2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிக்கையைத் தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று வெளியிட்டது. அதன்படி எதிர்வரும் 2026 ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெறும் என்றும், மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
இந்தத் தேர்தல் அறிக்கைகள் கவனமாக மக்களால் பரிசீலிக்கப்பட வேண்டியவை. ஏனென்றால் இந்தத் தேர்தல் அறிக்கைகள் மக்களுடைய வாக்குகளைப் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. மக்களுடைய எதிர்காலத்தைக் கருதக்கூடிய வாக்குறுதிகளும் அவற்றில் உள்ளன; வாழ்வியல் வசதிகளை அதிகரிக்கக்கூடிய வாக்குறுதிகளும் உள்ளன. இவையன்றி, நிலத்தில் கனிம வெடிகள் புதைக்கப்பட்டிருப்பது போல, எதிர்கால அரசியல் திட்டங்களை ஓரிரு கட்சிகள் தேர்தல் அறிக்கையில் ஒளித்தும் வைத்துள்ளன. இந்தத் தேர்தல் அறிக்கைகளை ஒரே கட்டுரையில் மதிப்பீடு செய்துவிட முடியாது என்றாலும், முக்கிய கூறுகளையும் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் எதிர்காலத் திட்டங்களையும் அடையாளம் காட்ட முடியும்.
நீண்ட தேர்தல் அறிக்கைகள்:
- அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்று கட்டமாகத் தேர்தல் வாக்குறுதி அறிக்கைகளை அளித்தது. கடந்த மார்ச் 24-ஆம் நாள் அதிமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் மக்களை ஈர்க்கக்கூடிய சில வாக்குறுதிகளை அளித்தார். அதிமுக 54 பக்கங்களில் 31 தலைப்பில் 297 வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையாக அளித்துள்ளது.
- திராவிட முன்னேற்றக் கழகம் 12 பேர் உள்ள குழுவை அமைத்து, பல்வேறு கருத்துகளைச் சேகரித்து, 98 பக்கங்களில் 50 தலைப்புகளில் நீண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- நாம் தமிழர் கட்சி 'மாற்றத்திற்கான வழி' என்ற தலைப்பில், 49 உள்ளடக்கத் தலைப்புகளில், 437 பக்கங்களில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
திமுக, அதிமுக கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளின் பொதுத்தன்மையாக மாநில உரிமைகள், மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள், பெண்கள் நலன், மாணவர்கள் நலத் திட்டங்கள், உரிமைத் தொகைகள் ஆகியவை அமைந்துள்ளன. நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அத்தகைய திட்டங்கள் ஏதும் இல்லை. ஆனால், மக்களின் (குறிப்பாக இளைஞர்களின்) கவனத்தைப் பெறும் வகையில் ஈர்ப்பான தலைப்புகளில் நீண்ட செய்திகள் தரப்பட்டுள்ளன; ஆனால் அவை சாத்தியமற்றவையாக உள்ளன.
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள கவனத்தை ஈர்க்கும் சொல்லாடல்களுக்குள் வெறுமை இருக்கிறது. கற்பனையான, நடைமுறை சாத்தியமே அற்ற பல విషయங்கள் பேசப்பட்டுள்ளன. இதற்கு முன்பு மாநில சுயாட்சி பேசிய கட்சிகளின் கோரிக்கைகளையே புதிய தலைப்பிட்டு இந்தத் தேர்தல் அறிக்கை தருகிறது. தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் முன்வைத்த கருத்துகளின் உள்ளடக்கத்தை ஒழித்துக் கட்டிவிட்டு, மேலோட்டத்தை மட்டும் பயன்படுத்தி இருக்கிறது. புதிதாக இத்தேர்தல் அறிக்கையில் பேச முற்பட்டவை நகைக்குரியவையாக உள்ளன. கூடுதலாக நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஆர்.எஸ்.எஸ். அறிவாளர்களால் வடிவமைக்கப்பட்டவை என்பதை அம்பலமாக வெளிப்படுத்திவிடுகின்றன.
(1) திமுக என்ன கூறுகிறது?
திமுக மாநில உரிமைகள் பற்றிப் பேசுகிறது:
- 'திராவிட மாடல் 2.0' ஆட்சியில், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சூரியன் சோப் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை நாடு தழுவிய விவாதப் பொருளாக்கி, ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரப் போக்கைத் தடுத்து நிறுத்தி, மாநில உரிமைகளை நிலைநாட்டிட உடன்பாடான கருத்துள்ள இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டு, அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கழகம் மேற்கொள்ளும்.
- 'ஒரே நாடு, ஒரே மொழி' என்ற திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். ஆங்கிலமும் தாய்மொழியும் கொண்ட இருமொழிக் கொள்கைக்கு மாற வேண்டும்.
- ஆங்கிலம் நிரந்தர ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். ஆங்கிலம் மட்டுமே மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் எனத் திமுக தொடர்ந்து போராடும்.
- உயர்நீதிமன்றங்களில் அம்மாநில மொழி, நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்தப்பட அனுமதிக்க வேண்டும்.
- 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே நிதிப்பகிர்வு பரிந்துரை செய்ய வேண்டும்.
- 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதைக் கைவிட்டு அதற்கான சட்ட முன்வரைவைத் திரும்பப் பெற வேண்டும்.
- கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
- பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களை மாநில அரசே செய்ய வேண்டும்.
- மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வலியுறுத்துவோம்.
- சரக்கு மற்றும் சேவை வரியின் ஒருமித்த சார்பினைக் குறைத்து, கூட்டாட்சி சமநிலையை உருவாக்க வலியுறுத்துவோம்.
- சரக்கு மற்றும் சேவை வரி வருவாயில் தற்போது மாநிலங்களுக்கு உள்ள பங்கினை 50 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடாக உயர்த்த வலியுறுத்துவோம்.
- மத்திய அரசு 'பாரதிய பாஷா பரிவார்' என்ற அமைப்பின் மூலம் எல்லா இந்திய மொழிகளையும் ஒன்றிணைத்து, இவை எல்லாவற்றிற்கும் தாய்மொழி சமஸ்கிருதம்தான் என நிறுவ முயற்சிக்கிறது. தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளின் தனித்துவத்தையும், அவற்றின் பண்பாட்டுக் கூறுகளையும் காக்கத் திமுக தொடர்ந்து பாடுபடும்.
இவற்றோடு மக்கள் நலத்திட்டங்களையும் திமுக தேர்தல் அறிக்கை பேசுகிறது:
- இல்லத்தரசிகள் தம் வீட்டில் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, கிரைண்டர், மிக்சி, மைக்ரோவேவ் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்கவோ அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரும் இத்தகைய பொருட்களுக்கு மாற்றாக வாங்கவோ, 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், வருமான வரி செலுத்தாத குடும்பங்களின் இல்லத்தரசிகள் அனைவருக்கும், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளிலேயே மேற்கூறிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ₹8,000 கூப்பன் வழங்கப்படும்.
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ₹1,000-லிருந்து ₹2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- பெண்கள் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் 'புதுமைப்பெண்' திட்டத்தின் கீழ் மாதந்தோறும் மாணவிகளுக்கு வழங்கப்படும் ₹1,000 உதவித்தொகை, ₹1,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை என்பதை மாற்றி, இனி 8-ஆம் வகுப்பு மாணவர்கள் வரை வழங்கப்படும். முன்னரே 31,000 பள்ளிகளில் படிக்கும் 20 லட்சம் மாணவ-மாணவியர் பயனடைந்தார்கள். இப்போது இந்த எண்ணிக்கை மேலும் கூடும்.
