“பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு

திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!”

என்று அழைப்பார் பாவேந்தர். கூட்டைத் திறந்தவுடன் சீறிப் பாய்ந்து வருவதுதானே சிறுத்தையின் இயல்பு. அப்படியிருக்க, ‘சிறுத்தையே வெளியில் வா’ என்று வேறு ஏன் அழைக்க வேண்டும்? நீண்ட காலமாக இரும்புச் சிறைக்குள் அடைபட்டுக் கிடந்த காரணத்தால், சிறுத்தைத் தன் போர்க்குணத்தை, வலிமையை, தன் இயல்பை மறந்து போயிற்று. அதனால்தான் பாவேந்தர், கதவு திறக்கப்பட்டிருப்பதை நினைவூட்டி, வெளியில் வரச் சொல்லி அழைக்கிறார். வெளிச்சிறை அதாவது சமூகச் சிறை உடைந்தால் மட்டும் போதாது, அகச் சிறை அதாவது மனச்சிறையும் உடைக்கப்பட வேண்டும் என்பதையே பாவேந்தரின் பாடல் உணர்த்துகிறது.

இப்படி இரண்டு விதமான சிறைகளுக்குள்ளும் அடைக்கப்பட்டும், அடைபட்டும் பெண்கள் காலங்காலமாகத் தங்கள் வாழ்வுரிமைகளை இழந்து வருவதைப் பார்க்கிறோம். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டைத் தாண்டிய பணிகளின் விளைவாக, பெண்களுக்கு எதிரான சமூகச் சூழலின் இறுக்கம் தளர்ந்திருக்கிறது. பெண்களின் எல்லைகள் விரிவடைந்திருக்கின்றன. சமூகச் செயல்பாட்டுத் தளங்கள் அவர்களுக்குத் திறக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் இன்னும் அவர்களுக்கான சமத்துவம், சமவாய்ப்புகளுக்கான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. ஆயினும், சிறகை விரிப்பதற்குப் பெரும்பான்மை பெண்களிடம் ஒருவிதமான தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம், பெண்களின் மனச்சிறை - அதாவது சிந்தனைச் சிறை.

மனச்சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் பெண்கள், இந்தச் சமூகம் அனுமதித்திருக்கும் எல்லைக்குள் நின்றுகொண்டு, பாதுகாப்பான, உத்திரவாதமான வாழ்க்கை வாழ்வதில் நிறைவடைகிறார்கள். மறுமணம் செய்து கொள்ள முன்வரும் பெண்களில் பலர், சாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக இல்லை. அன்று தொடங்கி இன்றுவரை பெண்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் பின்தங்கியே இருக்கின்றனர். சமூகத்திலும் இரண்டு விதமான நிலைகள் நிலவியதைக் காணமுடிகிறது. வீட்டுக்கு வெளியே பெண்களுக்கான பொதுவெளி என ஒன்று இல்லாத நிலையே அன்று நிலவியிருக்கிறது. ஆனாலும், இந்நிலை பெண்களின் சமூக வாழ்நிலைக்கு ஏற்ப சற்று வேறுபட்டிருந்ததையும் பார்க்க முடிகிறது.

உழைக்கும் சமூகத்துப் பெண்கள், வாழ்க்கையின் பொருட்டு, காடு, கழனி, கடைத்தெரு போன்ற வெளிகளுக்கு வந்திருக்கிறார்கள். குறி சொல்லுவது, மோர் விற்பது போன்றவற்றிலும் அவர்கள் ஈடுபட்டு வந்ததை சங்க இலக்கியங்களின் வழி அறிந்து கொள்ள முடிகிறது. அதே இலக்கியங்கள், மேல்தட்டுப் பெண்களின் நிலையையும் நமக்குக் காட்டுகின்றன. அப்பெண்கள், வீடுகளுக்குள் - வீட்டின் பின்கட்டு என்று சொல்லப்பட்ட, சமையலறை, பூசையறை, படுக்கையறை, பிரசவ அறை - இவற்றுக்குள்ளேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டிய சமூக நிலையிலேயே இருந்திருக்கிறார்கள். சற்றேறக்குறைய 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் கூட இந்நிலை நீடித்திருக்கிறது என்று சொல்லலாம்.

