எல்லோரும் அறிந்த கதையிலிருந்து தொடங்குவோம். யானையைப் பார்த்த குருடர்களில் காலைத் தொட்டவன் தூண் என்றும், வயிற்றைத் தொட்டவன் சுவர் என்றும், வாலைத் தொட்டவன் கயிறு என்றும், காதைத்தொட்டவன் முறம் என்றும் கூறினார்களாம். அதுபோல எரியும் மணிப்பூர் சிக்கல் குறித்து அவரவர் சார்ந்துள்ள வர்க்க நலனிலிருந்து விளக்கப்படுகிறது. தமிழ்த் தேசிய இன பாட்டாளி வர்க்கத்தின் சார்பில் அதன் வர்க்க நலனிலிருந்து விளக்குவோம்.

மணிப்பூர் :

வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அசாம், மேகாலயா, நாகலாந்து, அருணாசலப் பிரதேசம், மிசோரம், திரிபுரா ஆகியன ஏழு சகோதரிகள் என்றும் இதனுடன் சேர்த்து சிக்கிம் ஒரு சகோதரர் என்றும் இந்திய ஆளும் வர்க்கத்தால் அழைக்கப்படுகின்றன. வடக்கே நாகலாந்து, தெற்கே மிசோரம், மேற்கே அசாம், கிழக்கே மியான்மருடன் (பர்மாவுடன்) அனைத்துலக எல்லைகளைக் கொண்டுள்ளது. 2016-க்கு முன்னர் 9 மாவட்டங்களும் பிறகு 7 புதிய மாவட்டங்களுடன் தற்போது 16 மாவட்டங்களைக் கொண்டது. 8,621 சதுரமைல் பரப்பளவைக் கொண்டது. இதன் தலைநகரம் இம்பால்.

2011 மக்கள் தொகை கணக்கின்படி மொத்த மக்கள் தொகையில் மெய்தி மக்கள் 55 விழுக்காடும் 34 குழுக்களில் பழங்குடி மக்கள் 45 விழுக்காடும் உள்ளனர். மத அடிப்படையில் இந்துக்கள் 41.39 விழுக்காடும் கிறித்தவர்கள் 41.29 விழுக்காடும் இசுலாமியர்கள் 8.40 விழுக்காடும் பௌத்தர்கள் 0.25 விழுக்காடும் சமணர்கள் 0.06 விழுக்காடும் சீக்கியர்கள் 0.05 விழுக்காடும் பிறர் 8.19 விழுக்காடும் மத மற்றவர்கள் 0.38 விழுக்காடும் உள்ளனர். மெய்தி மக்கள் 28.5 இலட்சம் என்றால் அதில் 2 இலட்சம் பேர் மட்டும் கிறித்தவர்களாகவும் உள்ளதுடன் மேலும் பிற மதங்களைப் பின்பற்றுகின்றவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பழங்குடிகளில் பெரும்பாலோர் கிறித்தவர்கள் உள்ளனர்.manipur violence 394பழங்குடிகளில் பெரும்பான்மையினர் நாகா, குக்கி, மிசோ ஆகியோர் ஆவர். மெய்தி மக்களின் மொழி மணிப்பூர். பழங்குடிகளின் மொழி அந்தந்த பழங்குடி மொழியுடன் ஆங்கிலமும் பரவலாக பேசுகின்றனர்.

ஆட்சி அதிகாரத்தை பொருத்த அளவில் சமவெளிப்பகுதியில் 10 விழுக்காட்டு நிலங்கள் மெய்தி மக்களிடமும் 90 விழுக்காட்டு நிலங்கள் பழங்குடி மக்களிடமும் உள்ளன. 60 சட்டமன்றத் தொகுதிகளில் 40 மெய்தி மக்களிடமும், 20 பழங்குடி மக்களிடமிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜ.எ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் அமைச்சரவை அனைத்திலும் 90 விழுக்காடு மெய்தி மக்களே மேலாண்மை செலுத்துகின்றனர். 1992 இல் மண்டல் குழுவின் பரிந்துரை மெய்தி மக்களை பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் அறிவித்தது. மலைவாழ் பழங்குடியினருக்கு (ST) பிரிவில் 31 விழுக்காடு இட ஒதுக்கீடு இருந்தும் அரசுப் பணிகளில் 5.7 விழுக்காடு மட்டுமே உள்ளனர்.