- 2025-26 ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்குப் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. 5 ஆண்டு காலத்தில் 35 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும்.
- 'நான் முதல்வன்' திட்டத்தில் 5 லட்சம் பேர் பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு மாதந்தோறும் ₹1,500 உதவித்தொகை வழங்கப்படும்.
- 2025-ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழ்நாடு அரசு 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ்ப் பயிற்சி பெற்றவர்களில் 56 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்ற மொத்தம் 60 பேரில், இந்த 56 பேர் இத்திட்டத்தின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- மகளிருக்கான திருமண உதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பெயரில் உயர் கல்வித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கல்லூரிப் படிப்பை முன்னெடுக்கும் பெண்கள் அனைவருக்கும் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்த ₹1,000, ₹1,500-ஆகப் புதுமைப்பெண் திட்டத்தில் உயர்த்தப்படுகிறது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை கூறுவது என்ன?
- அனைத்துக் குடும்பங்களுக்கும் குறைந்தபட்ச வருமானம் பெறுவதை உறுதி செய்யும் வகையில் பெண்களுக்கு உரிமைத் தொகை மாதம் ₹1,000-லிருந்து ₹2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- விளிம்புநிலைக் குடும்பங்கள் அனைத்தும் குறைந்தபட்சம் மாதம் ₹20,000 வருவாய் ஈட்டுவதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- கிராமப்புறங்களில் சிறு, குறு விவசாயம் சார்ந்த தொழில்கள் பெருகவும், தொழில் வளர்ச்சியை நாடு முழுவதும் பரவலாக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் வாக்குறுதி அளிக்கப்படுகிறது.
- வரிச்சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும்.
- மகளிர் நலம் காக்க 'குலவிளக்கு' திட்டம்: அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையாக ₹2,000 வழங்கப்படும்.
- தற்போது பெண்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்து பயணம் அளிக்கப்பட்டிருக்கிறது. மகளிர் போல ஆண்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டம் அளிக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
- வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீடு வழங்கும் 'அம்மா இல்லம் திட்டம்': கிராமப்புறங்களில் சொந்த வீடில்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும்; நகர்ப்பகுதியில் 'அம்மா இல்லம் திட்டம்' மூலம் அடுக்குமாடி வீடுகள் கட்டி இலவசமாக வழங்கப்படும்.
- நூறு நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் (125 நாட்களாக உயர்த்தப்படும் என்று பாஜக ஒன்றிய அரசு அறிவித்தது).
- அம்மா இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம்: வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ₹25,000 மானியத்துடன் 5 லட்சம் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
- முதியோர், விதவைகள், முதிர்கன்னிகள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் ₹1,000-லிருந்து ₹2,000-ஆக உயர்த்தப்படும்.
- வங்கியில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். வேலைவாய்ப்பு கிடைக்காமல் கடன் தொகையைச் செலுத்த முடியாதவர்கள் துன்பம் தீரும் வகையில் அத்தொகையைச் செலுத்தும் பொறுப்பை அரசே ஏற்கும்.
- அரிசி குடும்ப அட்டையைப் பெற்றுள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு உருளைகள் விலையில்லாமல் வழங்கப்படும்.
- சிறுபான்மை சமயத்தவர்க்குச் சுயதொழில் தொடங்க வட்டி இல்லாக் கடன் வழங்கப்படும்.
- வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கப்படும். 12-ஆம் வகுப்பு படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 வழங்கப்படும்.
- மீன்பிடித் தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணம் ₹8,000-லிருந்து ₹12,000-ஆக உயர்த்தப்படும்.
- கைத்தறி நெசவாளர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டிலிருந்து 450 யூனிட் ஆகும். விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 1,000 யூனிட்டிலிருந்து 1,400 யூனிட் ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்து சொந்த ஆட்டோ இல்லாதவர்களுக்குப் புதிய ஆட்டோ வாங்க ₹75,000 மானியமாக வழங்கப்படும்.
- இல்லத்தரசிகளின் பணிச்சுமையைக் குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குக் குளிர்சாதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்) விலையில்லாமல் வழங்கப்படும். விலையில்லா அரிசியோடு ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்யும் விலையில்லாமல் வழங்கப்படும்.
மத்திய - மாநில கூட்டாட்சி முறை பற்றி அதிமுக தேர்தல் அறிக்கை பின்வருமாறு சொல்கிறது:
- மாநில அரசுகள் அதற்கான நிதி நிர்வாக உரிமைகளுடன் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். அதற்கு ஏற்ப மாநில அரசுக்கு உரிய நிதி நிர்வாகப் பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும்.
- இந்திய அரசியலமைப்புச் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பொறுப்புகளுடன் மாநில அரசுகள் சுதந்திரமாகச் செயல்படத் தேவையான நிதிப் பகிர்வுகளும் பொறுப்புகளும் மாநில அரசுகளுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும். நிதிப் பகிர்வு முறையில் கூடுதல் நிதி மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.
- மிக முக்கியப் பிரச்சினை ஒன்றைப்பற்றி அதிமுக தேர்தல் அறிக்கை குறிப்பிடுகிறது: மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இப்போது மாற்றி அமைக்கப்பட்டால், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39-லிருந்து 31-ஆகக் குறைந்துவிடும் அபாயம் இருக்கிறது. தொகுதிகள் மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கான தற்போதுள்ள விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் குறைந்துவிடாமல் இருக்கத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கை கூறுகிறது.
- கல்வி, மருத்துவம் போன்ற மனிதவள மேம்பாட்டிற்கு உதவும் முக்கியத் துறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.
- இவையன்றி விவசாய மேம்பாட்டிற்காகவும், நீர்வள மேம்பாட்டிற்காகவும், தரிசு நில மேம்பாட்டிற்காகவும் பல திட்டங்களை அதிமுக தேர்தல் அறிக்கை பேசுகிறது.
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5%-லிருந்து 10%-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள ஏற்க முடியாதவற்றிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும். அறிஞர் அண்ணா கண்ட இருமொழிக் கொள்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் சரத்துகள் ஏற்புடையதல்ல; இந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
- அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உரிய காலத்தில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும்.
- உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தி, 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாநிலத்தில் வழிவகை செய்யப்படும். 'Overseas Manpower Development Corporation' என்பது நிறுவப்பட்டு இளைஞர்கள் திறன் மேம்பாடு செய்யப்படுவார்கள்.
இலவசங்கள் என்று இழிவுபடுத்துபவர்களின் நோக்கம் என்ன?
திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் நலத்திட்டங்கள், மகளிர் நலன், மாணவ-மாணவியர் நலன் பற்றிப் பேசும்போது, நாம் தமிழர் தேர்தல் அறிக்கை இவற்றைப் பற்றிப் பேசவில்லை. மாறாக இவற்றை இலவசங்கள் என்றும், இவற்றைப் பெறுவதே இழிவு என்றும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தொடர்ந்து பேசி வருகிறார். "அண்டா, குண்டா, மிக்ஸி எல்லாம் நான் தரமாட்டேன்... அதையெல்லாம் நீங்களே வாங்கிக் கொள்ளும்படி வேலையைத் தருகிறேன், அதற்குச் சம்பளம் தருகிறேன்" என்று பேசியிருக்கிறார்.