எனில், இன்று ஏற்பட்டிருக்கின்ற குறைந்த அளவிலான மாற்றங்களின் பின்னணி என்ன?

தன் முதல் நாவலான, ‘பிரதாப முதலியார் சரித்திர’த்தில், ஐந்து வயது சிறுமியின் மூலம், உடன் கட்டை ஏறும் கொடூரத்தை பொட்டிலடித்தாற்போல் இந்தச் சமூகத்திற்கு உணர்த்தினார் மாயூரம் வேதநாயகம்.

சாதித் தூய்மை காக்க குழந்தைகளுக்குத் திருமணம் செய்வித்த சனாதனிகளின் அடாத செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார், ஹர்பிலால் சார்தா. உழைக்காமல் உண்டு கொழுத்த கூட்டத்தின் கேவலமான இச்சைக்கு வடிகாலாகப் பெண்கள் பொட்டுக்கட்டி விடப்படும் சமூக இழிவை நீக்க, சத்தியமூர்த்திகளின் முதுகில் சாட்டையடிக் கொடுத்தனர், மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும், மருத்துவர் முத்துலெட்சுமியும்.

“பெண்ணடிமைத் தீரு மட்டும் பேசுந் திருநாட்டு ; மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே” என்று சரிபாதிப் பெண்கள் அடிமை விலங்கறுத்திட புரட்சிப் பாக்கள் பாடினார் பாவேந்தர். “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்றார் பாரதியார்.

கைம்பெண்களின் மறுவாழ்வுக்கும், பெண் கல்விக்கும் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டனர் மகாத்மா பூலேயும், சாவித்திரி அம்மையாரும்.

பெண்களின் உரிமையை அரசியல் அமைப்புச் சட்டத்தில் பதிவு செய்தார், அண்ணல் அம்பேத்கர்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல, ‘ஆணைப்போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண்மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் - ஆண் காவல் இழிவானது - பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகளைப் போல வளர்க்க வேண்டும். தோற்றத்திலும் அவர்களைப் போலவே உடையணியச் செய்ய வேண்டும் - பெண்கள் முன்னேற குழந்தைப் பெறுவதைத் தவிர்க்க வேண்டும்’ என்று சொல்லி, ஆணாதிக்கச் சிறையின் அடித்தளத்தையே கடப்பாரையால் நெம்பித் தகர்த்தார் தந்தை பெரியார்.

இத்தனை அடிகளுக்குப் பிறகுதான் பெண்களைச் சுற்றி இருந்த சிறைக் கதவின் கம்பிகள் ஒவ்வொன்றாகப் பெயர்ந்து விழுந்தன. பெண்கள் படித்தார்கள், பெண்கள் சுயமரியாதை கொண்டார்கள், பெண்கள் அறிவுத்தளத்தில் நின்றார்கள், பெண்கள் வேலைக்குப் போனார்கள், பெண்கள் வருமானம் ஈட்டினார்கள், பெண்கள் முடிவெடுத்தார்கள் - இன்று தனித்தியங்கும் திறன் பெற்றவர்களாக ஆகி இருக்கிறார்கள். நாட்டில் இப்டிப்பட்ட பெண்களுக்கான இடம் என்ன என்று பார்த்தால், அவர்கள் மிகவும் சிறுபான்மையினராகத்தான் இருக்கிறார்கள்.

சமூகச் சிறைகளான, மதவாதம், சாதியம், ஆணாதிக்கம் ஆகியவை, மகாத்மா பூலே, பெரியார் போன்ற சமூகப் புரட்சியாளர்களின் தொடர் தாக்குதலால் ஆட்டம் கண்டிருந்தாலும், பெண் விடுதலை என்பது இன்னும் முழுமையான இடத்தை வந்தடையவில்லை என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். காரணம், பெண்களின் மனத்தில் எழுப்பப்பட்டிருக்கும் சிறை. ஆண்டாண்டு காலமாகப் பெண்களின் மனத்தில் விதைக்கப்பட்டு வந்த, பெண்ணடிமைச் சிந்தனையின் எச்சங்கள், அவர்களைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டே இருக்கின்றன. சிறு சலசலப்புக் கேட்டாலும், ஒட்டு மொத்த உடலையும் உள்ளிழுத்துக் கொள்ளும் ஆமையைப் போல, கலாச்சாரம், குடும்பப் பண்பாடு, பத்தினித் தன்மை என்னும் கூழாங்கற்கள் வந்து விழும்போது, பெண்கள் சட்டெனத் தங்களைப் பின்னிழுத்துக் கொள்கின்றனர்.

