறை, புதுச்சேரி; பேரா.ராஜேஸ்வரி, குழந்தை மருத்துவர். மருத்துவர் பேராசிரியர் முனைவர் சு.நரேந்திரன், அறுவை மருத்துவம், தஞ்சை மருத்துவக் கல்லூரி. அதுபோல் பொறியியல் முனைவர் நக்கீரன், முனைவர் இளங்கோ போன்றவர்களால் 13 நூல்கள் எழுதப்பட்டன. தமிழில் நூல்களை எழுதத் தொடங்குங்கள் என்று கூறுபவர்களுக்குத்தான் இந்தப் பட்டியல். இந்நிலையில், 700 மாணவர்கள் தமிழில் பொறியியல் படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கலைஞர் ஆட்சியில் பயிற்சி கொடுக்கப்பட்டது. மைய அரசு சரியான முடிவைத் தராத சூழ்நிலையில், (அனைத்திந்திய தொழில்நுட்பக் கழகம் (AICTE)) இத்திட்டம் கைவிடப்பட்டது.

இக்காலகட்டம் ஆங்கில கலைச்சொல் இல்லை, மூலநூல் இல்லை, தமிழில் படித்தால் வேலைவாய்ப்பு இராது என்று கூறப்பட்ட காலம். பலர் கேலி பேசினர்.

இக்கால கட்டத்தில் மருத்துவத் தமிழக்கு அகராதி வெளியிடப்பட்டது. டாக்டர் சாமி சண்முகம், மணவை முஸ்தபா, தஞ்சை அ.கி.மூர்த்தி, பட்டுக்கோட்டை சம்பத்குமார் போன்றோர் வெளியிட்டனர். இது தவிர, தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் 13 மருத்துவக் களஞ்சியங்கள் வெளிவந்தன. பாடநூல்களிலிருந்து 1984-2000குள்ளாகவே கலைக் களஞ்சியம் வரை தமிழால் முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது.

இங்கு மட்டுமல்ல தமிழர் குடியேறிய நாட்டிலும். இலங்கையில் டாக்டர் சின்னத்தம்பியும் மகப்பேறு மருத்துவம், நலம் பேணல் போன்ற மருத்துவ நூல்களை “என்னை நன்றாக இறைவன் படைத்தான். தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு” என்று சொல்லி தன் ஓய்வு ஊதியம் முழுமையையும் செலவிட்டு நூல்களை வெளியிட்டார். அதில் ஒரு கிரந்த எழுத்து கிடையாது. சமஸ்கிருத சொற்கள் இல்லை. இது தவிர, இலங்கை திணை கழகத்தால் 12 மருத்துவ கலைச்சொற்கள் பட்டியல் வெளிவந்தன. இனவாத கலவரங்கள் ஏற்படும் வரை தமிழில் MA., M.Phil., வரை இலங்கையில் பல பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்பட்டது.

மறுபடியும் தமிழ்நாட்டிற்கு வருவோம். தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வி அதிகம் என்று 1980 தமிழ்ச் சான்றோர் பேரவையால் 100 பேர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதன் விளைவாகக் கலைஞர் அரசு, நீதிபதி மோகன் குழுவை அமைத்தது.

தமிழக அரசு, மழலைகள் பள்ளியில் தமிழைப் பயிற்றுமொழியாக்கும் திட்டத்தை அரசு ஆணை மூலம் தெரிவித்தது. மெட்ரிக் பள்ளிகள் இதனை எதிர்த்தன. உயர்நீதி மன்றத்தில் நீதியரசர்கள் ஏ.வெங்கடாசலம், எஸ்.ஜெகதீசன், என்.தினகர் ஆகியோர், “தமிழக அரசு ஆணை செல்லாது” என்று தீர்ப்பளித்தார்கள். பிறகு கலைஞர் அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

பீனிக்ஸ் பறவை போல் 2006ல் மறுபடியும் கலைஞர் ஆட்சிக்கு வந்து முதல்வரான பிறகு, தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகள் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 12 கல்லூரிகளில் திருச்சி, திண்டுக்கல், சென்னை, அரியலூர், பண்ருட்டி, இராமநாதபுரம் எனத் தமிழ்நாடு முழுமையும் ஆரம்பிக்கப்பட்டது. 2010 ஆட்சி மாற்றம். கையேடு போல் பொறியியல் நூல்கள் வெளிவந்தன. இதையும் நகல் எடுத்துப் படிக்கவேண்டிய அவலம் நிகழ்ந்தது.

