27/07/2017 அன்று மோடி ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் மணிமண்டபத்தைத் திறந்து வைத்தார். மோடிக்கு ஒரு பழக்கம் உள்ளது. அவர் எங்கு உரையாற்றப் போகின்றாரோ அந்த இடத்தின் பண்பாட்டுக்கு ஏற்றவாறு தன்னையும் மாற்றிக் கொள்வார். அந்த மாநிலத்தின் பண்பாட்டை பிரதிபலிக்கும் உடைகள் அணிவதைத் தொடங்கி அந்த மாநிலத்துக்கும் அயோத்திக்கும் ஆதியில் இருந்த ஏதாவது ஒரு தொடர்பை, இன்னும் சொல்லப்போனால் அந்த மாநில மக்களே இதுவரை அறிந்திராத தொடர்பை அனாசியமாகப் பேசிவிட்டுக் கடந்து போவார். எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே செல்கின்றன என்ற பழமொழி போல இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும் ஏதோ ஒரு வகையில் அயோத்தியுடன் தொடர்புப்படுத்தும் கதைகள் காவி பயங்கரவாதிகளால் உருவாக்கப்படுகின்றன. அதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் நீங்கள் பேச முடியாது. அப்படி பேசத் துணிந்தால் உங்கள் மீது தாங்கள் ஏற்கெனவே பல பேரின் மீது குத்தி குத்தியே தேய்ந்துபோன தேசவிரோதி என்ற முத்திரையைக் குத்துவார்கள். அதனால் பார்ப்பன பயங்கரவாதிகளும் அவர்களின் அடிவருடிகளும் அவிழ்த்துவிடும் வரலாற்றுக் கதைகளை நாம் சகித்துக்கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

modi at kalam memorial

அப்துல்கலாமை ஒரு விஞ்ஞானி என்பதையே இன்னும் பல பேர் செரிக்க முடியாமல் கதறிக்கொண்டு இருக்கின்றார்கள். ஒரு பேச்சுக்கு, சும்மானச்சுக்கு, போனால் போகட்டும் என்று ஒப்புக்கு சப்பாக நம் அவரை ஒரு விஞ்ஞானி என்று ஏற்றுக்கொண்டாலும் அவரால் தமிழ்நாட்டுக்கு ஏதாவது ஒரு தம்பிடி பிரயோசணம் இருந்ததா என்று பார்த்தால் அப்படி எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. மாறாக கூடங்குளம் போராட்டத்தை ஒழித்துக்கட்ட தன்னால் இயன்ற அனைத்துச் சித்துவேலைகளையும் செய்து பார்த்தார். கூடங்குளம் பகுதி மக்களுக்கு வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில், நாசகார அணுவுலைக்கு ஆதரவாக மீனவர்களின் குடிகெடுக்க முயன்றார். ஒரு விஞ்ஞானியாக கூட ராமர்பலம் என்ற புரட்டை ஒரு நாளும் அம்பலப்படுத்த முயலாதவர். அப்படி அவர் செய்த துரோகத்தை இன்று மோடி பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றார். ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு ரயில்விடப்படும் என்று அறிவித்திருக்கின்றார். அப்துல்கலாமின் கனவு இந்தியாவை உருவாக்கும் முயற்சி இந்த ராமேஸ்வரம் – அயோத்தி இடையேயான ரயில் திட்டத்தால் இன்னும் ஒரு படி முன்னேறி இருக்கின்றது!

அப்துல்கலாமின் மணிமண்டபத்தில் அவர் கையில் வீணையுடனும் அவர் அருகில் பகவத்கீதையும் இருக்குமாறு சிலை வைக்கப்பட்டுள்ளது. அப்துல்கலாம் என்ற நபரின் உண்மையான ஆளுமையை ஒரு விஞ்ஞானி என்ற அடையாளத்துடன் அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை மிக தத்ரூபமாக அவை வெளிகாட்டுகின்றன. குழந்தைகளும், இளைஞர்களும், அந்தச் சிலையின் முன்நின்று மகிழ்ச்சியாக செல்பி எடுத்துக்கொண்டு தங்கள் கனவு நாயகனுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். சாமானிய ஏழை மாணவர்களுக்கு எட்டாத இடத்தில் அமர்ந்துகொண்டு தனியார் பள்ளிகளின் மேடையில் நின்றுகொண்டு வல்லரசு இந்தியாவை கீதா உபதேசமாக சொன்ன கலாம் இன்று தனது மறைவிற்குப் பின் தவிர்க்க முடியாமல் அந்த ஏழை மாணவர்களுக்குக் காட்சி அளிக்க வேண்டிய நிலையிலும் அவர்களையும் தனது வல்லரசு திட்டத்தில் சேர்த்துக்கொள்ளும் படியாகவும் நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றார்.

