பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள், அண்டை வீட்டாரைத் தொல்லை செய்யாதீர்கள், அந்நியப் பெண்களை ஏறெடுத்துப் பார்க்காதீர்கள், அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள், நோயாளிகளை நலம் விசாரியுங்கள், ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள் என்பதைப் போன்ற நற்போதனைகளை மட்டுமே மக்களுக்கு வழங்கிய முகம்மது நபியைப் பின் தொடர்பவர்களா இவர்கள்? யார் இவர்கள்? நபிகள் சொன்னவைகளை தொடர்பவர்களாக, வாழ்க்கையில் தினமும் இதை கடைப்பிடிப்பவர்களாக இருந்தால் மனிதநேயம், மானிடப்பற்று அல்லவா இவர்களிடம் இருக்க வேண்டும். இவர்களின் பற்று இவர்களை மதம் பற்றிக்கொண்டது விளைவு மனிதம் மாண்டது, மாண்டுக் கொண்டிருக்கிறது.
அதிகார (பசி) போதை, வெறி தலைக்கேறியதால், கொலைகாரர்களாய் மனிதர்களை, குறிப்பாக குழந்தைகளையும் கொத்துக்கொத்தாக கொன்று குவித்தபோதும், குருதி வழிந்தோடும் முகத்தோடு குவியல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்ட பிணங்களில் குழந்தைகளின் முகத்தைக் கண்டபோது பார்ப்போரின் நெஞ்சம் பதறுகிறதே, இந்த உணர்வு அதிகார (பசி) போதை வெறி கொண்ட இவர்களின் உள்ளத்தில் இல்லாமல் போனதேன்? இல்லை, இதுபோன்ற செயல்களெல்லாம் நாட்டை ஆள்வதற்கு, அல்லது ஆள்பவர்களின் தகுதி, கடமைகளில் ஒன்று என எண்ணிவிட்டார்களா?
நாட்டை ஆள்பவர்கள், அந்த நாட்டில் வாழும் மக்கள் வளமுடன், நலமுடன் வாழ வழி செய்வார்கள் செய்யவேண்டும் என்பதற்குப் பதிலாக, அந்த நாட்டின், நாட்டு மக்களுக்கு சொந்தமான வளத்தை பறிப்பதோடு மட்டுமல்லாமல், அப்பாவி மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது நாம் வாழும் இந்திய தேசத்திற்கும் பொருந்தும். வல்லரசாகக் கனவு காணும் நாடுகளும் சரி, வல்லரசான நாடுகளும் சரி, நல்லரசாக இருப்பதைப்பற்றி, இருக்க வேண்டுமேன்பதைப்பற்றி கனவு கண்டதாகவோ, காண்பதாகவோ தெரியவில்லை. அது அவசியமில்லைபோலும்.
சொந்த நாட்டிலேயே அகதிகளாகத் திரிவது அவலமான நிலையென்றால் அந்த அவலமான நிலையில் இருக்கக்கூட அனுமதிக்காமல், சொந்த நாட்டு மக்களை குண்டு போட்டு கொன்றுக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள் இது பேரவலம். இதற்குக்காரணம் அந்நாட்டு அரசே என்பது தான் சிரியாவின் பெரும் சோகம். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளம் எனும் கருத்து வணிகச் சந்தையில் அதிகம் விவாதப் பொருளாக இருந்து வருவது சிரிய உள்நாட்டுப் போர் குறித்து தான். ஆனால், இந்தப் போர் இன்றோ, நேற்றோ ஆரம்பிக்கப்பட்டது அல்ல! கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைபெறும் இந்த உள்நாட்டுப் போர் தற்போது தீவிரமடைந்து, வயது முதிர்ந்த வயோதிகர்கள் தொடங்கி, கருவில் உள்ள சிசு வரை கொடூர மரணத்தைத் தழுவி வருகிறார்கள். போரினால் பாதிப்பிற்குள்ளாகி காயமுற்று, இறந்த குழந்தைகளின் புகைப்படங்களை முழுமையாகக் காண, கொடிய இரு இதயங்கள் வேண்டும்.
இப்போருக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அடிநாதம் என்னவோ சன்னி - ஷியா எனும் இசுலாத்தில் இருக்கும் உட்பிரிவு பிரச்சனைதான்.
ஆயிரமாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உட்பிரிவு, இன்று சிரியாவில் உள் நாட்டுப்போராக வெடித்துள்ளது. சரி, தற்போது சிரியாவில் சன்னி - ஷியா முஸ்லிம்களுக்கிடையே நடக்கும் பிரச்சனை என்ன ?
உள்நாட்டு போருக்குப் பின்னர் ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், வளைகுடா நாடுகள், பெல்ஜியம், கனடா, ஸ்பெயின் இப்படிப் பல நாடுகள் சிரியாவுடனான தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டன. இரான், ரஷ்யா, சீனா சிரிய அரசின் நண்பர்களாக உள்ளனர். பஷார் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா சிரியாவின் உள் நாட்டுப் போரில் தலையிடுகிறது என்றால், அமெரிக்கா இதுதான் சாக்கு என்று வழக்கம் போல ஐ.எஸ். இயக்கத்தை அழிக்கிறோம் பேர்வழி என்று சிரிய கிளர்ச்சிப் படைக்கு ஆதரவு அளித்து வருகிறது. துபாய் மற்றும் வளைகுடா நாடுகள் போராளி குழுக்களுக்கு உதவியாக இருந்து வருகின்றது.
