முந்தைய பகுதி: பாகிஸ்தான் பிரிவினைக்கு யார் காரணம்?

ஆளுநரை ஒன்றிய ஆட்சியின் அதிகார தரகராக்கி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை தங்களது ஆட்சிகளாக்கும் முறைகேடு பா.ஜ.க.வில் சர்வ சாதாரணமாகி விட்டது. காங்கிரஸ் ஆட்சியிலும் இந்தப் போக்கு இருந்தது. ஆளுநர் குறித்து அரசியல் நிர்ணய சபையில் கடும் விவாதங்கள் நடந்தன.

பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு உளவு நிறுவனத்தில் பணியாற்றிய அய்.பி.எல். அதிகாரி ரவி, புதிய ஆளுநராகப் பதவி ஏற்க இருக்கிறார். ஆளுநர் பதவி குறித்து அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்களை சுருக்கமாகப் பார்க்கலாம். முரசொலி மாறன் எழுதிய ‘மாநில சுயாட்சி’ நூலிலிருந்து சில பகுதிகள்:

கவர்னரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். குடியரசுத் தலைவர் நியமிக்கிறார் என்றால் பிரதமர் நியமிக்கிறார் என்று பொருள்.

பிரதமர் நியமிக்கிறார் என்றால் மத்திய அரசை ஆளுகின்ற கட்சி அப்படி முடிவு எடுக்கிறது என்று பொருள்.

அரசியல் நிர்ணய சபை எடுத்த எடுப்பிலேயே இந்த முடிவுக்கு வந்து விடவில்லை. பலவித முடிவுகளை அலசி ஆராய்ந்து, இறுதியில் இப்படி நியமனம் செய்யும் முடிவுக்கு வந்தது.

அவற்றையெல்லாம் ஆராய்ந்தால், கவர்னர் பதவியை நியமனப் பதவி யாக்கியதன் உள்நோக்கம் நன்கு புலப்படும்.

அரசியல் நிர்ணய சபையின் துவக்கக் காலத்தில், வயது வந்தோருக்கு வாக்குரிமை என்கிற அடிப்படையில் மாநிலத்து வாக்காளர்கள் அனைவரும் பெரும்பான்மை வாக்குகளால் அந்த மாநிலத்து கவர்னரைத் தேர்ந் தெடுக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.

அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட கவர்னரிடம் 1935ஆம் ஆண்டுச் சட்டத்தில் உள்ளதுபோல, உசிதம் போல் அமைச்சரவையின் ஆலோசனைகளைக் கேட்காமல் செயலாற்றுகிற அதிகாரங்களையும் (Discretionary powers), சட்டசபையைக் கலக்காமல் பயன்படுத்தக்கூடிய சிறப்பு அதிகாரங்களையும் (Special powers) ஒப்படைக்கலாம் என்றும் அப்போது கருதப்பட்டது.

- ஆனால், இந்தக் கருத்தினைப் பின் ஏன் மாற்றிக் கொண்டார்கள்?

ஜவகர்லால் நேரு 1949, மே 31ஆம் நாளன்று அரசியல் நிர்ணய சபையில் பேசும்போது, இதற்கான காரணங் களை விளக்கியிருக்கிறார்.

ஆனால், உண்மை இதுதான்; ஒரு மாநிலத்து கவர்னரை அந்த மாநிலத்து மக்களே தேர்ந்தெடுப் பதாக இருந்தால், அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தாம் கவர்னர் ஆக முடியும். எனவே, மாநிலத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவர்னர் வலிமை மிகுந்த ஜாம்பவனாக - மத்திய அரசுக்குக் கட்டுப் படாமல், மத்திய அரசையே கேள்வி கேட்க முனைந் தால் என்ன செய்வது என்கிற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டது. எனவேதான், மத்திய அரசின் பிடியைப் பலப்படுத்திக் கொள்ள கவர்னரைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தார்கள்.

ஆனால், நேரு நேரடியாக இந்தக் காரணத்தை வெளிப்படையாகக் கூறவில்லை. ‘மாகாணப் பிரிவினை உணர்ச்சிகளும், குறுகிய, மாகாண ரீதியான எண்ணங்களும், செயலும் ஊக்கப்படுத்தப் படும்’ என்று பண்டித நேரு சுற்றி வளைத்துக் கூறினார்.