இந்து ராஷ்ட்டீரியத்தில் ஜனபதங்கள்

1925 ஆம் ஆண்டு நாகபுரியில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தோற்றுவித்த கேசவ பலிராம் கெட்கேவார் மற்றும் அவருடன் தொடக்கத்தில் பொறுப்பில் இருந்த அனைவரும் பார்ப்பனர்களிலேயே தங்களை உயர்வானவர்களாக கருதிக் கொள்ளும் சித்பவன் பார்ப்பனர்களே.

ஆர்எஸ்எஸ்-சும் அதன் துணை அமைப்புகளாக பிஜேபி உள்ளிட்ட சங்பரிவாரக் கும்பலும் அகண்ட பாரதத்தில் இந்து ராஷ்ட்டீரம் அமைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். இந்து ராஷ்ட்டீரம் என்பது இன்றைய இந்திய எல்லைகளுடன் வடக்கே திபெத் முதல் தெற்கே இலங்கை வரையிலும் மேற்கே ஆப்கானிஸ்தானத்திலிருந்து கிழக்கே பர்மா வரையிலும் எல்லைகளைக் கொண்டதாகும். அவர்களது அகண்ட பாரதத்தில் இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு கம்யூனிஸ்டுகளுக்கு இடம் இல்லை. இங்கே சமக்கிருத மொழியுடன் சாதிய படிநிலையைக் கொண்ட வர்ணாசிரம கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். அத்துடன் ராமர் கோவில், பொது சிவில் சட்டம், அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கம், இந்தியாவை மண்டலங்களாக மாற்றுவது இட ஒதிக்கீட்டை ஒழிப்பது ஆகியன இவர்களது அடிப்படைக் கொள்கையாகும். அதனை படிப்படியாக செயல்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு பகுதிதான் தற்போது மணிப்பூரில் செயல்படுத்தப்படுகிறது.

1991 இல் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு பின் பன்னாட்டு முதலாளிகளுக்கு இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்தது. இப்புதிய நிலைமைகளில் வல்லரசுகள் பன்னாடுகளைக் கொள்ளையிட புதியக் காலனியக் கொள்கையைக் (டங்கல் திட்டம் ----------- தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கை) கொண்டு வந்தனர். இது பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் ஆதிக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டது. இதில் இந்தியாவும் பிணைக்கப்பட்டது. இந்த புதிய காலனியக் கொள்கைதான் இந்திய ஆளும் வர்க்கத்தையும், ஆட்சியாளர்களையும் இயக்குகிறது. இந்தியாவில் ஜனநாயகம் என்பது இதற்கு உட்பட்டதுதான்.

தேசம் என்று அழைக்கப்படும் இந்தியா இதே எல்லைகளுடன் 1947-க்கு முன்னும் பின்னும் இருந்ததில்லை. இருக்கப்பொவதுமில்லை. பிரிட்டிஷ் இந்தியாவில் இன்றைய இந்தியாவின் பகுதிகளுடன் இலங்கை, பர்மா (மியான்மர்), பாகிஸ்தான், பங்களாதேஷ், பூடான், சிக்கிம் ஆகிய நாடுகளும் சேர்ந்தே இருந்தன. ஆங்கிலேயர் ஆட்சி ஏற்படுவதற்கு முன் பல்வேறு பேரரசுகளில் ஆப்கானிஸ்தான் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட பிரிட்டிஷ் இந்தியா, சமஸ்தான இந்தியா, பிரெஞ்சு இந்தியா, டச்சு இந்தியா, போர்ச்சுகல் இந்தியா என்றே இருந்துள்ளன. இந்தியாவில் நிலவிய பெரிய பேரரசுகளில் கூட தென்னிந்தியாவின் சில பகுதிகள் வட இந்தியாவின் பல பகுதிகள் இருந்ததில்லை. இவ்வாறாக பல்வேறு இனங்கள், பழங்குடிகள், மொழிகள் பேசிய மக்கள் எவ்வித பிடிப்பும் இல்லாமல் உரிமையற்றவர்களாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டனர். இது பார்ப்பன- பனியா முதலாளிகளின் விரிவான சந்தைக்காகவும் பார்ப்பன அதிகார வர்க்க நலனுக்காகவும் செய்யப்பட்டன.

