“The function of man is to live, not to exist. I shall not waste my days in trying to prolong them. I shall use my time” - Jack Londan, American Novelist

இன்றைய மனித குலத்தின் பேரவலம் எது? பெருந்துயரம் எது? முரண்பாடு எது? முதன்மையான சிக்கல் எது?

வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், வன்முறை, சுதந்திரம் இழப்பு, சனநாயக மறுப்பு, ஓடுக்குமுறை, மனித உரிமை மீறல், கார்ப்பரேட் சுரண்டல், உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராள மயமாக்கல், ஆணாதிக்கம், சூழலியல் பேரழிவு, போர்கள், கலவரங்கள்…. இப்படி பலவற்றை இதற்கு விடைகளாக எழுதிக் கொண்டு போகலாம். ஆனால் அனைத்திலும், மனித மாண்பின் சவாலாக அமைந்த பிரச்சினையாக அகதிகள் என்கிற ஏதிலிகளின் (குடியுரிமை இழந்தவர்கள்) வாழ்வியல்தான் முதன்மையானதாக இருக்கிறது. மேற்கொண்ட அனைத்துப் பிரச்சினைகளும், அதன் முரண்களும் பின்னிக் கலந்து அகதிகள் பிரச்சினையை பெருந்துயரமாய், மனிதப் பேரவலமாய் மாற்றியுள்ளது.

நாம் கூட ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குச் செல்கிறோம். போகும் வழியில் ஏதோ காரணங்களால் தடங்கல்கள் ஏற்பட்டு சில மணி நேரங்கள் அல்லது ஒரு நாள் தாமதமானால் எப்படி துடித்துப் போகிறோம்? தங்கள் இரத்த உறவுகள், நண்பர்களைக் காணவில்லை, தொடர்பு கொள்ள முடியவில்லை என்று எத்தகைய மன உளைச்சல், பயம், பதட்டம், கவலை அடைந்து நாயாய், பேயாய் அலைவதை கற்பனை செய்து பாருங்கள்! சொந்த ஊரில், சொந்த நாட்டில், சொந்த மொழியினர் வாழும் இடங்களில் இப்படி என்றால் தங்களுக்கு சொந்தமில்லா நாட்டில், உறவுகள் - நட்புகள் இல்லாத ஊர்களில். அந்நிய மொழியில் உரையாடும் இடத்தில், குடியுரிமை இழந்து நமது அம்மாக்கள், தங்கைகள், தாத்தாக்கள், நாம் இருக்க முடியுமா? ஆனால் அப்படியான வாழ்க்கையை நிரந்தரமாக வாழ்வதற்கு நிர்பந்திக்கப் பட்டவர்கள்தான் ஏதிலிகள்!

rohingya refugeesஏகாதிபத்தியம் என்றால் போர்கள் - மறு பங்கீட்டிற்காக நாடுகளுக்கிடையே போர்களைப் புரிதல் என்பது மார்க்சியத்தின் பாலபாடம். ஆனால் அந்தப் போர்கள் விளைவிக்கும் மனித உறவுகளின் சிதைவுகள், நாகரிக நசிவுகள், மாண்புகள் மண்ணோடு புதையும் மையமாக ஏதிலிகள் வாழ்க்கை உள்ளது. அதுவும் ஏகாதிபத்திய (கார்ப்பரேட்) வளர்ச்சி சூறையாடும் முதலாளியமாக மாறிய பின்பு, தனது இலாப வேட்டையை நிலைநிறுத்த பகுதி யுத்தங்களை உருவாக்கி, போர் ஆயுதப் பொருளாதாரமாக, இயற்கை பேரழிவாக மாற்றிக் கொண்டிருக்கிறது.. மனித உழைப்பின் பயன்களும் - இயற்கை மூலதனத்தின் பெரும்பகுதியும் இந்தப் போர்களில் பெருமளவில் மறு உற்பத்திக்காக அழிக்கப்படுகிறது. விளைவாக கோடிக்கணக்கிலான மக்கள் உலக நாடுகள் எங்கும் ஏதிலிகளாக செல்ல வேண்டிய மோசமான சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், வன்முறை, கார்ப்பரேட் சுரண்டல், ஆணாதிக்கம், சுதந்திரம் இழப்பு, சனநாயக மறுப்பு…. என அனைத்தும் ஏதிலிகள் வாழ்வில் திணிக்கப் படுகின்றன.

தொழிற் புரட்சிக்குப் பின்பு ஒரு டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகமாகி விட்டது. புவி வெப்பமயமாதல் விளைவுகளைப் பற்றி உலக பணக்கார நாடுகளும், கார்ப்பரேட்களும் வாய்பந்தல் மட்டும்தான் போடுகின்றன என்பதை சமீபத்திய சூழலியலுக்கான உச்சி மாநாடு புரிய வைத்து விட்டது. புவி வெப்பமயமாதல் பாதிப்புகளை ஏழை நாடுகள் மீது பல வகைகளிலும் கார்ப்பரேட்கள் திணிக்கின்றன். இந்த சூழலியல் பேரிடரில் பல இலட்சம் அகதிகள் உலகம் முழுவதும் இடம் பெயர்கின்றனர்.

