ஜூன் மாதம் என்றாலே குழந்தைகள் எல்லாம் கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிக்குத் திரும்பும் காலம் இது. ஒரு மாத கோடை விடுமுறையில் நகர மற்றும் மாநகரங்களில் இருந்து சில குழந்தைகள் கிராமத்திற்கும், கிராமத்தில் உள்ள சில குழந்தைகள் நகரத்திற்கும் தங்கள் தாத்தா, பாட்டியுடன் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருக்கலாம். இந்தக் கடுமையான வெய்யிலில் கிராமத்தில் உள்ள குழந்தைகள் சிலர் ஊரில் உள்ள கிணற்றில் குதித்து மணிக்கணக்கில் நீச்சல் அடித்து கோடை வெப்பத்தின் கொடுமையிலிருந்து தங்களை தற்காத்துக்கொண்டதை நகரத்திலிருந்து சென்ற குழந்தைகள் ஏக்கத்தோடு கண்டிருக்கலாம். நீச்சல் தெரியாத குழந்தைகள் விவசாயத்திற்கு நீர் இறைக்கும்போது தொட்டிகளில் குதித்து விளையாடி, தாங்கள் கிணற்றில் குதிக்க முடியாத ஏக்கத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கலாம். மேலும் சில குழந்தைகள் நகரத்திலேயே இருந்து தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள ஏதாவது விளையாட்டுப் பயிற்சி, கையெழுத்துப்பயிற்சி, நீச்சல் பயிற்சி என கோடைகால சிறப்பு வகுப்புகளுக்குச் சென்றிருக்கலாம். பொதுவாகவே குழந்தைகளுக்கு இந்த பூமியில் உள்ள அனைத்துமே புதிதுதான். குழந்தைகளுக்கு இயல்பாகவே புதிய பொருளோடு விளையாடுவதில் ஆர்வம் அதிகம் அதுவும் குறிப்பாக நீர்நிலைகளில் விளையாடுவது என்பது அவர்களுக்கு மேலும் கூடுதல் மகிழ்ச்சி.

தற்பொழுது குழந்தைகளுக்குத் தற்காப்பு என்ற பெயரில் குங்பூ, கராத்தே போன்ற அயல்நாடுகளில் தோன்றிய தற்காப்புக் கலைகளை நமக்குத் தெரியாவிட்டாலும் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி பயிற்று விக்கிறோம், ஆனால் நமது நாட்டில் நிகழும் நீர், நெருப்பு, புயல் போன்ற இயற்கையின் பேரழிவிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள நமது குழந்தைகளுக்கு போதுமான பயிற்சியே அளிப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. எனவே இதையும் பள்ளிப்படிப்பின் ஒரு அங்கமாக்க வேண்டும். தமிழர்கள் நீர்நிலைகளுக்கு ஏரி, குளம், தெப்பக்குளம், ஆறு, ஓடை, ஊருணி, தடாகம்,கிணறு, பொய்கை என பல பெயர்களில் பராமரித்துள்ளார்கள் என தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். அப்படி நீர் நிலைகளை நிர்வகித்த தமிழனுக்கு வெகு நாட்களுக்கு முன்பே நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். நீச்சல் ஒருவருக்கு தற்காப்புக்காக மட்டுமன்றி விளையாட்டாகவும், நல்ல உடற்பயிற்சியாகவும் விளங்குகிறது.