இந்திய தேசமென்பது மத்திய காலத்திலும் அதன் பிறகும் உருவான மொழி அடிப்படையிலான இயல்பான தேசமன்று. இது மத அடிப்படையிலானது. மத அடிப்படையிலான தேசங்கள் வரலாற்றில் நிலைத்திருப்பதில்லை என்பது இந்திய ஆளும் மற்றும் அறிவாளி வர்க்கத்திற்குத் தெரியும். ஆகவே மக்களை தேசிய இன அடிப்படையில் அணிசேரவிடாமல் சாதி, மத, பழங்குடிகளிடையே உள்ள முரண்பாடுகளை பகைமுரண்பாடுகளாக மாற்றி மோதவிட்டு இந்தியாவை 100 மண்டலங்களாக (ஜனபதங்களாக) மாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

கி.மு.ஆறாம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் முடியாட்சி அரசுகள் ஜனபதம் என்றும் முடியாட்சி அல்லாத அரசுகள் சங்கம் அல்லது கணம் என்றும் வழங்கப்பட்டன. ஜனபதம் என்பது பார்ப்பனர்களைத் தலைமை இடமாகக் கொண்டு அவர்களது நலனை முதன்மையாகக் கொண்ட முடியராசாகும். அப்படி இந்தியாவை 100 ஜனபதங்களாகவும் அதில் தமிழ் நாட்டை மூன்று அல்லது நான்கு ஜனபத மண்டலங்காளகவும் மாற்றும் திட்டத்துடன் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி உள்ளிட்ட சங்பரிவாரக்கும்பல் செயல்படுகிறது. இதன் நோக்கம் தேசிய இனங்களை துண்டுதுண்டாக சாதி, மதங்களாக உடைத்து அவர்களிடையே பெரும் பிளவுகளை உருவாக்கி மோதவிட்டு இன அழிப்பு செய்வதாகும்.

காஷ்மீரில் காஷ்மீரின் முன்னாள் மூன்று முதல்வர்கள் உள்ளிட்ட 800-க்கும் அதிகமானோரை சிறையிலும், வீட்டுத் தடுப்புக் காவலிலும் வைத்து விட்டு, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தப்போகிறது என நாட்டு மக்களிடம் பொய் சொல்லிவிட்டு, இரண்டு கட்டங்களாக அடுத்தடுத்து 38,000 இராணுவத்தினரை காஷ்மீரில் நிறுத்திவிட்டு, (7 பேருக்கு ஒரு வீதம்) காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் பிரிவு 370 ஐ நீக்கம் செய்தது. மாநில அரசின் அனுமதி இன்றி இதனை செய்யக்கூடாது என சட்டமும் நீதி மன்றமும் சொன்ன பிறகு மக்களிடமோ, கட்சிகளிடமோ, நாடாளுமன்றத்திடமோ, ஏன்? சொந்த அமைச்சரவைக்கே கூட தெரியாமல் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலாளர் பையாஜி ஜோசியிடம் மட்டும் கலந்து பேசி மோடியும், அமித்ஷாவும் கமுக்கமாக வைத்திருந்து அந்த மாநில ஆளுநருக்கே தெரியாமல் 2019 ஆகஸ்ட் 5 அன்று குடியரசுத் தலைவரின் உத்திரவுப்படி காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370-ம் 35-யும் நீக்கப்பட்டன. ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. உள்ளிட்ட சங்பரிவாரக் கும்பலின் இச்செயலை தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கமும், இந்திய பத்திரிக்கையாளர் சங்கமும் கண்டித்து கூட்டாக அறிக்கை விட்டுள்ளது.