ஹோமோசேபியனாக சில இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உருமான மனித இனம் பல கண்டங்களுக்கு, பல காரணங்களுக்காக சென்று பரவி உள்ளது. ஒரே மூதாதையர்தான் இன்று நாடுகள், தேசங்கள், மதங்கள், இனங்கள், மொழிக் குடும்பங்கள், சாதிகளாக என்று மாறுபட்ட மனித நாகரிகங்களாக, பண்பாட்டுக் குழுமங்களாக வளர்ந்துள்ளன.

இந்தப் பின்னணியுடன் ஏதிலி வாழ்வியலை, மோடி ஆட்சி கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தினரை மட்டும் அகதிகளாக ஏற்றுக் கொள்ளதை முதன்மையாகக் கொண்டும், இன்னும் பல சரத்துகளுடனும் இந்த சட்டம் உள்ள்ளது. இதனுடன் பேரிடியாக குடியுரிமை திருத்தச் சட்டத்துடன்(CAA), குடிமக்கள் பதிவேடு மசோதா (CRC) விரையில் வரும் என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

குடியுரிமை என்பதை ஓட்டு போடும் உரிமை என்பதாக சுருக்கி பொது மக்களால் பெரும்பாலும் புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. சொத்துரிமை, கல்வி உரிமை, வேலை உரிமை, தொழில் உரிமை, தங்களது விருப்பமான பண்பாடு, நம்பிக்கைகள், மதக் கடமைகள் தொடர்வதற்கு (பிறருக்கு பாதிக்காத வகையில்) உரிமை, ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க - தேர்வு செய்யப்படும் உரிமை, இராணும் - நீதி - நிர்வாகத் துறைகளில் சம வாய்ப்பினைப் பெறும் உரிமை, மனித மாண்புகளுடன் வாழும் மனித - சனநாயக - சுதந்திர உரிமைகள் அனைத்தும் இணைந்ததுதான் குடியுரிமை சாரம்சமாகும்.

1857 சுதந்திரப் போருக்குப் பின்பாக, பிரிட்டிஷ் கிழகிந்தியக் கம்பெனி ஆட்சிக்கு மாறாக,  நேரிடையாக பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்ட போதுதான் இங்கு முதலில் குடியுரிமைச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. அப்பொழுதும் கூட இங்கு பல சமஸ்தானங்கள் இருந்தன. அந்த சட்டம்தான் பல திருத்தங்களுடன் இன்றும் பின்பற்றப்படுகின்றது.

இந்தியாவில் குடியுரிமை இல்லாதவர்கள் அனைவரையும் கடவுச்சீட்டு உடைய வெளிநாட்டினர், சட்டவிரோதக் குடியேறிகள், அகதிகள் என்று மூன்று வரையறைக்குள் கொண்டு வருகின்றனர். இந்த அகதிகளை 1939ம் ஆண்டு வெளிநாட்டார் பதிவுச் சட்டம், 1946ம் ஆண்டு வெளிநாட்டார் சட்டம் மற்றும் இங்குள்ள பல கடவுச் சீட்டு சட்டங்கள் முதலியவை தான் வழிநடத்துகின்றன.

இச்சட்டங்கள், குறிப்பாக வெளிநாட்டார் சட்டம் அகதிகளுக்கானதல்ல.

இச்சட்டங்கள்

(அ) தங்களது நாடுகளில் வாழ இயலாமல் துன்புறுத்தப்பட்டு வெளியேறி வரும் அகதிகளையும்,

(ஆ) இங்குள்ள வேலை வாய்ப்புகள் அல்லது தொழில் வாய்ப்புகள் மூலம் தம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக சட்டப்பூர்வமாகவும், சட்டப்பூர்வமற்றும் வருகிற புலம் பெயர்ந்தவர்களையும் (legal and illegal migrants)

(இ) உரிய பயண ஆவணங்களுடன் இங்கு வருபவர்களையும் வேறுபடுத்தி அணுகுவதில்லை. ஒரே மாதிரியாக அணுகுவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானதாகும்.

இந்தச் சட்டமும், இந்தச் சட்டத்தின் அடிப்படையில் 1971ல் வெளியிடப்பட்ட ஆணையும், 2004ல் வாஜ்பாயி அரசாங்கத்தால் இச்சட்டத்திற்குக் கொண்டு வரப்பட்ட திருத்தமும் குடிமக்கள் அல்லாதவர்கள் மீது அபரிமிதமான அதிகாரங்களை இந்திய அரசுக்கு அளிக்கிறது. உரிய ஆவணங்கள் இல்லாத யாரையும் கைது செய்யவும், தடுத்து நிறுத்தவும், சிறையில் அடைக்கவும், தேவையானால் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பவும் இச்சட்டம் வழிவகுக்கிறது. 2003ம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திருத்தப்பட்ட குடிமக்கள் சட்டமும் அகதிகளுக்கு எதிரான அரசின் அதிகாரங்களை வலுவாக்குகிறது.