நீரில் எந்தவித உபகரணங்களும் இல்லாமல் தமது கை,கால்களை அசைத்து  நீரில் மிதந்து, நகருவதையே நீச்சல் என்கிறோம். நமக்கு புத்துணர்ச்சியளித்து நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதில் நீச்சலுக்கு நிகர் நீச்சலேதான். நீச்சல் விளையாட்டு அல்லது உடற்பயிற்சி முதன் முதலில் எந்த நாட்டில் தோன்றியது என்று அறுதியிட்டுக் கூறமுடியாவிட்டாலும், ஒவ்வோர் மனிதனும் முதன் முதலில் தன் தாயின் கருவிலேயே கற்றுக்கொள்ளும் விளையாட்டு என்றால் அது நீச்சலாகத்தான் இருக்க முடியும். அதனால்தான் சின்னக் குழந்தைகள் எப்பொழுதும் தரையில் நீந்துவது போலவே கையையும் காலையும் அசைக்கின்றன. தாயின் பனிக்குடத்தில் குழந்தை கையையும் காலையும் அசைத்ததைத்தான் வெளியில் வந்த பிறகு குளம் அல்லது கிணற்று நீரில் அசைப்பதை நீச்சல் என்கிறோம். மனிதனின் மரணத்திற்குப் பின் அவனை எரித்த சாம்பல் கூட ஆற்று நீரில் நீந்தியே கடலில் கலக்கின்றன.

தமிழர்கள் நிலத்தில் விளையாடுவது போலவே நீரிலும் விளையாடி மகிழ்ந்தனர் என பட்டினப்பாலை மற்றும் பரிபாடல் கூறுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மூச்சடக்கி முத்தெடுக்கும் வித்தை தெரிந்தவர்களுக்கு நீந்துவது என்ன சுமையா? சங்ககாலத் தமிழர்கள் கடல் நீரில் விளையாடிய பின் அவர்கள் ஆற்று நீரில் விளையாடி உடம்பிலுள்ள உப்புப் படிவைத் தூய்மை செய்துகொண்டனர் என்றும் அலவன் ஆட்டல், ஓரை, தைந்நீராடல், நீச்சல்,நடனம்,பண்ணை,புணை,புனலாடல்,மூழ்கல்,வண்டற்பாவை என பல விளையாட்டுக்களைச் சங்ககாலத் தமிழர்கள் நீர் நிலைகளான ஆற்றங்கரையிலும், கடற்கரையிலும் விளையாடியுள்ளனர் என்று தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. சிந்து சமவெளி நாகரிகக் குறிப்புகளும் இதையே வழிமொழிகின்றன. அதன் நீட்சியாகவே இன்றும் பலநாடுகளில் நீரில் நீந்துவது மட்டுமன்றி நீரில் பாய்தல், நீச்சல், ஒருங்கிசைந்த நீச்சல் நீர்ப் பந்தாட்டம் என பல வகையான விளையாட்டுகளும் விளையாடப்படுகின்றன. ஒலிம்பிக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சுவிட்சர்லாந்திலுள்ள லோசான் நகரைத் தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு, இந்த விளையாட்டுகளை முன்னின்று நடத்துகின்றன.  

நீச்சலை எந்த புத்தகத்தைப் படித்தும் கற்றுக்கொள்ள முடியாது. புத்தகத்தில் வேண்டுமானால் தண்ணீரில் குதித்து கையையும் கால்களையும் அசைத்து முன்னோக்கி நகரவும் என்று படிக்கலாம் அதனால் அவருக்கு நீச்சல் தெரியும் என்று பொருள் அல்ல. தண்ணீரில் ஒருவர் எவ்வாறு கை கால்களை அசைத்து செயல்படுகிறார்களோ அதுதான் அவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொள்ள உதவும். உலகத்தை உலகத்தில் இருந்துதான் கற்கமுடியும் அதேபோலத்தான் நீச்சலையும் நீரில் இருந்துதான் கற்கமுடியும்.

