சாதிகள் இல்லையடி பாப்பா என்று கூறிய பாரதியாரையும் பெரியாரையும் மதிப்பெண் வினாக்களுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்ற சமூகம் இது. பிறந்த குழந்தையின் பெயர் முடிவு செய்யப்படும் முன்பே சாதி அதனோடு ஒன்றிக் கொள்கிறது. இவை அனைத்திற்கும் காரணம் சமூகக் கட்டமைப்பு தான். மனித இனம் என்ற அறிவியல் ரீதியான கூட்டம் சாதிய தோற்றத்திற்கு பின்னால் தனக்குள் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திக் கொண்டன.

இதனை உடைத்தெறிய முடியாத அளவு இது இறைவனுடன் பின்னிப் பிணையப்பட்டுள்ளது. எனவே சாதி இறைவனால் வரையறுக்கப்பட்டது என்பது மரபாக மாறியது. சாதிக்கும் அதன் வளர்ச்சிக்கும் ஏதிராக எத்தனை போராட்டங்கள் வந்தாலும் அவை அனைத்தும் மறைக்கப் படுகின்றன. சாதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது இளைய சமுதாயத்தினரின் கடமை. ஆனால் சாதி சங்கங்கள் அவர்களைத் தன்வயப்படுத்தி வைத்துள்ளன. சுய சாதி பெருமையைக் கேட்டு கேட்டு தான் அவர்கள் வளர்கின்றனர்.

பெரியார் போன்ற பெரியவர்கள் வாழ்ந்த மண்ணில் எத்தனையோ சாதியக் கலவரங்கள் இன்று நிகழ்கின்றன. எல்லா மனிதர்களும் ஒன்று தான் என்ற எண்ணத்தைக் கொள்வதே மாண்பு. நவீனத்துவத்தைக் கடந்தும் சமூகத்தின் மீது ஆழமான தாக்கத்தைக் கொண்டுள்ளது சாதி. ஒரு மாணவன் சக தோழனாக பழகியும் கூட “நீ என்ன சாதி?” என கேட்பதில் உள்ளது சாதியின் தாக்கம். பின்னர் அவன் தன்னை விட தாழ்வானவனாக இருக்கும் பட்சத்தில் அவனை முற்றிலுமாக ஒதுக்கி விடுவர். தேவையான அனைத்து தகுதிகளையும் கொண்டு அந்த மாணவன் உயர்நிலையை அடைந்தாலும் கூட அவன் இட ஒதுக்கீட்டில் வந்தவன் என எளிதில் கூறி விடுகின்றனர். ஒரு நாடே சாதி ரீதியில் ஊர் இந்தியா மற்றும் சேரி இந்தியா என பிரிக்கப் பட்டுள்ள போது மாணவர்கள் சுய சாதி பெருமையைப் பேசுவதில் ஆச்சரியம் என்ன உள்ளது? மதத்தைப் புறக்கணிக்க இடம் தரும் சட்டங்கள் சாதியைப் புறக்கணிக்க இடம் தருவதில்லை. கல்வி கற்றால் சாதி ஒழியும் என்பது மூட நம்பிக்கையே. அப்படியானால் இன்று வாழும் முக்கால் வாசி பேர் சாதியைப் புறக்கணித்திருக்க வேண்டும் அல்லவா? இது நடைபெறாமல் இருப்பதன் காரணம் சாதியப் பிரிவினைக்கு எதிரான வலுவான எதிர்ப்புகள் புத்தகத்தில்  இடம் பெறாமையே.  இரண்டாயிரம் ஆண்டுகளாக பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய மக்களை சிறிதேனும் உயர்நிலைக்கு கொண்டு செல்லும் கருவியே இட ஒதுக்கீடு. பட்டியல் இனத்தவரின் சிறிய வளர்ச்சியைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் பிரிவினை வாதங்களை முன்னெடுக்கின்றனர். நகரங்களிலே சாதி படர்ந்துள்ள வேளையில் கிராமப் புறங்களின் நிலை மோசமானது. தனித்தனியே அமைந்த தெருக்கள், தீண்டாமை போன்றவை நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பள்ளியில் மாணவர்களுக்கிடையே நிகழும் பேதங்களைத் தீர்த்து வைக்க வேண்டியவர் ஆசிரியர் தான். ஆனால் அவரே பிரிவினையோடும் பாகுபாட்டோடும் நடந்து கொள்வது தான் இன்றைய பள்ளிகளின் நிலைமை. இதற்கானத் தீர்வு மாணவர்களிடையே உள்ள வாசிப்பு தான்.ஒரு பொறி நெருப்பாக இருந்தாலும் பிறரிடம் பரவத் தொடங்கினால் அது இந்த சமூகத்திற்கே ஆபத்தானது. சாதியின் பரவலைத் தகர்ப்பதாக உள்ளன கலப்புத் திருமணங்கள்.

ஆனால் இரத்த உறவுகளையே கூட கொல்லத் துணிகின்றன கவுரவ கொலைகள். இத்தகைய நிலையிலும் சிலர் “இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க?” என கேட்பது அறியாமையின் உச்சம். நாம் சாதியை விட்டாலும் சாதி நம்மை விடுவதில்லை என்பது தான் உண்மை. எனவே, பட்டியல் இனத்தினர் தனது அடையாளங்களை மறைக்கவே பல இன்னல் படுகின்றனர். சாதி எதிர்ப்பை எவர் முன்னெடுத்தாலும் அவர் தலித்தாக தான் இருக்க முடியும் என்ற எண்ணமே சாபக்கேடானது. சாதிக்கும் மதத்திற்குமான உறவாடல்களை பெரியார் எடுத்துக் கூறிய போது அவர் மத விரோதியாக சித்தரிக்கப் பட்டார். ஆனால் இன்று சாதியையும் மதத்தையும் மட்டுமே வைத்து தான் பெரும்பாலான அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.  மாணவர்கள் சாதிக்குள் அடங்காமல் சாதிக்க வேண்டியவர்கள். சாதியை அழிப்போம். மனிதத்தை மீட்போம். மானுட சாதியின் மனங்களை மாற்றுவழிப் பாதையை நோக்கி பயணிக்கச் செய்வோம். சமத்துவத்தைப் படைப்போம்.

புதிய உலகை உருவாக்குவோம்.            

Pin It