faaruqபாரூக் நினைவு நாள் கருத்தரங்கில் தோழர் ஜின்னா பேச்சு

கோவை, அண்ணாமலை அரங்கில் 21.3.2021 அன்று மாலை 4-00 மணிக்கு கழக கோவை மாநகரத் தலைவர் நேருதாஸ் தலைமையில், இஸ்லாமிய மதவெறியர் களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் பாரூக் நான்காம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்நிகழ்வில் கோவை, தோழர் ஜின்னா வரவேற்புரையாற்றினார். அவரது உரை:

“கடந்த வருடம் தோழர் பாரூக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதன் பிறகு கொரானா காரணமாக, கூட்டம், நிகழ்ச்சிகளுக்குத் தடை என அரசு அறிவித்து, அதனால் அன்று நிகழ்ச்சி நடக்குமோ, நடக்காதோ என்ற அச்சத்துடனேயே இருந்து, முடிவில் வெற்றிகரமாக கூட்டத்தை நடத்தி முடிந்தோம்.

அது போலவே இந்த வருடமும் கொரானா அச்சம் நிலவி வருகிறது. அது கேரளாவில் இருந்து வர வேண்டிய எசன்ஸ் கிளப்பினரை வர இயலாமல் செய்து விடுமோ என கடந்த ஒரு வாரமாக கலங்கிய நிலையில், அவைகளை கடந்து நம் கூட்டத்தில் லியாகத் அலியும், அஸ்ரப்பும் கலந்துகொண்டது, மிகவும்பாராட்டுக்குரியதும், மதிப்பிற்குரியதாகவும் கருதுகிறேன்.

கேரளா யுக்தி வாதிகள், பல பிரிவினராக பிரிந்து இருந்தாலும், கேரளா முழுவதும் கடந்த மூன்று வருடங்களாக, பாரூக்கிற்கு பல நினைவுக் கூட்டங்கள் நடத்தி உள்ளார்கள், பல உதவிகளும் பாரூக் குடும்பத்திற்கு செய்து இருக்கிறார்கள் எதற்காக?

கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத மறுப்பு என்பவைகளால் யார் பாதிக்கப்பட்டாலும், உதவ, ஒன்றிணைய மாநிலம், நாடு என்ற எந்த தடையும் கிடையாது என்பதை உணர்த்துவதற்காக.

அதே போல எம். எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ், தபோல்கர் போன்ற வேறு மாநிலங்களில் மதவாதத்தால் கொலை செய்யப்பட்டவர்களை, மாநில வேறுபாடு காணாமல் நினைவு கூரும் நம் தமிழக கட்சிகளுக்கு ஏனோ, தமிழ்நாட்டில் பிறந்து மதவாதத்தால் கொலை செய்யப்பட்ட, நம் பாரூக்கை மட்டும் நினைவுகூர மனம் வருவதில்லை, அது இசுலாமிய அமைப்புகளுடன் உள்ள பாசமா? தயக்கமா? இல்லை அச்சமா? என்பது தான் புரியவில்லை.

ஆனால் மண் வேறாக இருந்தாலும், மொழி வேறாக இருந்தாலும், மத வெறியால் கொலை செய்யப்பட்டவர்களின் வரிசையில் பாரூக்கை என்றும் மறவாது நினைவு கூரும் கேரளா யுக்திவாதிகள் இன்று நம் கூட்டத்தில் இணைந்தது தான், மிகச் சிறப்புடையதாக நான் கருதுகிறேன்.

இந்த கோவை 1988 களிலிருந்து 1998 வரை, எத்தகைய மதப் போட்டிகள் நிறைந்த கலவர பூமியாக இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். 1998 களுக்கு முன்பு ஒரு மதவெறியனாக இருந்த நானே,1998 களுக்கு பிறகு எனக்கு மதங்கள் என்பதே வெறுப்பாக மாறி நாத்திகராக மாற்றி விட்டது. என்றாலும் இசுலாமிய மதத்தில் நாத்திகராக இருப்பது அத்தனை எளிதல்ல. நாத்திகத்தை பேசுவதற்கே அந்த மதத்தில் ஒருவருக்கு சுதந்திரம் இல்லை எனும் பொழுது, நாத்திகராக எவ்வாறு மாறுவது?

வீட்டில் நாத்திகம் பேச முடியாது, இசுலாமிய நண்பர்களிடம் நாத்திகம் பேச முடியாது எனும் பொழுது, இசுலாமிய சமூகத்திடம் எவ்வாறு நாத்திகம் பேசுவது?

ஏன் என்றால் அச்சம், மதத்தை வைத்து மத புத்தகத்தை வைத்து, மிரட்டி வாழும் சில மத குருமார்களால், இவர்களால் தூண்டி விடப்பட்டவர்களால் இசுலாமிய சமூகத்தில் விளையும் அச்சம். அச்சமூகம் தனி ஒரு குடும்பத்தை அச்சமூட்டுகிறது.