இன்று பெண்களின் முன்னேற்றமானது, மேலோட்டமானதாகவும், வெளிப்பூச்சாகவும், ஒரு பக்கச் சார்புடையதாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. பொம்மையைக் காட்டிக் குழந்தையின் அழுகையை நிறுத்துவதுப் போல, உரிமைகள் என்னும் பெயரில் சில சலுகைகளைக் கொடுத்துப் பெண்கள் தங்களின் கட்டுகளை மீறிப் போய்விடாமல் இந்த ஆணாதிக்கச் சமூகம் பார்த்துக் கொள்கிறது. விண்ணைத் தொட்ட பெண்களும், மண்ணை ஆளும் பெண்களும், பெண் விடுதலையின் ஒரு வளர்சிக்குறியீடு என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, ஒட்டுமொத்தப் பெண் சமூகத்தின் முன்னேற்றமாகக் கொள்ள முடியாது.

இன்று பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள், பொருளீட்டுகிறார்கள், முன்னிருந்தவரைக் காட்டிலும் இன்று பெண்கள் பல மடங்கு முன்னேறியிருக்கிறார்கள். உண்மைதான் மறுப்பதற்கு இல்லை. ஆனால், பெரியார் முன்வைத்த பெண் விடுதலை என்பது இவைபோன்ற புறவய எல்லைகளோடு நின்றுவிடுவது அன்று. அகம்சார்ந்த “சிந்தனையிலும் விடுதலை” பெற்றவர்களைப் பெண்கள் விளங்க வேண்டும் என்பதே பெரியாரின் முழுமையான பெண் விடுதலைக் கோட்பாடாகும்.

சரி, அது என்ன சிந்தனையில் விடுதலை?

வேலை முடிந்ததும், வண்டியில் பூட்டப்பட்டிருக்கும் மாடுகளை நுகத்தடியில் இருந்து விடுவித்து, அதன் முதுகில் தட்டித் தள்ளினால்தான் அவை அங்கிருந்து நகர்ந்து செல்லும். இல்லையென்றால், தான் இன்னும் நுகத்தடியில் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்னும் உணர்விலேயே நின்று கொண்டிருக்கும். இதைத்தான், மூளையை அதாவது சிந்தனையை அடிமைப்படுத்துவது என்று சொன்னார் பெரியார்.

என்னதான் படித்திருந்தாலும், தான் ஒரு பெண், ஆணுக்கு அடங்கியவள் என்பது உள்ளிட்ட கற்பிக்கப்பட்ட கருத்தியல்களிலிருந்து விடுபட்டு, சுயமாகச் சிந்திக்கத் தொடங்குவதுதான் சிந்தனையில் விடுதலை என்பது.

என் மகள் படித்த பள்ளியில் (இருபாலர் பள்ளி) நடந்த ஒரு விழாவில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட ஒருவர் (தனிப்பயிற்சி நிறுவனம் நடத்துகின்ற ஊர் ஆண்) இப்படிப் பேசினார்...

“பெண்கள் உயர்கல்விக்கான துறையைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாலை 5 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடுவது போன்ற வேலை நேரம் கொண்ட துறைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தைகளைக் கவனிக்க முடியாது, வீட்டு வேலைகளைச் சரியாகச் செய்ய முடியாது, குடும்ப வாழ்க்கை சிக்கலாகிவிடும்”

இவர் சொல்வதுபோன்று, சிக்கலே இல்லாமல் குடும்பம் நடத்துகின்ற பெண்களுக்கு மட்டுமே இந்த நாட்டில், ‘குடும்பப் பெண்’ போன்ற பட்டங்கள் வழங்கப்படுகின்றன. பல்கலைக் கழகப் பட்டங்களைக் காட்டிலும், இந்தப் பட்டங்களே பெண்ணுக்குப் பெருமை தரக்கூடியவை என்பதை வலியுறுத்த, பெண்கள் நடித்து, பெண்களே இயக்குகின்ற, தயாரிக்கின்ற சின்னத் திரைச் சித்திரங்கள் ஏராளமாக வலம் வருகின்றன. ஏற்கனவே சீதைக் கதையையும், கண்ணகி கதையையும் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட பெண்கள், மனச்சிறைக்குள் போய்த் தாங்களாகவே கதவைச் சாத்திக் கொள்கின்றனர்.