இன்றைய நிலையில் மருத்துவப் படிப்பு தாய்மொழியில் என்ற நிலையில் வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும்போது, இலங்கையில் ஓர் மருத்துவக் கல்வி புரட்சி தோன்றியது. “மருத்துவத்தை சொல்லும் திறன் தமிழுக்கு உண்டு” என்று 170 ஆண்டுகளுக்கு முன் ஒரு அமெரிக்கத் தமிழர் டாக்டர் சாமுவேல் பிஷ்கீறின் கூறினார். இவரே ஆங்கில மருத்துவக் கல்வியை தமிழ் மூலம் புகட்டி 33 மருத்துவர்களை உருவாக்குவதில் வெற்றி கண்டவர். 1850 யாழ்ப்பாணம் மணிப்பாலில் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் கற்பித்தார். 1852 மருத்துவம் இரண்டாம் தொகுதி மாணவர்களுக்கு தமிழில் மருத்துவ வகுப்புகளைத் தொடங்கும்போது, நிதி உதவி கேட்டு இலங்கை தேசாதிபதிக்கு எழுதுகிறார். அதற்கு மறுமொழியாக,

“அமெரிக்க மிஷன் நடைமுறையில் மேற்கொண்டிருக்கும் ஆங்கிலம் தவிர்க்கும் கொள்கை பேராபத்தானது, தற்கொலைக்கு ஒப்பானது” என்று மறுத்துவிட்டார். இருப்பினும் கிறீன் தன் முயற்சிகளால் பதினொரு நூல்களை வெளியிட்டார். அந்தப் பெயர்களைப் பாருங்கள். கல்வின் கற்றரின் அங்காதி பாதம், சுகரண வாதம் உற்பாலனம்-1852, யோன்சயின் பிரசவ வைத்தியம், துருவிதரின் இரண வைத்தியம், கூட்டரிசன் வைத்தியாகரம், டால்தனின் மனுஷசுகரணம், வாநிங்கின் சிகிச்சா வாகடம், Pharmacopoeia of India (மருந்தியல்) மனுஷ சுகரண கலைச்சொற்கள் அருஞ்சொல் அகராதி - (Terminology) இவற்றைவிட கண், காது, கை, கால், தோல், வாய், உடல் சுத்தமாய் இரு, வாந்திபேதிக்கு உதவிக் குறிப்புகள் முதலிய சிறு நூல்களும் வெளியிடப்பட்டன. ஏன் இந்த நூல்களை எழுதினேன் என்பதை ஜெமிஸ்தம் என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் டாக்டர் கிறீன்.“இல்லாத சாத்திரமென்ற மப்பில் பதுங்கி, தமிழருக்கு நாசமோசத்தை வருவிக்கும் சகுனம், சூனியம் முதலிய பொய்கள் நித்தமும் தடையின்றி உலாவுகின்றன. ரசவாதத்திற்குப் பதிலாக கெமிஸ்தம் வித்தையையும், சோதிட சாஸ்திரங்களுக்குப் பதிலாக வான சாஸ்திரமும் பொய்யான கல்விக்குப் பதிலாக மெய்யான அறிவை தேசத்தில் நிறுத்துவது” என்று கூறுகிறார்.

தமிழ்நாட்டிலும் அந்நூல் கிடைத்தது. இக்காலகட்டம் ஆங்கிலம் அரசுமொழி, ஆங்கிலம் படித்தால் அரசு வேலை என்ற நிலை. அறிவியலைப் படிக்கக்கூடாது என்று சொல்லாத கட்டுப்பாட்டுடன் இந்துக்கள் வாழ்ந்த காலம். அறிவியல் கிறித்துவத்துடன் இணைந்துள்ளது என்று பழைமைவாதிகள் எண்ணிய காலம்.