அந்த குடும்பம் தனி ஒருவரை மிரட்டி சாதிக்கும் பணிய வைக்கும் வல்லமை உள்ளவையாக இருக்கிறது. இதை எல்லாம் மீறி கடந்து அவர் வர வேண்டும், அவ்வாறு வரும் ஒருவரால் தான், இசுலாத்தில் நாத்திகராக இயலும்.

ஆனால் இந்து மதத்தில் அவ்வாறு ஒரு நிலை இல்லை. இந்து மதத்தில் ஆத்திகனும் இருக்க இயலும், நாத்திகரும் இருக்க இயலும். அதற்கு அம் மதத்தில் சுதந்திரம் உண்டு. நாத்திகத்திற்கு சுதந்திரம் கொடுத்ததால் இந்து மதம் என்ன அழிந்து விட்டதா?அதற்கு உள்ள துணிவு கூட இசுலாமிய மதத்திற்கு இல்லையா என்றால், இல்லை என்பது தான் உண்மை.

எல்லா குப்பைகளையும் ஒன்றாகக் கொட்டி, அதற்கு இந்து மதம் என்று பெயர் வைத்தாலும், அதில் நான் உயர்ந்த குப்பை, நீ தாழ்ந்த குப்பை என்று கூறி வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறது. அதில் முழுக்க, முழுக்க மூட நம்பிக்கைகள் இருந்தாலும் அதை கடவுள் நம்பிக்கையாகக் காட்டி வாழ்ந்து தானே வருகிறது.

ஆனால், பார்ப்பனர்களுக்கு பாதிப்பு என்றால் மட்டும் இந்து மதம் மிரண்டு போகிறது. அவர்களுக்கு எதிரானவர்களை அழிக்கவும் நினைக்கிறது. அவ்வகையில் கொலை செய்யப்பட்டு இறந்தவர்கள் தான் கல்புர்கி, தபோல்கர், கவுரி லங்கேஷ் என்பதையும் மறக்க இயலாது.

அதைப் போல தமிழகத்தில் பெரியாரிய கொள்கைகளை அழிக்க நினைக்கிறார்கள்; அதற்காக இந்துத்வாக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்றாலும் முடிவதில்லை. அதனால் வேறு வடிவங்களில், கதை கட்டி பெரியார் இசுலாமிய ஆதரவாளர் என கூறி, இந்துக்களை தனது ஆதரவாளர்களாக ஆர்எஸ்எஸ் மாற்ற முயற்சிக்கிறது.

இராமசாமி இந்து மதத்திலுள்ளவர்களை மட்டுமே நாத்திகனாக கெடுத்து வைத்துள்ளார். ஓர் இசுலாமியனையோ, கிருத்து வனையோ இந்த ராமசாமியால் கெடுக்க இயலவில்லை, ஆனால் இந்துக்களை இசுலாமியராகவும் கிருத்துவர்களாக மாற்றும் துரோகத்தை செய்வதாக பெரியார் தொடங்கி இன்றுள்ள பெரியாரிஸ்ட்டுகள் வரை இந்துத்துவா விமர்சித்து வருகிறது.

அடுத்தது இசுலாம் எவ்வாறு பெரியாரை பயன்படுத்துகிறது? இன இழிவு ஒழிய இசுலாமே நன் மருந்து என பெரியார் கூறியதாக, தன் மதத்திற்கு அடிக்கடி விளம்பரம் செய்து கொள்வதும், இந்துத்துவா அதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, பெரியாருக்கு எதிராக, இந்துக்களைத் தூண்ட, இசுலாமியர்களை அழிக்க அதை பயன்படுத்திக் கொள்கிறது.

இரு மதங்களுக்கு இடையிலான போட்டிகளில் கூட இவர்களுக்கு பெரியார் தான் தேவைப்படுகிறார். ஒன்று இசுலாத்திற்கு ஆதரவாக, மற்றொன்று பெரியாருக்கு எதிராக இந்துக்களை திரட்டுவதற்காக, இது இவ்வாறு இருக்க, இசுலாம் என்ன கூறிக் கொள்கிறது என்றால் அன்பு, சாந்தியை வலியுறுத்துவதே எங்கள் மதம், மார்க்கம் என, ஆனால் கொள்கை என்னவோ நாத்திகம் என பேசினால் வாயில் வந்ததை எல்லாம் பேசுவேன், வெட்டுவேன் கொல்வேன் என்பது, எந்த மாதிரியான அன்பு, எந்த மாதிரியான சாந்தி என்பது தான் புரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது வெளி வேடம் கொண்ட மதம் இசுலாம் என்பதை, அது சரியாக அடையாளம் காட்டி விடுகிறது. அன்பென்பதும், சாந்தி என்பதும் வெளி வேடமிடும் முகமூடியாகவே பயன்படுத்திக் கொள்கிறது.

ஆக மத சார்பற்ற கட்சிகளே! நாத்திக கட்சிகளே! நமது பொது எதிரி மதவாத இந்துத்வா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; சிறுபான்மை மக்களுக்குத் துணையாக இருப்பது, தோள் கொடுப்பது நம் எல்லோர் கடமைகளில் ஒன்று தான்.

