ma po si rajaji“தமிழுக்காகப் பாடுபடுவதாகக் கூறும் நீங்கள் ஹிந்தி எழுத்துக்களைத் தமிழர்கள் அழித்தபோது (ஆகஸ்ட் 1-ந் தேதி) கலந்து கொள்ளதாது ஏன்? சும்மா கூட இல்லாமல் மண்ணெண்ணெய் போட்டுத் துடைத்து, மீண்டும் அதே எழுத்துக்கள் தெரியும்படியாகச் செய்தீர்களே, ஏன்?”, - என்று வேலூர் பொதுக்கூட்டத்தில் 5-10-52 இல் பேசிய, “தலையைக் கொடுத்துத் தலைநகரத்தைக் காப்பாற்றுகின்ற,” தனிப்பெருந்தலைகளிடம் கேள்வித்தாள் கொடுத்தார்களாம், சில பொதுமக்கள்! கேள்வியை வாங்கிப் படித்துவிட்டு, ஒன்றுமே பதில் சொல்லாமல் பேச்சை முடித்துவிட்டுக் கம்பி நீட்டினார்களாம், பேச்சு நிபுணர்கள்.

காட்பாடித் தோழர் ஒருவர் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார், சிறிது ஆத்திரமான நடையில்!

தோழரே! உயர்திரு. மா. பொ. சி. கம்பெனியார் ஹிந்தியை ஆதரிப்பவர்களல்லர். ஆனால் சமயோசிதம் போல நடந்து கொள்வார்கள், கெட்டிக் காரர்களாதலால்! ஆகாத மந்திரி சபையாயிருந்தால் ஹிந்தி எதிர்ப்புக்காரர்களோடு கலந்து கொள்வார்கள்! மரமேறும் தொழிலாளர் சங்கம் அமைத்துக் கிளர்ச்சி செய்வார்கள்! வடநாட்டுச் சுரண்டலைக் கூடக் கண்டித்து எழுதுவார்கள்! ஏன், காங்கிரஸ் கட்சியையே கூடக் கண்டித்து எழுதுவார்கள்! வேண்டிய மந்திரி சபையாயிருந்து, ஏதோ சட்டசபை கிட்டசபையில் இடந்தேடித் தந்துவிட்டால் ஹிந்தி எழுத்தை விளக்கமாக்குவது மட்டுமல்ல; தமிழ் எழுத்தில்கூட தார் பூசுவார்கள்!

“சமயோசிதம்போல ஆக்ட் செய்வார்கள்,” என்று பழைய காலத்து நாடக விளம்பரங்களில் வெளியிடுவார்களே, படித்திருக்கிறீர்களா? அது போலத்தான்! சும்மா சொல்லக்கூடாது! ரொம்ப நல்லவர்கள்! இளஞ்செடிகள் மாதிரி, பாவம்! காற்றடிக்கும் பக்கம் சாய்ந்து விடுவார்கள்! அவ்வளவுதான்!

இதோ, உதாரணம்! தினுசுக்கு ஓர் உதாரணம்!

“பிற இனத்தவரின் சுரண்டலுக்குத் தமிழ்நாடு இரையாகக் கூடாது என்பதே தமிழரசு கழகத்தின் தலையாய கொள்கை. அதுமட்டுமல்ல; உள்நாட்டுச் சுரண்டலும் ஒழிக்கப்பட வேண்டும்.” (“தமிழ்முரசு” -15-5-47)

“தமிழகத்தின் அரசியல் பிற இனத்தவரின் தலையீடின்றி நடை பெற வேண்டும். அதற்காகத்தான் நாம் சுதந்தரத் தமிழரசு - அதை அமைக்கும் சுயநிர்ணய உரிமை கோருகிறோம்.”(“தமிழ்முரசு”1-11-47)

இவையிரண்டும் வடநாட்டுச் சுரண்டல் ஒழிப்பு ஆதரவுக்கு “சாம்பிள்கள்!” மேலும் படியுங்கள்.

“அரசியல் நிர்ணய மன்றத்தார் தயாரித்துள்ள புதிய அரசியலானது கடந்த கால ஏகாதிபத்திய இந்தியாவில் அமுலிலிருந்த அரசியலின் நகல் போன்றதாகும். ஆங்கில ஆதிக்கம் அகன்றதும், வயது வந்தோருக்கு வாக்குரிமை தந்ததும் தவிர, வேறு புதிய அம்சங்கள் அதில் ஒன்றுமில்லை” (“தமிழ் முரசு” 1-11-47) -இது இந்திய அரசியல் சட்டத்தைக் கண்டிப்பதற்கு சாம்பிள்!

