pongal festival 1

“எல்லாவற்றிற்கும் மேலாக தேசப்பற்று எனும் உணர்வுடன் கூடிய ஒற்றுமை என்பது நமது மக்களிடையே மிகச் சாதாரணமாக அழித்துவிடவோ அல்லது குறைந்தவிடவோ முடியாத அளவிற்கு மிக அழுத்தமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த தேசத்தின் அங்கங்களாகத் திகழ்கின்ற துணை தேசங்களின் (மொழி வழி மாநிலங்கள்) இயற்கையான வாழ்க்கையை எவ்வித அச்சுறுத்தலுமின்றித் தொடர அனுமதிப்பதே அவர்களின் சட்டப்பூர்வமான அரசியல் அபிலாஷைகளை நிறைவு செய்வதென்பதாகும்....

அப்போதுதான் இந்தியாவின் தேச வாழ்வென்பது அதன் இயற்கையான பலங்களைக் கொண்டும், பன்மையில் ஒற்றுமை எனும் இலட்சியத்தின் அடிப்படையிலும் கட்டமைக்கப்படும். இத்தன்மையே இத்தேசத்திற்கு உகந்ததாகவும், அதன் அடிப்படையான இயல்பை நிறைவு செய்வதாகவும், அதன் சுயமான இயற்கையாகவும், பன்முகமே ஒர் முகமாகக் கொண்ட சுபாவத்தையும், சுயதர்மத்தையும் பலமாகக் கொண்டு அமைவதாகவும் இருக்கும்” என்று இந்நாட்டின் விடுதலைக்கு அளப்பரிய பங்காற்றிய ஸ்ரீ அரவிந்தர் (அரவிந்த் கோஷ்), 1948ஆம் ஆண்டு, டிசம்பர் 11ஆம் நாளன்று ஆந்திர பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இந்நாட்டின் விடுதலைக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துப் போராடி சர்வபரித் தியாகமும் செய்த தலைவர்கள் பலரும் இந்நாட்டு மக்கள் பேசும் பல்வேறு மொழிகளையும், கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களை அறிந்தவர்களாகவும், தாங்கள் வணங்கும் தெய்வங்களுக்கு அவர் செய்யும் வழிபாடுகளும், கொண்டாடும் பண்டிகைகளும் தனித் தன்மை கொண்டனவாகவும் இருப்பதையெல்லாம் உணர்ந்தவர்களாகவும், ஒவ்வொரு மொழி வழி இன மக்களும் வெவ்வேறுபட்ட வாழ்வியல் வழிமுறைகளை கடைபிடிப்பவர்களாக இருப்பதை புரிந்தவர்களாகவும் இருந்ததினால்தான் ஒவ்வொரு பகுதி மக்களின் பிரதிநிதிகளாக இத்தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை மனப்பூர்வமாக பரஸ்பரம் ஏற்று, எந்த மொழியும், பண்பாடும் எந்த மற்றொரு மொழிக்கும் பண்பாட்டிற்கும் கீழானதோ, மேலானதோ அல்லவென்று உணர்ந்து செயல்பட்டதனாலேயே தேசத்தின் விடுதலை என்ற இலட்சியத்தில் ஒன்றுபட்டு நின்று, தேசப்பற்றை உருவாக்கி, மக்கள் அனைவரையும் விடுதலை உணர்வில் ஒன்றுபடுத்தி இத்தேசத்தின் விடுதலையை வென்றெடுத்தார்கள். வந்தே மாதரம் எனும் விடுதலை முழக்கம் எந்த மொழியில் இருக்கிறதென்று கேள்வி கேட்கவும் இல்லை, அது இந்தி மொழியில்தான் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி வாதிட்டுக்கொண்டிருக்கவுமில்லை. எனவேதான் தேச விடுதலை சாத்தியமானது. வெள்ளையரின் காலனி ஆதிக்கம் முடிவிற்கு வந்தது.

இப்படி பல்வேறு மொழி வழி இனங்களைக் கொண்ட மக்கள் சம உரிமையுடன் வாழவும், தங்களின் பண்பாட்டு அடையாளங்களைக் காத்துக்கொள்ளவும், பொருளாதார ரீதியாக தங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொள்ளவுமே விடுதலைக்குப் பின் மொழி வழி மாநிலங்களை அமைப்பது என்று முடிவெடுத்தனர். இந்நாட்டின் விடுதலைப் போராட்ட அமைப்பாக உருவெடுத்த இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் விடுதலைக்கு முன்னரே அப்படிப்பட்ட (மொழிவழி மாநிலங்களை அமைப்பதென்ற) முடிவை எடுத்துவிட்டது. அதனால்தான் இன்று நமது நாடு 29 மாநிலங்களையும், 7 ஒன்றிய பிரதேசங்களையும் கொண்டதாகவும் ஒரு அரசமைப்பின் கீழ் சேர்ந்தியங்கியும் வருகிறது. நம் நாடு இன்னமும் ஒரு முழுமையான கூட்டாட்சிக் குடியரசாக ஆகவில்லையெனினும் அனைத்து மொழி இன மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவு செய்யக்கூடிய, அவர்களின் பண்பாட்டில் எவ்விதத் தலையீடுமின்றி காப்பதாக, இத்தேச வாழ்வில் சம வாய்ப்பை அளிக்கக்கூடியதாக சட்டப் பூர்வமாக நிலைநாட்டப்பட்டு இயங்கி வருகிறது.