ஆற்று நீர் கடலில் கலந்தபின் அதில் ஆற்று நீரையும் கடல் நீரையும் பிரிக்க முடியாதோ அது போலவே உலகில் எங்கெங்கெல்லாம் நீர் இருக்கிறதோ அங்கெல்லாம் நீச்சலும் இருந்திருக்கிறது எனவே நீரையும் நீச்சலையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. உலகில் நீச்சல் முதன் முதலில் எங்கே தோன்றியது என்பதுதான் யாருக்கும் தெரியாதே தவிர, உலகின் எல்லா நாடுகளிலும் நீச்சல் விளையாட்டு இருந்திருக்கிறது. உலக நாகரிகத்தின் தொட்டில் என்றும் உலகத்திற்கே பகுத்தறிவையும் சிந்தனையைச் சொல்லிக்கொடுத்தவர்கள் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்களான கிரேக்கர்களும் அதே நாகரிகத்தைப் பின்பற்றிய ரோமானியர்களும் பிறக்கும்போதே நீச்சலோடுதான் பிறந்தார்கள் என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். ‘நீச்சல் தெரியாதவன் கல்லாத மூடனைப் போன்றவன்'  என்று இயற்கையோடு இணைந்து வாழ்ந்த கிரேக்கத் தத்துவஞானி பிளாட்டோ கூறுவதிலிருந்து அவர்கள் நீச்சலை எப்படி மதித்தார்கள் என்பது தெரிகிறது. அதேபோல உலக அழகியான கிளியோபாட்ராவின் மனதையே கொள்ளைகொண்ட ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் பேரரசனாகத் திகழ்ந்த ஜூலியஸ் சீசரும் சிறந்த நீச்சல் வீரர் என்று சரித்திரம் சொல்கிறது. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என ரோமானியர்களும் சிறந்த நீச்சல் வீரர்களாக விளங்கியுள்ளனர். கிரேக்கர்களும் ரோமானியர்களும் போர் வீரர்களாகவே தங்கள் வாழ்க்கையினைத் தொடங்கியவர்கள் என்பதால், பல நேரங்களில் கடற் போர் வீரர்கள் நீந்தியே கரையைச் சேரவேண்டும் எனவே, அந்நாட்டுப் போர் வீரர்கள் அனைவரும், நீச்சலில் வல்லவர்களாக இருக்க வேண்டியது கட்டாயம். எனவே அந்நாட்டு இளைஞர்களை, பனி நிறைந்த காலைப் பொழுதில் நிர்வாணமாக ஆற்றில் நீந்தவிட்டு அவர்களின் உடலையும் மனதையும் பலப்படுத்தினார்கள் என்பதை அவர்களின் வரலாற்றுக்குறிப்புக்கள் நமக்கு உணர்த்துகின்றன. சிறந்த போர்வீரர்களை உருவாக்குவதில்நீச்சல் விளையாட்டும் பெரும்பங்கு வகிக்கிறது.

நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். தரையில் எத்தனைப் பயிற்சிகள் செய்தாலும் அது நீச்சலில் கிடைக்கும் எல்லாப் பயன்களையும் முழுமையாக கொடுக்கமுடிவதில்லை.இன்னும் சிலர் இன்று யோகாவை முன்னிலைப்படுத்தி தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி நடத்தி அதை பெரிய வியாபாரமாக மாற்றியிருக்கிறார்கள். அப்படி யோகா செய்யும்  யோகா ஆசிரியர்களே மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு வெளிநாடு செல்வதாக செய்தித்தாள்களில் செய்திகள் வருகின்றன. யோகாவில் கிடைக்கும் ஒழுங்கான மூச்சுப்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டால் பெறக்கூடிய உடல் எடையைப் பராமரித்தல், நடைப்பயிற்சியால் கிடைக்கும் இதயம் மற்றும் நுரையீரல் நலம் என அனைத்து நன்மைகளும் ஒரே பயிற்சியால் கிடைக்கும் என்றால் அது நீச்சல் பயிற்சி மட்டுமே.   

ஒழுங்கான சந்தத்துடன் கூடிய சீரான சுவாசத்தோடு செய்யப்படும் நீச்சல் உடற்பயிற்சியின்போது உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது அதனால் நீந்துபவரின் மனமும் உடலும் ஆரோக்கியம் பெறுகின்றன. ஒழுங்கான நீச்சல் பயிற்சியின் மூலம் நாம் பின்வரும் நன்மைகளை அடையலாம்.

