Stan Swamyதலையங்கம்

விசாரணைக் கைதிகளின் உரிமைக்காகப் போராடியவர்… விசாரணைக் கைதியாகவே மாண்டார்..

வனங்களில், மலைகளில், பொதிந்து கிடக்கும் கனிம வளங்களைச் சுரண்டி லாபம் பார்க்க விரும்பிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையூறாக இருந்த பழங்குடி மக்களை அங்கிருந்து துரத்தி அடிக்க பழங்குடி இளைஞர்கள் மீது பல்வேறு போலி வழக்குகளை தொடுத்து விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைத்த அவலநிலையில் இருந்து அம்மக்களை மீட்டெடுக்க எந்த தேவதூதனும் வரவில்லை.

தமிழ்நாட்டின் திருச்சிக்கு பக்கத்தில் உள்ள விரகளூரில் பிறந்து இறையியல் படித்து பாதிரியாரான ஸ்டான்ஸ் சாமியே களத்தில் நின்றார். தொடர்ந்து 30 ஆண்டுகளாக பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தார்.

அதற்காக அதிகார வர்க்கத்தால் கரம் வைக்கப்பட்டவர், நாட்டில் உள்ள சுய சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள், அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை ஒழித்துக்கட்டவே ஜோடிக்கப்பட்ட பீமா கோரேகான் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தேசிய பாதுகாப்பு முகமையினால் 2020 அக்டோபர் 8ஆம் நாள் தனது 83 வயதில் கைது செய்யப்பட்டார்.

பார்க்கின்சன் வியாதி எனப்படும் நடுக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவரால் ஒரு கிளாஸ் தண்ணீரை தனது நடுங்கும் கரங்களால் பிடித்துக் குடிப்பதற்கு முடியாது. அதற்காக உறிஞ்சி குழாய் (sipper) பயன்படுத்துவது அவசியம். அதை வழங்கக் கூட தேசிய பாதுகாப்பு முகமை மறுத்தது.

அந்த வயோதிகப் பெரியவர் அதற்காக ஒரு மாதம் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. இது மட்டுமல்லாமல் பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவக் காரணங்களுக்காக கேட்கப்பட்ட ஜாமீன் வழங்கப் படவில்லை.

தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த மே மாதம் உண்ணவும் நடக்கவும் முடியாத நிலைக்கு வந்த நிலையில் ஜூன் 17 அன்று அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 5ஆம் நாள் அவரது ஜாமின் மனு மீது விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருந்தபோதே அவரது மரணச் செய்தியும் நீதிமன்றத்தை எட்டியது.

விசாரணைக் கைதிகளாக வாழ்வை இழப்பவர்களின் உரிமைக்காகப் போராடிய அவர் ஒரு விசாரணைக் கைதியாகவே தன் போராட்டத்தை முடித்துக்கொண்டார். நம் நாட்டின் அதிகார வர்க்கம் எத்தனை கொடுங்கோன்மை வாய்ந்தது என்பதற்கு திரு ஸ்டான்ஸ் சாமியின் மரணம் மற்றுமொரு சாட்சி.

ஆனந்த் டெல்டும்டே, வரவர ராவ் உள்ளிட்ட இந்த வழக்கில் கைதானவர்களில் பலரும் எழுபதைக் கடந்தவர்கள்! பல்வேறு உடல் நலக் கோளாறுகள் உள்ளவர்கள். அவர்களுக்கும் ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டுள்ளது. அதிகார வர்க்கத்தை நோக்கி கேள்வி எழுப்புபவர்கள், சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து மக்களைத் திரட்டுபவர்கள், பழமை வாதத்தை கேள்விக்குள்ளாகும் பகுத்தறிவாளர்கள் ஆகியோர், முன்பு நேரடியாக ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

இன்றைக்கு நாஜிக்களின் வதை முகாம்களில் சிக்கியவர்கள் போல விசாரணைக் கைதிகளாக வதைக்கப் படுகிறார்கள்.

ஆனந்த் டெல்டும்டே சிறையில் அடைக்கப்படும் முன் எழுதிய கடிதத்தில்,

"உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுங்கள்” என்றார்

 அதேபோல பாதிரியார் ஸ்டன்ஸ் சாமியும் சிறையில் அடைபடும் முன்பு வெளியிட்ட காணொளி ஒன்றில் கூறியிருப்பார் "நான் பார்வையாளனாக இருந்து விடவில்லை" என்று! இன்று தேசமே வெறும் பார்வையாளராக மரணத்தை மௌனமாகக் கடந்து செல்கிறது.

மனசாட்சிக்கு கொஞ்சம் வேலை கொடுப்போம்…

- வெங்காயம் ஆசிரியர் குழு

Pin It