இந்திய அரசமைப்பின் (கான்சிடியூசன் ஆஃப் இந்தியா) எட்டாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள காஷ்மீரி முதல் தமிழ், மலையாளம் வரையும், குஜராத்தி முதல் மணிப்பூரி வரையிலும், இந்தி, மராட்டி, ஒரியா ஆகியன உள்ளிட்ட 22 மொழிகள் இந்திய நாட்டின் தேச மொழிகள் என்று அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், இவைகளையும் தாண்டி, சிறு சிறு இனக் குழுக்களாக ஒவ்வொரு இனக் குழுவையும் சேர்ந்த 10 இலட்சம் பேர் வரை பேசக்கூடிய 122 மொழிகள் இந்நாட்டில் இன்றளவும் வழக்கில் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் பரவிக்கிடக்கின்ற சில கோடி மக்கள் பேசும் சந்தால் என்ற மொழி இருக்கிறது. ஆனால் இவை எதற்கும் எழுத்து வடிவம் இல்லை. இந்த 122 மொழிகளின்றி, மேலும் பல நூறு மொழிகளை பேசக்கூடிய மக்கள் ஒட்டுமொத்தமாக பல கோடிப்பேர் இந்நாட்டினராக உள்ளனர். அவர்கள் காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் இந்நாட்டின் பழங்குடியினராக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்கள். தண்டகாரண்யக் காடுகளில் பல இலட்சக்கணக்கில் வாழ்கின்ற கோண்ட் என்ற பழங்குடியினர் வெள்ளையரை எதிர்கொண்டு ஆயுதம் தாங்கி விடுதலைக்காக போராடியவர்கள். இப்படி பல பழங்குடி இனங்கள் உண்டு. அவைகள் இந்நாட்டை அடிமைப்படுத்தியாண்ட வெள்ளையரை ஆட்சியாளராக ஏற்க மறுத்துப் போராடியதால், குற்றப்பரம்பரையினர் என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட வரலாறு உண்டு. வெள்ளையரின் இந்த குற்றப் பரம்பரை சட்ட ரீதியான ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட பல இனக் குழுக்கள் தமிழகத்திலும் இருந்தன. தென் தமிழ்நாட்டில் மறவர்கள், பிரமலைக் கள்ளர்கள் ஆகியோரும், வட தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வாழ்ந்த வன்னியர்களும், இன்று தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள மக்கள் குழுவினரும் இருந்தனர். இவர்கள் யாவரும் வெள்ளையரின் மேலாதிக்கத்தை - அதாவது அடிமைத்தனத்தை வீரங்கொண்டு எதிர்த்தவர்கள் என்பது வரலாற்றை ஆழ்ந்து ஆராய்ந்தவர்களின் முடிவாகும். இவர்களிடையேயும் தனித்த பல சிறப்புகள் இருந்தன. அவற்றில் ஒன்று, பிரமலைக் கள்ளர்கள் பெற்றிருந்த வளரி எனும் பூமராங் வீசும் திறன். அது வெள்ளையர்களை அச்சுறுத்தியது, எனவே குற்றப்பரம்பரையென்று முத்திரையிட்டனர் (இப்போது இந்த பூமராங் வீசும் திறன் ஆஸ்ட்ரேலியாவின் பழங்குடிகளிடம் மட்டுமே இருக்கின்றது). இவை யாவும் பண்பாட்டுச் சிறப்புகளே.