பொதுவாக நம் நாட்டில், ‘இல்லத்தரசிகள் உண்டு - இல்லத்தரசர்கள் கிடையாது ; கற்புக்கரசிகள் உண்டு - கற்புக்கரசர்கள் கிடையாது ; குடும்பப் பெண்கள் உண்டு - குடும்ப ஆண்கள் கிடையாது ; மலடிகள் உண்டு - மலடன்கள் கிடையாது ; விதவைகள் உண்டு - விதவன்கள் கிடையாது ; விபச்சாரிகள் உண்டு - விபச்சாரன்கள் கிடையாது - இப்படி எல்லாச் ‘சிறப்பு’களையும் பெண்களுக்கு மட்டுமே உரித்தாக்கி இருக்கிற பெருந்தன்மைமிக்க சமுதாயம் இது.

எந்தவோர் ஆணும், ‘அய்யகோ, என்னால் குடும்பப் பொறுப்புகளைச் சரியாகச் செய்ய முடியவில்லையே, என் மனச்சாட்சி என்னைக் கேள்வி கேட்கிறதே. நான் வேலையை விட்டுவிட்டு, என்னுடைய குடும்பக் கடமைகளைக் கவனிக்கப்போகிறேன்” என்று ஒரு பேச்சுக்குக்கூட சொல்வதில்லை. சரி, போகட்டும். வீட்டு வேலைகளையாவது சரிபாதியாகப் பகிர்ந்து கொள்வோமே என்ற குறைந்தளவு நியாயத்தையாவது செய்ய முன்வருகிறார்களா என்றால், பெரும்பாலும் இல்லை. அண்மையில் என்னோடு, தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டவர், ‘இப்ப இருக்கிற பொம்பளைங்க, ஆம்பளைங்கள வீட்டு வேலை செய்ய வைக்கிறாங்க. வேலைக்குப் போறதுனால, நா பாதி வேலைய செஞ்சா, நீ பாதி வேலைய செய்யின்னு பெண்ணுரிமை பேச ஆரம்பிச்சிடுறாங்க’ என்றார். இது மனித உரிமை. மனித உரிமைதான் பெண்ணுரிமை என்று அவருக்குப் புரிய வைப்பதில், பண்பாடு, கலாச்சாரம் எனப் பல தடைகள் குறுக்கே நிற்கின்றன.

கேட்டரிங் படிப்பு படித்துவிட்டு, பெரிய உணவு விடுதிகளில் உணவு தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்ற ஆண்கள், வீட்டில் மனைவிக்கு உடல்நலமில்லாத சூழலில் கூட, சமையல்கட்டுப் பக்கம் போவதில்லை என்கிற ‘ஆண்மை’ச் செறுக்கோடு இருக்கிறார்கள். கணவன் மருத்துவராக இருந்தாலும், வீட்டில் குழந்தைக்கு உடல்நலமில்லை என்றால், அலுவலகத்தில் அனுமதி கேட்டோ, விடுப்பு எடுத்தோ மனைவிதான் குழந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டும். பெண்களும் இப்படிப்பட்ட மனநிலையோடு வாழப் பழகிக் கொள்கிறார்கள். ‘வந்ததும் ஓடுறியே, ஒரு ரெண்டு நாள் தங்கிட்டுப் போயேண்டி’ என்று அம்மா வீட்டில் ஆசையோடு சொன்னாலும், ‘அய்யய்யோ, நா இல்லாட்டி அவருக்கு எந்த வேலையும் ஓடாதும்மா... நா கௌம்புறேன்’ என்று சொல்லும் பெண்ணுக்குத் தெரியும், தான் இல்லாவிட்டாலும் எல்லாம் நடைபெறும் என்று. இருந்தும், பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும், இல்லத்தரசிக்கான இலக்கணம், அவளை அப்படி ஓட வைக்கிறது.