உயர் பணிகளில் அமர்ந்து மிகப் பெரிய தொகையைச் சம்பளமாகப் பெறக்கூடிய வழிகளை உருவாக்கித் தரும் திட்ட திராவிடக் கட்சிகள் பேசுகின்றன. பன்றி மேய்க்கவும், கழுதை மேய்க்கவும் இளைஞர்களைச் சீமான் அழைக்கும்போது, அதே இளைஞர்களை ஆட்சிப் பணி அதிகாரிகளாக, தொழில்நுட்பத் திறனாளர்களாக உருவாக்க திராவிடக் கட்சிகள் போட்டியிடுகின்றன. சீமான் வகையறாக்கள் 'இலவசம்' என்று பழித்தும் இழிவுபடுத்தும் மகளிர் நலத் திட்டம், பல லட்சம் இளைஞர்களைத் தொழில்நுட்ப நிபுணர்களாக மாற்றி இருக்கிறது. இளைஞர்கள் பெரிய தொழில் நிறுவனங்களில் மிகப்பெரிய சம்பளத்தில் வேலைவாய்ப்பினைப் பெற உதவி வருகின்றன. மாணவர்களைத் தொழில்நுட்பங்களில் ஈடுபடுத்தும் வகையில் 35 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்குதல் உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் அமைந்துள்ளன.
எந்த அரசாக இருந்தாலும் மக்களுடைய வரிப் பணத்தில்தான் அவர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாணவர்களுக்கும் மகளிருக்கும் செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் சமூக முதலீடு ஆகும். ஓர் ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலான தொகையைத் தாயால் வாங்கிக் கொடுக்க முடியாது. ஆனால் அதையே அரசாங்கம் செய்யும்போது ஒரு செல்வந்தர் வீட்டுப் பெண்ணுக்குச் சமமான வாய்ப்புகளைப் பெற்று மிக உயர்ந்த நிலையை அம்மாணவி அடைந்துவிடுகிறாள்.
கல்வி கற்கும்போது அதற்கான உபகரணங்கள் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளுக்கு எளிதாகக் கிடைத்துவிடுகின்றன. அதே பொருளை எளிய குடும்பத்துக் குழந்தைகளுக்கு அரசே வழங்குகிறது. இதனால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கல்வி மேம்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. தமிழ்நாடு அரசு வட மாநிலங்களை விட மேம்பட்டு நிற்பதற்குக் காரணம், கடந்த காலத்தில் மிக அதிக அளவில் கல்விக்கு ஊக்கம் அளித்து வந்திருப்பதுதான்.
இலவசங்கள் என்று இழிவாகப் பேசக்கூடிய பல திட்டங்கள் மகளிர் மேம்பாட்டிற்கும் கல்வி மேம்பாட்டிற்கும் பேருதவி செய்திருக்கின்றன. விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்றவை மக்களுக்கு வழங்கப்படுவதைச் சீமான் வகையறாக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். செல்வத்தில் புரளும் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு, செல்வந்தர்களின் மனைவி மக்களுக்குக் கிடைக்கக்கூடிய அந்த வசதிகள் ஏழை எளியோருக்குக் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். ஏழைக் குடும்பத்தவருக்கும் அந்த வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதுகூட முக்கியமில்லை; ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர் என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெண்களை ஆண்டாண்டு காலமாக அவர்கள் மீது சுமத்தப்பட்டு வந்திருக்கும் கடுமையான உழைப்பிலிருந்து விடுவிக்கிறது.
சிறையில் வ.உ. சிதம்பரனார் செக்கிழுத்தார் என்று பேசுகிறோம். அதற்கு ஈடான வேலையை ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் பல நூறு ஆண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பொருட்கள் வழங்கிய பிறகு அனைத்துக் குடும்பத்திலும் உள்ள பெண்களின் வேலை எளிதாகி இருக்கிறது; அவர்களுக்கு நேரம் மிச்சப்படுகிறது. அந்த நேரத்தைத் தங்களுடைய பொருளாதார மேம்பாட்டிற்குப் பயன்படுத்துகிறார்கள். சிலர் தங்களுக்குக் கிடைத்த இந்தப் பொருட்களை வைத்துச் சிறு தொழில்கள், சுய தொழில்களைத் தொடங்கி இருக்கிறார்கள். இட்லி மாவு அரைத்து விற்பது என்று தொடங்கிப் பல்வேறு சிறு தொழில்களைச் செய்கிறார்கள். இதையும், சுய உதவிக் குழுக்களையும் பயன்படுத்தித் தங்களை வசதிப்படுத்திக் கொண்ட மகளிரும் உண்டு. மக்கள் வழங்கும் வரிப் பணத்திலிருந்துதான் இந்தப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதை வழங்குவது அரசின் கடமையும் கூட. இவற்றை இலவசங்கள் என்று எள்ளி நகையாடுகிறவர்களுள் ஒரு பண்ணைத்தனம் ஒளிந்து கொண்டிருக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ₹1,000 வழங்கப்பட்டு வந்தது. இப்போது அது ₹2,000 என்று திமுக தேர்தல் அறிக்கை அறிவிக்கிறது. 1.31 கோடி பெண்கள் இந்தத் தொகையைப் பெற்று வந்திருக்கிறார்கள். 'ஊதியம் இல்லா வீட்டு வேலை' என்று அலட்சியப்படுத்தப்பட்ட நிலை மாறிப் பெண்களுக்கு ஒரு பொருளாதார சுதந்திரமும், சுயமரியாதை வாழ்வும் கிடைக்க இத்தொகை பயன்பட்டிருக்கிறது என்பதைக் கிராமப்புறப் பெண்களின் வாக்குமூலமே உறுதிப்படுத்துகிறது.
'மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வித் திட்டம்' என்பது வித்தியாசமானது. இது 'புதுமைப்பெண் திட்டம்' என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. திருமண நிதி என்ற பெயரில் பெண்களைப் படிக்க வைக்கும் ஓர் உத்தியைக் கலைஞர் கருணாநிதி 1989-இல் கையாண்டார். 8-ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் பெண்ணின் திருமணத்திற்கு ₹5,000 அளிக்கப்படும் என்றார். ₹5,000 என்பது 1989-இல் பெரிய தொகைதான். பெற்றோர்கள் தங்கள் பெண்களை எட்டாவது வரை படிக்க வைத்தால் ₹5,000 கிடைப்பது ஒரு உதவியாக இருக்கும் என்று கருதினார்கள்.
2009-இல் கலைஞர் கருணாநிதி பெண்கள் 10-ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் அவர்கள் திருமணத்திற்கு ₹25,000 என்று அறிவித்தார். இப்போது பெண்கள் 10-ஆம் வகுப்பு வரை படித்தார்கள். 2011-இல் செல்வி ஜெயலலிதா அம்மையார் காலத்தில் இத்தொகை ₹50,000-ஆகவும் 4 கிராம் தங்கமாகவும் மாற்றப்பட்டது. பிறகு 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. திருமண உதவித் திட்டம் இப்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் படித்துப் பட்டப்படிப்பு படிக்க வரும் பெண்களுக்கு மாதம் ₹1,000 என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் சிறப்பாக நடைபெற்றது. இப்போது உதவித் தொகை மாதம் ₹1,500 என்று உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது வியக்கத்தக்க மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது. கல்லூரியில் சேரக்கூடிய பெண்களின் எண்ணிக்கை 29% அதிகரித்திருக்கிறது.