நமது அரசமைப்பின் எட்டாவது பட்டியலில் இடம்பெற்றுள்ள மொழிகளைப் பேசக் கூடிய மாநிலங்களிலும் கூட வேற்று மொழிகளை பேசக்கூடிய பல இன மக்கள் வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் எடுத்துக்கொண்டால், நீலமலையில் வாழும் படுகர், தோடர் இன மக்கள். இவர்கள் பேசும் மொழிக்கு எழுத்து வடிவமில்லை. ஆனால் அவ்வினங்களுக்கு பாரம்பரியம் உண்டு, தனித்த பண்பாடு உண்டு. அவைகளைக் கொண்டாடும் பண்டிகைகளும் விழாக்களும், தங்கள் பாரம்பரித்தை பரைசாற்றும் இசையும், பாடல்களும், இசைக் கருவிகளும் கூட உண்டு. நமது நாட்டின் வடகோடி மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டபோது, அங்கு இந்தி மொழி அல்லவா அம்மக்கள் மொழி என்று வினவினேன். அதற்கு வாகன ஓட்டி அளித்த பதில் எங்களுக்கு வியப்பைத் தந்தது. இங்கு நீங்கள் கடக்கும் ஒவ்வொரு 10 மைல் தொலைவிலும் வெவ்வேறுபட்ட மக்களும், அவர்களின் தனித்த மொழிகளும் இன்றளவும் வழக்கில் உள்ளன என்றார். அப்படியானால் இந்தி மொழி உங்களின் தாய் மொழியில்லையா என்று கேட்டதற்கு, அதுவும் எங்களுக்கு ஒரு தொடர்பு மொழியே என்று கூறினார். எழுத்துவடிவமற்ற மொழியினங்கள் கலந்து வாழும் ஒரு மாநிலத்தில் எழுத்து வடிவம் அளிக்கப்பட்ட இந்தி மொழி ஆட்சி மொழியாக உள்ளது. ஆனால், அம்மக்களின் பண்பாடு அவர்களின் ஆட்சிமொழியோடு எவ்வித தொடர்புமற்ற தனித்த பண்பாடாகும். இப்படி என்னற்ற எடுத்துக்காட்டுகளை கூறிக்கொண்டே போகலாம்.

இப்படி இந்திய நாட்டில் தொன்று தொட்டு வாழும் எண்ணிலடங்கா மொழி வழி இனத்தவர் யாவரும் தங்களுக்கென்ற தனித்த பண்பாட்டுகளைக் கொண்டவர்கள். உணவு, உடை மட்டுமின்றி, அவர்களின் வாழ்வியலும் பெரிதும் வேறுபட்டது, தனித்தன்மை கொண்டது. தாங்கள் நிலைப்பெற்று வாழ்ந்த பகுதிகளின் இயற்கை சூழலிற்கேற்ப உடலுழைப்பை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வாழ்வையும் சமூக கட்டமைப்புகளையும் உருவாக்கிக்கொண்டு வாழ்ந்தவர்கள், வாழ்ந்தும் வருபவர்கள்.

பருவத்திற்கும், சூழலிற்கும் உகந்த பயரிடுதல், பாத்திரங்களைச் செய்தல், ஆடு, மாடு, கோழிகளை வளர்த்தல், வேட்டையாடுதல், வேட்டைக்கும், தற்காப்பிற்குமான கருவிகளை உருவாக்கியிருத்தல், இசைக் கருவிகளை கொண்டிருத்தல், அவைகளைக் கொண்டு பாடல்களை அமைத்து பாடுதல், அதில் தங்களு டைய வீரத்தையும், பாரம்பரிய சிறப்பையும், முன்னோரின் பெருமையையும் பாடுதல், தங்களைக் காக்கும் குல தெய்வங்களை வழிபடல், அத்தெய்வங்களுக்கு தாங்கள் வளர்க்கும் பிராணிகளை பலியிடுதல், குறிப்பிட்ட பருவத்தில் பண்டிகைகளை கொண்டாடுதல், அப்பண்டிகையின்போது ஆடல், பாடல் நடத்தி, அதன் மூலம் தங்களின் தொன்மைகளை பரம்பரைப் பெருமைகளாக அடுத்த தலை முறைகளுக்கு கற்பித்தல் என்று இந் திய நாட்டின் இதர சமூகங் களுக்கு அறியாத, தெரியாத முகங்கள் கொண்ட இனங்கள் இந்தியத் திருநாட்டில் ஏராளம் உள்ளன.

நமது தலைவர்கள் - அதாவது இந்நாட்டின் விடுதலைக்கு அளப்பரிய தியாகங்கள் செய்து அறியப்பட்டவர்கள், நமது நெஞ்சங்களில் இன்றளவும் நிலைபெற்று வாழ்பவர்கள் - இவையாவற்றையும் உணர்ந்திருந்த காரணத்தினால்தான் “ஆயிரம் உண்டிங்கு சாதி இதில் அந்நியர் வந்திங்கு புகல் என்ன நீதி, ஒரு தாயின் வயிற்றிற் பிறந்தோம்” என்று பாடினர். நாம் இன்றைக்கு பேசும் சாதியல்ல மகாகவி பாரதி பாடிய சாதி (இன்றைக்கு உள்ளவை யாவும் ரிசர்வேஷன் சாதிகள்!). வேற்றுமைகளில் ஒற்றுமை என்பது ஒருவரையொருவர் முகம் தெரியாமல் இருந்தும் அடிமைத் தளையை உடைத்தெறிய ஒன்றுபட்ட உணர்வே ஒற்றுமை, அந்த ஒற்றுமை அடிப்படையில் கட்டப்பட்ட தேசத்தை அனைவரின் நீடித்த வாழ்விற்கான களமாக உயர்த்துதலே தேசிய வாழ்வென்பது. இந்த ஒற்றுமை உணர்வே இன்று வரை இந்தியர் என்ற பலமான அடையாளத்தைத் தாங்கி நிற்கிறது, இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் இறைமைக்கும் ஆதாரமாகத் திகழ்கிறது.