காஷ்மீர் சட்டமன்றம் கொண்ட ஜம்முகாஷ்மீர், சட்டமன்றம் இல்லா லடாக் ஆகிய இரண்டு ஒன்றியங்களாகப் (அவர்களது மொழியில் ஜனபதங்களாக) பிரிக்கப்பட்டன. இதனை டெல்லியை மாநிலமாக்க போராடி வரும் அரவிந்த்கெஜ்ரிவால் ஆந்திராவின் சிறப்புரிமைக்காகப் போராடி வரும் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கான சிறப்புரிமைக்காகப் போராடி வரும் சந்திர சேகரராவ் ஆகியோர் பி.ஜே.பி-க்குத் துணை நின்றனர். மேலும் பிஜி ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, அ.தி.மு.க. காங்கிரசிலுள்ள சிலரும் பி.ஜே.பி-யின் பக்கம் நின்றனர். இது அவர்களது நலன் சார்ந்த சந்தர்ப்பவாதம். இவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் தொடர்பில்லை. விடுதலைக்காக போராடிய காஷ்மீர் (ஜம்மு காஷ்மீர், லடாக்) இரண்டாக பிரித்து சிதைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் வல்லாதிக்கத்தின் நேரடி ஆட்சிக்காலத்திலேயே நாகா, காஷ்மீர், பஞ்சாபி ஆகிய தேசிய இனங்கள் தங்களது அடிமை நிலையை எதிர்த்து குரல் கொடுத்து வந்தன. 1960-களில் மிசோ, மணிப்பூர் மக்கள் தங்களது விடுதலைக்காய் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு தேசிய இன மக்கள் நடத்திய தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் இந்திய ஆளும் வர்க்கத்தை நிலைக்குலையச் செய்ததுடன் அவர்களிடம் மண்டியிட வைத்தன. அவ்விடுதலைப் போராட்டங்களைச் தற்போது சிதைத்ததில் காங்கிரசுக்கு பெரும் பங்குண்டு. இதனை காங்கிரசு ஜனநாயக வேடமணிந்து கம்யூனிஸ்டுகள், பிஜேபியினரின் ஒப்புதலோடு செய்தது. பி.ஜே.பி. அம்முகமூடியை தூக்கி எரிந்து விட்டுச் செய்கிறது. காஷ்மீரில் செய்ததை தற்போது மணிப்பூரில் செய்ய இருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள பல்வேறு தேசிய இனங்களை ஒழித்து கட்டி அகண்ட பாரதம் அமைக்க தங்களது பாதையை செப்பனிடுகிறார்கள்.

சுடுகாடாகும் மணிப்பூர்

2023 ஏப்ரல் 27ஆம் நாள் மணிப்பூர் உயர்நீதி மன்றத்தின் இடைக்காலத் தலைமை நீதிபதி தமிழ்நாட்டுக்காரர் எம்.வி.முரளிதரன் வழங்கிய தவறான தீர்ப்பு மணிப்பூரில் அணையா தீயாக பற்றி எரிகிறது. இந்த தீர்ப்பு தவறானது என்பதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறிவிட்டார். 2023 மே 3 நாள் எரியத் தொடங்கிய தீயில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் மோடிக் கும்பலின் இரட்டை எஞ்சின் அரசுகள் குளிர்காய்கின்றன. இந்தியப் பிரதமர் மோடி மகிழ்ச்சியில் பன்னாடுகளில் வலம் வருகிறார். மோடி கோமாளியாக சித்தரிக்கப்பட்டாலும் அவர் கார¤யக் கோமாளியே.