2022-இல் அறிவிக்கப்பட்ட 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்று 2024 தேர்வில் வென்றவர்கள் 50 பேர். இந்த ஆண்டு ஆட்சிப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 பேரில் 56 பேர் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள். எதிர்காலத்தில் 5 லட்சம் பேர் பயிற்சி பெறுவார்கள் என்றும், மாதம் ஒவ்வொருவருக்கும் உதவித்தொகையாக ₹1,500 வழங்கப்படும் என்றும் திமுக தேர்தல் அறிக்கை கூறுகிறது. 2025-இல் ஆட்சிப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 56 பேராக இருந்தாலும், அத்தேர்வுகளுக்காகத் தங்களைத் தயார் செய்து கொண்டவர்கள் பிற உயர் பதவிகளில் அமர்ந்து விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இலவசங்கள் என்று இளக்காரமாகப் பேசப்படும் திட்டத்தின் பின்னால் சமூக இழிவு ஒழிப்பும், மிகப்பெரிய சமூக முதலீடும் திகழ்வது ஒளிந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு சமூக முதலீடு என்பதை மறுக்க முடியாது. இது பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகள் பாராட்டு எழுதியிருக்கின்றன. தமிழ்நாடு இப்போது "Leading state in human capital development" என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இத்திட்டங்களின் விளைவாக High literacy rate மற்றும் skilled workforce உருவாகியுள்ளதாகக் கட்டுரைகள் குறிப்பிடுகின்றன.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வருங்காலத் தமிழ்நாடு குறித்து இவ்வாறு மதிப்பீடு செய்கிறார்:
"4 trillion economy by 2047 if annual growth rate of 9% is sustained."
'ஓசைப்படாமல் ஒரு புரட்சி நடந்து கொண்டிருக்கிறது' என்று கருதலாம். பள்ளிப் பிள்ளைகளுக்குக் காலை உணவிடுவதைக் காணச் சகியாத பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பன அறிவாளர்களும், பார்ப்பனியத்தின் கைக்கூலிகளும் ஓலமிடுகிறார்கள். இன்று காலை உணவு பள்ளியில் சாப்பிடும் ஒவ்வொரு குழந்தையும் எதிர்காலத் தமிழகத்தின் மனிதவள முதலீடு என்பதை இவர்கள் உணரவில்லை. தந்தை தன் மகளுக்குக் கல்விக்கான உதவிப் பொருட்களை வழங்குவதற்கும், தமிழ்நாடு அரசு தன் மக்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை மற்றும் உதவித்தொகையை வழங்குவதற்கும் வேறுபாடு இல்லை.
மாநில உரிமைகள் குறித்து தேர்தல் அறிக்கைகள் என்ன பேசுகின்றன?
திமுக தேர்தல் அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது:
"சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, கூட்டாட்சிக் கருத்தியல், அதிக அதிகாரங்களைக் கொண்ட மாநிலங்கள், அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமை ஆகிய கொள்கைகளை முன்வைத்து, இன்றைய அரசியலமைப்பில் ஒன்றிய அரசில் அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. நடைமுறையில் இன்னும் அதிகமான அதிகார ஆக்கிரமிப்புகள் தற்போதும் தொடர்கின்றன. எனவே ஒன்றிய அரசின் அதிகாரங்களுக்கும், வரிவிதிப்பு உரிமைகளுக்கும் வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். நிதிப்பகிர்வில் 50 விழுக்காடு மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும். வளர்ந்த மாநிலங்களிலிருந்து அதிக வரிகள் வசூலிப்பது போல அந்த மாநிலங்களுக்கு உரிய நிதிப்பகிர்வும் அதிகமாக இருக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதி அரசர் சூரியன் சோப் குழு தனது அறிக்கையின் முதல் தொகுதியை அளித்துள்ளது. ஒன்றிய அரசின் மிதமிஞ்சிய அதிகாரக் குவிப்பையும் மாநில உரிமைகள் அதிவேகமாகப் பறிக்கப்படுவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. குழுவின் பரிந்துரைகளை நாடு முழுவதும் விவாதப் பொருளாக்கி, ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்கை தடுத்து நிறுத்தி, மாநில உரிமைகளை நிலைநாட்டிட அனைத்து நடவடிக்கைகளையும் திமுக மேற்கொள்ளும்."
மாநில சுயாட்சி என்ற தன் நீண்டகாலக் கோரிக்கையைத் திமுக தேர்தல் அறிக்கை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.
அதிமுக தேர்தல் அறிக்கை மத்திய-மாநில கூட்டாட்சி முறை பற்றிப் பேசுகிறது. மாநில அரசுகள் அதற்கான நிதி நிர்வாக உரிமையுடன் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்றும், அதற்கு ஏற்ப மாநில அரசுகளுக்கு உரிய நிதி நிர்வாகப் பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்ட வரம்புக்கு உட்பட்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மற்றும் பொறுப்புகளுடன் மாநில அரசுகள் சுதந்திரமாகச் செயல்படத் தேவையான நிதிப் பகிர்வுகளும் பொறுப்புகளும் மாநில அரசுகளுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும் என்றும், நிதிப் பகிர்வு முறையில் கூடுதல் நிதிப் பகிர்வை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துவதாக அதிமுக தேர்தல் அறிக்கை கூறுகிறது.
ஒரு முக்கியமான விடயத்தை அதிமுக தேர்தல் அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த ஆண்டு தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. தொகுதிகள் மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கான தற்போதுள்ள விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் குறைந்துவிடாமல் இருக்கத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறியிருப்பது முக்கியமான ஒரு பிரச்சினை குறித்தாகும்.
கல்வி, மருத்துவம் போன்ற மனிதவள மேம்பாட்டிற்கு உதவும் முக்கியத் துறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று கூறுகிறது. வழக்கமான மத்திய-மாநில உறவு பற்றிய கருத்தை அன்றிப் புதிதாக எதையும் அதிமுக தேர்தல் அறிக்கை முன்வைத்துவிடவில்லை. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கூட, 'ஏற்க முடியாதவற்றை மட்டும் ஏற்காமல் இருக்கும் நிலை' பற்றிப் பேசுகிறது. தமிழ்நாட்டிற்கு அத்தகைய கூறுகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், அறிஞர் அண்ணா கண்ட இருமொழிக் கொள்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் சரத்துகள் ஏற்புடையதல்ல என்றும் அதிமுக தேர்தல் அறிக்கை கூறி மகிழ்கிறது.
நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் தேர்தல் அறிக்கைக் கூறுகள் ஆர்.எஸ்.எஸ்.-இன் திட்டங்களை உள்ளடக்கியவை
இந்தியாவில் இந்து ராஷ்டிரத்தை விரைவில் படைத்துவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. அதற்கான திட்டங்களைப் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் மூலம் இந்தியா முழுவதும் மக்களிடம் கருத்துப் பரவல் செய்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ்., பாஜக தலைவர்கள் நீண்ட காலமாக இந்தியாவில் தற்போது இருக்கும் நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஒழித்துக் கட்டிவிட்டு, அதற்குப் பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் உள்ள மக்கள் நேரடியாக வாக்களித்து அனைத்து அதிகாரங்களையும் உடைய அதிபர் என்ற அந்த ஒற்ற மனிதனிடம் ஒப்படைத்துவிடக்கூடிய 'அதிபர் ஆட்சி முறையை' (Presidential System) வலியுறுத்தி வருகிறார்கள். தாங்கள் நினைத்தபடி எந்தச் சட்டத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்திக் கொள்ள முடிவதில்லை என்பதால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதிபர் ஆட்சி முறையை விரும்புகிறது.
தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் பேசாத ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் எதிர்கால இந்து ராஷ்டிரத்தின் அரசு முறையான அதிபர் முறையை நாம் தமிழர் கட்சி மட்டுமே தன் தேர்தல் அறிக்கையில் பேசி இருக்கிறது. சாதாரண மக்களின் பார்வையிலிருந்தும், மேலோட்டமாகப் பார்க்கும் அரசியல் தலைவர்களின் பார்வையிலிருந்தும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பேசி வரும் திட்டமாகும். இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள நாடாளுமன்ற ஜனநாயக முறையைத் தகர்த்து, இந்த மதவெறியர்களின் ஆட்சியையும், இந்தி மொழி ஏகாதிபத்தியத்தையும், இந்து ஏகாதிபத்தியத்தையும் நிரந்தரமாக நிறுவிவிடக்கூடிய திட்டம் இதில் ஒளிந்து கொண்டிருக்கிறது.