இந்நாட்டின் ஒவ்வொரு இனக் குழுவினரும் தங்களின் பண்பாட்டை, பாரம்பரியத்தை சட்ட ரீத்யாக காத்துக்கொள்வதற்கே இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பிரிவு 29(1) சேர்க்கப்பட்டிருக்கிறது. அது சிறுபான்மை என்று நாம் பொதுவாக அழைத்திடும் எத்தனை சிறிய இனக் குழுவாயினும், அவைகள் பேசும் மொழிக்கு எழுத்து வடிவம் இருக்குமெனில் அவைகளின் பண்பாட்டைக் காத்திட தனித்த சட்டமியற்றும் அதிகாரத்தை அரசுகளுக்கு அளிக்கின்றது. இதனை எழுத்து வடிவமற்ற இனங்களுக்கும் நீட்டித்தலே மேலும் பொருளுடையதாக இருக்கும் என்பது மானுடவியல் ஆய்வாளர்களின் எதிர்பார்பார்ப்பாகும். அதனைச் செய்திடலே இன்றய காலகட்டத்தின் அவசியமாகும்.

ஆனால் இந்நாடு விடுதலைப் பெற்றப் பிறகு, தனித்த அரசமைப்புச் சட்டத்தை யாத்து அளித்துக்கொண்ட ஒரு குடியரசாக உயர்த்திக்கொண்ட பின்னர், அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களின் தற்சார்பு, குறுகிய பார்வைகளால் இந்நாட்டின் ஒரு மொழிக்கு முன்னுரிமை அளிப்பதும், ஒரு சில அடையாளங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதுமான நடவடிக்கைகள் தேவை யற்ற சிக்கல்கள் உருவாகக் காரணமாகிக் கொண்டிருக்கிறது. ஒரு கட்சியாக இணைந்து தாங்கள் வகுத்துக்கொண்ட கருத்துக்களை கொள்கைகளை எடுத்துரைத்துஅவையே இந்நாட்டின் ஒற்றுமைக்கு அவசியம் என்றும் கூறி ஆட்சி அதிகாரத்தை வைத்து அழுத்தம் கொடுப்பது வாடிக்கையாகியிருக்கிறது. பல்வேறு இனங்களையும் மொழிகளையும் தனித்தே கொண்ட மாநிலங்களின் ஒருங்கிணைந்த நாடே, ஒன்றியமே இந்தியா என்ற அரசமைப்பு ரீதியாக அருதியிடப்பட்ட நிலையை, அதே அரசமைப்பில் ஒரு மொழியை (மட்டுமே) வளர்ப்பது அரசின் கடமை என்று புகுத்தி, அதை இதர மொழி வழி மாநிலத்தவர்களின் மீது திணித்து, அதை எதிர்ப்பவர்களைத் தேச விரோதிகள் என்று சித்தரிக்கும் ஒரு தற்சார்பு தற்பெருமை அரசியல் இந்நாட்டின் பெருமிதத்திற்கும், ஒற்றுமைக்கும் பெரும் கேடாய் உருவாகி வருகிறது.

விவசாயம், தொழில் துறை முன்னேற்றம், வேலை வாய்ப்பின்மை, பொது சுகாதாரம் என்று எண்ணற்ற முக்கிய சிக்கல்களைத் தீர்க்க வேண்டிய நிலையில் உள்ள இந்நாட்டின் அரசியல் தலைமைகள் மொழி, பண்பாடு, மதம், அடிப்படை உரிமைகள் ஆகியன தொடர்பான தேவையற்றச் சர்ச்சைகளையும் சிக்கல்களையும் உருவாக்கி அதனில் குளிர்காய்கின்றனர். இந்நாட்டின் நாடாளுமன்றத்தில் மக்களின் அன்றாட வாழ்வையும், பொருளாதாரத்தை நெருக்கும் சிக்கல்களைப் பற்றியெல்லாம் பேசப்படுவதில்லை. ஆனால் சிற்சில சட்ட வரைவுகள் மட்டுமே எவ்வித எதிர்ப்புமின்றி மிக சுலபமாக நிறைவேற்றப்படுகின்றன. இதில் மட்டும் ஆளும், எதிர்க் கட்சிகளிடையே ஏதோ ஒரு ‘இணக்கப்பாடு’ இருந்து வருகிறது! மற்றபடி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுமையாக நடந்த நாட்களை விட முடக்கப்பட்ட நாட்களே கடந்த சில ஆண்டுகளில் அதிகம் என்கிற அவல நிலையில்தான் நமது ‘பெருமைக்குரிய’ நாடாளுமன்ற ஜனநாயகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இப்படியான ஒரு ‘ஜனநாயக’ சூழலில்தான் 2011ஆம் ஆண்டில் ஒரு நாள், காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ்,

ஜல்லிக்கட்டு விளையாட்டு காட்டுமிராண்டிக் காலத்துப் பண்பாடு என்று வர்ணித்தார்.