வாஜ்பாய் அரசு கொண்டு வந்த ஈழ அகதிகளுக்கு எதிரான குடியுரிமை திருத்த 2003 சட்டத்தில், "ஜூலை 1,1987 வரை இந்தியாவில் பிறந்த எவரும் பிறப்பால் இந்திய குடிமக்களாக கருதப்படுவர். ஜூலை 1,1987 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்" என்று ஒரு புதிய நிபந்தனை சேர்க்கப்பட்டது. இந்த சட்டம் 2004ம் ஆண்டு மீண்டும் திருத்தப்பட்டது. அதன்படி டிசம்பர் 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த ஒரு நபர் இந்திய குடிமகனாக கருதப்பட வேண்டுமென்றால், அவரின் பெற்றோர்களில் ஒருவர் கட்டாயம் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். மற்றொருவர் இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியவராக இருக்கக் கூடாது.

இங்குள்ள ஈழ அகதிகள் அனைவரும் சட்ட விரோதமாக குடியேறியவர்களாகவே இந்திய அரசும், தமிழக அரசும் பதிவு செய்து உள்ளது. இதன்படி ஈழ அகதியை இந்தியர் திருமணம் செய்தாலும் அவருக்கும், அவர் குழந்தைகளுக்கும் 2004 சட்டப்படி குடியுரிமை கிடையாது.

2019 CAA-ல் மட்டுமல்ல, 2004 ஆம் ஆண்டு காலத்திலேயே வாஜ்பாய் (பாஜக) அரசு ஈழ அகதிகளுக்குத் துரோகம் செய்து உள்ளது.

நடப்பில், இந்திய அரசு யாரையுமே அகதிகளாக கடந்த 69 ஆண்டுகளில் அங்கீகாரம் செய்தது கிடையாது. 1946 ஆம் ஆண்டு வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ்தான் எல்லா அகதிகளும் நடத்தப்படுகின்றனர். இந்திய அரசு அய்க்கிய நாடுகள் சபையின் அகதிகள் சட்டத்தில் இன்றுவரை கையெழுத்திடவில்லை என்பது எவ்வளவு கொடுமை, அறமற்ற அரசியல்! இந்தியாவில் டூரிஸ்ட் விசாவில் வரும் வெளிநாட்டவர்களையும் (Foreign Tourist), போர்கள், இயற்கைப் பேரிடர், அரசுகளின் பழிவாங்கல்கள் போன்ற காரணங்களுக்காக ஏதிலிகளாக வரும் வேறுநாட்டினரையும் (Refugees) ஒன்றாகவே இந்திய அரசும், தமிழக அரசும் நடத்துகின்றன.

அகதி என்பவர் இனம், சமயம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் அரசியல் கருத்து வேறுபாடு காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவரும், அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும், அந்நாட்டினுடைய பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும். அரசியல், போர் உள்ளிட்ட காரணங்களால் தம் நாட்டிலிருந்து வெளியேறி பிற நாட்டிலோ அல்லது அதே நாட்டில் பிற இடங்களுக்கோ அடைக்கலம் புகுந்தவர், இடம் பெயர்ந்தவர், ஆதரவற்றோர், நாடிழந்தவர், புலம் பெயர்ந்தவர், தஞ்சம் புகுந்தவர் அகதி எனப்படுவர்.

பொதுவாக புகலிடம் என்பதும் ஒரே பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இவர்களுக்குள் மெல்லிய வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. பரந்த பொருளில் நோக்கும்போது, புகலிடம் கோரும் நபர்களுக்கு அடைக்கலம் தரும் ஒரு சட்ட நிறுவனமே புகலிடம் ஆகும். அகதி என்பது அவ்வாறு புகலிடம் அளிக்கப்பட்ட நபரின் சட்டத் தகுநிலையாகும். புகலிடம் என்பது ஒரு நாட்டின் உள்நாட்டுச் சட்டத்தால் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. ஆனால் அப்புகலிடம் பெற்ற அகதிகளின் சட்டநிலை சர்வதேசச் சட்டத்தால் ஒழுங்குபடுத்தப் படுகின்றது.

அகதிகளின் சட்டத் தகுநிலை (Legal Status of Refugee)

அகதிகளின் சர்வதேசச் சட்டத் தகுநிலையும் சர்வதேசப் பாதுகாப்பும் 1951 ஆம் ஆண்டு அகதிகளின் தகுநிலை பற்றிய ஐ.நா.மாநாட்டையும் அதன் தொடர்ச்சியான 1967 ஆம் ஆண்டு முதல் குறிப்பையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவ்விரண்டிலும் இந்தியா கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். 1951 ஆம் ஆண்டு மாநாட்டின் வகைமுறைகள், 1951 ஜனவரி 1ம் தேதிக்கு முன்பாக உள்ள அகதிகளுக்கு மட்டுமே பொருந்துவதாக இருந்தது. ஆனால், 1967 ஆம் ஆண்டு முதற்குறிப்பின் படி, சமூகக் குழுவின் உறுப்பினர் அல்லது ஓர் அரசியல் கருத்தைக் கொண்டிருத்தல் ஆகிய காரணங்களுக்காக தங்கள் நாட்டில் தாம் அச்சுறுத்தப்படலாம் என்று பலமான ஆதாரங்களின் அடிப்படையில் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக தாம் முன்பு வசித்த வீட்டை விட்டு வெளியில் இருக்கும் நபர் எவரும் அகதியே ஆவார்.