ஆனால் அது சிறு பான்மை மதவாதத்திற்கு ஆதரவானதாக பெரும்பான்மையான இந்து மக்கள் நினைத்து விட்டால், அது பெரும்பான்மை மதவாதத்திற்கு ஆதரவு சேர்ந்து விடும். இந்துத்துவா அதை தனக்கு சாதகமாக கவர்ந்து விடும் என்பதையும் மறந்து விடக் கூடாது. அது சிறுபான்மை மக்களை வாழ வழியே இல்லாத ஒரு ஆபத்தை சந்திக்க வைத்து விடும்.

தானாகவே அவர்களைத் தீவிரவாதிகளாக்கி விடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆக சிறுபான்மை, பெரும்பான்மை மக்கள் என்பது வேறு, பெரும்பான்மை மதவாதம், சிறுபான்மை மதவாதம் என்பது வேறு. இரண்டு மதவாதமும் மிகவும் ஆபத்தானது.

இசுலாத்தில் அல்லாவை தவிர வேறு எந்த கடவுளையும் நம்ப மாட்டேன் என்பவர் மட்டுமே அதில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. எல்லா கடவுளும் ஒன்று என இசுலாமியன் கூறுவதையோ, எல்லாக் கடவுளையும் ஆதரிக்கிறேன் என்கிற முசுலிமையோ மதத்தில் அனுமதிப்பது இல்லை.

அது மட்டுமல்லாமல், யாராவது இசுலாமியர் மதத்தை விட்டு, வெளியேறினால் இசுலாமிய பெயரிலும் இருக்க கூடாது என மிரட்டுகிறது. அதன் விளைவால், அன்று வாழ்ந்த வெளியேறிய இசுலாமியர்கள் இந்து பெயரிலோ, தமிழ் பெயரிலோ மாற வேண்டிய கட்டாயம் அன்றைய இசுலாமியர்களுக்கு இருந்தது.

அவ்வாறு மாறிய பல இசுலாமியர்கள் உண்டு, இசுலாமிய குடும்பங்களும் உண்டு.சில காலங்களுக்கு பின் அவர்களே கூறினால் தான் அவர் இசுலாமியராக பிறந்தவர் என்றே நமக்கு தெரியும். இல்லை என்றால் இந்து என்றே நாமும் நினைத்திருப் போம் இந்து மதமற்ற நாத்திகம் என்றோ, இந்து மதமற்ற தமிழன் என்றோ, இந்து மதமற்ற திராவிடன் என்றோ, இருந்திருந்தால் கூட நாங்கள் இணைந் திருப்போம்.

ஆனால் அத்தகைய நிலை இந்தியாவில் இல்லை, ஏதோ நாங்களும் இந்துவாகயிருந்து சாதிகளை சுமந்து வாழ்ந்தவர்களை இசுலாமிய மதம், அதிலிருந்து வெளியேறவைத்து எங்களை காப்பாற்றி உள்ளது. என்றாலும் இன்று அதிலும் ஏற்ற தாழ்வுகள் உள்ளது.

மூடநம்பிக்கைகளில் இசுலாமும் விதிவிலக்கல்ல, என்பதை உணர்ந்ததினாலும், அத்தகைய மூடநம்பிக்கை கொண்ட இசுலாமியர்களையும், பகுத்தறிவுள்ள மனிதர்களாக மாற்ற முயற்சி செய்கிறோம்.

நாத்திகருக்கு என தனி அடையாளம் அரசியலமைப்பு சட்டத்தில் கிடைக்கும் வரை, முன்னாள் முசுலீமாக தொடர்வோம்.எல்லா கடவுள் மதங்களை, அல்லா முதல் கொண்டு, எதிர்த்து போராடுவோமே தவிர, மூட நம்பிக்கை கொண்ட இசுலாமியராக வாழவோ, இந்து மதம் சார்ந்தவர்களாகவோ, இந்து மதத்தில் மீண்டும், ஏதோ ஒரு சாதி சார்ந்த நாத்திகர்களாக, எந்த நிலையிலும் சாகும் நிலைக்கு ஆளாக மாட்டோம் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரூக்கைக் கொல்ல காரணமாக இருந்த அந்த சித்தாந்தத்தை, சித்தாந்தவாதிகளுக்கு, இனி அத்தகைய எண்ணங்கள் எந்த ஒரு இசுலாமியனுக்கும் வரக்கூடாது என்பதை உணர வைப்போம் என்று கூறி நிகழ்ச்சிக்கு கருத்துரையாற்றவும், கலந்து கொள்ளவும் வந்துள்ள அனைவரையும் வரவேற்று பாரூக்கின் நினைவேந்தல் சிந்தனைகளாக நான் முன் வைத்துள்ளவற்றையும் பரிசீலிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொண்டு எனது வரவேற்பு உரையை முடிக்கிறேன்.

- தோழர் ஜின்னா

Pin It