இந்நாட்டின் பெருமைக்குரிய ஒரு மாநிலத்தின் மக்கள் தங்களின் வீரப் பாரம்பரியப் பெருமையாக நினைத்து கொண்டாடி வரும் ஜல்லிக்கட்டை, இந்நாட்டின் அமைச்சர் ஒருவர் எவ்வித தயக்குமும் இன்றி காட்டுமிராண்டிக் காலத்துப் பண்பாடு என்று எப்படி கூற முடிந்தது? அப்படிக் கூறுவதற்கான அடிப்படை என்ன? அவ்வாறு துணிந்து கூறுவதற்கான அதிகாரம் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷூக்கு வந்தது எப்படி? பண்பாடு என்பதைப் பற்றிய ஜெய்ராம் ரமேஷின் புரிதல் என்ன?

இந்திய ஒன்றிய அரசின் அமைச்சர் ஒருவர், அந்த ஒன்றிய ஆட்சியின் அங்கமாக அப்போது இருந்த தமிழகத்தின் ஆளும் கட்சியான தி.மு.க. அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நிலையில் காட்டுமிராண்டிப் பண்பாடு என்று ஜல்லிக்கட்டை இழித்துக் கூறும் துணிவு எங்கிருந்து வந்தது? என்பதும் மற்றொரு கேள்வியாகும்.

பண்பாடு, பாரம்பரியம் பற்றிய புரிதல் வேண்டும்

தாங்கள் வாழும் அரை நூற்றாண்டையோ அல்லது ஒரு நூற்றாண்டையோ மட்டும் கண்கொண்டு காண்போர்கள் பாரம்பரியமாய், பண்பாடாய் நிகழ்த்தப்பட்ட வண்ணமிருக்கும் அர்த்தம் கொண்ட சிறப்பான வீரியமிக்க வாழ்வியல் முறைகளை தொலைநோக்குப் பார்வையில்லாமல் பழித்துக் கூறுவது, உள்நோக்கம் கொண்டு களங்கம் கற்பிப்பது தற்குறிச் செயலாகும். எதற்கும் ஆதரவு கிடைக்கும், பெருகும் இக்காலச் சூழலில் ஜல்லிக்கட்டை எதிர்ப்பதற்கும் ஆதரவு கிடைப்பது சாத்தியமானதே. ஆதரவு கிடைப்பதனால் மட்டும் அதையேற்று சாதகக் கொடி பிடிப்பது ஓர் மேன்மையை இழப்பதாகவே ஆகும்.

பாரம்பரியம் என்றாலே கடைபிடிக்கப்பட்ட மாண்பு என்றாகும். அதற்கு பழமை எனும் அரிதாரம் பூசுதல், ஒதுக்கப் பார்த்தல் வாழ்வின் அடிப்படை ஆதாரத்தை விட்டு தூர விலகுதலேயாகும். தங்களுக்குள்ளேயே அடைந்து கிடப்பவர்களுக்குப் பிற மனிதர்களே அந்நியமாய் தெரிகின்றபோது இவர்கள் நேரடியாக காணாத எவையும், பங்கேற்க இயலாத எவையும் தேவையற்றதாய் தோன்றுவது மிகச் சராசரியான இயல்புச் செயலாகும். மேன்மையான வீரத்தை விளையாட்டாய் காண்பதல்ல வீர விளையாட்டு, விளையாட்டில் வீரத்தை கலப்பதே வீர விளையாட்டாகும். இதில் வதைப்பது, துன்புறுத்துவது என்று கூறுவது தவறாகும். ஜல்லிக்கட்டு என்கிற தமிழரின் வீர விளையாட்டில் ஐந்தறிவு விலங்காயினும் பல மனிதர்களின் பலத்தையும் மிஞ்சிய காளைகளை பயன்படுத்துகையில் அதனை வதை எனக் கூக்குரல் இடுவதேன்?