டாக்டர் கிறீன், மேலை மருத்துவம் குறித்த 4650 பக்கங்களை மொழிபெயர்த்தார். எல்லாம் மேலை மருத்துவத்தைச் சார்ந்தது. இதில் துண்டு அறிக்கைகளும் கையேடுகளும் அடங்கும். இவர் மட்டும் எழுதியது நூல்கள் நான்கு. இத்துடன் இரண்டு அகராதிகளும் வெளியிடப்பட்டன.

இவருடன் இணைந்து எழுதியவர்கள் சாப்மன் (வைத்திலிங்கம்), பவுல் என்ற அப்பாவுப்புள்ளை, நதானியல் என்ற சுவாமிநாதன். இந்த சுவாமிநாதன் தான் நூல்களை எல்லாம் பாஷாந்தரம் செய்தார். ஆனால் எல்லா நூல்களும் கிறீனினால் திருத்தப்பட்டது. எழுதியவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள். கீறின் எல்லோரையும் பண்டிதர் என்று குறிப்பிடுகிறார். தன்னை மட்டும் வைத்தியர் என்று கூறிக்கொள்கிறார். நூலில் கலைச்சொற்கள் தமிழ்-வடமொழி-ஆங்கிலம் என்ற வரிசையில் உள்ளது. இருப்பினும் வேகம்சடுதி, என்றும் குளியல்-ஸ்நானம் என்றும் எழுதப்பட்டது. இது அக்கால வழக்கு. அக்காலத்தில் படித்தவர்கள் மேட்டுக்குடி மக்கள் பயன்படுத்திய அகராதி வில்சனின் சமஸ்கிருத- இங்கீலிஸ் அகராதி. சாம்வேல் - சமுல் எனவும் டேனியல்-தனைல் எனவும் எழுத்தும் பெயர்ப்பு செய்துள்ளார். லண்டன்-லங்கையில் ‘இ’ புகுத்தப்படவில்லை. ஆக 1870-களிலேயே இலக்கண நெகிழ்வுகள் நடந்துள்ளன. அக்கால கட்டத்தில் மாணாக்கர்கள் மேல்நாட்டுக் கல்வியைத் தமிழில் படித்தால் பயனுண்டா என சலனமடைந்தனர். கிறீன் கூறுகிறார். “எனது மாணவர்கள் ஆங்கிலத்திலிருந்து மாறி தமிழில் கற்பது பற்றி சலனமடைந்துள்ளனர். அரசு சேவையில் சம்பளம் பெறும் வாய்ப்பு குன்றுமென அவர்கள் எண்ணுகிறார்கள். உண்மை. ஆனால் வைத்தியர்கள் அவரவர் கிராமத்தில் நிலைபெறச் செய்தலே என் எதிர்கால நோக்கம். எனவே, 10 நாட்கள் ஓய்வு கொடுத்த பின் வைத்திய கல்வியைத் தொடங்குவார்களா? அன்றேல் வேறு தொழிலை நாடுவார்களா? எனத் தீர்மானிக்க அவர்களுக்கு அவகாசம் கொடுத்துள்ளேன்” எனக் கூறுகிறார். டாக்டா கிறீன் மேலும் கூறுகிறார், “ஆம் கடவுள் எமக்கு ஆயுள் பலந்தரின் காலபோக்கில் இம்மாகாணத்தை மேனாட்டு வைத்தியம் கற்ற சுதேசிகளால் நிரப்பிக் காட்டுவேன்” என மார்தட்டி புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

மாணவர்கள் தங்கள் படிப்பை அவர்கள் கலாச்சார உடைகளான வேட்டி, சால்வை தலைப்பாகை ஆகியவைகளுடன் படித்தனர்.

டாக்டர் கிறீன் சொல்கிறார், “வேட்டி-காற்சட்டையாகவும் சால்வை மேற்சட்டையாகவும், தலைப்பாகை-தொப்பியாகவும், தாவர போஜனம்மாமிச போஜனமாகவும் மாறுகின்றன” என்றே நான் அறிகின்றேன். ஐரோப்பிய நடையுடை பாவனைகளைப் பின்பற்றும் இந்துக்களைவிட, கிறித்துவ இந்துக்களையே காண ஆசைப்படுகின்றேன். “கிறித்துவராவது என்பது தேசியத்தை இழப்பதல்ல” என்று தெளிவாகக் கூறுகிறார்.