ஆனால் ஆண்களில் பெரும்பான்மையும், ‘எம் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா...எம் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா...’ என்று துள்ளிக் குதிக்கும் ஜனகராஜ்களாகத்தான் இருக்கிறார்கள்.

கணவன் வேலைக்குப் போவது, குடும்பத்தின் நலனுக்காக என்றால், மனைவி வேலைக்குப் போவதும் குடும்பத்தின் நலனுக்காகத்தான். இருவரின் நோக்கமும் ஒன்றுதான் என்று ஆகும்போது, மனைவியின் வேலை மட்டும் குடும்பப் பொறுப்புகளுக்குத் தடையாக இருக்கிறது என்பது எப்படிச் சரியாகும்? ஆண் என்பதாலேயே, ஓர் ஆணால், தன் வாழ்க்கையின் எந்த நிலையிலும் தன்னுடைய அடையாளத்தை இழந்து விடாமல், தனக்கான அனைத்தையும் பெற்றுக் கொள்ள முடிகிறது. பெண் என்பதாலேயே, வேலைக்குக் கூட குற்ற உணர்வில்லாமல் போக முடிவதில்லை. இதைத்தான் ‘மூளையில் போடப்பட்ட விலங்கு’ என்றார் தந்தை பெரியார்.

கண்ணுக்குத் தெரியாத அந்த விலங்கு, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இந்தச் சமூகம் வகுத்துவைத்த விதிகளால் பூட்டப்பட்டுள்ளது.

கணவனைக் கூடையில் வைத்து, தாசி வீட்டில் கொண்டுபோய் விட்டது வரை, பண்ட பாத்திரம் போல் சந்தையில் கூவி தன்னை விற்கவிட்டது வரை, கணிகையரிடம் கைப்பொருள் அனைத்தையும் இழந்து வருபவனிடம், காலில் இருந்த சிலம்பையும் கழட்டி கொடுத்தது வரை, கணவனின் முட்டாள் தனத்தில் முளைத்த சந்தேகமாக இருந்தபோதும், தன்னை நிரூபிக்கத் தீக்குளித்தது வரை - பெண்களின் இடம் இந்தச் சமூகத்திற்கு மிகவும் வசதியானதாகவே இருந்தது.

என்றைக்குத் தன்னுடைய இருத்தலைப் பற்றிய தன் மதிப்பீட்டுச் சிந்தனைப் பெண்களிடம் ஏற்பட்டதோ, அன்றிலிருந்து அவர்கள் இந்தச் சமூகத்திற்குப் பிரச்சினைக் குரியவர்களாய் ஆகிப்போனார்கள். அவர்களை மீண்டும் தன் கட்டுக்குள் கொண்டு வருவதற்குப் பல்வேறு ஆயுதங்களை இந்தச் சமூகம் கையில் எடுக்கிறது. சாதிப் பெருமை, மதக் கட்டுப்பாடு, குடும்ப மானம், கலாச்சாரம், பண்பாடு போன்ற இன்னும் பலப்பல ஆயுதங்களைக் கொண்டு, பெண்ணின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது. அந்த வன்முறையானது, உடல் மீதானதாகவோ, உளவியல் சார்ந்ததாகவோ இருக்கிறது.

ஒரு பெண்ணின் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் அவள் இருக்கின்ற இடம், எடுக்கின்ற முடிவுகள் என்பவை, சமூகம் அல்லது குடும்பத்தோடு தொடர்புடையதாகவோ அல்லது அவற்றின் நீட்சியாகவோ மட்டுமே இருக்கும்வரை அந்தப் பெண்ணின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும். மாறாக, அப்பெண்ணின் சுய சார்புக்குரியதாக இருக்குமேயானால், அவள் மீது இந்தச் சமூகம் நிகழ்த்தும் வன்முறையை அவள் எதிர்கொண்டே ஆக வேண்டும்.

