இப்போது இந்தியாவின் மக்கள் தொகை 142.8 கோடி. உலக மக்கள் தொகையில் இந்தியா சீனாவை (142.5 கோடி) விஞ்சி முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் இந்தியாவின் வடகிழக்கில் மியான்மரை ஒட்டியுள்ள 34 இலட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய மாநிலமான மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக குக்கி-மெய்தி இன மக்களுக்கிடையே நடந்துவரும் வன்முறை மோதல்களை நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஒரு முடிவுக்குக் கொண்டு வரவில்லை.

மோடி உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய தலைவர் ­விஸ்வ குரு -என்று சங்பரிவாரங்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கி பெருமிதத்துடன் பார்க்கின்றன என்று நரேந்திர மோடி அவ்வப்போது திருவாய்மலர்ந்து கொண்டிருக்கிறார். மோடியின் படைத் தளபதியாக விளங்கும் அமித்ஷா இந்தியா கண்டெடுத்த இரண்டாவது சாணக்கியன் என்றும் அரசியலில் காய் நகர்த்துவதில் சூராதிசூரன் என்றும் சங்கிகளாலும் முதலாளிய ஊடகங்களாலும் புகழப்படுகிறார். அமித்ஷா மே மாத இறுதியில் நான்கு நாட்கள் பயணமாக மணிப்பூர் சென்று வந்த பின்னும் அங்கு மரண ஓலங்கள் ஓயவில்லை. பிரான்சில் மோடி விருது வாங்கிக் கொண்டிருந்த வேளையில் அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் மணிப்பூர் கலவரங்கள் குறித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது. அமெரிக்காவின் அயலுறவுத் துறை அமைச்சர் தன் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அசாம், மணிப்பூர், திரிபுரா, நாகாலாந்து, இமாசலப்பிரதேசம், மிசோரம், மேகலாயா ஆகிய மாநிலங்கள் ‘ஏழு சகோதரிகள்’ எனப்படுகின்றன. இவற்றுள் அசாம் மாநிலம் தவிர்த்த மற்ற மாநிலங்கள் சிறியவை; மலைகளும் காடுகளும் நிறைந்தவை; பெருமளவில் பழங்குடியினர் வாழ்பவை. சுதந்திரத்திற்குமுன் மணிப்பூரும் திரிபுராவும் மன்னராட்சிப் பகுதிகளாக இருந்தன.protest for manipurமுதல் உலகப் போரின் போது வெளிநாடுகளுக்குச் சென்று போரிடுவதற்கு பிரித்தானியப் படையில் சேர குக்கிகள் மறுத்ததற்காக குக்கிகளுக்கும் ஆங்கிலேயப் படையினருக்கும் இடையில் 1917-19-இல் போர் நடந்தது. குக்கிகள் தரப்பில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்ட போதிலும், ஆங்கிலேயர்க்கு அடிபணிய மறுத்த மறவர்கள் அவர்கள். குக்கிகளின் போர் முழக்கத்துடன் எழுப்பப்பட்ட போர் நினைவிடம் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருக்கிறது. ஆனால் கடந்த மே மாதம் குக்கி-மெய்திகளுக்கிடையே மோதல் ஏற்பட்ட பின், குக்கிகளின் போர் முழக்கக் கல்வெட்டு நீக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் இழிவுபடுத்தப்பட்டது.

1949 செப்டம்பர் 21 அன்று மணிப்பூர் இந்தியாவுடன் இணைந்தது. அப்போது அரசமைப்புச் சட்டக் கூறு 371-சி மூலம் மணிப்பூரில் குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடிகள் நிலத்தின்மீது பெற்றுள்ள உரிமை பாதுகாக்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டது. மலைவாழ் பழங்குடியினரிடையே நிலத்தின் மீதான தனியுடைமை என்பதில்லை. மலையும் காடும் நிலமும் அனைவருக்கும் உரியது என்றே எண்ணுவர். மணிப்பூரில் தற்போதுள்ள கலவரத்திற்கு மூலமுதல் காரணம் பழங்குடியினரிடமிருந்து நிலத்தையும் காடுகளையும் பறித்து தனியார் முதலாளிய நிறுவனங்களுக்குத் தரவேண்டும் என்கிற பா.ச.க.வின் கொள்கையே ஆகும்.