அகதிகளின் தகுநிலை பற்றிய ஐ.நா.மாநாடு பின்வரும் இரண்டு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவை:

ஒரு நாட்டின் குடிமக்களுக்கும், அந்நாட்டில் இருக்கும் அகதிகளுக்கும் இடையில் கூடுமான வரை பாரபட்சம் காட்டப்படக் கூடாது. ஒரு நாட்டில் இருக்கும் அகதிகளுக்கு இடையே அவர்களின் இனம், மதம் அல்லது அவர்களின் பூர்வீக நாடு ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டக் கூடாது. 

ஒரு நாட்டில் சட்ட விரோதமாக நுழையும் அகதிகள், உள்ளே நுழைந்தவுடன் உரிய அதிகார அமைப்பிடம் சரணடைந்து உரிய விளக்கம் அளித்து விட்டால், சட்டவிரோதமாக நுழைந்த குற்றத்திற்காக அவர்களைத் தண்டிக்கக் கூடாது. 

என்று அகதிகள் தகுநிலை பற்றிய ஐ.நா.மாநாடு ஷரத்து 31 கூறுகின்றது. மேலும் ஒரு நாட்டில் அகதிகளாக அனுமதிக்கப்பட்டவர்கள் அந்நாட்டில் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு அந்நாடு அனுமதிக்க வேண்டும், தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது.

ஷரத்து 2 இன்படி அகதிகள் தங்களுக்கு புகலிடம் அளித்திருக்கும் நாட்டின் சட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் மதித்து நடக்க வேண்டும். அவர்களது அகதிகள் தகுநிலைக்குப் பொருந்தாத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். அதுபோல ஒரு நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட அகதிகளை அவர்களது விருப்பத்திற்கு விரோதமாக வெளியேற்றக் கூடாது (Non-refoulment) என்றும் வலியுறுத்தப்பட்டது. 

இதன் அடிப்படையில் மோடி ஆட்சி சர்வதேச அளவில் பெரும் பின்னடைவை வெளியுறவுக் கொள்கையில் சந்திக்கும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும்.

ஐ.நா. பாதுகாப்பு அவையின் கண்டனத்திற்கும், உலக நாடுகளில் இருந்து இந்திய நாடு தனிமைப் படுவதற்கும் மோடி ஆட்சியின் இந்த CAA குடியுரிமைத் திருத்தச் சட்டம் வழி வகுக்கும்.

இந்திய அரசியல் சட்டத்தின் 51(c) பிரிவின்படி இந்தியா ஐ.நா.வின் அகதிகள் சட்டத்தினை ஏற்க வேண்டிய கடப்பாடுடையதாக உள்ளது. தவிரவும் தெற்கு ஆசியாவில் ஒரு முக்கியமான வல்லரசாகத் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்புகிற, ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகத் துடிக்கிற, பன்னாட்டு அரசியலில் முக்கிய பங்காற்ற விழைகிற ஒரு நாடு இத்தகைய அடிப்படை பன்னாட்டுக் கடப்பாடுகளை மறுப்பதை எப்படி ஏற்க இயலும்?

1951ம் ஆண்டு உடன்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள ஐ.நா அகதிகள் உயர் ஆணையத்தின் செயற்குழுவில் அங்கம் வகிக்கும் இந்திய அரசு, இன்னும் அந்த அடிப்படை உடன்பாட்டிலேயே கையொப்பமிடாதிருப்பது பெருங் கேலிக் கூத்து. 

அகதிகள் என வருகிற யாரும் அப்படியே உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. உரிய பரிசீலனைகள், விசாரணைகளுக்குப் பின்தான் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தவிரவும் ‘சார்க்’ நாடுகளின் 2004ம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தம் ‘பயங்கரவாதிகள் என சந்தேகப்படக் கூடியவர்களுக்கு அகதிகள் நிலை அளிக்கக் கூடாது' எனக் கூறுகிறது. அந்த விதியை இங்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையானால் இன்னும் விளக்கமாக பாதுகாப்பு அடிப்படையில் இன்னும் இது போன்ற முன்னெச்சரிக்கைகளை இணைத்துக் கொள்ளலாம்.