அடுத்து, 1866இல் ஒரு வெற்றிச் செய்தியைக் கூறுகிறார். “இப்போது எல்லா விஷயங்களும் தமிழிலேயே நடைபெறுகின்றன. மருந்துகளின் பெயர், நோய்களின் பெயர், குறிப்புகள், கணக்கு விபரங்கள், மருத்துவக் குறிப்புகள் எல்லாம் தமிழிலே நடைபெறுகின்றன” என்று கூறுகிறார்.

இந்த நிலையில், எந்த அரசு பணம் தர மறுத்ததோ அதே அரசு கிறீன் காலத்தில் “காலரா தடுப்புமுறைகள் பற்றிய துண்டுப் பிரசுரத்தை அரசு இவரிடம் எழுதி வாங்கி வெளியிட்டது. 1870 இல் அரசு கிழக்கு மாகாண அதிபர் நூல்களை வாங்கி மக்களுக்கு வழங்கினார். டாக்டர் கிறீன் தன் கல்லறையில் எப்படி எழுதவேண்டும்" என்று கூறுகிறார். (Medical Evanglelist to the Tamils) “தமிழுக்கான மருத்துவ ஊழியர்” என்று அவருடைய நூலில் ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார். இறுதியாக அவர் கூறியது, “இந்தப் புத்தகம் வருங்காலத்தில் தமிழருள் கல்வியின் ஓட்டத்துக்கு தொடக்கமாக, நிலையாக இருக்கட்டும். இவ்வோட்டம் மேற்குத் தேசத்தாரின் முன் கண்ட ஓட்டத்துக்கு நிகராகக் கடவது” என்று கூறியது தான் அது. அதை மெய்பிக்கும் விதமாக நமது முதல் அமைச்சர் அவர்கள் 100 பாடநூல்களை மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கியதற்கு நன்றி.

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்.

இறவாத புகழுடைய புது நூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்”

“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள்

யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”

என்ற பாரதியின் கனவை நனவாக்க, “வெளியுலகில் சிந்தனையில் புதிது புதிதாக / விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்கள் எல்லாம் கண்டு தெளிவுறுத்தும் படங்களோடு சுவடி எல்லாம் செய்து / செந்தமிழை செழுந்தமிழாய்ச் செய்தல் வேண்டும் என்ற புரட்சிக் கவிஞன் பாட்டிற்கிணங்க நம் முதலமைச்சர் ஆணைப்படி 2021 பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் அறிவியலில் திசைதோறும் திராவிடம், முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம், இளந்தளிர் இலக்கியத் திட்டம் என அறிவிக்கப்பட்டன.

அத்திட்டத்தில் உள்ள முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின்படி உயர்கல்வி பயிலும் மாணவர்க்கு இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், பொறியியல், வேதியியல், வேளாண்மை ஆகிய பொருட்களில் தலைசிறந்த 206 நூல்களை மொழிபெயர்ப்பு செய்துகொண்டிருக்கின்றனர்.

முதற்கட்டமாக நூல்கள் வெளியீடு, வரும் டிசம்பர் மாதம் நடக்க உள்ளது. இயற்பியல் நூல்கள்-4, வேதியல்-5, மருத்துவம்-6, உயிரியியல்-3, வணிகவியல்-3 ஆகிய நூல்கள் வெளிவர உள்ளன.