விலங்குகளை இம்சை செய்வதாய் எதிர்க் குரல் கொடுப்பவர்கள் இந்நாட்டின் பாரம்பரிய வாழ்வில் விலங்குகளுக்கு அளிக்கப்பட்ட மேன்மையை அறியாததேன்? தன் இல்லத்தில் வளர்க்கப்பட்ட காளையை வீரமாய் அடக்கிய வாலிபருக்கு தன் அன்பு மகளை திருமணம் செய்து வைத்துள்ளனரே ஏன்? துன்பம் வந்தால் தன் உயிரையும் துச்சமென கருதி தன் மனைவியை காக்கக் கூடிய வீரம் இவனிடம் உள்ளது என்பதால் மட்டுமேயாகும். வீரத்தை சோதிக்க உட்படுத்தினார்களே அன்றி அதனை சாகடிக்க உட்படுத்தவில்லை. காலப்போக்கில் வாழ்வியலில் இருந்து மறைந்து போன அந்த வீரத்தை பெயரளவிற்கு தூசி தட்டி நினைவுறுத்திக் கொள்ளும் நிகழ்வைத் தடுக்க முயல்வது எவ்வகையான அறிவார்ந்த செயல் என்பதனை தடுப்போர்கள் தெளிவாய் விளக்க வேண்டும். இவ்வீர விளையாட்டை ஊக்கப்படுத்தி கொண்டாடுபவர்கள் விவசாயிகள். இவர்கள் தங்கள் வாழ்வில் பறவை இனங்களுக்கும், விலங்கினங்களுக்கும் குறித்த பங்கினை அளிப்பவர்களாவர். அவர்களுக்கும் அவர்களால் வளர்க்கப்படும் விலங்குகளுக்கும் இடையே ஓர் இணக்கம் இருக்கின்றது. இதனை ஏற்படுத்தியோர், காப்போர் இன்று வாதத்தை நீட்டுவார்களோ? அறிவியல் வளர்ச்சி எனும் பெயரில் இயந்திர கதியினை உருவாக்கி மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பினை வேரறுக்கின்றோரை இவர்கள் கேட்கப் போகின்ற கேள்விகள் என்ன?

மற்ற உயிரினங்களோடு இணைந்து வாழ்கின்றபோதே மனிதனின் பலம், பலவீனம் தெரிய வருகின்றது. வீர விளையாட்டுகளில் காளையுடன் மோதும்போது இவை வெளிப்படுகின்றது. பலம், பலவீனங்களை அறிந்துகொள்ளும் முறைகளில் வீர விளையாட்டுகளும் ஒன்றாகும். இவை பலத்தை வளர்த்துக்கொள்ளவும், பலவீனத்தை நீக்கிக்கொள்ளவும் உதவியாய் அமைகிறது. பயனுள்ள எவையினையும் பின்பற்றியே ஆக வேண்டும். ஒருவேளை விட்டுவிடுதல் வாழ்வின் மேன்மையை விட்டுவிடுதலாகும். வீரத்தன்மை உடையவர்களை அறிவற்றவர்கள் முரடர்கள் என்றும், கொடுமையானவர்கள் என்றும் அடையாளம் காட்ட முயல்வது இழிவை ஆட்சி மன்றத்தில் வைக்கும் முயற்சியாகும். வீரத்துடன் நேருக்கு நேர் மோத இயலாதவர்கள் வீரத்திற்கு எதிராய் பலபெயர்களை தங்கள் வசதிக்கு இடுவது வாடிக்கையான ஒன்றே.

தம்மிடம் இல்லா ஆற்றலும், வீரமும் இணை மனிதர்களிடம் இருப்பதைக் கண்டு பெருமிதம் கொள்ளாமல் பல்வேறு காரணங்களை காட்டி மழுங்கடிக்கச் செய்வதும், செய்ய முயல்வதும் அச்சமுதாயத்தை காலப்போக்கில் மாற்றானிடம் முழுமையாக மண்டியிடச் செய்யும் மடமையாகும்.

எப்போதும் பலவீனத்தை பலமே ஆட்சி செய்கின்றது. எனவே நம்மை நாம் வீரம், விவேகம் கொண்டு ஆட்சி செய்கையிலேயே பிறர் நம்மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பார்கள். உயர்வில்லாதவை எவையும் பாரம்பரியமாய் தழைத்தோங்கி வாழவியலாது. சமுதாயத்தில் நிகழும் தீமைகள் எவையும் வெறுக்கபடுகின்றதே அன்றி மகிழ்ந்து கூட்ட மாய் கூடி வெளிப்படையாய் கடைபிடிக்கப் படுவதில்லை. தீமையாயிருந்தால் காளைகளை வீரமாய் அடக்க முயலுதல், அடக்குதல் வீரமாய் போற்றப்பட மாட்டாது, அவை வினையாய் எப்போதோ தூக்கி வீசப்பட்டிருக்கும். இதற்கு வேறொரு விளக்கம் தனியாய் தேவையில்லை. பாரம்பரியம், கலாச்சாரத்தை எதிர்ப்போர் ஆழ் நோக்கில்லாத மேம்போக்கு மனிதர்களாய் இருப்பார்கள்.

