pregnancy 350என்னுடைய தோழியின் கணவர் ஒரு நாள் திடீரென தொலைபேசியில் அழைத்திருந்தார். கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது அவரது குரல். காரணம், பிரசவம் நடந்த சில நாட்களாகவே, மிகவும் சோர்வாக அவள் இருந்ததாகவும், இது அவளது வழக்கமான மனநிலைக்கு மாறானது என்று சொன்னார்.

சரி, சில வாரத்தில் சரி ஆகிவிடும் என்று நினைத்த அவர், அவளை மகிழ்வித்து, நிஜ "அவளை" மீட்டெடுக்க பலவகையில் முயற்சி செய்தாலும், நிலைமை 4 மாதத்திற்கு அப்படியே தான் இருந்திருக்கிறது. ஆக, இந்த மனநிலை, மனம் சார்ந்த நோயின் வெளிப்பாடா அல்லது தாயான பிறகு வந்திருக்கும் புதிய பொறுப்புகளால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் வெளிப்பாடா என்ற கேள்வி தான் அவர் கடைசியில் என்னிடம் கேட்டது.

நம் சமூகத்தில் நிகழும் இந்த நிஜமான நிகழ்வு நம்மில் பலருக்கும் தெரிவதே இல்லை, அதற்கான முக்கியமான காரணம், இவ்வகை மனச் சோர்வினை பொதுவாக யாரும் கண்டு கொள்வதில்லை, அம்மனச் சோர்வினை அனுபவிப்பவரையும் சேர்த்து. இப்படி நிகழ்ந்தால், மருத்துவ உதவியினை நாடவேண்டும் என்று நமக்குச் சொல்லியும் கொடுக்கப்படுவதில்லை அல்லவா.

நம் சமூகத்தில், புதிதாகப் பிள்ளையைப் பெற்றெடுத்தப் பெண் மனச் சோர்வுடன் அல்லாடும் பொழுது, சுற்றி இருக்கும் கூட்டம், அவளை என்ன சொல்கிறது? பிள்ளையை வளர்க்க லாயக்கற்றவள் என்று சொல்கிறது. பிள்ளைப் பேறு ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு என்ற போதும், பிரசவத்திற்குப் பிறகு பல பெண்களுக்கு பிரசவத்திற்குப் பின்னான மனச்சோர்வினுக்கான அறிகுறிகள் தென்படும். அவ்வறிகுறிகள் ஒன்று மென்மையாகத் தென்பட ஆரம்பித்து தானாகவே மறைந்துவிடும் அல்லது தீவிரமான மனச்சோர்வினுக்கு இட்டுச்செல்லும். குணப்படுத்தப்படாத பிரசவத்திற்குப் பின்னான மனச்சோர்வானது தாயுக்கும் சேய்க்கும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

Post Partum என்பது பிரசவம் நடந்து முதல் 12 மாதங்களைக் குறிக்கும் காலம். இக்காலத்தில் ஏற்படும் மனச்சோர்வே Post Partum Depression என்று சொல்லப்படுகின்றது. Post Partum Depression இல் 54% பிரசவம் நடந்து 1 மாதத்தில் ஏற்படும், 40% 2 முதல் 4 மாதத்திற்குள்ளும், 6% 5 முதல் 12 மாதத்திற்குள்ளும் ஏற்படும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இவ்வகை மனச்சோர்வு குறித்து தெளிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அறுதியிட்டு எண்ணிக்கைகள் வெளியிடப்படவில்லை என்ற போதிலும் ஒரு ஆய்வின் படி, 22% பேருக்கு இவ்வகை மனச்சோர்வு ஏற்படுகின்றது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பிரசவத்திற்குப் பின்னான மனச் சோர்வு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது.  அவை,