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும் நாம் தமிழர் கட்சி இதே அதிபர் ஆட்சி முறையை வலியுறுத்தி இருந்தது. ஓங்கி குரல் எழுப்பிக்கொண்டு ஆர்ப்பரிக்கும் இளைஞர் கூட்டத்திற்கு நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கும் (Parliamentary Democracy) அதிபர் ஆட்சி ஜனநாயக முறைக்கும் (Presidential Democracy) எந்த வேறுபாடும் தெரியாது. தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் ஏற்காத ஆர்.எஸ்.எஸ்.-இன் திட்டமான குடியரசுத் தலைவர் அல்லது அதிபர் முறையை நாம் தமிழர் கட்சி தன் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் (2024) ஏற்றுப் பேசியிருக்கிறது:
"இந்திய ஒன்றியம் என்பது ஒரு குடியரசு நாடு. ஆனால் இந்நாட்டின் முதல் குடிமகனாகிய குடியரசுத் தலைவரையே குடிமக்களால் நேரடியாகத் தேர்வு செய்ய முடியாத நம் அமைப்பு முறை குடியரசு கோட்பாட்டிற்கு நேர் எதிரானதாகும். அனைத்துச் சட்டங்களும் குடியரசுத் தலைவரின் கையொப்பத்தினாலேயே செயலாக்கம் பெறுகின்றன. மக்களால் தேர்வு செய்யப்படக்கூடிய ஒருவர் மீண்டும் மக்களைச் சந்தித்துதான் வெற்றி பெற வேண்டும் என்ற தேவை இருக்கின்ற வரைதான் அம்மக்களின் நலனுக்காகச் செயலாற்றுவார். எனவே குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்தலின் வழியே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் கொள்கை முடிவாகும்."
ஒரு அபாயகரமான திட்டத்தைச் சூழ்ச்சியாகப் பேசி மக்களை ஏற்க வைக்கும் உத்தியை நாம் தமிழர் கட்சி தலைமை செய்கிறது.
சட்டமன்றத் தேர்தல் அறிக்கை - 2026-இல்:
"இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர். அவரே நாட்டின் தலைவராகவும் உள்ளார். ஆனால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இது மக்களாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது. எனவே நாட்டின் குடியரசுத் தலைவரை மக்களே தேர்ந்தெடுக்கும்படியான தேர்தல் முறை இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் அரசு இந்திய ஒன்றியத்தின் முன் வைக்கிறது"
என்று கூறுகிறது. இத்திட்டமே ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்திய ஒன்றிய பாஜக அரசுடையதுதான். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஆடிட்டர் குருமூர்த்தி வகையறாக்கள் கூறியதைத்தான் சீமான் செய்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அறிவாளரும், ஆர்.எஸ்.எஸ். (சர்சங்கசாலக்) கடந்தகாலத் தலைவருமாகிய குப்பஹல்லி சீதாராமையா சுதர்சன்:
"India should consider switching to a presidential form of government for stability"
என்று பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ்.-இன் தலைவர் கோல்வால்கர் (1940 - 1973), மேற்கத்திய ஜனநாயக முறை இந்தியப் பாரம்பரியத்திற்குப் பொருந்தாது என்று கூறினார்.
எல்.கே. அத்வானி, இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயகம் பலவீனமாகச் செயல்படுகிறது; குடியரசுத் தலைவர் முறைக்கு மாறுவது பற்றி விவாதம் தேவை என்றார். சுப்பிரமணியன் சுவாமி இந்தியாவில் அமெரிக்கா போன்ற குடியரசுத் தலைவர் முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்றார். அமெரிக்காவில் ஒரே மொழி; அங்கு மதப் பிரச்சினையும் இல்லை. ஆகவே அங்கு அதிபர் ஆட்சிமுறை இருப்பதில் சிக்கல் எழவில்லை. ஆனால் இந்தியா பல்வேறு சமயத்தவர்கள் வாழும், பல மொழிகள் பேசப்படும் பெரிய துணைக்கண்டம். அந்தந்த மாநிலத்தில் உள்ள மொழியின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை விடச் சிறந்த முறை இருக்க முடியாது என்பதால் தான், இந்திய அரசியல் சட்டத்தை எழுதும்போது அரசியல் சட்ட நிபுணர்களும் இந்திய அரசியல் ஆளுமைகளும் நாடாளுமன்ற ஜனநாயக முறையைத் தேர்வு செய்தார்கள்.
வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது ஒரு படி முன்னால் சென்று, நாடாளுமன்ற முறையைக் கைவிட்டு அதிபர் ஆட்சி முறைக்கு மாறுவதைப் பரிசீலிக்கும் வகையில் ஒரு குழுவையே அமைத்தார். குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் தம் கண்டனத்தைப் பதிவு செய்தவுடன், அக்குழுவின் ஆய்வு வரம்பு மாற்றி அமைக்கப்பட்டது. இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அதிபர் ஆட்சி முறையை ஏற்கும் வகையில் இளைஞர்களின் மனநிலையை மாற்றி அமைப்பதற்காகத் தங்களுடைய ஆட்கள் மூலம் கருத்துப் பரவல் செய்து வருகிறார்கள்.
குடியரசுத் தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால், இந்தியாவில் இந்தி பேசுகிற ஒருவர்தான் குடியரசுத் தலைவராக வர முடியும்; இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர்தான் குடியரசுத் தலைவராக வர முடியும். அவர்களுக்கு வேறு மதத்தவரின், வேறு மொழியினத்தவரின் ஆதரவு தேவையில்லை; இந்திக்காரர்களுக்கும் இந்து மதத்தவருக்கும் மட்டுமே போதும்.
இந்தியாவில் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 79.8% இந்துக்கள்; முஸ்லிம்கள் 14.2%; கிறிஸ்தவர்கள் 2.3%. இந்துக்களுக்கு இந்த மதவெறி பிடித்த சாமியார்கள் தலைமையேற்கிறார்கள். இந்தியாவில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 43.63%, இந்தி பேச தெரிந்தவர்கள் 57%. இந்தியாவில் பாஜக நேரடியாக 12 மாநிலங்களில் ஆட்சி நடத்துகிறது. பாஜக கூட்டணி மேலும் 5 மாநிலங்களில் ஆட்சி நடத்துகிறது; இவையன்றி, லோக்சபா தேர்தலில் நான்கு மாநிலங்களில் தன்னுடைய பலத்தைப் பாஜக நிரூபித்திருக்கிறது. 2024 தேர்தலில் பாஜக 240 இடங்களைக் கைப்பற்றியது. அதன் கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஜனநாயக முறையிலேயே சர்வாதிகாரச் சட்டங்களையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு அதற்கு இருக்கிறது. இந்நிலையில்தான் எப்படியாவது அதிபர் ஆட்சி முறைக்கு இந்திய அரசியல் சட்டத்தைக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக முயற்சி செய்து வருகின்றன. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசுகிற 'ஆட்சி முறை மாற்றம்' என்பதும் இதுதான். இதை ஒருபோதும் அனுமதித்துவிடக் கூடாது.