1972-இல் மணிப்பூருக்கு மாநிலத் தகுநிலை ஒன்றிய அரசால் அளிக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டக் கூறு 371சி­யின் அடிப்படையில் மலைப் பகுதிக்கான ஒரு குழு உருவாக் கப்பட்டது. இதில் மலைப்பகுதியின் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் (இப்போது மணிப்பூர் சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர் 60; மலைப் பகுதிக்கு 20; சமவெளிக்கு 40) இருப்பார்கள். 13 துறைகள் மீதான பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக் கப்பட்டது. இக்குழுவின் ஒப்புதல் இல்லாமல் மலைப் பகுதியில் நிலம் வாங்க முடியாது. காலப்போக்கில் மலைப் பகுதிக்கான குழு முறையாகச் செயல்படவில்லை.

மலைப்பகுதியின் நிலங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பள்ளத்தாக்குப் பகுதியில் வாழும் மெய்திகள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். மணிப்பூரில் கல்வி, அரசு வேலை வாய்ப்பு, மருத்துவம், பொருளாதார வளர்ச்சி முதலானவற்றில் மக்கள் தொகையில் 53 விழுக்காட்டினராக உள்ள மெய்தியினரே பெரும்பங்கைப் பெற்றுள்ளனர். மணிப்பூரில் உள்ள 9 பல்கலைக்கழகங் களில் 8 தலைநகர் இம்பாலில் உள்ளன. பழங்குடியினருக் கான இந்திராகாந்தி பல்கலைக்கழகம் மட்டும் இம்பால் நகரையொட்டிய மலையடிவாரத்தில் உள்ளது.

மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் வேலையில் இருப்போர் பட்டியல்

reservation in manipur

மெய்திகள் பிற்படுத்தப்பட்டோருக்கான 17%, EWS 10% மற்றும் பொதுப் போட்டியில் உள்ள 40% இடங்கள் என 67% இடங்களை அனுபவிக்கின்றனர். மொத்த மக்கள் தொகை யில் மெய்திகள் 53%. அவர்களின் விகிதத்தைவிட கூடுதலா கவே கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடு பெறுகின்ற னர். அதனால் மெய்திகள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோருவது பழங்குடிகள் வாழும் நிலப்பகுதியைக் கையகப்படுத்த வேண்டும் என்பதற்காகவேயாகும். மேலும் பழங்குடியினர் பட்டியலில் இடம்பெற்றால் மலைகளில் வாழும் குக்கி, நாகா பழங் குடியினருக்கான 31% இடஒதுக்கீட்டையும் ஏப்பம் விடலாம் என்பது இரண்டாவது காரணம்.

பள்ளத்தாக்குப் பகுதியில் வாழும் மெய்திகள் வைண வத்தைப் பின்பற்றும் இந்துக்கள். தங்களைச் சத்திரியர் என்று கூறிக்கொள்வதால் தங்கள் பெயருக்குப் பின் ‘சிங்’ என்று சேர்த்துக் கொள்கின்றனர். மணிப்பூர் முதலமைச்சர் பெயர் பிரேன்சிங். இவர்கள் வேளாண்மையும், தொழிலும், வணிகமும் செய்பவர்கள். நாகரிக வாழ்க்கை வசதிகள், உயர்கல்வி, உயர் பதவிகளில் இருக்கின்றனர். அரசியல் அதிகாரம் இவர்களிடமே உள்ளது. எனவே எவ்வகையிலும் பழங்குடிப் பட்டியலில் மெய்திகளைச் சேர்க்கப்படுவதற்கான எந்தக் கூறும் இல்லை.