டாக்டர் பி.எஸ்.தேஷ்முக் இன்னொரு சூழ் நிலையைப் பயங்கரமாகப் படம் பிடித்துக் காட்டினார்: “மாநிலத்தில் உள்ள மிக முக்கிய மனிதர்களான கவர்னரும், முதலமைச்சரும் எல்லாவற்றிலும் ஒத்துப் போவதாக இருந்து, மத்திய அரசை எதிர்ப்பதிலும் அவர்கள் ஒத்துப் போய் விட்டால் என்ன செய்வது? மத்திய அரசு சொல்கிற கருத்துரைகளையும், பிறப்பிக்கிற கட்டளைகளையும் அந்த மாநில அரசு கேட்கா விட்டால், மத்திய அரசு அந்த மாநிலத்தின் மீது படை யெடுத்துச் செல்லுமா?” - என்று அவர் கேட்டார்.

கவர்னர் பதவிக்குத் தேர்தல் நடத்தினால், அதன் காரணமாகப் பணச் செலவு ஏற்படும் என்பதும் ஒரு காரணமாகக் காட்டப்பட்டது.

இந்த முறை அமுலுக்கு வந்தால் கவர்னர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். முதலமைச்சரோ முதலில் ஒரு தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதியாக கவர்னரால் முதலமைச்சராக நியமிக்கப்படுகிறவர். ஆனால், கவர்னருக்கோ ‘நான்தான் நேரடியாக மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்’ என்கிற உணர்ச்சி இயற்கை யாகவே ஏற்படும். இப்படி இரு பதவிகளில் இருப்பவர்களும் தேர்ந்தெடுக்கப்படு கிறவர்களாக ஆகி விட்டால் அதிகாரத்தைப் பயன்படுத்தும் விஷயங்களில் இருவருக்கும் மோதல் ஏற்படும் என்கிற காரணமும் மறுபரிசீலனைக்கான காரணங்களில் ஒன்றாகும்.

தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுத்தால் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் மோதல் ஏற்படும் என்கிற வாதத்தை டாக்டர் அம்பேத்கர் ஏற்றுக் கொள்ள வில்லை. கவர்னர் தேர்தல் தனி மனிதரின் செல்வாக்கின் அடிப்படையில் - இவர் இந்தப் பதவிக்கு ஏற்றவரா? அதற்கேற்ற கல்வியறிவும், குணமும் இவரிடம் இருக்கின்றனவா? என்கிற பரிசீலனைக்கு உட்பட்டு நடக்கும். ஆனால், முதலமைச்சர் தேர்தலோ, இவருடைய திட்டம் ஒத்து வருமா? சரியானதா? என்கிற அடிப் படையில் அமையும். எனவே, தேர்ந்தெடுக்கப்படுவதன் காரணமாக இருவருக்கும் மோதல் ஏற்படக்கூடும் என்பதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

ஆனால், 1935ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி (பிரிட்டிஷ் ஆட்சியில் மாகாணங்களுக்கு வழங்கப் பட்ட சட்டம்-ஆர்) கவர்னருக்குத் தரப்பட்ட சிறப்பு அதிகாரங்கள் அனைத்தையும் தம் உசிதம்போல் பணியாற்றும் அதிகாரங்களில் பலவற்றையும் நீக்கி விட்டு, அமைச்சரவையின் பரிந்துரையின்படியே கவர்னர் பெரும்பாலும் பணியாற்ற வேண்டும் - என்று அமைத்துவிட்டதால், அத்தகைய பதவிக்கு ஏராளமான பணம், நேரம், உழைப்பு ஆகியவற்றைச் செலவிடும் தேர்தல் வேண்டுமா என்கிற கேள்வி பிறந்ததாகவும், முன்புபோல் அப்பதவிக்கு அதிக அதிகாரங்கள் இல்லை என்பதை உணர்ந்தவர்கள் எவரும் கவர்னர் தேர்தலில் கலந்து கொள்ள மாட் டார்கள் என்றும்; அதனால்தான் தேர்ந்தெடுக்கிற முடிவைக் கைவிட்டதாகவும் டாக்டர் அம்பேத்கர் கூறினார்.