பாரம்பரியம் மிக்கவர்களை பழமைவாதிகள் என்போர் வாழ்வின் அடிப்படையை தகர்க்க முயன்று ஆதாரமின்றி மண்ணில் சாய்பவர்களாகவே மாறுவார்கள். கடினமாய் இருக்கின்ற காரணத்தினால் எதனையும் இழக்கக்கூடாது. அவ்வாறு இருக்குமானால் சின்னஞ்சிறு இன்னலிற்கும் முன்னால் மடிவதாகவே வாழ்விருக்கும். இம்மண்ணை ஆண்ட மன்னரில் ஒருவரும் வீரத்தை கண்டித்திருக்க மாட்டார்கள். நம்மை குறுக்கு வழியில் ஆட்சி செய்த வெள்ளையர்கள் இந்தியர்களின் வீரத்தினை கண்டு அஞ்சி சூழ்ச்சி செய்து துணிச்சல் மிக்க வீரர்களை இந்நாட்டு மக்களை விட்டு பிரிக்க பொய்யான குற்றஞ்சாட்டி அவர்களை தீயவர்கள், கொடுமையானவர்கள் என முத்திரையை குத்தினார்கள். ஆழ்ந்த பார்வையற்றோர் அதனை ஏற்றனர். கயவர்கள் மற்றவர்களை கயவர்கள் எனக் கூறுவதில் எங்ஙனம் உண்மையிருக்கும்? இந்நாட்டு மக்கள் சிந்திக்காதது ஏன்?

வீர விளையாட்டில் எப்போதாவது உயிரிழப்பு ஏற்படுகின்றது என்பது உண்மையே, அதிலிருந்து பாதுகாப்பு பாடம் கற்க வேண்டியதுதானே? ஏன் கொலையால், கொள்ளையால், துரோகத்தால் தேவையற்ற, அநீதியான முறைகளில் உயிரிழப்பு ஏற்படுவதில்லையா? விஞ்ஞான கண்டுபிடிப்பான வாகனங்களை தேவையற்று வேகமாய் இயக்கி, சாகசமாய் முயன்று உயிரிழப்பு ஏற்படுவதில்லையா? இதில் பயனாய் தங்களை வளர்த்துக்கொள்ளும் முயற்சி எங்குள்ளது? வீர விளையாட்டுகளில் ஏற்படும் காயங்கள், உயிரிழப்பை கண்டு உண்மையில் பதைப்போர்கள் ஆழ்ந்த கண் கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை கூறினால் வரவேற்பது வீரத்தின் மீது ஈடுபாடு கொண்டோரின் அத்தியாவசிய தேவையாய் அவை இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அனைவரும் அனைத்துத் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. தங்களை பணையம் வைத்து தங்களின் தனித் திறனை வளர்த்துக் கொள் வோரை இல்லா, பொல்லா காரணங் களைக் கூறி ஏன் தடுக்க வேண்டும்? சிறுவர்கள் ஓடியாடும் விளையாட்டை இயந்திர கதி உல கம் பிரித்துவிட்டது. ஆற்றலை செலவிட்டு ஆற்றலை பெறுவது படைப்பின் தத்துவம். அதை இழந்து ஆற்றலற்ற மானுட வருங்காலம் உருவாகிக் கொண்டிருக்கின்றது. இதனால் யாருக்கு என்ன பயன்? விழாக்கள் எவ்வளவோ பாரம்பரிய மிக்க இந்நாட்டில் அதன் பொருளை உணர்ந்தோர் எவ்வளவு பேர்? நீடித்து உழைப்பவர்கள் இடையிடையே கொண்டாடி மகிழ்வதற்கும், உழைப்பிற்கு பலனை விளைத்து கொடுத்த தெய்வத்திற்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிப்பதற்குமே அவ்விழாக்களிலேயே பல்வகையான திறமைகளை காட்ட தொடர்ச்சியாய் பெருக்கிக் கொள்ள தன் இனத்தோடு, தன் நாட்டோடு என பல இருக்கின்றன. மேலை நாட்டோடு நம் வீர மரபுச் செயல்களை ஒப்பிட்டு இது காட்டுமிராண்டித்தனமான செயல் என் பவர்கள் தங்களின் கணவன், மனைவி சார்ந்த தாம்பத்திய வாழ்க்கையை உலகின் பல நாட்டு மக்களின் வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டு ஏற்க முயல்வார்களானால் எது காட்டுமிராண்டித்தனம் என்பது தெளிவாகும். இந்த பாரம்பரியம் மிக்க இந்நாடு உலகிற்கு வாழ்வியலை கற்றுக்கொடுத்த நாடு. உலகின் பல நாடுகள் பிற நாட்டு மக்களின் வாழ்வை சூறையாடிபோது தங்களை தற்காத்துக்கொள்ள வரையறை செய்யப்பட்டவற்றில் வீரமும், விவேகமும் முக்கிய பங்கினை வகுத்திற்று. அதனின் தொடர்ச்சியாய் எண்ணிக்கையில் மிகக் குறைவாக கடைபிடிக்கப்பட்டு வருபவைகள் பாரம்பரிய விழாக்களும் அதில் நிகழும் வீரம் செறிந்த விளையாட்டுகளும் இருக்கின்றன.