இவர்கள் முன்வைக்கிற வாதம் - மணிப்பூரின் மொத்தப் பரப்பில் 10 விழுக்காடு நிலப்பகுதியில் 53 விழுக்காட்டினரான மெய்திகள் வாழ்கின்றனர்; மீதி 90 விழுக்காடு நிலப்பரப்பில் 41 விழுக்காடாக உள்ள பழங்குடியினர் வாழ்கின்றனர்; எனவே மலைப்பகுதியில் எங்களுக்கு நிலம் பெறும் உரிமை வேண்டும் என்பதாகும். பழங்குடியினர் கரடுமுரடான மலைப்பகுதிகள், அடர்ந்த காடுகள், வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள் அற்ற வறுமை நிலையில் வாழ்கின்றனர் என்கிற உண்மையை மெய்திகள் மூடி மறைக்கின்றனர். மெய்தி களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது பழங்குடியினரின் இடஒதுக்கீட்டை அவர்களுக்குக் கிடைக் காமல் செய்வதுடன், இடஒதுக்கீட்டு வாய்ப்பின் மூலம் கல்வியிலும் பணிவாய்ப்பிலும் பொருளாதாரத் திலும் முன்னேறவிடாமல் தடுக்கும் சூழ்ச்சியாகும். பெரும்பான்மையினர் இந்துக்களாக இருக்கும் மெய்திகளுக்கும் பெரும்பான்மை யினர் கிறித்தவர்களாக உள்ள குக்கி, நாகா இனத்தவருக்கு மான மத முரண்பாடு என்ற அளவில் இதைச் சுருக்கிப் பார்க்க முடியாது. அதேசமயம் குக்கி-மெய்தி மோதலில் மதம் வகிக்கும் பங்கை அடியோடு புறக்கணிக்கவும் முடியாது. 2017-2021 காலத்தில் மணிப்பூரில் ஒதுக்கப்பட்ட 21,900 கோடி நிதியில் மெய்தி பகுதிக்கு 20,480 கோடியும் பழங்குடியினர் பகுதிக்கு 420 கோடியும் பிரித்தளிக்கப்பட்டது என்பதிலிருந்தே பழங்குடியினர் எந்த அளவுக்குப் புறக்கணிக் கப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தற்போது மணிப்பூர் முதலமைச்சராக உள்ள பிரேன்சிங் 2003 முதல் 2016 வரை காங்கிரசுக் கட்சியில் இருந்தவர்; அமைச்சராகவும் இருந்தார். 2017இல் சட்டமன்றத் தேர்தலுக்கு 5 மாதங்களுக்கு முன் பா.ச.க.வில் இணைந் தார். பா.ச.க.வில் வெற்றி பெற்று மணிப்பூரின் முதலாவது பா.ச.க. முதல்வரானார். அசாமில் தற்போது பா.ச.க. முதல மைச்சராக உள்ள ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா காங்கிரசில் தலைவராக இருந்தவர். பா.ச.க.வால் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர். பா.ச.க.வில் சேர்ந்ததும் புனிதராகி முதலமைச்சராகிவிட்டார். வடகிழக்கு மாநிலங் களிலும் மத்தியப் பிரதேசம், கர்நாடகம், மகாராட்டிரம் போன்ற பெரிய மாநிலங்களிலும் பா.ச.க. தன் அரசியல் அதிகாரத்தை, பண வலிமையைப் பயன்படுத்தி கும்பலாக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தன் கட்சி ஆட்சியை அமைத்து சனநாயக நெறிமுறைகளைக் குழி தோண்டிப் புதைத்து வருகிறது. மணிப்பூர் முதல்வர்

பிரேன்சிங் 2019இல் சட்டமன்றத்தில் மெய்தி களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பேன் என்று அறிவித்தார். பா.ச.க. தேர்தல் அறிக்கையிலும் இது இடம்பெற்றிருந்தது. இவ்வாறாக 2012 முதலே குக்கி-மெய்தி பிரிவினருக்கிடையே வெறுப்பும், நம்பிக்கை யின்மையும், பகையும் உருவாவதற்கான சூழலை பா.ச.க. திட்டமிட்டு உருவாக்கி வந்தது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 2018-இல் பா.ச.க. ஆட்சி, பழங்குடிகள் பெற்றுள்ள நிலவுரிமையைக் குலைக்கும் வகையில் ஒரு சட்டத்தை இயற்றியது. இதை குக்கி, நாகா பழங்குடியினர் கடுமையாக எதிர்த்துப் போராடினர். சுராசந்த் மாவட்டத்தில் நடந்த காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது குக்கிகள் மாண்டனர். இச்சட்டம் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, கிடப்பில் இருக்கிறது.