பெரிய அளவில் அண்டை நாட்டுக் குடிமக்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு இங்கே வரக்கூடும் என்கிற அச்சமும் ஏற்புடையதல்ல. பா.ஜ.க.வின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலின் விளைபொருளாகவே இந்தக் கருத்து முன்வைக்கப்படுகிறது. வங்கதேச முஸ்லிம்கள் இவ்வாறு அதிக அளவில் ஊடுருவி விட்டனர் என்று பிரச்சாரம் செய்வது அவர்களின் வழமையான வெறுப்பு அரசியல்களில் ஒன்று. இன்று வங்கதேச எல்லையில் இரட்டை முள்வேலிகள் இடப்பட்டும், இராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டும், தொலைதூரத்திற்கு வெளிச்சத்தைப் பீய்ச்சி அடிக்கும் விளக்குகள் அமைக்கப்பட்டும் அத்தகைய நுழைவு முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. பிற பகுதிகளிலும் இந்த நடைமுறைகளைப் பயன்படுத்தலாம்.

இந்திய அரசு, அகதிகள் தொடர்பான பன்னாட்டு உடன்பாடுகளை ஏற்க இயலாது எனச் சொல்வதற்கான காரணங்கள் எதுவும் ஏற்புடையதல்ல. தெற்கு ஆசிய நாடுகளில் சீனாவும், ஆப்கானிஸ்தானும் ஏற்கனவே 1951ம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ள ஐ.நா அகதிகள் ஒப்பந்தத்தை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

eelam refugees 12004ல் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என். பகவதி அவர்கள் இந்தப் பன்னாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தியாவுக்கென அகதிகள் நிலைக்கான ஒரு மாதிரி சட்ட வரைவை உருவாக்கினார். அதன் அடிப்படையில் 2006ல் அகதிகள் நிலைக்கான ஒரு சட்ட வரைவையும் இந்திய அரசு உருவாக்கியது. எனினும் இன்றுவரை அதைப் பாராளுமன்றத்தில் வைத்து விவாதிக்கவில்லை. அப்போதைய தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் ஏ.எஸ்.ஆனந்த் இந்தச் சட்ட வரைவை ஆய்வு செய்ய ஒரு குழுவையும் நியமித்தார். வேறு பலரும் இவ்வரைவு குறித்து கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இவ்வரைவைப் பொது விவாதத்திற்கு உட்படுத்தி, தேவையான திருத்தங்களுடன் சட்டமாக்க வேண்டும். பிற நாடுகளில் வாழ இயலாமல் துன்புறுத்தப்பட்டு வெளியேறுபவர்கள் உரிய விசாரணைகளுக்குப் பின் அனுமதிக்கப்படுவது, அவர்கள் எவ்வகையிலும் திருப்பி அனுப்பப்படாமல் கண்ணியமான வாழ்வொன்றை அமைத்துக் கொள்ள அனைத்து வாய்ப்புக்களையும் அளிப்பது என்கிற வகையில் இச் சட்டம் அமைய வேண்டும். இதற்கு மாறாக அகதிகளை அந்தந்த நாடுகளுடன் இந்திய அரசிற்கு உள்ள வெளியுறவுக் கொள்கைகளின் படி நடத்துவது, பன்னாட்டு அகதிகள் சட்டங்கள் படியும், 1951ம் ஆண்டு ஐ.நா அகதிகள் ஒப்பந்தத்தின் படியும் சரியான நீதிநெறி கிடையாது. திபெத் அகதிகளுக்கு வெண்ணையையும், ரோஹிங்காங் அகதிகளுக்கு - ஈழ அகதிகளுக்கு சுண்ணாம்பையும் தருகின்ற பாரபட்சமான அணுகுமுறையைத்தான் தற்போதைய இந்திய ஆட்சியாளர்கள், உயர் அதிகாரிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இந்தப் பின்னணியுடன் தான் தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகளின் பெருந்துயரத்தை பரிசீலிக்க வேண்டி இருக்கிறோம். தமிழக அரசியல் கட்சிகளின் டகால்டி சூதுகளை புரிந்து கொள்ள வேண்டும்

கைதிகள் கிடையாது.. வழக்குகள் ஏதும் இல்லை.. தண்டனை அடைந்தவர்கள் இல்லை… ஆனால் கால எல்லைகள் வரையறை உண்டா? அதுவும் கிடையாது. காலவரையறையின்றி சிறையை விடக் கொடும் சிறைக்குள் தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் இருக்கிறார்கள்.

ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கக் கூடாது, இரட்டை குடியுரிமைதான் வழங்க வேண்டும் என்று அதிமுக, திமுக மற்றும் பல கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன.

அரை உண்மை என்பது முழுப் பொய்யை விட ஆபத்தானது என்பது தமிழர் சொலவடை. ஈழ அகதிகள் பற்றி அரை உண்மைகள், கால் உண்மைகளைத்தான் அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும், ஊடகவியலாளர்களும், ஓட்டுக்காக அரசியல் கட்சிகளும் உலாவ விடுகின்றனர்.

உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றரை இலட்ச ஈழ அகதிகள் அரசியல் பகடைக் காய்களாக கட்சிகளால் நடத்தப்பட்டு வருகின்றனர். மக்கள் இயக்கங்களும் இந்த சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொண்டு உள்ளன.