1. இளம் வயதில் கர்ப்பம் தரித்தல்

2. ஒற்றைத் தாயாய் இருத்தல்

3. பல பிள்ளைப் பேறு

4. பிரசவத்திற்குப் பின்னான மனச்சோர்வு அல்லது மனநலக் குறைபாடு போன்றவை குடும்பத்தில் ஒருவருக்கு இருத்தல்

5. துணைவரின் வழி வன்முறையினை எதிர்கொள்ளுதல்

6. அவசியமற்ற அல்லது திட்டமிடப்படாத கர்ப்பம்

7. கர்ப்பம் குறித்து எதிர்மறை எண்ணங்கள் வைத்திருத்தல்

8. பிள்ளைப் பேறு குறித்து பயம்

9. உடற்பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது பிரசவத்தின் பொழுது நோய்த்தொற்று ஏற்படுதல் வழி

10. தன் உடல் குறித்து எதிர்மறை எண்ணங்கள், அதிருப்தி

11. மாதவிலக்கிற்கு முன் தோன்றும் நோய்க்குறிகள் என்ற Pre Menstrual Syndrome

12. பிள்ளைப்பேறு சார்ந்த பதட்டம்

13. பிள்ளைப்பேறு சார்ந்த தூக்கத் தொந்தரவுகள்

14. பால் புகட்டுவதில் சிரமம்

15. குழந்தை வளர்ப்பு குறித்து மன அழுத்தம்

இதனைத் தவிர்த்து

1. மரபணு சார்ந்த காரணங்கள்

2. பிரசவத்திற்குப் பின்னான ஹார்மோன் அளவில் மாற்றங்கள் இம்மனச்சோர்வு ஏற்படுகையில் உண்டாகும் வெளிப்பாடுகள்

i. மனநிலையில் சோர்வு

ii. சுவாரசியம் இழப்பு

3. பசி மற்றும் உடல் எடையில் மாறுதல் (அதிகரிப்பு மற்றும் இழப்பு)

4. தூக்கம் சம்பந்தமான தொந்தரவுகள் (தூக்கம் வருவதில் சிரமம், நள்ளிரவில் திடீரென விழித்தல், வழக்கத்திற்கு மாறாகத் தூக்கத்தில் இருந்து சீக்கிரமாய் எழுதல் அல்லது காலை நேரத்தில் தூக்கக்கலக்கம்)

5. எளிதாய் சோர்ந்து போதல் (உடல் அளவில்)

6. ஒழுங்காய் சிந்திக்க இயலாமை, கவனிக்க இயலாமை, உற்று நோக்க இயலாமை, திட்டமிட இயலாமை, செய்திகளை உள்வாங்க இயலாமை, நினைவில் நிறுத்த இயலாமை, சரளமாய் பேச இயலாமை

7. எதற்கும் லாயக்கற்றதாய் உணர்தல்

8. தற்கொலை உணர்வுகள்

9. அளவிற்கு அதிகமான குற்றவுணர்வு

சிகிச்சை

1. ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு, நோய் கண்டறியப்படுவது மிக அவசியம். சிகிச்சை அளிக்கப்படாத பிரசவத்திற்குப் பின்னான மனச் சோர்வு கடும் எதிர்மறை விளைவுகளுக்கு இட்டுச்செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

2. தேர்ந்த மன நல ஆலோசகர்களிடம் ஆலோசனை பெறுவதும் மருத்துவச் சிகிச்சையும் சிகிச்சையின் ஒரு பகுதி.

3. தாய்ப்பால் அருந்தும் பிள்ளைகளுக்கு சிகிச்சையில் அளிக்கப்படும் மருந்துகளினால் எந்த விளைவும் ஏற்படாது இருக்க தாய்ப் பால் புகட்டும் தாய்மார்களுக்கு தகுந்த மருத்துவச் சிகிச்சை வழங்கப்படும். தேர்ந்த மருத்துவ உதவி தேவைப்படுவதற்கான காரணமாக இதனைச் சொல்லலாம்.                        

Pin It