தங்கள் நிலவுரிமைக்கு ஏற்பட்டுவரும் அச்சுறுத்தலைத் தடுக்கும் வகையில் மணிப்பூர் மலைப்பகுதிக்குழுவைச் (Hill Area Council - HAC) சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னாட்சி மாவட்ட அவைகள் சட்டத்திருத்தத்தைச் (Autonomous District Councils Amentment Bill) சட்டமன்றத்தில் முன்மொழிந்தனர். முதல்வர் பைரேன்சிங் இம்முன்மொழிவு நீர்த்துப் போகும் வகையில் ஒரு சட்ட முன்வரைவைக் கொண்டு வந்தார். இதை குக்கி, நாகா பழங்குடியினர் எதிர்த்தனர். எந்த முடிவும் எட்டப்படாமல் இடையில் நின்று போனது.

சங் பரிவாரங்களும் பா.ச.க.வும் ஒரு தாக்குதலைத் தொடுப்பதற்குமுன், அதற்கான சூழலை உருவாக்குவார்கள். அதற்காக பொய்யான வதந்திகளைப் பரப்புவார்கள். அதை குறிப்பிட்ட அளவு மக்கள் நம்பும் வகையில் தீவிரமாகச் செயல்படுவார்கள்.

ஒரு பொது எதிரியைச் சுட்டிக்காட்டி மக்களை அணிதிரட்டுவார்கள். 1980 முதல் இவர்களின் செயல்பாடு இத்தன்மையில் இருப்பதைக் காணலாம். அயோத்தியில் இராமன் பிறந்த இடம் 400 ஆண்டுகளாக இருக்கும் பாபர் மசூதி தான் என்று நம்ப வைத்து அதை இடித்தார்கள். முகலாயர் ஆட்சியில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டன; இந்துக்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்று கூறிவரு கின்றனர். இசுலாமியர்கள் இந்திய நாட்டின் மீது ‘விசுவாசம்’ இல்லாதவர்கள்; இந்துக்களின் எதிரிகள் என்று வெறுப்பு நெருப்பை நாள்தோறும் உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வெறுப்பு அரசியலை மூலதனமாகக் கொண்டு தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

மணிப்பூரிலும் குக்கிகளை மெய்திகள் எதிரிகளாகக் கருதுவதற்கான பரப்புரைகளை, செயல்பாடுகளை பா.ச.க. ஆட்சி மேற்கொண்டு வருகிறது. 1971-க்குப் பிறகு வங்க தேசத்திலிருந்தும் மியான்மரிலிருந்தும் குக்கிகள் பெரும் எண்ணிக்கையில் மணிப்பூரில் குடியேறி வாழ்ந்து வரு கின்றனர் என்று கூறுகின்றனர். எனவே மணிப்பூருக்கான தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஏற்படுத்த வேண்டும். 1961­ஆம் ஆண்டிற்குப் பின் மணிப்பூரில் குடியேறிய குக்கிகளை வெளியேற்ற வேண்டும் என்று மெய்திகள் கோரி வருகின்றனர். மெய்தி இளைஞர்களைக் கொண்ட மெய்தி லீபம், அரம்பாய் டென்கோல் எனும் இரண்டு தீவிரவாத அமைப்புகள் உள்ளன. இவ்விரு அமைப்புகள் தாம் காவல் துறையின் 4000 துப்பாக்கிகளைக் களவாடிச் சென்றனர். மெய்தி லீபம் தலைவர் பிரமோத் சிங், பிரித்தானியர்கள் பர்மாவிலிருந்து குக்கிகளை மணிப் பூரில் குடியமர்த்தினர்; எனவே குக்கிகள் அனைவருமே வந்தேறிகள்; மெய்திகள் மட்டுமே மணிப்பூரின் தொல்குடியினர் என்று கூறுகிறார். ஆனால் முதல்வர் பிரேன் சிங் அய்ந்து ஆண்டுகளுக்கு முன் மணிப்பூரில் புலம்பெயர்ந்த குடியேறிகள் யாரும் இல்லை என்றார்.