2023 மார்ச் 27 அன்று மணிப்பூர் பழங்குடிசங்கத்தின் (தற்போது பா.ஜ.க. பின்புலத்தில் செயல்படுகிறது, முன்பு காங்கிரசு பின்புலத்தில் செயல்பட்டது) வழக்கின் மீது மணிப்பூர் உயர்நீதிமன்றம் மெய்திகளது பழங்குடி அந்தஸ்து கோரிக்கையை மணிப்பூர் மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய 4 மாதம் அவகாசம் கொடுத்தது. இந்த தீர்ப்பு பழங்குடி மக்களின் நிலங்களை மெய்தி முதலாளி வர்க்கமும் கார்பரேட் முதலாளி வர்க்கமும் பறிக்கும் நோக்கமும் பழங்குடி மக்களின் உரிமையை பறிக்கும் நோக்கமும் கொண்டதாகும். ஆகவே இதனை எதிர்த்து அனைத்து பழங்குடிகளின் மாணவர் சங்கம் மே 3 நாள் இம்பால் தலைநகரிலிருந்து 60 கி.மீ தொலைவில் சுராக்சன்பூர் மாவட்டத்திலுள்ள டோர்பால் பகுதி உள்ளிட்ட அனைத்து 8 மலை மாவட்டங்களிலும் பேரணிக்கும் ஏற்பாடு செய்து நடத்தியது. இப்பேரணியில் பா.ஜ.க. ஆதரவோடு மெய்தி குழுக்களும், குக்கி போராளிக் குழுக்களும், மக்களும் மோதிக்கொண்டனர். அது வன்முறையாக மாறி இன்றுவரை நீடிக்கிறது.

மெய்திகளுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புகளான அரம்பைதெங்கோல், மெய்தி லீபன் போன்ற இந்து மதவெறிஅமைப்புகள் உள்ளன.குக்கிகளுக்கு பின்னால் போராளிக் குழுக்கள் உள்ளன. நாகா பழங்குடிகளுக்கும் மெய்திகளுக்கும் இடையே கடந்த காலங்களில் முரண்பாடுகள் வெடித் போதும் நாகாக்களுக்கோ முஸ்லீம்களுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை. மணிப்பூர் சிக்கல் மெய்தி, குக்கிகளுக்கு இடையிலான மத மோதலாகத் தொடங்கி தற்போது இனமோதலாக மாறிவிட்டது. இம்பால் சமவெளியிலிருந்த குக்கி இன மக்கள் வெளியேறிவிட்டனர். அதேபோல் மலை மாவட்டங்களிலிருந்து மெய்தி இன மக்கள் வெளியேறி விட்டனர்.

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். பழங்குடியின பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டனர். 300-க்கும் மேற்பட்ட தேவாலாயங்களும் 1000-க்கும் மேற்பட்ட கோவில்களும் குக்கி மக்களது 3000 வீடுகளும் தீக்கரையாக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் முஸ்லீம்களில் வீடுகள் அடையாளக் குறியிட்டு தாக்கியது போல பழங்குடிகளின் வீடுகள் அடையாள குறியிட்டு தாக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் மணிப்பூரின் நிலங்கள், காடுகள், வீடுகள் இந்து மத வெறியர்களால் சுடுகாடாக்கப்பட்டுள்ளன.

கார்பரேட்டுகளின் கழுகுப் பார்வையில் மணிப்பூர்

மணிப்பூர் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் மொத்த நிலப்பரப்பில் 90 விழுக்காடு மலைகளாக உள்ளன. அவற்றில் ஏரளமான கரிம, கனிம வளங்கள் உள்ளன. அதனை கொள்ளையிடுவதற்கு கார்பரேட் முதலாளிகள் திட்மிட்டு செயல்படுகின்றனர். அவர்களுக்கு துணையாக ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. உள்ளிட்ட சங்பரிவாரக்கும்பலும், காங்கிரசும் இருக்கின்றன.

காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை ஏமாற்றி இந்தியாவுடன் இணைப்பதற்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டங்களை இயற்றினர். இந்தியவில் தற்போது அச்சட்டங்களை நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். உலகின் எந்த மூலையிலும் இந்திய ஆளும் வர்க்கம் நிலம் வாங்கலாம். ஆனால் காஷ்மீரில் நிலம் வாங்க இயலாத நிலையை 370,35எ ஆகிய சட்டப்பிரிவுகள் இடம் தரவில்லை. அதனை 2019 ஆகஸ்டு 5 அன்று நீக்கினர். அதே போன்ற சட்டப் பிரிவுகள் வடகிழக்கு மாநிலங்களிலும் (மணிப்பூரிலும்) உள்ளன. பழங்குடிகளைத் தவிர்த்து மணிப்பூர் மலைப்பகுதிகளில் மெய்திக்களோ அல்லது வேறு யாரும் நிலம் வாங்க இயலாத வகையில் அரசியல அமைப்புச் சட்டம் 371 மற்றும் மணிப்பூர் நிலச் சீர்திருத்த சட்டம் (MLR SLR ACT 1960) உள்ளன. அதிலுள்ள முக்கியப் பிரிவுகள்.

1.பழங்குடியினர் அல்லாத ஒருவர் பழங்குடியினத்தவரிடமிருந்து நிலம் வாங்கினால் அது செல்லத் தக்கதல்ல.

2. ஒரு பழங்குடியினத்தவர் (ST) மற்றொரு பழங்குடியினத்தவருக்கு நிலத்தை விற்கலாம் அல்லது வாங்கலாம்.

3.பழங்குடியினத்தை சாராத ஒருவர் நிலம் வாங்க வேண்டுமெனில் மலைப்பிரதேச கமிட்டியின் துணை ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

4.கூட்டுறவு சங்கத்திற்கு பழங்குடியினர் குத்தகையின் பெயரில் நிலம் வழங்கலாம். இது போன்ற சட்டப் பிரிவுகள் தான் இந்திய ஆளும் வர்க்கத்தையும் கார்பரேட் முதலாளிகளையும் அச்சுறுத்துகின்றன. பாதுகாப்பான இச்சட்டப்பிரிவுகளை நீக்கும் முயற்சியில் காங்கிரசு, பி.ஜே.பி. அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. மணிப்பூரில் காங்கிரசு கட்சி ஆட்சியல் இருந்தபோது பழங்குடிகளின் “மணிப்பூர் நில சீர்திருத்த மசோதா” கொண்டுவரப்பட்டது. இதனை எதிர்த்து பழங்குடியினர் போராடினர். அதில் 9 பழங்குடி இளைஞர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் உடல்களை வாங்க மறுத்து 600 நாட்களுக்கு மேல் தொடர்போராட்டத்தை பழங்குடியினர் நடத்தினர். அம்மசோதாவை ஜனாதிபதி திருப்பி அனுப்பிய பிறகே போராட்டத்தைக் கைவிட்டனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி உள்ளிட்ட சங்பர¤வாரக் கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு “பாதுகாக்கப்பட்ட காடுகள், சேமக்காடுகள், வனவிலங்கு சரணாலாயங்கள் என்ற பெயரில் பழங்குடிகளை அவர்களின் வாழ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு அதை சமூக நலக்காடுகள் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களிடமும் அறக்கட்ளைகளிடமும் ஒப்படைக்கும் வேலையைச் செய்கின்றனர். இதுபோல் நாட்டில் உள்ள 220 சமூக நலக்காடுகளில் 200க்கும மேற்பட்டவை வடகிழக்கு மாநிலங்களில் உள்ளன. கிட்டதட்ட 75 விழுக்காடு மணிப்பூர் காடுகள் இதுபோன்ற சமூக நல அமைப்புகளால் பராமரிக்கப்படுகின்றன.

