கோகுல்ராஜ் சாதிய ஆணவப் படுகொலை வழக்கில் கவுண்டர் சாதி வெறியன் யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி தண்டிக்கப் பட்டிருப்பதால் அவனுக்கு தண்டனைக் குறைப்பு அளிக்கப்படக் கூடாது என்றும் கூறியுள்ளது.
யுவராஜோடு இணைந்து கொலைக்கு உதவிய அருண், குமார், சதீஷ், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ் ஆகிய ஆறு சாதிவெறியர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், வழக்கு நடக்குபோதே இறந்துபோன சந்திரசேகருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், கிரிதர் என்பவனுக்கு ஆயுள் தண்டனையும் ஐந்தாண்டு காலம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான செய்திகள் அனைவருக்கும் தெரியும் என்பதால் நாம் அதற்குள் செல்லத் தேவையில்லை. ஆனால் யுவராஜ் போன்ற கட்டப் பஞ்சாயத்து ரவுடிகள் கொலை செய்தால்கூட தன்னை யாரும் தண்டிக்க முடியாது என்ற திமிரில் கொடூரமாகத் தலையைத் துண்டித்து, முகத்தை சிதைத்து, நாக்கை அறுத்துக் கொல்லுகின்றான் என்றால் அதற்கான துணிவு அவனுக்கு எங்கிருந்து வந்தது?
கவுண்டர் சாதிவெறியன் யுவராஜ் நடத்தி வந்த 'மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை' என்ற அமைப்பு பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசுவின் ஆதரவு பெற்ற ஓர் அமைப்பாகும். 2013 ஏப்ரல் 16ஆம் தேதி தீரன் சின்னமலைப் பேரவை சார்பாக தொகுக்கப்பட்ட பிறந்தநாள் விழா மலரை முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா வெளியிட, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கொங்கு இளைஞர் பேரவையின் தலைவருமான உ.தனியரசுதான் பெற்றுக் கொண்டார்.
கோகுல்ராஜின் தோழி சுவாதி பரமத்தி என்பதையும், தனியரசு பரமத்தி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் என்பதையும், இந்த சாதிவெறி அமைப்புடன் ஜெயலலிதாவுக்கு இருந்த தொடர்பையும் கணக்கில் கொண்டால் இவனுக்கு கொலை செய்யும் திமிர் எங்கிருந்து வந்தது என்பது புரியும்.
இன்று இப்படியான தீர்ப்பு வர வழக்குரைஞர் ப.பா.மோகன் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் வழக்கு பதிவு செய்யவே அன்று கோகுல்ராஜின் உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கடுமையாகப் போராட வேண்டி இருந்தது. அவர்களின் போராட்டத்தால்தான் இது கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டது.
கோகுல்ராஜ் கொலை நடந்த சமயத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வந்ததால் எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்தப் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள கவுண்டர் சாதியின் ஓட்டைப் பெறுவதற்காக இந்தப் பிரச்சினையில் கள்ள மெளனம் சாதித்தன
அதிமுக அரசு இந்தப் பிரச்சினையைக் கண்டுகொள்ளாமல் அன்று இருந்ததற்கு மற்றொரு முக்கிய காரணம் அமைச்சரவையில் இருந்த பல அமைச்சர்கள் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதிலே சில பேர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும்தான்.
திவ்யா - இளவரசன் பிரச்சினைக்குப் பின் தமிழ்நாட்டில் வன்னிய சாதிவெறியர் ராமதாசால் முன்னெடுக்கப்பட்ட தலித்துகளுக்கு எதிரான அவதூறு பரப்புரையும், சாதிச் சங்கங்களின் ஒருங்கிணைப்பும் தலித் மக்களுக்கு எதிராக ஓர் அணிசேர்க்கையை உருவாக்கியதோடு, தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாதி வெறியர்களின் பின்னால் அணிதிரளவும் காரணமாக இருந்தது.
இவர்களின் முக்கிய வேலையே தன் சொந்த சாதிப் பெண்களை வேவு பார்ப்பதுதான். இவ்வாறு இந்த சாதிவெறியர்கள் ஒட்டுமொத்த பெண் இனத்தின் ஜனநாயகத்துக்கு எதிரானவர்களாக மாற்றப்பட்டார்கள். தமிழ்நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், யாரைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதைத் தீர்மானிக்கும் சக்திகளாக இந்த சாதிவெறியர்கள் உருவாகி இருக்கின்றார்கள்.
இந்தக் கொலையின் மூலம் சாதிவெறியன் யுவராஜ் தமிழ்ச் சமூகத்துக்கு சொன்ன செய்தி இதுதான், “தலித்துகள் சமூகத்தில் தங்களது இடம் எதுவென்று தெரிந்து செயல்பட வேண்டும். அவர்கள் தங்களது எல்லையை மீறினால் விளைவு இப்படித்தான் இருக்கும்.” என்பதுதான்.