குக்கிகள் போதை தரும் (POPPY) பயிர்களைப் பயிரிடுகின்றனர்; போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. மலைப் பகுதிகளில் மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் வறுமையின் காரணமாக சிலர் இதைப் பயிரிடுகின்றனர். அதனால் குக்கிகள் அனை வருமே இதைப் பயிரிடுவது போல் சித்தரிக்கப் படுகின்றனர். ஆயினும் போதைப் பயிர்களைப் பயிரிடுவதற்குப் பணம் தருவதும், அதைக் கடத்துவதும், விற்பனை செய்வதும் மெய்தியைச் சேர்ந்த மாஃபியா கும்பல்களே ஆகும். பா.ச.க. ஆட்சியின் அரவணைப்புடன் இதைச் செய்கின்றனர் என்பது அண்மையில் அம்பலமானது. மணிப்பூர் மாநிலத்தின் காவல் துறை துணை கண்காணிப்பாளரான மனோஜம் பிருந்தா என்கிற நேர்மையான பெண் அதிகாரி போதைப்பொருள் கும்பல் தலைவனைக் கைது செய்தார். அவனை உடனே விடுதலை செய்யுமாறும், இதை பிரேன்சிங் தெரிவித்த தாகவும் மணிப்பூர் மாநில பா.ச.க. துணைத் தலைவர் பிருந்தாவிடம் தொலைபேசியில் கூறினார். ஆனால் பிருந்தா அவனைச் சிறையில் அடைத்தார். உடனே நீதிமன்றம் மூலம் அவன் பிணையில் விடுதலையானான். இதனால் எரிச்சலடைந்த பிருந்தா இந்த விவரத்தைத் தன் முகநூலில் பதிவிட்டார். அதன்பின் அரசு பணியிலிருந்து விலகினார். இந்து கோயில்கள் மீது தாங்களே குண்டுவீசிவிட்டு முகமதியர் மீது பழிபோடுவது சங்பரிவாரங்களுக்குக் கைவந்த கலையாகும். மணிப்பூரில் போதைப் பயிர் ஒழிப்பு என்பதும் இதுபோன்றதேயாகும்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்றும், காட்டுப்பகுதி விரிவாக்கம் செய்யப்படுகிறது என்றும் கூறி 2023 பிப்பிரவரி முதல் குக்கிகளை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து பிரேன் சிங் ஆட்சி விரட்டியடித்தது. இவ்வாறு 291 குடியிருப்புகளை அகற்றியதாக அரசே கூறுகிறது. அரசு, ஆயுதப்படையுடன் எப்போது தங்கள் குடியிருப்பை அகற்றுமோ என்று குக்கிகள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

மலைப் பகுதிகளில் குக்கிகளை அவர்களின் வாழ்விடங் களிலிருந்து விரட்டும் பிரேன்சிங் ஆட்சியைக் கண்டித்து தொல் பழங்குடித் தலைவைர்கள் கூட்டமைப்பு 10.3.2023 அன்று மலை மாவட்டங்களில் போராட்டம் நடத்தியது. பிரேன் சிங் ஆட்சி காவல்துறையை ஏவி அப்போராட்டத்தை ஒடுக்கியது. குக்கி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்கு மாறாக குக்கி தேசியப்படை (KNA), சோமி புரட்சிகரப் படை (ZRA) ஆகிய ஆயுதமேந்திய குழுக்களுடன் 2008-இல் செய்து கொண்ட எதிர்நடவடிக்கை நிறுத்த ஒப்பந்தத்தை (Suspension of Operations-SoO) திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இது குக்கிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு அரசு அணியமாகி விட்டது என்பதையே காட்டியது.