பெரும்பாலன சமூக நலக் காடுகளை இந்திய வன உயிர்கள் அறக்கட்டனை வைத்திருக்கின்றன. இந்நிறுவனம் இங்கிலாந்தின் உலக நில அறக்கட்டளை என்ற அமைப்பின் கூட்டாளி நிறுவனமாகும். மேற்சொன்ன உலக நில அறக்கட்டளை பல்வேறு நாடுகளில் காடுகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பூர்வகுடிகளையும் பழங்குடிகளையும் காடுகளில் இருந்து விரட்டி அடிக்கும் வேலையைச் செய்து வருகிறது. இந்திய வன உயிர்கள் அறக்கட்டளையும் அதன் அறிவாளிகளும் சேர்ந்து உச்சநீதிமன்றத்தை அணுகி காடுகளில் இருந்து பழங்குடிகளை விரட்டி அடிக்கும் தீர்ப்பொன்றை 2019 இல் பெற்றனர். மணிப்பூர் பா.ஜ.க. அரசு பழங்குடிகளை வனப் பாதுகாப்பு, வன விலங்குககள் பாதுகாப்பு என்ற பெயரில் சொந்த மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கி எடுக்கும் வேலையை கடந்த சனவரி திங்களிலிருந்து செய்து வருகின்றது. இதுவரை சுமார் 35,000க்கும் மேற்பட்டோர் அவ்வண்ணம் அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். இதை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடந்த வண்ணம் இருந்தன.

பழங்குடிகளிடம் நிலவிய அதிருப்தி மேலும் தீவிரப்படும் வகையில் பா.ஜ.க. முதல்வர் பிரேன்சிங் குக்கிகளை“ ஆக்கிரமிப்பாளர்கள், போதைப் பொருள் கடத்துவோர், கஞ்சா பயிடுவோர், சட்ட விரோத குடியேறிகள் எனப் பலவாறும் வசைப் பாடினார். மணிப்பூர் பா.ஜ.க. அரசு “போதைப் பொருள்களுக்கு எதிரானப் போர்” என்ற பெயரில் பழங்குடிகள் மீதான தாக்தலைக் கட்டவிழ்த்துவிட்டது. ஆனால் பள்ளத் தாக்கில் இருக்கக் கூடிய பன்னாட்டு போதைக் கடத்தல் மாஃபியாக்களின் முக்கிய புள்ளிகள் போன்ற மெய்யான குற்றவாளிகள் மீது கைவைக்கவில்லை” என்று வையம் இதழில் செந்தில் கூறுகிறார். மேலும், ஆர்எஸ்எஸ் முன்னாள் மாணவர் அமைப்பின் தலைவர், மைத்தி லீபுன் அமைப்பின் தலைவர் பிரமோத்சிங் தனது டிவிட்டர் பதிலும், “தி வயர்’ இணையதளத்திற்கு அளித்த பேட்டியிலும் “குக்கி இன மக்கள் அயலார், சட்ட விரோத குடியேறிகள், பூர்வகுடி மக்கள் அல்ல. வந்தேறிகள், வாடகைக்கு குடியிருப்போர்” என்றும் “ஒரு நாள் மைத்தி மக்கள் எழும் போது குக்கி இன மக்கள் இருக்கமாட்டார்கள்” என்றார்.

எனவே ஆர்எஸ்எஸ், பிஜேபி உள்ளிட்ட சங்பர¤வார கும்பல் மண்ணின் மக்களான குக்கிகள் மீது வன்முறையை மத்திய மாநில இரட்டை எஞ்சின் அரசுகள் மூலமாகவும் மெய்தி மக்களின் இந்து மத உணர்வைத் தூண்டியும்