பழயன என எவரும் ஒன்றை ஒதுக்கிட வேண்டுமென்பது தனியாய் வேண்டாம். ஒன்றின் பயனற்ற தேக்கமே அதனை நம்மை விட்டு விலக்கி வைத்திடும். அதற்காக ஏன் முட்டி மோதி ஆற்றலை செலவிடுவானேன்?

சமுதாயம் இரண்டாய் பிரிவது சூதுவாதுமிக்க மனிதர்களுக்கும், ஆடல்களுக்குமே சாதகமாய் அமைந்திடும், அவைகள் அமைத்துக்கொள்ளும். எப்போதும் பிரிவினை உருவாக்குவது கருத்து வேறுபாடு கொண்டவர்களால் மோதலாகி அழிவைத் தருவது கீழ்நிலையானவர்களாலும், கயவர்களாலுமே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும், இதனை அறிந்து கொண்டு பெருமுயல்தலிற்கு பின் னர் கருத்து வேறுபாடு மறைந்திடலாம். அதற்குள் உண்டான காயங்கள் எளிதில் மறைந்திடுவது கிடையாது. தனி மனித மோதலிலிருந்து, இருநாட்டுப் போர் வரை நீளும் கருத்து வேறுபாடுகள் கூட விரைவில் நீங்கிடலாம், ஆனால் அதற்குள் உண்டான காயங்கள் நிலையான பிரிவினைகளை தோற்றுவிக்கின்றன. சிந்தனையில் மோதல்கள் உண்டானால் அதனை சீர்தூக்கிப் பார்த்து களைய வேண்டும். இல்லையேல் அவை செயல் மோதலாய் உருமாறும். தவிர்க்க வேண்டும் இல்லையேல் மோதல்களே சிந்தனையாய் மேலெழும் அதன்பின் வீழ்தலொன்றே சாத்தியமாகும்.

தேவை என்பதற்காகத்தான் எதனையும் நாட வேண்டும், இருக்கின்றது என்பதனால் எதனையும் நாடக்கூடாது. நீதிமன்றம் இருப்பதனாலேயே எதற்கெடுத்தாலும் நாடுவதாலேயே வாதத் திறமையால் தீமைகளும், அநீதிகளும் வாழ்வில் பலமாய் வலம் வருகின்றன. எவ்வாறெனில் சட்டங்களுக்கு சாட்சியங்களே முக்கியம். உண்மையாய் நிகழ்வது மட்டும் சாட்சியமாய் ஏற்கப்படுவதில்லை. போலியான முறையில் உருவாக்கப்படுவதும் சாட்சியங்களாய் ஏற்கப்படுகின்றது. தர்மத்தை ஏற்பவர்களுக்கு சட்டம் அவசியமற்றது, சட்டத்தை மட்டும் நாடுபவர்களுக்கு தர்மம் அர்த்தமற்றது. மக்களுக்காகத்தான் சட்டமேயன்றி சட்டத்திற்காக மக்களல்ல. ஆனால் தர்மத்திற்காக மக்கள் வாழ வேண்டும். இல்லையேல் வாழ்வு சந்தேகமே இல்லாமல் நிலையான கேள்விக்குறியே. பாரம்பரியம் மிக்கவை வாழ்வின் பதிலாக இருப்பவைகள் அவைகளை கேள்விக்கு உட்படுத்தி வாழ்வினையே கேள்விக்கு ஆளாக்கி பதிலிற்கு காக்க வைப்பது வாழ்வினை வளர்ச்சிக்கு எதிராய் தேக்கி வைப்பதேயாகும். நீதியை கூறுபவர்கள் அனைவரும் நீதிமான்களாய் இருப்பதில்லை. எவ்வாறெனில் தாங்கள் விரும்பியதை கூறுவதும், அறிந்ததைக் கூறுவதும் தீர்வாகாது. எத்தனையோ தீர்வுகள் ஏன் தேர்விற்கு உட்படுத்தப்படுகின்றது?

நீதிமன்றங்கள் சாட்சியை ஏற்கும் நாம் வாழ்வின் மீட்சியை சாதகமாய் ஏற்போம்.

Pin It