இது ஆர்.எஸ்.எஸ்.-இன் வேலைத்திட்டத்தில் மிக முக்கியமானது. தமிழ்நாட்டில், இந்தச் சூழ்ச்சிகரத் திட்டத்தைத் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தங்களுடைய கொள்கை முடிவாக அறிவித்திருக்கும் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. இந்த அபாயத்தை உணராதவர்கள்தாம் கைத்தட்டுகிறார்கள்; ஆர்ப்பரிக்கிறார்கள்; குதூகலம் அடைகிறார்கள். தமிழ்நாட்டை, தமிழினத்தை, தமிழ் மொழியைக் காக்க வேண்டும் என்று நினைக்கும் எவரும் குடியரசுத் தலைவர் முறை என்ற திட்டத்தை எவர் கைக்கொண்டாலும் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும். கிடைத்த உரிமைகளைக் கோட்டை விட்டுவிட்டு, பிறகு குமுறிக் கதறி அழுவதில் பயனில்லை. அரசியல் சட்டம் நமக்கு வழங்கி இருக்கக்கூடிய அத்தனை உரிமைகளும் கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போகும் என்பதை உணர வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தலைவர்கள் அறிவாளிகள்தாம். பேச்சிலும் எழுத்திலும் வல்லவர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு தங்கள் சூழ்ச்சிகரத் திட்டங்களை இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த முயன்று வருகிறார்கள். இந்தியாவுக்கு நாடாளுமன்ற ஜனநாயக முறை ஒத்துவராது என்றும், அது தோற்றுப்போய்விட்டது என்றும், அதிபர் ஆட்சி முறையைக் கொண்டுவர வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் பாஜக தலைவர்களும் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
சீமான் - மணியரசன் பேசும் தமிழ்த் தேசியம் பல்லிளிக்கிறது!
அறிஞர் அண்ணாவைத் தொடர்ந்து 1969-இல் ஆட்சிப் பொறுப்பேற்ற கலைஞர் மு.கருணாநிதி, 1969-இல் மத்திய - மாநில உறவுகளைப் பரிசீலனை செய்வதற்கு ஒரு குழுவினை தமிழக அரசு நியமிக்கும் என அறிவித்தார். அதன்படியே நீதி அரசர் ராஜமன்னார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரையின் அடிப்படையில் 1974 ஏப்ரல் 16-ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. தீர்மானத்தின் மீது ஐந்து நாட்கள் விரிவான விவாதம் நடத்தப்பட்டு 1974 ஏப்ரல் 20-ஆம் நாள் மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானம் முக்கியமானது; இந்தியாவில் உள்ள ஏனைய மாநிலங்களுக்கும் முன்னோடியானது. தீர்மானம் இப்படியும் பேசுகிறது:
"நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துத் தொடர்புகள், நாணய செலாவணி ஆகியவை தொடர்பான அதிகாரங்களை மட்டும் கொண்ட மத்திய அரசும், எஞ்சிய அதிகாரங்கள் உட்பட ஏனைய அதிகாரங்கள் அனைத்தும் கொண்டுள்ள மாநில அரசுகளும் உள்ள உண்மையான கூட்டாட்சியை நிறுவும் இலட்சியத்துடன், தமிழ்நாடு அரசு அரசியலமைப்புச் சட்ட பிரிவுகளிலும் அதிகாரப் பட்டியல்களிலும் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை வகுத்துத் தொகுத்துள்ளது."
கலைஞர் கருணாநிதியின் அரசு முன்வைத்த இந்த மாநில சுயாட்சி தீர்மானம் என்பது மாநில சுயாட்சி தீர்மானம் மட்டுமே. இதில் தமிழ்த்தேசியத்தின் இலக்கு இல்லை. கலைஞர் கருணாநிதியின் மாநில சுயாட்சி தீர்மானத்தைக் களவாடி, அது நாங்கள் சொந்தமாகக் கண்டுபிடித்தது போலவும், அதுதான் தமிழ்த்தேசியம் என்பது போலவும் நாம் தமிழர் கட்சி நீட்டி முழங்குவது நகைப்புக்குரியது. கலைஞர் கருணாநிதி அரசு காலத்தில் திமுக நிறைவேற்றிய மாநில சுயாட்சி தீர்மானத்தை ஆதரிக்கிறோம் என்றுதான் சீமானும், ஐயா மணியரசனும் பேசியிருக்க வேண்டும். அதே மாநில சுயாட்சி தீர்மானத்தைத் தான் இவர்கள் பேசுகிறார்கள்; ஆனால் அதுதான் தமிழ்த்தேசியம் போல நாடகமாடுகிறார்கள்.
"நாம் தமிழர் கட்சிக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்?" என்று ஐயா மணியரசன் எழுதியுள்ள ஒரு அறிக்கையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைப்பாடாக இப்படிக் கூறுகிறார்:
"இறையாண்மையுள்ள தேசிய இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றி அமை! அப்படி உருவாகும் இந்தியக் கூட்டரசுக்குப் பாதுகாப்புத் துறை, வெளிநாட்டு உறவு, நாணய அச்சடிப்பு போன்ற சில அதிகாரங்கள் மட்டுமே இருக்க வேண்டும்; மற்ற அதிகாரங்கள் அந்தந்தத் தேசிய இன அரசுகளுக்கு இருக்க வேண்டும்..."
என்று கூறியிருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தல் அறிக்கை 2026-இல் நாம் தமிழர் கட்சி இவ்வாறு கூறுகிறது:
"ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி - என்ற முழக்கத்தோடு, அனைத்து வகையான துறைகளுக்கும் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்கிற வகையில், இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டுவரப் பாடுபடுவோம்.
ஒன்றிய அரசிற்குப் படைத்துறை, நாணயம், உள்ளூர் தொடர்வண்டி நீங்கலாக மாநிலங்களுக்கிடையில் பயணிக்கிற தொடர்வண்டி, மாநில அரசின் ஒப்புதலோடு கூடிய வெளியுறவுத்துறை - போன்ற துறைகளைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்துகிற உரிமை மாநில அரசுக்கு உண்டு என்கிற நிலையை உரிய சட்ட மாற்றங்கள் மூலம் ஏற்படுத்த நாம் தமிழர் அரசு பாடுபடும்."
ஐயா மணியரசன் அவர்களும், சீமான் அவர்களும் ஒரே முகாமைச் சேர்ந்தவர்கள் என்பதில் சந்தே சந்தேகமில்லை. இவர்கள் அனைவருமே கலைஞர் கருணாநிதியின் மாநில சுயாட்சி தீர்மானத்தைக் களவாடித்தான் தங்கள் தத்துவமாக வைத்துக் கொள்கிறார்கள் என்பதை அவர்களே வாக்குமூலத்தின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் பேசுவது கலைஞர் கருணாநிதி அவர்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மாநில சுயாட்சி தீர்மானம்தானே ஒழிய, இதுவே தமிழ்த் தேசிய இலக்கு ஆகிவிடுமா? ஆம் என்று கூறினால், 1974 சட்டமன்ற மாநில சுயாட்சி தீர்மானம் தமிழ்த்தேசிய தீர்மானமா? அவ்வாறெனில் கலைஞர் கருணாநிதி தமிழ்த்தேசியவாதியா? ஐயா மணியரசன் - சீமான் ஆகியோர் கலைஞர் கருணாநிதி வழியில்தான் நடந்து கொண்டிருக்கிறார்களா? அவர்தான் இவர்களுக்குத் தமிழ்த்தேசியக் குருவா? தமிழ்த் தேசியம் பேசுவதாகக் கூறிக்கொண்டு, திமுகவின் கடந்த கால மாநில சுயாட்சி கோரிக்கையை முன்னிறுத்துவது சரிதானா?
ஐயா மணியரசன் தன் அறிக்கையில் மேலும் கூறுகிறார்:
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய, உலகின் மூத்த குடியாக விளங்கும் தமிழர்களின் தமிழ்த்தேசியத்தை ஏந்திச் செந்தமிழன் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. பாரத்தீய, திராவிடத்தீய அபாயகர ஆதிக்கம் கலக்கும் அடிமை அரசியலில், நாம் தமிழர் கட்சி மூழ்கவில்லை!"