மெய்திகளுக்கும்-குக்கிகளுக்கும் இடையிலும், பா.ச.க. ஆட்சிக்கும் -குக்கிகளுக்கு இடையிலும் உறவு நைந்து கொண்டிருந்த நிலையில், மெய்திகளைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற வழக்கில் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி எம்.வி. முரளிதரன், மெய்தி மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது குறித்து மணிப்பூர் அரசு நான்கு கிழமைகளுக்குள் ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை அறிக்கை அனுப்ப வேண்டும் என்று 27.3.2023 அன்று தீர்ப்பளித்தார். தீர்ப்பின் முழு விவரம் ஏப்பிரல் 19 அன்றுதான் வெளியிடப்பட்டது.

மணிப்பூர் மாநிலத்தின் மலைப் பகுதியில் வாழும் 34 வகைப்பட்ட பழங்குடியினரும் இத்தீர்ப்பால் அதிர்ச்சியும் சினமும் கொண்டனர். அரசமைப்புச் சட்டக்கூறு 371-சி உறுதி செய்துள்ள நிலத்தின் மீதான தங்கள் உரிமைப் பறிக்கப்படுவதைக் கண்டித்து 3.5.2023 அன்று மணிப்பூர் அனைத்துப் பழங்குடி மாணவர் கூட்டமைப்பு சார்பில் மலை மாவட்டங்களில் ஒற்றுமைப் பேரணியை நடத்தினர். இப்போராட்டத்தினால் குக்கி-மெய்தி இன மக்களிடையே மோதல் வெடித்தது. வீடுகள், கடைகள், நிறுவனங்கள், தேவாலயங்கள் தாக்கப்பட்டன; பல இடங்களில் தீக்கிரை யாக்கப்பட்டன. பெண்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்; பாலியல் துன்புறுத்தல்களுக்கும் வல்லுறவுக்கும் ஆளாக்கப் பட்டனர். பெரும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் குக்கிகளே ஆகும்.

கோத்ரா இரயில் பெட்டி எரிப்பையொட்டி, குசராத்தில் 2002 பிப்பிரவரி 27, 28, மார்ச்சு 1, 2, 3 ஆகிய நாள்களில் முசுலீம்கள் மீது சங்பரிவாரங்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தினர். 2000-க்கு மேற்பட்ட முசுலீம்கள் கொல்லப் பட்டனர். ஒரு இடத்தில் கலவரத்தை எவ்வாறு ஏற்படுத்துவது, அப்போது எப்படித் தாக்குதல் நடத்துவது என்று சங்கிகள் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்துக் கொண்டுள்ளனர். அதே தன்மையில் 2023 மே 3 முதல் 7 வரையில் சங் பரிவார மெய்திகள் குக்கிகள் மீது காவல் துறையின் துணையுடன் தாக்குதல் நடத்தினர். மலைப் பகுதியில் தொலைவில் உள்ள தேவாலயங்களை இருசக்கர வாகனத்தில் சிறு சிறு குழுக்களாக வந்த மெய்தி இளைஞர்கள் பெட்ரோல் குண்டு களை வீசி எரித்தனர். இவ்வாறு 400-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் எரிக்கப்பட்டன. குக்கிகள் எதிர்வினையாகத் திருப்பித் தாக்கியதில் மெய்திகளும் சிலர் கொல்லப்பட்டனர். மொத்தத்தில் 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அரசு கூறுகிறது. 60,000 பேர் வீடுகளையும் உடைமை களையும் இழந்து உயிருக்கு அஞ்சி முகாம்களில் உள்ளனர். மிசோரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் சென்றுள் ளனர். இவர்கள் அனைவரும் குக்கிகளே!