ஈழ அகதிகள் பல்வேறு காலகட்டங்களில் சிங்கள இனவெறி அரசால் பேரிடரைச் சந்தித்து அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஈழ அகதிகள், எல்லா அகதிகளையும் போன்றே சட்ட விரோதக் குடியேறிகளாகத்தான் இந்தியாவில் 40 ஆண்டுகளாக திறந்த வெளி முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். அகதிகள் அல்லது ஏதிலிகள் பற்றிய பன்னாட்டுச் சட்டங்கள் எதையும் இந்திய ஒன்றியம் நடைமுறைப்படுத்தியது கிடையாது. சட்ட விரோதக் குடியேறிகள் என்றால் பாஸ்போர்ட் சட்டப்படி சிறைக்குள் தள்ளப்படுவார்கள் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.. ஆனால் ஈழ அகதிகள் முகாமுக்குள் காலவரையறை இல்லாமல் சிறை வைக்கப்பட்டு நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, நிரந்தரக் கண்காணிப்பு சித்ரவதை வளையப் பொறிக்குள் சிக்க வைக்கப்பட்டு நாள்தோறும் சித்திரவதை அனுபவிக்கின்றனர். 

1982 ஜீலையில் சிங்களக் காடையர்கள் இலங்கை அரசுடன் சேர்த்து ஆடிய வெறி ஆட்டத்திற்குப் பிறகு ஈழத் தமிழர்கள் அகதிகளாக வந்தனர். இந்திரா - ராஜீவ் காங்கிரசு ஆட்சிகள் இலங்கையை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வர ஈழத் தமிழர்களை பகடைக் காய்களாக பயன்படுத்தின. தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பெரும் எழுச்சி இருந்த காலம் அது! ஆட்சியாளர்களும் இதற்கு உதவினர். அமைதிப் படை ஈழத்திற்கு செல்லும் முன்பு வரை ஈழ அகதிகள் தமிழக மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ அனுமதிக்கப்பட்டனர். அப்பொழுது வந்த பல ஈழ அகதிகள் இந்தியக் குடியுரிமை பெற்ற இந்திய மக்களாக மாறி விட்டனர்.

அமைதி படை ஆக்கிரமிப்புப் படையாக மாறிய பின்பு தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் நிலைமை அடியோடு மாற்றப்பட்டன. அப்பொழுது பல்லாயிரக்கணக்கில் வந்த ஈழ அகதிகள் தற்காலிக முகாம்கள் என்ற வளையத்திற்குள் அடைக்கப்பட்டு பின்பு அதுவே நிரந்தர முகாம்களாக மாற்றப்பட்டன.

பொதுவாக அய்க்கிய நாடுகள் அகதிகள் சட்டப்படியும், அமெரிக்க, அய்ரோப்பா, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளின் அகதிகள் சட்டப்படியும் இரண்டில் இருந்து அய்ந்து ஆண்டுகள் அகதிகளாகக் குடியேறிவர்கள் அந்தந்த நாட்டின் குடிமக்களாக அங்கீகரிக்கப் படுகின்றனர். அந்த நாட்டின் குடியுரிமைகள் அகதிகளுக்கும் உண்டு. வேலைவாய்ப்பு தேடி அமெரிக்காவில், அய்ரோப்பாவில் குடியேறிய பார்ப்பனர்கள், பணக்காரர்கள், மேல்சாதியினர் பல இலட்சம் பேர் இவ்வாறு குடியுரிமை பெற்று உள்ளனர் என்பது நிதர்சன உண்மை. ஆனால் இந்திய அரசு இப்படி அகதிகளை (திபெத் அகதிகளைத் தவிர) நடத்துவதில்லை.

.பல்வேறு முகாம்களிலும், சிறப்பு முகாம்களிலும், வெளியிலும் ஈழ அகதிகள் வாழ இந்திய அரசு அனுமதித்தது. இங்கு சுமார் 110 ஏதிலி முகாம்களில் ஏறக்குறைய 70,000 ஈழத் தமிழர்கள் உள்ளனர். முகாம்களுக்கு வெளியே அரசுக் கண்காணிப்பில் பல்லாயிரம் பேர் (வசதி, செல்வாக்கு இருப்பவர்கள்தான்) உள்ளனர். முகாமில் இருப்பவர்களில் குடும்பத் தலைவருக்கு மாதம் 1000 ரூபாய், வயது வந்தவர்களுக்கு 700 ரூபாய், சிறுவர்களுக்கு 400 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப் படுகிறது. பெரும்பாலும் கட்டிட (பெயிண்டிங் அடிக்கும் கூலிவேலைதான்) வேலைகள், நாள் கூலி வேலைகள் செய்துதான் இந்த ஏதிலிகள் வாழ்க்கை நடத்துகின்றனர் தமிழீழ விடுதலை அரசியலை முன்வைத்து தமிழ்நாட்டில் ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள் பலவித அரசியலை (பெரும்பாலும் தமிழக மக்களை தங்கள் ஓட்டு வேட்டைக்காக மட்டும் பயன்படுத்தும் அரசியல்) நடத்தினர். பல்வேறு சமூக இயக்கங்கள், குழுக்கள் நேர்மையுடன் ஈழ விடுதலைக்கு உதவினர், உறுதுணையாக இருந்தனர், இருக்கின்றனர். ஆனால் அவர்களும் ஈழ அகதிகளின் கள நிலவரத்தை சரியாக, முழுமையாக ஆய்வு செய்யவில்லை.