ஏவிவிட்டுள்ளனர். இதன் மூலம் மக்களின் பிரச்சனையை திசை திருப்பி கார்பரேட் முதலாளிகளான அதானி, அம்பானி, பதஞ்சலி, கோத்ரேஜ், அக்ரோ வெட் ஆகிய நிறுவனங்களும் உலக வங்கி, ஆசிய வங்கி, ஜப்பான் ஜிகா போன்றவற்றிற்கும் மணிப்பூரின் இயற்கை வளங்களை கொள்ளையிட புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளனர். தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் சாதியினரை பட்டியல் சாதியிலிருந்து வெளியேற்றும் கோரிக்கையை முன் வைத்து பிஜேபி அரசியல் செய்கிறது. மணிப்பூரிலோ மெய்திக்களை பட்டியல் சாதியாக மாற்றும் கோரிக்கையை தூண்டிவிட்டு அரசியல் செய்கிறது. வடகிழக்கில், கேரளாவில், கோவாவில் மாட்டுக்கறி சாப்பிடு என்கிறார்கள். நாட்டின் பிற பகுதிகளில் மாடுகளைச் சொல்லி மக்களை கொல்கிறார்கள். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒருமுறை அமெரிக்கா சென்ற போது ஓர் உரை முடித்து சாப்பிட உட்கார்ந்தாராம். அவருக்கு உணவு பரிமாறப்பட்டதும் மற்றவர் அதிர்ச்சியில் “அடல்ஜி அவர்கள் மாட்டுக்கறியை உண்ண கொடுத்திருக்கிறார்கள்” என்றார்களாம். உடனே அடல்ஜி சொன்னாராம், அதனால் என்ன பிரச்சனை? இது இந்திய பசு அல்ல. அமெரிக்க பசு தான். அதனால் சாப்பிடலாம் என்றாராம். இப்படி இடத்திற்கு, காலத்திற்கு ஏற்ப மாற்றிப் பேசும் பச்சோந்தி கூட்டம் தான் ஆர்எஸ்எஸ், பிஜேபி உள்ளிட்ட சங்பரிவார கும்பல்.

இத்துத்துவம் என்பது தான் இவர்களின் அடிப்படைக் கொள்கை. அதை முதலில் பேசிய வினாயக் தாமோதர் சவார்க்கர் “இந்துத்துவத்தையும் தெளிவாக வரையறுக்கப்படாத இந்து மதத்தையும் குழப்பிக் கொள்ள கூடாது. இந்துத்துவம் ஓர் அரசியல் கோட்பாடு” என்று அப்போதே தெளிவுப்படுத்தி விட்டார். அவர் ஒரு நாத்திகர். இந்தியாவை இந்து மயமாக்கு, இந்து மதத்தை ராணுவ மயமாக்கு என்பது அவரின் தாரக மந்திரம். அதனால் ஆர்எஸ்எஸ், பிஜேபி உள்ளிட்ட சங்பரிவார கும்பலின் அகண்ட பாரத நோக்கத்திற்காக அன்று குஜராத், காஷ்மீர் எரிந்தது. இன்று மணிப்பூர் எரிகிறது. நாளை தமிழ்நாடு எரிக்கப்படும்.

எனவே, ஆர்எஸ்எஸின் அகண்ட பாரத கனவுக்கு எதிராக தேசிய இனங்களின் உரிமைக்காகவும், பழங்குடி மக்களின் உரிமைக்காகவும் போராடுவோம். ஆர்எஸ்எஸ், பிஜேபி உள்ளிட்ட சங்பரிவார கும்பலை விரட்டியடிப்போம். உழைக்கும் மக்களின் விருப்பப்படி எல்லைகளை திருத்தி அமைப்போம்.

இறுதியாக, காங்கிரசு, இடது, வலது கம்யூனிஸ்டுகள் அவர்களது அடிவருடிகள் பேசும் இந்திய தேசமும், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. உள்ளிட்ட சங்பரிவார் கும்பல் பேசும் இந்து தேசமும் பார்ப்பன-ர் பனியா, கார்பரேட் முதலாளிகளை பாதுகாக்கும் இரட்டை குழல் துப்பாக்கியே…

- பாரி

Pin It