அரசியல் சட்டத்தை எழுதிய ‘நகல் வரைவுக் கமிட்டி’ (Drafting Committee) மேலும் இரு யோசனைகளை முன் வைத்தது.

முதல் யோசனை: முதலமைச்சர் போல கவர்னரை அந்தந்த மாநிலத்துச் சட்டமன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுப்பது. - இது இரண்டு முதலமைச்சர்களை உருவாக்குவதற்குச் சமம் என்று கருதி இந்த யோசனை கைவிடப்பட்டது.

இரண்டாவது யோசனை : கவர்னர் பதவிக்கான வேட்பாளர்களைப் பட்டியலாகத் தயாரித்து, இந்தப் பட்டியலில் காணும் ஒருவரைக் குடியரசுத் தலைவர் கவர்னராக நியமிக்கலாம் என்று சட்டமன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது; பிறகு குடியரசுத் தலைவர் அந்தப் பட்டியலி லிருந்து ஒருவரை கவர்னராக நியமிப்பார்.

இந்த முறை அமுல்படுத்தப்பட்டால் மாநிலத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுடைய அல்லது பெரும் பான்மை பெற்றிருக்கக்கூடிய கட்சியின் ஆதரவைப் பெற்றவர்கள் தாம் கவர்னராக வரமுடியும்.

பிறகு கவர்னருக்கும், மாநிலச் சட்டமன்றத்திற்கும் தொடர்பு ஏற்பட்டுவிடும்; அதன் பின்னர் மத்திய அரசு விரும்புவதுபோல் காரியங்கள் நடக்காமல் போய்விடக்கூடும் - என்கிற உள்நோக்கத்தாலேயே இந்த யோசனையும் கைவிடப்பட்டது.

இறுதியாகத்தான், கவர்னர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார் என்கிற திருத்தத்தைப் பிரஜேஸ்வர் பிரசாத் என்பவர் கொண்டு வந்தார்.

“மத்திய அரசின் அதிகாரம் எல்லா மாகாணங் களிலும் நிலை நாட்டப்பட வேண்டியது அவசியம்” - என்பதையே அந்தத் திருத்தத்திற்குக் காரணமாகக் காட்டினார்.

“இந்த நாட்டின் நடுத்தர வர்க்கத்து அறிவாளி களிடையே படைக்கும் சக்தி இல்லாமல் போய் விட்டது. தாமாகவே முயற்சி மேற் கொள்ளும் போக்கு அவர்களை விட்டு நீங்கி விட்டது. இந்த மண்ணை ஆளவேண்டிய மக்கள் எல்லா வழிகளிலும் ஒடுக்கப்பட்டவர்களாகவும், சுரண்டப்பட்டவர் களாகவும் இருக்கிறார்கள். இந்த மாதிரியான சூழ்நிலையில் மாகாண நிர்வாகத்தைத் தன் கையில் வைத்திருப்பதைத் தவிர இந்தியப் பேரரசுக்கு வேறு வழி இல்லை” - என்று பிரஜேஷ்வர் பிரசாத் கூறினார்.

சர்வ வல்லமை பெற்ற ஞான பண்டிதர்கள் ஏதோ மத்திய அரசில்தான் நிலையாகக் குடியேறியிருப்பது போலவும்; மாநிலங்களில் ஏதோ மக்களுடைய வாக்குகளைத் தவறிப் பெற்றுவிடுகிற தான் தோன்றிகளாக இருப்பது போலவும். ஒரு நினைப்பு எப்படி அப்போது நீக்கமற அரசியல் நிர்ணய சபையில் நிறைந்திருந்தது என்பதற்கு இப்பேச்சு ஒரு சான்று!

அடுத்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னணி உறுப்பினர் மகாவீர் தியாகி நிலைமையைத் தெளிவாக்கினார்.

“நாம் இப்போது சுயாட்சி கொண்ட மாநிலங்களை உருவாக்குவது என்கிற நமது பழைய கருத்தைக் கைவிட்டு விட்டு, மத்தியிலே அதிகாரங்கள் அனைத்தையும் குவித்து, இப்போது நியமன கவர்னர்களையும் பெறப் போகிறோம்” - என்று உண்மையைப் போட்டு உடைத்தார்.