 நீச்சல் அடிப்பது செரிமான சக்தியைத் தூண்டி, அஜீரணக் கோளாறைப் போக்கி, பசியைத் தூண்டச் செய்கிறது.மலச்சிக்கலை நீக்கி ஆழ்ந்த உறக்கத்தை வரவழைக்கிறது.

 கை, கால்  குடைச்சல் மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.தரையில் ஓடும்போது ஏற்படும் மூட்டுத் தேய்மானம் நீச்சலில் இல்லை.

 இதயம் வலுப்பெறுவதால் இரத்த ஓட்டமும், நுரையீரல் நன்கு விரிவடைந்து காணப்படுவதால்மூச்சோட்டமும் சீராகிறது.

 ஒரு மணி நேர நீச்சல் பயிற்சி மூலம் சுமார் 800 கலோரிகள் எரிக்கப்படுவதால் உடல் எடையை குறைக்கவும் நல்ல தன்னம்பிக்கையையும் மன ஒருமைப்பாட்டையும் தருகிறது.

 கர்ப்பிணிகள் முறையாக நீச்சல் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சுகப்பிரசவம் பெறமுடியும்.

 கழுத்தளவு தண்ணீரில் இருந்து செய்கிற பயிற்சிதான் சிறந்த இசைக் கலைஞர்களை உருவாக்குகின்றன.

 எலும்பு முறிந்தவர்கள் கட்டுகட்டி எலும்பு கூடியபின் கை கால்களின் சீரான இயக்கத்திற்கு நீச்சல் பயிற்சி பெரிதும் உதவுகின்றன.

 நீச்சல் சிறந்த முதலுதவி மற்றும் தற்காப்புக்கலையாக விளங்குவதோடு உடல் அழகையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது.

 தரையில்  உடற்பயிற்சி போது ஒரு குறிப்பிட்ட உடற்பகுதி அல்லது தசை மட்டுமே ஒரு நேரத்தில் பயிற்சிக்கப்படுகிறது. நீச்சலில் முழு உடலும் ஒரே நேரத்தில் ஈடுபடுவதால் முழு உடலின் நெகிழ்வுத்தன்மையும் அதிகரிக்கின்றது.

 இடுப்பு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி நீங்குவதுடன், முதுகெலும்பின் முடிச்சுகள் பலம் பெறுகின்றன.

 ஒழுங்கான நீச்சல் பயிற்சி ஆயுளை அதிகரிக்கும்.

நீச்சலில் பல வகைகள் உண்டு, ஒவ்வொன்றும் ஒரு வகையில் பயன்படுகிறது. மார்பு நீச்சல் அல்லது தவளை நீச்சல் தோள்பட்டை, கழுத்து, கால்களுக்கு நல்ல பயிற்சியைக் கொடுக்கிறது.

விரைவு நீச்சல், இடுப்பு எலும்பு, இடுப்பு தசைகள் மற்றும் முதுகெலும்பையும் உறுதியாக்குகிறது.

பின் நீச்சல் கெண்டைக்கால் தசைகள் மற்றும் இடுப்புப் பகுதி தசைகளை வலுப்படுத்துகிறது.

வண்ணத்துப்பூச்சி நீச்சல் வயிற்றுப் பகுதி தசைகள் மற்றும் முதுகுப் பக்கமுள்ள தசைகளை நன்கு வலுப்படுத்துகின்றன.

பெற்றோர்கள் குழந்தைகளின் மூளையைப் பலப்படுத்த நினைக்கும் அளவிற்கு அவர்களின் உடலைப் பலப்படுத்த நினைப்பதில்லை. எனவே பிள்ளைகளுக்குக் கல்வியோடு நீச்சலையும் கற்றுக்கொடுப்போம் வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடிக்கவும் கற்றுக்கொடுப்போம். அதன் மூலம் ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவோம்.

- இன்னும் விளையாடலாம்

Pin It