“கடவுளர் கோவில்களெல்லாம் கலை வளர்க்கும் கோவில்களாகட்டும். மண்ணாபரணம் பூணும் மக்கள் வாழும் தரித்திர நாட்டில் கடவுளுக்குப் பொன்னாபரணம் பூட்டும் புன்மையை ஒழிக்கட்டும். கூரை வேய்ந்த குடிசைக்குத் கதியற்ற மக்கள் வாழும் நாட்டில் கோபுரக் கலசத்திற்குப் பொன் தகடு போடுவதைத் தடுக் கட்டும், சமயச் சொத்துக்களெல்லாம் சமூகத்தின் பொதுச் சொத்துக்களாகச் செய்யப்படும்.” (“தமிழ் முரசு” -தொகுதி 1. பகுதி 14-மாதம், தேதி கிடையாது!) -இது சுயமரியாதை இயக்கக் கொள்கைக்கு ஒரு சாம்பிள்! “ஓமந்தூராருக்கு உபதேசம்” என்ற தலைப்பில் வந்திருப்பது.

“இந்த அபாயங்களிலிருந்தெல்லாம் தமிழ் தப்புவதற்கு இந்தியை ஏற்க மறுப்பதைத் தவிர தமிழருக்கு வேறு வழியில்லை... ஆங்கிலம் இந்தியனுக்கு அந்நிய மொழி என்றால் தமிழனுக்குத் தமிழைத் தவிர மற்ற எல்லா மொழியும் அந்நிய மொழிகள்தானே? (“தமிழ் முரசு”-1-8-47)

- இது இந்தி எதிர்ப்புக்கு ஓரு சாம்பிள்! தாரினால் அழிக்கப்பட்ட ஹிந்தி எழுத்துக்களுக்கு மண்ணெண்ணெய் போட்டுத் துடைத்த தமிழரசுக் குஞ்சுகளுக்கு இது அர்ப்பணம்!

இவை மட்டுமா? இன்னும் படியுங்கள்!

“இன்றைய தொழிலாளி வர்க்கத்தின் புரட்சி உணர்ச்சியைப் பிரதிபலிக்கக்கூடிய திட்டம் ஒன்றும் காங்கிரசில் இல்லை... காங்கிரசின் பெயரால் முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டுவதென்பது ஒருநாளும் முடியாத காரியம்.” (“தமிழ்முரசு” -1-6-47)

- இது காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரத்துக்கே ஒரு சாம்பிள்!

பழைய “தமிழ்முரசு” ஏடுகளையெல்லாம் காகிதக் குப்பையில் போட்டு விட்டேனாதலால் ஏதோ அங்குமிங்கும் சிதறிக் கிடந்த 7-8 புத்தகங்களில் கிடைத்தவைகளை மட்டும் புரட்டிப் பார்த்தேன்!

இவைகளெல்லாம் அசல் தலையங்கத்திலிருந்தே எடுக்கப்பட்டவை! வேறு எவரும் எழுதியதல்ல!

ஆதலால், “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்பவர்கள்” அற்ப சொற்பமான பேர்வழிகளல்ல. அதி தீவிரமான கருத்துடையவர்கள் தான்!

என் அண்ணன் ம.பொ.சி. யை மட்டும் பதவியால் யாரும் அடிக்காதிருக்கட்டும்! தங்கக் கம்பிதான்! சந்தேகமில்லை!

அவரென்ன செய்வார், பாவம்! அரசியல் துறவு பூண்ட பெரியவர்களையே பதவி மோகினி மயக்கி விடுகிறாள் என்றால், என் அண்ணாச்சியைப் போன்ற இளைஞர்களால் எப்படிச் சமாளிக்க முடியும்?

ஆகையால் இவர்களைப் பொதுமேடையில் கேள்வி கேட்பது தப்பு! நம் கொள்கைகளையெல்லாம் ஒரு காலத்தில் ஆதரித்து எழுதியும் பேசியும் வந்தவர்கள்தானே! ஏதோ இப்போது அடிக்கின்ற காற்று நல்ல செடிகளைச் சாய வைத்து விடுகிறது! காற்றின் மீது தப்பேயொழிய இளஞ் செடிகள் மீது எப்படித் தப்பாகும்?

குத்தூசி குருசாமி (13-10-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It