ஒரு பெண் வேலைக்குப் போவது, குடும்பத்தின் பொருளாதார தேவை சார்ந்தது. எனவே, இரவு நேர வேலையாக இருந்தாலும் போய் வரலாம். அதில் ஒன்றும் சிக்கலில்லை. ஆனால் இரவு 9 மணிக்குத் தன் ஆண் நண்பரோடு பேருந்தில் பயணிக்கக் கூடாது. அப்படிப் பயணிக்கும் பெண், பாலியல் வன்புணர்வு செய்யத் தகுதியானவள். கலாச்சாரப் பெருமைமிகு இந்திய திருநாட்டின் தலைநகர் தில்லியில், ஓடும் பேருந்தில், கூட்டு வன்புணர்வுக்கு ஆளாகி உயிரிழந்த மாணவியின் நிலை நமக்கு அதைத்தானே உணர்த்துகிறது. தென் தமிழகத்தில், பள்ளிச் சீருடையுடன், புத்தகப் பை அருகில் இருக்க, இறந்து கிடந்தாளே புவனா - சேலம் சதிராயம்பாளையத்தில் 10 வயது குழந்தை 5 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கால்களுக்கிடையே ரத்தம் வழிந்தோட மருத்துவமனை படுக்கையில் பிணமாகக் கிடத்தப்பட்டிருந்தாளே - சிறுமியாக இருந்தாலும், பெண்ணை உடலாக மட்டுமே பார்க்கின்ற ஆணாதிக்கச் சமூகத்தின் அழுகிப் போன சிந்தனையின் குறியீடல்லவா அக்காட்சிகள்.

ஒரு பக்கம் பெண்ணை வெறும் உடலாக மட்டுமே பார்க்கும் இச்சமூகம், மறுபக்கத்தில் சாதித் தூய்மையைக் காக்கின்ற அடையாளமாக வைத்திருக்கிறது. பெண்ணின் வழியாகச் சாதிக் கலப்பு நடந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கடுமையான போக்கைக் கொண்டுள்ளது. விளைவு சாதிவிட்டுச் சாதி காதலித்துத் திருமணம் செய்யும்போது, ‘கவுரவக் கொலை’யைச் செய்து, சாதிச் சமநிலையை பேணிக் கொள்ள நினைக்கிறது. ஒரு பெண் தான் வாழவேண்டிய இடத்தை, வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற உரிமையை தன்னிடம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு வேளை அப்படி நடந்தால், மகா பஞ்சாயத்துக் கூடும். 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்படும் அல்லது 13 பேர் கொண்ட கும்பல் அவளுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்படும்.

இத்தனை அநீதிக்கும் நியாயம் கேட்கப் புறப்பட்டால், நம் முன்னால் நீதி வருவதில்லை, மாறாக முட்டியை உயர்த்திக் கொண்டு கேள்விகள்தான் வருகின்றன. அவள் ஏன் இரவு 9 மணிக்குத் தன் நண்பரோடு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள்? அவள் எதற்காக ஆண்களைக் கவரும் விதத்தில் உடை அணிந்திருந்தாள்? தாழ்த்தப்பட்டவளான அவள் எப்படி உயர்சாதிப் பையனோடு பழகலாம்? சேர்ந்து வாழ ஆசைப்படலாம்? இந்தச் சமூகம் அனுமதிக்கின்ற எல்லைக்குள் நின்று, தனக்கானதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு, சமூக வரம்புகளைத் தாண்டிப் பயணிக்க முயன்றால், பயணம் பாதி வழியிலேயே முடித்து வைக்கப்படும்.

பெண் என்றால்...இப்படித்தான் இருக்க வேண்டும் எனப் பல விதிமுறைகள் இங்கே வகுக்கப் பட்டுள்ளன. முதலாவது அவள் ஓர் ஆணின் தேவைகளுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறாள். அவனுக்கு அடங்கி நடக்க விதிக்கப்பட்டிருக்கிறாள். எனவே ஓர் அடிமைக்கு சுய உரிமை இருக்கக் கூடாது. அந்த ஆணின் விருப்பங்களை நிறைவு செய்வதே, பெண் என்னும் பெருமையைத் தக்க வைத்துக் கொள்ளும் வழி. இதிலிருந்து ஒரு பெண் இம்மியளவும் அகன்று விடாமல், சாதி, மத, சாத்திர, சடங்குகள் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றன. குடும்பமும், திருமணமும் இந்தப் ‘புண்ணிய காரியத்தில்’ காலம் காலமாக மிகப்பெரிய பங்காற்றி வருகின்றன.