எடுத்துக்காட்டாக, 90களில் ஈழ அகதியாக வந்த தம்பதியர்கள், இங்கு வந்து தம்பதியரான ஈழ அகதிகள் பலருக்கு ஒரிரு ஆண்டுகளில் குழந்தைகள் பிறந்தன. அந்தக் குழந்தைகள் வளர்ந்து இன்று 2019-ல் 29 வயது நிறைவு செய்துள்ளனர். பெண்களுக்கு 18 வயதிலும், ஆண்களுக்கு 21 வயதிலும் திருமணங்கள் இந்திய அரசு சட்டப்படி நடந்து பதிவு செய்யப்படுகின்றன. இந்த இந்தியாவில் பிறந்து வளர்ந்த, இலங்கையைத் தெரியாத தம்பதியினர்களுக்கு இப்பொழுது குழந்தைகள் பிறந்து 10 முதல் 15 வயது நிரம்பியவராக உள்ளனர். இந்தக் குழந்தைகளுக்கு தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்கள், இலங்கை அகதிகள் என்றே சான்றிதழ்கள் வழங்குகின்றன. இலங்கை மண்ணையே, ஈழத்தையே பார்த்திராத இந்தப் பிள்ளைகளும், இவர்கள் பெற்றோரும் இலங்கை அகதிகள் என்றுதான் இந்திய அரசும், தமிழக அரசும் முத்திரை குத்தி முகாம்களில் இன்றுவரை அடைத்து வைத்துள்ள்ன.

அமெரிக்காவிற்கு பணிநிமித்தமாக சென்ற இந்திய (தமிழ்நாடு) தம்பதியர்களின் உறவினரிடம் உரையாடும் வாய்ப்பு அண்மையில் எனக்குக் கிடைத்தது. அந்தத் தம்பதியர்களுக்கு இந்தியாவிலும், அமெரிக்காவிலும் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தியாவில் பிறந்த குழந்தைகள் இந்தியக் குடியுரிமை பெற்றவர்களாகவும், அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களாகவும் (இவர்கள் பெற்றோர்கள் இந்தியர்கள்தான் என்பது நினைவிருக்கட்டும்) இருக்கின்றனர். அய்ரோப்பா, இங்கிலாந்து உட்பட உலக நாடுகளில் இதுதான் குடியுரிமை பற்றிய நிலைப்பாடு. ஆனால் இந்தியாவில் குறிப்பாக ஈழ அகதிகள் பாரபட்சமாக இந்திய அரசால் நடத்தப்படுகின்றனர். இந்தியாவில் பிறந்த ஈழ அகதிகளின் குழந்தைகள் அனைவரும் ஈழ அகதிகளாக உள்ளது எத்துணை கொடுமை, அநீதி.  தாத்தா-பாட்டிகள், அவர்கள் பிள்ளைகளான பெற்றோர்கள், அவர்களுக்கு பிறந்த பேரப் பிள்ளைகள் அனைவரும் ஈழ அகதிகளாக (அது கூட கிடையாது, அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டினர்) இந்திய அரசால், தமிழக அரசால் நடத்தப்படுகின்றனர்.

இந்த அடிப்படை சதாரண உண்மை கூடத் தெரியாமல் திமுக - அதிமுக - காங்கிரஸ் - பாஜக, இன்னும் பலர் ஈழ அரசியல் செய்து வருகின்றனர். இந்தியாவில் இருக்க விரும்பும், இலங்கை மண்ணைக் கூடத் தொடாத பல ஆயிரம் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கினால் ஒன்றும் குடி மூழ்கி போகப் போவதில்லை.

இந்த நிலைமையில் ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை பற்றி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாரதீய சனதாக் கட்சி அமைச்சர்கள், திமுக - அதிமுக - காங்கிரஸ் - பாஜக ஆகியோர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துடன் (CAA, CRC) இணைத்துப் பேசி வருகின்றனர்.

ஆனால் இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் 40 ஆண்டுகள், 30 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என்று பல படிநிலையில் உள்ள ஈழ அகதிகள், அவர்களின் பிள்ளைகளுக்கு (இந்தியாவில் பிறந்தவர்கள்) பெரும் பிரச்சனைகளை, தீரா சிக்கல்களை ஏற்படுத்தப் போகின்றது. 

21 ஆம் நூற்றாண்டு அகதிகள் பேரவலங்களாக, மனித நாகரிக சிதைப் படிமமாக காட்சி அளிக்கத் தொடங்கி உள்ளது. நடந்து முடிந்த 17வது சென்னை சர்வதேச சினிமா விழாவின் பல உலகத் திரைப்படங்கள் நமக்கு இதைத் தான் உணர்த்துகின்றன.