மே முதல் வாரத்தில் மணிப்பூரில் தொடர்ந்து கொடிய தாக்குதல்களும், கொலைகளும் நடந்து கொண்டிருந்த போது, பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகத்தில் தேர்தல் பரப்புரையில் ‘வீதி நாடகம்’ நடத்திக் கொண்டிருந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா மட்டும் தேர்தல் பரப்பு ரையை நிறுத்திவிட்டு தில்லிக்குச் சென்றார். மணிப்பூரில் கலவரத்தை அடக்க அசாம் ஆயுதப்படை, எல்லைப் பாது காப்புப் படை, மத்திய ரிசர்வ் படை ஆகியோரைக் கொண்ட 40,000 பேர் அனுப்பப்பட்டனர். அமித்ஷா மே 29 முதல் நான்கு நாட்கள் மணிப்பூரில் திட்டங்களைத் தீட்டிக் கொடுத்தார். ஒன்றிய அரசு விசாரணை ஆணையத்தை அமைத்தது. ஆனால் மூன்று மாதங்களாக வன்முறைத் தாக்குதல் தொடர்கின்றன.

இணைய சேவை முடக்கப்பட்டதால் மணிப்பூர் கலவரத்தில் உண்மை நிலை என்னவென்று வெளி உலகிற்குத் தெரியாமல் இருந்தது. சூலை 20 அன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவிருந்த நிலையில் ­அதற்கு முதல் நாள் சூலை 19 அன்று மணிப்பூரில் மே 4 அன்று குக்கி பெண்கள் இருவர் நிர்வாணமாக ஒரு கும்பல் புடைசூழ நடக்க வைத்து அழைத்துச் செல்லப்படும் காட்சி இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகி மக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இப்பெண்களில் ஒருவரின் தந்தையும் தம்பியும் தடுக்க வந்தபோது அப்பெண்ணின் கண் முன்னா லேயே அவர்கள் அக்கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர். ஒரு பெண்ணின் கணவர் இராணுவத்தில் பணிபுரிந்தவர்; கார்கில் போரில் கலந்து கொண்டவர். இவ்விரு பெண்களும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். வெறுங்காலுடன் 48 மணிநேரம் காட்டில் நடந்த பிறகு நாகா குடியிருப்பில் அடைக்கலமாயினர். இந்த வீடியோ குறித்து முதல்வர் பிரேன் சிங்கிடம் கேட்கப்பட்டது. இதுபோல் நூற்றுக்கும் மேற்பட்டவை நடந்துள்ளன என்று, இக்கொடுமை இயல்பானது என்கிற போக்கில் பதில் அளித்தார்.

சூலை 20 அன்று பிரதமர் மோடி நாடாளுமன்றத் திற்குள் நுழைவதற்கு முன் இக்கொடுமை குறித்து ­மணிப்பூர் கலவரம் தொடங்கி 77 நாட்களுக்குப் பிறகு ­சுருக்கமாக செய்தியாளர்கள் முன் தன் கண்டனத்தைப் பதிவு செய்தார். “இக்கொடிய நிகழ்ச்சி என்னை மிகவும் கவலை கொள்ளவும் சினமுறவும் செய்துவிட்டது; குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இராஜஸ்தான், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களிலும் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறினார். இதில்கூட அரசியல் செய்தது அருவருப்பானதாகும்.

பிரதமரைப் பின்பற்றி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பா.ச.க.வினர் மேற்கு வங்காளம், இராஜஸ்தான், சத்தீஸ்கர், கேரளம் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங் களில் பெண்கள்மீது நடத்தப்படும் பாலியல் கொடுமைகள் பற்றியே தொடர்ந்து பேசுகின்றனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மணிப்பூர் கலவரம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிவருகின்றன. பிரதமர் மோடியின் மவுனத்தைக் கலைக்க அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். ஆகத்து 8, 9 நாள்களில் மக்களவையில் மணிப்பூர் குறித்த விவாதம் நடைபெறும் என்றும் 10,8,2023 அன்று பிரதமர் மோடி பதிலளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி மீது 20,000 கோடிக்கு சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பாக மக்களவையில் மோடி எதுவும் பேசாமல், மற்ற செய்திகளைப் பற்றிப் பேசியது போல், இப்போதும் மணிப்பூர் பற்றிப் பேசாமல் இரண்டு, மூன்று மணிநேரம் 2024 தேர்தலுக்கான சொற்பொழிவாற்றக் கூடும் (இக்கட்டுரை 4.8.2023 அன்று எழுதப்பட்டதாகும்).