இன்றைய நவீன சூழலில், ஊடகங்கள் மேற்சொன்ன அனைத்திற்கும் காட்சி வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்கள், அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி என அறிவியல் கொடைகள் அனைத்துமே, ஆணின் நுகர்வுக்கான பண்டம் என்பதாகப் பெண்ணைச் சித்தரிப்பதில் சிறிதும் வெட்கப் படுவதில்லை. இந்த ஊடகங்களின் தாக்கம்தான் சமூகத்தில், பெண்களின் மீதான கேலி, கிண்டல், பாலியல் வன்முறைகளாக வெளிப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

“நூறா யிரக்கணக் காகச் செலவிட்டு

நூற்றுக் கணக்காய்த் திரைப்படம் ஆக்கினர்

மாறான எண்ணத்தை மட்டக் கதைகளை

மக்களுக் கீந்தனர் அண்ணே - அது

தக்கது வோபுகல் அண்ணே” என்று கேட்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். கோடிக்கணக்காக பணத்தைக் கொட்டி, அதில், ‘அடிடா அவள...ஒதடா அவள’ என்று மட்டக் கதைகளைச் சொல்வதற்கா, படத் தொழில் பயன்படுத்தப்பட வேண்டும்?

தன் பக்கமுள்ள நியாயத்தைச் சொல்ல, ஒரு பெண் ஆணித்தரமாக வாதிட்டால், என்ன இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு இத்தனை ஆணவம் கூடாது, தன்னுடைய விருப்பம் இதுதான் என்று உறுதிபட வெளிப்படுத்தினால் ஒரு பெண்ணுக்கு இத்தனை திமிர் ஆகாது என்று திரைப்படங்களில் காட்டப்படும் வசனங்கள், நடைமுறையில் இன்னும் அழுத்தமாக எதிரொலிக்கின்றன. நடத்தை, ஒழுக்கம், கற்பு என்னும் கற்பிதங்கள் அனைத்தும் பெண்ணின் மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ள இந்தச் சமூகத்தில், அவற்றை எதிர்த்துக் கேள்வி கேட்கும் பெண், ‘நடத்தை’ சரியில்லாதவள், ‘ஒழுக்கம்’ கெட்டவள், ‘கற்’பில்லாதவள் ஆகிவிடுகிறாள். ஆணுக்கு நிகராக வேலைக்குப் போகிறாயா, போ... கொடுக்கப்படும் வேலையை மட்டும் பார்த்துவிட்டு, ஊதியத்தைப் பெற்றுக்கொள். அதற்கு மேல் போக எத்தனித்தால், சிறகுகள் வெட்டப்படும் என்று அச்சுறுத்துகிறது இந்தச் சமூகம்.

குடும்பம், மதம், சாதி, சமூகம் என அனைத்துமே ஆணுக்கானதாக இருக்கிறது. அதற்குள் பெண் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொள்ள கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. தனக்குரிய தேவைகள் தன்னுடைய சக உயிருக்கும் தேவையாக இருக்கும் என்னும் எளிய உண்மையை ஒவ்வொருவரும் உணர முன்வரவேண்டும். பெண் என்பவள் ஆணைப்போலவே அத்தனை பலத்தையும், பலவீனத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள ஓர் உயிர்.

சாதி ஆதிக்கமும், மதவாதமும் எப்படிப் புதுப்புது வடிவங்களை எடுத்து, தம்மைப் புதுப்பித்துக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றனவோ, ஆணாதிக்கமும் அப்படியே தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது.

“ஆண்...

ஒவ்வொரு வீட்டிலும்

ஒரு பார்ப்பான்”

என்று திண்டுக்கல் தோழர் விஜி சொல்வார்.

ஆண்களின் மன அழுக்குகள் கழுவப்பட வேண்டும்! பெண்களின் மனச்சிறைகள் உடைக்கப்பட வேண்டும்!!

‘கருஞ்சட்டைப் பதிப்பகம்’ வெளியீடு செய்த ‘கோட்சேயின் துப்பாக்கி பத்திரமாயிருக்கிறது’ - என்ற நூலிலிருந்து

Pin It