1.Holy Boom 2. Sons of Denmark 3.Organ 4. Carga 5. Beanpole 6. Homeward 7. Moscowsquare 8. A Son 9. Balangiga:Howling Wilderness 10.Buoyancy 11. despite the fog

இவை அனைத்தும் ஏதிலிகள் வாழ்வை, வலியை, சிதைவை காட்சிப்படுத்திய கதைகளை மையமாகக் கொண்டவைகள். அய்ரோப்பிய நாடுகள், ரசியா, துருக்கி, மேற்கு ஆசிய நாடுகளின் படங்கள் பெரும்பான்மையானது. திரையிடப்பட்ட 76 திரைப்படங்களில் 20க்கும் மேல் அகதிகளாய் அல்லலுறும் மனிதர்களைப் பற்றிய உயிரோட்டமான வலிகளை சித்திரமாய் தீட்டியவை. (நான் இதில் சில படங்களைத்தான் பார்க்க முடிந்தது). இவை அனைத்தும் சினிமா இரசிகர்களால் விழாவில் பாராட்டப்பட்டதை அவதானிக்க முடிந்தது. எடுத்துக்காட்டாக இத்தாலியப் படமான Holy Boom, பல ஏதிலிகளின் வெவ்வேறு வகையான வாழ்க்கைகளின் வலியை, அவலத்தை பல தளங்களில் காட்சிப்படுத்தி. அகதி வாழ்வின் பெருந்துயரங்களை விவரிப்பதாக படைக்கப்பட்டு இருந்தது. இந்த உயிர் வலி பல படங்களுக்கும் பொருந்தும். கடைசி இரண்டு நாட்கள் நண்பர்கள் வலியுறுத்தியும் அந்தப் பெருந்துயரங்களைக் காணும் மனவலிமை நமக்கு இல்லை

21 ஆம் நூற்றாண்டு ஏதிலிகள் நூற்றாண்டு என்பதாக இருக்கப் போகின்றது. சூறையாடும் கார்ப்பரேட் முதலாளிய அமைப்பு தன்னை தக்க வைக்க, போர்களை, இயற்கைப் பேரிடர்களை. மத-இனக் குழுக்களின் இரத்தக் களறிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மோடி - அமித் ஷா சங்கிக் கும்பல் இதைத் தான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் செய்யப் போகின்றது.

மக்கள் புரட்சியையும், நாடுகள் சுதந்திரத்தையும், தேசங்கள் விடுதலையையும் கோரும் போராட்டங்களைத் திட்டமிட்டு சிதைப்பதன் விளைவாய் உலக நாடுகள் எங்கும் நாடற்ற ஏதிலிகளாக பல கோடி மக்கள் வாழ்வைத் தேடி அலைகின்றனர். மனித மாண்புகள் நசுக்கப்படும் இந்த நாட்டில் நாம் வாழப் போகிறோமா அல்லது மனித நாகரிக சிதைவுப் படுகைகளாக இந்த நாடு மாறுவதை நாம் அனுமதிக்கப் போகிறோமா என்பதே நம் அனைவர் முன் உள்ள கேள்விகளாக இருக்கும். 

எனவே,

1. 1951 ஆம் ஆண்டு பன்னாட்டு அகதிகள் ஒப்பந்தச் சட்டத்தில் இந்திய அரசு கையெழுத்து இட வேண்டும். பன்னாட்டு சட்டங்களுக்கு கட்டுப்பட்டு அகதிகள் அனைவரும் பாரபட்சம் இன்றி நடத்தப்பட வேண்டும்.

2. இந்தியாவில் பிறந்த ஈழ அகதிகளின் குழந்தைகள் அனைவரையும் உடனே இந்திய குடிமக்களாக்க வேண்டும்.

3. பிற ஈழ அகதிகளில் 5 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ளவர்கள் அனைவருக்கும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். அல்லது மற்ற ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும், அல்லது ஈழத்தில் கண்ணியத்துடன் வாழ வழிவகை செய்ய உதவ வேண்டும்.

ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கக் கூடாது என்று சொல்வது அயோக்கியத்தனமான அரசியல். அய்ரோப்பாவில், கனடாவில், ஆஸ்திரேலியாவில் உள்ள ஈழத் தமிழர்களை இலங்கைக்குத் திரும்ப அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை இந்த கட்சிகள் வைப்பார்களா?

ஏனெனில், அய்ரோப்பாவில், கனடாவில், ஆஸ்திரேலியாவில் உள்ள ஈழ அகதிகள் வலுத்தவர்கள், தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகள் இளைத்தவர்கள் என்ற இளக்காரம், அலட்சியம், கேவலமான கழிசடை அரசியல் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

21 நூற்றாண்டு அகதிகள் நூற்றாண்டு தான். நாம் ஒவ்வொரும் அகதிகளாக (போர், இயற்கைப் பேரிடர், மத - இன - சாதி - மரபினக் குழு மோதல்களில்) மாறும் சூழலுக்குள் கார்ப்பரேட் சூறையாடும் முதலாளியம் தள்ளிக் கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தம்.. இந்த உண்மையை உரக்கப் பேசுவதும், ஆக்கபூர்வமாக செயல்படுவதும் காலத்தின் கட்டாயம்!

- கி.நடராசன்

Pin It