அவர் இன்னும் ஒருபடி மேலே சென்று, “மத்திய அரசின் கொள்கையை வற்புறுத்தி, அதைப் பாதுகாக்கிற ஏஜெண்டாக அல்லது ஏஜென்சியாக இருக்கிறவர்தாம் கவர்னர்” என்று கூறி முழு அந்தரங்கத்தையும் வெளியிட்டார்.

ஆம்; மாநில அமைச்சரவை மீதும், அத்தகைய அமைச்சரவையை உருவாக்குகிற மாநிலத்து மக்கள் மீதும் சிறிதும் நம்பிக்கை வைக்காமல்; அவர்களைக் கண்காணிப்பதற்கு மத்திய அரசால் நியமிக்கப்படும் ‘கங்காணி’தான் கவர்னர்!

1952ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அப்போதைய சென்னை மாநிலத்தில் மொத்தமிருந்த 325 சட்டமன்றத் தொகுதிகளில் 155 இடங்களில் தான் காங்கிரஸ் வென்றது. வெற்றி பெற்ற காங்கிரஸ் அல்லாத 167 பேர் ‘ஐக்கிய ஜனநாயக முன்னணி’ அமைத்துக் கொண்டனர். தம்மை அந்த 167 பேரும் ஆதரிப்பதாகவும், தாம் முதலமைச்சர் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அத்தனை பேருடைய கையெழுத்துடன் டி. பிரகாசம், கவர்னர் ஸ்ரீபிரகாசாவுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

அந்த 167 பேரில் பலர் சுயேச்சைகள் என்பது உண்மை தான். எனினும், யார் முதலமைச்சர் ஆகிறாரோ அவர் பக்கம் தான் இந்தச் சுயேச்சைள் சாய்வாhhள் என்பது உறுதி. ஆனால், ஸ்ரீபிரகாசா காங்கிரஸ் அல்லாத கட்சிக்கு அந்த வாய்ப்பைக் கொடுப்பதற்குத் தயாராக இல்லை.

சட்டசபையிலே சிறுபான்மைக் கட்சியாக இருந் காங்கிரசைப் பதவியில் அமர்த்துவதற்காக அவர் இராஜாஜியை அமைச்சரவை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு வகை செய்ய அவரை மேலவக்கு நியமன உறுப்பினராக்கி உள்ளே நுழைய வைத்தார்.

பிரகாசத்தை அழைத்திருந்தால் சுயேச்சைகள் அவர் பக்கம் சேர்ந்திருப்பார்கள். ஆனால், அப்போது ‘கவர்னர் யானை’ இராஜாஜி தலையில் மாலை சூட்டியதால் சுயேச்சைகள் அவர் பக்கம் சேர்ந்து கொண்டார்கள்.

இதே ராஜாஜி, கவர்னர்-ஜெனரலாக இருந்த போது ஸ்ரீபிரகாசவைக் கவர்னராக நியமித்து, அந்த உத்தரவில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

இதே ஜனநாயக விரோத காரியத்தைத் தான் 1935ஆவது ஆண்டுச் சட்டப்படி பிரிட்டிஷாரின் ஏஜெண்டுகளாக இருந்த கவர்னர்கள் பல மாகாணங்களில் செய்து கொண்டிருந்தார்கள். சட்டமன்றத்தில் சிறுபான்மைக் கட்சி ஒன்றின் தலைவரை அழைத்து அமைச்சரவை அமைக்கச் சொல்லி, பிறகு அக் கட்சிக்குப் பெரும்பான்மை தேடிக் கொடுத்தார்கள். அப்போது பாதிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சி! அப்போது கவர்னரையும், 1935ஆம் ஆண்டின் சட்டத்தையும் கண்டித்தது காங்கிரஸ் கட்சி! அதே கட்சி சிறிதும் வெட்கமில்லாமல் தனக்கு பிரிட்டி ஷார் செய்த அதே கொடுமையைப் பிற கட்சி களுக்குச் செய்ததும், அப்படி ஒரு அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டதும் வரலாற்றின் வெட்ககரமான நிகழ்ச்சிகளுள் ஒன்றாகும்.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்