"தமிழ்த் தேசியப் பேரியக்கம் உங்களை உறவுரிமையுடன் கேட்டுக் கொள்கிறது. நாம் தமிழர் கட்சியின் 'விவசாயி' சின்னத்தில் வாக்களியுங்கள்! அக்கட்சியை ஆட்சியில் அமர்த்துங்கள்!" என்கிறார்.
ஐயா மணியரசன் முன்வைக்கும் "நான்கு அதிகாரங்கள் தவிரக் கோட்பாடு" என்பதுதான் தமிழ்த் தேசியத்தின் இலக்கா? அதுதான் இவர்கள் பேசும் தமிழ்த் தேசியத்தின் அடிப்படையா? இதைத்தானே முன்பு காங்கிரஸ்காரர்களும் பேசினார்கள்; திராவிடக் கட்சிக்காரர்களும் பேசினார்கள்! "திராவிடத்திய அபாயகர ஆதிக்கம் சுமக்கும் அடிமை அரசியலில் நாம் தமிழர் கட்சி மூழ்கவில்லை" என்று ஐயா மணியரசன் சான்று வழங்குகிறாரே... திராவிட இயக்கமும் திமுகவும் நிர்ணயித்த அதே இலக்கைத்தானே சீமான் மட்டுமின்றி, ஐயா மணியரசனும் தூக்கிச் சுமக்கிறார்!
கூடுதலாக, இப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வகுத்திருக்கும் இந்தியாவில் நாடாளுமன்ற ஆட்சி முறையை ஒழித்துக் கட்டிவிட்டு அதிபர் ஆட்சி முறையை நிறுவுவது என்ற நாசகாரத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் சீமானுக்கு அருந்துணையாக மணியரசன் ஐயா களமிறங்கி இருக்கிறார். ஐயா மணியரசன் அது ஆர்.எஸ்.எஸ். திட்டம் என்பதை அறிந்துதான் ஆதரிக்கிறார். "தமிழ் இந்து"வாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒருவர், இந்தியாவுக்கு அதிபர் முறையை ஆதரிப்பதில் வியப்பொன்றும் இல்லை.
ஆர்.எஸ்.எஸ்.-இன் மொழிக் கொள்கையே நாம் தமிழர் கட்சியின் மொழிக் கொள்கை!
இவர்கள் முன்நிறுத்தும் மொழிக் கொள்கை (தேர்தல் அறிக்கை பக்கம் 315) ஆர்.எஸ்.எஸ்.-இன் இலக்கிற்கு மிக நெருக்கமானது. மும்மொழித் திட்டத்தைத்தான் இவர்கள் மறைமுகமாக வலியுறுத்துகிறார்கள். மூன்று மொழிகள் கற்பிக்கப்படும் என்று பேசிவிட்டு, அது ஒரு மொழிக் கொள்கை என்று பித்தலாட்டம் வேறு செய்கிறார்கள். திராவிடக் கட்சிகள் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக நிற்கின்றன. நாம் தமிழர் கட்சி ஆவணம் இப்படிப் பேசுகிறது:
"தமிழ் பயிற்று மொழியாகவும், ஆங்கிலம் கட்டாயப் பாட மொழியாகவும், உலகின் அனைத்து மொழிகளும் விருப்ப மொழியாகப் பயிற்றுவிக்கப்படும்."
இங்கே இந்தி கற்பிக்கத்தான் ஆசிரியர்கள் கிடைப்பார்களே ஒழிய, காங்கோ காட்டுக் குள்ளர்களின் மொழியைக் கற்பிக்க ஆசிரியர்கள் கிடைக்க மாட்டார்கள். உலகின் எந்த மொழி மக்களால் விரும்பியேற்கப்படும்? ஆங்கிலம், பிரெஞ்சு அல்லது ஜெர்மன் மொழி மட்டுமே. மற்றபடி இங்கே இந்திதான் மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும் என்பது தெரிந்துதான் சீமான் இந்த மொழிக் கொள்கையை வகுத்திருக்கிறார். இதைத்தான் ஐயா மணியரசனும் ஆதரிக்கிறார்.
இவர்களுடைய அதிகபட்ச தமிழ்த் தேசிய இலக்கு அரசியல் சட்டப் பிரிவு 370-ஆம்!
நாம் தமிழர் தேர்தல் அறிக்கை (பக்கம் 431) இப்படிப் பேசுகிறது:
"இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 போன்றதொரு சட்டத்தைத் தமிழ்நாட்டிற்கு உருவாக்கிட அனைத்து வழிகளிலும் நாம் தமிழர் அரசு உறுதியாகத் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுக்கும். இதன் மூலம் ஒன்றிய அரசின் சட்டங்கள் எதுவும் தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது..."
இந்திய அரசியல் சட்டக்கூறு 370 என்ன ஆனது? காஷ்மீரின் நிலை என்ன ஆனது? என்பதுகூட இவர்களுக்குத் தெரியவில்லை. காஷ்மீர் இன்று மாநிலத் தகுதியையே இழந்து நிற்கிறது. பிரிவு 370 ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டது. ஒன்றிய அரசு நினைத்தால் ஒரு மாநிலத்தை எத்தனை கூறுகளாக வேண்டுமானாலும் பிரிக்கலாம். தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்றார்கள்; இப்போது சிலர் ஐந்தாகப் பிரிக்க வேண்டும் என்கிறார்கள். அவற்றுக்கு 'ஜனபதா' (Janapada) என்று பெயரிட ஆர்.எஸ்.எஸ். காத்திருக்கிறது.
இந்நிலையில்தான் சீமான் தமிழ்நாட்டிற்கு ஐந்து தலைநகரங்கள் வேண்டும் என்று பேசுகிறார். கணினி மூலம் இணையதளத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்கே கணக்கைக் காட்டுகிறார்கள். அனைத்துத் துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் ஒரே இடத்தில் இருப்பது மிகப்பெரிய நிர்வாக வசதி. சுல்தான்கள் காலத்தில் இருந்தது போல ஆங்காங்கே கோட்டைகளைக் கட்டி, அங்கே ஆளுநர்களை நிறுத்த வேண்டிய அவசியமே இப்போது இல்லை. புதிதாக எதையாவது சொல்லிவிட வேண்டும் என்பதற்காகத் தேவையில்லாததையெல்லாம் பேசுகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் விவேகானந்தர் நினைவிடத்தை மையமிட்டுப் பெருந்திரளாகக் குடியேறிவிட்டார்கள். தென்னிந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். தலைமையகமாகவே கன்னியாகுமரியை மாற்றி இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் தனிநபருக்குச் சொந்தமானதை நீக்கிவிட்டு, தமிழ்த் தேசியவாதிகள் மிகக் கவனமாக நிமிர்ந்து நின்று போராட வேண்டிய சூழல் இது. ஆனால் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் இளைஞர்களை முடக்குவாதத்திற்குள் முக்கி எடுக்கிறார்கள்.
இந்திய அரசியல் சட்டச் சரத்து 370 மூலம் தனித்தகுதி வழங்கி இருந்த நிலையில்தான் காஷ்மீரத் தேசியவாதிகள் தங்களுடைய சுயநிர்ணய உரிமை கோரி ஆயுதம் ஏந்திப் போராட்டக் களத்தில் நின்றார்கள். அதுதான் காஷ்மீரத் தேசியம்! அதே இலக்குதான் தமிழ்த் தேசியத்திற்கும் இருக்க முடியும். காஷ்மீர் மக்கள் சரத்து 370-க்காக மட்டுமா போராடினார்கள்? அதை ஏற்காமல் தாண்டியும் தான் போராடினார்கள். ஆனால் இங்கு போராட்டத்தின் இலக்கே சரத்து 370 தான் என்கிறார்கள் சனாதனத் தமிழ்த் தேசியவாதிகள்.