கவுண்டர் சாதிப் பெண்களை தன்னுடைய நாவலில் இழிவுபடுத்தியதாகக் கூறி பெருமாள்முருகனை திருச்செங்கோட்டை விட்டே விரட்டிய அதே கவுண்டர் சாதி வெறியன் யுவராஜ் தான், கோகுல்ராஜையும் கொலை செய்தான் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருகின்றது.
அவன் சார்ந்த சாதிப் பெண்களின் ஒட்டுமொத்த கற்பையும் குத்தகைக்கு எடுத்திருப்பதாக நினைத்து கோகுல்ராஜை தலை துண்டித்துக் கொன்ற இந்த அயோக்கியனுக்கு ஆயுள் தண்டனை என்பதே போதுமானதல்ல.
இந்தத் தீர்ப்பு வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை போட்டுக் கொண்டு மீசையை முறுக்கி அடுத்தவனை இழிவு செய்த அத்தனை சாதிவெறி பிடித்த அம்மணப் பயல்களுக்கும் நிச்சயம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும்.
ஆனால் சாதிவெறியர்களை இதுபோன்ற தீர்ப்புகள் நிரந்தரமாக ஒடுக்கிவிடும் என்ற தவறான எண்ணத்திற்கு நாம் சென்றுவிடக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இது போன்ற குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு ஆணவப் படுகொலை தடுப்புக்கென தனி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பல ஆண்டுகளாக முற்போக்கு அமைப்புகள் இந்தக் கோரிக்கையை முன் வைத்து வருகின்றன.
இந்த ஆட்சியாவது இதைச் செய்யுமா என அனைவரும் எதிர்ப்பார்க்கின்றார்கள். ஆனால் “அரசு தரப்பு வழக்கறிஞரான தமக்கு அரசு உரிய முறையில் ஒத்துழைக்கவில்லை என்றும் குறைந்த பட்ச வசதிகள் கூட செய்து தரப்படவில்லை” என்றும் வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்கள் குற்றச்சாட்டு வைத்திருப்பதால் நாம் இந்த அரசு தானாக செய்யாது என்பதும், அதைச் செய்ய வைக்கும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும்தான் தெரிகின்றது.
மேலும் இது போன்ற சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு சட்டம் இயற்றுவது மட்டுமல்லாமல் சமூகத்திலும் பல பண்பாட்டுப் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இளைஞர்கள் மத்தியில் சாதி மறுப்புத் திருமணங்கள் அதிகம் நடத்தப்பட வேண்டும். இடதுசாரி முற்போக்கு அமைப்புக்கள் அனைத்தும் இத்தகைய சாதிமறுப்புத் திருமணங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்ய வேண்டும்.
அரசு இதற்கென தனியே காவல் நிலையங்களையும், நீதிமன்றங்களையும் அமைக்க வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை போன்றவற்றையும் அளிக்க வேண்டும்.
அதே போல சாதி வெறியர்கள் தங்களுக்குள் ஒன்றுபட்டு நிற்கும்போது சாதிய எதிர்ப்பு, மத எதிர்ப்பு சிந்தனை கொண்ட முற்போக்கு சக்திகள் துண்டு துண்டாகப் பிரிந்து கிடக்கும் நிலை மாறி, சட்டத்தால் மட்டுமே அனைத்தையும் தீர்த்துவிட முடியும் என்று பிரமை கொள்ளாமல் சாதிவெறியர்களுக்கு எதிரான உறுதியான போராட்டத்தை கட்டமைக்க வேண்டும்.
யுவராஜ் போன்ற சாதிவெறி பிடித்த அயோக்கியர்களின் பின்னால் ஒட்டுமொத்த கவுண்டர் சாதி மக்களும் நிற்கவில்லை என்பதையும், சாதிவெறியர்கள் யாரும் அவர்களின் சார்ந்த சாதியின் ஒட்டுமொத்தப் பிரதிநிதி அல்ல என்பதையும் நாம் அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும்.
ரியல் எஸ்டேட், கந்துவட்டி, கல்விக் கொள்ளை, சாராய வியாபாரம் என உலகமயம் தோற்றுவித்திருக்கும் இந்த நவீன பணக்கார ரவுடிகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அரசியலில் தஞ்சம் அடைய சாதியை ஓர் ஆயுதமாக எளிய மக்களின் மீது பயன்படுத்துகின்றார்கள். தன் சாதி மக்கள் தன்னை திரும்பிப் பார்க்க வைக்க கொடூர கொலைகளையும் அரங்கேற்றுகின்றார்கள்.
இதன் மூலம் தன்னை சாதியைக் காப்பாற்றும் கடவுளாக கட்டமைக்கின்றார்கள். ஆனால் மாட்டிக் கொண்டால் ஒரு கோழையைப் போல கெஞ்சுகின்றார்கள். யாருக்காக கொலை செய்ததாக அறிவித்தானோ அதே சாதி மக்களால் கண்டுகொள்ளப்படாமல் ஒரு சொறி நாயைப் போல ஒதுக்கித் தள்ளப்படுகின்றார்கள். உண்மையில் சாதி வெறியர்களுக்கு ஏற்படப் போகும் இறுதி இழி நிலை இதுதான்.
- செ.கார்கி