இந்தியாவில் ஒரு ஆன்மீகவாதிக்கு உள்ள இடமும் மரியாதையும் எப்போதுமே விஞ்ஞானிகளுக்கு இருந்தது இல்லை என்பதுதான் வரலாறு. பார்ப்பனியம் எப்போதுமே அறிவியல் சிந்தனைகளை வளர இடம் கொடுத்தது கிடையாது. அது பார்ப்பனராக இருந்தாலும் அதுதான் நிலை. கி.பி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த வராகமிகிரரும், கி.பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரம்மகுப்தரும் தாங்கள் கண்டுபிடித்த கிரகணம் பற்றிய கருத்துக்களைகூட பார்ப்பன புராண புளுகுகளுக்கு ஒப்புக்கொடுத்த பின்புதான் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள். இவர்கள் மட்டும் அல்ல இந்தியாவில் தோன்றிய பல புகழ்பெற்ற, விஞ்ஞான சிந்தனையில் மேல் நாட்டு அறிஞர்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லும்படி இருந்தவர்கள் கூட பார்ப்பன மூட நம்பிக்கைகளுக்குத் தன்னை ஒப்புவித்தவர்களாக இருந்தார்கள். ஆனால் நாம் அவர்களோடு ஒப்பிடும்போது கலாம் என்ற இஸ்லாமியருக்கு அவ்வளவு நெருக்கடி இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அவர் நிச்சயமாக பார்ப்பனியத்தை ஏற்றுக் கொள்ளாமல் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு இருக்க முடியும். ஆனால் பிழைப்புவாதிகள் எப்போதுமே அப்படி சிந்திப்பது கிடையாது. யார் காலைப் பிடித்தால் தனக்குப் பேரும் புகழும் கிடைக்குமோ அவர்களின் காலைப் பிடிக்க அவர்கள் தயங்குவதில்லை.

அப்துல்கலாம் ஆளும் வர்க்கத்தின் விசுவாசி என்பதோடு இந்திய சமூக அமைப்பில் தனக்கான பேரும் புகழும் கிடைக்க வேண்டும் என்றால் அது பார்ப்பனியத்தை மனதார ஏற்றுக்கொண்டால்தான் முடியும் என்ற உண்மையை நன்றாக உணர்ந்தவர். அப்படியே வாழவும் முற்பட்டவர். அவர் தனிப்பட்ட முறையில் எளிமையாக வாழ்ந்தார் என்று சொல்வதெல்லாம் ஒரு மனிதரை லட்சியவாதியாகக் காட்ட போதுமானதில்லை. அந்த எளிமையான வாழ்க்கையால் அவர் எதைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பதுதான் அவரை நாம் புரிந்துகொள்ள தேவைபடுவது. ஒரு பிச்சைக்காரன் அம்பானியாக வேண்டும் என்று நினைப்பதோ, இல்லை ஒரு அம்பானி பிச்சைக்காரன் போல வாழவேண்டும் என நினைப்பதோ இரண்டுமே அவர்களைத் தவிர மற்ற யாருக்கும் பயனற்றவைதான். அப்படித்தான் அப்துல்கலாம் அவர்களின் எளிமையும். ஆளும் வர்க்கத்தின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் மெளன சாட்சியாய் இருந்தவர் தான் அவர். தன் சமூக மக்கள் ஆயிரக்கணக்கில் துடிதுடிக்க கொல்லப்பட்ட போதுகூட அதை எதிர்த்து பொதுவெளியில் மோடி அரசை வெளிப்படையாகக் கண்டிக்கத் துணியாதவர். அவரால் தமிழ்நாட்டு மக்களுக்கோ, இல்லை அவரை இன்று தனது கனவு நாயகனாகக் கொண்டாடும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கோ, அவராலும் அவர் கண்டுபிடித்ததாய் சொல்லப்படும் கண்டுபிடிப்புகளாலும் எள் அளவும் பயன் இல்லை. வேண்டுமானால் சோத்துக்கே இல்லாமல் இந்திய மக்கள் கோடிக்கணக்கில் ஒவ்வொரு வருடமும் செத்தாலும் ஏவுகணையும், ராக்கெட்டையும், அணு ஆயுதங்களையும் பெருமையாக நினைக்கும் மேட்டுக்குடி கனவான்களுக்கு வேண்டுமானால் அவரின் உலுத்துப்போன சிந்தனைகளும், படித்தாலே கொட்டாவி வரும் கவிதைகளும் பயன்படலாம்.

அப்துல் கலாம் கையில் இருக்கும் வீணையும், அவர் அருகில் இருக்கும் பகவத் கீதையும் இந்திய இஸ்லாமிய மக்களுக்கு ஒரு செய்தியை இனி வரலாற்றில் சொல்லிக் கொண்டே இருக்கும், இந்தியாவில் ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதை. அப்துல் கலாமின் கண்டுபிடிப்புகள் என்னாவாய் வேண்டும் என்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும், அது முக்கியமில்லை. அவர் எப்படி வாழ்ந்தார் என்பதுதான் மிக முக்கியம். மோடி அப்துல் கலாமைப் பாராட்டுகின்றார், அவருக்கு மணிமண்டபம் திறந்திருக்கின்றார். இது ஒரு வரலாற்றுத் தருணம். அப்துல் கலாமைப் போல நீங்கள் இந்தியாவில் வாழ்ந்தால் மோடி உங்களுக்குச் சிலை வைப்பார். நீங்கள் இந்தியாவின் எந்த ஊரில் பிறந்திருந்தாலும் அந்த ஊரில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில் கூட விடப்படும். உங்களுக்கு நிச்சயம் தெரியாது, உங்கள் ஊருக்கு ராமனும் சீதையும் வந்து தங்கிப்போன வரலாறு. அதை எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இந்தியாவில் முஸ்லிம்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தன்னுடைய வாழ்க்கையால் வாழ்ந்து காட்டிவிட்டுப் போய் இருக்கின்றார் அப்துல்கலாம் அவர்கள். அதை அச்சாரம் பிசகாமல் பார்த்து, படித்து, புரிந்து நடந்து கொள்ள வேண்டியது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் கடமை. வேண்டும் என்றால் இதை முஸ்லிம்கள் தங்களின் ஐந்து கடமையுடன் ஆறாவது கடமையாகக் கூட சேர்த்துக் கொள்ளலாம். வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஸ்ரீ ராம், அப்துல்கலாம் நமஹா.

- செ.கார்கி

Pin It