இந்தப் போரில் இதுவரை கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். ஆனால் இன்னும் பலரின் மரணம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. இது 5 லட்சத்தை தாண்டும் என்று ஐ.நாஅமைப்பு கூறியுள்ளது. சிரியாவின் உள்நாட்டுப் போருக்கு ஐ.நா தனது தூதுவர்களை அனுப்பி முடிந்தளவு சமரசம் செய்ய முயற்சித்தது. இதற்கு சிரிய அரசு சற்றும் செவி சாய்க்கவில்லை.
மனிதாபிமானமற்ற தாக்குதலால் தெருக்களில் ஆங்காங்கே கேட்பாரற்ற நிலையில் பிணங்கள் கிடக்கின்றன. போரில் தன் தந்தையையும், தாயையும் இழந்து அநாதைகளாக நடுத்தெருவில் நிற்கின்றனர். குடும்பத்தையும், நண்பர்களையும் இழந்த மக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.
தரைவழித் தாக்குதலை சமாளித்து உயிரைக் காத்து ஓடுவதற்குள், வான்வழித் தாக்குதல் நடத்துகிறார்கள். உயிர்பிச்சை கேட்கக் கூட அவகாசம் கொடுக்காமல் கொடூரமாக கொல்லப்படும் ஒரு கொலை வரலாறு சமகாலத்தில் அன்று ஈழம், இன்று சிரியாவாக உள்ளது. அதிகார போதை ஒரு நாட்டையே சவக்குழியாக்கிக் கொண்டிருக்கின்றது.
மனிதமற்ற உலகில் மதங்கள் இருந்து என்ன பயன்?
மதவெறி மற்றும் அதிகார வெறி பிடித்தவர்களுக்கு எப்பொழுதும் போர்களைப் பற்றியோ, பசியைப் பற்றியோ, உழைப்புச் சுரண்டலைப் பற்றியோ கவலை இருப்பதில்லை. அவர்களுக்கு தாங்கள் நினைத்தது நடக்க வேண்டும்.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் கடைசியாக மிச்சம் இருக்கும் கிழக்கு கூட்டா பகுதி மீது சிரிய ராணுவமும், ரஷ்யப் படைகளும் கூட்டாக இணைந்து ஐ.நா. சபை அறிவித்த 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தி கொத்துக்கொத்தாய் மக்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கின்றார்கள். மக்கள் ஒரு பக்கம் தங்களை மனிதக் கேடயங்களாய் பிடித்து வைத்திருக்கும் கிளர்ச்சியாளர்களிடமும், அவர்களை அழித்து சிரியாவை சன்னி தீவிரவாதிகளின் பிடியில் மீட்க நினைக்கும் சிரிய அரசுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு மடிந்து கொண்டு இருக்கின்றார்கள். ஒடுக்கப்பட்ட அலாவி பிரிவு முஸ்லிம்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதை விரும்பாத சன்னி மேலாதிக்கவாதிகள் ஒட்டுமொத்த சிரியாவையும் கைப்பற்றி தங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த, அமெரிக்கா ஏகாதிபத்தியம், சவுதியின் துணையுடன் சிரிய அரசுப் படைகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.
உலகில் உள்ள எல்லா மதங்களும் ஆளும்வர்க்கத்தின் கைக்கூலியாகவே செயல்படுகின்றன. மதவாதிகளுக்கு தன் சொந்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் பட்டினியால் சாவதைப் பற்றியோ அவர்கள் வறுமையால் அழிவதைப் பற்றியோ எந்தக் கவலையும் கிடையாது. தன் சொந்த மத மக்கள் தன்னுடைய பெயரால் அடித்துக்கொண்டு சாவதைப் பற்றி கடவுள்களுக்கும் கவலை கிடையாது. மத வெறியர்களின் பயங்கரவாத செயல்களை எதிர்க்கத் திராணியின்றி கோழைகளாய், அடிமைகளாய் மத விசுவாசிகள் இருக்கின்றார்கள்.
மனிதம் இல்லாத எல்லாத மதங்களும் இந்த உலகில் இருந்து அழித்தொழிக்கப்பட வேண்டும். சிரியாவிலோ, இல்லை உலகில் வேறு நாடுகளிலோ மதத்தின் பெயராலும், கடவுள்களின் பெயராலும் தினம் தினம் கொல்லப்படும் நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்களுக்கு இந்த மதவாதிகள் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும். மனித உயிர்களை இரக்கமற்று கொன்றுபோடும் கொடியவர்களை மதமும், கடவுளும் வேண்டுமென்றால் இந்த உலகில் தொடர்ந்து ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகளாய், எடுபிடிகளாய் இருக்க அனுமதிக்கும். இந்தச் சமூகம் அறிவுபெற்று முற்போக்கான சிந்தனையின் வழி மாறும்போது மதத்தையும், கடவுளையும் வைத்து பிழைப்பு நடத்தும் பிற்போக்கு கும்பல் தங்களது இடத்தை காலி செய்துகொண்டு ஓடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அந்த நாளுக்காக மனிதத்தை மதிப்பவர்கள், நேசிப்பவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வஞ்சிக்கப்பட்ட, அடிமைப்பட்ட, உழைக்கும் மக்களே அனைவரும் ஒன்று கூடுங்கள், சமதர்ம சமுதாயம் படைக்க. ஒன்று படுவோம், வெற்றி பெறுவோம், புரட்சி ஓங்குக.