பாலியல் வன்கொடுமைக்குள்ளான அவ்விரு பெண்களில் ஒருவர் மே 18 அன்று காங்பேக்பி மாவட்டத்தில் புகார் அளித்தார். முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அப்பெண்ணுக்கு அக்கொடுமை நேர்ந்த காவல் நிலையத்துக்கு சூன் 21 அன்று தான் அத்தகவல் அனுப்பப் பட்டது. ஆனால் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. சூலை 19 அன்று வீடியோ வெளியான பிறகுதான் இதுதொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வீடியோ வெளிவந்த பிறகு மேலும் பல பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளைப் பதிவு செய்துள்ளனர். இக்கொடுமைகள் நடந்த போது காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்க முன்வராமல் இருந்துள்ளனர். சில சமயம் அவர்களே இக்கொடுமைக்குத் துணைபுரிந் துள்ளனர். ‘சுடரொளிப் பெண்கள்’ என்கிற அமைப்பைச் சேர்ந்த மெய்திப் பெண்கள், குக்கி பெண்களைத் தாக்கு வதிலும், மெய்தி இளைஞர் படையினரிடம் பாலியல் வல்லுறவுக்காக ஒப்படைப்பதிலும் முன்னின்று உள்ளனர். இந்த இழிநிலைக்கு குக்கிகள் மீது திட்டமிட்டு பல ஆண்டு களாக உருவாக்கிய வெறுப்பு அரசியலே காரணமாகும்.

உச்சநீதிமன்றம் 31.7.2023 அன்று மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டது; நிர்வாகம் தன் கடமையிலிருந்து தவறியுள்ளது என்று கண்டித்த பிறகும் மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலகவில்லை. பதவி விலகுமாறு பா.ச.க.வின் தலைமையும் சொல்லவில்லை. இவர்கள் பேசும் ‘இந்து தர்மம்’ இதுதான்.

உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட ஆணையம் மணிப்பூர் கலவரத்தை விசாரிக்க வேண்டும். குக்கி பகுதியின் பா.ச.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 10 குக்கி சட்டமன்ற உறுப்பினர்கள் மெய்திகளுடன் இனி இணைந்து வாழமுடியாது; பழங்குடியினர் பகுதியைத் தன்னாட்சிப் பெற்ற தனி நிர்வாகப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை ஒன்றிய அரசு ஏற்றுச் செயல்படுத்த வேண்டும்.

மணிப்பூர் கலவரம் பெண்கள் மீதான பாலியல் வன் கொடுமை என்கிற அளவில் ஊடகங்களில் பேசப்படுகிறது. ஆனால் மலைவாழ் குக்கிகள் உள்ளிட்ட பழங்குடியினரின் நில உரிமையை மெய்திகள் மூலமாகப் பறித்து முதலாளியப் பெரு நிறுவனங்களின் இலாபவேட்டைக்குத் தாரைவார்ப்பதே மணிப்பூர் சிக்கலின் அடித்தளமாகும். ஆடுகளை மோதவிட்டு அவை சிந்தும் குருதியைக் குடிக்கும் ஓநாயின் வேலையை பா.ச.க. செய்து கொண்டிருக்கிறது.

மதம், சாதி இன்னபிற முரண்பாடுகளைக் கூர்தீட்டி, வெறுப்புப் பேச்சு, வெறுப்பு அரசியல் அணிதிரட்டல் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி, மணிப்பூரில் நடந்தது போல் மற்ற மாநிலங்களிலும் கொடிய மோதல்களைச் சங்கிகளும் பா.ச.க.வும் சேர்ந்து நடத்தக் கூடிய ஆபத்து நம் முன் இருக்கிறது. இவ்வாறு நிகழாமல் தடுக்க பாசிச பா.ச.க. ஆட்சியை ஒன்றியத்தில் மட்டுமல்லாது, மாநிலங்களிலும் வீழ்த்த வேண்டும். அப்போதுதான் சனநாயகம் காக்கப்படும்.

க.முகிலன்

Pin It