2023 இல் இரண்டாம் கட்டமாகப் பொறியியல் 20 நூல்கள், மருத்துவம் 10 நூல்கள். இதில் சேலம் டாக்டர் லோகநாதன், சேலம் கந்தசாமி, டாக்டர் கனகராஜ், டாக்டர் கண்ணன் ஆகியோர் எழுதுகின்றனர். ஆக, 206 நூல்கள் அடுத்த ஆண்டுக்குள் வெளிவரப்போகின்றன. இவைகள் அனைத்தும் உலகத்தரம் வாய்ந்த நூல்கள். இன்றைய பாடத்திட்டத்தின்படி கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் எம்.பி.பி.எஸ், பி.இ.யில் என்ன படிக்கின்றார்களோ அதே நூல்கள் வெளிவர உள்ளன. அண்மையில் வெளியிட்ட ஹிந்தி நூல்கள் (Trans-Literation) ஆங்கில எழுத்தை ஹிந்தி எழுத்துக்களில் அப்படியே ஒலிபெயர்த்து எழுதப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் ஆசிரியர்களால் எழுதப்பட்ட நூல்கள் என்று டாக்டர் காந்தராஜ் தன் முகநூலில் குறிப்பிடுகிறார். இங்கு, அங்கு முடியாதது முடிந்திருக்கிறது. “தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே” என்ற பாட்டிற்கிணங்க தமிழ் பயிற்றுமொழிக் கனவு நனவாகிறது.

ஆங்கில மொழிக்கு நாம் எதிர்ப்பாளர் இல்லை. அதே வேளையில் பாதுகாப்பாளரும் இல்லை. ஆனால், தமிழுக்கான உரிய இடத்தை ஆங்கிலத்திற்கு விட்டுவிட்டு தமிழை வலுவிழக்கச் செய்பவர்கள் தமிழ் மக்களைத் தொடர்ந்து அடிமை நிலையில் வைப்பதற்கான முயற்சியை மேற்கொள்கின்றனர் என்பது மட்டும் உண்மை. மக்களாட்சியில் மக்கள் மொழி மதிக்கப்பட வேண்டும். மக்கள் மொழிக்கு உரிய உரிமைகள் யாவும் மகிழ்ச்சியோடு வழங்கப்படவேண்டும். மக்கள் மேம்பாட்டிற்கும் மக்கள் முன்னேற்றத்திற்கும் மக்கள் மொழிபோல் எந்த மொழியும் உதவ முடியாது.

இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் நம் முதல்வரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இச்சமத்துவ ஆட்சியில் இவை நடைபெறுகிறது.

தமிழில் அறிவியலை எழுதவேண்டும் என்று கூறுபவர்களுக்கு, கூறியவர்களுக்கு இதோ ஒரு பட்டியல்.

1867இல் 11 மருத்துவ நூல்கள் டாக்டர் பிஷ்கீரினினால் வெளிவந்துள்ளன. இதில் 2 மருத்துவ அகராதிகளும் அடக்கம்.

1984 தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக 13 மருத்துவ நூல்கள், 8 அகராதிகள் 14 பொறியியல் நூல்கள் வெளிவந்துள்ளன.

2008இல் பொறியியல் பட்டப்படிப்பு

12 தமிழ்நாட்டுக் கல்லூரியில் தமிழில் நடைபெறுகிறது.

2022 வேளாண் கல்லூரியில் தமிழ்வழியில் நடைபெறப்போகிறது.

2023 பட்டயப்படிப்பு பொறியியல் பட்டயப்படிப்பு தமிழில் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப் போகிறார்கள்.

“நாளும் நம்மொழி பிந்துதடா

புவி நம்மைப் பிரிந்து முந்துதடா”

என இனி கவிஞர் குலோத்துங்கன் பாடத் தேவையில்லை.

“உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூல்கள். ஒருவர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் வரப்போகிறது.” அத்துடன், சென்னை தண்டையார்பேட்டையில் தமிழ்வழிக் கல்லூரிக்கான 14 ஏக்கர் நிலத்தை புற்றுநோய் மையத்தில் ஒதுக்கி, “தமிழ் வழி மருத்துவக் கல்லூரி” அமைக்க ஒன்றிய அரசிடம் தமிழ் நாடு அரசு கேட்க விருப்பதும் நம் காதுகளில் தேனாய்ப் பாய்கிறது.

(இக்கட்டுரை சேலம் புத்தகத் திருவிழாவில் (27-11-22) “மருத்துவக் கல்வியும் மணித்தமிழும்” என்ற சொற்பொழிவின் சுருக்கம்.)

- டாக்டர் சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.

Pin It