நவோதயா பள்ளிகள் குறித்த நிலைப்பாடு:
ஆர்.எஸ்.எஸ்.-இன் இன்னொரு திட்டத்தையும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை புதைத்து வைத்திருக்கிறது. நவோதயா பள்ளிகள் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியா முழுவதும் திணிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் பெரிய எதிர்ப்பு எழுந்தது. 1986-இல் எம்.ஜி.ஆர். முதலமைச்சராகவும், கலைஞர் கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தபோது நவோதயா பள்ளிகளை எதிர்த்துப் பெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. இதன் விளைவாக, தமிழ்நாடு அரசு நவோதயா பள்ளிகளை அமைப்பதை ஏற்கவில்லை. இப்போதும் கூட, இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே.
சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில், "தமிழ்நாடு அரசு நவோதயா பள்ளிகளுக்கு இடம் மட்டும் ஒதுக்கித் தாருங்கள், போதும்" என்று நீதிபதி நாகரத்னா கேட்டுக் கொண்டும்கூட அதை மறுத்து மீண்டும் தமிழ்நாடு அரசு மனு செய்திருக்கிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்.-இன் கூலிப்படையாக நாம் தமிழர் கட்சியைக் களம் இறக்கித் தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சீமானின் தேர்தல் அறிக்கை, நவோதயா பள்ளி குறித்து இப்படிக் குறிப்பிடுகிறது:
"தமிழ்நாட்டில் உள்ள நவோதயா மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாட மொழியாகப் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்."
இதன் பொருள் என்ன? தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் கொண்டுவரப்படும்; அதில் தமிழும் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும் என்பதுதானே! நவோதயா பள்ளிகளே இல்லாத நிலையில் நவோதயா பள்ளிகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசும் நாம் தமிழர் கட்சி, ஆர்.எஸ்.எஸ். ஆடிட்டர் குருமூர்த்தி வகையறாக்களுக்கு விசுவாசமாகவே தேர்தல் அறிக்கையைத் தயாரித்து இருக்கிறது.
குலத்தொழில், குலதெய்வத் தொழில் ஆர்.எஸ்.எஸ். திட்டம் இல்லையா?
சாதி அடிப்படையில் மக்கள் மீது திணிக்கப்பட்டிருந்த குலத்தொழிலை ஒழித்துக் கட்டப் பல தலைவர்கள் பாடுபட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இப்போது பாரதிய ஜனதா அரசு 'விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் தருகிறோம், குலத்தொழிலைச் செய் என்று கூறி மீண்டும் குலத்தொழிலுக்குள் ஓரளவு சமூக விடுதலை பெற்றிருக்கும் மக்களைத் திணிக்கப் பார்க்கிறது. எசமானர்களின் கட்டளையை ஏற்று, "குலத்தொழிலைச் செய்! அது குலத்தொழில் அல்ல, குலதெய்வத் தொழில்!" என்கிறார் சீமான்.
ஆடு, மாடு மேய்ப்பதை அரசாங்க வேலை என்கிறார் சீமான். "வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை; ஆடு, மாடு வளர்த்தல், தேனீக்கள் வளர்த்தல், நாட்டுக்கோழி வளர்த்தல், கழுதை வளர்த்தல், பன்றி வளர்த்தல் எல்லாவற்றையும் அரசு வேலையாக மாற்றுவேன்" என்கிறார். அவர் சொல்லுகிற கணக்குப்படியே, தமிழ்நாட்டில் இருக்கும் நிலப்பரப்பில் தனிநபருக்குச் சொந்தமானதை நீக்கி, மீதியுள்ளவற்றில் ஆறு, குளம், ஏரி, சாலை எனப் பொதுப் பயன்பாட்டில் இருப்பவற்றையும் கணக்கிட்டு நீக்கி, மீதியுள்ளவற்றில் பண்ணைகள் அமைக்க உள்ள வாய்ப்புகளையும் பரிசீலித்தால் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க முடியும்? எத்தனை லட்சம் பேராக இருந்தாலும் அரசு வேலை கொடுப்பேன் என்கிறார் சீமான்; அதற்கான சாத்தியமான திட்டத்தை அவரால் வழங்கவே முடியாது.
சீமான் பன்றி வளர்ப்பதையும் கழுதை வளர்ப்பதையும் அரசு வேலை என்கிறார். ஆனால் திராவிடக் கட்சிகளோ, தொழில்நுட்ப விற்பன்னர்களாக இளைஞர்களை மாற்றும் முயற்சியில் இருக்கின்றன. கல்லூரிக்குப் படிக்க வந்தால் மாதம் ₹1,500 என்று கூறுவது சிலருக்கு இலவசமாகத் தோன்றலாம்; ஆனால் இத்திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு உயர்கல்விச் சேர்க்கை 29 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஆய்வாளர்கள் இன்னும் பத்து ஆண்டுகளில் இத்திட்டம் தொடரப்படுமானால் தமிழ்நாட்டின் கல்வியறிவு ஐரோப்பாவுக்கு இணையாக இருக்கும் என்று பதிவு செய்கிறார்கள். இப்போது இருக்கும் ஆண்டு வளர்ச்சி விகிதம் 9 விழுக்காடு தொடருமானால் 2047-இல் 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என்று பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறுகிறார்.
முடிவுரை:
ஆர்.எஸ்.எஸ்.-இன் அரசியல் பிரிவான பாஜகவின் பாசிச அரசு 'இந்து ராஷ்டிரம்' நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தி இருக்கிறது. அதற்கான திட்டங்கள் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ளன. இதைத்தான் சீமானும், ஐயா மணியரசனும் முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
தமிழ்த் தேசிய இனம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். வெறுஞ்சொல்லாடல்களையும், கதாநாயகத்தனமான உடல் மொழியையும், அடிவயிற்றிலிருந்து ஆக்ரோஷமாகக் கத்தும் மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் வசனங்களையும் கேட்டு யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு எடுக்கக் கூடாது. தமிழ் மக்கள் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து, பாசிச பாஜகவையும் அதன் நிழல் அமைப்பான நாம் தமிழர் அமைப்பையும் நிராகரிக்க வேண்டும். தமிழகத்தின் வருங்காலத் தலைமுறையின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
தமிழ்த் தேசியர்களைப் பொறுத்தவரை, இறையாண்மை உள்ள தமிழ்த் தேசம்தான் இலக்கு. அந்த இலக்கை எட்டுவதற்கு முன் உள்ள இடைப்பட்ட காலத்தில், இப்போது இருக்கும் தமிழகத்தைச் சிதைத்து இல்லாமலே ஒழித்துவிட அனுமதித்துவிடக் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சூழ்ச்சிகள் செய்யக் காத்திருக்கும் இந்து-இந்தி ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்தும், இந்து ராஷ்டிர சனாதனிகளிடமிருந்தும், பார்ப்பன பாசிவாதிகளிடமிருந்தும், ஆர்.எஸ்.எஸ்.-இன் நிழல் அமைப்புகளிடமிருந்தும் தமிழகத்தைக் காக்கும் வகையில் மக்களுக்குச் சரியான வழிகாட்டுதலை வழங்கும் கடமை தமிழ்த் தேசியர்களுக்கு இருக்கிறது.
- பேராசிரியர் த.செயராமன்